கரிகாலன் தட்டிப் பறித்த கல்லூரி சீட்!

கரிகாலன் தட்டிப் பறித்த கல்லூரி சீட்!

– எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் மாலன்

ல்லூரிக் காலத்தில் எனக்கு முத்துப்பாண்டி என்றொரு தோழர் இருந்தார். புகுமுக வகுப்பை முடித்திருந்தோம். அவரது விருப்பம் அடுத்து வேளாண் கல்லூரியில் சேர்வது. அப்போதெல்லாம் தொழிற்கல்வியில் சேர்வது மட்டுமல்ல; விண்ணப்பிப்பதே பெரிய வேலை. ஏனெனில், அப்போது ஜெராக்ஸ் என்ற அற்புதம் வந்திருக்கவில்லை. இணையம் என்பது அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் கற்பனையில் கூட முளைத்திருக்கவில்லை.

நான்கைந்து இடங்களுக்கு விண்ணப்பிப்பதென்றால் சான்றிதழ்களைத் தட்டச்சுச் செய்து பதிவு பெற்ற அரசாங்க அதிகாரிகளிடம் (கெசட்டட் ஆபீசர்ஸ்) உண்மை நகல் என்று சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். இதற்கெல்லாம், இதே வேலையாக அலைந்தால் கூட நான்கைந்து நாட்கள் ஆகும். காரணம், தட்டச்சில் தாமதமாகும். அதிகாரிகள் அலையவிடுவார்கள். எழுத்துப் பிழை ஏதுமிருந்தால், 'மீண்டும் தட்டிக் கொண்டு வா' எனத் தட்டிக்கழிப்பார்கள். இதனால் ஒருவர் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிப்பது என்றால் காலத்தோடு கண்ணாமூச்சி ஆட வேண்டும்.

முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்த முகூர்த்த வேளையில் அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்த அம்மா, அங்கிருந்த பொன்னியின் செல்வனை இழுத்து வெளியே போட்டிருந்தார். கல்கி பத்திரிகையில் வந்த அந்தத் தொடர் அழகாக பைண்ட் செய்து வராந்தா ஓரமாக அடுக்கப்பட்டிருந்தது.

முத்து புத்தகத்தைப் பார்த்தான். "படித்து விட்டுத் தரவா?" என்று என்னைக் கேட்டான். நான் அம்மாவைப் பார்த்தேன். 'கழுத்து நகையைக் கழற்றிக் கொடு' என்றால் கூட அம்மா புன்னகையோடு கொடுத்து விடுவார். ஆனால், கல்கியின் புத்தகம் என்றால் கண்டிப்பாக மறுத்து விடுவார்.

ஆனால் ஆச்சரியகரமாக அம்மா, "படிக்கட்டுமேடா!" என்றார். "ஆனால், தம்பி ஒரு கண்டிஷன். இது ஐந்து தொகுதி. ஒவ்வொன்றாகப் படி. ஒன்றைப் படித்துவிட்டு திருப்பிப் கொடுத்துவிட்டு அடுத்ததை வாங்கிக்கொண்டு போ" என்றார்.

பொன்னியின் செல்வனின் ஒரு பாகத்தைப் படித்தவர்களால் அடுத்த பாகத்தைப் படிக்காமல் இருக்க முடியாது. அப்படிப் படிக்காது விட்டால் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்ற படைப்பின் ரகசியம் அம்மாவிற்குத் தெரிந்திருந்தது.

பொன்னியின் செல்வனைப் படிக்க ஆரம்பித்த முத்து, அதில் மூழ்கிப் போனான். விண்ணப்பிக்க வேண்டிய கெடு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அருள்மொழி வர்மன் பிடியில் அகப்பட்டுக்கொண்ட முத்து, 'விண்ணப்பிப்பதை நாளைக்கு, இல்லை மறுநாளைக்குப் பார்த்துக்கலாம்' என்று தள்ளித் தள்ளிப் போட்டு திருநாளைப் போவார் ஆனான். ஆதித்த கரிகாலன் கொலையுண்ட நாளன்று கெடு தேதி முடிந்து போயிற்று.

ன்றைக்கு வீட்டுக்கு வந்திருந்தான். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான். கெடு நாளைத் தவறவிட்ட வருத்தமாக இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவன், "யாராய் இருக்கும்?" என்றான் என்னிடம்.

"அப்படியென்றால்…?" என்றேன்.

"ஆதித்த கரிகாலனை யார் கொன்றிருப்பார்கள்?"

"அப்பா கோபித்துக் கொள்ள மாட்டாரா?"

அவன், 'யாரோ ஆதித்த கரிகாலனைக் கொன்றதற்கு அப்பா ஏன் அவனைக் கோபித்துக்கொள்ள வேண்டும்' என்பது போல் என்னைப் பார்த்தான்.

"அப்ளிகேஷன் அனுப்புவதில் கோட்டை விட்டு விட்டாயே, அப்பா கோபித்துக் கொள்ள மாட்டாரா?"

"அது பார்த்துக் கொள்ளலாம். சொல் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?"

"வேறு யார், கல்கிதான்."

"விளையாடாதே… சொல் உனக்குத் தெரிந்திருக்கும்."

எனக்குக் கோபம் வந்தது. "ஏண்டா, மேலே என்ன படிப்பது, எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வியை விட, எப்போதோ செத்துப்போன ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்ற கேள்வியா முக்கியம்?" என்று குரலை உயர்த்தினேன். அதை அவன் ரசிக்கவில்லை. சற்று முறைத்துப் பார்த்தான்.

ரோஷக்காரனாய், "சொல்லாவிட்டால் போ! நானே கண்டுபிடித்துக் கொள்கிறேன்" என்று விருட்டென்று எழுந்து கொண்டான்.

பொன்னியின் செல்வனில் புதைந்துபோன அவனைக் கடைசி வரை மீட்டெடுக்க முடியவில்லை. இறுதியில் அவன் வேளாண் கல்லூரிக்குப் போகவில்லை. உள்ளூரிலேயே புவியியல் படித்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com