பாத்திரங்களைச் செதுக்கிய சிற்பி!

பாத்திரங்களைச் செதுக்கிய சிற்பி!

– டி.வி.ராதாகிருஷ்ணன்

கி.பி.1000ஆம் ஆண்டு வாக்கில் ஆண்ட சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு, 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டு இருக்கிறது.1950ஆம் ஆண்டு கல்கி அவர்களால் எழுதப்பட்டு கல்கி இதழில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஐந்து பாகங்களாக இப்புதினம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கட்டிப்போட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி; அவ்வப்போது மீண்டும் கல்கி இதழில் தொடராக வந்து அடுத்தடுத்த தலைமுறையினரையும் இன்றுவரை கவர்ந்து வருகிறது. உண்மையைச் சொல்வதானால், இப்படிப்பட்ட பின்னணி வேறெந்த புதினத்திற்கும் கிடைத்திருக்காது எனலாம். தவிர்த்து, கல்கியின் எழுத்துகள் தேசியமயமாக்கப்பட்ட பின், பல பதிப்பகங்களால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டு. இன்றளவும் புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

டி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு அன்று வீரநாராயண ஏரி பக்கம் ஆதித்த கரிகாலனிடம் இருந்து. அவரது தங்கை குந்தவை நாச்சியாருக்கு ரகசிய ஓலையைக் கொண்டு செல்லும் வந்தியத்தேவனுடன் புதினம் ஆரம்பிக்கும் போது நாமும் அவனுடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம். ஆம், புதினத்தில் வரும் இடங்கள், நிகழ்வுகள், பாத்திரங்கள் எல்லாவற்றுடன் நாமும் அந்த இடத்திலேயே இருப்பது போன்ற ஓர் உணர்வை நமக்கு ஏற்படுத்தி விடுகிறது இந்நாவல்.

சோழ நாட்டு நிலங்களும் காவிரி ஆறும் அடர்ந்து சூழ்ந்திருக்கும் மரங்களும் செடிகளும் அடடா… இருபத்தைந்திற்கும் மேற்பட்ட முக்கியப் பாத்திரங்களில் என்னைக் கவர்ந்த பாத்திரங்கள் எது என இக்கட்டுரை எழுதும் முன் ஒரு மணித்துளி யோசித்தேன். முதன் முதலில் என் கண் முன்னே தோன்றியவர் இவர்களைப் படைத்த படைப்பாளி கல்கியே! உளியைக் கொண்டு கல்லை செதுக்கி உருவத்தை கொணரும் சிற்பி போல, தன் பாத்திரங்களைச் செதுக்கியுள்ள அவரே முதலில் என்னைக் கவர்ந்தவர்.

அவரின் உயிரோட்டமான நடைக்கு நந்தினி, குந்தவையை அவர் வர்ணிக்கும் முறை ஒன்றே போதும். இதுநாள் வரை எந்த ஒரு எழுத்தாளராவது இப்படி வர்ணித்திருப்பாரா என்று தெரியவில்லை.

நந்தினி… பொன் வண்ண மேனியாள்.

குந்தவை செந்தாமரை நிறத்தினாள்.

நந்தினிக்கு பொங்கும் பூரண சந்திரனைப் போல வட்ட வடிவ முகம்.

குந்தவையின் முகமோ, கை தேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலையில் உள்ளது போல சிறிது நீள வட்ட முகம்.

நந்தினியின் செவ்வரியோடிய கருநீல வர்ணக் கண்கள் சிறகு விரித்த தேன் வண்டுகளைப் போல அகன்று இருந்தன.

குந்தவையின் கருநீல வர்ணக் கண்களோ… நீலோத்பலத்தின் இதழைப் போல காதளவு நீண்டு பொலிந்தன.

நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழு தந்தத்தைப் போலத் திகழ்ந்தது.

குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர் பூவின் மொட்டினைப் போல இருந்தது.

நந்தினியின் இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பு போலத் தோன்றியது.

குந்தவையின் இதழ்கள் தேன்பிலிற்றும் மாதுளை மொட்டைப் போன்றது.

நந்தினி தன் கூந்தலை கொண்டை போட்டு மலர்ச் செண்டு போல் அலங்கரித்திருந்தாள்.

குந்தவையின் கூந்தலோ, அவள் அழகி என்பதற்கு அடையாளம் போல மணிமகுடம் போல் அமைந்திருந்தது.

பாவம் மணியம். கல்கியின் எதிர்பார்ப்புக்கு… இப்பெண்களின் அழகான ஓவியத்தை வரைய எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார். ஆகவே, கல்கிதான் என்னை முதன் முதலாகக் கவர்ந்தவராகிறார்.

ரி… அவரது படைப்புகளில் எனக்குப் பிடித்த சிறந்த பாத்திரம் எது? வந்தியத்தேவனில் ஆரம்பித்து, ரவிதாசன் வரை… "நான்தானே… நான்தானே… என என்னை நெருக்குகிறார்கள். முடிவெடுக்கு முன், ஒரு சிறு கண்ணோட்டம். முதலில் பெண் பாத்திரங்களைப் பார்ப்போம்.

குந்தவை – சுந்தரச்சோழனின் மகளாகவும் ஆதித்த கரிகாலனின் தங்கையாகவும், அருள்மொழிவர்மனின் தமக்கையாகவும் வருபவள். செம்பியன்மாதேவியின் கோயில் திருப்பணிகள், மருத்துவசாலைகள் அமைக்க… அவற்றைப் பராமரிக்கச் செய்கிறாள். சுயமாகவும், சுதந்திரமாகவும் இருக்க விரும்பும் பெண். வானதியை அருள்மொழிவர்மனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதையும், நந்தினியின் சதிகளை முறியடிக்க முயற்சிகள் எடுப்பதையும் பார்க்கையில், நவீன பெண்ணியத்தின் குறியீடாக கல்கி இப்பாத்திரத்தைப் படைத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

நந்தினி – தன் காதலனை பழிவாங்க எவ்வளவு சூழ்ச்சி… எவ்வளவு வைராக்கியம்… எவ்வளவு பொறுமை. இப்புதினத்தில் இவள் வில்லியானாலும், கதாநாயகியைப் போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள். கண்களில் பழிவாங்கும் வெறி, பெண்தானே என்று தோன்றாத வகையில் படைக்கப்பட்ட பாத்திரம்.

பூங்குழலி – கலையுணர்ச்சிகளின் ஒரு பெண் வடிவமாகவே இப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. எந்தப் பெண்களிடமும் காணப்படாத துணிவும், வலிமையும் இவளிடம் காணப்படுகிறது. தன் காதலுக்கும் ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவள். இவளை நம் வந்தியத்தேவனுக்கும் பிடிக்கும், அருள்மொழிவர்மனுக்கும் பிடிக்கும், சேந்தன் அமுதனுக்கும் பிடிக்கும் ஒவ்வொரு வகையில்.

மணிமேகலை – தன் காதலுக்காக எதையும் செய்யும் பெண் இவள். மந்தாகினி சுந்தரச்சோழரை கொல்ல பார்த்த சமயத்தில் இவள் காப்பாற்றவில்லை எனில், அருள்மொழிவர்மனுக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயரே வந்து இருக்காது. அவனை, அந்த ஈழத்து ராணி காத்து, நடுங்கும் குளிரில் அவனுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்று அங்கிருந்து அனுப்புவது… பிறகு இறுதி நாட்கள் நெருங்கிய நேரத்திலும் சுந்தரச்சோழனின் உயிரைக் குடிக்க வந்த ஈட்டியை வாங்கிக்கொண்டு, பெரிய ஆபத்திலிருந்து இருமுறை காப்பாற்றியது… அவரின் செயலிழந்த கால்களுக்கு நடக்கும் சக்தியை கிடைக்க வைத்தது… கடைசியில் தன் உயிரை அவர் மடியிலேயே அர்ப்பணித்தது… அடடா என்னே ஒரு பாத்திரப்படைப்பு.

வானதி – கொடும்பாளூர் இளவரசி. அருள்மொழிவர்மன் மீது காதல் கொண்டவளாகவும், இளையபிராட்டி குந்தவையின் தோழியாகவும் வருபவள். பயந்த சுபாவம் உடையவளான அவளை, குந்தவை பல திட்டங்கள் மூலம் தைரியப்படுத்துவது எதார்த்தமாகவும், அவளும் சீராக மாறி வருவதையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அமைத்திருப்பார் கல்கி.

கொடும்பாளூர் சிற்றரசரும், சோழநாட்டு சேனாதிபதியுமான பூதிவிக்கிரம கேசரியின் சகோதரியின் மகள் பிற்காலத்தில் இராசராசனின் மனைவியும் இராசேந்திர சோழனின் தாயுமாவார்

இதை எழுதி முடிக்கையில், எனக்கெதிரே வந்து ஆழ்வார்க்கடியான் கேட்கிறான்… "எல்லா பெண் பாத்திரங்களையும்தான் பிடிக்குமா? என்னைப் போல ஒரு ஆண் பாத்திரத்தை உனக்குப் பிடிக்காதா?" என்று.

ஒவ்வொரு பாத்திரத்தையும் தன் எழுத்து உளி கொண்டு அழகாகச் செதுக்கி படைத்திருக்கும் கல்கி எனும் படைப்பாளியின் படைப்புகளில் ஆணென்ன… பெண்ணென்ன… அனைவரையுமே பிடிக்கும் என்றேன்.

சைவம், வைஷ்ணவம், வாக்குவாதம், போட்டி, சொற்போர் என்பது அன்றும் இருந்திருக்கிறது. நமக்கு வீர வைஷ்ணவனாக அறிமுகமாகும் ஆழ்வார்க்கடியான் பேசும்போது எப்படியும் விஷ்ணுவை இழுத்து வந்து விடுவார். இவர் கல்கியின் கற்பனை பாத்திரம்தான். ஆனால், அப்படி சொல்லிவிட முடியாதபடியான முக்கிய பாத்திரமாவார்.

இப்புதினத்தில் அற்புத பாத்திரம் வந்தியத்தேவன். அன்று முதல் இன்று வரை இப்புதினத்தைப் படிக்கும் ஆண் வாசகர்களுக்குப் பிடித்தவன். பெண் வாசகிகளோ, வெளியில் சொல்லாமல் இவனை மனதிற்குள்ளேயே காதலிப்பர். கல்கியின் எழுதுகோலுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியில் இவனுக்குக் கண்டிப்பாக ஒரு பங்கு உண்டு.

குடந்தை சோதிடரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், சோதிடத்தை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதையே முழுவதுமாக நம்பக்கூடாது என்பதை இலை மறைவு காய் மறைவாய் சொல்லிருப்பார். அருள்மொழிவர்மனோ, தன் 19ஆம் வயதிலேயே ஈழப்போருக்கு தலைமை ஏற்று பலமிக்கவனாக போரை வழி நடத்திச் செல்பவராக இருந்திருப்பார். இப்படி அனைத்துக் கதாபாத்திரங்களுமே ஒவ்வொரு வகையில் எனக்குப் பிடித்தவர்களே.

'அது எப்படி… எனக்குப் பிடித்த கதாபாத்திரம் என அனைவரையுமே சொல்கிறீர்களே' என நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது. ஒரு படைப்பாளி படைக்கும் பாத்திரங்கள் அனைத்துமே அவனால் படைக்கப்பட்ட குழந்தைகள். ஒரு தாய்க்கு எப்படி தன் குழந்தைகள் அனைத்துமே பிடிக்குமோ, அதுபோல எழுத்தாளனுக்கும் தான் படைக்கும் பாத்திரங்கள் அனைத்தும் பிடிக்கும்.

பொன்னியின் செல்வன் வாசகனை கல்கி எப்படி புதினம் முழுதும் அது நிகழும் இடங்களுக்கெல்லாம் நம்மையும் உடன் அழைத்துச் செல்லும்போது, அம்மாபெரும் படைப்பாளியின் படைப்புகளும் நமக்கு வேண்டியவன ஆகிவிடுகின்றன. நமக்கு வேண்டியவர்கள் அனைவரும் நமக்குப் பிடித்தமானவர்களாகத்தானே இருக்க வேண்டும்.

காலத்தால் அழிக்க முடியா காவியம் படைத்திட்ட கல்கியின் பாதம் பணிந்து இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com