0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வனைப் பாராயணம் செய்வேன்!

– எழுத்தாளர் த.கி.நீலகண்டன்

பொன்னியின் செல்வன் தொடர் 60களில் கல்கியில் வந்துகொண்டிருந்த காலகட்டம். அப்போதெல்லாம் அம்மாவின் ஆபீஸில் சர்குலேடிங் லைப்ரரியில்தான் வாரப் பத்திரிகைகள் வந்து சர்குலேட் ஆகும். எங்கள் டர்ன் வரும் வரை வீட்டில் எங்கள் அக்காவிற்குப் பொறுமை கிடையாது. அதனால் அண்டை வீட்டுக்காரர்கள் வாங்கும் பத்திரிகையை இரவல் வாங்கி அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வருவாள். சிலசமயம் பொடிப்பையனாகிய நான் போய் வாங்கி வருவதுண்டு. எனக்கு அவ்வளவாக கதை புரியாத வயது. ஆதித்தக்கரிகாலன் கொலையுண்பதற்கான கதைக்களம் உருவாகிக் கொண்டிருப்பதை பதைபதைப்புடன் என் வீட்டில் விவாதிப்பார்கள். அதனால் கல்கி வாங்கி வரும்போது அந்த வாரம் என்ன சுவாரஸ்யம் என்று மட்டும் பார்ப்பேன்!

ஒரு வாரம், “பெரிய பயங்கரமான உருவத்துடன் (சடைமுடி, புலிதோல், மண்டையோடு மாலை இன்றும் நினைவிருக்கிறது) கத்தியைக் காட்டி ஒரு பெண்ணை மிரட்டுவது போல படம் வந்திருக்கு” என்று படம் பார்த்து கதை சொல்வது போலச் சொன்னேன்! “ஐயையோ… கரிகாலனைக் கொன்னுட்டாங்களா?” என்று அக்கா பதைபதைத்தாள்!

70களின் தொடக்கத்தில் மாநகராட்சி லைப்ரரியில் மெம்பராகச் சேர்ந்து புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கும் வழக்கம் வந்தபோது முதன் முதலில் நான் எடுத்து வந்தது பாகம் பாகமாக பைண்ட் செய்து வைத்திருந்த பொன்னியின் செல்வன் புத்தகம்தான். ஒரு நாளுக்கு ஒரு பாகம் வீதம், நான்கு நாட்களில் நான்கு பாகங்கள் ஓயாமல் படித்து முடித்துவிடுவேன். ஐந்தாம் பாகம் மட்டும் கொஞ்சம் பெரிசு. அதனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகும். ஆக, ஒரு வார காலத்தில் ஒரு முறை பாகவத சப்தாஹம் போல பாராயணம் செய்வேன். ஒவ்வொரு விடுமுறை சீஸனுக்கும் ஒருமுறை, ஒருசில சமயம் இரண்டு முறை, முக்கியமான உரையாடல்கள் எல்லாம் மனப்பாடம்! ஆழ்வார்க்கடியான்தான் என் பேவரிட்.

வீட்டில் பொன்னியின் செல்வன் பற்றி விவாதங்கள், சர்ச்சைகள், கேள்விகள் – ஆதித்தக் கரிகாலனைக் கொன்றது யார்? நந்தினி யாருடைய பெண்? மந்தாகினிக்கும் வீரபாண்டியனுக்கும் என்ன தொடர்பு? திருப்புறம்பயம் பள்ளிப்படைக் கோயிலில் மகுடாபிஷேகம் செய்விக்கப்பட்ட சிறுவன் யார் மகன்? இப்படியெல்லாம் போகும். ஆழ்வார்க்கடியானின் சாகஸங்கள், பூங்குழலியின் துடுக்குத்தனம், சேந்தன் அமுதனின் சாதுவான குணம், வந்தியத்தேவனின் தந்திரங்கள்,,, இப்படி பொழுது கழியும்! சுவாரஸ்யமான பொழுதுபோக்கு!

தயிர் சாதம் சாப்பிடும்போதெல்லாம், வந்தியத்தேவனுக்கு சேந்தன் அமுதன் குடிசையில் அவன் ஊமைத்தாய் வைத்த விருந்து நினைவுக்கு வரும். இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் ஒரு கை பார்த்துவிட்டு, அடுத்து “காற்படி சோறும் அரைப்படி தயிரும் நுங்கினான்” என்று கல்கி வர்ணித்திருப்பார். இந்த வரிகளை ஞாபகப்படுத்திக்கொண்டே நாங்களும் ஒரு கட்டு கட்டுவோம். தெருவில் இடியாப்பம் விற்றுக்கொண்டு போகும் கிழவியிடம் இடியாப்பமும் வாங்கித் தின்றிருக்கிறோம்.

பின்னாளில் கல்கி தீபாவளி மலருக்குக் கட்டுரை எழுதுவதற்காகக் கடம்பூர் செல்ல வாய்த்தது. வீராணம் ஏரிக்கரை, காட்டுமன்னார்கோவில் இவற்றைப் பார்க்கும்போது, ‘ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் எங்கேனும் தென்படுவார்களா?’ என்று மனம் தேடியது. வைதீசுவரன் கோவிலுக்குப் போகும்போதெல்லாம், “எனக்கு ஊர் புள்ளிருக்குவேளூர்” என்ற வீர சைவர் மனதில் நிழலாடுவார். பட்டீசுவரம் போனால் பழையாறை நினைவு வரும். திருநாரையூர் போனால் நம்பியாண்டார் நம்பியும் செம்பியன் மாதேவியும் நினைவுக்கு வருவார்கள். அந்த சோழப் பேரரசியின் மகத்தான திருப்பணிகளை நேரில் பார்க்கும்போது மயிர் கூச்செரியும். தஞ்சாவூருக்குப் போனால் சிங்களத்து நாச்சியார் கோயில் எங்கே இருக்கிறது என்று விசாரிப்பேன். ‘தளிக்குளத்தார் ஆலயத்தைத்தான் பின்னாளில் இராஜராஜன் பெரிய கோயிலாக உருமாற்றினானோ’ என்று தோன்றும்!

மதுராந்தகன் – சேந்தன் அமுதன் ஆள் மாறாட்ட ஐடியா எப்படி கல்கி அவர்கள் சிரசாசனம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று தோன்றியது என்று அவரது புதல்வி திருமதி ஆனந்தி என்னிடம் விவரித்து இருக்கிறார். பின்னாளில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் வரலாற்று நூலைப் படித்தபோது இந்த ஆள் மாறாட்ட யுக்தியில் உத்தம சோழரின் பேரில் விழுந்த ஆதித்த கரிகாலன் கொலைப்பழியின் நிழலை கல்கி சாமர்த்தியமாக விலக்கியதன் நோக்கம் புரிந்தது!

சமீபத்தில் நாகப்பட்டினத்தைத் தாக்கிய சுனாமி என்கிற ஆழிப்பேரலையை, அன்றே நாகை சூளாமணி விஹாரத்துக்கு நேர்ந்த அபாயத்தை விளக்கும்போது கல்கி துல்லியமாக வர்ணித்திருக்கிறார் என்பது ஆச்சரியம்!

பொன்னியின் செல்வனை பலர் திரைப்படமாக எடுக்க முயன்று, பின்னர் கைவிட்டார்கள். பொன்னியின் செல்வன் ஒரு மகா காவியம். இராமாயணம், மகாபாரதம் போல ஒரு நெடுந்தொடராக உருவாக்கினால் மட்டுமே அதன் முழுப் பரிமாணத்தைக் கொஞ்சமேனும் கொண்டு வர முடியும் என்பது அடியேன் கருத்து!தவிர, தீவிர பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு நடிகரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி, சின்னப் பழுவேட்டரையராக நம்பியார், செம்பியன் மாதேவியாக எஸ்.வரலட்சுமி, சுந்தர சோழராக எம்.ஜி.ஆர்.(?!), நந்தினி மற்றும் மந்தாகினியாக லக்ஷ்மி, பூங்குழலியாக சரிதா என்று பட்டியல் (விவாதத்துக்குரியது) நீளும். ஆழ்வார்க்கடியானுக்கும் வந்தியத்தேவனுக்கும் Full Justice செய்யக்கூடிய ஆளே கிடையாது (இதுவரை). இதில் பல பேர் இன்று இல்லை. தற்போதைய நடிகர்களுக்கு அவ்வளவு தெளிவாக கல்கியின் தமிழைப் பேச வருமா?! சந்தேகம்தான்!

அதேபோல, வரதா புயல் சென்னை மாநகரின் பசுமைப் போர்வையை துவம்சம் செய்து கடந்தபோது, வீட்டுத் தோட்டத்தில் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தபோது தஞ்சைக் கோட்டையின் புறத்தே இருந்த சேந்தன் அமுதன் வீட்டுத் தோட்டத்தில் அவன் தாயும் ஊமை ராணியுமாகச் சேர்ந்து புயலில் சிதைந்த கூரையை செப்பனிட்டுக் கொண்டிருந்தக் காட்சி மனத்திரையில் ஓடியது. வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளில் கூட பொன்னியின் செல்வன் தடம் பதித்திருப்பது ஆச்சரியம், என்னைப் போலவே மற்றவரும் இப்படி நினைவுகூர்ந்தது உண்டா?

3 COMMENTS

  1. Very nicely written by Neelakantan, in his usual style. Ponniyin Slevan deserves a much bigger recognition worldwide. The storyline and characters are much superior to very successful TV shows like Lord of the rings or Game of Thrones. Unfortunately, Kalki was born in Tamil Nadu and way ahead of his time ! Thank you Neelakantan for rekindling our fond memories of this evergreen masterpiece of Kalki

  2. அருமையான எழுத்தோட்டம். பழைய நினைவுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் நீலகண்டன் .  படிக்கும்போது வந்தியத்தேவனாகவே உருமாறி  குதிரை ஏறி சவாரி செய்தது போன்ற உணர்வு . எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காத கதையைத் தந்த கல்கி அவர்களின் அமர காவியம்

  3. Thanks for bringing back our memories of reading. I was visualising “Massive look of Veeranam ” Lake by Kalki’s narration, as I have never seen this lake. When Neelakantan ji is written this word, I was recollecting those days of reading. Appreciate Neelakantan ji’s comparison with present situation such as Tsunami, temples etc., and this motivates me to visit these places.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வற்றாத வரலாற்று ஊற்று!

- முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் தமிழ் வாசிப்பு உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக்கொண்டதொரு மாபெரும் காவியம், ‘பொன்னியின் செல்வன்’ புதினம். புகழ் பெற்ற தமிழ் மன்னர்களில் ஒருவரான ராஜராஜசோழனின் வரலாற்றுக்கு, அழகான...

பொன்னியின் செல்வன் கதையும்… நானும்!

- சீர்மிகு எழுத்தாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் சிவசங்கரி ‘பொன்னியின் செல்வன்’ தொடர் முதன் முதலில் கல்கி பத்திரிகையில் 1950ஆம் ஆண்டு துவங்கியபோது எனக்கு வயசு 8. கதைகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டாத...

ஆயிரம் வரைந்தாலும் அவர் கதைக்கு ஈடாகாது!

- ஓவியர் தமிழ் அமரர் கல்கியின் படைப்புகள் என்றாலே மனதுக்குள் ஓர் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பெயரை உச்சரிக்கும்பொழுதே மனதிற்குள் குதிரை ஓடத் தொடங்கும். வாசகன் ஒவ்வொருவனையும் காட்சிவழியே கடந்த...

பொன்னியின் செல்வனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்!

- 'கிரைம் கதை மன்னன்' ராஜேஷ்குமார் மகாபாரதம் எனும் காவியத்தை நம்மால் எப்படி மறக்க முடியாதோ, அதைப்போலத்தான், ‘பொன்னியின் செல்வன்’ என்கிற சரித்திர நாவல் தொடரையும் தமிழ் வாசகர்களால் மறக்க முடியாது. ‘பொன்னியின் செல்வன்’...

வாசிப்பின் அனுபவத்தைப் புரியவைத்த பொன்னியின் செல்வன்!

0
- சரித்திர நாவலாசிரியர் விஷ்வக்ஸேனன் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பள்ளிப் பருவமும், கல்லூரிக் காலமும்தான் பசுமையானவை, ஆனந்தம் நிறைந்தவை, முதுமையை அடைந்த பின்னரும் இளமையைத் திரும்பத் தருபவை. வாழ்வின் அந்த அனுபவங்கள் தரும் சுகத்தை,...