வற்றாத வரலாற்று ஊற்று!

வற்றாத வரலாற்று ஊற்று!

– முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன்

மிழ் வாசிப்பு உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக்கொண்டதொரு மாபெரும் காவியம், 'பொன்னியின் செல்வன்' புதினம். புகழ் பெற்ற தமிழ் மன்னர்களில் ஒருவரான ராஜராஜசோழனின் வரலாற்றுக்கு, அழகான தமிழ்மொழி நடையில் உயிரோவியம் தீட்டியவர் அமரர் கல்கி அவர்கள். 1950 முதல் 1955 வரை தொடர்கதையாக வெளிவந்த நாள் முதல் இன்று வரை அதிகமாக விற்பனையானதும், அதிக மனங்களைக் கவர்ந்ததும், 'பொன்னியின் செல்வன்' புதினம்தான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இப்புதினமானது, 'புது வெள்ளத்தில்' தொடங்கி, சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என ஐந்து பாகங்களாக, மொத்தம் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டு விளங்குகிறது.

வாணர்குலத்து வல்லவராயன் வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன் என்கிற இராசராசசோழன், ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன், குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்), பெரிய பழுவேட்டரையர், நந்தினி, சின்னபழுவேட்டரையர், ஆதித்த கரிகாலர், சுந்தரசோழர், செம்பியன் மாதேவி, கடம்பூர் சம்புவரையர், சேந்தன் அமுதன், பூங்குழலி, குடந்தை சோதிடர், வானதி, மந்திரவாதி ரவிதாஸன், கந்தமாறன் (சம்புவரையர் மகன்), கொடும்பாளுர் வேளார், மணிமேகலை (சம்புவரையர் மகள்), அநிருத்த பிரம்மராயர், மதுராந்தக சோழர் என இருபத்தியோரு கதாபாத்திரங்களை உயிரோட்டமாக்கியது இந்தப் புதினம்.

லைநகர் தஞ்சையில் சோழப் பேரரசரான சுந்தரசோழர் உடல் நலிவுற்று மரணப்படுக்கையில் இருக்கின்ற தருவாயில், அப்பேரரசரின் இரண்டு மகன்களில் மூத்தவரான ஆதித்ய கரிகாலன் காஞ்சியில் உள்ள வடக்கு எல்லையில் எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருக்கும் தருவாயில், அவனிடமிருந்து பேரரசருக்கு ஓலை கொண்டு செல்லும் வந்தியத்தேவனின் பயணத்தில் இருந்தே இந்தக் கதை தொடங்குகிறது. சுந்தரசோழர் மரணத்திற்குப் பிறகு, இராசராசன் பதவியேற்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் தருணத்தில், இறுதியில் ஏற்படும் திருப்பம்தான் அனைவருக்கும் ஒரு பெரும் காவியம் படித்த மனநிறைவைத் தருகிறது. சோழர்கள் வரலாற்றை மையமாகக் கொண்ட இந்தக் கதை வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் அற்புத இலக்கியமாகத் திகழ்கிறது. எளிமையான நடையிலும், அதில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களை எத்தனை ஆண்டு காலத்திற்குப் பின்னர் படித்தாலும் ஒரு அலாதியான ஆவலைத் தூண்டுகிற விதமாகவும் இப்புதினம் திகட்டாதத் தேனமுதாக அரசியல், காதல், இயற்கை என எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறது.

தமிழர்தம் வரலாற்றின் பொக்கிஷமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் புதினத்தைப் படிக்கின்றபோதே பண்டைய தமிழகத்தின் காவிரி பாயும் தஞ்சை மாநகரின் பேரழகை நம் கண் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தி, படிப்பவர்களின் கண்களுக்குக் குளிர்ச்சியை அள்ளி அள்ளித் தரும் ஓர் அமுத சுரபியாகத் திகழ்கிறது. இலங்கையின் எழில், கடற்கரை எல்லாம் நம் கண் முன்னாலே விரிந்து பரவுகிறது.

வாசிப்புப் பிரியர்களுக்குத் தீனி போடுகின்ற விதத்தில் அமைந்துள்ள ஓர் அற்புதமான புதினம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் நகைச்சுவை கலந்த எளிய தமிழ்நடையும், கதாபாத்திரங்களை விவரிக்கும் முறையும், கதை நிகழும் நிலப்பகுதிகளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்ற விதமும், அக்காலத் தமிழகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது நமக்கு ஏற்படுகின்ற வியப்பும்தான் அனைவரையும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

தனது புதினத்திற்கு, 'பொன்னியின் செல்வன்' என்று பெயரிட்ட அமரர் கல்கி அவர்கள், அந்தப் பொன்னியின் செல்வனான 'அருள்மொழிவர்மனை' நாவலின் இரண்டாம் பாகத்தில்தான் நமக்கு அறிமுகம் செய்கிறார். முதல் பாகத்தில் அருள்மொழிவர்மனைப் பற்றி, 'அவர் மக்களின் மனம் கவர்ந்தவர், நற்பண்புகள் நிறைந்தவர், அழகான தோற்றம் கொண்டவர்' என்றெல்லாம் நமக்கு ஒரு ஆவலைத் தூண்டியிருப்பார். 'பொன்னியின் செல்வன் நேரில் எப்படியிருப்பார், எப்படிப் பேசுவார்' என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் வந்தியத்தேவனின் அதே ஆவல், நாவலைப் படிக்கின்ற நமக்குள்ளும் எழும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றே சொல்லலாம்.

ற்பனையும், நிஜமும் கலந்து இந்தப் புதினம் எழுதப்பட்டாலும், இதில் கற்பனையை விட, உண்மைச் சம்பவங்களே நிறைந்திருக்கிறது. மாற்று தேசத்தவரும் இந்தப் புதினத்தைப் படித்தால் நமது தமிழகத்தின் மீது அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படும். இப்புதினத்தைப் படிக்கின்றபோது, நாம் கால இயந்திரத்தில் சென்று, சோழ நாட்டில் இருப்பது போலவே இருக்கும். அதோடு, இந்நாவலின் பெரும் பகுதி வரை குதிரையில் பறப்பதைப் போலவே பறந்து செல்வதை உணரலாம். நாவல் முழுவதும் வருகின்ற கதாநாயகன் வந்தியத்தேவனின் துடுக்குத்தனம், நகைச்சுவை, வார்த்தை ஜாலம், வீரம், காதல், குறும்பு, சுறுசுறுப்பு, ஆர்வம், கோபம், நேர்மை, பொய், உண்மை என்று நம்மைக் கவர்ந்திருப்பார். வந்தியத்தேவன் இளையராணி நந்தினியிடமும், சக்கரவர்த்தியின் மகள் குந்தவையிடமும் பேசுவதைப் படிக்கின்றபோதும், அற்புதமான உரையாடல்களையும், வார்த்தை ஜாலங்களையும் படித்து ரசிக்கலாம். அவற்றுக்குச் சொந்தக்காரரான அமரர் கல்கியின் இந்த எழுத்தாற்றலைப் படித்து நம்மால் பிரம்மிக்காமல் இருக்க முடியாது.

அதேபோல், குந்தவை, நந்தினி என்கிற இரு பெண் கதாபாத்திரங்களின் அழகை வர்ணிக்கும்போது, 'பெண்கள் இப்படியும் அழகாக இருப்பார்களா?' என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு மிக அற்புதமாக வர்ணித்திருப்பார் அமரர் கல்கி அவர்கள். பின்வரும் வர்ணனையைப் படித்துப் பார்த்தால் உண்மை புலப்படும்.

"சோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டோடியது.

நந்தினி பொன் வர்ண மேனியாள். குந்தவை செந்தாமரை நிறத்தினள்.

நந்தினியின் பொன்முகம் பூரணச் சந்திரனைப் போல் வட்ட வடிவமாயிருந்தது. குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வட்டமாயிருந்தது.

நந்தினியின் செவ்வரியோடிய கருநீல வர்ணக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப் போல் அகன்று இருந்தன. குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பலத்தின் இதழைப் போலக் காதளவு நீண்டு பொலிந்தன.

நந்தினியின் மூக்குத் தட்டையாக வழுவழு தந்தத்தினால் செய்தது போலத் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப் போல் இருந்தது.

நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் இதழ்களோ, தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது.

நந்தினி தன் கூந்தலை கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ, 'இவள் அழகின் அரசி' என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணிமகுடத்தைப் போல அமைந்து இருந்தது."

இரு பெண் கதாபாத்திரங்களும் அழகிகள் எனும்போது அவர்களிடையே ஏற்படும் போட்டி, பொறமைகளும் மிகவும் அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

'இந்தப் புதினத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?' என்று கேள்வி எழுந்தபோது பெரும்பான்மையாவர்கள் வந்தியத்தேவனை குறிப்பிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. வந்தியத்தேவன் மிகவும் திறமையானவன், எதிலும் தப்பித்து விடுவான் என்றாலும், வந்தியத்தேவனுக்குப் பெரும்பாலும் உதவுவது அவனுடைய அதிர்ஷ்டம்தான். அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தால் வந்தியத்தேவன் கதாபாத்திரம் இவ்வளவு நீண்டு இருக்கவே முடியாது. ஆழ்வார்க்கடியான் பல இடங்களில் புத்தி சாதுர்யத்தால் தப்பித்து விடுவார். இவருக்கும் அதிர்ஷ்டம் துணை புரியும் என்றாலும் ஒப்பீட்டளவில் இவருக்குக் குறைவே.

குடந்தை சோதிடரைப் பற்றி வரும் பகுதி, சோதிட நம்பிக்கையையும் அதேசமயம் அதை நம்பக்கூடாது என்ற பகுத்தறிவையும் நமது மனமே அறியாமல் கூறிச் செல்கிறார் அமரர் கல்கி. இந்நாவலைப் படிப்பவர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தாலும் அவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி சில கதாபாத்திரங்களின் வசனங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் இரு தரப்பையும் அசத்தலாக சமன் படுத்தியிருக்கிறார் அமரர் கல்கி. அதாவது சோதிடத்தை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதையே முழுமையாக நம்பி இருக்கக் கூடாது என்பதை இலைமறைவு காயாக உணர்த்துவது அற்புதம்!

இந்தப் புதினத்தில் அத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குணாதியசம் கொண்டவர்களையும் இறுதிவரை அவர்கள் குணாதிசயத்தை எந்த விதத்திலும் சிதைக்காமல் கொண்டு செல்ல எவ்வளவு திறமை வேண்டும்!?

துவரை வரலாற்றைப் பற்றியோ, தமிழர்களின் சிறப்புகள் பற்றியோ, பண்டைய மன்னர்களின் வீரம், கொடை, புத்திசாலித்தனம் தொலைநோக்குப் பார்வை பற்றியோ அறிய எந்தப் பிடிப்பும், ஆர்வமும் இல்லாமல் இருந்தால், பொன்னியின் செல்வன் படித்தால் அவர்களின் மனநிலை மாறி விடும் என்பது நிச்சயம். இந்த நாவலின் வாசிப்பு அனுபவத் தாக்கம் சில நாட்களாவது அவரவர் மனதில் இருக்கும் என்பது உறுதி. ஒரு சரித்திரக் கதையை சாதாரணமாகச் சொல்கிற பொன்னியின் செல்வனை, 'வற்றாத வரலாற்று ஊற்று' என்றுதான் கூற வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com