பராக் பராக் - 16 : அடுத்தது என்ன ?

பராக் பராக் - 16 : அடுத்தது என்ன ?

தி இந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி, பணி ஓய்வு பெற்று வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். கடற்கரை சாலையில் கண்ணகி சிலையை எனது காரில் கடந்து கொண்டிருந்த சமயம்... 

நாற்பது வருடங்கள் ஆங்கில மாதவியுடன் குலாவி விட்டு, தமிழ் கண்ணகியை நாடி  இனி செல்ல வேண்டியதுதான் என்று மனதில் ஓர் குரல். .  பத்திரிக்கையாளராக வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்திருந்த நான், அவ்வப்போது இலக்கிய கடலில் நின்று கால் நினைத்து கொண்டிருந்தேனே தவிர, முழு வீச்சில் முத்து குளித்து, இலக்கிய நன்முத்துகளை சேகரிக்கவில்லை!

எனவே அடுத்தது என்ன என்று எனக்குள் கேட்டுக்கொண்டபோது, நிறைய பயணங்கள் செய்ய வேண்டும் என்று மனதில்  ஓர் குரல் கூறியது. அப்போது கூட ஓய்வு பெற்றவர்கள் செய்ய நினைக்கும் ஆன்மிக யாத்திரையைத்தான் நான் செய்ய நினைத்தேன். 

கண்ணகி சிலையை கடந்து, ஓளவையார் சிலையை நெருங்கும்போது எனது அலைபேசி ஒலித்தது. அழைத்தவர், கல்கி குடும்பத்தை சேர்ந்த அவரது பெயர்த்தி, லக்ஷ்மி நடராஜன்!

''நாளை காலை அலுவலகம் வர முடியுமா ? ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் !'' -- என்று அவர் கூறும்போது,  என்னுள் ஓர் படபடப்பு. !

கல்கி எனக்கு புதிதல்ல. ! சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு என்று கல்கி கட்டிய கோட்டையினுள் நுழைந்து ஏற்கனவே, கூடலழகி என்கிற சிறிய கோபுரம் ஒன்றை நான் கட்டியிருக்கிறேன்.  வந்தியத்தேவன்-னை  போல,  நான் கல்கியின்  கோட்டையின் உள்ளே  எப்படி நுழைந்தேன் என்று எனக்கே ஆச்சரியம்.  கல்கி பொறுப்பாசிரியர்  ரமணன் நந்தினி போன்று ஓரு முத்திரை மோதிரத்தை எனக்கு கொடுக்க, அதை காட்டித்தான் நான் கல்கி கோட்டையில் நுழைந்தேன்.  ஆனால் இந்த முறை சுந்தர சோழரின் திருமகளிடம் இருந்தே அழைப்பு வந்ததால்,  இந்த படபடப்பு.

அத்திமலைத்தேவன், காலச்சக்கரம், சங்கத்தாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, மயிலங்கி மங்கையின் மரகத பெட்டி என்று எனக்கென்று ஓர் வாசக வட்டத்தை கொண்டிருந்தாலும், மறுநாள் காலையில் கல்கியின் கோட்டைக்குள் நுழையும்போது, வந்தியத்தேவனை போன்று தான் உணர்ந்தேன்.

நேராக விஷயத்திற்கு வந்தார், லக்ஷ்மி நடராஜன்.

''எழுபது வருடங்களாக, பொன்னியின் செல்வனை,  தொடர்கதையாக, நூலாக, ஆடியோ நூலாக, மேடை நாடகங்கள்-ளாக வாசகர்கள் வாசித்தும் கேட்டும் விட்டார்கள். இனி பொன்னியின் செல்வனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக  கல்கி குழுமம்  விரும்புகிறது. வந்தியத்தேவன் சென்ற பாதையில் ஓர் அனுபவ பயணமாக சென்று, தக்க வரலாற்று ஆதாரங்களுடன்,  பொன்னியின் செல்வன் கதையை அவை நிகழ்ந்த இடங்களுக்கே சென்று  விவரிக்க வேண்டும்.  நமது அனுபவ பயணத்தை 16 பகுதிகளை கொண்ட காணொளி தொகுப்பாக தயாரித்து மக்களுக்கு அளிக்க வேண்டும். அதோடு, அவர்கள் அந்த இடங்களுக்கு பயணம் செல்லும்படி,  நமது நிகழ்ச்சி அவர்களை தூண்ட வேண்டும். இதை நீங்கள்தான செய்ய வேண்டும் ...'' என்றார்.

''என்னை வைத்து காமெடி கீமடி ஒன்றும் செய்யவில்லையே'' -- என்று வடிவேலுவை போன்றுதான்  கேட்க நினைத்தேன்.

நானோ பத்திரிக்கையாளனா, எழுத்தாளனா, சரித்திர ஆர்வலனா -- என்று எனக்கே தெரியாத நிலையில், கல்கியின் படைப்பை நான் கையாளுவதா ?

’’எனது தமக்கை சீதா ரவியின் சாய்ஸ் நீங்கதான் !'' -- என்று லக்ஷ்மி கூறியதும், உடனே புரிந்து போனது. சீதா பிராட்டிதானே, பட்டாபிஷேகத்தின் போது அனுமனுக்கு முத்து மாலையை பரிசளித்தார். இங்கே சீதா ரவி அவர்கள்தான், என்னை பொன்னியின் செல்வன் பாதையில் பயணம் என்கிற முத்துமாலையை பரிசாக தந்திருக்கிறார் என்பதும்  புரிந்தது. 

உடனே கோடியக்கரை ஓரத்தில் நிற்கும்  பூங்குழலி கணக்காக ஹம்மிங் செய்ய தொடங்கிவிட்டேன்.

அலைகடழலும் ஓய்ந்திருக்க, 

அகக்கடல்தான் பொங்குவதேன். 

ஹிந்து பணி முடிந்துவிட, 

கல்கி பணி தொடங்குவதேன்.?

''நாளை காலை சீதா ரவி, மற்றும் கல்கி ராஜேந்திரன் சார் ஆகியோரை பார்த்துவிட்டு, நீங்கள் பணியை தொடங்கலாம். 16 எபிசோட் தயாரிக்க உள்ளோம். அதற்கேற்றபடி  ஸ்க்ரிப்ட் தயாரிக்க வேண்டும். நிகழ்ச்சியை நீங்கள்தான் தொகுத்து வழங்கணும்...'' என்றதும், அதிர்ந்து நின்றேன்.

''மேடம் ! எங்கப்பா சித்ராலயா கோபு ! திரைப்பட துறையில  கதை, திரைக்கதை, வசனகர்த்தாவா அறுபது வருடங்களா இருந்திருக்கிறார்.  அவரே ஒரு முறைகூட என்னை கேமரா முன்னாடி நிற்க வைத்தது இல்லை. அவரே எடுக்காத ரிஸ்க்கை நீங்க எதுக்கு எடுக்கறீங்க ?'' -- என்றேன்.

''நாங்க எடுக்கிறது ஆவண படம் !  காலம் காலமா அந்த ஆவணம் இருக்க போறது ! அதுக்கு சரித்திர ஆர்வம் மிக்க, சரித்திர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட துடிதுடிப்பும் அனுபவமும் உள்ள, அதே சமயம் சமநிலைச் சிந்தனையுடைய நபர் தேவை '' என்றார். 

அரசியலில்  மூத்த தலைவர் என்றால், ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று பொருள் ! ஆனால், ஆவண படத்திற்கு மூத்த தலைதான் வேண்டும் போலும்.

மறுநாள், சீதா ரவி மற்றும், கல்கி ராஜேந்திரன்  ஆகிய இருவரையும் சந்திக்கும் வரையில்  நான் பெருங்குழப்பதில் ஆழ்ந்திருந்தேன். நம்மால் முடியுமா?

அதுவும்  பிரம்மாண்ட திரைப்படமாக பொன்னியின் செல்வன் எடுக்கப்படும்  வேளையில், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி என்று புகழ் பெற்ற நடிக, நடிகையரின் முகங்கள் ஊடகங்களில் உலா வரும் வேளையில்...? முடியுமா?

வீட்டில் வேறு அப்பா சித்ராலயா கோபு, விஷயத்தை கேள்விபட்டதும், என்னை ரவிதாசன் போல பார்த்தார்.  

''வேண்டாம்னு சொல்லிடுடா ! துரோகிகளான,  ரவிதாசன், சாம்பவன், காலச்சக்கரம் நரசிம்மா னு உடையார்குடி கல்வெட்டுல யாராவது எழுதிடுவா !  எழுபது வருட காவியம் ! ஜாக்கிரதை  !'' -- கடம்பூர் மாளிகைக்கு போகாதே என்று எச்சரிக்கும் மலையமானை போன்று என்னை எச்சரித்தார், அப்பா சித்ராலயா கோபு. 

இருந்த கொஞ்ச நஞ்ச துணிவும், மறைந்து போனது. 

'சரி ! நடப்பது நடக்கட்டும். ! காலையில் சென்று என்னால் இயலாது என்று சொல்லி விடுவோம் -- என்கிற தீர்மானத்துடன்தான்  கல்கி அலுவலகம் சென்றேன். பக்கத்திலேயே கல்கி குடுமபத்தின் இல்லம். என்னை அழைத்துக்கொண்டு,  தனது வீட்டிற்கு சென்றார், லக்ஷ்மி நடராஜன்.

சீதா ரவி இன்முகத்துடன் வரவேற்றார். ''எங்கள் மூவரின் தேர்வும் நீங்கள்தான் ! உங்களால் முடியும் என்கிற நம்பிக்கையில்தான் உங்களை அழைத்தோம் !'' -- என்றார். பிறகு கல்கி ராஜேந்திரன் அவர்களிடம் என்னை அழைத்து சென்றார்கள்.

மாஸ்க் அணிந்த சுந்தர சோழராக அமர்ந்திருந்தார்,  கல்கி ராஜேந்திரன். பார்வையால் என்னை அளந்தவர், திடீரென்று மாஸ்க்கை நீக்கிவிட்டு, என்னை பார்த்தார். ''தைரியமா செய்யுங்க ! உங்களால முடியும் '' என்றார்.

அங்கே வைக்கப்பட்டிருந்த அமரர் கல்கி  கிருஷ்ணமூர்த்தியின் படத்தை உற்று நோக்கி தைரியத்தை வரவழைத்து கொண்டேன். 

''ஓர் வந்தியத்தேவனாக அல்லாமல், ஆழவார்க்கடியான்-னாக என்னால் முடிந்ததை செய்கிறேன். நிகழ்ச்சி வெற்றி  பெற்றால், எல்லா பெருமையும் உமக்கே.  நிகழ்ச்சி சொதப்பினால், அதற்கு நானே பொறுப்பு !'' -- என்று அவரிடம் மனதளவில் கூறிவிட்டு, எனது சம்மதத்தை கல்கி குடும்பத்திற்கு தெரிவித்தேன்.

இதற்கு பிறகு நடந்தவை எல்லாமே,  நகைச்சுவை, பரபரப்பு, விறுவிறுப்பு, கலந்த சம்பவங்கள்.

''இந்த தொடரை இயக்கப்போகும் நபரை நான் பார்க்க வேண்டுமே. ! அவர் பொன்னியின் செல்வன் படித்திருக்க வேண்டும் ! சரித்திர சம்பவங்களை அவர் அறிந்திருக்க வேண்டும்.'' -- என்று மெல்ல கூறினேன்.

''சார் ! உங்களுக்கு ஓரு டீம் தரேன். அவங்க சரித்திரம்-னா கிலோ என்ன விலைனு கேட்பாங்க ? அவங்களுக்கு பொன்னியின் செல்வன், சரித்திரம் எல்லாம் நீங்க சொல்லி கொடுத்து அப்புறம்தான், படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்'' என்றார் லக்ஷ்மி !

''அதற்கென்ன ! சொல்லி கொடுத்தால்  போச்சு !''- என்றேன், நான் அனுபவிக்க போகிற சிரமங்களைப் பற்றி சிறிதும் நினையாமல். 

''ராஜ்கமல் னு ஓர் இளம் இயக்குனர். அவரோட கேமராமேன் பெயர் மதன். அவங்களும் இப்ப வந்துடுவாங்க !'' -- என்றார் லக்ஷ்மி.

சற்று நேரத்தில் இரண்டு இளைஞர்கள் உள்ளே நுழைந்தனர். முப்பது வயதை கூட எட்டி பிடித்திருக்க மாட்டார்கள்.  ராஜ்கமல் பார்ப்பதற்கு ஹிந்திகாரர் போல தெரிந்தார். 

''சோழா கே பீச்சே க்யா ஹை ?'' -- என்று கேட்பார்களோ! லக்ஷ்மி நடராஜன் என்னை அறிமுகப்படுத்த, அவர் எனக்கு ஹாய் என்று சொன்னாலும், இருவரின் பார்வையும், அறையின் நுழை வாயிலேயே நோட்டம் வந்து கொண்டிருந்தது. 

''சார் ! அவங்களுக்கு பொன்னியின் செல்வன் கதையை சுருக்கமா சொல்லிடுங்களேன் !'' -- என்றார் லக்ஷ்மி.

''இருங்க ! அந்த anchor (நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ) கேர்ள் வந்துடட்டுமே !'' -- இயக்குனர் ராஜ்கமல் சொன்னார். 

''இவர்தான் anchor '' -- என்று கூறப்பட்டதும், அவர்கள் இருவரும் என்னை பார்த்த பார்வை இருக்கிறதே ?

அப்போதே அவர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்திருக்க வேண்டும்.

''கதை அப்புறம் கேட்கிறோம் சார் ! எங்கெல்லாம் ’சுட’ (shoot) பண்ணனும் ?'' -- என்றார் கேமராமேன் மதன்.

''வீர நாராயண ஏரியில் நமது படப்பிடிப்பு தொடக்கம். அதற்கு பிறகு, காட்டுமன்னார்குடி விண்ணகரம், உடையார்குடி, திருப்புறம்பியம், அரசிலாறு, குடந்தை, நந்திபுர விண்ணகரம், பழையாறை, கோடியக்கரை, குழகர் கோவில். கொடும்பாளூர், பழுவூர்...''  -- என்று நான் பட்டியலிட, இளைஞர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் . 

''கொஞ்சம் தமிழ்ல சொல்ல முடியுமா சார்?'' -- கேமராமேன் கேட்டார். 

''பளூ ஊர் ..பள ஆரை.. '' -- ரெண்டும் ஒரே ஊரா... வேற வேற ஊரா ?'' -- இயக்குனர் கேட்டார்.

''பழையாறை சோழர்கள் தலைநகரம் ! பழுவூர் பழுவேட்டரையர் ஆண்ட நாடு !'' -- நான் விளக்க, இயக்குனர் மலங்க மலங்க விழித்தார். 

'பளு வேட் அய்யரா ? யூ மீன் சரத்குமார் கேரக்டர் ? -- என்று கேட்டார் இயக்குனர்.!

சரியாப்  போச்சு ! இவர்களுக்கு பொன்னியின் செல்வன் கதையை கூறி, சரித்திரத்தை விளக்கி, நான் என் உரையை பேசி, அவர்கள் அதை புரிந்து கொண்டு, அவர்கள் அதை படம் எடுத்து, -- அட கடவுளே ! 

''முதல் காட்சி வீராணம் ஏரிக்கரையில் தொடங்கணும். வந்தியத்தேவன் புரவி-யில வரான் ''

''ரவி யார் சார் ? வந்தியத்தேவனை பிரெண்டா ?'' -- கேட்டது கேமராமேன்.

''புரவி-னா குதிரை !'' -- என்றதும், அனிமல் cruelty-னு சொல்லுவாங்க சார் ! குதிரை இல்லாமல் முதல் காட்சியை எடுக்க முடியுமா ?'' -- இயக்குனர் கேட்டார். 

என்ன பதில் கூறுவது, என்று நான் யோசிக்க,  வெளியே சென்றிருந்த லக்ஷ்மி மீண்டும் உள்ளே வந்தார். 

''இப்போ ஏப்ரல் மாதம். எனக்கு ஜூலை 31, ஷீட் முடிக்கணும். கல்கி குழுமம் வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு பராக் பராக் கல்கியின் பொன்னியின் செல்வன்! வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம்,''னு பெயர் வச்சிருக்கோம். எனவே, உடனடியா நீங்க படப்பிடிப்பை தொடங்கணும். ஸ்க்ரிப்ட் எழுத மட்டும் ஒரு வாரம் எடுத்துக்கங்க !'' -- என்றார்.

இந்த இளைஞர்கள் டீமுக்கு பொன்னியின் செல்வன் கதையை சொல்லி புரியவைப்பதற்கே மூன்று மாதங்கள் தேவைப்படுமே.  மூன்று மாதங்களில் காணொளி தொடரின் படப்பிடிப்பு முழுவதுமே, முடிக்க வேண்டும் என்கிறாரே!

கேமராமேன் என் காதில் கிசுகிசுத்தார்.  ''சார் ! பான் பராக் கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன பராக் பராக்....''? என்று சொல்ல, மீண்டும் தலை சுற்ற, கொடும்பாளூர் வானதியை  போன்று பரிதவித்தேன்.

மீண்டும் மறுநாள் சந்திப்பது என்கிற தீர்மானத்துடன் அனைவரும்  புறப்பட, லக்ஷ்மியின் உதவியாளர்  செல்வி என்னை வழிமறித்தார். 

''சார் ! உங்க details  வேணும், எங்க records- க்கு ?  உங்க பெயர் ?'' --

''என் பெயர் காலச்சக்கரம் நரசிம்மா !'' -- என்றேன்.

''காலச்சக்கரம் உங்க அப்பாவா ? அப்ப கே நரசிம்மானு எழுதிகிட்டா.

''இல்லேம்மா ! காலச்சக்கரம் எனது முதல் நாவல் ! அதனால எனது பெயருக்கு முன்னாடி அடைமொழியா மாறிடுச்சு.''

70 வருடங்களாக மக்களின் மனதில் வேரூன்றி நிற்கும் அமரகாவியம் பொன்னியின் செல்வன். நமது பாரம்பரியத்திற்கு ஓர்  அடையாளமாக திகழ்ந்து வருகிறது. கல்கியின் பேனாவில் இருந்து சிறு துளியாக புறப்பட்ட, பொன்னியின் செல்வன், இன்று திரைப் படமாக தயாரிக்கப்பட்டு, சுனாமியாக தமிழகத்தை தாக்கி கொண்டிருந்தது. ஏன் ? இந்திய திருநாட்டையே  கலக்கி கொண்டிருந்தது. 

இந்த நிலையில் அந்த அமர காவியத்தை, ஓர் ஆவண பயண நிகழ்ச்சியாக  16 பகுதிகளாக தயாரிக்க முடியுமா ? அதுவும் வரலாறு என்றால் என்ன என்று தெரியாத, பொன்னியின் செல்வன் படித்திராத இளைஞர்களுடன் பயணித்து,  இந்த தொடரை வெற்றிகரமாக தயாரிக்க முடியுமா ?

கெடிலம் ஆற்றை கடந்து சென்றால் உனக்கு ஆபத்து,-- என்று ஆதித்த கரிகாலனுக்கு எச்சரிக்கை விடப்பட்டதே !

நானும் கல்கி குழுமத்தின் அழைப்பை ஏற்று , அடையார் ஆற்றை கடந்து சென்றது தவறோ ?

நமது பயண நிகழ்வில் ஏதாவது தவறு நிகழ்ந்தால், கல்கியின் உலகளாவிய வாசகர்கள், எனது தலையை வாங்கி விட மாட்டார்களா ?

அச்சத்துடன்,  அடையார் டிப்போவை கடந்து காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது,  அதுவரையில் சிவப்பு விளக்கு காட்டிக்கொண்டிருந்த சிக்னல் பச்சை விளக்கை காட்டியது. எனது கார் , சிக்னலை கடந்தபோது, தற்செயலாக சாலையின் பெயர் பலகை எனது கண்ணில் பட்டது. 

கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை !

அதன் பிறகு நடந்தவை எல்லாம், எனது அதிகாரத்தில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஓர் சக்தி அந்த பெயர் பலகையில் இருந்து எழுந்து வந்து என்னுடன் காரில் ஏறியது. 

தொடரும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com