ஆழ்வார்க்கடியானாக நாவலிட்டு வாதம் செய்தேன்!

ஆழ்வார்க்கடியானாக நாவலிட்டு வாதம் செய்தேன்!

– காலச்சக்கரம் நரசிம்மா

ல்கி பத்திரிகையில் இருந்து, 'பொன்னியின் செல்வன்' வாசிப்பு அனுபவம் குறித்து என்னிடம் கேட்பார்கள் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை.  இன்று நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், அமரர் கல்கிதான். அமரர் கல்கியின் ராஜபாட்டையில், 'கூடலழகி' என்கிற தொடரை எழுதும் பெரும் பேறு எனக்குக் கிட்டியது என்றால், நான் அமரர் கல்கியின் பரிபூரண ஆசியைப் பெற்றவன் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நான் பிறந்தது ஒரு எழுத்தாளர் குடும்பம். வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்கள், பத்திரிக்கைகள்தான்! எனது அம்மா கமலா சடகோபன், சிறு வயது முதலாக பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளை பைண்ட் செய்து தனது பிறந்த வீட்டு நூல் நிலையத்தில் வைப்பார். நான் படித்தது கான்வென்ட் பள்ளிக்கூடம் என்பதால், சிறு வயது முதல் ஆங்கிலத்துடன்தான் உறவாடினேன். வளர்ந்த பிறகு, Chaucer, மில்டன், ஷேக்ஸ்பியர், ரேய்னால்ட்ஸ், அலெக்சாண்டர் டூமாஸ் என்றுதான் படித்துக் கொண்டிருந்தேன். எனது அம்மா பலமுறை, ஐந்து பகுதி பொன்னியின் செல்வனை என்னிடம் நீட்டியபோதெல்லாம், "சாரி" என்று கூறி விடுவேன்.

எனது நாற்பதாவது வயதில்தான் பொன்னியின் செல்வனை படிக்க முடிவு செய்தேன். நல்லவேளையாக, எனக்கு மனைவியாக வாய்த்தவர் சரித்திர புதினங்களை வாசிப்பவர். ஒரு பீரோ நிறைய நூல்களை திருமண சீராக எனது வீட்டுக்குக் கொண்டு வந்தார். அவற்றில், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை அனைத்துமே இருந்தன.

ஒரு நாள், 'தி ஹிந்து'வில் இரவுப் பணியை முடித்து விட்டு, இரவு இரண்டு மணிக்கு வீடு வந்த எனக்கு தூக்கம் வரவில்லை. சரியென்று பொன்னியின் செல்வன் படிக்கத் தொடங்கினேன். இரவு முழுவதும், கண் விழித்து… மறுநாள் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டுப் படித்தேன்… படித்தேன்… படித்துக்கொண்டே இருந்தேன். ஓடினேன்… ஓடினேன்… வீராணம் ஏரியின் கரைக்கே ஓடினேன்! ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த குழந்தையை எடுக்க முயல, அது இன்னும் ஆழத்திற்குச் செல்வதுபோல், பொன்னியின் செல்வன் என்னும் ஆழ்துளை கிணறுக்குள் சிக்கிக்கொண்ட நான் இன்னும் ஆழத்திற்கு சென்று கொண்டிருந்தேன். என்னை மீட்க என்னாலேயே முடியவில்லை.

பொன்னியின் செல்வனை முடித்தபோது பிரமிப்பின் உச்சகட்டத்தில் அமர்ந்திருந்தேன். நான் படித்திருந்த ஆங்கில இலக்கியங்கள் அனைத்துமே அந்த ஒரு நொடியில், சிறுத்துப் போய்விட்டதாக உணர்ந்தேன். ஆழ்வார்க்கடியானை போல, கல்கிக்கடியானாக என்னை மாற்றி விட்டது பொன்னியின் செல்வன்.

மீண்டும் மீண்டும் படித்தபோது, பொன்னியின் செல்வனில் புதிய கோணங்கள் தோன்றின. கல்கியின் பொன்னியின் செல்வனை கதையாக மட்டுமே படிக்கக் கூடாது. அதில் பல சங்கேத தகவல்களை சூட்சுமமாக அள்ளித்தெளித்திருக்கிறார் கல்கி. வருங்கால தலைமுறையினருக்கு, Da Vinci Code போல பல நுண்ணிய தகவல்களைக் கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு, யாழ் களஞ்சியத்தில் ஆதித்த கரிகாலனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார். 'யாழ் களஞ்சியம்' என்று அந்த அத்தியாயத்திற்கே தலைப்பு கொடுத்திருக்கிறார். யாழ் களஞ்சியம் என்பது கல்கி கொடுத்திருக்கும் பெரிய Clue!

'பெற்றோரிடம் வளராமல் பாட்டனார் வீட்டில் ஆதித்த கரிகாலன் ஏன் வளர்ந்தான்? அவனைக் கொன்றது யார்?' போன்ற கேள்விகள் எனது மனதில் தோன்றிக்கொண்டேதான் இருந்தன. பொன்னியின் செல்வனை படித்த பிறகு, ஆங்கிலத்தை அறவே மறந்து, சோழர் சரித்திரத்தை பற்றிய ஆய்வுகளில் இறங்கினேன். நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் போன்ற சரித்திர வல்லுனர்களின் ஆய்வு நூல்களைப் படித்தேன்.

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும், ஒன்றைரை வருடங்களுக்கு மட்டும் நடக்கும் நிகழ்வுகளே. வீராணம் ஏரிக்கரையில் நமக்கு அறிமுகம் ஆகும் வானவராயன் வந்தியத்தேவன், ஐந்தாவது பகுதியின் முடிவில், மணிமேகலையின் மரணத்திற்குப் பிறகு எங்கோ சென்று விடுவதாக அமரர் கல்கி முடித்திருப்பார்.

அதற்கு முன்பாக எங்கிருந்து வந்தான் வந்தியத்தேவன்? முடிவில் எங்கே சென்றான்? சுந்தர சோழர், பழுவேட்டரையர் சகோதர்கள், நந்தினி, குந்தவை, அருள்மொழி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியான் என்று பல பாத்திரங்கள் என்னை இரவும் பகலும், அலைக்கழித்துக்கொண்டே இருந்தனர். எல்லா பாத்திரங்களை விட ஆதித்த கரிகாலனின் பாத்திரம் எனது மனதில் ஆழமாகப் புதைந்துபோனது.

பொன்னியின் செல்வனை படித்த பிறகுதான், அமரர் கல்கியின் சேவை எத்தகையது என்பதைப் புரிந்துகொண்டேன். நமது அரசியல்வாதிகள், நம் நாட்டு சரித்திரங்களை மதிக்காத நிலையில், தனியொருவராக சோழ சரித்திரத்தை தனது பொன்னியின் செல்வன் மூலமாக பதிவிட்டிருக்கிறார். கல்கி மட்டும் பொன்னியின் செல்வனை எழுதவில்லையென்றால், ஆதித்த கரிகாலன் என்று ஒரு இளவரசன் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை அறியாமலேயே போயிருப்போம். அவ்வளவு ஏன்? சோழ சரித்திரத்தையே நாம் அறியத் தவறியிருப்போம்?

இன்று பொன்னியின் செல்வனில் கல்கி உரைத்த அத்தனை பகுதிகளுக்கும், அடிக்கடி சென்று வருகிறேன். வீராணம் ஏரியில் தொடங்கி, மேலக்கடம்பூர், வீரநாராயணர் கோயில் என்கிற காட்டுமன்னார்கோவில், வல்லம், ஆதித்த கரிகாலன் ஆழ்ந்த மலையாமனின் திருக்கோவலூர், வீரட்டானேஸ்வரர் கோயில், கெடிலம், கருடாக்குன்றம், பண்ணுருட்டி (பண்ருட்டி) சோழர் மாளிகை, பழையாறை, திருக்குடந்தை, பட்டீஸ்வரம், அநிருத்தரின் சொந்த ஊரான நந்திபுர விண்ணகரம், காஞ்சியின் திருமுக்கூடல், திருவெள்ளறை, கோடியக்கரை, தலைச்சங்க நாண்மதியம் என்று பல ஊர்களுக்குப் பயணித்து விட்டேன்.

கல்கி பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை வாதிக்கும் திறமை கொண்டவனாக சித்தரித்திருப்பார். சிவனடியார்களை வாதத்திற்கு அழைக்கும் வீர வைணவனாகவும் அவனைக் காட்டியிருப்பார். ஆழ்வார்க்கடியான் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. என்னை நானே ஆழ்வார்க்கடியானாக கற்பனை செய்து கொள்வேன். நாலாயிர திவ்ய பிரபந்தங்களை வேறு நான் கற்றுக்கொண்டிருந்ததால், என்னை ஆழ்வார்க்கடியானின் அவதாரமாகவே நினைத்தேன். வாழ்நாளில் யாராவது பொன்னியின் செல்வன் படம் எடுத்தால், ஆழ்வார்க்கடியானாக நடிக்கும் தகுதி எனக்கு மட்டுமே உள்ளதாக நினைத்துக்கொள்வேன்.

நம்ப மாட்டீர்கள். பம்பாய் நிறுவனம் ஒன்று பொன்னியின் செல்வனை டிவி தொடராக எடுக்கப்போவதாக அறிவித்து, 'நடிப்பதற்கு நடிகர்கள் தேவை' என்று விளம்பரம் செய்திருந்தது. அப்போதுதான் நான் ஜெயா டிவியில் வந்த ஒரு நகைச்சுவை தொடரை எழுதி வந்தேன். அதில் நகைச்சுவை பாத்திரம் ஒன்றிலும் நடித்து இருந்தேன். அந்தத் துணிவில் ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தில் நடிப்பதற்கு விண்ணப்பித்தேன். ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் என்னை இண்டர்வியூ செய்தார்கள். ஆழ்வார்க்கடியானை போன்று ஓடிக்கொண்டே பேசுவது, தடியை வைத்துக்கொண்டு வாதிடுவது, பாசுரங்களைக் கூறுவது என்று நடித்துக்காட்ட, இயக்குனருக்குப் பிடித்துப்போனது.

"உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். ஆனால், தொப்பையும் தொந்தியுமாக இருக்க வேண்டும். எனவே, தொப்பையை வளர்த்துக்கொள்ளுங்கள்" என்றார்கள். பால், ஐஸ்க்ரீம், இனிப்புகள் என்று உட்கொண்டேன். தொந்தி வளரத் தொடங்கியது. ஆனால், பம்பாய் நிறுவனம் பொன்னியின் செல்வன் தொடரை கைவிடுவதாக அறிவிக்க, தொந்தியும் சுகரும்தான் எனக்கு மிஞ்சின. கல்கியால்தான் எனக்கு தொந்தியும், சுகரும் வந்தன என்றால் மிகையாகாது.

கல்கியின் பாத்திரங்களில், ஆழ்வார்க்கடியானும், ஆதித்த கரிகாலனும்தான் என்னை மிகவும் பாதித்தவர்கள்! ஆழ்வார்க்கடியானால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், எனது தம்பி திருமணத்தின்போது ஆழ்வார்க்கடியானை போன்று, கையில் நாவல் செடி ஒன்றை ஏந்தி நாவலிட்டு வாதம் செய்தேன். 'நமது கோட்பாடுகளை பேணிக் காப்பது ஆண்களா? பெண்களா?' என்கிற தலைப்பில் சவால் ஒன்றை விட்டேன்.

கையில் நாவல் செடியை ஏன் ஏந்த வேண்டும்? நாவலிட்டு வாதம் செய்வது என்பது சங்க காலத்து வழக்கம். நா வன்மையை நிர்ணயிக்கும் செடி என்பதாலேயே அந்தச் செடிக்கு நாவல் மரம் என்று பெயர் வந்தது. ஒருவன் தனது வாதத்தை நிலைநிறுத்த நினைத்தால், நாவல் செடி ஒன்றை நட்டு, வாதம் புரிய பண்டிதர்களை அழைப்பான். அவனது வாதத்தை எதிர்கொண்டு, பலர் எதிர்வாதம் புரிவார்கள். யார் வாதம் செய்யும்போது நாவல் செடி வாடுகிறதோ, அவரே வாதத்தில் வெற்றி பெற்றவராக அறிவிப்பர்.

அப்போதைய ஸ்ரீபெரும்பூதூர் ஜீயர் வரத எதிராஜா ஜீயரின் முன்பாக நான் நாவலிட்டு எனது தரப்பு வாதத்தை, ஆழ்வார்க்கடியானை போல முன் வைத்தேன்.  நாவல் செடியை கையில் ஏந்தியபடி ஆழ்வார்க்கடியானாக நின்றபொழுது, எனது சிந்தையெல்லாம் அமரர் கல்கியே நடம் புரிந்தார். எனது வாதத்திற்கு எதிர்வாதங்களை வைத்தது, டாக்டர் சுதா சேஷய்யன், எனது தாயார் கமலா சடகோபன் மற்றும் எனது தமிழ் ஆசான் கல்யாணி வரதராஜன். பெண்களே முடிவில் வென்றார்கள்.

ஆனால் ஜீயர், நாவலிட்டு வாதம் செய்த பண்டைய வழக்கத்தை மீண்டும் அரங்கேற்றியதற்காக என்னை வாழ்த்தினார். ''நீ வாதம் செய்தபோது, கல்கியின் ஆழ்வார்க்கடியான் நிற்பது போல எனக்குத் தோன்றியது" என்றார். அதுதானே எனக்கு வேண்டும்! ஆக, நான் உண்ணும் உணவு, பருகும் நீர், அணியும் உடுக்கை மற்றும் குதப்பும் வெற்றிலை அனைத்துமே பொன்னியின் செல்வன்தான்.

வருங்கால தலைமுறையினர் சரித்திரங்களை புதினங்கள் வாயிலாகவாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் அமரர் கல்கி பொன்னியின் செல்வனை எழுதியிருக்க வேண்டும். கல்கியின் பொன்னியின் செல்வன் என்கிற ரதத்திற்கு அச்சாணியாக விளங்கியது ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்கள். பறந்து விரிந்த காவிரியைப் போன்ற மார்பினை உடைய வந்தியத்தேவன், அவனது நீண்ட குழல்கள், குந்தவையின் கோபுரக் கொண்டை, நந்தினியின் ஆண்டாள் கொண்டை, அவள் மார்பை மறைக்கும் மெல்லிய சீலை, பழுவேட்டரையரின் தாடி என்று நமது கண்முன்பாக பாத்திரங்களை நடமாட செய்திருந்தார். குந்தவையின் கோபுரக் கொண்டையையும், நந்தினியின் ஆண்டாள் கொண்டையையும் பார்த்த கண்கள் வேறு ஒன்றையும் காண விழையவில்லை.

அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஒரு திரைப்பட ஸ்டில்களில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை, Game of Thrones பாத்திரங்களைப் போன்று ஆடைகளை அணிவித்திருந்தனர். இது எனக்கு பெரும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியது!

பொன்னியின் செல்வனை நான் படித்து முடித்த அன்று எனது அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.'Better late than never!' என்றார். இன்று எனது பொன்னியின் செல்வன் வாசிப்பு அனுபவத்தை கல்கி பத்திரிக்கையே கேட்கிறது என்பது தெரிந்தால் அவர் மிகவும் உற்சாகமடைவார்.

அந்த பத்தாவது அவதாரக்காரர் கல்கி, இந்த நாலாவது அவதாரக்காரன் நரசிம்மனை இதுவரையில் ஆட்டுவித்து வருகிறார். தொடர்ந்து ஆட்டுவிப்பார்!

கல்கியும், பொன்னியின் செல்வனும் காலமெல்லாம் வாழும்!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com