“பொன்னியின் செல்வன் ” உடன் எனது அனுபவங்கள் :-

“பொன்னியின் செல்வன் ” உடன் எனது அனுபவங்கள் :-
-பி. லலிதா, திருச்சி.

நான் பிறந்தது  நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர். என் பெயர் லலிதா. வயது 67. நான், கல்கி, மங்கையர் மலர் இதழ்களின் நீண்டநாள் வாசகி.

என் தந்தை  சுதந்திரா கட்சியில் உறுப்பினராக இருந்தார். திரு. ராஜாஜி அவர்கள் கையெழுத்திட்ட  உறுப்பினர் கடிதம் அப்பாவிடம்  இருந்தது.

எங்கள் வீட்டில் கல்கி வார இதழ் மட்டும்தான் வாங்குவார்கள்.
என்னுடைய பன்னிரண்டாம் வயதில் கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வனைப் படிக்க ஆரம்பித்தேன். வினு அவர்களின் ஓவியத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது.

வாராவாரம் வரும் பொன்னியின் செல்வன் அத்தியாயங்களை  பத்திரமாகப் பிரித்து வைத்து, நம்பர் போட்டு அடுக்கி வைத்திருந்தோம். திருச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் அண்ணா, அங்கு எடுத்துச் சென்று ஐந்து பாகங்களையும் பைண்ட் செய்து எடுத்து வந்தார்.

அது முதல், திருமணம் ஆகும் வரை, மாதாமாதம் வீட்டு விலக்காகும் நாட்களில் எல்லாம் பொன்னியின் செல்வனை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பதுதான் ஒரே விருப்பமான பொழுதுபோக்கு. எனக்கு மாதவிடாய்க் காலத்தில் வயிற்று வலி இருந்தது. அதற்கு ஒரே மருந்து பொன்னியின் செல்வனே!

திருமணமான பின் என் கணவர் வீட்டிலும் கல்கி வாங்கிக் கொண்டிருந் தார்கள். மீண்டும் பிரசுரமான பொன்னியின் செல்வன் அத்தியாயங்களை தனியாகப் பிரித்து எடுத்து, சேர்த்து வைத்து நானும் என் கணவருமாகவே, தைத்து வைத்துவிட்டோம்.

எங்கள் வீட்டில் எல்லோரும் வாசிப்பதில் ஆர்வம் உடையவர்கள் என் மகள்கள் இருவருமே பொன்னியின் செல்வனை விரும்பிப் படித்தார்கள்.
நான், என் மகள்கள் இருவரும் பொன்னியின் செல்வனை நான்கைந்து தடவைகளுக்கு மேல்  படித்திருக்கிறோம்.

ன்னுடைய பெண்கள், அவர்களுடைய குழந்தைகளுக்கு பொன்னியின் செல்வன் கதையைச் சொல்லி, படித்தும் காட்டி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அதே சுவாரஸ்யத்துடன் படிக்க முடிகிறது என்றால்  கல்கி அவர்கள் எவ்வளவு ஆத்மார்த்தத்துடன் எழுதியிருக்கிறார் என்று எண்ணும் போது வியப்பாக இருக்கிறது.

என்னுடைய இளம் வயதில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விடுமுறை நாட்களில் பக்கத்து வீட்டுத் தோழி  எங்கள் வீட்டுக்கு வந்து பொன்னியின் செல்வன் பைண்ட் வால்யூமை வாங்கிப் படிப்பாள்.

எங்களுக்கெல்லாம் வந்தியத்தேவன் தான் அந்தக்காலத்தில் ஆதர்ச நாயகன். குந்தவையும் வந்தியத்தேவனும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினோம். குந்தவை, சேந்தன்  அமுதன் , பூங்குழலி மூவரையும் மிகவும் பிடிக்கும். நந்தினியைக் கண்டாலே பிடிக்காது. திட்டுவோம்.

ஒரு நாள் எங்கள் வீட்டில் பொ.செ. படித்துக் கொண்டிருந்தாள் என் தோழி.

ஒரு அத்தியாயத்தில் கல்கி அவர்கள் , "வந்தியத்தேவன் இரவு படுத்துக்கொண்டே குந்தவையையும் நந்தினியையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும், அந்த இரு தேவிகளையும் நினைத்துக்கொண்டிருந்த அவனிடம் மூன்றாவது தேவியாகிய 'நித்ராதேவி 'வந்து ஆட்கொண்டாள்" என்றும் எழுதியிருப்பார்.

இதைப் படித்துவிட்டு அவள்  என்னிடம் "யாருடி அந்த நித்ரா தேவி?" என்று  சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாளே ஒரு கேள்வி.
வீட்டில்  நாங்கள் எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டோம்.

50 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பொழுதும் தொடர்பில் இருக்கும் என் தோழியிடம் சமீபத்தில் கூட , தொலைபேசியில் அந்த சம்பவத்தைச் சொல்லிக் கிண்டல் செய்தேன்.

இப்படி என் பெற்றோர், நான், என் பெண்கள், பேரக்குழந்தைகள் வரை நான்கு தலைமுறைகளாக பொன்னியின் செல்வன் எங்களுடன் உறவாடி கொண்டிருக்கிறது. குடும்பப் பாட்டு என்று சொல்வார்களே அதே போல், பொன்னியின் செல்வன்* எங்கள் குடும்ப நாவல் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

பொன்னியின் செல்வனுடன் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்த கல்கி குழுமத்திற்கு மிகவும் நன்றி.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com