பொன்னியின் செல்வனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்!

பொன்னியின் செல்வனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்!

– 'கிரைம் கதை மன்னன்' ராஜேஷ்குமார்

காபாரதம் எனும் காவியத்தை நம்மால் எப்படி மறக்க முடியாதோ, அதைப்போலத்தான், 'பொன்னியின் செல்வன்' என்கிற சரித்திர நாவல் தொடரையும் தமிழ் வாசகர்களால் மறக்க முடியாது. 'பொன்னியின் செல்வன்' என்கிற நாவலை நான் என்னுடைய பள்ளிக்கூட நாட்களிலே படித்ததில்லை. கல்லூரிக்கு வந்த பிறகுதான் அந்தக் கதை மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில்தான் (1969) நான் ஒரு எழுத்தாளனாக உருவாகிக் கொண்டிருந்தேன். அப்போது, கதை எழுதும் ஆர்வம் மற்றவர்களுக்கு எப்படி வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முற்பட்டேன். எந்தப் புத்தகத்தை படிக்கலாம் என்று ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது அவர், 'பொன்னியின் செல்வன்' என்ற பெயரைச் சொன்னார். அப்போதுதான், அப்படி ஒரு கதை இருப்பதைப் பற்றி நான் அறிந்து, அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், இந்தக் கதை பல வருடங்களுக்கு முன்பே பிரசித்தி பெற்ற ஒன்று என்பது என்னுடைய மனதுக்கு அப்போது தோன்றவில்லை.

1969லே நான் ஒரு சிறுகதையை எழுத ஆரம்பித்த பிறகு எனக்கு மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதிலும் இந்தக் குற்றப் புதினங்கள் சம்பந்தப்பட்ட கதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது, ''பொன்னியின் செல்வனை'ப் படித்துப்பார்… அதுவும் ஒரு குற்றப் புதினம்போலதான் இருக்கும்'' என்று சொன்னார்கள்.

'பொன்னியின் செல்வன்' நாவலின் அனைத்து பாகங்களையும் படித்து முடித்த பிறகு அதிலே வரக்கூடிய வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன், சுந்தரசோழர், நந்தினி என அனைத்துப் பாத்திரங்களும் என்னுடைய மனதிலே பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டன. சோழப்பேரரசின் அரியணையைக் கைப்பற்ற ஆதித்தகரிகாலன், குந்தவை, அருள்மொழிவர்மன் ஆகிய மூன்று பேரையும் கொலை செய்ய நந்தினி திட்டமிடும் சதிகள் எல்லாமே என்னுடைய மனதை கொள்ளைகொண்டவையாக அமைந்தன. அதேபோல, ஆழ்வார்க்கடியான் நம்பி. கதையின் ஒற்றனே இவர்தான். சஸ்பென்ஸோடு செல்லக்கூடிய அந்த நிகழ்வுகள் எனக்குள்ளே பல புதியக் கதைகளை உருவாக்கிக் கொடுத்தன.

'பொன்னியின் செல்வன்' சரித்திரத் தொடரில் என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு கதாபாத்திரம் பெரிய பழுவேட்டரையர். வலிமையான கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரம் மரணத்தை தழுவும்போது நம்முடைய மனம் கனத்துப் போய் விடுகிறது.

அதேபோல் செம்பியன் மாதேவி, மதுராந்தகத் தேவர், வீரபாண்டியன், பார்த்திபேந்திர பல்லவன், மந்தாகினி… இவை எல்லாவற்றையும் காட்டிலும் எனக்கு அந்தக் கதையிலே ஒரு ஈர்ப்பு வருவதற்குக் காரணம் வந்தியத்தேவனோ, குந்தவையோ அல்ல. நந்தினி என்கிற ஒரு பாத்திரம்தான். இந்த நந்தினி ஒரு பேரழகி. அந்தப் பேரழகியின் உள்ளே ஒரு நச்சரவம் இருப்பதையும், அது எப்போது மற்றவர்களைத் தீண்டும் என்பதையும் மிகவும் சஸ்பென்ஸாக அமரர் கல்கி அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

1985ல் ஒரு மர்ம நாவலை எழுத நினைத்தபோது, நந்தினி என்கிற பெயரை முதன் முதலாக உபயோகித்தேன். நான் எழுதிய முதல் கிரைம் நாவல், 'நந்தினி 440 வோல்ட்ஸ்.' அதாவது, நந்தினி அபாயகரமானவள் என்கிற ஒரு உணர்வை வெளிப்படுத்தவே, '440 வோல்ட்ஸ்' என்ற வார்த்தையை உபயோகித்தேன். அந்த முதல் நாவலே எனக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. காரணம், அந்த நந்தினி என்கிற கதாபாத்திரம்தான். இன்றளவும் அந்தக் கதை மிகவும் பேசப்படுகிறது.

'பொன்னியின் செல்வன்' கதை பற்றி கோவையிலே ஒரு பாராட்டு விழா நடந்தது. 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' அதிபர்தான் அந்தப் பாராட்டு விழாவை நடத்தினார். அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். பத்திரிகையாளர் சோ, கிருஷ்ணராஜ் வானவராயர், பாலகுமாரன் மற்றும் கோவையைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டோம். அந்த விழாவில் நான் பேசும்போது ஒரு வார்த்தை சொன்னேன். 'பொன்னியின் செல்வன் கதையில் வரக்கூடிய கதாபாத்திரங்களை எல்லாம் என்னுடைய மனதுக்குள்ளே வைத்து, அந்தக் கதாபாத்திரங்களுக்கு பேண்ட், சட்டை மாட்டி விட்டு, நான் இப்போது புதினக் குற்றங்கள் பற்றிய கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்குக் காரணம் அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கின்ற விஷயங்கள், நடக்கின்ற சதிகள் எல்லாமே இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துகின்றன. ஆனால், அந்தக் காலகட்டத்திலேயே அமரர் கல்கி அவர்கள் அதை ஒரு சரித்திர நாவலாக எழுதியுள்ளார்' என்று பேசினேன்.

இன்று நான், 'கிரைம் கதை மன்னன்' என்ற பட்டத்தைப் பெற அமரர் கல்கியின், 'பொன்னியின் செல்வன்' நாவலும் ஒரு காரணம் ஆகும். அதற்காக நான் பொன்னியின் செல்வன் சரித்திரத் தொடருக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன். இந்த சரித்திரத் தொடர் வெளிவந்து பல்லாயிரம் பிரதிகள் விற்று… விற்று… விற்று முடித்த பின்னும் இன்றைக்கும் பலரும் அதைப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்தத் தலைமுறை மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைகளும் இதை ஒரு மிகப்பெரிய காவியமாகக் கொண்டாடும்.

இப்போது, 'முப்பெரும் காவியங்கள்' என்று சொல்லப்படுகின்ற மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற வரிசையிலே நாளைய எதிர்காலத்தில், 'பொன்னியின் செல்வன்' சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை என்னுடைய கருத்தாகச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமை கொள்கின்றேன். மறுபடியும் ஒருமுறை, 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இப்போதும் எனது மனதுக்குள் ஏற்படுகின்றது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com