'பொன்னியின் செல்வன்'

திரைப்பட விமர்சனம்!
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

 ‘பொன்னியின் செல்வன்’ முதல் நாள்.. முதல் காட்சி!

 இயக்குனர் மணிரத்னம் கைகளை பிடித்துகொண்டு , ஏ ஆர் ரகுமான் இசையை மனமெல்லாம் நிறைத்துக்கொண்டு, ஒளிப்பதிவாளர் ரவிவர்மாவை வழிகாட்டியாய் வைத்து ,தோட்டா தரணி செட்டிங்ஸ் வழியே பெரிய   நட்சத்திரப் பட்டாளத்துடன் கைகோர்த்து சோழராஜ்யத்தையே சுற்றிவரும் உணர்வுப் பயணமாகதான் இருக்கிறது பொன்னியின் செல்வன் திரை வடிவம்.

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னான சோழ சாம்ராஜ்ய சரித்திரத்தை சோழ அரசர்கள், வால் நட்சத்திரம், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் என வர்ணித்து நிறைவாக "வானில் அந்த வால் நட்சத்திரம் அரச ரத்தம் வேண்டி நிற்கிறது" என கமல் குரல் கேட்கும் போது  ஆரம்பத்திலேயே திரைப்படம் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது.

PS-1
PS-1

வீரவாள் வீச்சுடன் போர்க்களத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார் ஆதித்த கரிகாலன் (விக்ரம்). ஆம் அவர்தான் "பனிரெண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்த வீராதி வீரர், வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரக்கேசரி, இரட்டை மண்டலத்தார் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம், தொண்டை மண்டலதிபதி, வடதிசை மாதாண்ட நாயகர், மூன்று உலகமுடைய சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருமகனார்”’ என்பதால் அப்படி அறிமுகப்படுத்தி இருக்கிறார் போலும் மணிரத்தினம்.

 அதன் பின்னர் நந்தினியை நினைத்து உருகும் காட்சிகள், பார்த்திபேந்திரனிடம் புலம்பும் சமயங்கள், குந்தவையிடம் ‘’நந்தினி பிரிய நீ தான் காரணம்’’ எனக் குற்றம் சுமத்தும் நேரங்களில் விக்கிரமின் நடிப்பு அபாரம்.

விக்ரம்
விக்ரம்

திரைப்படம் முழுதும் சரியான குறும்புத் தனத்துடனும் வார்த்தை விளையாட்டுக்களுடனும் ஜொலிக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாய் சொல்லப்போனால், பெண்களை அழகாய் ரசிக்கும் குறும்புக்கார கண்ணனாய் உலா வரும் வந்தியத்தேவன் (கார்த்தி) வரும் காட்சிகள் அழகு! ஆதித்த கரிகாலன் அளித்த ஓலையுடன் செல்லும் வழியில் நந்தினியின் சந்திப்பு ,சுந்தர சோழருடனான அபாயம் - அபயம் (கல்கி காட்டிய தமிழ் சுவையை போல இங்கும் கொஞ்சம் தமிழ்ச்சுவை கூட்டி இருக்கலாம்), சின்னப் பழுவேட்டரையரிடம் (பார்த்திபன்) இருந்து தப்பித்து ஓடும் காட்சிகள்..  நகைச்சுவைத் ததும்ப  எடுக்கப்பட்ள்ளது நம்மை புன்னகைக்க வைக்கிறது.

 கடம்பூர் அரண்மனை, தேவராட்டம்,போர்க்களங்கள், கடல் கப்பல் காட்சிகள் போன்றவை பிரம்மாண்டம். அதிகமான கிராபிக்ஸ்  இல்லாதது படத்திற்கு வலு சேர்க்கிறது.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

 ஒர் இனிமையான கண்ணன் பாடலின்போது வந்தியத்தேவன் கம்சன் வேடத்தில் குந்தவைக்கு (திரிஷா )அறிமுகமாகிறார். வானதியின் பாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என நினைத்து எனக்குத்தான் சற்று "மயக்கம்"

 நிலவறைக்குள் செல்லும் வந்தியதேவனிடம்  "உள்ளே கருவூலம் இருக்கிறது .மயங்கி விடாதீர்கள்" என நந்தினி கூறும் பொழுது "வைரச் சுரங்கத்தையே பார்க்கிறேனே!" என கண்கள் நிறைய நிறைய நந்தினியை பார்த்துக்கொண்டே பேசும் வந்தியத்தேவனின் வசன டச்சஸ் அங்கங்கே மிளிர்கின்றன. அப்படி மிளிரும் தருணங்களில் எல்லாம் படம் பார்ப்போரின் சிரிப்பு - சிறப்பு...

 ஆழ்வார்ககடியான் (ஜெயராம் )நடிப்பு அருமை. ஹாஸ்யம்,முத்திரை வசனங்கள்,பதிலுக்கு பதில் நகைச்சுவை  என வந்திய தேவனுக்கு இணையான கதாபாத்திரத்தில்  சிறக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

ஆதித்த கரிகாலன் நந்தினியை நினைத்து பார்த்திபேந்திரனிடம் புலம்பும் காட்சிகள் பாடலின் பின்னூட்டத்தில் காட்டப் பட்டிருந்தாலும் "வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரக்கேசரி" என்னும் பட்டம் தந்த அந்நிகழ்வை இன்னும் சற்று அழுத்தமாகக் காட்டி இருக்கலாம். அந்த வீரபாண்டிய தலைதானே நந்தினியின் கோபத்தில் எண்ணெய் ஊற்றியது, ஆதித்த கரிகாலனின் காதல் தீயில் நீரை ஊற்றியது. பழிவாங்கும் படலத்துக்கு அடித்தளமிட்டது, சோழ பேரரசையே  கருவறுக்க உறுதியேற்கச் செய்தது.

 அந்த தலை கொய்யும் நிகழ்வுடன் இடைவேளை விடப்பட்டாலும் எனது பின் இருக்கையில் இருந்து ஒரு கல்லூரி பெண் இருக்கையின் முனைக்கு வந்து "ஆன்ட்டி ,அப்ப அந்த பாண்டியனுக்கும் நந்தினிக்கும் என்ன உறவு ?ஏன் ஆதித்த கரிகாலன் அவரை வெட்டினார்?’’ எனக் கேட்க, நான் பாப்கார்ன் சாப்பிடாமல் ,ஐஸ்க்ரீம் ருசிக்காமல் ஏன் தண்ணீர் கூட குடிக்காமல் முழுக்கதையும் சொல்ல வேண்டியதாயிற்று.

 விண்ணகரக் கோயில்கள்- சிவாலயங்கள் -முக்கியமாய் வீராணம் ஏரி  போன்ற உயிரூட்ட இடங்களை எதிர்பார்த்தோம். தவிர அடிக்கடி மயங்கும் வானதி, பூங்குழலியின் சமுத்திர பாடல் போன்றவையும்...

புத்த விஹார நிகழ்வுகள் , ஏன் அருண்மொழிவர்மர் மகுடம் வேண்டாம் என மறுக்கிறார் போன்றவைகளும் சற்று விவரமாக இருந்திருக்கலாம்.

 குந்தவையும் நந்தினியும் (ஐஸ்வர்யா ராய்) தஞ்சாவூர் அரண்மனை வாசலில் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு புதினத்திலேயே மிக அழகாக வர்ணிக்கப்பட்டு இருக்கும். திரைப்படத்திலும் அப்படியே உணர முடிந்தது. இருவருக்குமான பனிப்போரை  காட்சியில் மட்டுமல்ல.. வார்த்தைகளாலும் வெளிப்படுத்தும்படி அமைந்திருந்தது அந்த இரு ராஜகுமாரிகளைப் போலவே அழகாக இருந்தது...

த்ரிஷா
த்ரிஷா

கைகளில் ஆரத்தியுடன் குந்தவையை எதிர்நோக்கும் நந்தினி...

"வருக... இளவரசி உங்கள் வருகையில் தஞ்சைக் கோட்டையே அழகாகிவிட்டது 

 "தஞ்சைக் கோட்டையில்தான் மொத்த அழகையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன் ".

 "ஆமாம்! சேர்த்துச் சிறையில் வைத்திருக்கிறார்கள்"

 "சிறையா? ...ஆனைப்பொன் அரியணையில் வைத்திருப்பதாக அல்லவா சொன்னார்கள்?"

 "பொன்தான் ...கொஞ்சம் மூத்த பொன்..."

 "பழைய பொன்னுக்கு மதிப்பு மிகுதி" 

 "பொன்னில் செய்து போட்டாலும் விலங்கு விலங்குதானே? 

 "அந்த விலங்கின் சாவி நம் கையில்தானே இருக்கிறது?"

 இளவரசியிடம் பேசினால் வெல்ல முடியுமா?...

 (இரண்டு பூரண சந்திரர்கள் புதினத்திலும் சரி திரைப்படத்திலும் சரி அபார வெளிச்சம்...)

 பெண்களின் ஆடையை பறித்துக் கொண்டு ஓடும் வந்திய தேவனின் குதிரை..‘’ ஓலைகளில் செய்திகளை நானே எழுதினேன்’’ என்ற வந்தியத்தேவனின்  கூற்று.. நந்தினியை முதன் முதலில் சிவிகையில் சந்திக்கும் போது ஆதித்த கரிகாலனின் நண்பன் என அறிமுகப்படுத்திக் கொள்வது.. சுந்தரச் சோழர் நடந்து வருவது .. குந்தவையிடம் ஆதித்த கரிகாலன் நந்தினிக்காய் வாக்குவாதம் செய்வது.. ஊமை ராணியின் முக்கியத்துவத்தை கடைசி வரை காட்டாதது.. ஆழ்வார்கடியான் மற்றும் சேந்தன் அமுதனை வந்தியத்தேவன்  சகட்டுமேனிக்கு மிரட்டும் பாவனை.. பெரிய பழுவேட்டரையரின் விரல் கூட படாத நந்தினி தேவி.. எனக் காட்டப்பட்ட அவர்,  கட்டி அணைக்கப் படுவது போன்ற சிறு சிறு நெருடல்கள் இருந்தாலும்..

கார்த்தி
கார்த்தி

கடலை எடுத்து கடுகில் அடைக்க விழையும் தருணம் இதைப்போன்ற சிலவற்றைத் தவிர்க்க முடியாதவைகள்தான்!

பெரிய பழுவேட்டரையர் ( சரத்குமார்) மிடுக்கான வீரம், கோபக்கனல் வீசும் கண்கள்.ஆனாலும் நந்தினியைக்காணும் போதெல்லாம் உருகும் உருக்கம் அதே கண்களில்...பெயருக்கேற்றார் போலவே நடிப்பிலும் கனம்.கனகச்சிதம்...

 மணிரத்தினம் சார்.. "பொன்னியின் செல்வன் தீவிரவாதிகள்" என்றதோர் கூட்டம் உலகெங்கும் ஆங்காங்கே உள்ளது. அவர்களில் சிலரை உங்களின் டிஸ்கஷன்போது சேர்த்துக் கொண்டிருக்கலாம் . ஆனாலும் இப்பெரும் முயற்சிக்கு தலை வணங்குகிறோம். பல்வேறு  விருதுகளை பெறப் போகும் உயரிய தமிழ் வரலாற்றுப்பதிவு இத் திரைப்படம்.

 புதினத்தை படிக்காதவர்களுக்கு மிகவும் பிடிக்கும். படித்தவர்களுக்குப் பிடிக்கும் .

கரைத்துக் குடித்தவர்களுக்கு மீண்டும் படிக்கத்தான் பிடிக்கும் ...

மொத்தத்தில் இளைய தலைமுறைக்கோர் ராஜகாவியம் நம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட வடிவம்...

பொன்னியின் செல்வன் விமரிசனம் :

இளைய தலைமுறை நண்பர்கள் சிவா,அருமை,அஸ்வின்,மகேஷ் மற்றும் பிரியா... இவர்களின் பார்வையில்... (புதினத்தை பலமுறை படித்திருக்கிறார்களாம்)

"கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனை அப்படியே எடுக்க முடியாதுதான். பாண்டிய மன்னர்கள், அருள்மொழிவர்மன், பூங்குழலி போன்றவர்களின் முக்கியத்துவத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக காட்டி இருக்கலாம் .புத்தகத்தை படிக்கும் பொழுது நமது கற்பனை உலகில் இருந்த "பவர்" திரைப்படத்தை பார்க்கும் போது கிடைக்கவில்லை. ஆனால் இவ்வளவுதான் எடுக்க முடியும். இம்முயற்சி மிகப்பெரியது. நம் சோழ வரலாற்றை இப்ப இருக்கும் தலைமுறைக்குச் சொல்வதற்கு  எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது” .

உஷா நந்தினி மற்றும் சுகுணா
உஷா நந்தினி மற்றும் சுகுணா

குடும்பத் தலைவிகளான உஷா நந்தினி மற்றும் சுகுணா (இங்கும் நந்தினி பாருங்கள்) இதில் சுகுணா ன சமீபத்தில் பொன்னியின் செல்வன் படித்தாராம்.அவர் சொல்வது "இதற்கு மேல் எடுப்பது கடினம் .அவ்வளவு பெரிய கதையை இரண்டு பகுதிகளாக எடுக்கும் பொழுது இப்படித்தான் கூற முடியும்."

 நந்தினி படித்து வெகு காலம் ஆகிவிட்டதென்றும் ஆங்காங்கே   கதை சற்று புரியவில்லை. கதாபாத்திரங்களை தொடர்பு படுத்திக் கொள்வது சற்று கடினமாக உள்ளது. ஆனாலும் இருவரும் ஏக குரலில் தமிழுக்கும்  தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்க கூடிய படம் என்றார்கள்.தயவுசெய்து அனைவரும் திரையரங்கு சென்று பாருங்க என ஓர் கோரிக்கையும் வைத்தார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com