பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் – அத்தியாயம் 5

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம்  – அத்தியாயம் 5

ஒரு அரிசோனன்

ஷெனாய்க்கும் தஞ்ஜுவுக்கும் இடையே, தக்கண்கண்ட்

பிரஜோற்பத்தி, ஆடி 4 – ஜூலை 18, 2411

ய்யென்ற காற்றை உருவாக்கிக்கோண்டு மணிக்கு முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் ஷெனாயிலிருந்து தஞ்ஜூ செல்லும் தொடர்வண்டி விரைந்துகொண்டிருக்கிறது. பளபளவென்று கருநீல வண்ணம் பூசப்பட்ட பெட்டிகளின் நடுவில் நீண்ட தங்கவண்ணப் படுக்கைக் கோடுகள் மூன்று தீட்டப்பட்டுள்ளன. அந்தக் கோடுகள் அவ்வப்போது செவ்வகங்களாகப் பரவி மீண்டும் கோடுகளாக இணைகின்றன. அச்செவ்வகங்களுக்கு நடுவில் கண்ணாடி ஜன்னல்கள் இருக்கின்றன என்றே தெரியாமல் கருநீல வண்ணம்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஊடுருவும் வண்ணப்பூச்சு ஜன்னல்களில் பூசப்பட்டிருக்கிறது.

மின்காந்த சக்தியால் உந்தப்பட்டு இருப்புப் பாதைக்குமேல் காற்றில் இரண்டு அங்குல உயரத்தில் மிதந்து சென்றுகொண்டிருப்பதால், அதன் ஓட்டத்தினால் பலமான சத்தம் கேட்கவில்லை. 'உஷ்'ஷென்று கிளம்பும் காற்றுச் சத்தம்கூட மூன்று கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஜன்னலைத் தாண்டி உள்ளே வரவில்லை.

இருபத்தைந்தாம் நூற்றாண்டு பாரத ஒருங்கிணைப்பில் இருப்புப்பாதையில் செல்லும் விரைவு வண்டிகள் மிகவும் பெருகியுள்ளன. மின்காந்த விசையினால் அனைத்தும் மிகவேகமாக ஓடுகின்றன. மணிக்கு அதிகபட்சம் நானூற்றைம்பது கிலோமீட்டர்வரை ஓடும் விரைவுவண்டிகளும் ஏராளம். காற்றில் மாசைக் குறைக்க வேண்டும், மற்றும் சக்தியைக் குறைவாகச் செலவழிக்கவேண்டும் என்று இருப்புப்பாதையில் செல்லும் விரைவுவண்டிகள் அதிகமாக்கப் பட்டிருக்கின்றன.

ஷெனாயிலிருந்து ஐந்து நிமிஷங்களுக்கு ஒருமுறை விரைவுவண்டிகள் எல்லாப் பெரிய நகரங்களுக்கும் கிளம்புவதால் எல்லோருக்கும் விரைவுவண்டி ஒரு பெரிய வசதி.

உதாரணமாக கன்னியாகுமாரியிலிருந்து காஷ்மீரிலிருக்கும் ஸ்ரீநகருக்கு பத்து மணி நேரத்தில் சென்றுவிட முடிகிறது. அது மட்டுமன்றி, 'ராம்ஸ்வர்' (பழைய ராமேஸ்வரம்) 'மனாரு'டன் (தலைமன்னார்) சுரங்கத்தில் செல்லும் இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டு அமரகவி பாரதியாரின் 'சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போம்' என்ற கனவும் நனவாக்கியிருக்கிறது.

அதனாலேயே விமானப் போக்குவரத்து பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது.

தனிநபர்கள் கார் வைத்திருப்பது மிகவும் குறைந்து பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே கார் வைத்திருக்கும் நிலைமை. அதைச் சரிக்கட்ட மின்சக்தியால் ஓடும் வாடகைக் கார்கள், மற்றும் பேருந்துகள் மக்களின் தேவையை நிறைவு செய்கின்றன. எல்லா நகரங்களிலும் அசுத்தம் நீங்கி சுகாதாரம் பெருகியுள்ளது.

மரங்கள், கட்டிடங்கள் விரைந்துசெல்வதைப் பார்த்துத்தான் ஓடும் வண்டியில்தான் தாங்கள் இருக்கிறோம். நிற்கும் கட்டிடத்தில் இல்லை  என்பதைத் தெரிந்துகொள்கிறான், ஏகாம்பரநாதன்.

அவனுக்கு அது மிகவும் வியப்பாக இருக்கிறது.

அவன் வாழ்வில் அது முதல் பயண அனுபவம். ஆகவே, ஜன்னல் அருகே உட்கார்ந்து, விழிகளை அகல விரித்து, எல்லாவற்றையும் தன் மூளையில் பதிவு செய்துகொண்டிருக்கிறான். அவனைப்போலவே தானும் ஒரு சிறுமியாக மாறி, அவன் அருகில் அமர்ந்து, அவன் அனுபவத்தில் காமாட்சியும் பங்குகொள்கிறாள்.

நகர்ப்புறம் மறைந்து கிராமங்கள் அங்காங்கு தென்படுவது நன்றாகவே இருக்கிறது. வயல்கள், சோலைகள், மற்றும் நிலத்தை உழும் டிராக்டர்கள் என்று மனதுக்கு இனிமையாக, கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் வாய் தாய் சொல்லிக்கொடுத்த ஒரு கிராமத்துப் பாடலை முணுமுணுக்கிறது.

இந்த இயற்கைக் காட்சிகள் எதையும் ரசிக்காமல் முப்பரிமாணக் கண்ணாடியை அணிந்துகொண்டு உடலை நெளித்துக்கொண்டு உட்கார்ந்தவாறே ஆடிக்கொண்டிருக்கிறாள் நிமிஷா. அதைப் பார்க்கப் பார்க்க அக்கா, தம்பி இருவருக்கும் சிரிப்பு வருகிறது. அதைக் கவனிக்க இயலாதவாறு முப்பரிமாணக் கண்ணாடி நிமிஷாவின் கண்களை மறைப்பது அவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கிறது.

"அக்கா, நாம எங்கே போறோம்? அங்கே என்ன செய்யப்போகிறோம்? சொல்லுக்கா." என்று அடிக்கொரு தடவை காமாட்சியைக் குடைகிறான், ஏகாம்பரநாதன்.

"திரும்பத் திரும்ப என்னைக் கேட்டு ஏண்டா தொல்லைப் படுத்தறே? நிமிசாம்மாக்கு ஏதோ விருந்து கொடுக்கப் போறாங்களாம். அதுக்காக தஞ்ஜூன்னு ஒரு ஊருக்குப் போறோம். அங்கே நிமிசாம்மாவுக்குத் துணையா நாம இருக்கப்போறோம்," என்று சமாளிக்கிறாள்.

"ஏங்க்கா, நாம இருக்கற ஊரைவிடத் தஞ்ஜூ பெரிசா இருக்குமாக்கா? அங்கே நம்மளை விருந்துக்கு நிமிசாக்கா கூட்டிட்டுப் போவாங்களாக்கா?"

விழிகளைப் பெரிசாக உருட்டி விழித்தபடி கேட்கிறான், ஏகாம்பரநாதன். அவன் குரலில் ஆர்வமும் ஏக்கமும் தொனிக்கின்றன.

"அதெல்லாம் நடக்குமாடா, ஏகாம்பரம்? அவங்க நம்பளை எல்லாம் விருந்துக்கு கூட்டிப் போவாங்களா? அங்கே வேலைசெய்யத்தாண்டா நாம போறோம்" என்று ஆதங்கத்துடன் பதில்சொல்கிறாள்.

"அதுனால பரவாயில்லை, அக்கா. வேலைசெய்ய அங்கே போகலேன்னா இந்தச் சொகுசான வண்டில நாம போவோமா? நீ நிமிசாக்கா வீட்டில வேலை செய்யறதுனாலதானே எனக்கு மருந்து கொடுத்து, விரசா, நல்லபடியா ஆக்கினாங்க? வேலைசெஞ்சாப் பரவாயில்லை, அக்கா. அவங்க கூட்டாளிகளையும் நாம பார்க்கலாம். புதுசா ஒரு ஊரும் பார்க்கப்போறோம் இல்லையா, அது எனக்கு சந்தோசமா இருக்கு, அக்கா. ஆனா எனக்கு ஒரே ஒரு ஆசை, அக்கா…" என்று இழுக்கிறான் ஏகாம்பரநாதன்.

"என்னடா அது, ஏகாம்பரம்?" என்று மனதில் கவலையுடன் கேட்கிறாள் காமாட்சி.

இதுவரை தனக்கு ஆசை என்று ஒன்று இருக்கிறது என்று அவன் சொல்லிக் கேட்டதே இல்லை. ஏதாவது செய்யமுடியாததைக் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று உள்ளூரத் தவிப்பு தோன்றுகிறது.

"ஒண்ணும் பெரிசா இல்லை, அக்கா. நிமிசாக்காவும் உன்னை மாதிரி நம்ம பாசையைப் பேசினா எவ்வளவு நல்லா இருக்கும்னு எனக்கு அடிக்கடி தோணுது, அக்கா. அவங்களும், நீயும் காதில எதையோ மாட்டிக்கிட்டு பேசிக்கறீங்க. நீ சொல்றது அவங்களுக்குப் புரியுது. அவங்க சொல்றது உனக்குப் புரியுது. நிமிசாக்காகூட பேசணும்னு எனக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு அக்கா.  நான் உன்னைக் கேட்டு, நீ அவங்களைக் கேட்டு, அதுக்கு அவங்க பதில்சொல்லி, அதை நீ கேட்டு, எனக்குச் சொல்லித்தான் நான் எதையும் தெரிஞ்சுக்கிட வேண்டியிருக்கு. அவங்ககிட்ட உன்னை மாதிரி நேராப் பேசினா எவ்வளவு நல்லா இருக்கும்!

"எனக்குன்னு காதில மாட்டிக்கிற மெசின் இல்லை. பள்ளிக்கூடம் போயி, வேலை கத்துக்கிட்டு, வேலைக்குப் போனாத்தான் — எனக்கு அந்த மெசின் கிடைக்கும்னு நீ சொல்லுற. அதுதான் நிமிசாக்காவும் உன்னை மாதிரி – எனக்குப் புரியறமாதிரி பேசினா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். அதைத்தான் எனக்கு ஒரே ஒரு ஆசைன்னு சொன்னேன், அக்கா." என்று இழுத்து இழுத்துச் சொல்லிமுடிக்கிறான், ஏகாம்பரநாதன்.

காமாட்சிக்கு கண்களில் லேசாகக் கண்ணீர் துளிர்க்கிறது. இவன் மனதில் இப்படி ஒரு ஆசையா? தன் கண்ணீர் தெரியாமல் மறைத்துக்கோண்டு, அவனை இழுத்து அணைத்துக்கொள்கிறாள்.

"கவலைப் படாதே, ஏகாம்பரம். கடவுளை வேண்டிக்குவம்டா. உள்மனசோட வேண்டிக்கிட்டா நாம நினச்சதைக் கடவுள் நிறைவேத்தி வைப்பாருன்னு அம்மாவும், அப்பாவும் சொல்லுவாங்கடா." என்று அவனுக்குச் சமாதானம் சொல்கிறாள்.

"அப்படியே வேண்டிக்கிறேன் அக்கா." என்று கண்களை மூடி, கைகளைக் கூப்புகிறான் ஏகாம்பரநாதன்.

திடீரென்று ஒரு குலுக்கல். விரைவுவண்டி சட்டென்று இரண்டு சென்டி மீட்டர் கீழிறங்கிவிட்டு மீண்டும் தன் இயல்பான உயரத்திற்கு ஏறுகிறது.

உடனே ஏகாம்பரநாதனைச் சேர்த்து அணைத்துக்கொள்கிறாள், காமாட்சி. ஒரு நிமிடத்திற்குள் மூன்று தடவை அந்த மாதிரி குலுக்கல் ஏற்படுகிறது. பிறகு வேறு எதுவும் நடக்கவில்லை. பயணம் தொடர்கிறது.

அந்தக் குலுக்கல்கள் எவற்றையும் கவனிக்காமல் கண்களை மூடி, கூப்பிய கைகளுடன் இருக்கிறான் ஏகாம்பரநாதன்.

முப்பரிமாணக் கண்ணாடியைக் கழட்டி விட்டு என்ன என்பதுபோலப் பார்க்கிறாள், நிமிஷா.

வண்டியில் இருக்கும் மற்ற பயணிகளும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, பின்னர் தங்கள் வேலையைக் கவனிக்கக் தொடங்குகிறார்கள்.

வண்டி ஓட்டுனர் தன் இருப்பிடத்தில் திடுமென்று மின் அழுத்தம் ஏன் இப்படி திடீரென்று மூன்று முறை மிகவும் குறைந்தது என்று குழம்புகிறார்.

வில்பூர் (விழுப்புரம்) மின் நிலையத்துடன் தொடர்புகொள்கிறார். அங்கிருந்து காரணம் தெரியவில்லை என்று பதில்வருகிறது. வண்டியைப் பரிசோதனைக்காக வில்பூரில் நிறுத்தவேண்டுமா என்று கேட்கிறார். தேவையில்லை என்று கிடைத்த பதில் அவருக்கு அவ்வளவு திருப்தியைத் தரவில்லை.

தனது மனநிம்மதிக்காக விரைவுவண்டியின் கணிணியில் எல்லாச் சோதனைகளையும் ஒருதடவை நடத்திப் பார்க்கிறார். வண்டியில் ஒரு கேடும் இல்லை என்று தெரிந்துகொண்டு நிம்மதியுடன் பயணத்தைத் தொடர்கிறார்.

*          *          *

விண்வெளி ஆராய்ச்சி நிலையம், காரைகட்

பிரஜோற்பத்தி, ஆடி 4 – ஜூலை 18, 2411

மிகவும் உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்த ஸஹஜாவுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. எந்திரங்களில் அல்லது தொலைநோக்கியில் ஏதாவது கோளாறா என்று தடுமாறுகிறாள். சூரியக் கதிர்வீசல் மிகக் குறைந்து தெரிகிறது. இதுவரை அவர்களைக் குழப்பிவந்த சுழலும் கதிர்களும் காணாமல் போய்விட்டன! உடனே சோம்காந்த்துடன் தொடர்புகொள்கிறாள்.

அடுத்த நிமிஷமே சோம்காந்த் அங்கு ஓடிவருகிறார். அவரும் ஸஹஜா காட்டும் விபரங்களைப் பார்க்கிறார். "இது என்ன, என்னால் நம்ப முடியவில்லையே! கோட்கலிருந்து வந்த தகவலா இது?" என்று அதிசயப்படுகிறார்.

"ஸஹ்ஜ், எந்தெந்த கவன மையங்கள் (Observation posts) மூலம் கோட்கல் தகவலை உறுதிசெய்தாய்?" என்று கேட்கிறார்.

"இன்டெல்ஸாட் 15டி, 27எஃப், மற்றும் சீனக் கோள்கள் (Chinese satellites) த்யான்-ஜுன்-ஸீ 8, ச்வாங்-ஜுன் 15, 18 மூலம் எல்லா விபரங்களையும் தொகுத்து, சரிசெய்த பின்னால்தான் உங்களைக் கூப்பிட்டேன்." என்று பதில்சொல்கிறாள் ஸஹ்ஜ்.

"ம்…" என்று இழுக்கிறார் சோம்காந்த். "இந்த விபரங்களை என்னால் ஜீரணிக்க முடியலை. சூரியக் கதிர்வீசல் இப்படி திடுமென்று புஸ்வாணமாகப் போனது இதுதான் என் சர்வீஸிலேயே முதல் தடவை. அது போகட்டும், இரண்டாம் நிகழ்ச்சி என்ன ஆச்சு? ஒரு சுழலும் கதிர்கூட தென்படவில்லையே! டெஸ்லா காந்த அலை வடிகட்டி (Tesla magnetic field filter) உபயோகித்து இந்த வடிவத்தை ஒப்பிட்டுக் காட்டு, பார்க்கலாம்," என்று உத்தரவிடுகிறார்.

ஸஹஜா தன் மேசையில் உள்ள குமிழ்களைத் திருகி அருகில் உள்ள கண்ணாடியில் சில வட்டங்களைத் தொட்டு இழுக்கிறாள். அவர்கள் பார்க்கும் முப்பரிமாணப் படங்கள் மாற ஆரம்பிக்கின்றன. சூரியனின் சிவப்பு நிறம் ஒருவித ஊதா நிறமாக மாறுகிறது. சூரியப் புள்ளிகள் தென்படவே இல்லை. இந்த விவரப்படி பார்த்தால் இத்தனை நாள்கள் அவர்களைப் பயப்படுத்திய நிகழ்ச்சிகள் வெறும் மாயை என்றே தோன்றுகிறது.

தன் வழுக்கைத் தலையைத் தடவிக்கொள்கிறார், சோம்காந்த்.

மேலிடத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்தின் பல நாடுகளுக்கும் இந்நிகழ்ச்சிகளைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கை செய்துவிட்டு, பின்னால் இவை காற்றுப்போன பலூன்கள் என்று எப்படித் தெரிவிப்பது?

இதற்குள் அவருடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று சேர்ந்தமாதிரி பத்து இணைப்புகள் அலறுகின்றன. காரைகட் வானியல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரின் தொடர்பை முதலில் இணைக்கிறார் சோம்காந்த்.

"சோம்த், எனக்கு சீனாவிடமிருந்து செய்தி வந்திருக்கு. நீங்கள் தேவையில்லாமல் உலகத்தைப் பயப்பட வைக்கப் பார்க்கறீங்கன்னு. எனக்கு அவமானமா இருக்கு! உடனே என் ஆபீஸுக்கு வந்து நம் ஆராய்ச்சிமையத்துக்கு வந்த குழப்பத்தை நீக்க உதவிசெய்யுங்க!" என்று தலைவர் ஸோஹன்லால் — சோம்காந்த்தின் மேலதிகாரி சுந்தரேச சாஸ்திரிக்கு மேலதிகாரி, மிகவும் தணிந்த குரலில் உறுமிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார்.

சோம்காந்த்துக்கு சிங்கமே தன் வாய்க்குள் தலையைவிடச் சொல்லி அழைப்பதுபோல இருக்கிறது.

"ஸஹ்ஜ், நான் ஸோஹன் ஸார் ஆபீஸுக்குப் போகிறேன். முக்கியமான விஷயம். நான் திரும்பி வரும்வரை இந்த நிகழ்ச்சிகளில் உன் கண்ணை வைத்திரு. வெளியே எங்கும் போகாதே. ஏதாவது முக்கியமாகத் தெரிந்தால் என்னை உடனே கூப்பிடு. என்னை ஈஸ்வரன் காப்பாற்றட்டும்!" என்று நெற்றியில் துளிர்த்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டு விரைகிறார்.

என்ன விஷயம் என்று தெரியாமல் குழம்புகிறாள் ஸஹஜா

*          *          *

ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ், தஞ்ஜூ

பிரஜோற்பத்தி, ஆடி 5 – ஜூலை 19, 2411

"ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ்" ஒரு முப்பத்தைந்து மாடிக் கட்டிடம். தஞ்ஜூவிலேயே மிகப் பெரிய ஓட்டல் அதுதான். நுழைவாயிலில் இரண்டு ஆள் உயரமான, வெண்கலத்தில் செய்யப்பட்ட பெரிய பாவைச் சிலைகள் நுழைபவரைக் கைகூப்பி வரவேற்கின்றன.

தேர்போல அலங்கரிக்கப்பட்ட நுழைவாயிலுள் நுழைந்து உள்ளே சென்றால், பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெண்கள் மாதிரி உடையணிந்த ரஷ்யப் பெண்கள் வரவேற்கிறார்கள். அவர்கள் மார்புக் கச்சையும், இடுப்புக்குக் கீழே கணுக்கால் வரை தொங்கும் பின்குஞ்சம் உள்ள சேலையையும் உடுத்தியிருக்கிறார்கள். கருப்பாய், வில்லாய் வளைந்த புருவங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. காதுகளைக் குழைகள் அலங்கரிக்கின்றன. மூக்கில் மூக்குத்தி, புல்லாக்கு, கழுத்தில் மார்புவரை தொங்கும், தங்கத்தினாலும் கல்லாலும் இழைக்கப்பட்ட சங்கிலிகள், கைகளில் கல் வளையல்கள், முழங்கைகளுக்கு மேலே வங்கி, மற்றும் நாகொத்து என்று ஏகப்பட்ட பழந்தமிழ் நகைகளை அணிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் கூந்தலுக்கு கருஞ்சாயம் பூசப்பட்டிருக்கிறது, தமிழ்ப் பெண்களின் கூந்தல் மாதிரி கருப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக.

தமிழ் கூற்றுமொழியாக ஆகிவிட்டாலும், இராஜராஜசோழச் சக்கரவர்த்திக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், அந்த இரண்டு பெண்களும், 'வணக்கம், வருக!' என்ற இரண்டு தமிழ்ச் சொற்களை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி, நுழைபவர்களை இன்முகத்துடன் வரவேற்கின்றனர்.

வரவேற்பறை ஒரு அரசவை மாதிரி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

வருபவர்கள் உட்காருவதற்காக சிறிய சிம்மாசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிங்கங்களுக்குப் பதிலாக, புலிகள் வாயைத் திறந்து உறுமியவாறு தென்படுகின்றன. தேரின் தொம்பைகள்போல ஆங்காங்கு பெரிய தொம்பைகள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன.

தன்னை 'வணக்கம், வருக!' என்று அழைத்த ரஷ்யப் பெண்களைப் பார்த்துத் திகைத்துப் போகிறான், அழகேசன்.

"வணக்கம்மா! நல்லா இருக்கீங்களா?" என்று அவன் தமிழில் கேட்டது புரியாமல் விழிக்கின்றனர், அப்பெண்கள்.

எந்த ஒரு எடுபிடியும் இந்த ஓட்டலில் தங்க, நுழைவாயில் வழியாக வரமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு மொழிமாற்றுக் கருவி கொடுக்கப்படாததே அதற்குக் காரணம். பின்னர் தங்களைச் சமாளித்துக்கொண்டு, மீண்டும் அவனைப் பார்த்துப் புன்னகைத்து, 'வணக்கம், வருக!' என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, கைகூப்புகின்றனர். பிறகு அவனை வரவேற்பறைப் பக்கம் செல்லுமாதிரி கைகாட்டுகின்றனர்.

அவர்களது வெண்மை நிறத்தைப் பார்த்து வியக்கிறான், அழகேசன்.

"ஏமாந்து போயிட்டேன். உங்களுக்குத் தமிழ் தெரியாதா? பின்னே எப்படி…?" என்று உரக்க அவர்களிடம் கேட்டுவிட்டு, வரவேற்பு அரங்கத்தில் மேசைக்குப் பின்னால் இருக்கும் – தமிழ்ப்பெண் உடை அணிந்திருக்கும் மற்றோரு ரஷ்யப் பெண்ணிடம் ஷிஃபாலி தன்னிடம் கொடுத்திருந்த கடிதத்தைக்கொடுக்கிறான்.

பஞ்சாபிப் பெண்கள் தற்பொழுது இம்மாதிரி சிறிய வேலைகளுக்கு வருவதை நிறுத்திவிட்டதால், ரஷ்யப் பெண்கள் அந்த வேலைகளில் நிறைந்து இருப்பது வழக்கமாகிவிட்டது.

அவனைக் கொஞ்சநேரம் நாற்காலியில் அமர்ந்து பொறுத்திருக்கும்படி கைகாட்டுகிறாள் அப்பெண்.

கால்மேல் கால்போட்டுக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்து, புலிகளின் வாயில் விரலைவிட்டு, அவற்றின் பற்களின் கூர்மையை சோதனை செய்தவாறே அங்கு வருவார் போவோரைக் கவனிக்கிறான், அழகேசன். அந்தப் பெரிய, நான்கு மாடி உயரமான வரவேற்புக்கூடத்திலிருக்கும் அனைத்தையும் அளவெடுக்கின்றன, அவன் கண்கள்.

தமிழ்ப்பெண் உடையணிந்திருந்த ஒரு ரஷ்யப்பெண் அவனை அணுகி, "என்னுடன் வா. உன்னை மிஸ். ஷிஃபாலியிடம் அழைத்துப் போறேன்." என்று இந்தியில் சொல்கிறாள்.

அவள் சொல்வது புரியாமல் விழித்த அழகேசன், தன் சட்டைப்பையில் இருந்த மொழி மாற்று கருவியைக் காதில் அணிந்துகொள்கிறான்.

அதைப் பார்த்தவுடன் அவன் எடுபிடிதான் என்று அவளுக்கு நன்றாகத் தெரிந்தாலும், அவனது கம்பீரம் ஒருவிதமான மரியாதையைக்கொடுக்கும்படி அவளைத் தூண்டுகிறது.

"ம், இப்பொழுது சொல்!" என்பதுபோல அவளைப் பார்க்கிறான், அழகேசன்.

அங்கு பணிபுரியும் எல்லாப் பெண்களும் ரஷ்யப் பெண்களாகவே இருப்பதையும், அவர்கள் பழங்காலத் தமிழ்ப் பெண்கள் மாதிரி உடை அணிந்திருப்பதையும் அவன் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

"என்னுடன் வா!" என்று அவனை அழைத்துவிட்டு, முன்னே நடக்கிறாள் அப்பெண்.

பதில் பேசாமல் அவள் பின்னழகை ரசித்தவாறே அவளைப் பின்தொடர்கிறான், அழகேசன். அவர்கள் முப்பதாவது மாடியை அடைந்தபின் ஷிஃபாலி இருக்கும் அறையின் கதவின் நடுவில் இருக்கும் சதுரப் பட்டையில் கையை வைக்கிறாள் அப்பெண்.

சில விநாடிகளில் ஷிஃபாலி கதவைத் திறக்கிறாள். ஒரு புன்னகையுடன் அவளைக் கைகூப்பி வணங்கி அழகேசனைக் காட்டி, "உங்களைப் பார்க்க இவர் வந்திருக்கிறார்," என்று தெரிவித்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறாள்.

"வணக்கம்மா!" என்று கைகூப்புகிறான் அழகேசன்.

"உள்ளே வா, கேஷ்!" என்று அழைத்து விட்டு அறைக்குள் நுழைகிறாள், ஷிஃபாலி.

அவளைப் பின் தொடர்ந்த அழகேசன் அந்த அறையைப் பார்த்துப் பிரமித்துப் போகிறான். தரையிலிருந்து கூரைவரை விளங்கும் கண்ணாடிச் சுவர், தொலைவில் இருக்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரத்தைக் காட்டுகிறது.

தன்னையும் அறியாமல், "தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! நமச்சிவாய! நமச்சிவாய!" என்று சொல்லி கோபுரத்தை நோக்கித் தலைசாய்த்துக் கைகூப்புகிறான்.

புரியாமல் அவனைப் பார்த்துக் கண்களால் வினாவுகிறாள், ஷிஃபாலி.

"அம்மா, எதிரே சிவன்கோவில் கோபுரம் தெரியுது. உங்ககிட்ட வேலை பார்க்க வந்திருக்கற என்னை சிவபெருமானே வாழ்த்தறமாதிரி தோணிச்சு. அதுதான் அவரைக் கும்பிடறதா நினைச்சு கோபுரத்தைக் கும்புட்டேன்!" என்று பணிவுடன் பதில்சொல்கிறான், அழகேசன்.

அவனுடைய கடவுள் பக்தி அவளுக்குச் சரியாகப் புரியவில்லை. அவள் இதுவரை கடவுளைப் பற்றி நினைத்துப் பார்த்தது கிடையாது. தன் மகளுக்கும் அதுபற்றிச் சொல்லிக்கொடுத்தது கிடையாது. தஞ்சைப் பெரியகோவிலை ஒரு சுற்றுலாத் தலமாகத்தான் அவள் பார்த்திருக்கிறாள். அணுகியிருக்கிறாள். அந்தக் கோவிலில் இருக்கும் பிரகதீஸ்வரின் லிங்கவடிவம் அவளுக்குள் எந்த பக்தி உணர்ச்சியையும் தோற்றுவித்ததில்லை.

எனவே, மத்ராவிலிருந்து வந்த ஒரு மல்யுத்த வீரன் தஞ்ஜூ கோவில் கோபுரத்தைக் கண்டு நெகிழ்ந்துபோவது அவளுக்கு வியப்பாகவும், புதிராகவும்தான் இருக்கிறது. அதுபற்றிப் பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொள்கிறாள்.

"கேஷ், இப்ப என் மகளையும், மற்றவங்களையும் அறிமுகம் செய்துவைக்கிறேன்." என்று சொல்லி விட்டு, அங்கு இருந்த இன்னொரு கதவைத் தட்டுகிறாள்.

கதவைத் திறந்துகொண்டு வந்த நிமிஷாவைப் பார்த்த அழகேசன், அவள் பின்னால் வந்த காமாட்சியையும், ஏகாம்பரநாதனையும் கண்டு அதிர்ச்சி அடைகிறான். இவர்களைப் பார்த்தால் தமிழ் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று தோன்றுகிறதே! அதே உணர்வு அவர்கள் கண்களிலும் பளிச்சிடுகிறது. ஷிஃபாலி நிமிஷாவை முதலில் அழகேசனுக்கு அறிமுகப்படுத்துகிறாள்.

"கேஷ்! இதுதான் என் மகள் நிமிஷா. நான் நாளை மறுநாள் சீனா போகிறேன். திரும்பி நான் வரும்வரை நீதான் என் மகளுக்கும், காம்ஸ், ஏக்ஸ் இவர்களுக்குத் துணையா, பாதுகாப்பா இருக்கணும். காம்ஸ் எங்க வீட்டில ஒத்தாசையா இருக்கா. இது அவள் தம்பி ஏக்ஸ்.

"இவங்க உன் பாஷைதான் பேசறாங்கன்னு நினைக்கறேன். நிமிஷா எங்கே வெளியே போகணும்னு சொன்னாலும் நீகூடப் போகணும். காம்ஸால செய்யமுடியாத, கஷ்டமான வீட்டுவேலை ஏதாவது இருந்தா நீ அதைச் செய்யணும். என்னை அவசரமாக் கூப்பிடணும்னு தோணினா, இதோ இந்த காலிங் டிரான்ஸ்பான்டரை (calling transponder) உபயோகி." என்று சொல்லி, அந்தக் கருவியை இயக்கும் விதத்தை அவனுக்குக் கற்று கொடுக்கிறாள்.

"அதே மாதிரி ஏதாவது மிக முக்கியமான விஷயம் இருந்தா நான் உன்னைக் கூப்பிடுவேன். தினமும் காலைலே பத்துமணிக்கு சாதாரண ஹோலோஃபோனில் நான் கூப்பிட்டு விசாரிச்சுப்பேன். அதுனால சாதாரணமான விஷயத்துக்காக காலிங் டிரான்ஸ்பாண்டரை யூஸ் பண்ணாதே, சரிதானா?" என்று வினவுகிறாள்.

"சரிம்மா, நீங்க சொன்னபடி கட்டாயம் செய்யறேம்மா!" என்று பணிவுடன் ஷிஃபாலியிடமிருந்து காலிங் டிரான்ஸ்பான்டரை வாங்கி வைத்துக்கொள்கிறான் அழகேசன். அவனுடைய பணிவிலும் ஒரு கம்பீரத்தைக் காண்கிறாள், ஷிஃபாலி.

அழகேசனை ஏற இறங்க அளவெடுக்கின்றனர் மூவரும். அவனுடைய ஆஜானுபாகுவான தோற்றம் ஒருவித மரியாதைகலந்த பயத்தை உருவாக்குகிறது. அதேசமயம் அவனது பணிவு இவன் நம்பத் தகுந்தவன், ஒரு நண்பன் என்ற அருகாமையும் ஒருமிக்கத் தோன்றுவிக்கிறது.

காமாட்சிக்கு அவன் சொன்ன பதில்கள் மொழிமாற்று கருவி மூலம் தமிழில் ஒலித்தாலும், பார்த்தால் தமிழன்மாதிரி தோன்றியதாலும், அவள் மொழிமாற்றுக் கருவியை அணிந்திருந்ததால் அவன் பேசியது தமிழா, அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் மொழிமாற்றுக் கருவி அணிந்துகொள்ளாத ஏகாம்பரநாதனுக்கு அந்தச் சந்தேகம் தோன்றவே இல்லை! அவன் காதில் அழகேசன் பேசிய தமிழ் தேனாக இனித்தது.

"அண்ணாச்சி, உங்களைப் பார்த்ததுமே எனக்கு ரொம்பச் சந்தோசம் அண்ணாச்சி! இதுவரை எங்க அக்கா தவிர, யாரு பேசினாலும் எனக்குப் புரிய மாட்டேங்குது! ஏன்னா நீங்கள்ளாம் காதுல வைச்சிருக்கிற மெசின் எங்கிட்ட இல்ல. ஆனா நீங்க பேசினது எனக்குப் பளிச்சுனு புரிஞ்சுது, அண்ணாச்சி. நீங்க யாரு, அண்ணாச்சி?" என்று உற்சாகமாக அழகேசனிடம் தனக்கே உரித்தான குழந்தைத் தன்மையுடன் நூறுமுறை அண்ணாச்சி போட்டுப் பேசுகிறான், ஏகாம்பரநாதன்.

எல்லோரும் தாங்கள் செய்வதை விட்டுவிட்டு அவன் பக்கம் திரும்புகிறார்கள்.

காதிருந்தும் செவிடனாக தான் இருந்து வந்திருப்பதைத் தனக்கே உரித்தான பாணியில், அதை ஒரு புகாராகச் சொல்லாமல், அழகேசனின் வருகை தனக்கு எத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்று அவன் சொல்வது எல்லோருக்கும் பிடித்துவிடுகிறது.

ஷிஃபாலியின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை மலருகிறது.  கூடவே அவன்மீது ஒரு பரிதாபமும் பிறக்கிறது. அவன் அருகில் வந்து அவன் தலையை மெதுவாக வருடுகிறாள்.

"நிம்ஸ், என்னோட உதிரி டிரான்ஸ்லேட்டர் ஒண்ணு நம்ம ஃப்ளாட்ல இருக்கு, அதை ஏக்ஸுக்கு கொடுத்துடு. நான் சீனால வேற வாங்கிக்கறேன். காம்ஸ், உன் தம்பிகிட்ட இந்த விஷயத்தைச் சொல்றியா?" என்கிறாள் ஷிஃபாலி.

அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும் என்று ஷிஃபாலிக்குத் தெரியவில்லை!

"கேஷ்! இன்னிக்கு சாயங்காலம் நிம்ஸுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செஞ்சுருக்கேன். அவளோட ஃப்ரன்ட்ஸ் எல்லாம் இங்கே வருவாங்க. அதுக்காக இந்த ஹோட்டல்ல ஒரு ஹாலை வாடகைக்கு எடுத்திருக்கேன். நீ அதைக் கொஞ்சம் மேற்பார்வை பார்த்துக்கோ. நிம்ஸ், காம்ஸ், ஏக்ஸ் மூணு பெரும் உன்னோட அந்த ஹாலுக்கு வருவாங்க. நிம்ஸுக்கு எப்படி வேணுமோ, அப்படி அந்த ஹாலை அலங்காரம்பண்ணச் சொல்லு. நாளை புறப்படறதுனால எனக்கு சாமான்கள்ளாம் எடுத்து வச்சுக்கணும். ஓகே?!"

"சரிங்கம்மா!" என்று அதே பணிவுடன் பதிலளித்த அழகேசன், "கண்ணுங்களா, போகலாமா?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்கிறான். உடனே ஓடிவந்து அவன் கையைப் பிடித்துக்கொள்கிறான், ஏகாம்பரநாதன்.

*          *          *

பெரிய கோவில், தஞ்ஜூ

பிரஜோற்பத்தி, ஆடி 5 – ஜூலை 19, 2411

ன்னை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, ஷிஃபாலி தன் பழைய வேலை மீண்டும் கிடைக்கும்படி செய்வாள் என்று ஈஸ்வரன் கனவில்கூட நம்பவில்லை.

கேவலம். இந்தியில் பேசினோம் என்பதற்காக இந்த அளவு உதவியா!? அப்படியானால் இந்தி கற்றுக்கொண்டால் சம உரிமை உடனே கிடைத்து விடுமா?

தமிழை விடாப்பிடியாகத் தங்கள் குடும்பம் பிடித்துக்கொண்டு வைத்திருப்பது எதனால்? தமிழ்க் கல்வெட்டுகளைப் படிக்க ஏன் தனது தந்தை தனக்குச் சொல்லிக்கொடுத்தார்? முடிந்தவரை தமிழைப் பேசும் மற்றவர்களுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று விடாமல் ஏன் தன்னைக் கட்டாயப்படுத்துகிறார்? இந்தக் கேள்விக்குத் தன் தந்தையிடம் விடை கிடைக்குமா?

இந்தி தெரிந்திருந்தும் தஞ்சைக் கோவில் மேலதிகாரி ஏன் தன்னை அப்படி அவமானப்படுத்தினார்? தமிழையும், சம்ஸ்கிருதத்தையும் ஒன்றுபடுத்திப் பேசியதாலா? சம்ஸ்கிரும் அப்படி என்ன உயர்த்தி, தமிழ் என்ன தாழ்த்தி? தக்கண்கண்டில் பல்லாயிரக் கணக்கானவர்கள் தமிழைப் பேசுகிறார்களே? சம்ஸ்கிருதத்தை யாரும் பேசுவதில்லையே! மேலதிகாரிக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க நியாயமில்லை, அப்படியிருக்க அவருக்கு சம்ஸ்கிருதத்தின்மேல் இருக்கும் பாசம் தமிழர்களுக்கு ஏன் தமிழ்மீது இல்லை? தமிழ் மக்கள் ஏன் தங்கள் உரிமையை விட்டுக்கொடுத்தார்கள்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வளவு பெரிய தஞ்சைக் கோவிலைக் கட்டி அரசாண்ட தமிழர்களின் வழித்தோன்றல்கள் இன்று ஏன் தங்கள் மொழியைக்கூட கல்லாமல் விட்டுவிட்டார்கள்? அந்தக் காலத்திலேயே இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டவேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்பட்டிருக்க வேண்டும்? அந்த ராஜராஜச் சக்கரவர்த்தி எவ்வளவு பெரிய தொலைநோக்காளராக (தீர்க்கதரிசி) இருந்திருக்க வேண்டும்? இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயினும், இந்தக் கோவில் அவர் புகழை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறதே! அதனால்தானே இந்தத் தஞ்ஜூவின் மிகப்பெரிய ஹோட்டலுக்கே அவர் பெயரைக்கொடுத்திருக்கிறார்கள்! அப்படி இருந்த தமிழர்களில் பெரும்பான்மையார் தங்கள் மொழியையே எப்படி மறந்தார்கள்?

யோசிக்க யோசிக்க அவன் மூளை குழம்பியதுதான் மிச்சம், ஒரு நல்ல பதில் அவனுக்குக் கிடைக்கவில்லை, அவன் மனமும் சமாதானம் அடையவில்லை.

இதுவரை மனதில் ஏற்படாத இந்தக் குழப்பம், ஷிஃபாலி தனக்கு மீண்டும் வேலையை வாங்கிக்கொடுத்தபின்தான் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்கிறான், ஈஸ்வரன்.

இந்தி தெரிந்திருக்கிறது என்றதால் ஷிஃபாலி உதவி செய்தாள், ஆனால் இந்தி தெரிந்தும் கோவில் சுற்றுலா மேலதிகாரி உதவவில்லை.

மனிதர்கள் இரண்டு வகை, அவர்கள் வகைக்குத் தகுந்தபடி நடந்திருக்கிறார்கள்இருந்தாலும் தனக்கு இந்தி தெரிந்ததால்தான் மீண்டும் வேலையைத் தனக்குத் தந்திருக்கிறது என்ற உண்மை அவனுக்குக் கசப்பாகத்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் கடைநிலை ஊழியனாகத்தானே வாழ்நாள் முடியும்வரை இருந்திருக்க நேரிட்டிருக்கும்? தன்னை அப்படிப் பாதாளத்திற்குத் தள்ளிவிட்ட மேலதிகாரி அதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல், கொசுவை அடித்தவன் தன் கைகளில் படிந்த ரத்தத் துளியைக் கழுவிக்கொண்டு போவதுபோலத்தானே போயிருப்பார்! அப்படியென்றால் இந்தி தெரியாதவர்கள் கொசுவுக்குச் சமமான வாழ்வுதானே வாழ்ந்துவருகிறோம்! இதற்கு விடிவுதான் எப்போது?

ஈஸ்வரனுக்குக் குமுறிக்கொண்டு வந்தது.

"என்ன, எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை? உனக்கு மாற்றல் உத்தரவு வந்திருக்கிறது," என்று அவன் சிந்தனையைக் கலைக்கிறாள், அவனது காப்பாளி.

"என்ன, மாற்றலா? எங்கே மாற்றியிருக்கிறார்கள்? ஏன் மாற்றி இருக்கிறார்கள்?" என்று பதறுகிறான் ஈஸ்வரன். அவனது பதட்டத்தை இரசிக்கிறாள் காப்பாளி.

அவளும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால்வரை தமிழைப் பேசிவந்த குடும்பத்தில் வந்திருந்தாலும், இந்தி கற்றுகொண்டு தமிழை உதறியதால் உரிமைக் குடிமக்களாக உயர்ந்த குடும்பமாகியது அவள் குடும்பம் என்று ஈஸ்வரனுக்கு நன்றாகத் தெரிகிறது. தனக்கு இருக்கும் அறிவில் கால்பங்குகூட இல்லாத அவள் காப்பாளியாக இருக்கிறாள், தான் எடுபிடி ஊழியனாக இருக்கிறோம் என்பது இப்பொழுதுதான் அவனது எண்ணத்திற்கு வருகிறது. கூடவே அவள்மீது ஆத்திரமும் பொங்குகிறது.  அதை அடக்கிக்கொண்டு, அவளின் பதிலுக்காகக் காத்திருக்கிறான்.

"நானா இந்தக் கோவிலை நடத்தறேன்? உன்னை இங்கே வைச்சுக்க மேலதிகாரிக்கு இஷ்டமில்லை. அதுனால உடனே உன்னைத் தொலைச்சுக்கட்ட முடிவுசெஞ்சுட்டாரு. நீ இப்பவே ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜுக்கு வேலைக்குப் போயிடணும். அங்கே ஏதோ விருந்து நடக்குதாம். உன் முதல் வேலை, அதைப்போய் மேற்பார்வை பார்க்கறதுதான். அலங்காரம், சாப்பாடு, பாட்டு, கூத்து எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணனும். உடனே கிளம்பு. பாதி வேலை நடந்துக்கிட்டிருக்காம். நீ போய் மீதி வேலையைப் பாரு. இந்தா, டிரான்ஸ்ஃபர் ஆர்டர்," என்று அவனிடம் ஒரு உறையை நீட்டுகிறாள், காப்பாளி.

பதில்சொல்லாமல் அதை வாங்கிக்கொள்கிறான், ஈஸ்வரன்.

இராஜராஜ சோழச் சக்ரவர்த்தியே தன் பெயர்கொண்ட இடத்திற்குத் தன்னை அழைக்கிறார் என்று அவனுள் ஏதோ ஓர் உணர்வு கூறுகிறது. அந்த மன்னாதிமன்னரைப் பற்றி இப்பொழுதுதான் நினைத்தோம், உடனே அவர் பெயர்விளங்கும் இடத்திற்குத் தனக்கு அழைப்பு வருகிறதே என்று எண்ணி வியக்கிறான்.

அது ஒரு நல்ல சகுனமாகவே அவனுக்குப் படுகிறது.

தன்னை அறியாத ஒரு மகிழ்வுடன் அந்த உறையைப் பெற்றுகொண்டு, பிரகதீஸ்வரரைக் கைகூப்பி வணங்கி வெளியேறுகிறான்.

ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜை அடைந்த அவனுக்கு அங்கே ஒரு அதிசயம் காத்திருக்கிறது. அங்கே தனக்கு வேலையைத் திரும்ப வாங்கிக்கொடுத்த ஷிஃபாலியை மட்டுமல்லாமல், மேலும் மூன்று தமிழ்பேசுபவர்களையும் சந்திக்கிறான்.

அவனை அங்கே கண்ட ஷிஃபாலிக்கு ஒரே மகிழ்ச்சி.

"ஹலோ ஈஸ்வ், இங்கே எங்கே வந்திருக்கே?" என்று வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த குரலில் வினவுகிறாள்.

"வணக்கம்மா. என் மேலதிகாரி என்னை இந்த ஹோட்டலுக்கு மாத்திட்டார். அவருக்கு என்னைப் பிடிக்கலையாம். இங்கே விருந்து ஏற்பாடுசெய்யறதுக்கு மேற்பார்வை பண்ணற வேலையைக் கொடுத்திருக்காங்க. யாரோ நிமிஷாவாம். அவங்களுக்கும், அவங்க நண்பர்களுக்கும் தான் விருந்தாம்," என்று பதில்சொல்கிறான்.

"அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு, ஈஸ்வ்! நிமிஷா என் மகள்தான். என் மகளோட விருந்து நல்லா நடக்கனும்னு நீதானே வாழ்த்தினே! கடைசில அதை இந்த ஹோட்டல்ல நீயே நடத்தறதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."

"நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றிம்மா! என் வாழ்க்கையையே கைதூக்கி விட்டிருக்கீங்க! அது சரிம்மா, நீங்க சீனாவுக்குப் போகப்போறேன்னு சொன்னீங்களே, எப்பப் போறீங்க?" என்று கேட்கிறான் ஈஸ்வரன். தனக்கு உதவிசெய்த பெண்மணி அவன்முன் அம்பாளாகத்தான் தெரிகிறாள். நல்லவேளை, அவளை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததே! தன் பெயரைக்கூட ஞாபகம் வைத்திருக்கிறாளே!

அப்பொழுது அங்கே வரும் நிமிஷாவுக்கு அவனை அறிமுகம் செய்விக்கிறாள், ஷிஃபாலி.

நிமிஷாவைப் பார்த்துப் புன்னகைத்தவாறே கைகூப்புகிறான், ஈஸ்வரன். அவனது பார்வை நிமிஷாவின் உடலில் ஒரு குறுகுறுப்பைத் தோற்றுவிக்கிறது. இதுவரை அவள் உணராத ஒரு உணர்ச்சி அது. அவனை வைத்தகண் வாங்காமல் பார்க்கிறாள் நிமிஷா. அதை ஷிஃபாலியின் பின்னால் நிற்கும் அழகேசனின் கண்கள் கவனிக்கின்றன. அவனது மனம் ஈஸ்வரனைப் பற்றி எடைபோடுகிறது.

ஈஸ்வரன் தமிழ்பேசுவதைப்பற்றி ஏகாம்பரநாதன் அவனிடம் பெருமையுடன் கிசுகிசுக்கிறான். அதனால் ஈஸ்வரனிடம் ஒரு இனப்பாசம் ஏற்பட்டாலும் லேசான பொறாமை உணர்வு தோன்றுகிறது. அப்படிப்பட்ட உணர்வுக்கு ஏன் இடம் கொடுக்கவேண்டும் என்று தன்னைத்தானே அடக்கிக்கொள்கிறான். ஒருவேளை நிமிஷா அவனைப் பார்த்தவிதமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது. இருந்தாலும் ஒரு எடுபிடியான ஈஸ்வரன்மீது உரிமைக் குடிமகளான நிமிஷாவுக்கு எந்தவிதமான ஈர்ப்பும் வர நியாயமில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்கிறான். ஏன் ஒரு உரிமைக் குடிப்பெண் ஒரு தமிழ்பேசும் எடுபிடி ஆண்பால் ஈர்க்கப்படக்கூடாது என்ற கேள்வியையும் தனக்குள்ளே கேட்டுக்கொள்கிறான்.

காமாட்சி, அழகேசன், ஏகாம்பரநாதன் இவர்களுக்கும் ஈஸ்வரனை அறிமுகம் செய்துவைத்துவிட்டு மறுநாள் காலைப் புறப்பாட்டிற்கு முன்னால், தன்னுடைய உதவியாளர்களிடம் கலந்துரையாடல் செய்யச் செல்லவேண்டும் என்று ஷிஃபாலி புறப்படுகிறாள்.

"ஈஸ்வ், விருந்து முடிந்ததும் நீ உடனே கிளம்பி விடாதே. நான் உன்னிடம் பேசவேண்டும்" என்று சொல்லி விடை பெறுகிறாள்.

*       *       *

விண்வெளி ஆராய்ச்சி மையம், காரைகட்

பிரஜோற்பத்தி, ஆடி 6 – ஜூலை 20, 2411

"சூரிய கிரகணத்திற்கும், நீ சொல்லுவதற்கும் என்ன சம்பந்தம், சோம்த்?" என்று ஸோஹன்லால் சீறுகிறார்.

"உன்னால் அரசாங்கத்தில் எனக்கு எவ்வளவு கெட்டபெயர், தெரியுமா?  பெரிசா புலிவருது, புலிவருது கதைமாதிரிப் பண்ணிட்டியே!  நாட்டையே, ஏன் உலகத்தையே பயமுறுத்திட்டு, இப்ப ஒண்ணுமில்லைனா எப்படி?  இப்ப சூரிய கிரகணம் உன் குழப்பத்துக்கு பதில்சொல்லும்னு சொல்றியே!  உனக்கு இன்வாலன்ட்டரி ரிட்டைர்மென்ட் (கட்டாய ஓய்வு) கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடவா?" என்று இரைகிறார்.

ஏற்கனவே, சோஹன்லாலைக் கண்டால் சோம்காந்த்துக்கு இனம்தெரியாத பயம்.  இப்பொழுது அது இன்னும் அதிகமாகிறது.  இருந்தாலும், தான் ஒரு நிபுணன், ஸோஹன்லால் வெறும் மேலிடத்து அதிகாரவர்க்கம்தான் – அதட்டுவதோடு சரி, தன்னைவிட விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய நிபுணர் அல்லர் என்பதை நினைவுகூர்கிறார்.

இப்படி அதட்டி அதட்டிப் பேசித்தானே ஸோஹன்லால் முன்னுக்கு வந்திருக்கிறார்?  அப்படிப்பட்ட அவரை எதிர்த்துப்பேசி எதைச் சாதித்துவிட இயலும்?

சோம்காந்த் தன்னைச் சமாளித்துக்கொண்டு உலகப்படத்தில் சூரிய கிரகணத்தின் பாதையைச் சுட்டிக்காட்டுகிறார்.

"ஸார், இதுவரை ஹிஸ்டரியிலேயே சோலார் ஃப்ளேர் (சூரியக் கதிர்வீசல்) இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதே இல்லை.  அதுவும் நாம் பார்த்தது, கடுமையான கதிர்வீசல்.  அதுதவிர, இரண்டாம் நிகழ்ச்சி திடும்னு மறைஞ்சுபோன காரணமும் தெரியலை.  என் இன்ட்யூஷன் (உள்மனம்) இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடக்கத்தான் போகும்னு சொல்லிக்கிட்டிருக்கு.

"ஏதோ ஒரு சக்தி சோலார் ஃப்ளேரைத் தாற்காலிகமா மறைக்குதுனு நம்பறேன்.  நாளைக்கு வர முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனின் வெளிச்சம் முழுசா மறைஞ்சுபோகும். இப்ப நமக்கு ஏற்பட்டிருக்குற சந்தேகங்கள் தீர்ந்துபோய், நல்ல விவரம் கிடைக்கும்,  அதுக்கு முழுக்க முழுக்க கிரகணத்தைக் கங்காணிக்கனும்.

"கிரகணம் இந்திய நேரப்படி நாளைக்கு காலை ஆறுமணிக்குப் ஃபிலின்பீன்சிலே ஆரம்பிச்சு, தஞ்ஜூ, மத்ரா, கொச்சி வழியாப் போறது.  பிலிப்பீன்ஸ்ல் க்வேசான், தாய்லாந்துல பாங்காக், அந்தமானில போர்ட் ஸாவர்க்கர் (போர்ட் ப்ளேர்) வான்நோக்கு நிலையங்கள் மூலம் எனக்குத்

தகவல் வரணும்  ப்ளீஸ், எனக்குப் பர்மிஷனும், இந்த சென்ட்டர்சின் ஹெல்ப்பும் வாங்கிக் கொடுங்க!" என்று அழாக்குறையாய்க் கெஞ்சுகிறார்.

*       *       *

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com