பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 14

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 14

ஒரு அரிசோனன்

தஞ்சை அரண்மனை

பரிதாபி, மார்கழி 25 – ஜனவரி 9, 1013

ரியாதையாக எழுந்து நிற்கிறாள் நிலவுமொழி. இராஜராஜ நரேந்திரன் பத்தடி தூரம் வருவதற்குள்ளேயே அவனிடமிருந்து வரும் மதுவின் நெடி நிலவுமொழியின் மூக்கைத் துளைக்கிறது. அவன் அளவுக்கும் அதிகமாக மது அருந்திவிட்டு வந்திருப்பது அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. குந்தவி பெருவுடையார் கோவிலுக்குச் செல்லும் சமயம் தானும் கூட வருகிறேன் என்று எப்படிச் சொல்வது என்று தயங்கி அரண்மனையில் தங்கிவிட்டது தவறோ என்று அவளுக்குத் தோன்றுகிறது. தான் தனியாக இருக்கும் இந்த நேரத்தில், மதுமயக்கத்தில் வந்திருக்கிறானே என்பதை எண்ணும்பொழுது அவளுக்கு ஒருவித பயமும் உண்டாகிறது.  இருப்பினும் தனது அச்சத்தை அடக்கிக்கொண்டு அவனுக்கு வணக்கம் செலுத்துகிறாள்.

அவளைப் பார்த்து பொருட்செறிவுடன் சிரிக்கிறான் நரேந்திரன். "நிலவு, ஏன் எந்திரிச்சே? உக்காந்துக்கோ!  எப்படி இருக்கே?" என்று தமிழில் குழறுகிறான்.

தமிழ் நாட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் இருந்து தமிழ் கற்றுக் கொண்டதில் அவனுக்கு தமிழ் நன்றாகப் பேச வந்துவிட்டது. அதற்காக மிகவும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறாள் நிலவுமொழி. அவன் நன்றாகத் தமிழ்பேசிவிட்டால் தான் இனிமேல் அவன் முன்பு இருக்கவேண்டியதில்லை, அவனது ஊடுருவும் பார்வையைத் தாங்க வேண்டியதில்லை என்ற வேகத்துடன் அவனுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து, அதில் வெற்றியும் கண்டுவருகிறாள்.

"தங்கள் தயவில் நான் நன்றாகவே இருக்கிறேன் இளவரசே!" என்று தரையைப் பார்த்துக்கொண்டு மெல்லிய குரலில் பதிலளிக்கிறாள் நிலவுமொழி.

"நிலா, ஒங்கிட்டே நான் இன்னிக்கு தனியாப் பேசியே ஆகணும்.  அதுக்கு தைரியம் வரணும்னுதான் நிறையக் குடிச்சேன்!" என்று கொச்சையான தமிழில் அறிவித்துவிட்டு, கடகடவென்று சிரிக்கிறான் நரேந்திரன்.

நிலவுமொழிக்கு பகீர் என்கிறது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலவும், புழுக்கள் ஊர்ந்து செல்வது போலவும் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது.

என்ன சொல்லப்போகிறான் இவன்? ஏதாவது ஏடாகூடாமாகச் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக்கொள்கிறாள்.

"நிலா, நீ ரொம்ப அதிர்ஷ்டவதி. அது ஏன் சொல்லு பார்ப்போம்!" என்று மீண்டும் கடகடவென்று சிரிக்கிறான்.

"இளவரசே! தங்களுக்கு தமிழ் கற்பிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது அல்லவா!  அதுதான் எனது மாபெரும் அதிர்ஷ்டம்!" என்று பேச்சைத் திசை திருப்ப முயல்கிறாள். தன்னை இதோடு விட்டுவிட மாட்டானா என்று மனதுக்குள்ளாகவே துடிக்கிறாள்.

"உன்னை எனக்கு தமிளு கத்துக்கொடுக்க எங்க அம்மா ஏற்பாடு செய்தது என்னோட அதிர்ஷ்டம் நிலா!  நான் கேக்கறது என்னன்னா – நீ ஏன் அதிர்ஷ்டவதின்னு நான் செப்பினேனு? பாரு, எனக்கு தமிளு பேசறது எவ்ளோ சிரமமா இருக்கு? நான் கேட்டது உனக்குத் தெரியும். பதில் சொல்லு!" குதிக்கிறான் நரேந்திரன்.

"சிவ, சிவ! இப்படிக் கேட்டால் நான் என்ன சொல்வது இளவரசே! நீங்களே சொல்லுங்களேன்!" சீக்கிரம் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுத் தன்னை விடமாட்டானா என்று தவித்த வண்ணம் அவனுக்குப் பதில் சொல்கிறாள் நிலவுமொழி.

"சரி, நேனே செப்தானு…லேது, லேது, நானே சொல்றேனு.  நாக்கு (எனக்கு) உன்மேலே ரொம்ப இஷ்டமு, நிலா.  நான் உன்மேலே ரொம்ப ரொம்ப ப்ரியம் வச்சுட்டேனு.  நானு உம் மேலே ப்ரேமமா ஆயிட்டேன்.  என் ப்ரேமம் கிடைச்சதுனால நீ ரொம்ப அதிர்ஷ்டவதி இல்லையா, லேதா?" மிகவும் பெருமையுடன் அவள்பால் தன் மனதில் ஏற்பட்ட வேட்கையை ஒருவிதமாகப் போட்டு உடைக்கிறான் நரேந்திரன்.

அதிர்ந்து போகிறாள் நிலவுமொழி! அவள் இத்தனை நாள் சந்தேகப்பட்டது மெய்யென்று இன்று இவன் நிரூபித்து விட்டானே! கடவுளே! இவனுக்கு எப்படி அறிவுரை சொல்லிப் புரிய வைப்பது?

சாதாரணமாகவே மையல் வெறி தலைக்கேறி உள்ளவன் – போதாதென்று மது அருந்தி விட்டுவேறு வந்திருக்கிறானே?

தான் சொல்வது எதுவும் இவன் காதில் விழுமா? எப்படியிருந்தாலும் முள்ளில் விழுந்த ஆடையாகிவிட்டது தன் நிலை, மெல்ல மெல்ல விடுவித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று தீர்மானிக்கிறாள். ஆகவே, மெதுவாகத் தொடங்குகிறாள்:

"இளவரசே, தாங்கள் எங்கே, நான் எங்கே? வேங்கை நாட்டின் வருங்கால மன்னர் தாங்கள்.  ஏழைத் தமிழ் ஓதுவாரின் மகள் நான். இந்த சோழப் பேரரசுக்கே மருமகப் பிள்ளையாக வரப்போகிறவர், நீங்கள். கோப்பரகேசரியாரின் மகளான அம்மங்கையை உங்களுக்கு மணமுடிக்கப் போவதாகத் தங்கள் தாயார் குந்தவி மகாராணியார் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் இப்படிப் பேசுவது யார் காதிலாவது விழுந்தால் என்னை சிரச்சேதமே செய்துவிடுவார்கள்! இனிமேலும் இப்படிப் பேசாதீர்கள்!" என்று இறைஞ்சுகிறாள்.

"நீ பயப்படாதே நிலா. ராஜாக்கள் ஒரு பொண்ணுக்கு மேலேயே கல்யாணம் செய்துப்பாங்க. என் மாமாகாரு, தாத்தாகாரு இவங்களுக்கு மூணு, மூணு ராணிங்க இருக்காங்க" என்று பெரிய உண்மையை விண்டு வைப்பதுபோல உரத்த குரலில் அவளுக்குச் சமாதானம் சொல்கிறான்.

"இளவரசே!" என்னும் நிலவுமொழிக்கு நாக்கு உலர்ந்து போகிறது. எச்சிலைக் கூட்டி விழுங்கிக்கொண்டு, நாவால் உதட்டைத் துடைத்துக்கொள்கிறாள். அவளுடைய ஈரமான உதட்டின் அழகில் சொக்கிப்போகிறான் நரேந்திரன்.

"இளவரசே!  அரசர்கள் ஒரு மனைவிக்கு மேல் மணம் செய்வது வழக்கம்தான். ஆனால், அவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவர்களைத்தான் மணம் செய்துகொள்கிறார்கள். அரியணையில் உடன் அமரும் தகுதி உள்ளவர்களைத்தான் அரச பரம்பரையினர் மணக்க வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாத ஒன்றா?" அவள் குரலில் பதற்றம் தென்படுகிறது.

"நிலா!  உனக்கு ஒண்ணுமே புரியலேது. நீ தப்பா அர்த்தம் செஞ்சுக்கிறே! நான் உன்னை ஏதுக்கு கல்யாணம் செய்துக்கணும்? நான் உன்மேலே ப்ரேமையா இருக்கேன். அதுனால நீ என் ப்ரியநாயகியா ஆகிடு. என் அப்பாவுக்கு நிறைய ப்ரியநாயகிங்கோ இருக்காங்க. அவங்க யாரையும் அவர் கல்யாணம் செஞ்சுக்க லேது. அவங்களுக்கு நிறைய சொத்து, வீடு கொடுத்து இருக்காரு.  நானும் அதே மாதிரி செய்வேனு. நானு அம்மங்காவை கல்யாணம் செய்து ராணி ஆக்கிப்பேன். உன்னை என் ப்ரியநாயகியாக வச்சுப்பேன்! அர்த்தம் ஆச்சா?" நரேந்திரன் அவளிடம் நெருங்கி அவள் தோள்களில் கைகளைப் போடுகிறான்.

சட்டென்று நரேந்திரனுடைய பிடியிலிருந்து விடுவித்துக்கொண்ட நிலவுமொழி, அவனுடைய வார்த்தைகளைக் கேட்டுப் புழுவாய்த் துடிக்கிறாள்.

தன்னை அவனது காமக்கிழத்தியாக இருக்கும்படி அல்லவா சொல்கிறான்! வேறுவிதமாகப் பொருள்செய்துகொண்டு, ஒரு கணம் தன்னைக் காதலிக்கிறான் என்று நினைத்தது எவ்வளவு தவறு?

இவனது ஆசை தனது உடல் மீதுதான் என்று அறிந்து மனதில் காயப்பட்டுக் கன்னிப் போகிறாள். அவன் மீது இருந்த மரியாதை, பயம் நீங்கி அருவறுப்பும், கட்டுக்கடங்காத கோபமும் பெருகுகிறது. தான் ஒரு ஏழைத் தமிழ் ஆசிரியரின் பெண்ணாக இருக்கலாம், ஆனால் தனக்கும் மானம், கற்பு உணர்ச்சி இருக்காதா?

தன்னை வளர்ப்புப் பெண்ணாக ஏற்று, கற்பனை செய்துகூட பார்க்க இயலாத மதிப்பைக் கொடுத்திருக்கிறாரே கோப்பரகேசரி இராஜேந்திர சோழர்! அவரது மகளுக்கு இவன் துரோகம் செய்ய நினைப்பதோடு மட்டுமல்லாமல், தன்னையுமல்லவா துரோகம் செய்யத் தூண்டுகிறான்! அவரது மகளை மணக்கப்போகும் இவன் இப்படிப்பட்ட மோசமான காமாந்தகாரனா?

சிவாச்சாரி அவளுக்குச் சில மாதங்கள் முன்பு இப்படிப்பட்ட நிலைமையைச் சமாளிக்கச் சொல்லிக்கொடுத்த வழி நினைவுக்கு வருகிறது. உடனே மனதில் குடிகொண்டிருக்கும் அச்சம், தயக்கம் போன்ற உணர்ச்சிகள் அறவே அகன்று போகின்றன. 

"இளவரசே! கொஞ்சம் நிறுத்திக் கொள்ளுங்கள்!" சாட்டையைப்போலச் சுள்ளென்று விழுகிறது அவளது குரலின் தொனி.

"நான் ஏழைப் பெண்தான். ஆனால் எனக்கும் தன்மானம் இருக்கிறது! நான் உங்களுக்குக் கல்வி கற்றுத்தரும் ஆசிரியை. தாய், தந்தைக்குப் பிறகு சொல்லப்படும் ஆசானின் இடத்தில் இருக்கிறேன். அவர்களை எப்படி நீங்கள் மதிப்பீர்களோ, அப்படி மதிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேன். எனக்கு ஆசிரியை என்ற மதிப்பைத் தாங்கள் அளிக்காவிட்டாலும் போகிறது. ஆனால், ஆசைநாயகியாக வைத்துப் பார்க்க விரும்புகிறீர்களே, இது வேங்கைநாட்டு இளவரசராகிய தங்களுக்குத் தகுமா? இதுவா தாங்கள் கற்ற கல்வி? தாயின் இடத்தில் இருக்கும் என்னைத் தாரமாக – அதுகூட இல்லை, காமத்தைத் தணிக்கும் கணிகைப் பெண்ணாக நிறுத்திவைக்கும் ஆசை தங்களுக்கு எப்படி வருகிறது?

"மதுவை அருந்தி மதியை இழந்து விட்டீர்களே!  இதைத் தங்கள் தாயார் கேட்டால் எப்படி மனம் வருந்துவார்கள்? தாங்கள் மது மயக்கத்தில் பேசியதைத் தங்கள் அம்மான் கோப்பரகேசரி கேட்டால்…? அருள் கூர்ந்து இந்த இடத்திலிருந்து சென்றுவிடுங்கள். இனிமேல் தங்களுக்கு கல்வி கற்றுத்தருவது என்னால் இயலாத ஒன்று! திருமந்திர ஓலைநாயகரான சிவாச்சாரியாருக்கு இந்த முடிவை நான் தெரிவித்துவிடுகிறேன்!"

தனது சினத்தினால் சிவந்த கண்களின் பார்வையைச் சிறிதும் குறைக்காது, வாசலை நோக்கி விரல்களைச் சுட்டிக்காட்டுகிறாள். அவளது ஒவ்வொரு சொற்களும் சவுக்கடிகளாக நரேந்திரன் மீது விழுகின்றன. தன்னையும் அறியாமல் இரண்டு அடிகள் பின்னே எடுத்து வைக்கிறான். அவனது முக அதிர்வுகளைக் கவனித்த நிலவுமொழி, சிறிது நிம்மதியடைகிறாள். சிவாச்சாரி தனக்குச் சொல்லிக்கொடுத்த வழி சரியான ஒன்றுதான் என்று அவள் மனதில் அமைதியும் தோன்ற ஆரம்பிக்கிறது. அவனுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து முதன்முறையாக அவள் மனதில் ஒருவிதமான அமைதி தோன்றத் துவங்குகிறது.

"சரியாகச் சொன்னாய், நிலவுமொழி! மிகவும் சரியாகச் சொன்னாய்! என்னை மிகவும் பெருமைப் படுத்திவிட்டாய்!" என்றபடி அங்கு வருகிறாள் குந்தவி. இருவரும் திடுக்கிட்டுப் போகிறார்கள்.

"இராஜராஜ நரேந்திரா!" என்று அவனின் முழுப்பெயரையும் சொல்லி அதட்டுகிறாள் குந்தவி.

"மாபெரும் சோழப்பேரரசின் சக்கரவர்த்தியான என் தந்தையின் பெயரை முதலில் வைத்துக்கொண்டு இத்தகைய இழிவான பேச்சுக்களைப் பேச எப்படி உனக்கு மனம் வந்தது? நிலாவிடம் உன்னை மணமுடிக்க விரும்புகிறேன் என்று நீ சொல்லியிருந்தால் கூட நான் மனம் வருந்தியிருக்க மாட்டேன். ஆனால், அவளைக் காமக்கிழத்தியாக இரு என்று கேட்டதைக் கேட்டு வெதும்பிப் போனேனடா! எனது ஒரே மகனான நீ இப்படியா நடப்பாய்?  நிலாவைத் தவிர வேறு யாராக இருந்தாலும் உன்னைத் தன் வலையில் வீழ்த்தியிருப்பார்கள்.

"ஆனால், அவள் எவ்வளவு விவேகமாகப் பேசினாள், பார்த்தாயா? போய்விடு! உடனே இங்கிருந்து போய்விடு! நீ தமிழில் பேசவேண்டும் என்று நான் துடியாகத் துடித்தேன். ஆனால் நீ தமிழில் பேசிய இவ்வார்த்தைகளைக் கேட்டு, நீ ஏன் தமிழ் கற்றுக்கொண்டாய் என்றுதான் இப்போது துடிக்கிறேன். நீ தமிழ் பேசியது போதும்! போதும்!! போய்விடு, என் கண்முன் நிற்காது போய்விடு. என்னை நிம்மதியாக இருக்கவிட்டுப் போய்விடு!" என்று நரேந்திரனைப் பார்த்து இறைகிறாள் குந்தவி.

என்றுமே முன்கோபியான அவள், தன் மகன் இப்படி நடந்துகொள்வதைப் பார்த்துச் சும்மாவா இருப்பாள்? நரேந்திரனின் முகம் வாடிப் போய்விடுகிறது. அத்துடன் மதுவின் மயக்கமும் இறங்கிப் போய்விடுகிறது. இனம் காணாத கோபத்தினால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுகிறது. இருவரையும் முறைத்துப் பார்க்கிறான். பதிலே பேசாமல் திரும்பி நடக்கிறான்.

பெரிதாக விம்மல் வெடிக்கிறது நிலவுமொழியிடமிருந்து. குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.

"என்னை மன்னித்து விடுங்கள் மகாராணி!  நான் இளவரசரை மிகவும் அவமானப் படுத்திவிட்டேன்! அவர் இம்மாதிரி எண்ணத்துடன் என்னை நோக்குகிறார் என்பதை முன்னரே தங்களிடம் தெரிவித்து, தமிழ் கற்றுக்கொடுக்கும் பணியிலிருந்து நின்றுவிட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இளவரசர் தமி்ழ் பேசினால் தாங்கள் மிகவும் மகிழ்வீர்களே என்று அமைதியாக இருந்தது என் தவறுதான்!" என்று விம்முகிறாள். குந்தவியின் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன.

"அழாதே நிலா, அழாதே!  உன் கடமையைத்தான் நீ செய்ய நினைத்தாய்!  ஆனால், இவன் இப்படி நடந்துகொள்வான் என்று உனக்குத் தெரியுமா? இனிமேல் நீ அவனுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டாம்! அவன் தமிழ் கற்றுக் கொண்டாகிவிட்டது என்று ஏனையோர்களிடம் சொல்லிவிடலாம்" குந்தவி, நிலவுமொழியைச் சமாதானப்படுத்துகிறாள். அவர்கள் இருவரும் பேசுவது நடந்து செல்லும் நரேந்திரனின் காதில் விழுகிறது. அவன் தன் நடையை வேகப்படுத்துகிறான். அவனது நெஞ்சம் குமுறுகிறது.

'போயும் போயும் எங்கோ அடித்தளத்தில் ஒரு ஓதுவாரின் மகளாய்ப் பிறந்தவள் என்னை அவமானப்படுத்திவிட்டாளே!  இவளை என்ன நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றா நினைத்தாள்? என்னைப் போன்ற இளவரசன் தன்னை ஆசைநாயகியாக வைத்துக்கொள்வேன் என்று சொன்னது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாமா? என் பார்வைக்காக வேங்கை நாட்டில் எத்தனை பெண்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்? என் காலடியில் விழுந்து கிடக்க போட்டி போட்டுக் கொண்டல்லவா வருவார்கள்?!

'கருப்பாக இருந்தாலும் களையாக, அம்சமாக இருக்கிறாள் என்று இவள் பின்னால் எத்தனை மாதங்கள் சுற்றி வந்தேன்? இவளுக்காக தமிழ் பேசக்கூட கற்றுக்கொண்டேனே! என்னவோ குருகுலத்தில் சொல்வதுபோல தான் எனக்கு அம்மா போல என்று கதை பேசுகிறாளே! வேங்கைநாட்டு மகாராணியும், சோழ சாம்ராஜ்ஜியச் சக்கரவர்த்தியின் மகளுமான என் அம்மா எங்கே? ஓதுவார் மகளான இவள் எங்கே? இப்படி என் அன்னையின் இடத்திற்குத் தன்னை உயர்த்திக்கொண்ட இவளது நாவை நான் என் வாளால் துண்டாடியிருக்க வேண்டும்! 

'அம்மாவுக்கென்ன இப்படி புத்தி கெட்டுப்போய்விட்டது! தமிழ், தமிழ் என்று உயிரை விடுகிறார்கள்! அப்படி உயிரை விடுகிறார்கள் என்பதால்தானே இந்தப் பெண்ணிடம் தமிழ் கற்றுக்கொண்டேன்! அதற்காகவே இப்பெண்ணை எனக்கு அடிமையாகப் பரிசளித்திருக்க வேண்டாமா! இவள் என்ன, தெலுங்கு ஆசான் நன்னய்யாவுக்குச் சமமானவளா? இவளுக்குப் பரிந்துகொண்டு என்னைப் பார்த்துப் போய்விடு என்று சொல்லிவிட்டார்களே? இதே நிலையில் அப்பா இருந்திருந்தால் இந்தப் பெண்ணின் திமிரை அடக்கி, இவளை எனக்குச் சொந்தமாக்கி விட்டுத்தானே மறுவேலை பார்த்திருப்பார்!

'கடைசியில், இவளை அடைய வேண்டும் என்பதற்காக நான் செலவிட்ட நேரமெல்லாம் வீணாகிப் போனதே! இவளுக்கும், இவளுக்கு ஆதரவாக இருக்கும் அம்மாவுக்கும் ஒரு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்! என்ன செய்யலாம்?"'என்று எண்ணியபடியே வேகமாக நடக்கிறான்.

குதிரையின் கனைப்பு அவன் கவனத்தைக் கலைக்கிறது. நடந்துகொண்டே குதிரை லாயத்திற்கு வந்திருக்கிறான்! அவனைக் கண்டதும் குதிரைலாயக் காப்பாளன் வணங்கி நிற்கிறான்.

"நாக்கு ஒரு குதிரை வேணும்" விறைப்பாக உறுமுகிறான் நரேந்திரன்.

"ராவாயிப் போயிருச்சு ராசா! இந்த சமயத்துல குதிரையிலே எங்கே போகணுமிங்கிறீங்க? நான் துணைக்கு யாராச்சையும் அனுப்பட்டுங்களா?" என்று காப்பாளன் பணிவாகக் கேட்கிறான்.

"மட்டி மடையா! நாக்கு வழி தெரியாதா? நேனு குருடனா! குதிரை வேணும்னா இவ்வுடுடா (கொடுடா). வேகமாப் போற குதிரையா இவ்வு!" நரேந்திரன் அதட்டியதும் பயந்து விடுகிறான் காப்பாளன்.

இராஜேந்திரன் உள்பட அவனை யாரும் இதுவரை மரியாதைக் குறைவாகப் பேசியதே இல்லை, அவனது பரிவை அலட்சியம் செய்ததோடு மட்டுமல்லாமல், அவமரியாதையாகவும் பேசுகிறானே, இந்த வேங்கை நாட்டு இளவரசன்! எப்படியோ போய் விழுந்து தொலைக்கட்டும் என்றா விட முடியும்? இவனுக்கு ஏதாவது ஒன்று ஆனால் தானல்லவா மகாராஜாவுக்குப் பதில் சொல்ல வேண்டும்?

தனது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பணிவான குரலில், "ராசாவுக்கு ஏதோ கோவம்போல; நல்ல குதிரையா ராசாவுக்கு கொண்டு வறேன், செத்த இருக்கறீங்களா?" என்று கேட்கிறான்.

"தள்ளிப் போ, நேனே சூஸ்தானு! (பார்த்துக்கொள்கிறேன்)" என்று அவனை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு, அங்கு உடலைச் சிலிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு கருப்புக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுக்கிறான். அது பயங்கரமாகக் கனைத்தபடி முன்னங்கால்களைத் தூக்கி எழுந்து ஆர்ப்பரிக்கிறது.

காப்பாளன் கவலையுடன் ஓடி வருகிறான். "இந்தக் குதிரை ரொம்ப முரட்டுக் குதிரை, ராசாவே! இது வேணாம். கொஞ்ச நாள் முன்னாலதான் இது துலுக்க தேசத்திலேந்து வந்தது. கடலுல ரொம்ப நாளு வந்ததால அதுக்குத் தாங்க முடியாத கோவமுங்க. இதோ, இந்த வெள்ளக் குதிரை ரொம்ப நல்ல குதிரை ராசாவே!  இதை எடுத்துக்கிட்டுப் போங்க" என்று கவலையுடன் அருகிலிருக்கும் ஒரு வெள்ளைக் குதிரையைச் சுட்டிக்காட்டுகிறான். நரேந்திரன் வெறியுடன் ஓலமிடுகிறான்.

நிலவுமொழியிடம் கற்றுக்கொண்ட தமிழ் தங்கு தடையில்லாமல் காவிரியாகப் பொங்கிப் பெருகுகிறது. "ஏண்டா, என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க! இந்தச் சோழ நாட்டுக்காரங்களுக்கு மரியாதை ஒண்ணும் தெரியாதா? இங்கே யாருடா ராஜா, யாரு குதிரைக்காரன்? உன் நிலைமை தெரிஞ்சு நடந்துக்கோ!" என்று ஓங்கி காப்பாளனின் கன்னத்தில் அறைந்துவிட்டுக் கருப்புக் குதிரையின் மீது தாவி ஏறி, அதைச் சாட்டையால் நன்றாக வெளுக்கிறான்.

அடி வாங்கிய வெறியில் குதிரை தவ்விக்குதித்துப் பாய்ந்து ஓடுகிறது. ஒரே சீராக ஓடாமல் தன்னை அடித்தவனை எப்படியாவது குப்புறத் தள்ளிவிட வேண்டும் என்ற ஆத்திரத்துடன் புலியாகப் பாய்கிறது அக்குதிரை.

குதிரை மீது விழுந்த சாட்டையடிகள் தன் மீது விழுந்ததைப்போல உணர்கிறான் காப்பாளன். ஏதாவது விபரீதமாக நடந்துவிடக் கூடாது என்று வெள்ளைக் குதிரையை அவிழ்த்து, அதன் மீது ஏறிக்கொண்டு நரேந்திரனைப் பின்தொடர்கிறான்.

இது எல்லாவற்றையும் சற்றுத் தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருக்கும் அவனது உதவியாளன் குதிரை லாயக் கதவைச் சாத்திவிட்டு, அருகிலிருக்கும் கல்லில் கவலையுடன் அமர்ந்துகொள்கிறான்.

அரைக்காத தூரம்கூடப் போகவில்லை, கருப்புக் குதிரை தன் மனதில் நினைத்ததைச் சாதித்து விடுகிறது. ஒரு வேலியைத் தாண்டும் சமயத்தில் பின்னங்கால்களை ஊன்றித் தாவுவதற்குப் பதிலாக, முன்னங்கால்களை அழுத்தமாக ஊன்றிப் பின்னங்கால்களை வேகமாக மேலே தூக்கி எழும்புகிறது. வேலியைத் தாண்டும்பொழுது முதலில் குதிரையின் தலை மேலேழும் என்று எண்ணி அதற்காகத் தன்னைத் தயார் செய்த நரேந்திரனுக்கு அது பெரும் அதிர்ச்சியானதோடு மட்டுமல்லாமல், அவனை நிலைகுலையவும் செய்கிறது.

அதே வேகத்தில் குதிரை முன்னங்கால்களை ஊன்றி தட்டாமாலையாகச் சுழல்கிறது. பாதி சுழன்றவுடன் பின்னங்கால்களைக் கீழே ஊன்றி, முன்னங்கால்களை உயரத் தூக்கித் தாவுகிறது. கிட்டத்தட்ட ஏழடி உயரம் தாவிய அக்குதிரை, காற்றிலேயே சுழன்று முன்னங்கால்களில் கீழே குதித்து, அந்த வேகத்தில் பழையபடியும் பின்னங்கால்களை உயரத் தூக்கி விசிறுகிறது. அந்த வேகத்தைச் சமாளிக்க முடியாத நரேந்திரன் கடிவாளத்தின் பிடியை நழுவ விட, குதிரையின் முதுகிலிருந்து வீசப்படுகிறான். தன்னை முரட்டுத்தனமாக நடத்தியவனைக் கீழே தள்ளிவிட்ட நிம்மதியுடன் குதிரை லாயத்திற்குத் திரும்புகிறது.

முள்வேலியில் விழுந்த நரேந்திரன் வலியில் துடிக்கிறான். உடலில் பல இடங்களில் காயம்பட்டு முட்களும் குத்தியிருக்கின்றன. எல்லாவற்றையும் விட அடுத்தடுத்துப்பட்ட அவமானங்கள் அவனைப் பிடுங்கித் தின்கின்றன.

இதற்குள் அங்கு வந்து சேர்ந்த காப்பாளன் மெதுவாக நரேந்திரனைத் தூக்கிவிடுகிறான். "ராசாவே, மெல்ல என்னைப் பிடிச்சுக்குங்க. இந்தக் குதிரைச் சனியனை இதுக்குத்தான் நான் வேணாம், வேணாம்னு சொன்னேன். நான் வந்த குதிரைல உக்காந்துக்குங்க. நான் லாயத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி காயத்துக்கு பச்சிலை வச்சுக் கட்டி விடறேன். நிக்க முடியுதா பாருங்க" என்று காப்பாளன் ஆதங்கத்துடன் அவனைத் தூக்கி விடுகிறான்.

நரேந்திரனுக்கு கோபத்துடன், வெட்கமும் பிடுங்கித் தின்கிறது. யாரை நாம் அவமதித்தோமோ, அவன் கண் முன்னலேயே அந்தக் குதிரை தன்னை அவமானப்பட வைத்துவிட்டதே! இவன் ஊர் முழுக்க இதைப்பற்றிச் சொல்லி தம்பட்டமல்லவா அடிப்பான்! மெல்ல எழுந்து நிற்கிறான். வலது கால் சுரீரென்று வலிக்கிறது. தடுமாறுகிறான்.

அவனைச் சட்டென்று தாங்கிப்பிடித்த காப்பாளன், "ராசாவே, சுளுக்கு மாதிரி இருக்குபோல. மெள்ளமா என்னைப் பிடிச்சுக்கிட்டு குதிரை மேல ஏறுங்க, உறுவிச் சரி செஞ்சுவிடறேன்."

அவனைக் குதிரையில் ஏற்றிவிட்டு, கடிவாளத்தைப் பிடித்தவாறே முன்னால் நடக்கிறான்.

நரேந்திரனின் மனம் நெருப்பாகக் கொதிக்கிறது. மனம் என்னவெல்லாமோ எண்ணிக் குமுறுகிறது. நிலவுமொழியின் மீது ஒரு வன்மம் பிறக்கிறது. அவளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று உள்ளம் துடிக்கிறது.

"பழி வாங்குவேன், அவளை எப்படியாவது பழிவாங்குவேன். தமிழைக் கற்றுக்கொடுத்ததால்தானே, தன்னைத் தாய் என்று சொல்லி என்னை அவமதித்தாள்! அந்தத் தமிழை வேங்கை நாட்டில் பரப்பத்தானே என் அம்மாவும், பாட்டனாரும், அந்த சிவாச்சாரியனும் அவளை வேங்கை நாட்டிற்கு அனுப்பினார்கள்? அந்தத் தமிழை இனி நான் வேங்கை நாட்டில் பரப்ப விடமாட்டேன்! பாட்டனாரின் தமிழ்த்திருப்பணி வேங்கை நாட்டை அணுகாதவாறு பார்த்துக் கொள்வேன். 

"என் தந்தையின் மொழியான தெலுங்கை சிறந்ததாகச் செய்வேன்.55 அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வேன். என்னிடம் வேங்கை நாட்டின் சிம்மாசனம் வரட்டும். என்னைப் பற்றி எல்லோரும் தெரிந்துகொள்வார்கள். சிரித்துக்கொண்டே இவர்களின் திட்டத்தை முறியடிப்பேன். கேவலம், ஒரு ஓதுவாரின் பெண் என்னை அவமானப்படுத்தும்படி செய்துவிட்டார்கள் அல்லவா! இந்த நரேந்திரன் எப்படிப்பட்டவன் என்பதை எதிர்காலத்தில் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்!" என்று தனக்குள் சூளுரைத்துக்கொள்கிறான் நரேந்திரன். 

குதிரை லாயத்தை அடைகிறது.

——————————————-

[55 தெலுங்குமொழியைச் சிறப்பான இலக்கியமொழியாக ஆக்கியதில் இராஜராஜ நரேந்திரனின் பங்கு மிகவும் குறிப்பிடத் தக்கது.  தெலுங்குமொழிக்கு வடமொழியிலுள்ள அத்தனை ஒலிப்புகளும் வரும் எழுத்துகளைக் கொடுத்து, வடமொழிச் சொற்களைக் கலந்து மகாபாரத காவியம் இயற்றியது, அவனுடைய ஆசான் நன்னைய பட்டாரகரே ஆவார்.]

பழையாறை மாளிகை

பரிதாபி, தை 20 – பிப்ரவரி 5, 1013

ராஜராஜரின் விருப்பப்படி அருள்மொழிநங்கைக்கும், சிவாச்சாரிக்கும் பழையாறை அரண்மனையில் திருமணம் நடந்து ஐந்து நாட்கள் ஆகியிருக்கின்றன…

…சிவாச்சாரியின் முதல் மனைவி மிகவும் ஆத்திரமடைவாளோ என்று அருள்மொழிநங்கை திருமணத்திற்கு முன்பு சிவாச்சாரியிடம் கேட்டதற்கு, அவன் ஒரு புன்னகையைத்தான் பதிலாகத் தந்தான்.

"அரசகுமாரி என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள் என்று நான் தெரிவித்தவுடன் தன்னைப் பரிகாசம் செய்ய வேண்டாம் என்று பெரிதாகச் சிரித்துத் தள்ளிவிட்டாள். 'உங்கள் வயதென்ன, அரசகுமாரியின் வயதென்ன? அது மட்டுமா, அவளுக்கு ஒரு ராஜகுமாரனைத்தான் கல்யாணம் செய்துவைப்பார்கள். கட்டுக்குடுமியுடன், கோவிலில் பூசை செய்து வந்த உங்களையா மகாராஜா மாப்பிள்ளையாக ஆக்கிக் கொள்வார்? வெய்யில்கூட அடிக்கவில்லை, அக்னி நட்சத்திரம்கூட வரவிவில்லை; ஆனால் உங்கள் மூளை உருகி, பித்துப் பிடித்துவிட்டதா' என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

"கடைசியில், ஒருவழியாக அவளுக்கு நான் சொல்வது உண்மைதான் என்று விளக்குவதற்குள் அரை நாழிகையாகிவிட்டது" என்றவனை இடைமறித்து, "அக்கா என்ன சொன்னார்கள் என்று சொல்லுங்கள். சுற்றி வளைக்காதீர்கள்" என்று கொஞ்சும் குரலில் கெஞ்சினாள் அருள்மொழிநங்கை.

"சொல்கிறேன், சொல்கிறேன். அவளுக்கு மிகவும் பெருமை. 'ராஜகுமாரி எனக்குத் தங்கை ஆகப்போகிறாள் என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம்தான். பாவம், அவர்களால் நமது சிறிய அகத்தில் இருக்க முடியாது. அவர்கள் அரண்மனையிலேயே இருக்கட்டும். நீங்கள் அவர்களுடன் இருங்கள். அவ்வப்பொழுது என்னையும் வந்து பார்த்துக்கொண்டு இருங்கள்!' என்று சொன்னாள்.

"அவளும் குழந்தையுடன் தஞ்சையிலிருந்து பழையாறைக்கு வந்து சேர வேண்டும், சக்கரவர்த்தி நமக்கு ஒரு புதிய, பெரிய அகத்தைக் கட்டுவித்திருக்கிறார் என்று நான் சொன்னதற்கு, அவள் மிகவும் தயங்கினாள். தான் நாட்டுப்புறம் என்றும், ராஜகுமாரியுடன் சேர்ந்து ஒரே இல்லத்தில் இருக்கத் தகுதி இல்லாதவள் என்றும் சொல்கிறாள். நீ வந்து சொன்னால் வருவாளோ என்னவோ?" என்று முடித்தான்.

உடனே பொங்கி எழுந்துவிட்டாள் அருள்மொழிநங்கை, "நான் கேட்கும்வரை என்ன இப்படி இதுபற்றி ஒன்றும் சொல்லாமலே இருந்திருக்கிறீர்கள்! அக்கா கட்டாயம் என்னுடன்தான் இருக்க வேண்டும். நானே அவருடன் பேசுகிறேன்" என்றதோடு மட்டுமல்லாமல், தானே சிவாச்சாரியனின் வீட்டிற்குச் சென்று அவன் மனைவியைத் தன்னுடன் பழையாறைக்கு வரச் சம்மதிக்கவும் செய்துவிட்டாள்.

அரசகுமாரியே தன் வீட்டிற்கு வந்து கேட்டதால் அவளால் மறுக்க இயலவில்லை. அக்கிரஹாரமே அன்று வியப்பில் ஆழ்ந்துவிட்டது.

சீர்வரிசைகள் எதுவும் வேண்டாம் என்றும், பெரிதாக ஒரு வீடு கொடுத்ததே மாபெரும் சீர்தான் என்றும் சொல்லிப் பார்த்தான் சிவாச்சாரி. அவனைப் புன்னகையுடன் அடக்கி விட்டனர் இராஜராஜரும் இராஜேந்திரனும்.

"சிவாச்சாரியாரே, நீர் சிறு குடிசையில் ஓலைப்பாயில் நாட்களைக் கழித்துவிடும் திறன் உள்ளவர்தான். இருப்பினும் பேத்திக்கு திருமணச்சீர் ஒன்றுமே செய்யவில்லை என்று நாடே எம்மைப் பழிக்காதா? இந்த விஷயத்தில் நீர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதே சாலச்சிறந்தது!" என்ற இராஜராஜரின் கூற்றுக்கு அவனால் பதில் சொல்ல இயலாது போயிற்று.

அவனது முதல் மனைவி பெரிய வீட்டையும், அரசகுமாரியுடன் வந்த சீர்களையும் கண்டு மலைத்து விட்டாள். அவளுக்கும், சிவாச்சாரியின் முதல் குழந்தைக்கும் வந்த பரிசுகளும் அவளைத் திக்குமுக்காட வைத்துவிட்டன. தனது கணவர் அரச பரம்பரையின் அன்புக்கு எவ்வளவு பாத்திரமானவர் என்பதை நேரில் கண்டு பெருமையில் பூரித்துப்போனாள்…

…. புதுமணத் தம்பதிகள் தனித்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவள் அடிக்கடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்று விடுகிறாள்.

உறவாடி மகிழ்ந்த நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் தமிழ்த்திருப்பணியைப் பற்றியும், தேவாரத் திருப்பதிகங்களின் மறைபொருட்களைப் பற்றியும் அருள்மொழிநங்கை அவனுடன் உரையாடி மகிழ்கிறாள்.

அவளுக்குத் தமிழில் இருக்கும் ஆர்வத்தை நேரில் கண்டு சிவாச்சாரி உவகை கொள்கிறான். அது மட்டுமன்றி, சைவத்தின் சிறப்புகளைப் பற்றியும் அவனை விளக்கச் சொல்லிக் கேட்டு, அனைத்தையும் கடல்பஞ்சைப்போல உறிஞ்சிக் கொள்வதைக் கண்டு வியக்கிறான்.

"நங்கை, உனக்கு என்ன மாதிரி மக்கள் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?" என்று வினவுகிறான்.

"ஐயனே, தங்கள் விருப்பமே என் விருப்பம்" என்று நாணத்துடன் தலை குனிகிறாள் அருள்மொழிநங்கை.

"எனது விருப்பம் என்ன என்று நீ அறிவாயா?" செல்லமாகக் கேட்கிறான் சிவாச்சாரி.

"நம் திருமணத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தபொழுது, சோழ நாட்டின் ஊழியர்களாகவே நமது வழித்தோன்றல்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தீர்கள். அதற்கு நான் சம்மதம் தெரிவித்துதானே உங்கள் கரத்தைப் பிடித்தேன்! நம் வழித்தோன்றல்கள் சோழநாட்டுக்கு சிறப்பான வகையில் பணியாற்ற வேண்டும் என்பதே நம் இருவரின் விருப்பமும். அவர்கள் பாட்டனாரின் தமிழ்த்திருப்பணிக்குச் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்; இந்தப் பரந்த பாரத கண்டத்தின் ஐம்பத்தாறு நாடுகளும் தமிழ் பேசும்படி செய்ய வேண்டும், தமிழ் மூலம் சைவம் தழைக்க உழைக்க வேண்டும் என்பதுதான் இந்த அடியாளின் கோரிக்கை, கனா. அது நிச்சயம் நடந்தேறும் என்று என் உள்மனது சொல்கிறது ஐயனே!" என்று தணிந்த, உணர்ச்சிப்பெருக்கு பொங்கும் குரலில் அருள்மொழிநங்கை மறுமொழி கூறுகிறாள்.

சிவாச்சாரியனின் முகத்தில் கவலைக் கோடுகள் பரவுகின்றன. அதைக் கவனித்த அருள்மொழிநங்கை, "ஐயனே, நான் ஏதாவது பிழையாகச் சொல்லிவிட்டேனா? உங்கள் முகத்தில் கவலைக்குறி தோன்றுகிறதே?" என்று சிறிது பதற்றத்துடன் கேட்கிறாள்.

அவனது முதல் மனைவி இவ்வளவு தூரம் அவனது முக உணர்ச்சிகளைக் கண்டுகொண்டிருக்கவும் மாட்டாள், அப்படியே கண்டுகொண்டாலும், சுற்றிவளைத்துத் தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயலுவாளே தவிர, நேராகக் கேள்வி கேட்டிருக்க மாட்டாள்.

தனது மனதில் இருப்பதை அவளிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதினால், தானாகவே அது அவளுக்கு வந்துசேரும் என்பது அவளுடைய எண்ணம் என்பதை அவன் அறிவான்.

கைவிரல்களே ஒன்றுபோல இல்லை, பெண்களின் நடவடிக்கை எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்று எண்ணியவாறே, "இல்லை நங்கை… இல்லை. உன்னிடம் பிழை ஏதும் இல்லை. உன்னுடைய தமிழ்ப்பற்று, சைவப்பற்று, திருப்பணி நிறைவேற வேண்டும் என்ற உனது அவா – எதிலுமே பிழையேதும் இல்லை. நமது வழித்தோன்றல்கள் மூலம் தமிழ்த்திருப்பணி நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதும் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தச் செய்கிறது."

"பின் ஏனிந்த வாட்டம்?" கவலையுடன் கேட்கிறாள் அருள்மொழிநங்கை.

"உனது அத்தை மகன் நரேந்திரனின் போக்குதான் எனக்கு மிகுந்த கவலையை உண்டாக்குகிறது" என்று தன் மனதில் ஓடிய எண்ணத்தைப் பகிர்ந்துகொள்கிறான் சிவாச்சாரி.

"அப்படியா? அவன் தமிழ் நன்றாகப் பேசக்கூட ஆரம்பித்துவிட்டானே?" என்று வியப்புடன் கேட்கிறாள் அருள்மொழிநங்கை.

"அவன் நோக்கம் தமிழ் கற்றுக்கொள்வதாக இருக்கவில்லை. தமிழைக் கற்றுக்கொடுக்கும் பெண் நிலவுமொழிமீது மையல் கொண்டிருந்தான். அதனால்தான் தமிழ் கற்றுக்கொள்வதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டான். நான் வேங்கை நாடு போனபோது அந்தப் பெண் தன்னை மயிலைக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு அழாக்குறையாக என்னிடம் கெஞ்சினாள். நான்தான் அவளுக்கு ஒரு யுக்தியைச் சொல்லிக்கொடுத்தேன். ஏடாகூடமாகப் போனால் கல்வி கற்பிக்கும் தான் நரேந்திரனின் தாயின் இடத்தில் இருப்பதாகவும், தாய் மீது மையல்கொள்வது முறையல்ல என்று சொல்லும்படியும் சொன்னேன். இங்கு வந்த நரேந்திரன் அப்பெண்ணைத் தன் காமக்கிழத்தியாக இருக்கும்படி கேட்டிருக்கிறான். நான் சொல்லிக்கொடுத்தபடி நிலவு மொழியும் அவனிடம் சொல்லியிருக்கிறாள். அச்சமயம் உன் அத்தை குந்தவி அங்கு போய்ச் சேர்ந்திருக்கிறாள்…!"

"அடாடா, அத்தை என்ன சொன்னார்கள்?"

"உன் அத்தையைப் பற்றி நான் சொல்லவா வேண்டும்! அவர்களுக்குத்தான் சினம் மூக்குக்கு மேல் வந்து விடுமே! நரேந்திரனை மிகவும் சினந்து, வெளியே போகும்படி சொல்லிவிட்டார்கள்!"

"பிறகு…?"

"பிறகென்ன? இவன் கோபத்துடன் குதிரை லாயத்திற்குச் சென்று அங்கு முறைகேடாக நடந்து விட்டிருக்கிறான். காப்பாளனை அவமதித்து, அரபு நாட்டிலிருந்து புதிதாக வந்திருந்த, பழக்கப்படுத்தப்படாத குதிரையை எடுத்துச்சென்று, அது அவனைக் கீழே தள்ளி…" என்று இழுத்த சிவாச்சாரி, "எப்பொழுதும் மது அருந்திக்கொண்டு தாறுமாறாக நடந்துகொள்கிறானாம்" என்று முடிக்கிறான்.

இப்பொழுது அருள்மொழிநங்கையின் முகத்தில் கவலை படர்கிறது. "ஐயனே, இது தந்தைக்கும், பாட்டனாருக்கும் தெரிந்தால் நிலைமை கையைவிட்டுப் போய்விடுமே? மங்கையை நரேந்திரனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று அவள் பிறந்ததிலிருந்தே பேசி வரப்படுகிறதே? இந்நிலையில் இந்தப் பிள்ளை ஏன் இப்படிச் செய்கிறான்?" என்று ஆதங்கத்துடன் வருத்தப்பட்டவள், "அது சரி, இதற்கும், நான் தமிழ்ப்பணியைப் பற்றிப் பேசியதற்கும் என்ன தொடர்பு? இதுவரை அமைதி காத்த நீங்கள், இந்த விஷயம் பேசப்படும் போது ஏன் முகவாட்டமுற்றீர்கள்?" என்று கேட்கிறாள்.

"நங்கை, நிலவுமொழி என்னிடம் நரேந்திரனைப்பற்றிப் பேசியபொழுதே அவளை வேங்கை நாட்டிலிருந்து அனுப்பி விடாதது எனது தவறோ என்று அடிக்கடி உள்ளுணர்வு என்னைச் சாடுகிறது." பெருமூச்சு விடுகிறான் சிவாச்சாரி.

"நரேந்திரன் முறையற்று நடந்தது அவனுடைய பிழை. அத்தையார் அவன் மீது சினம் கொள்ளாமல் மெச்சவா செய்வார்கள்? அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? ஐயனே, நீங்கள் தேவையில்லாமல் மனதை வருத்திக்கொள்கிறீர்களோ என்று எனக்குத் தோன்றுகிறது" என்று அவனைத் தேற்ற முயல்கிறாள் அருள்மொழிநங்கை.

"அவன் முறைதவறி நடந்ததோடு நின்றிருந்தால் ஏதோ இளமை வேகத்தில் பிழை செய்து விட்டான், தான் விரும்பியது கிடைக்காத சினத்தில் இப்படி நடந்துகொள்கிறான் என்று விட்டுவிடலாம். ஆனால்…" என்று இழுத்த சிவாச்சாரி, "உன் அத்தையிடம் இப்போது தெலுங்கிலேயே பேச ஆரம்பித்துவிட்டானாம். இது தமிழ்த்திருப்பணிக்குத் தடங்கலாக அமையுமே என்று ஐயுறுகிறேன். சக்கரவர்த்தி அவர்களின் திருப்பணி ஆலோசகனான நான் பெரும்பிழை செய்துவிட்டேனோ என்றும் அஞ்சுகிறேன். அதனால்தான் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது" என்று முடிக்கிறான்.

"நரேந்திரன் மிகவும் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்டவன். அதனால்தான் இப்படித் தாறுமாறாக நடந்துகொள்கிறான். அவனது கவனத்தைத் திருப்ப, எந்தக் குதிரை அவனைக் கீழே தள்ளியதோ, அந்தக் குதிரையையே அவனுக்குப் பரிசாகக் கொடுத்து, அவனுக்குக் குதிரை ஏற்றமும், போர்க்கலைகளும் கற்பியுங்கள். அவன் மனம் இந்த ஏமாற்றத்திலிருந்து விடுபடும்.

"பாட்டனாரும், தந்தையாரும் உங்கள் மீது அளவுகடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். தந்தையாரோ, உங்களை ஆருயிர் நண்பராகக் கருதித்தானே என்னையே உங்களுக்குப் பரிசளித்திருக்கிறார். உங்கள் சேவையை வருங்காலம் போற்றும். பெருவுடையார் உங்கள் முயற்சிகளைத் திருவினையாக்குவார்" என்று அவனைத் தன்னுடன் சேர்த்து இழுத்துக்கொள்கிறாள் நங்கை.

(தொடரும்)

Other Articles

No stories found.