பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 7

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 7

ஒரு அரிசோனன்

மதுரை அரண்மனை

பரிதாபி, வைகாசி 10 – ஜூன் 2, 1012

ந்தேகத்தின் கோடுகள் அமரபுஜங்கனின் நெற்றியில் ஓடுகின்றன. இரண்டு ஆண்டுகளாகப் போட்ட திட்டம் நிறைவேறும் தருவாயில் இருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் பெருமையாக இருந்தாலும் அது வெற்றியடையுமா அடையாதா என்ற ஒருவிதமான அமைதியற்ற நிலை அவன் மனத்தை அரித்துக்கொண்டே இருக்கிறது.

அவன் நினைத்தபடி இராஜேந்தின் வேங்கைநாட்டிற்குச் சென்றுவிட்டான். இராஜராஜனிடம் தற்பொழுது பதினையாயிரம் வீரர்களே போருக்குத் தயாராக இருப்பதாக ஒற்றர்கள் செய்தி கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழ்த்திருப்பணி, தமிழ்த்திருப்பணி என்று எப்பொழுதும் அதிலேயே இராஜராஜன் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறானாம்.

அது உண்மைதான் என்பதுபோல சோழநாட்டிலிருந்து அவர்களது எழுத்துக்களைக் கற்பிக்கும் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டு சிவாச்சாரி இரண்டு நாள்கள் முன்னர்தான் வந்து, சொக்கநாதரையும், மீனாட்சியையும் தரிசனம் செய்துவிட்டுப் போனதும் நினைவுக்கு வருகிறது.

அவன் தனது வருகையை ஐந்து நாள்கள் முன்னரே அறிவித்துவிட்டு வந்ததிலிருந்தும், நிறைய நேரம் கோவில்சிவாச்சாரியரிடம் பூசை விதானங்களைப் பற்றி வாதிட்டதிலிருந்தும், தேவாரம், திருவாசகப் பள்ளிகள் நிறைய நடக்கவேண்டும், அவற்றை முறையாக ஓதவேண்டும் என்று பேசிக்கொண்டதிலிருந்தும், அவன் மணியடிக்கும் சிவாச்சாரிதான், அமைச்சர் முன்பு ஐயப்பட்டபடி போர்நெறி அறிந்தவன் அல்ல என்ற முடிவே தோன்றுகிறது.

அது மட்டுமல்லாமல் பழமுதிர்சோலைக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும் என்று அடுத்தநாளே கிளம்பிவிட்ட சிவாச்சாரியனுக்குத் துணையாக இருபது பாண்டிநாட்டு வீரர்களையும் அனுப்பிவைத்திருப்பதால், திருப்பரங்குன்ற மலைக்குப் பக்கத்திலிருக்கும் காட்டில் ஒளிந்திருக்கும் சேரநாட்டு வீரர்களை அவன் பார்த்திருக்க இயலாது என்று மனதைத் தேற்றிக்கொள்கிறான்.

ஒருபுறம் பார்த்தால் அசடுமாதிரி இருக்கிறான், இன்னொருபுறம் பார்த்தால் நம்ப முடியாத தந்திரக்காரன் மாதிரியும் இருக்கிறான், உண்மையில் இந்த சிவாச்சாரி எப்படிப்பட்டவன் என்று குழப்பமாக இருக்கிறது.

அமரபுஜங்கனின் அமைதியைக் கலைத்து, "அரசே! போர் ஆலோசனைக்கு அனைவரும் அரண்மனை மண்டபத்தில் தங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்" என்று அறிவிக்கிறான், திருமாறன் – அவனது மெய்காப்பாளன்.

தனது சந்தேகங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு எழுந்திருக்கிறான் அமரபுஜங்கன். "திருமாறா, சோழநாட்டுச் சிவாச்சாரி திரும்பிவிட்டானா?" என்ற கேள்வியுடன் மண்டபத்தைநோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.

"அவனைப் பொன்னமராவதிவரை சென்று சோழநாட்டு எல்லையில் விட்டுவிட்டு வந்ததாக அவனுக்குத் துணையாக நாம் அனுப்பிய வீரர்கள் செய்திகொண்டு வந்தார்கள் அரசே! அவன் அங்கு போவதற்கு முன்னரே, நமது படைகளை பக்கத்துக் காட்டில் ஒளிந்துகொள்ளச் செய்தி அனுப்பிவிட்டேன். அவனையும் அவன் முகத்தையும் கண்டால் எனக்குச் சிறிதும் பிடிக்கவே இல்லை!" என்று பதிலளிக்கிறான் திருமாறன்.

திருமாறனுக்கு சிவாச்சாரிபால் இனம் தெரியாத வெறுப்பு என்பது அமரபுஜங்கனுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றுதான். துருவிக் கேட்டாலும், அந்த வெறுப்பு ஏற்படத் தெளிவான காரணத்தைச் சொல்லத் திருமாறனால் இயலவில்லை. சிவாச்சாரியின் கண்கள் ஒரு நிலையில் நிற்காமல் சுழன்றுகொண்டே இருப்பதை மட்டுமே அவனால் காரணமாகக் காட்டமுடிகிறது. மற்றபடி இது மனத்தடியில் தோன்றும் உணர்ச்சி என்றுதான் திருமாறன் சொல்லி வருகிறான்.

இராஜராஜனின் முத்திரைமோதிரம் உள்ள ஒருவன் மிகவும் மரியாதையாக அனைவரிடமும் நடந்துகொள்வது நம்ப இயலாத ஒன்றாக இருக்கிறது. அதனாலேயே அவன்மீது தனக்குச் சந்தேகம் பிறக்கிறது என்பது திருமாறனின் வாதம்.

எப்பொழுதும் திருமாறனின் உள்ளுணர்வுக்கு மதிப்புக்கொடுப்பது அமரபுஜங்கன் வழக்கம். எனவே, சிவாச்சாரியனையும் கவனிக்குமாறு சோழநாட்டில் இருக்கும் பாண்டிய ஒற்றர்களுக்குச் செய்தி அனுப்புமாறு அமைச்சரிடம் சொல்லவேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறான்.

மண்டபம் நிறைந்திருக்கிறது. அமைச்சர்கள், படைத்தலைவர்கள், ஒற்றர்கள், என்று கிட்டத்தட்ட அறுபதுபேர் மண்டபத்தில் இருக்கிறார்கள். இதுதவிர வயநாட்டுச்37 சேரமன்னன் கோவர்த்தன மார்த்தாண்டன் அவனது குழுவினருடன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு எதிரில் இலங்கைமன்னன் ஐந்தாம் மகிந்தனின் படைத்தளபதி தனது மொழிமாற்றக்காரர்கள், படைத்தலைவர்களுடன் வீற்றிருக்கிறான்.

கட்டியங்காரன் அமரபுஜங்கனின் வருகையை அறிவித்தவுடன் மண்டபத்தில் நடந்துகொண்டிருந்த பேச்சு ஓய்கிறது. அனைவரும் எழுந்துநிற்கின்றனர். அவர்களைக் கையமர்த்தியவாறு அமரபுஜங்கன் தன் இருக்கையில் அமர்கிறான். அவனுக்குப் பின்னே சென்று திருமாறன் விறைப்பாக நின்றுகொள்கிறான். அவன் கண்கள் மண்டபத்தைச் சுற்றிலும் நோட்டம்விட ஆரம்பிக்கிறது. அனைவரும் பாண்டியமன்னன் என்ன சொல்லப்போகிறான் என்பதை எதிர்பார்த்தவாறு இருக்கின்றனர்.

படைகளை ஒளித்து மறைத்துக் கொண்டுவரப் பட்டபாடு அவர்களுக்குத்தானே தெரியும்! கொண்டுவருவது மற்றுமல்ல, சோழர் கண்களில் படாமல் மறைத்துவைக்கவும் மிகவும் தொல்லைப்பட வேண்டியிருந்தது. மதுரை, பொன்னமராவதி, திருப்புத்தூர் போன்ற இடங்களில் மறைந்து இருந்தார்கள்.

அமரபுஜங்கன் தொண்டையைக் கனைத்துக்கொள்கிறான். மண்டபத்தில் உடனே அமைதி நிலவுகிறது.

"எனதருமை பாண்டிநாட்டுக் குடிமக்களே! நமக்குத் தோள்கொடுப்பதற்கென்றே படையுடன் வந்திருக்கும் சேரநாட்டு அரசரே, சிங்களப் படைத்தலைவரே! உங்கள் அனைவரையும் இந்த முக்கியமான ஆலோசனைக்கு வரவேற்கிறேன். முதலில் உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

இராஜராஜனிடம் தஞ்சைக் கோட்டையின் காவலர்களையும் சேர்த்துப் பதினையாயிரம் படை வீரர்களே இருக்கிறார்களாம். இராஜேந்திரன் ஐம்பதாயிரம் படைவீரர்களுடன் வேங்கை நாடு சென்றிருக்கிறான். அங்கு கீழைச் சாளுக்கியனுக்குப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வீரர்கள் இன்னும் புறப்படக்கூட இல்லையாம். தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்று இறுமாப்பில் இராஜராஜன் பாதுகாப்பே இல்லாமல் இருக்கிறான். இப்பொழுது நம்மிடம் அவனிடம் இருப்பதைப்போல இருமடங்கு படை வீரர்கள் இருக்கிறார்கள். இது போன்ற நல்வாய்ப்பு நமக்குக் கிடைக்கவே கிடைக்காது. இச்சமயத்தில் இராஜராஜனைத் தாக்கி மரண அடி கொடுத்தால் தஞ்சை விழுந்துவிடும். இதற்காகத்தானே நாம் இரண்டு ஆண்டுகள் மறைவாக முயற்சிசெய்திருக்கிறோம். இந்தப் போர்தான் நமக்கு வாழ்வா, சாவா என்று முடிவு செய்யப்போகிறது. எனவே, உங்கள் கருத்துக்களையும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்" என்று கலந்துரையாடலைத் துவங்கி வைக்கிறான்.

முதலில் கையை உயர்த்துகிறான், சேரமன்னன் மார்த்தாண்டன். அனைவரும் அவன்பக்கம் திரும்புகிறார்கள். "சோழர்களுடன் எங்களுக்கும் தீராத பகை, அமரபுஜங்கரே! குடமலை நாட்டு அரசரும், என்னை வயநாட்டின் அரசனாக நியமித்தவருமான பாஸ்கர ரவிவர்மரும்38 உங்களுக்குத் தன் ஆதரவை நல்கச்சொன்னார். அவரும் களரிச்சண்டை அறிந்த ஆயிரம் வீரர்களை சுருள்வாட்களுடன்39 அனுப்பிவைத்திருக்கிறார். அவர்கள் மட்டுமே சோழப்படைகள் பதினையாயிரம் பேர்களையும் அழித்துவிடுவார்கள். இராஜராஜனைக் கொன்று தஞ்சையை நமது வெற்றிவேள்விக்கு இரையாக்குவோம்!" சினம் ததும்புகிறது அவன் குரலில்.

———————————-

[37 கொல்லம் துறைமுகத்தைத் தலைநகராகக்கொண்ட தென்சேரநாட்டை, வயநாடு (கொல்லதேசம்) என்று குறிப்பிடுவார்கள்.

38 மகோதயபுரத்திலிருந்து (கொடுங்கல்லூர்) குடமலை நாட்டை (வடசேரநாடு) ஆட்சிசெய்த முதலாம் பாஸ்கர ரவிவர்மன், வயநாட்டு அரசனாக கோவர்த்தன மார்த்தாண்டனை நியமித்தான்.

39 சுருள் வாள் சாதாரண வாள்போல இல்லாமல் சுருண்டு இருக்கும். அதை வேகமாகச் சுற்றினால் கிட்டத்தட்ட பத்து அடி (3 மீட்டர்) தூரம்வரை இருப்பவர்களைத் தாக்க உதவும். இது எதிரிகளுக்கு நிறையச் சேதத்தை ஏற்படுத்தும்.]

அடுத்ததாக சிங்களப் படைத்தலைவன் பேசப்பேச மொழிபெயர்ப்பாளர் தமிழில் கூறி வருகிறார். "பாண்டிநாட்டுடன் பலநூறு ஆண்டுகளாக மணவினை கொண்டவர்கள், நாங்கள். இதுவரை நாங்கள் உங்களுக்கு எல்லாவிதத்திலும் தோள் கொடுத்துவந்திருக்கிறோம். எங்கள் நாடு பாதிக்குமேல் சோழர் காலடியில் மிதிபட்டு அல்லல் பட்டுக்கொண்டுவருகிறது. இராஜராஜன் தோற்று அழிந்தால் அங்குள்ள சோழப் படைகள் சின்னாபின்னமாகச் சிதறி ஓடிவிடும். எங்கள் சிங்களநாடு மன்னர் மகிந்தருகே மீண்டும் சொந்தமாகிவிடும். வெற்றியுடன் திரும்புவேன், இல்லை பாண்டியரின் இப்போரில் உயிர்துறப்பேன் என்று மகிந்தருக்கு வாக்குறுதி கொடுத்து வந்திருக்கிறேன்," என்று சிங்கமாக உறுமுகிறான்.

ஒருவர்பின் ஒருவராக தங்கள் சம்மதத்தைத் தெரிவித்து உற்சாகமாகப் பேசுகிறார்கள். மற்ற படைத்தலைவர்கள் அனைவரும் இராஜராஜனைப் போரில் கொன்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

பாண்டியனின் முதலமைச்சர் அமைதியாக இருக்கிறார். அவர் ஏதோ சொல்லவிரும்புகிறார் என்று அமரபுஜங்கனுக்குத் தோன்றுகிறது. அவர் வாயைத் திறக்காமல் இருப்பதைப் பார்த்தால், மற்றவர்களுக்குப் பிடிக்காத ஒன்றை அவர் சொல்லவிரும்புவதுபோலத் தோன்றுகிறது.

"அமைச்சரே, நீர் ஏன் அமைதியாக இருக்கிறீர்? பாண்டிநாட்டின் முதலமைச்சரான நீர் உமது மனதிற்குப் படுவதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லவேண்டும்!" என்று அவரைத் தூண்டுகிறான் அமரபுஜங்கன்.

தயக்கத்துடன் ஆரம்பிக்கிறார், முதலமைச்சர். "மன்னரே, பாண்டிநாட்டிற்கு உதவ வந்திருக்கும் பெருமக்களே! நான் சொல்லப்போவதைக் சினங்கொள்ளாமல் காதுகொடுத்துக் கேட்டுவிட்டு, அதில் இருக்கும் உண்மைகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன். இராஜராஜன் போரில் அழிந்துபோகவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். தஞ்சையை எரிக்கடவுளுக்கு அர்ப்பணமாக்கவேண்டும் என்பது என் காதிலும் இனிமையான இசையாகத்தான் ஒலிக்கிறது. "போரின் நோக்கம் நமது குறிக்கொளை அடைவதற்காகவே இருக்கவேண்டும். நமது தலையாய குறிக்கோள் நம் நாடுகளைச் சோழர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதே! பாண்டிநாடு தனித்து இயங்கினால் இலங்கைக்கும், சேரநாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும். கொற்கை, தொண்டித் துறைமுகங்கள் பாண்டிநாட்டின் கடல் வாணிபத்தைப் பெருக்கும். கொல்லம், முசிரித் துறைமுகங்கள் சேரநாட்டைச் செழிப்பாக்கும். வலிமையான பாண்டிநாடு இலங்கைக்கும், சேரநாட்டுக்கும் இன்றியமையாத தேவையாகும்.

''சிந்தித்துப் பாருங்கள்! இன்று நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு மிகவும் பொன்னான ஒன்று. இதை நன்கு பயன்படுத்தினால்தான் நாம் நமது குறிக்கொளை அடையமுடியும். அனைவரின் விருப்பப்படி இராஜராஜனைக் கொன்று, தஞ்சையைத் தீக்கிரையாக்கினால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? சோழநாடு பணிந்துவிடுமா?" சிறிதுநேரம் மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் நோக்குகிறார்.

"இராஜராஜன்தான் சோழநாடு! அவன் ஒழிந்தால் சோழநாடு ஏது?" என்று கேள்வி தொடுத்த சேரமன்னன் மார்த்தாண்டன், "இராஜராஜனைக் கொல்லக்கூடாது, தஞ்சையைத் தகர்க்கக்கூடாது என்பதுதான் தங்கள் விருப்பமோ? ஏன், மேளதாளம், பூரண கும்பத்துடன் இராஜராஜனை மதுரைக்கு வரவேற்கலாமா?" என்று எகத்தாளமும் செய்கிறான்.

மொழிபெயர்ப்பைக் கேட்டு சிங்களப் படைத்தலைவன் குழம்புவது நன்றாகவே தெரிகிறது. "முதலமைச்சரை முழுவதும் பேசவிடுங்கள்! மூன்று ஆண்டுகளாக இப்போர் நடக்க வேண்டும் என்று இடையறாது உழைப்பவர் அவர். அப்படியிருக்க, அவர் இராஜராஜனுக்கு அச்சப்படுகிறார் என்று கூறுவது தவறான முடிவாகும். அவர் சொல்வதை மறுத்துப் பேசச் சேரமானுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அவரை அவமதிப்பது என்னையே அவமதிப்பதாகும் என்பதைச் சேரமானின் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன். மாறுபட்ட கருத்துக்களை அறிந்துகொள்வோம். பின்னர் அதைப்பற்றி விவாதிப்போம்" என்று சேரனை மறைமுகமாக அடக்குகிறான் அமரபுஜங்கன்.

சேரனுக்கு அது பிடிக்காவிட்டாலும், பாண்டியன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து அமைதி கொள்கிறான்.

முதலமைச்சர் மீண்டும் தொடர்கிறார். "சேரமான் அவர்களின் மனம் தெள்ளத்தெளிவாக எனக்குப் புரிகிறது. இராஜராஜன்மீது உங்களுக்கு எவ்வளவு பகைமை இருக்கிறதோ, அதற்குக் குறையாத பகைமை என் உள்ளத்திலும் இருக்கிறது. ஆகவே, அதைப்பற்றி யாரும் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

"இராஜராஜனின் அண்மைக் காலத்திய வெற்றிக்கெல்லாம் அவன் மட்டும் காரணமல்ல. இளவரசன் இராஜேந்திரனே! இராஜேந்திரன் இல்லாதசமயம் அவன் தந்தையைக் கொன்று, தஞ்சையை அழித்தால் அவன் திரும்பி வரும்வரை நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், இராஜேந்திரனுடன் திரும்பும் சோழப்படைகள் அனைத்தும் மதுரையை நோக்கிப் பாய்ந்துவரும். அவர்களின் குறிக்கோள் நம்முடன் சேர்த்து மதுரையைத் தீக்கு இரையாக்குவதாகத்தான் இருக்கும். இராஜேந்திரன் போரில் யாருக்கும் கருணை காட்டமாட்டான் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருக்க, அவன் தந்தையைப் போரில் கொன்றோம் என்றால் இராஜேந்திரன் பழிவாங்கப் புறப்பட எத்தனை நாள்களாகும்? சிந்தித்துப் பாருங்கள்!"

அவரை இடைமறித்துப் பேசுகிறான், சிங்களப் படைத்தலைவன், "அமைச்சரே! உங்கள் பேச்சு என்னை மிகவும் குழப்புகிறது. இராஜேந்திரனுக்குப் பயந்தால் நாம் எதற்காகத்தான் படை திரட்ட வேண்டும்? அல்லது போர்செய்யத்தான் வேண்டும்? இப்போரின் குறிக்கோள்தான் என்ன?"

"தங்கள் கேள்வி மிகவும் நியாயமானதே! அதற்கு விளக்கம் சொல்லத்தான் நான் முயன்று கொண்டிருக்கிறேன். சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கவேண்டும் என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனினும் இந்தப் போரின் குறிக்கோள் இராஜராஜனைக் கொல்வதல்ல, அவனைச் சிறைப்பிடிப்பதே ஆகும்! மீண்டும் சொல்கிறேன், இப் போரின் குறிக்கோள் இராஜராஜனைச் சிறைப்பிடிப்பதுதான்!"

"அப்பொழுது மட்டும் இராஜேந்திரன் போருக்கு வரமாட்டானா? இராஜராஜன் போரில் இறந்தால் வீரசொர்க்கம் அடைந்தார் என்றாவது மனதைத் தேற்றிக்கொள்வான். சிறைப்பட்டால் அந்தக் களங்கத்தைத் துடைக்கப் பொங்கி எழமாட்டானா? இன்னும் வெறியுடனல்லவா மதுரையைத் தாக்குவான்!" இக்கேள்வியை அமரபுஜங்கனே எழுப்புகிறான்.

"இங்குதான், அரசே, நம்முடைய திட்டம் சிறந்து விளங்கப்போகிறது!" என்ற முதலமைச்சர், "இராஜேந்திரன் சினங்கொண்டு எழத்தான் எழுவான். ஆனால் அந்தச் சினம் கையாலாகாதவனின் சினமாகத்தான் இருக்கும். இராஜராஜன் நம்மிடம் பிணைக்கைதியாக இருக்கும்பொழுது அவனது சினம் என்ன செய்யும்? நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தித்தானே ஆக வேண்டும்?

"அவன் ஒழுங்காகப் பேச்சுவார்த்தை நடத்த வராவிட்டால், உங்கள் பாட்டனார் வீரபாண்டியருக்கு நேர்ந்த கதிதான் அவன் தகப்பனுக்கு நேரும் என அறிவிப்போம். அது மட்டுமல்லாது, இராஜராஜனைச் சங்கிலியில் பிணைத்து மதுரைக் கோட்டை மதிலில் பலரும் பார்த்து நகையாடுமாறு நிறுத்தி வைப்போம், தலையை மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றி மதுரை நகரை வலம்வரச் செய்வோம் என்று பறைசாற்றுவோம். பாண்டியநாடு, சேரநாடு, இலங்கை இவற்றிலிருந்து அவன் தனது படைகளைத் திரும்பப் பெறவேண்டும், அவனது மகளான அருள்மொழிநங்கையை உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும், நமது தமிழ் எழுத்துக்களை மாற்றும் திட்டத்தை அடியோடு கைவிடவேண்டும், என்று நிபந்தனைகள் விதிப்போம். இவற்றுக்குக் கட்டுப்பட்டு அவன் வணங்கும் சிவபெருமான் மீது ஆணையிடச் செய்வோம். இராஜராஜன் அவமானத்திலிருந்து மீட்கப்பட வேண்டுமென்று இவை எல்லாவற்றிற்கும் இராஜேந்திரன் ஒப்புக்கொள்வான், அரசே!" என்று தனது கருத்தை விவரிக்கிறார்.

மகுடியால் கட்டுண்ட நாகம் மாதிரி மண்டபமே அவரது பேச்சில் இருந்த ராஜ தந்திரத்திற்கு மயங்குகிறது.

"அருமையான ஆலோசனை, அருமையான ஆலோசனை!" என்று அனைவரும் தங்கள் பாராட்டை வெளிக்காட்டுகின்றனர். அனைவருக்கும் தலைசாய்த்து தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார் முதலமைச்சர்.

"அமைச்சரின் கருத்து எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அப்படியே செய்யலாம் என்று முடிவு எடுக்கிறோம். எனவே, இராஜராஜனைச் சிறைப்பிடிப்போம். நமது படைகளுக்கும் அவனைக் கொல்லாமல் உயிருடன் பிடிக்கவேண்டும் என்ற ஆணையை இடுவோம். இது அனைவருக்கும் சம்மதம்தானே?" என்று கேட்கிறான் அமரபுஜங்கன்.

"சம்மதம்! சம்மதம்!! சம்மதம்!!!" என்ற கோஷம் மண்டபத்தை அதிரச்செய்கிறது. இதற்கிடையில் பாண்டிய ஒற்றன் ஒருவன் திருமாறனை அணுகி ஏதோ அவன் காதில் சொல்கிறான். உடனே திருமாறனின் முகம் மாறுகிறது. குனிந்து அமரபுஜங்கனின் காதுகளில் ஒற்றன் கூறிய செய்தியை உரைக்கிறான். அமரபுஜங்கனின் முகம் மாறுகிறது.

"அமைதி, அமைதி, அமைதி!" என்று கையை உயர்த்துகிறான். அவனது முகமாறுதலைக் கண்ட அனைவரும் மகிழ்ச்சிக் கூச்சலை நிறுத்துகின்றனர்.

"இராஜராஜனின் படைகள் தொண்டித் துறைமுகத்தில் நாவாய்களில் வந்து இறங்கியிருக்கிறார்களாம். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர்கள் இருக்குமாம். நமது ஒற்று மூலம் செய்தி வந்திருக்கிறது" என்று கோபத்துடன் கூச்சலிடுகிறான் அமரபுஜங்கன்.

"யார் தலைமையில் அப்படை வந்திருக்கிறது?" என்று கேட்கிறான் சேரன் மார்த்தாண்டன்.

"தெரியவில்லை. அவர்கள் தொண்டியில் இறங்கியவுடனேயே, துறைமுகத்துக்குப் போக்குவரத்தை நிறுத்திவிட்டார்களாம். நமது ஒற்றன் யார் கண்ணிலும் படாமல் மறைந்து மதுரைக்கு வந்திருக்கிறான். சோழப்படை தொண்டியில்தான் தண்டூன்றி இருக்கிறதாம்."

"அவர்கள் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்? நமது படைக் குவிப்பைப் பற்றி அவர்களுக்குத் தெரியுமா? மெத்தம் பதினையாயிரம்பேர்களே இராஜராஜனிடம் இருக்கும்பொழுது பத்தாயிரம் பேரை எதற்காகத் தொண்டிக்கு அனுப்பியிருக்கிறான்?" என்ற கேள்வி பிறக்கிறது.

சிறிதுநேரம் யோசித்த முதலமைச்சர் கடகடவென்று சிரிக்கிறார். அதைக் கேட்ட அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை.

"இராஜராஜனுக்கு தன்னம்பிக்கை, அதுவும் அசட்டுத் தன்னம்பிக்கை அதிகமாகிவிட்டது, அரசே!" முதலமைச்சர் தொடருகிறார்.

"தனது கடற்படைகள் எதையோ தொண்டிக்குக் கொண்டுவரப் போவதை எதிர்பார்த்து அவன் இப்படைகளை அனுப்பியிருக்கிறான். அவனிடம் குதிரைகள் குறைந்திருக்கின்றனவோ என்னவோ, அதனால் அராபியர்களின் கப்பல்களில் குதிரைகள் வருகின்றனவோ என்னவோ?" அவர் குரலில் விஷமம் தொனிக்கிறது.

"அமைச்சரே! உமக்கு ஏதாவது தெரியுமா?" என்று வினவுகிறான் அமரபுஜங்கன்.

"அரசே! நான்தான் பாண்டியர்களுக்காக பத்தாயிரம் குதிரைகள் அராபியக் கப்பல்கள் மூலம் தொண்டிக்கு வந்துகொண்டிருப்பதாகச் சோழர்களுக்குத் தவறான செய்தியை அனுப்பினேன். அதை உண்மையென நினைத்து அக்குதிரைகளைக் கைப்பற்றவே இராஜராஜன் தனது வீரர்களை அனுப்பியிருக்கிறான் போலும்!" என்று தனது திட்டம் பயனளித்திருப்பதைத் தெரிவிக்கிறார் முதலமைச்சர்.

"அமைச்சரே! நீர் ராஜதந்திரத்தில் சாணக்கியனையும் மிஞ்சிவிட்டீர்!" என்று பாராட்டிய அமரபுஜங்கன், "இனி நமக்குத் தடையென்ன இருக்கிறது? தஞ்சையை நோக்கிப் படைகளை நடத்துவோம். அதிரடித் தாக்குதல் நடத்தினால்தான் தஞ்சை விழும்!" என்று வீராவேசமாக முழங்குகிறான்.

"அப்படியே! அப்படியே!!" என்ற கூச்சல் அரசவையை அதிர வைக்கிறது.

* * *

குந்தவியின் அந்தப்புரம், வெங்கி, வேங்கைநாடு

பரிதாபி, ஆனி 3 – பொது ஆண்டு 1012

நிலவுமொழியை வைத்தகண் வாங்காமல் மறைந்திருந்து பார்க்கிறான், இராஜராஜ நரேந்திரன். கருமைக்கும் இத்தனை கவர்ச்சி உண்டா என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறான். அவனது தாய் குந்தவியின் பணிப்பெண்கள் எண்மருக்கு நிலவுமொழி தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் அரண்மனைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதற்குள்ளாகவே குந்தவியின் பணிப்பெண்கள் ஐவருக்குத் தமிழ் பேசக் கற்றுக்கொடுத்துவிட்டாள். தெலுங்கு தெரியாமலே எப்படி அவளால் தமிழ் கற்றுக்கொடுக்க முடிகிறது என்பது அவனுக்கு வியப்பாகவே இருக்கிறது.

அவள் தமிழ் கற்றுக்கொடுக்கும் முறையும் புதுவிதமாகத்தான் இருக்கிறது. காலையானால் திருப்பள்ளியெழுச்சி, மதியமானால் சிவபுராணம், மாலையானால் தேவாரம் என்று பணிப்பெண்கள் தமிழில் ஓதுவது தினந்தோறும் நடப்பதால், அவள் வந்ததிலிருந்து குந்தவி கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள் என்பதும் அவனுக்குப் புரிகிறது.

அவளுடன் பேசவேண்டும் என்று சிலசமயம் அவனுக்குத் தோன்றும். ஆனாலும் ஏதோ ஒன்று அவனைத் தடுத்துவருகிறது. அவன் வந்தாலே அவள் எழுந்து வணங்கிவிட்டு, அவன் கண்ணைவிட்டு மறைந்து போய்விடுகிறாள். இருந்தாலும் எங்கோ மறைந்திருந்து தன்னைக் கவனித்துக்கொண்டு இருக்கிறாள் என்று அவனுக்கு ஏதோ உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. அவளும், தனது மாமனான இராஜேந்திரனின் மகளான அம்மங்கையும் இணைபிரியாத தோழியர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. அம்மங்கை திரும்பிச் செல்லும்பொழுது அவளும் திரும்பிச் சென்றுவிடுவாளோ என்று நினைத்தால் அவனுக்கு ஏதோ ஒன்றை இழப்பதுபோலத் தோன்றும். அவள்மீது தனக்கு ஏன் இந்த ஈர்ப்பு என்று தன்னையே கேட்டுக்கொள்கிறாள். அவள்மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதுபோல அவளுக்கும் தன்மீது ஈர்ப்பு இருக்குமா என்று அறிந்துகொள்ள அவனுக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. அதேசமயம், அவள் அரசகுலத்தவள் அல்ல, பணிப்பெண்தான், அவள்மீது இப்படி ஒரு ஆசை தனக்கு இருக்கக்கூடாது என்றும் தோன்றுகிறது. இது பருவக் கோளாறா அல்லது உண்மையான ஈர்ப்பா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

இது தந்தையிடமோ, தாயிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய ஒன்றா? தம்பி விஜயாதித்தனிடம் அவனுக்கு அதிகப் பழக்கம் இல்லை. அவன் வேறு அரண்மனையில்தான் இருக்கிறான். யாரிடம் கேட்பது? அவனது தோளில் பலமாக ஒரு தட்டு விழுகிறது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறான் நரேந்திரன். அவனது மாமன் இராஜேந்திரன்தான் அது.

அட்டகாசமாகச் சிரித்தபடி, "நரேந்திரா! என்ன இது, ஒற்றன் மாதிரி மறைந்து என் தங்கையின் அந்தப்புரத்தை வேவு பார்க்கிறாய்!" என்று அவனை நகையாடுகிறான் இராஜேந்திரன்.

"ஒத்தன்டி மாமாகாரு" என்று ஆரம்பித்த நரேந்திரன், நாக்கைக் கடித்துக்கொள்கிறான். "ஒன்னும் லேது, சும்மாத்தான் அம்மாவைப் பாக்க ஒஸ்தேன்" என்று தெலுங்கு கலந்த தமிழில் பதில் சொல்கிறான்.

தான் தமிழ் பேசும் முறை இராஜேந்திரனுக்குப் பிடிக்கவில்லை என்பதை மாமனின் முகத்தைப் பார்த்தே அறிந்துகொள்கிறான். மாமனின் தயவு கடைசிவரை தங்களுக்குத் தேவை என்பதை உணர்ந்தவன்தான் அவன்.

"நரேந்திரா! நீ தெலுங்கு பேசத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்! ஏனேன்றால் நீ தெலுங்கு பேசும் வேங்கை நாட்டை ஆளப் போகிறாய்! ஆனால் உன் தாயின் மொழி தமிழ். அதையும் நீ நன்கு கற்க வேண்டும்! அப்பொழுதுதான் சோழநாடு உன்னை ஏற்றுக்கொள்ளும். அதை மறந்துவிடாதே! நீ சாளுக்கியன் மட்டுமல்ல, சோழனும்கூட!" என்றவன், "'மாமனே, எனக்கு அறிவுரை கூறும் நீ ஏன் தெலுங்கைக் கற்றுக் கொள்ளவில்லை?' என்று கேட்க நினைத்தாலும் நினைப்பாய்! நான் சோழச் சக்கரவர்த்தியின் மகன், நாளை சோழசாம்ராஜ்யத்தை ஆளப் போகிறவன். நான் பேசும் மொழியைத்தான் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! ஹ, ஹ, ஹ!" என்று உரக்கச் சிரிக்கிறான்.

நரேந்திரனுக்கு அது புலி உறுமுவதுபோல இருந்தது. மாமன் சொல்வதுபற்றித் தந்தை விமலாதித்தனிடம் விவரமாகக் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறான். நரேந்திரனின் தோள்மேல் கையைப் போட்டுத் தரதரவென்று இழுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான் இராஜேந்திரன்.

அவர்கள் இருவரையும் கண்டதும், நிலவுமொழியிடம் தமிழ் பயின்றுகொண்டிருந்த பணிப்பெண்கள் எழுந்து, இருவரையும் வணங்கிவிட்டு, அவர்கள் வந்ததைக் குந்தவிக்குச் சொல்ல விழைகிறார்கள்.

"பெண்ணே நிலவுமொழி, கொஞ்சம் நில்லம்மா!" என்று அவளைத் தடுத்து நிறுத்துகிறான், இராஜேந்திரன்.

தலையைக் குனிந்து அவனை வணங்கி நிற்கிறாள் நிலவுமொழி. இராஜேந்திரனைக் கண்டால் இன்னமும் அவளுக்குக் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது. அவனது பெரிய மீசையும், கணீர் என்ற குரலும், உருட்டி விழிக்கும் பெரிய கரிய விழிகளும் மன்னர்களையே நடுங்க வைக்கும்பொழுது, அவள் அச்சமடைவதில் வியப்பில்லைதான்!

"உத்தரவு, அரசே! ஆணையிடுங்கள்!"

"என்னம்மா இது? எப்பொழுது பார்த்தாலும் என்னைச் சிம்மாசனத்தில் அமர்த்தி வைக்கிறாய்! நான் உன் தகப்பன் போல என்று எத்தனை தடவை சொல்வது? மங்கை என்னிடம் நடந்துகொள்வதுபோல நடந்துகொள் புரிகிறதா?" இராஜேந்திரன் கனிவாக அவளிடம் சொல்வதுகூட ஆணையிடுவதுபோலத்தான் அவளுக்குத் தோன்றுகிறது.

"அப்படியே, அரசே!" குரல் நடுங்குகிறது நிலவுமொழிக்கு.

அவள் அருகில் சென்று அன்புடன் அவள் தலையை வருடுகிறான் இராஜேந்திரன். "நீ இவனுக்கும் தமிழ் பேசக் கற்றுக்கொடுக்கவேண்டும்" என்று நரேந்திரனைச் சுட்டிக்காட்டுகிறான்.

நரேந்திரனுக்கு ஒருகணம் இதயம் நின்றுவிட்டுத் துடிக்கிறது. அவளுடன் பேசவேண்டும் என்று விரும்பியவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பைத் தன் மாமனே வழங்குகிறானா? அவனால் நம்பவே முடியவில்லை.

"இந்தப் பேதைப் பெண்ணிடம் நகைச்சுவை செய்கிறீர்களா, அரசே? இளவரசருக்கு நான் ஆசிரியை ஆக முடியுமா! அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?" மெல்லிய குரலில் கேட்கிறாள் நிலவுமொழி.

"குந்தவி தேவி உன்னுடைய தகுதியை மெச்சாத நாளே கிடையாது. நான்கே திங்களில் ஐந்து பணிப்பெண்களுக்குத் தமிழ் நன்றாகப் பேசக் கற்றுக் கொடுத்துவிட்டாயாமே! இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்! ஆனால் இவனைத் தமிழ் பேசவைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. உன் திறமைக்குச் சவாலாக அமைவான்!" சிரித்துக் கொண்டே நடக்கிறான், இராஜேந்திரன்.

இருவரும் அவனைப் பின்தொடர்கிறார்கள்.

அவன் உண்மையிலேயே தனக்கு ஆணையிடுகிறானா அல்லது கிண்டல் செய்கிறானா என்று புரியாமல் குழம்புகிறாள், நிலவுமொழி. அப்படியே அவன் ஆணையே இட்டாலும் அதை எப்படித் தன்னால் நிறைவேற்ற இயலும்? வேங்கை நாட்டு இளவரசன் தன்னிடம் அமர்ந்து பாடம் கற்றுக்கொள்வானா?

அண்ணனை அன்புடன் வரவேற்கிறாள், குந்தவி. நான்கு மாதங்கள்தான் எவ்வளவு விரைவாகக் கழிந்துவிட்டன! விமலாதித்தன் அரியணை ஏறி, ஒரு மாதம் கழித்து திறை வாங்கி வருவதற்காகச் சென்ற இராஜேந்திரன் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் கழித்துதான் திரும்பி வந்தான். இப்பொழுதும் ஒரு திங்கள் கடலில் எங்கோ சென்றுவிட்டுத்தான் வருகிறான். சிலசமயம் விவரமாகச் சொல்வான், மற்ற சமயம் அரசு விஷயம் உனக்கு எதற்கு என்று தட்டிக் கழித்து விடுவான்.

விமலாதித்தனிடம்கூட சோழநாட்டு அரசு விஷயங்களை அவ்வளவாகப் பேச மாட்டான் என்பது குந்தவிக்கு நன்றாகவே தெரியும். அவனது பல நடவடிக்கைகள் புரியாத புதிர்களாகத்தான் அவளுக்கு இருந்துவருகின்றன. இருந்தாலும் ஏதோ முக்கியமான அலுவலுக்காகத்தான் இராஜேந்திரன் இத்தனை நாள்கள் வேங்கைநாட்டில் தங்கி வருகிறான் என்று மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிகிறது.

பணிப்பெண்கள், பழச்சாறும், தின்பண்டங்களும் கொண்டுவந்து வைத்துவிட்டு, அருகில் நின்று சாமரம் வீசுகிறார்கள். தந்தை வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் நந்தவனத்தில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்த அம்மங்கை ஓடிவருகிறாள்.

"அண்ணா, அண்ணியாரை ஏன் அழைத்து வரவில்லை?" என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறாள் குந்தவி.

"அம்மங்கையை அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் நானே இங்கு வந்திருக்கிறேன் குந்தவி. தஞ்சைக்குத் திரும்ப ஆயத்தங்கள் செய்யவேண்டும். தந்தையாரைத் தனியாக விட்டு வந்திருக்கிறேன். பாண்டியர்களும், சேரர்களும் ஏதாவது தொல்லை தராமல் இருக்க வேண்டும்!" என்று இலேசான மனக்கவலையுடன் பதில் சொல்கிறான் இராஜேந்திரன். தங்கையிடம் சிலசமயம் தன் மனக் கவலைகளைப் பகிர்ந்துகொள்வான்.

"அண்ணா, தந்தையார் புலிக்கு நிகரானவர். அவரைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்?" என்று வினவுகிறாள் குந்தவி.

"அது எனக்கு நன்றாகத் தெரியும் குந்தவி. இப்பொழுது அவர் புலியாக இல்லாமல் கிளியாக மாறிக்கொண்டிருக்கிறார்."

"கிளியா? புரியும்படி சொல், அண்ணா." என்று ஆர்வத்துடன் கேட்கிறாள் குந்தவி.

"போர்ப்பணியை விட்டுவிட்டு தமிழ்த்திருப்பணி என்று ஒன்று ஆரம்பித்திருக்கிறார். சோழப்பேரரசு மட்டுமல்லாது இப்பாரதம் முழுவதும் தமிழைப் பரப்ப வேண்டுமாம். அதற்காக திருப்பணி ஆலோசகராக ஒரு சிவாச்சாரியாரை வேறு நியமித்திருக்கிறார். கருவூர்த்தேவர் அதற்காக ஒரு பெரிய திட்டமே தீட்டிக்கொடுத்திருக்கிறார். அதனால்தான் இந்த நிலவுமொழியை தமிழ் பரப்ப வேண்டி சிவாச்சாரியார் இங்கு அனுப்பியிருக்கிறார்" என்று விவரமாக விளக்குகிறான்.

அதைக் கேட்ட குந்தவியின் முகம் மலர்ந்து கண்களில் நீர்முத்துகள் கோர்க்கின்றன. "அண்ணா, நீ சொல்வது என் காதில் இன்பத்தேனைப் பாய்ச்சுகிறது. தெலுங்கே தெரியாத நிலவுமொழி, தெலுங்கைத் தவிர வேறு எதுவும் தெரியாத இந்தப் பெண்களுக்கு தமிழ் பேச எப்படிக் கற்றுக்கொடுத்திருக்கிறாள், தெரியுமா! இவளைத் தேர்ந்தெடுத்த சிவாச்சாரியார் ஒரு சிறந்த தமிழ் அறிஞராகத்தான் இருக்கமுடியும். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தத் தமிழ்த் திருப்பணியை மேற்கொண்ட தந்தையாரின் முயற்சி வெற்றிபெறத் தஞ்சைப் பெருவுடையாரையும், தில்லையில் ஆடும் கூத்தபிரானையும் ஏத்துகிறேன்! மேலும் சொல், அண்ணா! இந்தப் பெண்ணையே நரேந்திரனுக்கு தமிழ்ப்பேச்சு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துவிடுவோமா?"

தொடர்ந்து பேசும் குந்தவியின் உற்சாகத்தைப் பார்த்த இராஜேந்திரன் அசந்துபோகிறான்.

"அம்மா, நேனு தமிலு மாட்லாட கத்துக்க ஒஸ்தானு!" என்று கூறுகிறான் நரேந்திரன்.

சட்டென்று குந்தவி திரும்பிப்பார்க்கிறாள்.

இவனுக்கு தமிழ் பேசத் திடுமென்று உற்சாகம் எப்படிப் பிறந்தது?

"நான்தான் இவனைத் தமிழ் பேச கற்றுக்கொள்ளச் சொன்னேன் குந்தவி, அதுவும் இந்தப் பெண்ணிடம் கற்றுக்கொள் என்று சொன்னேன். பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும்தான்! அது உடனே இவன் மனதில் பதிந்தது எனக்கு மகிழ்ச்சிதான்" என்று சிரிக்கிறான் இராஜேந்திரன்.

"இன்று நான் நரி முகத்தில்தான் விழித்திருக்கிறேன், அண்ணா! நல்ல செய்திக்குமேல் நல்ல சேதியாகச் சொல்லிக்கொண்டே போகிறாய்! நரேந்திரனைப் பெற்றபோது பெற்ற மகிழ்ச்சியைவிட, தமிழ் பேசக் கற்றுக்கொள்ள விரும்புகிறான் அவன் என்று இப்பொழுது சொன்ன இந்தச் சொற்கள்தான் எனக்கு பலமடங்கு மகிழ்ச்சியைத் தருகின்றன" குந்தவியின் குரல் கம்முகிறது.

நரேந்திரன் பக்கம் திரும்பி, "நரேந்திரா! உண்மையிலேயே நீ தமிழ் பேசக் கற்றுக்கொண்டால் நான் மிகவும் பெருமைப்படுவேனடா, கண்ணே! உடனே தலைசிறந்த தமிழ் ஆசிரியரை அனுப்பும்படி உனது பாட்டனாருக்கு ஓலை அனுப்புகிறேனடா!" என்று பெருமிதம் தொனிக்கும் குரலில் கூறுகிறாள்.

"ஒத்து… வேணாம் அம்மா. ஈ அம்மாயி…" என்று நிலவுமொழியைச் சுட்டிக்காட்டுகிறான். "ஈ அம்மாயி சாலு, அம்மா" என்று அசட்டுச் சிரிப்பு சிரிக்கிறான். "ஈ அம்மாயி சால தமிலு மாட்லாட கத்து சேஸுவாரு." என்று கூறிக் குழறுகிறான்.

அவனைப் பொருள்செறிந்த பார்வையுடன் நோக்குகிறான் இராஜேந்திரன். "நரேந்திரா, நீ எதை நினைத்து இவள் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாயோ தெரியாது. நீ எப்படியாவது தமிழ்பேசக் கற்றுக் கொண்டால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்" என்று சிரித்தபடி அவன் முதுகில் ஓங்கித் தட்டிய இராஜேந்திரன், "நிலவுமொழி, இவனுக்கு நீ தமிழ் பேசக் கற்றுக்கொடு. இவனுக்கு தமிழ் பேச மட்டுமே கற்றுக்கொடு!" என்று "மட்டுமே" என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறான்.

புரிந்தது என்ற மாதிரி இராஜேந்திரனின் கண்களில் தன் கண்பார்வையை ஒருகணம் நிறுத்தித் தலையை ஆட்டுகிறாள் நிலவுமொழி. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த குறியீட்டு உத்தரவையும், அதற்கு நிலவுமொழி சம்மதம் தெரிவித்ததையும் யாரும் புரிந்துகொள்ளவில்லை.

"நரேந்திரா! ஒரு வேலை செய்கிறேன் என்று எம்மிடம் ஒப்புக்கொண்டால் அதைச் செய்து முடித்தால்தான் எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் அதைப் புரிந்துகொள்!" என்று இராஜேந்திரன் சிரித்துக்கொண்டே சொன்னாலும், நரேந்திரனின் அடிவயிறு கலங்குகிறது.

'என்னிடம்' என்று சொல்லாமல், 'எம்மிடம்' என்று பன்மையில் பேசுவதால் இராஜேந்திரன் தனக்கு உத்தரவிடுகிறான் என்று தெளிவாகப் புரிந்துகொள்கிறான் நரேந்திரன். தான் நன்றாகத் தமிழ்பேசக் கற்றுக்கொள்ளாவிட்டால் இராஜேந்திரனது கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற அறிவிப்புப் பிறந்ததாகவே தெரிகிறது.

ஒரு பெண்ணிடம் பேசுவதற்காக இப்படித் தமிழ்பேசக் கற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொன்னதே கொஞ்சம் அவசரத்தனமோ என்றும் தோன்றுகிறது. தனது தாயான குந்தவியை ஏமாற்றுவதுபோல இராஜேந்திரனை ஏமாற்றமுடியாது என்பதைத் தன் தந்தை விமலாதித்தன் இராஜேந்திரனிடம் குழைவதைப் பார்த்துத் தெரிந்துகொண்டிருக்கிறான். அவர்கள் மேற்கொண்டு பேச ஆரம்பிப்பதற்குள் திரிபுவனமாதேவி அங்கு வேகமாக வருகிறாள்.

அவளைக் கண்டதும் எழுந்து அன்புடன் வரவேற்கிறாள் குந்தவி. ஆனால் திரிபுவனமாதேவியின் முகத்தில் பதற்றம் இருக்கிறது. "அரசே! இந்த ஓலையைப் படியுங்கள். முக்கியமான செய்தி, தங்களிடம் இதை உடனே சேர்ப்பிக்க வேண்டும் என்று நமது ஓலைதாங்கி நாம் தங்கியிருக்கும் விடுதிக்கு உங்களைத் தேடி வந்தான். நான்தான் அவனை என்னுடன் அழைத்துக்கொண்டு வந்தேன். அந்தப்புரத்திற்குள் அவன் நுழையக்கூடாதே என்றுதான் நானே ஓலையைக் கையில் வாங்கி வந்தேன்!" என்று சிவப்புத்துணியில் சுற்றப்பட்டிருந்த ஓலையை இராஜேந்திரனிடம் கொடுக்கிறாள்.

சிவப்புத் துணி என்றால் என்ன என்று இராஜேந்திரனுக்குத் தெரியுமாதலால் உடனே தனியிடத்திற்குச் சென்று அதைப் படிக்கிறான். குறியீட்டுச் சொல்லில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களைப் படித்ததும் அவன் முகம் சிவக்கிறது. ஒன்றுமே பேசாமல் திரும்பி வருகிறான்.

"குந்தவி. அவசரமான வேலை வந்துவிட்டது. நான் உடனே என் விடுதிக்குச் செல்லவேண்டும். மகாராணி, இருந்து குந்தவியிடம் பேசிவிட்டு, ஒரு நாழிகையில் விடுதிக்கு மங்கையுடன் திரும்பி வா!" என்று விடுவிடுவென்று நடந்துசெல்கிறான் இராஜேந்திரன். அனைவரும் திகைத்து நிற்கிறார்கள்.

ஓலையில் என்ன செய்தி வந்திருக்கிறது என்பதுதான் எல்லோரின் மனதிலும் ஓங்கி எழுகிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com