பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 9

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 9

ஒரு அரிசோனன்

பொன்னமராவதி அரண்மனை

பரிதாபி, ஆனி 18 – ஜூலை 3, 1012

மாரச் சத்தம் தொலைவில் கேட்கிறது. பாண்டியப் படைத்தலைவர்கள் படைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த டமார ஒலி அமரபுஜங்கனுக்கு உணர்த்துகிறது. அவனது உடல் பொன்னமராவதி அரண்மனையில் இருந்தாலும், உள்ளம் அன்று காலையில் பரிதாபமாக மடிந்த படை வீரர்களையே சுற்றிச் சுற்றி வருகிறது. காலடிச் சத்தம் கேட்டுத் தலையைத் திருப்பிப் பார்க்கிறான். திருமாறன் வந்து வணங்கி நிற்கிறான். என்ன என்பது போல புருவங்களை உயர்த்துகிறான் அமரபுஜங்கன். 

"அரசே! தாங்கள் விரும்பியபடி சேர மன்னர், படைத்தளபதி, பிரிவுப் படைத்தலைவர்கள் ஆகியோரை அழைத்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவார்கள். தாங்கள் காலையிலிருந்து உணவே உண்ணவில்லை. சாப்பிடுவதற்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். சிறிதாவது உண்டால்தான் உங்கள் உடம்பில் தெம்பு பிறக்கும்" என்று பரிவுடன் கூறுகிறான் திருமாறன். அவன் முகத்தில் இருக்கும் ஆதங்கம் மங்கிய தீவட்டி வெளிச்சத்திலும் அமரபுஜங்கனுக்குப் புலனாகிறது. 

"ம்… உணவு ஒன்றுதான் குறைச்சல்! களத்தில் தேவையில்லாமல் வீழ்ந்து உயிரை விட்டார்களே, அந்தப் பாண்டி நாட்டு வீரர்களுக்கு இனி பசி எடுக்கவா போகிறது? எவ்வளவு உண்டாலும் நிறைவில்லாமலேயே இருப்பானே, அந்த ஈழப்படைத்தலைவன் – அவன் இனி மேல் உண்ண உட்காரவா போகிறான்? நான் மட்டும் வயிறு புடைக்கத் தின்று என்ன செய்ய வேண்டும் திருமாறா?" என்று இறைகிறான் அமரபுஜங்கன். 

"அரசே! போர் என்றால் பல்லாயிரக்கணக்கானோர் மடிவர் என்பது உலகறிந்த உண்மையில்லையா! இது தங்களுக்குத் தெரியாத ஒன்றா? நம்முடன் தோள்கொடுத்துப் போர் புரிந்து மாண்டவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி, அவர்களுக்காகப் பழிவாங்குவதுதானே! அதற்காகவாவது தாங்கள் உணவு உண்ணத்தானே வேண்டும்! அரசராகிய தாங்கள் நன்றாக இருந்தால்தானே குடிகளாகிய நாங்கள் உற்சாகமாக இருப்போம்! தாங்கள் நலிந்தால் நாடு நலிந்துவிடாதா?" என்று அவனைச் சமாதானப்படுத்தி உணவைப் பரிமாறுகிறான் திருமாறன்.

தனது பெரிய மீசையை ஒதுக்கிவிட்டபடியே சாப்பிடுகிறான் அமரபுஜங்கன். "திருமாறா! உனது தம்பி முருகேசன் தன் குடும்பத்துடன் ரோகணத்தில் இருக்கிறான். இளவரசன் விக்கிரமனுக்குத் துணையாக இருப்பது யார்!" 

"அரசே! எனக்கடுத்த தம்பி வெற்றிவீரனும் என் மூத்தமகன் காளையப்பனும்தான் இளவரசருடன் இருக்கிறார்கள். வெற்றிவீரன் இளவரசுக்கு வாட்போர் பயிற்சி செய்வித்திருக்கிறான். காளையப்பன் மல்யுத்தப் பயிற்சி தருகிறான். இளவரசர் இக்கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்றுவருவதாக இருவரும் எனக்கு அவ்வப்போது செய்தி அனுப்பியிருக்கிறார்கள்." 

"நன்று. மிக்க நன்று! விக்கிரமனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மதுரையில் இருக்கும் அவனுக்குத் துணையாக எத்தனை படை வீரர்கள் இருக்கிறார்கள்?" என்று வினவுகிறான் அமரபுஜங்கன். 

"மதுரைக் கோட்டைக்குள் மொத்தம் ஐயாயிரம்பேர் இருக்கிறார்கள் அரசே!" 

அமரபுஜங்கன் சாப்பிட்டு முடிப்பதற்கும், சேரமன்னன் கோவர்த்தன மார்த்தாண்டன் தன் பரிவாரங்கள் புடைசூழவும், அமரபுஜங்கனின் படைத்தலைவர் மற்றும் குதிரைப்படை, வில்லாளர்கள் தலைவரும் உள்ளே வருவதற்கும் சரியாக இருக்கிறது. அவர்களை இருக்கையில் அமரும்படி கைகாட்டுகிறான் அமரபுஜங்கன். திருமாறன் அவன் பின்னால் நின்றுகொள்கிறான்.

"போரே புரியாமல் இத்தனை வீரர்களை அநியாயமாக இழந்துவிட்டோம்! மாண்டவர்களுக்கு மேலே காயம்மடைந்தவர் பலமடங்கு அதிகம். மேலும் நமக்குத் தோள்கொடுக்க வந்த சிங்களப் படைத்தலைவரோடு சிங்களப் படைகள் கிட்டத்தட்ட மொத்தமும் அழிந்து போய்விட்டன!" என்று படைக் கணக்காளர் தெரிவிக்கிறார். 

"இப்பொழுது போரிடும் நிலையில் எத்தனை வீரர்கள் உள்ளார்கள்? யானைகள், குதிரைகள் எத்தனை உள்ளன?" கேள்வி பிறக்கிறது அமரபுஜங்கனிடமிருந்து. 

"இருபதாயிரம் வீரர்கள் தேறலாம். இங்கு வந்த முப்பத்தைந்தாயிரம் பேரில், ஆறாயிரம் பேர் வீரசொர்க்கம் அடைந்தனர். ஒன்பதாயிரம் பேர் படுகாயம் அடைந்ததால் அவர்கள் போரிடும் நிலையில் இல்லை. மேலும் குதிரைப்படைக்குச் சேதம் அதிகம். கால் உடைந்த குதிரைகள் பாதிக்கு மேல் இருக்கும். அவை பிழைப்பது கடினம். யானைப் படைகளுக்கு அதிகச் சேதம் இல்லை. வழுக்கி விழுந்ததால் பத்து யானைகள் காலுடைந்து கிடக்கின்றன. அவற்றின் பிளிறல்தான் யுத்த களத்தை உலுக்குகிறது" உற்சாகமில்லாமல் பதில் வருகிறது. 

"எப்படி இத்தனை பேர் இறந்தார்கள்? இத்தனை பேருக்குப் படுகாயம் எப்படி ஏற்பட்டது? பாதி குதிரைப்படை அழிக்கப்பட்டதா? இத்தனைக்கும் எதிரிகள் வெள்ளாற்றைத் தாண்டிக்கூட வரவில்லையே தளபதியாரே! அவர்கள் எறிந்த கற்களா இவ்வளவு சேதத்தை விளைவித்தன?" நம்பிக்கையின்மை அமரபுஜங்கனின் குரலில் நன்றாகவே தெரிகிறது. 

"கவண் கற்களால் தலை உடைந்து இறந்தவர்கள் ஆயிரம் பேர்கள்கூட இருக்கமாட்டார்கள், அரசே! அந்தக் குழப்பத்தினால் தாறுமாறாக நமது படைவீரர்கள் ஓடினர். மழைபெய்து நிலப்பகுதி வழுக்கலாக இருந்ததால் சறுக்கிவிழுந்தவர் ஆயிரக்கணக்காணோர். இவர்கள் மீது ஏறி மிதித்துக்கொண்டு பலர் ஓடியதால், விழுந்தவர்களுக்குப் படுகாயமோ, மரணமோ ஏற்பட்டது. அடிப்பட்ட குதிரைகளும், யானைகளும் தறிகெட்டு ஓடியதால் ஏற்பட்ட சேதமும் மிக மிக அதிகம். நமது யானைகளாலும் குதிரைகளாலும், இன்னும் ஆங்காங்கு ஓடிய பாம்புகள் கடித்ததாலும் கிட்டத்தட்ட இன்னும் இரண்டாயிரம் வீரர்கள் மரணத்தைத் தழுவினர். இதுதவிர, சிங்களப்படைகளில் வெள்ளாற்றைக் கடக்க முயற்சிசெய்த நாலாயிரம் பேரில் இரண்டாயிரம் பேர் திரும்பி வரவில்லை. ஆயிரம் பேர் வெள்ளாற்றில் பிணமாக மிதந்தனர். கை, கால் உடைந்தவர்கள், தலையில் அடிபட்டு இன்னும் உயிரோடு, ஆனால் போரிட இயலாது இருப்பவர்கள், என்று நமது படைவீரர்களும், மிகுந்த சிங்கள வீரர்களுமாக ஒன்பதாயிரம் பேர் செயலிழந்து போயிருக்கிறார்கள். சேதம் விளைவித்துத் தாறுமாறாக ஓடிய குதிரைகள் அனைத்தும் கால்கள் உடைந்து கிடக்கின்றன. அவற்றின் கதி அதோகதிதான்! இதை நினைக்க நினைக்க என் நெஞ்சம் கொதிக்கிறது, அரசே!" உள்ளம் உருக, இறந்த, காயமடைந்த வீரர்களிடம் அனுதாபத்துடன் அமரபுஜங்கனுக்குப் பதில் சொன்ன பாண்டியப் படைத் தலைவர், "இதில் ஒரே ஒரு நல்ல செய்தி என்னவென்றால் தங்களைத் திருமாறன் சரியான நேரத்தில் முன்னிலையிலிருந்து அகற்றிப் பொன்னமராவதிக்கு அழைத்து வந்ததுதான்!" என்று முடிக்கிறார். 

அவரிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு கிளம்புகிறது. 

சிறிது நேரம் சிந்தித்த அமரபுஜங்கன், "வெள்ளாற்றைத் தாண்டிச் சோழப்படை வந்ததா? நாகையில் தரையிறங்கிய சோழக் கடற்படை வீரர்கள் தஞ்சையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர் என்பதைத் தவிர நமது ஒற்றர்களிடமிருந்து வேறு ஏதாவது போர்த் தகவல் வந்ததா?" என்று மீசையை நீவியவாறு கேட்கிறான். 

"வெள்ளாற்றிலிருந்து நல்லூர் வரை இரண்டு கல் நீளம், இரண்டு கல் அகலத்திற்கு பிணக்காடாக இருக்கிறது, அரசே! கதிர் சாயும்வரை நமது வீரர்களின் உடல்களைத் தாண்டி யாரும் வரவில்லை. தொண்டியிலிருந்த சோழர்படை அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாம். பாதி மதுரைக்குச் செல்வதாகவும், பாதி தஞ்சைக்குத் திரும்புவதாகவும் பேசிக்கொண்டார்களாம். ஆனால்…" இழுக்கிறார் படைத்தலைவர். 

"என்ன ஆனால்?" 

"அதுதான் நமக்குக் கடைசியாகக் கிடைத்த செய்தி அரசே! சோழப்படையின் அணிவகுப்பைப் பற்றியும், அவர்கள் படை முன்னேற்றத்தையும் அறிந்து வரவும் சென்ற ஒற்றர்கள் யாரும் திரும்பவில்லை. மேலும், வெள்ளாற்றைக் கடந்துசென்று இராஜராஜர் இருக்குமிடத்தை அறிந்து வரச்சென்ற ஒற்றர்களும் திரும்பவில்லை" ஏமாற்றம் ஒலித்தது படைத்தலைவரின் குரலில். 

"ஆக, சோழப்படைகள் எண்ணிக்கையும், நமது எண்ணிக்கையும் ஒன்றாகிவிட்டது. இன்று நடந்த தாக்குதலினால் நமது படைகள் மன உறுதி இழந்திருக்கின்றனர். அதைத்தானே எம்மிடம் சொல்லவருகிறீர்?" கண்களை உருட்டி விழித்தபடி கேட்கிறான் அமரபுஜங்கன். 

"அரசே! இன்று நடந்த தாக்குதல் நமது வீரர்களை நிலைகுலையச் செய்திருக்கலாம். ஆனால் நமது வீரர்கள் கோழைகள் அல்லர் அரசே! ஒரே ஒரு பாண்டிய வீரன் மிஞ்சினால்கூட, பல சோழப் பதர்களை எமனுலகுக்கு அனுப்பாமல் சாகமாட்டான்!" மார்பை உயர்த்திப் பதிலளிக்கிறார் படைத்தலைவர். 

"எனக்குத் தெரிந்த செய்தியைச் சொல்ல வேண்டாம் படைத்தலைவரே! தேவையில்லாமல் சிங்களப்படை அழிந்துவிட்டது. இதற்கிடையில் இராஜராஜனுக்கு இன்னும் இருபதாயிரம் வீரர்கள் அதிகமாகியுள்ளனர். நாம் மதுரையை விட்டுக் கிளம்பும்போது அவன் இருந்த நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். நமக்கு உதவியாக வந்த சேரமன்னர் மார்த்தாண்டரின் படைவீரர்களில் எத்தனை பேர் மிஞ்சி இருக்கிறார்கள் என்றுகூட இன்னும் தெரியவில்லை" என்ற அமரபுஜங்கன், சேரமன்னனை நோக்கி, "மார்த்தாண்டரே, தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய நான் ஆவலாக உள்ளேன்!" என்று வினவுகிறான். 

மார்த்தாண்டனின் முகம் சற்று மலருகிறது. அவனும் தன் பெரிய மீசையை நீவிவிட்டபடி பதில் சொல்கிறான். "அமரபுஜங்கரே! நாம் இருக்கும்போது, தனித்து முடிவு எடுக்காது எமது கருத்தையும் அறிய விழைவது எமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பொழுது இருக்கும் நிலையில் நாம் முன்பு திட்டம் தீட்டியபடி இராஜராஜனைச் சிறைப்பிடிக்க முடியுமா? இதுவரை நமது படைகள் வெள்ளாற்றுக்குத் தெற்கே இருக்கின்றன என்றுதான் இராஜராஜனுக்குத் தெரியும். நமது நிலை சரியாக இருக்காத இந்நேரத்தில் நாம் தஞ்சையை நோக்கிச் செல்வது சரியான முடிவா என்பதுதான் என் கேள்வி. அதற்காக நமது திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று சொல்வதாக நினைக்க வேண்டாம். ஒத்திப்போடலாமா என்று தோன்றுகிறது இதைப் போர்த்தந்திரம் என்று நினைத்துப் பாருங்கள்!" 

அமைதியாகி விடுகிறான் அமரபுஜங்கன்.

அவனது நெற்றியில் சிந்தனைக் கோடுகள் ஓடுகின்றன. முழங்காலில் ஊன்றிய கைவிரல்கள் தாளம் பொடுகின்றன. கண்களை மெல்ல மூடுகிறான். மூச்சை நன்றாக இழுத்து விடுகிறான். அவன் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து அமைதியாகிவிட்டது அனைவரையும் உள்ளூரப் பதற்றப்பட வைக்கிறது. 

சேர மன்னனின் பதில் பாண்டியப் படைத்தலைவருக்குச் சம்மதமாக இல்லாவிட்டாலும், தலையிருக்க வால் ஆடக்கூடாது என்று தன்னை அடக்கிக்கொள்கிறார். அவனுடைய இப்பதில் அமரபுஜங்கன் மனதை எப்படிப் புண்படுத்தியிருக்கும்; என்ன விதமான பதில் வருமோ என்று மனதளவில் அச்சப்படுகிறார். தனது அரசர் எவ்வளவு ஆசையுடன் திட்டம் தீட்டினார் – அதற்காக இரண்டு ஆண்டுகள் எப்படி இலங்கைக்கும், சேர நாட்டிற்கும் சென்று படை திரட்டினார் – ஒரு அராபியனைப்போல எப்படி மாறுவேடமிட்டு அலைந்து திரிந்தார் என்பது அவருக்குத்தானே தெரியும்? 

வெண்ணெய் திரண்டுவரும்பொழுது தாழி உடைந்தாற்போல் இப்படி நடந்துபோனது எவ்வளவு ஏமாற்றத்தைத் தந்திருக்கும்! சில நாட்கள் பெய்த மழையும், பனைமரத்தால் செய்த கவண் கல் எறியும் பொறிகளும் இப்படி இரண்டாண்டுத் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி விடும் என்று நேற்று வரை அவர்கள் கனவுகூடக் காணவில்லையே! தான் வீரமுழக்கமிட்டாலும், தங்கள் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்துதான் இருக்கிறது. அமரபுஜங்கன் மனம் தளர்ந்து விடக்கூடாது என்றுதான் தோள் தட்டினோம் என்பதை அவர் உணர்ந்துதான் இருக்கிறார். மன்னன் இப்படி அமைதியாகிவிட்டானே! எவ்வளவு நேரம்தான் இப்படி இருப்பான் என்று கவலைப்படுகிறார். 

சேர மன்னனுக்கும் அமரபுஜங்கனின் அமைதி சஞ்சலத்தைத் தருகிறது. தான் பேசியதைக் கோழைத்தனம் என்று அமரபுஜங்கன் எடுத்துக்கொண்டிருப்பானோ என்று அவனுக்குத் தோன்றுகிறது. தனது படைகள் அழியப்போவதைப் பற்றி அவன் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால், தோல்வியைத்தான் சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தும் போரிடுவது அவனுக்குச் சரியாகப்படவில்லை.

இராஜராஜனைச் சிறைப்பிடிக்காமல் போரிட்டுத் தோற்றால் அதோடு நின்றுவிடப் போவதில்லை. இராஜேந்திரனின் அளவுகடந்த சினத்திற்கும், அவனுடன் திரண்டு வரக்கூடிய இலட்சம் வீரர்களுக்கும் அவனது வயநாட்டால் பதில் சொல்ல முடியாது போய்விடுமே! மின்னல் தாக்குதல், மின்னல் தாக்குதலாக இல்லாவிட்டால் அதன் விளைவு நாம் விரும்பியபடியா நடக்கும்? மிஞ்சிய படைகளுடன் சேரநாட்டிற்குத் திரும்பிச் சென்றால் இராஜேந்திரனின் கோபத்திற்குத் தப்பலாம் என்றுதான் அவன் நினைக்கிறான். அவன் மேலே பேசி அமரபுஜங்கனுக்கு நிலைமையை விளங்க வைக்கலாம் என்று சொல்ல அவன் தொண்டையைச் செருமிக்கொள்வதற்குள் அமரபுஜங்கனின் குரல் அவையில் ஒலிக்கிறது. 

"நமது நண்பரும், ஆதரவாளருமான சேரமானின் கருத்து வலுவானதே. அதை முற்றிலும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர் சொன்னதில் ஒன்றை மட்டும் நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தோம். அவர் சொன்ன போர்த்தந்திரத்தை உபயோகித்து இராஜராஜனை இரண்டு நாள்களில் சிறைப்பிடிப்போம். அதற்காக நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கத் தேவையில்லை. நாம் இராஜராஜனைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம்! அவனை நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைப்போம்!" என்று நிதானமாக அவைக்கு எடுத்துரைக்கிறான். 

"அது எப்படி இயலும் அமரபுஜங்கரே?" மார்த்தாண்டனிடமிருந்து கேள்வி பிறக்கிறது. 

"இராஜராஜன் எப்படிப் போர்புரிவான் என்று எமக்கு நன்றாகத் தெரியும், மார்த்தாண்டரே! இன்று காலை நடந்த போர் இராஜராஜனது முறை அல்ல. என்றும் அவன் நேருக்கு நேராக மோதுவானே தவிர, மறைந்திருந்து தாக்கியதாகச் சரித்திரமே இல்லை. எனவே, இந்தத் தாக்குதல் வேறு யாராலோதான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது மிகவும் குறைவான அளவு அவனிடம் படைகள் இருந்திருக்க வேண்டும். எனவே, இப்படிப்பட்ட போரை நடத்த யாரோ ஒரு போர்த்தந்திரி இராஜராஜனுக்கு ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும். 

"எம்மைப் பொறுத்தவரை அந்த இரண்டுமே உண்மை என்று நினைக்கிறோம். அதுமட்டுமல்ல, இராஜராஜன் வெள்ளாற்றைக் கடந்து நம்மைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறோம். அவன் நம்மீது நாளையோ அல்லது நாளை மறுநாளோ மீண்டும் பனைமர வண்டிகள் மூலம் தாக்குதலைத் துவங்குவான் என்றும் நம்புகிறேன். அதை நடத்தவேண்டும் என்றால் அவன் நமது அருகில், அதாவது ஒரு காத தூரத்திற்கு வந்தாக வேண்டும். ஆகவே, அவன் நமக்கு அருகில்தான் இருக்கிறான். அவனைப் பொன்னமராவதிக்கு வரவழைக்க வேண்டும்." அவன் குரல் உறுதியாக ஒலிக்கிறது. 

"அமரபுஜங்கரே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான்கு நாள்களாகப் பெய்த மழையில் நம்மைத் தென்கரையில் கட்டிப்போட்டுவிட்டது வெள்ளாறு. அப்படியிருக்க நம் வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இராஜராஜன் படையுடன் எப்படி வெள்ளாற்றைக் கடந்து வந்திருக்க இயலும்? தவிர நாளையோ, நாளை மறுநாளோ மறுபடியும் தாக்குதலைத் துவங்குவதற்கு பனைமர வண்டிகளை நமது கண்ணில் படாமல் இழுத்துவர இராஜராஜன் என்ன மந்திரவாதியா?" 

அமரபுஜங்கனிடம் கேள்விதொடுக்கிறான் மார்த்தாண்டன். 

"நம்புவதற்கு அரியது என்பதையெல்லாம் நீக்கிவிட்டால், மீதி இருப்பது – எவ்வளவுதான். இயலாததாக இருந்தாலும் – அதுதான் உண்மை மார்த்தாண்டரே!"41 திடுமென்று ஒரு பொய்த்திரை நீங்கி உண்மையைக் கண்டவன்போல பேசுகிறான் அமரபுஜங்கன்.

——————————————————–

[41 ஷெர்லக் ஹோம்ஸ் கதையில் அவர் சொல்லும் ஒரு மேற்கோளே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.]

"நாம் மதுரையில் போர் ஆலோசனை செய்வதற்குச் சில நாள்கள் முன்னர்தான் இராஜராஜனின் தமிழ்ப்பணி ஆலோசகன் என்று ஒரு சிவாச்சாரி வந்து போனான். நான் கொல்லத்தில் இருந்து மதுரை வரும் முன்னரும் அவன் மதுரை வந்திருந்தான். அப்பொழுது மதுரையின் கோட்டைச் சுவர்களைச் சுற்றிப் பார்த்தான் என்று அமைச்சர் கூறினார். அதுதவிர படைக்கலன்களிலும் கவனம் செலுத்தினான் என்றும் சொன்னார். மேலும், அவனது உடற்கட்டைப் பார்த்தால் கோவிலில் பூசை செய்யும் சிவாச்சாரி மாதிரித் தோன்றவில்லை, ஒரு போர்வீரன் மாதிரியே இருந்தது என்றும் தெரிவித்தார். 

"கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவன் இராஜராஜனின் தலைமை ஒற்றனாகவோ அல்லது போர்த்தந்திரம் தெரிந்த ஆலோசகனாகவோ இருக்க வேண்டும். அவன் வந்தபோது நமது கோட்டைக்குள் மறைந்திருந்த வீரர்களைப் பற்றி அறிந்துகொண்டதோடு மட்டுமில்லாமல், பொன்னமராவதியைச் சுற்றியுள்ள நிலப்பரப்பைப் பற்றியும் தெரிந்துகொண்டு சென்றிருக்கிறான் என்று துணியலாம்.

"அவன்தான் வெள்ளாற்றுக்கு இருகரையிலும் இருந்த பனைமரங்களை வெட்டிக் கவண்கல் வீசும் வண்டிகளைத் தயாரித்திருக்கிறான் என்றே நம்புகிறேன். அவனுடைய திறமையைத் தெரிந்து கொண்டதால்தான் முன்பின் அறியாத ஒருவனாகிய அவனுக்கு இராஜராஜன் தன் முத்திரை இலச்சினை அளித்திருக்கிறான். அவன் இராஜராஜனுக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கும் போர்முறைகள் முறையற்றதாகத்தான் இருக்கும். அவனது போர்முறை நம் தமிழ்நாட்டுப் போர்முறையோ, பாரதப் போர்முறையோ அல்ல. பின்னிருந்து தாக்கும் பேடிகள் தொகுத்திருக்கும் வெளிநாட்டுப் போர்முறையாக இருக்கக் கூடும். 

"சிந்தித்துப் பாருங்கள். மழை பெய்ய ஆரம்பித்தபோதே இராஜராஜன் வெள்ளாற்றைக் கடந்திருக்கலாம். நாம் வெள்ளாற்றங்கரையை அடைவதற்கு இரண்டு நாள் முன்பு அது நடந்திருக்கக்கூடும் அடித்துப் பெய்த மழையில் நம்மால் சோழப்படையின் முன்னேற்றத்தைப் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ முடியாது. எனவே, இராஜராஜன் இங்கு எங்கோதான் ஒளிந்திருக்கிறான்.

"குறிப்பாகச் சொன்னால் அவன் பிரான்மலையில்தான் ஒளிந்திருக்க வேண்டும். அவன் நம்மைத் தாக்கத் தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் மேற்கிலிருந்து நம்மைத் தாக்கும்பொழுது, தொண்டியிலிருந்து வரும் அவனது படைகள் தெற்கிலிருந்தோ, தென்கிழக்கிலிருந்தோ நம் படைகளின் பின்பகுதியைத் தாக்கிச் செயலிழக்கச்செய்யத் திட்டம் தீட்டியிருக்கக்கூடும். 

"எது எப்படியிருந்தாலும், நமது கிழக்குப் பக்கம் யாரும் இல்லை. அது இராஜராஜனுக்கும் தெரியும். நாம் கிழக்கு நோக்கி நகர இயலாதவண்ணம் நாளை தாக்குதலைத் தொடங்கினாலும் தொடங்கலாம். அதற்காக அவன் தனது படையில் ஒரு பகுதியை கிழக்கு நோக்கி அனுப்ப வேண்டியதிருக்கும். நமது படைகள் இன்றுதான் திரும்பி வந்ததால், அவனது படைகள் இன்று பகலில் கிழக்கு நோக்கிச் செல்லச் சாத்தியமில்லை. எனவே, இன்றிரவுதான் அவன் அனுப்பக்கூடும். பனைமர வண்டிகளில் மரங்கள் நிறுத்தப்பட்டால் இழுத்துச் செல்வது கடினம். எனவே, கிழக்கே சென்றுதான் அதை ஒருங்கிணைப்பார்கள். அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். 

"அதுமட்டுமல்ல, இராஜராஜனின் திட்டம் நமக்குத் தெரிந்துவிட்டதாக அவனுக்குச் செய்தி அனுப்ப வேண்டும். அது மட்டுமல்ல, பேடியாகப் போர் நடத்தாதே, வீரனாக நேருக்குநேர் வந்து போர் நடத்து என்று அவனுக்கு அழைப்பு விடவேண்டும். இதுதான் என் திட்டம்!" என்று தன் திட்டத்தை விவரிக்க ஆரம்பிக்கிறான் அமரபுஜங்கன். 

அனைவரும் மகுடி இசையில் கட்டுண்ட நாகமாக அவனது திட்டத்தை உள்வாங்குகின்றனர். அமரபுஜங்கன் தன் வாழ்விலேயே மிகப்பெரிய சூதாட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறான் என்பதும் அனைவருக்கும் புரிகிறது.

பிரான்மலை

பரிதாபி, ஆனி 15 – ஜூலை 30, 1012

தீப்பந்தங்கள் நெருங்கி வருகின்றன. இருபது குதிரை வீரர்கள் பாண்டியர்களின் மீனக்கொடிகளையும், சமாதானக் கொடியையும் பிடித்தவாறு வந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. இவர்களின் வரவை சோழப்படையின் முன்னிலையில் இருக்கும் கண்காணிகள் உடனே படைத்தலைவருக்குச் சேதி சொல்லி அனுப்புகிறார்கள். 

"என்னது? சமாதானக் கொடிகளுடன் பாண்டிய வீரர்கள் குதிரைகளில் வந்துகொண்டு இருக்கிறார்களா?" என்று குழம்புகிறார் தென்மண்டலப் படைத்தலைவர். 

"அவர்களை இடைமறித்து, விவரமறிந்து என்னிடம் அழைத்து வரவும்" என்று திரும்ப உத்தரவை அனுப்புகிறார். பாண்டிய வீரர்களிடம் ஒரு ஆயுதம்கூட இல்லாததால் அவர்களால் ஆபத்துவரச் சாத்தியக்கூறு இல்லை என்று புரிந்து, அவர்கள் அரை நாழிகைக்குள்ளாகவே படைத்தலைவரின் முன்பு அழைத்து வரப்படுகிறார்கள்.

தலைவன்போல இருந்த பாண்டிய வீரன், "நாங்கள் பாண்டிய மன்னர் அமரபுஜங்கரிடமிருந்து இராஜராஜச் சக்ரவர்த்தியாருக்குத் திருமுகம் கொணர்ந்திருக்கிறோம்" என்று தெரிவிக்கிறான்.  

அதைத் தன்னிடம் கொடுக்குமாறு படைத்தலைவர் கேட்டும், அதே பணிவுடன் மறுத்து விடுகிறான். 

"இங்கு சோழச் சக்கரவர்த்தி இல்லை!" என்று பதில் சொல்கிறார் படைத்தலைவர். 

"அப்படியானால் எங்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்.  நாங்கள் இச்செய்தியை எங்கள் மன்னர்பிரானுக்குத் தெரிவிக்கிறோம்" என்று பதில்சொல்கிறான் பாண்டியவீரன். 

கடகடவென்று சிரிக்கிறார் படைத்தலைவர். 

"ஆயுதமில்லாமல் சமாதானக் கொடியுடன் வந்திருப்பதால்தான் உங்கள் உயிர் இதுவரை உங்கள் உடம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.  உங்களை உயிருடன் திருப்பி அனுப்ப எங்களுக்குப் பித்தா பிடித்திருக்கிறது? எங்கள் பாசறைக்கு வந்தவர்களை எப்படி நாங்கள் திருப்பி அனுப்புவோம்? நீங்கள் தந்திரம் நிறைந்த ஒற்றர்களாக இருக்கலாம் அல்லவா? சக்கரவர்த்திகளுக்குத் திருமுகம் கொணர்ந்திருந்தால் என்னிடம் கொடு.  இல்லாவிட்டால் நாங்களாகத் திருப்பி அனுப்பும் வரை இங்கேயே சோழநாட்டு விருந்தினராக இருந்துவிடு!" 

அவர் குரலில் ஏளனம் இருக்கிறது. ஆனால், சிரிக்கும் அவர் மனத்தில் சோழப்படையின் இருப்பிடம் நள்ளிரவில் வந்திருக்கும் இவர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும் என்ற சிந்தனை அரித்துப் பிடுங்குகிறது.  இந்த வீரர்கள் இராஜராஜருக்குத் திருமுகம் மட்டும் கொண்டு வந்திருக்க முடியாது என்று அவரது உள்ளுணர்வு கூறுகிறது. சோழப்படை எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள பாண்டிய மன்னன் ஆடும் நாடகம் இது என்று நினைக்கிறார்.  

ஆனால், இந்தப் பாண்டிய வீரன் கையில் பாண்டிய மன்னனின் இலச்சினை உள்ள திருமுகம் இருக்கிறதே! திருமுகத்தில் என்ன இருக்கிறது என்று இராஜராஜருக்குத் தெரிய வேண்டுமே!

உடனே முடிவுக்கு வந்து, "உன்னை நான் சக்கரவர்த்திகளிடம் அழைத்துச் செல்கிறேன். அதற்குமுன் உன் கண்கள் கட்டப்படும்!" எனப் பாண்டிய வீரனிடம் தெரிவிக்கிறார்.  

அவனும் அதற்குச் சம்மதித்துத் தலையசைக்கிறான்.  அனைத்துப் பாண்டிய வீரர்களின் கண்களும் கருப்புத் துணியினால் இறுகக் கட்டப்படுகின்றன.  தலைமை வீரனை ஒரு குதிரையில் ஏற்றி, அரை நாழிகை சுற்றிச்சுற்றி – தாங்கள் செல்லும் இட அமைப்பை பாண்டிய வீரன் அறியமுடியாத வண்ணம் குழப்பி, சுற்று வழியில் இராஜராஜரிடம் அழைத்துச் செல்கிறார் படைத்தலைவர்.

இராஜராஜரின் கம்பீரம் பாண்டிய வீரனைத் தானாகப் பணிய வைக்கிறது.  படைத்தலைவரை வணங்காத அவன், அவரை வணங்கித் திருமுகத்தை நீட்டுகிறான்.  படைத்தலைவர் அதை வாங்கி இராஜராஜரிடம் சமர்ப்பிக்கிறார்.

பாண்டிய வீரனைக் காத்திருக்கும்படி செய்துவிட்டுத் தங்கள் பேச்சு காதில் விழாத இடத்திற்கு படைத்தலைவரை அழைத்துச்சென்று திருமுகத்தைத் தீவட்டி வெள்ளிச்சத்தில் விரிக்கிறார்.  அவர் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை மலர்கிறது.

"அமைச்சரே! உம்மால் வட்டெழுத்து படிக்க இயலுமா?" என்று அருகிலிருந்த போர் அமைச்சரிடம் வினவுகிறார். ஆமென்று தலையசைத்த அமைச்சரிடம் திருமுகத்தை நீட்டுகிறார் இராஜராஜர்.

இராஜராஜரிடமிருந்து "ஒரு சொல்லையும் நீக்காமல் உள்ளதை உள்ளபடியே நீர் நவிலும்படி பணிக்கிறோம்" உத்தரவு பிறக்கிறது. 

அமைச்சர் திருமுகத்தைப் படிக்கப் படிக்க இராஜராஜரின் முகத்தில் வேதனையும், சினமும், பின்னர் பெருமிதமும் தோன்றுகின்றன. திருமுகம் படிக்கப்பட்டு, ஒரு நிமிடம் சென்ற பின்னர் நிதானமாக, படைத்தலைவருக்கும் அமைச்சருக்கும் தனது கருத்தைத் தெரிவிக்கிறார்.

"பாண்டியன் எழுதியது எமக்கு ஒருபுறம் வேதனையை அளித்தாலும், அது உண்மைதான்!  எவரிடமும் இதுவரை யாம் நேருக்கு நேரில்தான் போரிட்டிருக்கிறோம்.  சூழ்நிலை எம்மை மறைமுகப் போர் நடத்தும்படி செய்துவிட்டது. காலையில் நடந்த தாக்குதலால் நிலைகுலைந்து போயிருப்பான் என்று நினைத்த அமரபுஜங்கன் தெளிவாகியதோடு மட்டுமன்றி, தான் ஒரு சிறந்த மதியூகி என்பதையும் நமக்கு அறிவித்திருக்கிறான்.  இல்லாவிட்டால் யாம் பிரான்மலையின் பின்னால்தான் இருக்கிறோம் என்பதை ஊகித்து அறிந்திருக்க இயலுமா? இதனால் அவன் இராஜாதிராஜன் செல்லுமிடத்தையும் ஊகித்து அறிந்திருப்பான் என்றும் முடிவு செய்கிறோம். ஆனால், நம்மிடம் எவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள் என்று அவனால் ஊகித்து அறிய இயலவில்லை.  

"அவனது திருமுகம் நமக்கு உணர்த்துவது, அவனுடைய படைபலம் குறைந்துவிட்டது என்பதுதான். இனி போர் செய்து வென்றாலும், அவனது நோக்கம் நிறைவேறாதுபோகும் என்பதை உணர்ந்துவிட்டான். அதனால்தான் இந்தத் திருமுகத்தை அனுப்பியுள்ளான்." 

"சக்கரவர்த்தி அவர்களே!  வென்றாலும் அவன் நோக்கம் நிறைவேறாது என்ற தங்கள் கருத்து எதனால் என்று நாங்கள் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்" என்று கேட்கிறார் படைத்தலைவர். 

"அமைச்சரே! நீர் என்ன விளக்கம் தருவீர்?" என்று கேள்வியை அமைச்சருக்குத் தொடுக்கிறார் இராஜராஜர்.

இதைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர் சிறிது தடுமாறுகிறார். பிறகு, "சக்கரவர்த்தி அவர்களே!  பாண்டியர்களின் முதலாவதான திட்டம், அதிகமான எண்ணிக்கையின் திறத்தைக் கையாண்டு, தஞ்சையைக் கைப்பற்றுவதுதான்.  தஞ்சை விழுந்தால் தாங்கள் அவனது பிடியில் சிக்குவீர்கள் என்று நினைத்திருக்கலாம். காலையில் நடந்த தாக்குதலின் மூலம் தாங்கள் தஞ்சையில் இல்லை என்றும், இங்கு வந்திருக்கலாம் என்றும் ஊகித்திருக்கலாம்.  இப்பொழுது போர் நடந்தால் அது கடைசிவரை, வெற்றி தோல்வி முடிவாகும் வரை நடக்கும் என்பதும் அவருக்குத் தெளிவாகி இருக்கலாம். இதுவரை தாங்கள் எந்தப் போரிலும் வெற்றியைத் தழுவாமல் இருந்ததில்லை. எதிரிகள் வென்றாலும், தாங்கள் அவர்களது பிடியில் சிக்குவீர்கள் என்பது நிச்சயமில்லை. ஏனென்றால், இந்தப் போரில் பாண்டியன் வெற்றி பெற்றால்…" மேலே தொடரத் தயங்கி நிறுத்துகிறார்.

"இதில் தயங்க ஒன்றுமில்லை அமைச்சரே!  உமது ஆராய்வைத் தொடர்ந்து சொல்லப் பணிக்கிறோம்" இராஜராஜரிடமிருந்து ஆணை பிறக்கிறது.

"ம்… தங்களை வீழ்த்தாமல் பாண்டியர்கள் வெற்றி பெற இயலாது சக்கரவர்த்தி அவர்களே! அந்த வெற்றி நிலையாகாது. இளவரசர் இராஜேந்திரர் பாண்டியர் குலத்தையே வேரறுத்து விடுவார் என்பதையும் பாண்டிய மன்னர் அறியாதிருக்க நியாயமில்லை" என்று முடிக்கிறார். 

"அது போகட்டும். பாண்டியன் எம்மைச் சிறைப்பிடிக்க எதற்கு விழைய வேண்டும்?" 

"சக்கரவர்த்தி அவர்களே! என் வாயால் அதைச் சொல்லவும் வேண்டுமா?" அமைச்சரின் கண்கள் கலங்குகின்றன. 

"அமைச்சரே, இது போர்! நீர் எமது போர் அமைச்சராவீர். இச்சமயத்தில் உணர்ச்சி வசப்படுதல் உமக்கு அழகா? நீர் ஒரு ஆண்மகன், அதுவும் சோழநாட்டு ஆண்மகன். பெண் பிள்ளை மாதிரிக் கண்ணீர் சிந்தாமல் எமது அமைச்சராகப் பதிலிருப்பீராக!" 

இராஜராஜரின் குரலில் சிறிய அதட்டல் தொனிக்கிறது. 

"தங்களைச் சிறைப்பிடித்து, பிணைக்கைதியாக்கித் தான் நினைப்பதைச் சாதிப்பதுதான் பாண்டிய மன்னரின் நோக்கம் என்பது எனது துணிவு.  தாங்கள் அவரிடம் இருக்கும்வரை இளவரசர் இராஜேந்திரரிடம் தங்கள் உயிருக்கு அவரால் பேரம் பேச இயலும்.  எனவே, இப்பொழுது நம்முடன் படையுடன் போரிட்டு வெற்றி பெறுவது பாண்டிய மன்னரின் நோக்கம் அல்ல. அதனால்தான் அவர் தங்களை வாட்போருக்கு அழைக்கிறார்.  எவரின் வாள், தாக்குதலில் கீழே விழுகிறதோ அவர் தோற்பவர் என்றும், தோற்பவர் வெல்பவரின் கைதியாக வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருக்கிறார். ஆக, தங்களைச் சிறைப்பிடிப்பதோ அல்லது தங்களிடம் சிறைப்படுவதோதான் அவரது நோக்கமாக இருக்கிறது." 

"எம்மிடம் சிறைப்படுவது பாண்டியனுக்கு எந்தவிதத்தில் நன்மை?" 

"சக்கரவர்த்தி அவர்களே!  பாண்டிய மன்னரின் பித்துப்பிடித்த சவாலுக்குத் தாங்கள் எடை கொடுப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது!" என்ற அமைச்சரை இடைமறித்து, "எமது வினாவுக்கு மட்டுமான பதிலை மட்டுமே இப்பொழுது யாம் விரும்புகிறோம். உமது இடைச்செருகல் எமக்கு இப்பொழுது தேவையில்லை" என்று நறுக்குத்தெறித்தாற்போல் பேசுகிறார் இராஜராஜர். 

கன்னத்தில் அறைபட்டது போன்ற உணர்வு அமைச்சருக்கு ஏற்படுகிறது.  

இராஜராஜரின் உள்நோக்கம் – தன் பதிலை அவர் தெரிந்துகொள்வதற்காக அல்ல – படைத்தலைவரான தண்டநாயகர் அறிந்துகொள்ளத்தான் என்பதை உணர்ந்துகொள்கிறார். 

முடிவு எடுப்பது இராஜராஜரின் கையில்தான் இருக்கிறது. அதை அவர் தெரிவிக்குமுன், தான் அவர் என்ன முடிவு எடுக்கக்கூடும் என்று ஊகிப்பது தவறு என்பதை தனக்கு உணர்த்துகிறார் என்று புரிந்துகொள்கிறார். 

"வாட்போரில் தோற்றுத் தங்களிடம் சிறைப்பட்டால், பின்பு தங்களிடம் கருணை மனுச்செய்து உயிர் பிழைக்கலாம். சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டு பாண்டிநாட்டைத் திரும்பப் பெறலாம். மேலும், சோழர்களின் கோபத்திலிருந்து மதுரை தப்பிப் பிழைக்கும். பல்லாயிரக்கணக்கான வீரர்களின் இறப்பைத் தடுத்து, தான் சிறை சென்றால், பாண்டிய வீரர்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.  அவரது மைந்தன் தலைமையில் மீண்டும் சோழப் பேரரசுக்கு எதிராகப் போரிட ஒன்றுசேர்வார்கள். நிகழ்கால நோக்கம் நடைபெறாமல் போனாலும் எதிர்காலத்தில் தன் மைந்தன் மூலம் தனது திட்டம் நிறைவேற வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கலாம்" என்று விளக்கிவிட்டு அமைதியாகிவிட்டார் அமைச்சர். 

"சக்கரவர்த்தி அவர்களே, என் மனதில் இருக்கும் ஒரு ஐயத்தை எடுத்துரைக்கத் தாங்கள் அனுமதி கொடுக்க வேண்டுகிறேன்" என்று தயங்கியவாறே கேட்கிறார் படைத்தலைவர். 

இராஜராஜர் தலையசைக்கவே, "தாங்கள் இந்த வாட்போருக்குச் சம்மதிக்கப்போகிறீர்களா? அது சரிவருமா?" என்று வினவுகிறார். 

மெல்ல நகைக்கிறார், இராஜராஜர்.  அந்த நகைப்பு பெரும் சிரிப்பாகப் பரிணமிக்கிறது.  பலத்த ஓசையுடன் கடகடவென்று சிரிக்கும் அவரைப் பார்த்தால் சுற்றியிருப்பவர்களுக்கு அச்சமும் ஏற்படுகிறது. 

"தண்டநாயகரே!  அமைச்சரே! யாம் ஒரு வயதான கிழவன், உங்களைப் போரிட விட்டுவிட்டுத் தஞ்சை அரண்மனையில் போர்த்திக்கொண்டு முடங்கிக் கிடக்கவேண்டும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அப்படியிருந்தால் அதை தஞ்சையில் யாம் உங்களைப் பொருட்டாக மதித்து போர் ஆலோசனை நடத்தியபோது சொல்லியிருக்க வேண்டும்.  அதை விடுத்து, போரின் தலைவனைப் போரிட இயலாதவன் என்று நினைக்கும் உம்மையும், அமைச்சரையும் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஆயினும் இத்தனை நாள்கள் நீங்கள் சோழநாட்டிற்குச் செய்த சிறந்த பணிதான் அதைத் தடுத்து நிற்கிறது!"

இராஜராஜரின் சினங்கலந்த குரல் பெரிதாக எழுந்து அனைவரையும் திடுக்கிட வைக்கிறது.  

இவ்வளவு சினத்தை அவர் எதிரிகளிடம்தான் காட்டியிருக்கிறாரே தவிர, தனது அமைச்சரிடமும், படைத்தலைவரிடமும் காட்டியதில்லை. "சக்கரவர்த்தி அவர்களே! அரசர்களில் அரிமாவான42 தங்களை அவமதிக்கும் சொற்களை நாங்கள் கனவிலும் நினைத்துப்பார்ப்போமா? தங்களின் கூர்மையான வாளை மகிழ்ச்சியாக என் மார்பில் தாங்கி என் உயிரைத் தங்களுக்காகக் கொடுக்க ஆயத்தமாக உள்ளேன்.  ஆனால் தங்களின் சொல்லின் கூர்மையை என்னால் தாங்க இயலவில்லை பிரபோ! தங்களின் உயிரின் மேல் தங்களுக்கு பற்று இருக்காவிட்டாலும், உங்களுக்காக எங்கள் உயிரை மகிழ்வுடன் கொடுப்பதை பாக்கியமாகக் கருதுகிறோம்.  தங்கள் குருதியில் ஒரு துளி சிதறாமலிருக்க எங்கள் உடலில் இருக்கும் குருதி முழுவதும் கொடுக்கத் தயங்கமாட்டோம். இந்த உடலில் மகிழ்ந்து ஏற்கொண்ட புண்களிலிருந்து உயிர் தப்பியுள்ளேன்.  இன்று தங்களிடமிருந்து வந்த இந்த அவச்சொல் ஏற்படுத்திய மிகப்பெரிய புண், உயிர் வாழவேண்டும் என்ற எண்ணத்தையே நீக்கிவிட்டது.  இனி நான் இருந்தென்ன பயன்? வடக்கிருந்து43 என் அவச் சொல்லை நீக்கிக்கொள்கிறேன்!" படைத்தலைவரின் குரல் கம்மிவிட்டது.  

அமைச்சருக்குப் பேச்சே எழவில்லை.

இராஜராஜரின் முகம் கதிரவனைக் கண்ட தாமரை மாதிரி மலர்கிறது. அன்புடன் படைத்தலைவரையும், அமைச்சரையும் ஒருசேரத் தழுவிக்கொள்கிறார். 

"தண்டநாயகரே! அமைச்சரே, உங்களின் மன நிலையை யாம் நன்கு அறிவோம். துட்டகமுனுவுக்கு எல்லாள மனுநீதிச் சோழன் பலியானதுபோல44 நான் அமரபுஜங்கனுக்குப் பலியாகிவிடுவேனோ என்று நீங்கள் கவலையுறுவதை யாம் நன்கு உணர்கிறோம். தலைவனுக்கு அழகு, தேவையில்லாத உயிர் சேதத்தைத் தவிர்த்தலே ஆகும். இதைத்தான் முன்னர் இராஜேந்திரன் விமலாதித்தனுடன் தனிப்போரிட்டுச்45 செய்திருக்கிறான்.  அவனது தந்தையான யாமும் அதைத்தான்செய்யப் போகிறோம். "ஆயிரக்கணக்கானவரை மறைந்திருந்து கொன்று, கோழையாக மலையின் பின் பனைமரக்காட்டு நரியைப்போல மறைந்துகொள்கிறாயா? இதுதான் சோழச் சக்கரவர்த்தியின் பண்பா என்று பாண்டியன் கேட்ட பிறகும் யாம் இந்தப் பிரான்மலையின் பின்னர் மறைந்துகொண்டால் பனங்காட்டு நரியாகத்தான் ஆகிவிடுவோம்.  உங்களுக்கு எம்மீது மதிப்பிருந்தால் இந்த நேர்முக வாட்போரில் பாண்டியனை வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் இருப்பீராக. உடனே செய்தி அனுப்பி இராஜாதிராஜனின் போர்த்திட்டத்தை நிறுத்திவைப்பீராக.

"நாளை கதிரவன் உதிக்கும்பொழுது நமது சோழவீரர் இருபதின்மரை பொன்னமராவதிக்கு நமது செய்தியைச் சொல்லி அனுப்புக.  யாம் அமரபுஜங்கனை சந்திக்குமிடத்தை நமது திருமுக ஓலையில் தெரிவிப்போம்.  நம் தரப்பில் ஆயிரம் வீரர்களும், பாண்டியன் தரப்பில் ஆயிரம் வீரர்களும் அங்கு வந்து சேரட்டும்.  ஒன்று, நான் அமரபுஜங்கனைச் சிறைப்பிடித்து வருவேன் அல்லது பெருவுடையாரின் திருவடியை அடைவேன்.  நான் சிறைப்பட மாட்டேன்! எனது வாள் எக்காரணத்தினாலும் எனது உயிர் இருக்கும்வரை கீழே விழாது!  சோழ மாதா எம்மை வெல்லவைப்பாள்!"

[42 ராஜகேசரி என்னும் வடமொழிச்சொல்லின் தமிழாக்கம்.

43 பழிச்சொல் ஏற்பட்டால் (உ-ம்: முதுகில் விழுப்புண் ஏற்பட்டால்) வடக்கிருந்து உயிர்நீப்பது தமிழர் பண்பாடு.  இங்கு இராஜராஜரின் படைத்தலைவர் அதையே சொல்கிறார்.

44 அநுராதபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்த சோழர் வழிவந்த தமிழ் அரசன் எல்லாளன். தனது அறுபதாவது வயதுக்குமேல்.  இளைஞனான சிங்கள அரசன் துட்டகமுனுவிடம் நேரடிப் போரிட்டு இறந்தான் என்று இலங்கை வரலாறான மகாவம்சம் கூறுகிறது. –  Brittania Encyclopedia, 'Dutthagamani, King of Sri Lanka'

45 கிழக்குச் சாளுக்கிய இளவரசனான விமலாதித்தனை ஒற்றைக்கொற்றை (one on one) வாட்போரில் இராஜேந்திரன் வென்று வேங்கைநாட்டை சோழ ஆட்சிக்குக்கீழ் கொணர்ந்ததாக அவ்வை சண்முகம் நடத்தி வந்த "இராஜராஜ சோழன்" நாடகம் விவரிக்கிறது.  தன்னிடம் இருக்கும் படைகள் அழியுமே தவிர சோழர்களை வெல்ல இயலாது என்று உணர்ந்த விமலாதித்தன் இம்மாதிரிப் போருக்கு இராஜேந்திரனை அழைத்ததாகவும், அதை அவன் ஒப்புக்கொண்டதாகவும் நாடகம் சித்தரிக்கிறது.]

இராஜராஜரின் முடிவு அனைவரையும் உறைய வைக்கிறது. அறுபத்தைந்து வயதான அவர் தன்னை விட இருபத்தைந்து வயது குறைந்த அமரபுஜங்கனை எப்படி வாட்போரில் வெல்லப் போகிறாரோ என்று அனைவரும் கவலையுறுகிறார்கள்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com