பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 12

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 12

ஒரு அரிசோனன்

திருப்பூவனம், பாண்டிநாடு

சுபானு, தை 19 – பிப்ரவரி 4, 1044

"ச்ச… என்ன தொல்லை இது? ஈத்தொல்லை ஒரேயடியாப் பெருகிப்போச்சு. ஏ புள்ளே, மீனாச்சி, வீட்டைச் சுத்தம் செய்யலையா? மனுசி சோத்தத் தின்னுப்புட்டுப் பகல்ல கொஞ்சம் கண்ணயரலாம்னா முடியாம போச்சே!" என்று சலித்துக்கொள்கிறாள், ஐம்பது அகவையை எட்டிப் பிடிக்கப்போகும் வள்ளியம்மை – பாண்டியரின் பொக்கிஷத்தைப் பாதுகாக்க மண்ணுக்கடியில் கோட்டையமைத்து உயிரைத் துறந்த முருகேசனின் மனைவி. அவள் குறைசொல்வது தன் மருமகள் மீனாட்சியைப் பற்றித்தான்.

"பொங்கலுக்கு வெட்டிப்போட்ட கரும்புங்க இன்னும் நெறயக் கெடக்கு அத்தே.  அதுதான் ஈயோட தொல்லை பெருகிப்போச்சு. நான்தான் தெனோமும் ரெண்டு தபா, காலையும் மாலையும் வூட்ட நல்லாப் பெருக்கித் தொடச்சு வச்சிருக்கேனே. சும்மாக் கொறயே சொல்லாதீங்க அத்தே. ஒங்க மயன் காதுல விளுந்தா, நான் வூட்டில வேலையே பார்க்கறதில்லேன்னு முதுகுல ரெண்டு தப்பு தப்பிடுவாரு" என்று தான் சரியாக வேலை செய்வதாகவும், தனது கணவனின் முன்கோபத்தைக் கிளறினால் தனக்கு அடிவிழும் என்பதையும் தன் மாமியாருக்கு அறிவிக்கிறாள் – வள்ளியம்மையின் மகனான சொக்கநாதனின் மனைவியும் – இருபத்தேழு வயதிலேயே ஆறு குழந்தைகளுக்குத் தாயானவளும் – வள்ளியம்மையின் அண்ணன் மகளுமான மீனாட்சி.

"ஆமா, நீ சொக்கனுக்குப் ரொம்பப் பயந்தவ பாரு. அசந்துபோனா அவனை முந்தானில முடிஞ்சுவச்சுக்கிட மாட்டியா என்ன? சரியாத்தா, நான் வாய மூடிக்கறேன். ரெண்டு நாழி கண்ணை மூடினாத்தான் உடம்பு அசதி கொறயுது. கழுதை பொதி சுமக்கற வெய்யுலுல எங்க பொயிருக்கறாங்க பேரப்பயலுவ?" என்று தன் முதல் மூன்று பேரப்பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கிறாள், அடுத்த இரண்டு பேரன்களும் தரையில் படுத்து உறங்குவதைக் கவனித்தபடி.

"மழை பெஞ்சு வைகைல தண்ணி ஓடுதுல்ல, அதுனால தொளயப் போயிருக்கானுவ. தண்ணீல எறங்கிட்டா சட்டுனா திரும்பி வாரானுக?" என மீனாட்சி குறைந்துகொள்கிறாள்.

வாசலில் காலடிச் சத்தம் கேட்கிறது. திண்ணையில் வைத்திருந்த அண்டாவிலிருந்த தண்ணீரைச் செம்பிலெடுத்துக் காலைக் கழுவிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறான் சொக்கநாதன் என்ற சொக்கன். புசுபுசுவென்ற மீசையை நன்றாக முறுக்கிவிட்டிருக்கிறான். கிருதா காதுக்குக் கீழ் இறங்கியிருக்கிறது.

"ஆத்தா, சோறு சாப்பிட்டியா? ஒடம்பு எப்படியிருக்கு? நேத்து முழுசா ஒரேயடியா இருமிக்கிட்டு இருந்தியே?" என்று அன்னையின் உடல்நலத்தை விசாரித்தவாறு உள்வருகிறான்.

"தினோம் மூணுவேளை திங்கறதும், தூங்கறதும்தான் நான் ஒழுங்காச் செய்யற வேல. பசியா வந்திருப்பே ராசா. சாப்பிட ஒக்காரு. ஏ புள்ளே, மீனாச்சி! ஓம் புருசன் வந்துட்டாடிம்மா. சீக்கிரம் சோத்தை எடுத்து வை. அவன் பசியாறணும்" என்றபடி வள்ளியம்மை மெல்ல எழுந்து உட்காருகிறாள்.

விட்டத்தில் தொங்கும் சீலைத்துணித் தூளியிலிருந்து குழந்தை குரல்கொடுத்து அழத் தொடங்குகிறது.

"கொழந்தையை எடுத்து எங்கிட்ட கொடுத்துடிம்மா. சமாதானப் படுத்தறேன். யாராவது சாப்பிட ஒக்காந்தாப் போதும், ஒடனே முழிச்சுக்கிட்டுக் கத்த ஆரம்பிச்சுடறா. படுத்தா எந்திரிச்சு ஒக்கார முடியல, உக்காந்தா நிமிந்து நிக்க முடியல. அவரும் சட்டுனு என்னைக் கூட்டிக்க மாட்டேங்கறாரு. எத்தினி காலந்தான் இப்படி அவரையெ நெனச்சுப் பொழுதக் கழிக்கணுமோ?" என்று வள்ளியம்மை விதியை நொந்துகொள்கிறாள்.

அழும் குழந்தையை அவளிடம் கொடுத்த மீனாட்சி, அவர்களது பரம்பரை வெள்ளித் தட்டையும், சொம்பு நிறையப் பானைத் தண்ணீரையும் எடுத்து வைத்து, சோற்றையும் வெஞ்சினத்தையும் பரிமாறுகிறாள். சொக்கன் அமைதியாகச் சோற்றை அள்ளித் தின்கிறான்.

"ஏம்ப்பா சொக்கா, என்னப்பா ஒண்ணுமே பேசாமச் சாப்பிடறே? மதுரை போயிட்டு வந்தியே, அங்கிட்டு என்ன நடக்குது? ரொம்ப காலமா சோழராசகுமாரங்களே பாண்டியராசா பேரை வச்சுக்கிட்டு அரசாட்சி செய்துக்கிட்டு வாராங்களே, இது அடுக்குமா? மதுரைக் கோவில்ல மீனாச்சி அம்மாவும், சொக்கநாதசாமியும் இன்னமும் கல்லாத்தான ஒக்காந்துக்கிட்டு இருக்காங்க? நீயும் அந்த சொக்கநாதசாமி பேரை வச்சுக்கிட்டு கல்லைப்போல ஒக்காந்து, ஒருபேச்சும் பேச மாட்டேங்கறியே?" வள்ளியம்மை புலம்புகிறாள்.

"ம்…" உறுமுகிறான் சொக்கன்.

"நீ புலம்பிக்கிட்டே இரு ஆத்தா! நாம என்ன செய்ய முடியும்? இலங்கை ராசா நமக்கு உதவியா இருந்தாருன்னு அவரையும், அவரோட பொண்டாட்டி பிள்ளைங்களையும் சிறையெடுத்துச் சோழநாட்டுக்குக் கொண்டுபோயிட்டதும், அங்கேயே அவுக எல்லாரும் சிறையிலேயே செத்துப்போனதையும் ஒனக்குச் சொல்லுறதா? மூணு வருசத்துக்கு முன்னாலதான் அந்த இலங்கை ராசாவோட பையனும், நம்ம விக்கிரமபாண்டிய ராசாவும் வடக்கத்தி ராசா ஒத்தரோட சேந்து சண்டைபோட்டதும், ராசேந்திரச் சக்ரவர்த்தியோட மகன் – அதுதான் மதுரைல கொஞ்ச காலம் 'சோழ பாண்டியன்'னு பேரை வச்சுக்கிட்டு ஆட்சி செஞ்சாரே – அவரு பெரிய படையோட இலங்கைக்குப் போயி, நம்ம ராசாவையும் சேத்து மூணூ ராசாக்களையும் கொன்னு போட்டதும் ஒனக்குத் தெரியாதா? அந்தச் சண்டைல பெரியப்பாவோட மகன், அதுதான் என் அண்ணன் காளையப்பன் செத்துப்போனதையும் ஒனக்குச் சொல்லுறதா?  விக்கிரமராசாவோட மகனான பாண்டிய இளவரசருக்குத் துணையா நான் இருக்கணும்னு சொல்லி, விக்கிரம மகராசா என்னை மட்டும் இங்கிட்டு விட்டுப்புட்டுப் போனதைச் சொல்லுறதா? என்னத்தச் சொல்லுவேன் நான் ஒனக்கு?  என்ன பேச்சுப் பேசுவன் நான்?"

கையிலெடுத்த சோற்றைத் தட்டில் போட்டுவிட்டுச் சொக்கன் உறுமித் தள்ளுகிறான்.

"தினமும் திங்கறதும், தூங்கறதும், நிறையப் பேருக்குச் சண்டை கத்துத்தருவதையும் விட்டுப்புட்டு வேறென்ன ஆத்தா நான் செய்யறேன்? பாண்டிய ராசகுமாரரைக்கூட இந்த ஊருலதானே மறைச்சு வச்சுருக்கோம்! அப்பா எழுதப்படிக்கக் கத்துக்கணும்னு சொன்னாருன்னு சொன்னே. அதுனால ரொம்பச் சிரமப்பட்டு எழுதவும் கத்துக்கிட்டேன். இப்ப ஒம் பேரங்களும் எழுதப்படிக்கக் கத்துக்கிடனும்னு நீ பிடிவாதம் பிடிச்சதால அவனுகளத் தின்ணைப் பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பறேன். வேறென்ன சேதியிருக்கு? ஒங்கிட்டச் சொல்லிச் சந்தோசப் படறதுக்கு? சோறுகூட நிம்மதியாத் திங்க விடமாட்டேங்கறியே!" என்று தன் நிராசைகளைத் தன் தாயாரின்மேல் கொட்டுகிறான்.

திரும்ப மேலே தொடர்ந்து, "ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயமா நடக்கும்னு சொல்லுறேன், ஆத்தா! ஒருநாள் இல்லாட்டா ஒருநாள் மதுரைல மீன்கொடி பறக்கத்தான் போகுது. அங்க மட்டுமில்ல, சோழநாட்டுக் கங்கைகொண்ட சோழபுரத்துலேயும்தான். அந்தச் சமயத்துல உன்னோட பரம்பரையில வந்த ஒருத்தன், பாண்டியராசாகூட நின்னு, நம்ம மீன்கொடிய ஏத்தத்தான் போறான். இம்புட்டுத்தான் நான் ஒனக்குச் சொல்ல முடியும். வேற என்னதான் நான் சொல்லணுமின்னு நீ எதிர்பார்க்கறே?" என்று அங்கலாய்க்கிறான்.

அதைக் கேட்டதும் வள்ளியம்மையின் கண்கள் பளிச்சிடுகின்றன. "நல்லாச் சொல்லு மகனே, நல்லா நூறு தபா சொல்லு. இந்தப் பேச்சுதான் தெனமும் ஒன் வாயிலேந்து வரணும்; நான் அதைக் காதுகுளிரக் கேட்டுச் சந்தோசப்படனும். இந்தப் பேச்சைத்தான் நீ தெனமும் ஒம்புள்ளைகளுக்குச் சொல்லி வளக்கணும். ஒம் பயலுக ஒடம்புல ஓடற ஒவ்வொரு துளி ரத்தமும் நம்ம பாண்டிய ராசாக்க பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கணுங்கற வெறியோடதான் ஓடணும். நம்ப பாண்டிய ராசக்களோட பரம்பரைச் சொத்தைக் காப்பாத்த எத்தனை சோழப்பயலுவ உசிரைக் குடிச்சுட்டுச் செத்துப் போனாரு, ஒம் அப்பாரு – எம் புருசன்!  சேதி கேட்டு, என் தாலிய அறுத்து வீசினப்ப எனக்கு ஒரே ஒரு கொறதான் இருந்துச்சு.  'பாண்டிய ராசாக்களுக்காக உசிர விட ஒத்த ஆம்புளப் புள்ளய மட்டும் கொடுத்துட்டுப் போயிட்டியே, எம் மகராசா,'ன்னுதான் செத்துப்போன எம்புருசனுக்காக மாரடிச்சு அழுதேன்.

"அதுனாலதான் என் அண்ணனோட பொட்டப்புள்ளய, அவ வயசுக்கு வந்த கையோட ஒனக்குக் கண்ணாலம் கட்டிவச்சேன். ஏன்னா, நீயும் அவளுமா நெறய ஆம்புளப் புள்ளங்களை நம்ம பாண்டிநாட்டுக்குப் பெத்துக்கொடுக்கணுமின்னுதான். இதுவரைக்கும் பொறந்த ஆறுல அஞ்சு ஆணாப் பொறந்தது எனக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கு. இன்னும் பத்துப் புள்ளங்க பொறக்கணும். எல்லாத்தையும் நல்லா வீரமா வளத்துருப்பா. அதுங்க எல்லாத்துக்கும் ஒம் அப்பன் சொன்ன மாதிரி எழுதப் படிக்கக் கத்துக்கொடுக்க ஏற்பாடு செஞ்சுடு. இது நம்ப குடும்பத்துக்குப் பாண்டிய ராசா கொடுத்த கட்டளை. நமக்கு எத்தனை நஞ்சை, புஞ்சை நிலமெல்லாம் கொடுத்திருக்காரு, அந்த மகராசா! அவுங்க உப்பைத் தின்னுட்டு வளந்த பரம்பரை, நம்ப பரம்பரை. நாம அவுங்களுக்கு சென்ம சென்மமா விசுவாசமா இருக்கணும்" என்று தன் ஆற்றாமையையும், என்ன செய்ய வேண்டும் என்பதையும் வள்ளியம்மை ஒருங்கே வெளியே கொட்டுகிறாள்.

கொட்டிவிட்ட நிம்மதியுடன் – வருங்காலத்தில் சொக்கன் சொல்வதுபோல நடப்பதை மனக்கண்முன் பார்த்துப்பார்த்து, மகிழ்ச்சியில் தன்னைத்தானே மறக்கிறாள்.

"அப்படியே செஞ்சுப்புடறேன் ஆத்தா. நீ எதுக்குத் தெனமும் பொழுதுவிடிஞ்சா இப்படிப் பினாத்திக்கிட்டிருக்கே?" என்று அவளைத் தேற்றுகிறான் சொக்கன்.

"நான் கவலைப்படறதுக்கும் காரணமிருக்குடா சொக்கா.  ஓன் ஆத்தா வூட்டோட கெடக்கற பொட்டச்சிதானே, இவளுக்கு என்ன தெரியுமின்னு நெனச்சுடாதே" என்ற வள்ளியம்மை, "காளையப்பன் போனதுக்கப்பறம் ஒம் பெரியப்பன் குடும்பத்தில் ஆம்புளப் பசங்களே இல்ல.  இருந்த ஒத்தப் பொட்டப்புள்ளயும் பேதிக் காச்சல்ல போயிடுச்சு. அவுங்க வமிசமே இல்லாம போயிடுச்சு. இனிமே பாண்டிய ராசாக்களுக்கு உசிரைக் கொடுக்க ஓம்புள்ளைங்க மட்டுந்தாண்டா நம்ம குடும்பத்தில இருக்கானுவ" என்று தொடருகிறாள்.

"நீ சொன்னியே, சோழநாட்டுல நம்ம மீன்கொடி பறக்கத்தான் போவுதுன்னு – ஒம்புள்ளைங்க வாழயடி வாழயாத் தழைச்சுப் பெருகினாத்தான்டா அது நடக்கும். அதுனாலதான் பாண்டிய ராச ஒன்னை இங்கிட்டு வுட்டுட்டுப் போயிட்டாரு. அந்த நன்றிய நம்ம காலங்காலமானாலும் மறக்கப்படாதுடா! அதுனாலதான் நாம் இப்படிப் பினாத்திக்கிட்டு இருக்கேன்.

"இன்னும் ஒண்ணுடா. நீயும் என்னயப் போலத்தன் பேசிக்கிட்டு இருக்கே. படிச்சவங்க மாதிரித் தமிழைப் பேசணும்டா. ஓன் அப்பாரு என்னமாத் தெரியுமா என்னயத் திட்டுவாரு? 'பாண்டியராசா கடுங்கோன் காலத்துலேந்து நாங்க எழுதப்படிக்க கத்துக்கிட்டுதான் வாரோம்.  பாரு, உங்கிட்டப் பேசிப பேசி எனக்குக்கூட நல்ல தமிழ்ல பேசறது மறந்துபோயிடுது. நாளைக்கே விக்ரமராசா வந்தா இப்படிப் பேசிப்புடுவேனோன்னு பயமா இருக்குது'ன்னு வெரட்டுவாரு. எனக்கு எவ்வளவு பெருமயாத் தெரியுமா இருக்கும்? அவரு மனசு குளிரணும்டா. அவரு காவல்தெய்வமா இருந்து நம்ம எல்லாரையும் நல்லபடியா பார்த்துப்பாருடா. இன்னும் கொஞ்ச நாளுல அவரோட திதி வருதுடா. கோளியடிச்சுக் கொண்டாடிட்டு, ஐயமாருங்களுக்கு அரிசி பருப்பு தானமாக் கொடுக்கனுமிடா!" என்று தந்தையின் திதி வருவதையும் சொக்கனுக்கு நினைவுபடுத்தி முடிக்கிறாள்.

அவள் சொல்லியதை மனதில் அசைபோட்டவாறு சொக்கன் உணவைச் சாப்பிட்டு முடிக்கிறான்.

இவர்கள் பேசுவதைக் கவனமாக மீனாட்சி மனதில் வாங்கிக்கொள்கிறாள். அவள்தானே தனது பிள்ளைகளைத் தன் அத்தையின் விருப்பப்படி வீரர்களாக வளர்க்க வேண்டும்! பாண்டிநாட்டு வீராங்கனையாயிற்றே அவள்!

கங்கைகொண்ட சோழபுரம்

தாரண வருடம் – 1044

சொட்டுச் சொட்டாகத் தூறல் விழுகிறது. சோழ அன்னையே தன் வீரப்புதல்வனை இழந்து விட்டோமோ என்று கலங்கிக் கண்ணீர் விடுவதைப்போல இருக்கிறது. சோழநாடே கலங்கிக் கண்ணீரைப் பெருக்கியவாறுதான் இருக்கிறது.

கங்கையைக் கொணர்ந்து பெருவுடையார் கோவிலுக்குக் குடமுழுக்கு செய்வித்தவரும் – வங்கம், கடாரம், ஸ்ரீவிஜயம், நக்காவரம், இலட்சத்தீவுகள், மாலத்தீவுகள் இவற்றை வென்றவரும் – கோப்பரகேசரி, கங்கைகொண்ட சோழன் என்று பலப்பல பட்டங்களைப் பெற்றவரும் – சோழநாட்டின் தவப்புதல்வருமான இராஜேந்திர சோழதேவர் இறைவனடி சேர்ந்து விட்டிருக்கிறார்.

அவரது பூதவுடல் இன்னும் சிறிது நேரத்தில் தீக்கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட இருக்கிறது. அவருடன் உடன்கட்டையேற முடிவுசெய்திருக்கும் வீரமகாதேவியாரைப் பணிப்பெண்டிர் நன்கு அலங்கரித்திருக்கின்றனர்.

நெருப்பு தீண்டும்போது வெம்மையின் கொடுமை தெரியாமலிருக்கக் கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துக் கஷாயத்தையும் அந்த வீரப்பெண்மணி அருந்த மறுத்துவிட்டிருக்கிறார்.

"களங்கள் பலவில் விழுப்புண்களின் வலியைத் தாங்கியவர் என் கணவர். அவர் தீயின் செந்நாக்குகளுக்கு இரையாகும்போது நான் உணர்வற்ற கட்டையாகவா இருப்பேன்? முடியவே முடியாது. நான் வீரர் ஒருவருக்கு மகளாகப் பிறந்தேன். பார் புகழும் வீரருக்கு மனையாட்டியாக மாலை சூடி இன்பத்தையே அனுபவித்தேன். என் மீது தூசுகூடப் படாத அளவுக்குச் சிறப்பாக வைத்திருந்த என் இறைவனுடன் கட்டையில் உடன்செல்லும் பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கிறது.

"அவருடைய மனையாட்டியும் வீராங்கனை என இவ்வுலகுக்குத் தெரிய வேண்டும். என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். எனக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து, அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கும் எனது தமக்கையர்கள் எனக்கு வீரத்தையும், நெருப்பின் வெம்மையைத் தாங்கும் துணிவையும், உடற்திண்மையையும் கொடுப்பார்கள். அனலும் எனக்கு நீராகும்!" என முழங்கும் அந்த வீராங்கனையைப் பார்த்து அனைவரும் கைகூப்புகிறார்கள்.

அறுபத்திரண்டு அகவையான வீரமகாதேவி, இராஜாதிராஜனின் கையைப் பிடித்து மெல்ல இராஜேந்திரரின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் சிதையை நோக்கி நடைபயிலுகிறார். இராஜேந்திரதேவனும், வீரமகாதேவியின் புதல்வனுமான வீரனும் பின்தொடர்கிறார்கள்.

தலையாரி அவருக்குக் கைலாகுகொடுத்துப் பரிவுடன் அவரைச் சிதையின் மேல் ஏற்றி இருத்துகிறான். அவனது கண்களில் நீர் பெருக்கெடுத்தோடுகிறது.

"சோழக்குடிமகனான நீ கண்கலங்கக் கூடாது. மலர்ந்த முகத்துடன் உன் சக்ரவர்த்தியாரையும் என்னையும் வழியனுப்பி வையப்பா. இந்தா, எங்களை இறைவனிடம் அனுப்பும் உனக்கு எங்களது அன்பளிப்பு!" என்று தனது வைர வளையல்கள் இரண்டை அவனிடம் நீட்டுகிறார் வீரமாதேவி.

துண்டினால் வாயைப் பொத்திக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் தலையாரி.

தன் குலத்தில் உதித்த மாமன்னனை, தனது அம்சமான நெருப்பு தன்னிடம் சேர்ப்பிக்கப் போவதைக் காண வெளிவருகிறான் கதிரவன்.24

வேதியர்கள் உடன்கட்டை ஏறுவதற்கான மந்திரங்களைச் சொல்லிமுடித்ததும், இராஜாதிராஜன் வெந்தணலை அதற்கான பாத்திரத்திலிருந்து இராஜேந்திரரின் மார்பில் வைத்திருக்கும் வரட்டியில் இடுகிறான்.

ஒருகணம் தலைநிமிர்ந்து தன் சிற்றன்னையைப் பார்க்கிறான். தேவியாரின் முகம் அமைதியான மகிழ்வுடன் மலர்ந்திருக்கிறது. அவரது இருகைகளும் இராஜேந்திரரை நோக்கிக் கூப்பியுள்ளன. கணவரின் முகத்தை அன்புடன் காதல்ததும்பும் விழிகள் நோக்குகின்றன.

இராஜேந்திரரின் மார்பிலிருக்கும் வரட்டியில் அழல் தன் செந்நாக்குகளை நீட்டுவதைப் பார்த்த இராஜாதிராஜன், "சென்று வாருங்கள் அன்னையே!" எனத் தழுதழுத்தவாறே சொல்கிறன்.

"உன் தந்தையுடன் சிவபெருமானின் திருவடிக்குச் செல்கிறேன் மகனே! என்னைத் திரும்பி வா என அழைப்பது தவறு. அது முறையுமல்ல. தந்தைக்குத் துணையாகச் செல் என்று பறைவாய் மகனே!" என்று முறைமையை வீரமகாதேவி எடுத்துரைக்கிறார்.

————————————–

[24.சோழர் தம்மைச் சூரியவம்சத்தில் பிறந்தவர் என அழைத்துக்கொண்டனர்.]

"இறைவனடி சேரச்செல்லும் தந்தையாருக்குத் துணையாய்ச் சென்று அங்கு அவரைக் கண்ணாகப் போற்றுங்கள் அன்னையே!" என்று சொல்லித் திரும்புகிறான் இராஜாதிராஜன்.  அவன் கண்களில் நீர்ப்பெருக்கெடுக்கிறது.

உடன்கட்டை ஏறுவது அரச வழக்கம் எனினும் அவன் அதை நேரில் கண்டதில்லை. அத்தை குந்தவி உடன்கட்டை ஏறியதைச் செய்தியாகத்தான் அறிந்துகொண்டான். தாய் திரிபுவன மகாதேவியாரும், தமக்கை அருள்மொழிநங்கையின் தாய் பஞ்சவன் மகாதேவியாரும் தந்தைக்குமுன் இறைவனடி சேர்ந்துவிட்டனர். அவனெதிரில் உடன்கட்டையேறுவது வீரமகாதேவியார்தான்!25

அவனை அவர்தான் எவ்வளவு அன்புடன் நடத்துவார்கள்! அப்படிப்பட்ட அவரைத் தான் இட்ட தீ உயிருடன் கொளுத்தப்போகிறது என்பதை உணரும்போது அவன் இதயம் கனக்கிறது.  தாயாக நினைக்கும் அவர்களைத் தானே உயிருடன் எரிக்கும்படி ஆகியிருக்கிறதே என்பதை எண்ணும்போது – எதிரிகளை இரக்கம் காட்டாது அழிக்கும் அவன் மனம் தள்ளாடுகிறது. தன் மனம் கல்தான் என்று நினைத்தவனுக்குக் 'கல்லும் கசிந்துருகும்' என்பதை அறிந்தால் வியப்பாக உள்ளது.

அத்துடன் தந்தை இராஜேந்திரரை நினைக்கும்போது ஏதோ ஒன்று குறைந்ததுபோலத் தோன்றுகிறது. அவர் விட்டுச்சென்ற இடத்தைத் தன்னால் நிரப்ப இயலுமா என்று நினைத்தால் கொஞ்சம் தயக்கமாகவும், மலைப்பாகவும் உள்ளது. அவர் பெயரைச் சொன்னாலே நடுங்கும் எதிரி அரசர்கள், தன் தந்தையின் வீரத்திற்கும், திறமைக்கும் கட்டுப்பட்டவர்கள்; இனி தன்னை எதிர்த்துப் போர்தொடுக்கவும், நாட்டைத் துண்டாடவும் துணிவர், முனைவர் என்பதையும் நினைவுக்குக் கொணர்ந்து நிறுத்துகிறான்.

'தந்தையாரே, இனி உங்களின் கதகதப்பில் நான் குளிர்காய இயலாது. பாட்டனாரும் தாங்களும் கட்டிக்காத்த சோழப்பேரரசை என் திறமையினால் நிலைநிறுத்த வேண்டும்.  தங்களின் புகழ் நிலைத்திருக்குமாறு செயலாற்ற வேண்டும். தங்கள் மகன் எதற்கும் சளைத்தவனல்ல என்று வரலாறு என்னைப்பற்றிப் பறைசாற்ற வேண்டும்' என மனதில் வேண்டியபடியே திரும்பிப்பார்க்காமல் நடக்கிறான்.

தன் தந்தையும், தன்னை வளர்த்த தாயும் தீயில் கருகுவதைப் பார்க்கும் மனத்திண்மை மாவீரனான தனக்கில்லை என்று அவனுக்குத் தெரிகிறது.

தலையாரியை நோக்கிக் கையசைத்துவிட்டு நடக்கிறான். இராஜந்திரசோழனும், வீரமகாதேவி ஈன்றெடுத்த மாவீரன் வீரனும் அவனைப் பின்தொடர்கின்றனர்.

அவர்கள் திரும்பியதும், தலையாரி வேகமாகக் கொழுந்துவிட்டு எரியச்செய்யும் சிறப்புக்கலவையில் முக்கியெடுத்த சந்தனக் கட்டைகளைத் தீயிட்டுச் சிதையில் அடுக்குகிறான். சிதையிலிருக்கும் அத்தனை சந்தனக் கட்டைகளும் சிறப்புக்கலவையில் ஊற வைத்திருந்தபடியால், உடனே குபீரெனப் பற்றி எரிகின்றன. வீரமகாதேவி அதிக நேரம் நெருப்பின் வெம்மைக்கு ஆளாகித் துன்புறக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

வீரமகாதேவியாரிடமிருந்து எந்தவிதமான ஒலியோ – நெருப்பு அவரைச் சுட்டுப்பொசுக்கி விழுங்கும்போது சிறியதாக ஒரு கதறலோ கேட்கவில்லை.

தீயைப் பெரிதாக்கும் தலையாரியும், அவனது உதவியாளரும்தான் பெரிதாக அழுகின்றனர்.  அனல் கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் நாக்குகள் வீரமகாதேவியார் இருப்பதே தெரியாதபடி மூடி விழுங்கிவிடுகின்றன.

————————————

[25.இராஜேந்திரசோழர் இறந்தபின், வீரமகாதேவியார் உடன்கட்டை ஏறினார் – சோழர்காலச் செப்பேடுகள்.]

பெருவுடையார் கோவில், கங்கைகொண்ட சோழபுரம்

தாரண, ஆனி 27 – ஜூலை 12, 1044

பெருவுடையார் கோவில் மண்டபம் ஒன்றில் தூணில் சாய்ந்தவாறு பிரம்மராயர் சோகமாக அமர்ந்திருக்கிரார். இராஜேந்திரரின் பிரிவு அவரை வாட்டியது போதாதென்பதுபோல அன்று பகல்பொழுதில் நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. அவரது கைகளில் ஓலைக்கட்டு ஒன்று விரித்தபடி இருக்கிறது. அவரது மனம் நடந்தேறிய நிகழ்வை முன்னிருத்திப் பார்க்கிறது…

… இராஜாதிராஜன் அழைத்திருந்ததால் பிரம்மராயர் அரண்மனைக்குச் சென்றிருந்தார்.  இராஜேந்திரர் காலம்சென்றதால் நிறைவேற்ற வேண்டிய நீத்தார்சடங்குகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அதில் கலந்துகொள்ள முன்னமேயே அருள்மொழிநங்கை அரண்மனைக்குச் சென்றிருந்தாள்.

அரண்மனையே களையிழந்து இருண்டிருந்தது.  காவலர் அவருக்கு மரியாதை செலுத்தினாலும், அவர்கள் முகத்திலிருக்கும் சோகத்தையும், இதயத்திலிருக்கும் வெறுமையையும் அவர் அறிந்துகொண்டார். கம்பத்தில் புலிக்கொடி தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது.

அவர் வருவதைக் காவலர்கள் முன்கூட்டியே அறிவித்திருக்கவே, அருள்மொழிநங்கை அவரை எதிர்கொண்டாள். அழுதழுது அவள் கண்கள் கலங்கியிருப்பது தெரிந்தது.

தங்கை அம்மங்கை செல்லப்பெண்ணாக இருந்தாலும், அருள்மொழிநங்கையிடம் இராஜேந்திரர் அளவுகடந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். அம்மங்கையிடம் வெளிப்படையாகக் காட்டும் அன்பை, அவளிடம் உள்ளூரக் காட்டினார்.

அவள் எளிமையான வாழ்வு நடத்தினாலும் மிகமகிழ்வாக இருப்பதும், அரச போகத்தில் வாழும் அம்மங்கை மனநிம்மதியின்றித் தவிப்பதும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

இராஜேந்திரருக்கும் அருள்மொழிக்கும் இடையிலிருந்த பாசம் கண்ணுக்குத் தெரியாத கயிறாகவே எப்பொதும் இருந்தது. அந்தப் பிணைப்பு அவரது மறைவினால் அறுந்துபோய், தாளமுடியாத துயரைக் கொடுத்தது. அவள் தந்தை மீது வைத்திருந்த பாசம் – மற்றவர் கண்களுக்கு வெளிப்படையாகக் காட்டப்படாத பாசம் – கண்ணீராய்ப் பொங்கி வெளிவந்தது.

பிரம்மராயருக்கு அது நன்றாகவே தெரிந்தது. தந்தையின் பிரிவுத் துயரிலிருந்து அவள் முழுவதும் மீளவில்லை என்பதைக் கலங்கிய கண்களிலிருந்தும், அழுது வீங்கியிருந்த முகத்திலிருந்தும் அறிந்துகொண்டார்.

அவரைக் கண்டதும் அருள்மொழிநங்கையிடமிருந்து பெரிய கேவல் வெளிப்பட்டது. வாயைப் பொத்திக்கொண்டு குலுங்கி அழுதாள்.

"கலங்காதே, நங்கை! உன் தந்தையார் பெருமைக்குரிய பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.  சோழர்தம் திலகமாக விளங்கியிருக்கிறார். அம்பலத்தில் கூத்தாடும் ஆடலரசனின் திருவடிகளில் சேர்ந்திருக்கிறார். இது மகிழ்வுக்குரிய நிகழ்ச்சி. அழுதழுது அவரது வீரவாழ்வுக்குக் களங்கம் கற்பிக்கக்கூடாது நங்கை!" என அவளைப் பிரம்மராயர் தேற்ற முற்பட்டார். இருப்பினும், அவர் கண்களும் கலங்கின. அவற்றில் நீர் துளிர்த்தது.

பெரிதாக அழுதுகொண்டு அம்மங்கை அங்கு வந்தாள். நீத்தார் சடங்கைச் செய்வது குடும்ப விவகாரமானதால் – தந்தைக்கு மிகவும் நெருக்கமானவரும், தமக்கையும் கணவரும், தன் கணவருக்காகப் பலமுறை களம்கண்டு மீண்டவரும், தனது நலத்தில் மிக அக்கரை கொண்டவருமான பிரம்மராயர் – தந்தை சிவனடி சேர்ந்ததிலிருந்து ஒதுங்கி இருந்ததை அறிவாள்.

ஆகவே, இராஜேந்திரரின் மறைவுக்குப் பிறகு முதன்முதலாக அரண்மனைக்கு வந்துள்ள அவரைப் பார்த்து, "உங்கள் நண்பரையா தேடிவந்தீர்கள்? இனி நாம் என்றும் இவ்வுலகில் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டார்!" என்று தேம்பித் தேம்பி அழுதாள். அவளையும் கனிந்த சொற்களால் பிரம்மராயர் தேற்றினார்.

"அண்ணன்மார் உங்கள் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்… வாருங்கள்" என அழைத்தாள்.

பதிலேதும் கூறாமல் அவளைப் பின் தொடர்ந்தார் பிரம்மராயர். அவரது வலது கையைப் பற்றியவாறே அருள்மொழிநங்கை பின்தொடர்ந்தாள். அந்தப் பிடிப்பில் கலக்கத்துக்கு வடிகாலைத் தேடுகிறாள் என்று அறிந்தவர், அவள் கையை மெல்ல அழுத்தினார்.

அரண்மனை மண்டபத்தில் இராஜாதிராஜன், இராஜேந்திரதேவன், வீரன் இவர்களுடன் இராஜாதிராஜனின் இரண்டு மகன்களும்,26 இராஜேந்திரதேவனின் மகன் இராஜமகேந்திரனும் அமர்ந்திருந்தனர்.

இராஜாதிராஜனின் புதல்வர் இருவருக்கும் முறையே இருபத்தைந்து, இருபது வயதாகி இருந்தது. நாற்பத்தாறு வயதான இராஜேந்திரதேவனின் வழித்தோன்றல் இராஜமகேந்திரன் இருபத்திரண்டுவயதுக் காளையாகத் திகழ்ந்தான். அம்மங்கையின் ஐந்து வயதான மைந்தன் இராஜேந்திர நரேந்திரன், வீரனின் மகன் எட்டுவயதான அதிராஜனின் உயரமும் பருமனும் இருந்தான். ஆகவே, அவர்கள் ஒன்றாக விளையாடினர்.

அவ்விடத்திலிருந்து சிறுவர்களை அழைத்துச் செல்ல முயன்ற அருள்மொழிநங்கையையும், அம்மங்கையையும், "நீங்களும் அமர்ந்துகொள்ளுங்கள். நாம் உரையாடுவது உங்களுக்கும் தெரிந்தால் நல்லதுதான்" என்று இராஜாதிராஜன் தடுத்து நிறுத்தினான்.

"ராஜா! அம்மங்கை இங்கிருப்பது சரியே.  நான் அரசவாழ்வைத் துறந்துவிட்டேனே! அரசு விவகாரங்களில் நான் கலந்துகொள்வதோ, கருத்துச்சொல்வதோ இல்லையென்பதும் நீ அறிந்ததுதானே!" என்று மறுத்தாள் அருள்மொழிநங்கை.

"எனக்காக நீ இங்கு இரு அக்கா" என அவன் வேண்டியதும், அவள் விழிகள் பெரிதாக விரிந்தன.  ஒன்றும் சொல்லாமல் பிரம்மராயர் அருகில் அமர்ந்துகொண்டாள்.

அனைவரின் கவனத்தையும் தன்பால் திருப்பிய இராஜாதிராஜன், பிரம்மராயரைப் பார்த்து, "இஃது எங்கள் குடும்ப விஷயமாக இருப்பினும், சோழநாட்டு விவகாரமும் ஆகும். தாம் எமது தந்தையின் தோழர், ஆலோசகர், தலைமைத் தளபதி; அமைச்சராகவும் பணியாற்றியதோடு, எமது பாட்டனாரிடமும் நான்காண்டுகள் பணி செய்திருக்கிறீர். இந்தச் சோழப்பேரரசின் நுணுக்கங்களைப் பற்றி நன்கறிந்தவர் இங்கு தங்களைத்தவிர வேறு எவருமில்லர். ஆகவே, இவண் நாம் எடுக்கும் முடிவைத் திருமந்திர ஓலைநாயகமாய்ப் பதிவுசெய்யவும், தங்கள் ஆலோசனையைப் பெறவும் நிச்சயித்திருக்கிறோம்" என்று கூறினான்.

'எமது, நாம்' என்ற சொற்களை அவன் கையாளுவதைச் செவிமடுத்த பிரம்மராயர், சோழ அரசனாகத்தான் இங்கு தம்மை இராஜாதிராஜன் அழைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார்.

ஆகவே, "அப்படியே, அரசே!  என் இறுதி மூச்சு இருக்கும் வரை நான் சோழநாட்டின் ஊழியன்தான். தாங்கள் எனக்குக் கொடுக்கும் மதிப்பைத் தொடர்ந்து பெற்றுவர முழுமூச்சுடன் உழைப்பேன்" என பதிலளித்தார்.

'அரசே' என்று அவர் சொன்னது அருள்மொழிநங்கையின் காதில் விழுந்தது. மூன்று தலைமுறையாக வந்த சோழ அரசர்களுக்கு பணி செய்து வந்த போதிலும், தன்னை ஓர் ஊழியனாக மட்டுமே நினைத்து வந்திருக்கிறாரே என்பதை நினைக்கும்போது ஒரு பக்கம் பெருமையாகவும், மற்றொரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது.

இராஜாதிராஜன் பேசத் தொடங்குகிறான்… "எமது தந்தை கோப்பரகேசரியார் கோலோச்சியபோது அவரது ஆணைகளுக்கு அடங்கிச் செயலாற்றிவந்தது மிக எளிதாக இருந்தது. யாம் இன்றும், என்றும் ஒரு போர் வீரனே!  எனவே, தந்தையார் ஒரொரு தடவை எம்மைப் போருக்கு அனுப்பியபோதும் யாம் மகிழ்வுடனே சென்றோம். போரைத் தவிர வேறெதிலும் எம் மனம் செல்லவேண்டிய தேவை ஏற்படவில்லை.  தற்பொழுதிலிருந்து அனைத்து முடிவுகளையும் அரசனாக யாமே எடுக்கவேண்டிய சூழ்நிலை கோப்பரகேசரியார் மறைவால் ஏற்பட்டுள்ளது.

——————————————–

[26.இராஜாதிராஜனின் புதல்வர்களின் பெயர் தெரியாததால் இங்கு அது குறிப்பிடப்படவில்லை.]

"முதல் முடிவாக, வீரனுக்கு 'வீரராஜேந்திரன்' என்ற பட்டத்தை அளித்துப் பாண்டிநாட்டை எமது சார்பில் ஆள, மதுரைக்கு அனுப்பத் தீர்மானிக்கிறோம். இராஜேந்திரதேவனை உறையூரில் உள்நாடு விவகாரங்களைக் கவனித்து ஆவன செய்யுமாறு பணிகிறோம்.  இராஜமகேந்திரனைச் சேரநாட்டுக்கு நமது பிரதியாக அனுப்பிவைக்க விரும்புகிறோம். இதனால் தமிழ்நாட்டில் எவ்விதத் தொல்லைகளும் எழாமலிருக்கும், அமைதி ஆட்கொள்ளூம் என நம்புகிறோம்" என்று பேரரசனாகத் தன் கன்னிக் கட்டளைகளைப் பிறப்பித்தவன், பிரம்மராயரைப் பார்த்து, "நீர் என்ன நினைக்கிறீர்?" என வினவினான்.

"இளவரசர்கள் என்ன நினைக்கின்றனர்?" என்ற பிரம்மராயர் மற்ற மூவரையும் நோக்கினார்.

"எங்களுக்குச் சம்மதமே!" என்று ஒரே குரலில் பதில்கள் வந்தன.

"இதற்கான எமது ஆணைகளைத் திருமந்திர ஓலைநாயகமான நீர் பதிவுசெய்து விடுக!  தமைக்கையாரும், தங்கையும் இதற்குச் சாட்சிகளாக அமைவர்!"

"அண்ணா" எனத் துவங்கிய அம்மங்கையை இடைமறித்து, "இப்பொழுது யாம் மன்னனாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எம்மை அப்படியே விளித்து உன் மனதில் உள்ளதைச் சொல்வாயாக!" என்ற இராஜாதிராஜனைப் பார்த்து அதிர்ந்துபோன அம்மங்கை, தன்னைச் சமாளித்துக்கொண்டு, "அரசே! என் கணவர்… வேங்கைநாட்டு மன்னர், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கிருஷ்ணையின் தென்கரையிலேயே போரிட்டுத் தவித்துக்கொண்டிருக்கிறார்.  சோழப் பேரரசு அவருக்கு எவ்வுதவி ஆற்றப்போகிறது?" என்று தவிப்புடன் கேட்டாள்.

அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. யார் முதலில் பேசுவது, எதைச் சொல்வது என்ற தயக்கமே அதற்குக் காரணம்.  மெதுவாகத் தொண்டையைச் செறுமிய பிரம்மராயரை அனைவரின் கண்களும் நோக்கின.

"என் மனதிலுள்ளதை அவையில் பகிரத் தங்கள் அனுமதியை வேண்டுகிறேன்" என்று இராஜாதிராஜனை நோக்கினார்.

"அதற்காகத்தானே உம்மை அழைத்துள்ளோம்!"

"கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் முன்னர் சிவனடி சேர்ந்த கோப்பகேசரியாரின் ஆணைக்கிணங்க, 'தமிழகத்திலும் ஈழத்திலும் அமைதியை நிலைநாட்டிவிட்டுத் தாங்கள் பெரும்படையுடன் வருவீர்கள்' என வேங்கைநாட்டு மன்னரிடம் சொல்லியுள்ளேன்.  அப்படித் தயக்கமின்றி வாக்குக்கொடுத்ததற்குத் தங்களின் தந்தையின் கட்டளையே காரணம்" என்று இராஜாதிராஜனின் முகத்தைப் பார்த்தார் பிரம்மராயர். அதில் எதையும் அவரால் காண இயலவில்லை.

"கடந்த ஓராண்டில் கணக்கற்ற வீரர் மடிந்து வருகின்றனர். கிருஷ்ணையையும், கோதாவரியையும், மறுபக்கம் கடலையும் அரணாக முன்னிறுத்தி, நமது தாக்குதல்களை வெற்றிகரமாக விஜயாதித்தன் மேலைச்சளுக்கியர் உதவியுடன் தடுத்து வருகிறான்.  கடற்படையின் உதவியின்றி வேங்கைநாட்டை மீட்க இயலாது.

"தற்பொழுது இலங்கை மன்னரின் கொட்டம் அடங்கிவிட்டது. கோதாவரிக்கு வடக்கிலும், கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் இடையிலும், கடற்படையின் நாவாய்கள் மூலம் நிறையப் படையை இறக்கி, மேலைச்சளுக்கியரை விரட்டுவது காலஞ்சென்ற கோப்பரகேசரியாரின் வாக்கை நிறைவேற்றுவதாகும்.

"இதைத் தங்கள் நினைவுக்குக் கொணர்வது எனது கடமையாதலால் இங்கு எடுத்துரைக்கிறேன்" எனப் பிரம்மராயர் பணிவுடன் பகர்ந்தார்.

அம்மங்கை அவரைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் நன்றி பளிச்சிட்டது.

"தம்பியரை வெவ்வேறிடங்களுக்கு அனுப்பி ஆணையிட்டபடியால், மிஞ்சியிருப்பது நீரும் யாமும்தான். விரைவிலேயே நம்மிருவரும் புறப்பட ஆவன செய்யுங்கள். கடற்படைத் தண்டநாயகர்களுக்குச் செய்தி செல்லட்டும். அலையலையாக அவர்கள் வேங்கைநாட்டின் கீழ்த்திசையிலிருந்து தாக்குதலைத் துவங்கட்டும்" என்று தன் கருத்தைத் தெரிவித்த இராஜாதிராஜன், அவர் நெற்றியில் நெளிந்த கோடுகளைப் பார்த்து, "நீர் மாறாக ஏதோ சொல்ல விரும்புவதுபோலத் தோன்றுகிறது.  தயக்கமின்றி எனக்குத் தெரிவிப்பீராக!" என்று அறிவித்தான்.

"அரசே, தாங்கள் இப்பொழுதான் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். பட்டத்து இளவரசராக எவரையும் அறிவிக்கவில்லை. கோப்பரகேசரியார் மறைந்து, அவருக்குச் செய்த நீத்தார் சடங்குகளும் சிலநாள்கள் முன்புதான் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தாங்கள் போருக்குச் செல்லத்தான் வேண்டுமா? மேலும்…" என இழுத்தவரைப் பார்த்து, "என்ன மேலும்?" என வினவினான்.

அவர் சொல்வது அவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை அவனது குரல் உணர்த்தியது.

"கோப்பரகேசரியார் என்னை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வேங்கைநாட்டுக்கு அனுப்பியபோது முப்பத்திரண்டு ஆண்டாகச் செய்துவந்த கொலைத் தொழிலிலிருந்து விடுப்புப் பெற வேண்டும் என்ற என் விருப்பதினைத் தெரிவித்தேன். 'எமக்காகக் கடைசியாக இம்முறை போர்புரிந்து வருவீராக! இராஜாதிராஜன் படையுடன் ஈழத்திலிருந்து திரும்பியவுடன் உம்மைப் படைத்தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கிறோம்' எனப் பகர்ந்து அனுப்பினார்.

"என்னுடன் வந்த சிறிய படைகளுடனும், சிறந்த இரு படைத்தலைவர்களின் உதவியுடனும், மேலைச்சளுக்கியருக்கு நிறைய உயிர்ச்சேதத்தை விளைவித்தேன். புற்றிலிருந்து வரும் ஈசல் போலத் தங்கள் வீரரைப் பலி கொடுத்து வந்தனர் மேலைச்சளுக்கியர். எனக்கு மனம் தளர்ந்து விட்டது அரசே!" இதைச் சொல்லும்போது பிரம்மராயரின் குரல் கம்மியது.

தான் மேலே கூறப்போவது கசப்பானது என்பதை உணர்ந்தும், குரலில் பரிவை வரவழைத்து நிறுத்திச் சொல்லவந்ததைச் சொல்லத் தொடங்கினார்:

"ஆகவே, தவறாக எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நம்மிருவரைத் தவிர வேறு எவர் வேண்டுமானாலும் செல்லட்டும் என்ற ஆலோசனையைப் பரிந்துரைக்கிறேன். மதுராந்தகத் தமிழ்ப்பேரரையன் கடற்படைகளுக்குத் தலைமை தாங்க, வீரவிச்சாதீர மூவேந்தவேலன், தண்டநாயகன் வெள்ளாள மதுராந்தகன்27 ஆகியோர் தரைப்படைகளை நடத்திச் செல்லட்டும்.  இங்கு நிலைமை சரியாகிப் பட்டத்து இளவரசைத் தாங்கள் நியமிக்கும்வரை இங்கே இருப்பதே சாலச்சிறந்தது. நன்கு சிந்தித்து முடிவுக்கு வருமாறு இறைஞ்சுகிறேன்" என்று தனது வேண்டுகோளைப் பிரம்மராயர் மிகப்பணிவுடன் கூறி முடித்துக்கொண்டார்…

—————————

[27.மதுராந்தகத் தமிப்பேரரையன் சோழச்சேனைத் தண்டநாயகர்களின் மேலாளராகவும், வீரவிச்சாதர (வீரவித்யாதர) மூவேந்த வேலன் நீலகிரிச் சோழமண்டலத்தின் படைத்தலைவனாக இருந்தனர் – எபிக்க்ராஃபிகா கர்நாடிகா (Epigraphica Carnatica). வெள்ளாள மதுராந்தன் இராஜாதிராஜனின் முக்கியப் படைத்தலைவன் – தென்னிந்தியக் கோவில்கள் (South Indian Temples)

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com