பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 15

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 15

ஒரு அரிசோனன்

இராஜாதிராஜனின் பாசறை, கொப்பம், மேலைச்சளுக்கிய நாடு

ஜய, சித்திரை 14 – ஏப்ரல் 27, 1054

தாரை தப்பட்டைகள் முழங்குகின்றன; போர்முரசம் ஒலிக்கிறது. சோழப் படைவீரர் தினவெடுத்த தம் தோள்களைத் தட்டி ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கின்றனர். மேலைச்சளுக்கிய மன்னன் அகவமல்லன் சோமேஸ்வரனின் கொட்டத்தை ஒடுக்கி, வேங்கைநாட்டை மீட்கவும், பாடம் கற்பிக்கவும், கிட்டத்தட்ட ஈராண்டுகளாகத் திரட்டிய படைகளுடன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து வடகரைக்கு இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும் இணைந்து வந்திருக்கிறார்கள்.

கொப்பம்37 என்னுமிடத்தில் மேலைச்சளுக்கியப் படைகளுடன் அன்று காலை போர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நான்காண்டுகள் தொல்லை கொடுத்துவந்த சோமேஸ்வரனுக்கு முதல் அடியாக மேலைச்சளுக்கிய நாட்டின் தெற்கிலுள்ள உச்சங்கி, நுலம்பவாடி, கதம்பலிகை, கொகலி ஆகியவற்றைக் கைப்பற்றி, இருவரும் களிப்புடன் துங்கபத்திரையைக் கடந்து வந்திருக்கின்றனர்.

சிவபெருமானின் அழிக்கும் அம்சமான உருத்திரரே மனித உருவத்தில் வந்திருக்கிறாரோ என அனைவரும் அச்சப்பட்டு ஓடியொளியும் அளவுக்கு இராஜாதிராஜன் வெறியுடன் போரை நடத்தி எதிரிகளை அழித்துவிட்டு வந்திருக்கிறான்.

இப்படி உருத்திரராக உருமாறி வந்திருக்கும் தமது அரசர் கையால் அகவமல்லன் சோமேஸ்வரன் யமனுலகுக்கு அனுப்பப்படுவது உறுதி என மகிழ்வுடன் போரை எதிர்நோக்கி நிற்கிறது சோழப் படை…

…கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து கிளம்புவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே நந்தன ஆண்டு, வைகாசி மாதம் 15ம் தேதியில் (மே 28, 1052)38 இளையோன் இராஜேந்திரதேவனைப் பட்டத்து இளவரசனாக இராஜாதிராஜன் முடிசூட்டுவித்தான். அதற்கு இரண்டு திங்கள் முன்னதாகவே அவனது இரு மைந்தர்களும் துறவறம்பூண்டு அங்கிருந்து நீங்கி விட்டனர்.

இராஜாதிராஜன் தன் உள்ளத்தில் ஓடும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாது மறைத்து வந்தாலும், மைந்தரின் துறவறம் அவனை உள்ளுக்குள் கறையானாகஅரித்துக்கொண்டுதான் வந்தது.

அந்த மனப்புழுக்கத்திலிருந்து விடுபடவேண்டி, மேலைச்சளுக்கியருடன் பொருதப் படை திரட்டும் முயற்சியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டான். மன நிம்மதி தேவைப்படும்போது, தமக்கைக்கும், பிரம்மராயருக்கும் அழைப்பு விடுப்பான். மூவரும் கோவிலில் பெருவுடையாரை வணங்கி, ஆன்மிக உரையாடலில் ஈடுபடுவர்.

துங்கபத்திரைக்கும், கிருஷ்ணாவுக்கும் தெற்கே சோழநாட்டைப் பலப்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது, அவ்வாறுகள் இயற்கையான அரண்களாக விளங்குகின்றன, வேங்கைநாட்டை விட்டுவிட்டு, மீதியிருக்கும் நாடுகளில் அவனது பாட்டனாரின் தமிழ்த்திருப்பணியை நிறைவேற்றுவதில் கவனம்செலுத்தினால் அவனது மனத்துயர் நீங்கும் என்று பிரம்மராயரும் பலவாறு அறிவுரை சொல்லிப் பார்த்தார்.

——————————————-

[37.போர் நடந்த இடமான கொப்பம், தற்பொழுது கொப்பல் என அழைக்கப்படுகிறது. கர்நாடக மானிலத்தில் துங்கபத்திரை ஆற்றுக்கு வடக்கில் சுமார் ஐந்து மைல் (எட்டு கி.மீ.) தொலைவிலும், துங்கபத்திரை அணைக்கு இருபது கி.மீ. வடமேற்கிலும் உள்ளது.

38.சோழர் கல்வெட்டுச் சான்று.]

"பிரம்மராயரே, நான் போர்வீரன், தமிழறிஞனல்லன்" என மறுத்துப் பேசிய இராஜாதிராஜன், "எல்லோரையும்போல் எனது மைந்தர்கள் இருந்திருந்தால், அவர்களில் சிறந்தவருக்கு இளவரசுப் பட்டத்தைக் கட்டிவிட்டு, இராஜேந்திரதேவனை அவன் மைந்தன் இராஜமகேந்திரனுடன் மேலைச்சளுக்கிய நாட்டைத் தாக்குமாறு பணித்தபின், நீர் கூறும் அறிவுரைப்படி தமிழ்த்திருப்பணியில் நாட்டம் செலுத்தியிருப்பேன். இப்போது எனது உள்ளம் எரிமலையாய்க் குமுறுகிறது. எதையாவது அழிக்கவேண்டும், எண்ணற்றவரைக் கொன்று அவர்களின் குருதியை வெள்ளமாகப் பெருகவிட்டு, எனது ஏமாற்றத்திற்கு வடிகால் தேடவேண்டும் அல்லாது அதைச் செயல்படுத்தும்போது நானும் அழிந்து போய்விடவேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

"என் மைந்தர்கள் திறமைக் குறைவானவாராக இருப்பினும் வருந்தியிருக்க மாட்டேன்.  திறமை மிகுந்த என் இளையோன் இராஜேந்திரதேவனுக்கும், அவனது வழித்தோன்றல்களுக்கும் சோழப்பேரரசை மிகமகிழ்வுடன் கொடுத்திருப்பேன். ஆனால், அப்படி நடக்கவில்லை பிரம்மராயரே! என் மைந்தர்களின் உண்மைநிலை மற்றவர்க்குத் தெரியாது போனாலும் – அதை மறைக்க அவர்கள் துறவறம் பூண்டது கல்வெட்டுகளில் பொறிக்கப்படாது போயினும் – எனக்கு அவ்வுண்மை தெரியுமல்லவா? அவ்வுண்மை என் இதயத்தைப் புழுவாகக் குடைந்துவருகிறதே! என் பதினேழாம் வயதில் யானையில் ஏறித் தென்சேரனை வென்றேன்; நாற்பதாண்டுகளாகப் போர்வீரானாக இச்சோழநாட்டுக்கு என்னையே கொடுத்துள்ளேன். அந்த நாட்டுக்கு என் மைந்தர்கள் பயன்படாது போகிறார்களே என்ற சுமையுடந்தானே என் வாழ்நாளை இறுதிவரை கழிக்கவேண்டும்? இச்சுமையுடன் எத்திருப்பணியிலும் என் மனம் ஈடுபட மறுக்கிறது, பிரம்மராயரே!  அக்கா, நீ ஏதாவது உன் மனதிற்குத் தோன்றியதைச் செய்" என்று எழுந்து சென்று விட்டான்.

அருள்மொழிநங்கையும், பிரம்மராயரும் திகைத்து அமர்ந்துவிட்டனர். பிரம்மராயர் நங்கையின் முதுகில் இதமாக வருடிக் கொடுத்து, அவளை அமைத்திபடுத்தினார். அவள் கண்ணீரையும் தன் மேலாடையால் துடைத்தார்.

வெறிகொண்டுதான் இராஜாதிராஜன் படைதிரட்டினான். தன் நேரம் முழுவதையும் அணிவகுப்பைப் பார்வையிடுவதிலும், போர் நடத்தும் முறைகளைப் பற்றிப் படைத்தலைவர்களுடன் கலந்துரையாடுவதிலும், யானைப்படையின் திறமையைச் சோதிப்பதிலுமே கழித்தான். உள்நாட்டு விவகாரங்களை இராஜேந்திரதேவனிடமும், அவன் மைந்தனிடமும் விட்டுவிட்டான். மதுரையில் இருந்த கடைத்தம்பி வீரன் தென்புலத்தில் சோழராட்சியை நிலைநிறுத்தி உதவி செய்தான்.

போருக்கு முதல்நாள் இரவில் உறங்காமல் விழித்தபடி இராஜாதிராஜன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

"அண்ணா, உங்களுக்குச் சிறிது ஓய்வு தேவை. இரவுகூட உறங்காமல் என்ன சிந்தனை?" என்றபடி கூடாரத்திற்குள் நுழைந்தான் இராஜேந்திரதேவன்.

இராஜாதிராஜன் அவனைத் திரும்பிப் பார்த்தான். தனக்கு எப்போதும் தோள்கொடுக்கும் இளையோனாயிற்றே அவன்!

"நாளை அணியை எப்படி வடிவமைப்பது என்று சிந்திக்கிறேன்."

"அதைத்தான் இன்று மாலையே முடிவு செய்துவிட்டோமே?"

"அதில் சிறிது மாற்றம் செய்தாலென்ன என்றுதான்…"

"மாற்றமா? மூன்று நாழிகைப்பொழுது அதைப்பற்றி நன்கு கலந்துரையாடித்தானே முடிவெடுத்தோம்? அதில் குறையேதுமிருக்கிறதா?"

"முறையில் குறையிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால்…" என்று தயங்கினான் இராஜாதிராஜன்.

எதுவுமே கேட்காமல் அவனை உற்றுநோக்கினான் இராஜேந்திரதேவன். அண்ணன் மனதை ஏதோ அரிக்கிறதென்று மட்டும் தெரிந்தது. ஆகையால், அவனே சொல்லட்டும் எனக் காத்திருந்தான்.

"… என் மனதில் ஒருவிதமான ஐயம்.  அகவமல்லன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. அவன் சமரில் சரியாகச் செயல்படமாட்டான் என்று உள்ளுணர்வு உரைக்கிறது.  எனவே…" சிறிது நிறுத்திய இராஜாதிராஜன், "ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்யும்படி அது என்னை எச்சரிக்கிறது" என்றபடி அணிவகுப்பில் தான் செய்யப்போகும் மாற்றத்தைத் தெரிவித்தான்.

இராஜேந்திரதேவனுக்கு அந்த மாற்றம் சரியானதுபோலவும் அதேசமயம், அப்படிச் செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்துமோ என்றும் தோன்றியது. இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தவித்தான்.

"எப்படித் தோன்றுகிறது உனக்கு?"

"அண்ணா, இதுவரை தங்களின் முடிவை எதிர்த்து நான் எதுவும் பேசியதில்லை. இருப்பினும், நமது படையை இரண்டாகப் பிரிப்பது எனக்குச் சற்றுக் கவலையாக உள்ளது. அப்படிப் பிரித்துத்தான் போரிடவேண்டுமெனில், நானும் இராஜமகேந்திரனும் முன்னால் செல்கிறோம்.  கையிருப்புப் படையுடன் நீங்கள் இருங்கள். உதவி தேவைப்படின், முரசச்செய்தி அனுப்புகிறேன். தாங்கள் வந்து கலந்துகொள்ளலாம்" எனத் தன் கருத்தை எடுத்துவைத்தான் இராஜேந்திரதேவன்.

கடகடவென்ற சிரிப்பு இராஜாதிராஜனிடமிருந்து வெடித்தது.

"என்னைக் கிழவனாக்காதே தம்பி! போரிடும் திறமை இன்னும் என்னைவிட்டு நீங்கவில்லை.  இறந்தாலும், போரில் முன்னணியில் போரிட்டு இறக்கத்தான் விரும்புகிறேனே தவிர, நோய்ப்படுக்கையில் அல்ல. என்று, எந்தப்போரில் பின்தங்கியிருக்கிறேன்?  இன்றுவரை வீரர்களை முன்னின்றுதான் நடத்திச் சென்றிருக்கிறேன். நான் பின்தங்கினால் நமது வீரர்களின் ஆற்றலும் பின்தங்கிவிடும். தங்கள் மன்னன் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும்.

"வெற்றி நமதே! உறங்கச் செல். அதிகாலையில் போர்முரசம் முழங்கட்டும். நீ கையிருப்புப் படையுடன் துங்கபத்திரையின் வடகரையில் காத்திரு. தேவை ஏற்படின் உனக்கு அறிவிப்பு வந்துசேரும்!"

அன்புடன் தம்பியின் முதுகில் தட்டி விடைகொடுக்கிறான் இராஜாதிராஜன்.

அவன் ஏற்படுத்திய மாற்றம் அவர்களது சோழப்படைகளைத் தோல்வியின் வாயிலிருந்து விடுவித்து வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பது அச்சமயத்தில் இருவருக்கும் தெரியாமல்தான் போய்விட்டது!

… இராஜாதிராஜன் திரும்பிப் பார்க்கிறான். அருணோதய ஒளியில் அவனது யானையைச் சுற்றி குதிரைப்படையினரும், பின்னால் வில்லாளர்களும் ஆயத்தமாக நிற்கின்றனர்.  இருபதாண்டுகளாக அவனுடன் பல களங்களைக் கண்டதும், இந்திரனின் வாகனமான ஐராவதத்திற்கு இணையாகப் பேசப்படுவதுமான அவனது யானைக்குப் போருக்கேற்றபடி பாதுகாப்புகள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன் மத்தகத்தில் பாகனும், முதுகில் அம்பாரியில் இராஜாதிராஜனும் அமர்ந்துள்ளனர். அம்பாரியில் நிறைய ஆயுதங்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயுதங்களை எடுத்துக் கொடுக்கவும், பின்பக்கம் தாக்க வருபவர்களைப் பற்றி அறிவிக்கவும், அவர்களைச் சாடவும் அவனுக்குப் பின்னால் மன்னனின் தலைமை மெய்காப்பாளன் அமர்ந்திருக்கிறான். மேலைச்சளுக்கியர்கள் பின்பக்கமிருந்தும் தாக்குமளவுக்கு மோசமானவர் என்பதால் அந்த முன்னேற்பாடும் செய்யப்பட்டிருந்தது.  கருப்பும் வெள்ளையுமாக விளங்கிய தன் மீசையை இராஜாதிராஜன் முறுக்கி விட்டுக்கொள்கிறான்.

கதிரவன் உதித்தவுடன் போரைத் துவக்க அறிவிக்கும் முரசொலியை எதிர்நோக்கிச் சோழவீரர் காத்திருக்கின்றனர்.

'விர்'ரென்ற ஒலியுடன் ஓர் அம்பு எங்கிருந்தோ வந்து இராஜாதிராஜனின் இடது புஜத்தில் தைக்கிறது. எதிர்பாரா இத்தாக்குதலால் ஏற்பட்ட வலியைப் பொருட்படுத்தாது இராஜாதிராஜன் திடுக்கிட்டுத் திரும்புகிறான். போர் முரசம் ஒலிக்கவில்லை; அதற்குள் எவரால், எங்கிருந்து எய்யப்பட்டது இந்த அம்பு? பற்களைக் கடித்தவாறே அம்பைப் பிடுங்கி எறிந்த இராஜாதிராஜனின் கண்களில் அனல் பறக்கிறது.

தன் புயத்திலேயே அம்பு தைத்த மாதிரி அவனது மெய்காப்பாளன் துடிக்கிறான்.

மேலும் பல அம்புகள் இராஜாதிராஜனை நோக்கிப் பறந்துவருகின்றன. மெய்காப்பாளன் கேடயத்தைத் தூக்கிப்பிடித்து தன் மன்னன் மீது அம்புகள் படாது பாதுக்காக்கிறான்.  வேறொரு அம்பு யானைப்பாகனின் கழுத்தில் தைக்கவே, அப்படியே சரிந்து கீழே விழுகிறான்.

மேலைச்சளுக்கியர் ஆதவன் கிளம்பு முன்னரே, தங்கள் படையை முன்னோக்கி நடத்தியதோடு மட்டுமல்லாமல், முரசொலி கொட்டிப் போர் தொடக்கத்தை அறிவிக்கு முன்னரே, சோழ மாமன்னனைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த முறையற்ற போரைக் காணவேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கத்துடன், கதிரவன் குருதிப்பிழம்பு வண்ணம் தீட்டியபடி எழுகிறான்.

இராஜாதிராஜன் தனது வலதுகையில் ஏந்திய வாளை உயரத் தூக்குகிறான்.

"போர் தொடங்கட்டும்!  முறையற்ற போர் செய்ய விழையும் வீணர்களை நம் வாளுக்கு இரையாக்குங்கள்! சமர் தொடங்குமுன்னர் உயிர்துறக்க நேரிட்ட ஒவ்வொரு சோழவீரனுக்கும் நூறு மேலைச்சளுக்கியப் பதர்களின் தலையைப் பலியிடுங்கள்! போர் முரசு முழங்கட்டும்!"

அவன் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

முரசொலி காதைப் பிளக்கிறது. சோழ வில்லாளர் தமது தாக்குதலைத் தொடங்குகின்றனர்.  மற்றவர் கேடயங்களைத் தலைக்கு மேல் ஏந்தியவண்னம் முன்னேறுகின்றனர்.

மெய்காப்பாளனின் சைகையைக் கண்டு இன்னொரு யானைப்பாகன் இராஜாதிராஜனின் யானையில் ஏறி அமர்ந்துகொள்கிறான்.

"கஜேந்திரா, போ!  எதிரிப்பேடிகளைச் சின்னாபின்னமாக்கு!" என்று உரக்க ஒலியெழுப்பித் தன் யானையின் முதுகில் பலமாகத் தட்டுகிறான் இராஜாதிராஜன்.

அவனது யானை, போர்க்களமே அதிரும்படி பிளிறிக்கொண்டு முன்னால் ஓடத்தொடங்குகிறது. தன் துதிக்கையில் பிடித்திருக்கும், ஈட்டியின் நீளத்தை ஒத்திருக்கும் இரும்புக் கதையைச் சுழட்டியபடி முன்னேறி ஓடுகிறது.

எதிரிப் படைவீரரும், குதிரைகளும் அந்த இரும்புக் கதையின் தாக்குதலில் அடிபட்டு, உடல் நொறுங்கிக் கீழே விழுகின்றனர். யானைப்படைப் பிரிவினர் தங்களுடைய் இருநூறு யானைகளுடன் இராஜாதிராஜனுக்குப் பக்கபலமாகப் போரில் கலந்துகொள்கின்றனர்.  மேலைச்சளுக்கியரின் வில்லாளர் புறமுதுகிட்டு ஓடத் தொடங்குகின்றனர்.

சோழரின் யானைப்படை அவர்களைத் துரத்திக்கொண்டு வேகமாக முன்னேறுகிறது.  போர்க்களத்தில் அவற்றின் கால்களில் மிதிபட்டும், துதிக்கைகளில் சுழற்றப்படும் இரும்புக்கதைகளால் அடிபட்டு விழுவோரின் மரண ஓலம் விண்ணைப் பிளக்கிறது.

ஐந்து நாழிகைப் பொழுது நடந்த தீவிரமான போரில் மேலைச்சளுக்கியரின் படையில் கால்பங்கு அழிகிறது. தன் வழக்கப்படி, மேலைச்சளுக்கிய மன்னன் சோமேஸ்வரன், தனது படையின் பின்னால் தனக்கு அரணமைத்துப் போரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.  அவனது பார்வையில் தொலைவில் வந்துகொண்டிருக்கும் இராஜாதிராஜனின் யானை கண்ணில் தென்படுகிறது.

"சோழ மகாராஜா தங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார் பாருங்கள்" என்று அகவமல்லன் சோமேஸ்வரனின் படைத்தலைவர்களில் ஒருவன் அறிவிக்கிறான்.

"வரட்டும், வரட்டும்.  நம் திட்டபடி எல்லாம் தயாராக இருக்கிறதா?" என்று சோமேஸ்வரன் வினவுகிறான்.

படைத்தலைவன் தன் கட்டைவிரலையும், ஆள்காட்டிவிரலையும் ஒன்றுசேர்த்து வட்டமாகக் காட்டியபடித் தலையை மேலும் கீழும் ஆட்டுகிறான்.

"பேசிவைத்தபடி குதிரைப் படைகளை இராஜாதிராஜன் முன்னால் அனுப்பி, அவன் தாக்கத் தொடங்கியதும், பழையபடியும் நம் பக்கம் திரும்பி ஓடிவரச் செய்.  நமது திட்டப்படி ஞாபகம் இருக்கட்டும்!" என்று அதட்டும் குரலில் சோமேஸ்வரன் நினைவுபடுத்துகிறான்.

தலையை ஆட்டிய படைத்தலைவன், தன் கையிலிருந்த நீலக்கொடியை உயர்த்திப் பிடித்தவுடன், இருநூற்றைம்பது குதிரைவீரர்கள் இராஜாதிராஜனின் யானைப்படையை நோக்கி விரைகின்றனர்.

குதிரைகள் யானைகளை வேகமாகச் சுற்றிச் சுற்றிவந்து தாக்குகின்றன. விரைவிலேயே இராஜாதிராஜனின் யானைப்படைத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குதிரைவீரர்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள். திட்டப்படி, மற்ற குதிரைவீரர்கள் பின்வாங்கி, தங்கள் குதிரைகளைத் திரும்ப விரட்டிக்கொண்டு செல்கிறார்கள். இன்னும் பல குதிரைவீரர்கள் இராஜாதிராஜனின் யானையைச் சுற்றி வளைத்து, அவனது பாதுகாப்பைத் துண்டாட முனைகின்றனர்.

சோமேஸ்வரனைக் குறிவைத்து ஓடும் குதிரைவீரர்களைத் தன் யானையில் தொடர்கிறான் இராஜாதிராஜன்.

"வேண்டாம் அரசே, வேண்டாம்!  தாங்கள் வெகுதூரம் முன்னேறி வந்துவிட்டீர்கள். நம்முடன் யாரும் இல்லை. நமக்குப் பின்னாலும் எதிரிகளின் குதிரைவீரர்கள்தாம் உள்ளனர். நமது வீரர்கள் நம் துணைக்கு வரமுடியாதவாறு அவர்கள் தடுத்துப் போரிடுகிறார்கள். நமக்குப் பாதுகாப்பு மிகக்குறைவாக உள்ளது – இல்லையில்லை; நமக்குப் பாதுகாப்பே இல்லை. நம் குதிரைப் படைகள் நம்முடன் வந்துசேரும்வரை இங்கேயே காத்திருந்து போர்புரிவோம்" என எச்சரிக்கிறான் அவனது மெய்காப்பாளன்.

"இதென்ன, பெண்பிள்ளைத் தனமான பேச்சு?" என மெய்காப்பாளனைக் கடிந்த இராஜாதிராஜன், "என் கண்ணெதிரே இருக்கும் அகவமல்லனை இப்போதே சென்று எமனுலகுக்கு அனுப்பாமல் காத்திருக்கவா சொல்கிறாய்? அவன் புறமுதுகுக் காட்டி ஓடியொளிவதில் பேர்பெற்றவன். இப்போது விட்டுவிட்டால் மீண்டும் ஓடிவிடுவான். குதிரைப் படைகளை விரைந்து இங்குவரும்படி சைகை செய்! கஜேந்திரா, போ!  போ!" என்று யானையின் முதுகில் பலமாகத் தட்டுகிறான். அதை உணர்ந்த யானை முன்னால் வேகமாக நடைபோடுகிறது.

சோமேஸ்வரனுக்கும் அவனுக்கும் நடுவில் நூறு தப்படிகளே உள்ளன. நடுவில் மேலைச்சளுக்கியரின் குதிரைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. திடுமென்று அவனுக்கு முன்னால் ஓடிய குதிரைகள் அனைத்தும் வலது, இடது பக்கமாகப் பிரித்து ஓடத் தொடங்குகின்றன.

அவற்றுக்கு முன்னால் எட்டடி அகலமான பள்ளம் வெட்டப்பட்டிருப்பது இராஜாதிராஜனின் கண்ணில் படுகிறது. அப்பள்ளம் கிட்டத்தட்ட ஆயிரம் அடி நீளத்திற்கு அகழி போலத் தோண்டப்பட்டுள்ளது. இராஜாதிராஜனின் யானைக்கு குத்தெதிரில் ஓடும் குதிரைகள் எளிதில் அப்பள்ளத்தைத் தாண்டிச் சென்று விடுகின்றன.

யானையால் அப்பள்ளத்தைத் தாண்ட இயலாது. அதைக் கவனிப்பதற்குள் நிலைமை கைமீறிப் போய்விடுகின்றது.

இராஜாதிராஜனின் யானையால் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி நிற்க இயலவில்லை.  அதனுடைய வேகமே அதைப் பள்ளத்தை நோக்கித் தள்ளுகிறது. யானை தன்னால் இயன்ற வரை முயன்று அப்பள்ளத்தைத் தாண்டமுயல்கிறது. அதன் முன்னங்கால்கள் பாதிக்குமேல் பள்ளத்தின் மறுபக்கம் போய்ப் பதிந்தாலும், அதன் எடையைத் தாங்க முடியாமல், அதன் காலின் கீழே உள்ள நிலம் பள்ளத்தில் சரிகிறது. யானையின் வலது முன்னங்கால் பள்ளத்தில் சரிந்து இறங்குகிறது. ஆறடி ஆழமே இருந்தாலும் சரிவு யானையைக் கீழே விழ வைக்கிறது.

நிலைதடுமாறி விழுந்து, யானை சிக்கித் தவிக்கிறது. விழுந்த வேகத்துடன் இடிபட்டதால், அதன் இரண்டு பெரிய தந்தங்களும் உடைந்து விழுகின்றன.

குலுங்கிக் கீழேவிழாமலிக்க, இராஜாதிராஜன் அம்பாரியைப் பிடித்துக்கொண்டு சமாளிக்க முயல்கிறான். தூரத்திலிருந்து இதைக் கண்ணுறும் சோழவீரர்களுக்குத் தங்கள் மன்னர் யானையுடன் பள்ளத்தில் விழுவது தெரிகிறது. உடனே, அந்த இடத்தை நோக்கி விரைகிறார்கள். மேலைச்சளுக்கிய வீரர்கள் அவர்களைத் தடுத்துப் போரிடுகின்றனர். இராஜாதிராஜனை ஈர்த்துப் பின்னர் இடப்பக்கம், வலப்பக்கம் திரும்பிய வீரர்களும் இவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்கள்.

அடுத்தடுத்து நிகழ்வது அனைத்தும் இராஜாதிராஜனுக்கு எதிராக அமைகின்றன. யானை விழுந்த விதம், அவன் அம்பாரியைப் பிடித்திருந்த இடது கையில் பளுவை அதிகமாக்குகிறது.  ஏற்கனவே அம்பு பாய்ந்திருந்ததால் திறன் குறைந்திருந்த அக்கையில், தனது எடையுடன் யானை சரிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும் சேரவே, சரியான சமயத்தில் குதித்து எழ இயலாது போகின்றது.

யானையுடன் பள்ளத்தில் விழுகிறான் இராஜாதிராஜன். அம்பாரி அவனது வலது கையின் மேல் விழுகிறது. அம்பாரியைப் பிணைத்திருந்த கயிறுகளில் அவனின் கால்கள் சிக்கிக்கொள்கின்றன.

அச்சமயத்தில் தன்னைக் காத்துக்கொள்ள யானை சிறிது புரளவே, அம்பாரி சுழன்று அவனின் வலது கையைப் பலமாக அழுத்துகிறது.  'படக்'கென்ற ஒலியுடன் அவனது வலதுகை எலும்பு முறிந்து வெளிவருகிறது. அம்பாரியிலிருந்து கையை விடுவித்துக்கொள்ள முடியாது திணறுகிறான்.

அவனது மெய்காப்பாளன் பதறிப்போய் உதவிக்கு வருகிறான். தன் வாளினால் அம்பாரியைப் பிணைத்திருக்கும் கயிற்றை வெட்டி, இராஜாதிராஜனை விடுவிக்க முயல்கிறான்.  அச்சமயத்தில் அவன்மீது ஒரு ஈட்டி பாய்கிறது. அவன் அப்படியே இராஜாதிராஜன் மேல் சரிந்து விழுகிறான்.

இராஜாதிராஜனின் நிலை இன்னும் மோசமாகிறது. எனினும், தன் வலியைப் பொருட்படுத்தாது புரண்டு, தன் வலதுகையை முரட்டுத்தனமாக இழுக்கிறான். உடைந்த எலும்பு வெளித்தெரிய அவனது கை விடுபடுகின்றது.

இடது கையால் முழுமூச்சுடன் தனது மெய்காப்பாளனின் முதுகில் பதிந்திருந்த ஈட்டியைப் பிடுங்கியெடுத்து, அதையே ஊன்றிக்கொண்டு, அம்பாரியில் அமர்ந்து காலை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கிறான். அதேசமயம், யானையின் அடியில் சிக்கித் துடித்து அலறித் தவிக்கும் பாகனின் ஓலமும் அவன் காதில் விழுகிறது.

பின்புறத்திலிருந்து அவன் தலையில் படாரென்று அடி விழுகிறது. அந்த அடியில் இராஜாதிராஜனின் மகுடம் கீழே விழுகிறது. அம்பாரியில் மல்லாக்கச் சாய்கிறான்.  மேலைச்சளுக்கியப் படைத்தலைவன் ஒருவன் யானையின் மீது தாவி ஏறி வருகிறான்.

அம்பாரியில் படுத்தபடி, ஒரு காலை விடுவித்துக்கொண்ட இராஜாதிராஜன், அவனை ஓங்கி உதைக்கிறான். இதை எதிர்பார்க்காத படைத்தலைவன் நிலைதடுமாறி உட்கார்கிறான்.  இதற்குள் நழுவிய ஈட்டியை மீட்டெடுத்த இராஜாதிராஜன், இடதுகையால் அதைச் சுழற்றி எறிகிறான்.

அந்த ஈட்டி படைத்தலைவனின் மார்பில் ஆழமாகப் பதிகிறது. அவன் பள்ளத்தில் விழுந்து மாள்கிறான்.

"வாருங்களடா, வாருங்கள்! உங்கள் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டுக்கொள்கிறேன்" என்று இராஜாதிராஜன் வெறியுடன் அறைகூவுகிறான்.

ஒன்றுக்கும் உதவாமல் தொங்கும் அவனது வலக்கையிலிருந்து குருதி அருவியாகக் கொட்டுகிறது; பொறுக்க முடியாத வலியால் உடலே அனலாக எரிகிறது; அவன் கண்களுக்கு உலகமே சிவப்பாகத் தெரிகிறது.

இடக்கையை மெல்ல நீட்டி, யானையின் மத்தகத்தில் சரிந்துகிடக்கும் மெய்காப்பாளனைக் கீழே உருட்டித் தள்ளி, அருகிலிருக்கும் தன் வாளை எடுக்கிறான்.

பள்ளத்திற்கு வெளியில் அவன் முன் நிற்கிறான் அகவமல்லன் சோமேஸ்வரன்.

"வாடா சோழா, வா!  இதற்குத்தான் இத்தனை காலம் காத்திருந்தேன்" என்று இராஜாதிராஜன் மீது பாய்கிறான்.

பாய்ந்தவனின் ஈட்டியைத் தடுத்த இராஜாதிராஜனின் இடக்கையில் அதிர்வு ஏறுகிறது.  விருப்பப்படி திரும்பிச் சண்டையிட இயலாதபடி முறிந்த எலும்புடன் தொங்கும் வலக்கை தடுக்கிறது.

அகவமல்லன் சோமேஸ்வரனுடன் சேர்ந்து இன்னும் பல மேலைச்சளுக்கிய வீரர்களும் இராஜாதிராஜனைத் தாக்குகின்றனர். இவர்களின் கூட்டுத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறான் இராஜாதிராஜன்.

படுத்துக்கிடக்கும் அவனை, ஒருவர்பின் ஒருவாராக வாளால் வெட்டிக் கிழிக்கிறார்கள்.  இருப்பினும் அம்பாரியில் சரிந்து படுத்துக்கிடக்கும் அவனது இடக்கையிலிருக்கும் வாள் விழவில்லை. மல்லாந்து படுத்தவண்ணம் வாளச் சுழற்றித் தன்னைத் தாக்குபவர்களுக்கு உடற்காயத்தை உண்டுபண்ணுகிறான்.

சிரித்தபடியே, தள்ளியிருந்தவாறே அகவமல்லன் சோமேஸ்வரன் தனது நீண்ட ஈட்டியை இராஜாதிராஜனின் வயிற்றில் பாய்ச்சுகிறான்.

"கோழையே! எனது மார்பில் குத்த உனக்குத் திறனில்லையா?" என்றபடி அந்த நிலையிலும் வெறியுடன் இராஜாதிராஜன் வீசிய வாள், அகவமல்லனின் கையில் காயத்தை ஏற்படுத்துகிறது.

சோமேஸ்வரனின் அருகிலிருக்கும் வீரனொருவன் இராஜாதிராஜனின் வாள் பிடித்த இடக்கையைத் தன் வாளால் துண்டிக்கிறான். வாளுடன் கீழே விழுந்த அந்த இடக்கை, வாளை இறுகப் பிடித்தபடித் தரையில் விழுந்து துடிக்கிறது.

வயிற்றில் பாய்ச்சிய ஈட்டியை அப்படியே விட்டுவிட்டு, இரண்டு கைகளாலும் தனது வாளை இறுகப் பிடித்து, முழு பலத்துடன் இராஜாதிராஜனின் மார்பில் செலுத்துகிறான் அகவமல்லன் சோமேஸ்வரரன்.

இராஜாதிராஜனின் வாய் புன்னகையில் மலர்கிறது. அதிலிருந்து குருதி பெருகுகிறது.  அகவமல்லன் சோமேஸ்வரனைப் பார்த்தபடி விழித்த விழிகள் விழித்தபடியே நிலைகுத்தி மூடாது நிற்கின்றன.

நாற்பத்திரண்டு ஆண்டுகளாக வெற்றிவாகையையே சூடிவந்த அந்த மாவீரன் இராஜாதிராஜன், தன் விருப்பப்படிப் போர்க்களத்திலேயே தன் யானையின் மீது சாய்ந்தபடி வீர மரணம் எய்துகிறான்.

இராஜாதிராஜனின் யானை பள்ளத்தில் விழுந்ததிலிருந்து மூன்று மணித்துளிகளுக்குள் இந்நிகழ்ச்சி நடந்து முடிந்து விடுகிறது. இது முடியவும், அவனுக்குத் துணையாக ஓடோடியும் வந்த சோழப்படைகள் இதைப் பார்க்கவும் சரியாக இருக்கிறது. தாங்கள் இத்தனை பேர் இருந்தும், தங்களுடன் தோள்கொடுத்துப் போரிட்டு வந்த வீராதிவீரனான மாமன்னன் தங்கள் கண்முன்னே எவ்விதப் பாதுகாப்போ, உதவியோ இல்லாது, களத்தில் வீழ்ந்து யானை மேல் துஞ்சிய தேவரான39 கோலம் அவர்களை நிலைகுலையச் செய்கிறது.

பிரம்மராயர் குடில், கேரளாந்தக சதுர்வேதி மங்கலம், சோழநாடு

சௌம்மிய, ஆவணி 8 – ஆகஸ்ட் 23, 1069

தீ, காட்டில் காய்ந்த சருகுகளையும், மரங்களையும் வேகமாகச் சுட்டெரிந்து விழுங்குவதுபோலப் பதினைந்து ஆண்டுகள் காலத்தால் விரைவில் விழுங்கி ஏப்பமிடப்பட்டிருக்கின்றன. இராஜாதிராஜன் கொப்பம் போரில் யானைமேல் துஞ்சிய பின்னர் இந்தப் பதினைந்தாண்டுகளில்தான் எத்துனை துயரம்தரும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன?

—————————————-

[39.மேலைச்சளுக்கியருடன் நடந்த போரில் யானையின் மீதே வீரமரணம் எய்தியதால், இராஜாதிராஜனை யானைமேல் துஞ்சிய தேவர் என்று அவனது மெய்கீர்த்தி கூறுகிறது. இறுதிப்போரின் விவரிப்பும், இராஜாதிராஜன் இறக்கும் முறையும் கற்பனையே.]

கேரளாந்தக சதுர்வேதி மங்கலத்தில், தன்னுடைய குடிலில், கயிற்றுக் கட்டிலில் படுத்தவாறு மனதில் பொங்கிவரும் நிகழ்ச்சிகளை எண்பத்தொன்பது வயதான சிவசங்கர சிவாச்சாரியாரான இராஜேந்திரசோழ பிரம்மராயார் மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கிறார்…

… இராஜாதிராஜனின் வீர மரணத்தால், அதுவும் யானையின் அம்பாரியில் சிக்குண்டு வலக்கை எலும்பு ஒடிந்து வெளிவந்து தொங்கிய அந்நிலையில் நான்கைந்துபேர் ஒன்றுசேர்ந்து கொன்ற நிலைகண்டு அதிர்ந்துபோன சோழப்படை – இதுகாறும் தங்களை ஊக்கப்படுத்திச் செயல்புரியவைத்த – தலைக்கு நிகரான மன்னன் வீழ்ந்தவுடன் – நிலைகுலைந்து ஓட முற்பட்டன. இதுவரை சோழர்தம் கையில் தோல்வியையே சந்தித்த மேலைச்சளுக்கியப் படை, சோழர்படை தோல்வியுற்று ஓடுவதைக் கண்டு ஆரிப்பரித்தெழுந்து, 'அகவமல்லர் சோமேஸ்வரர் வாழ்க! இராஜாதிராஜனை எமனுலகுக்கு அனுப்பிய மாமன்னன் வாழ்க, வாழ்க!' என்று வெற்றி முழக்கமிட்டது. எதிரிப்படைகளின் ஆரவாரமும், தமையனின் படைகளின் ஓலமிட்ட ஓட்டமும் துங்கபத்திரைக்கு வடக்கில் துணைக்காக நிறுத்திவைக்கப்பட்ட கையிருப்புப் படையுடன் காத்திருக்கும் இராஜேந்திரதேவனின் காதுகளில் நாராசமாக விழுந்தன. வீராதிவீரனான மன்னன் யானை மீது துஞ்சிய செய்தியை அறிந்ததும் அனைத்துப் படைத்தலைவர்களும் செயலிழந்து நிலை தடுமாறினர்.

"பெரிய தகப்பனார் வீர மரணம் எய்திவிட்டாரா? அவரின் உயிரைக் கொண்டுசெல்லவும் காலனுக்குத் துணிவு வந்ததா? சோழ மாதா தன் வீரமகனை இழந்துவிட்டாளா?" என்று கதறினான் இராஜமகேந்திரன். சோழர் பாசறையே மயானமாக ஆகியது. வீரர்களின் படைக்கலன்கள் அவர்தம் கைகளிலிருந்து நழுவி விழுந்தன. மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரியிட்டனார் மன்னனைப் பறிகொடுத்த படைவீரர்கள்.

"முதன்முதலாக நாம் தோற்றோம்!  நமது மன்னனை இழந்த நாம் எப்படி வெற்றியைத் திரும்பப் பெறுவோம்? சோழரின் வெற்றிவீராங்கனை கைம்பெண் ஆகிவிட்டாளே! இவளுடன் எப்படி நாம் சோணாடு திரும்பிச் செல்வோம்? அதனிலும் அவலம் வேறென்ன?"

போர்க்களமே சரம இசை இசைத்தது. கிட்டத்தட்ட நூறாண்டுகளாக வெற்றியைத் தவிர வேறு எதையும் காணாத அவர்களுக்கு மன்னனின் மறைவு, வாளுடன் துண்டிக்கப்பட்ட கையாகத் தோன்றிற்று. கையையும், வாளையும் இழந்தபின் போரிடுவதாவது, வெல்வதாவது? நிலைமை கணத்துக்குக் கணம் மோசமாகிவருகிறது என்பதை அறிந்த இராஜேந்திரதேவன் பொங்கியெழுந்தான்.

"சோழ வீரர்காள்!  மன்னர் இல்லையே என்று நிலைகுலையற்க! பட்டத்து இளவரசனான நானே உங்கள் மன்னன்!" என்றபடி சில நிமிடச் சடங்குகளில் போர்க்களத்திலேயே சோழப்பேரரசனாக முடிசூட்டிக்கொண்டான்.

"நமது மன்னரின் இறப்புக்குப் பழிவாங்குவோம்! அகவமல்லனைத் துரத்திப் பிடித்து அடையாளம் தெரியாதபடி கண்டதுண்டமாக வெட்டிக் கொன்று காக்கைக்கும், கழுகுக்கும் இரையாக்குவோம்! வெற்றிமாதின் காலடியில் அவனது புழுத்த தலையைக் காணிக்கையாக்கி மகிழ்வோம்!" என்று வீரப்பாலைத் தன்னுடமிருக்கும் கையிருப்புப் படைக்கு ஊட்டி ஊக்குவித்துத் தன் தமையன் மாண்டுகிடக்கும் இடத்தை நோக்கி விரைந்தான். அப்போது அவனது தொடையில் பாய்ந்த ஈட்டியால்கூட40 அவனது வேகத்தையும், வீராவேசத்தையும், பழிவாங்கும் வெறியையும் குறைக்க இயலாது போயிற்று. தனது வாளால், தொடையில் தைத்த ஈட்டியின் முனையைத் தோண்டி எடுத்தெறிந்துவிட்டு, காயத்தை ஒரு துணியால் இறுகக் கட்டிக்கொண்டு, போரைத் தொடர்ந்து நடத்தினான். அவனுடைய வேகம், உற்சாகம், பழிவாங்கத் துடிக்கும் வெறி, பாதுகாப்புப் படையுடன், நிலைகுலைந்து ஓடிவந்த சோழப்படையையும் தொற்றிக்கொண்டது.

—————————————-

[40."தொடையில் பட்ட பெரும் காயத்தையும் பொருட்படுத்தாது படைநடத்தித் தோல்வியின் வாயில் சிக்கிய சோழரை மீட்டு வெற்றிவாகை சூடினான், இராஜேந்திரதேவன்" – சோழர் கல்வெட்டுகளும், செப்பேடுகளும்.]

தோல்வியின் வாயில் கவ்வப்பட்ட சோழப்படைகளை மீட்டு, வெற்றிவாகை சூடச் செய்தான், இராஜேந்திரதேவன். அகவமல்லன் சோமேஸ்வரனின் மகனும், பட்டத்து இளவரசனுமான ஜெயசிம்மனைக் கொன்று, தன் தமையனின் சாவுக்குப் பழிதீர்த்துக்கொண்டான்.

சோழர் பக்கம் வெற்றி திரும்பத் தொடங்கியதும், வழக்கம் போலப் போர்க்களத்தை விட்டுப் புறமுதுகிட்டோடி ஒளிந்துகொண்டான் சோமேஸ்வரன். பிடிபட்ட மேலைச்சளுக்கியப் படைத்தலைவர் அனைவரின் தலைகளைக் கொய்த பின்னரும் இராஜேந்திரதேவனின் பழிவாங்கும் வெறி அடங்கவில்லை.

கொல்லபுரத்தையும் (கோலாப்பூர்), மேலைச்சளுக்கியர்தம் தலைநகரம் கல்யாணபுரத்தையும் (கல்யாணி) கைப்பற்றி, அங்கு தன் வெற்றித் தூணை நாட்டிவிட்டே சோழநாட்டுக்குத் திரும்பினான்.

அருள்மொழிநங்கையைத் தம்பி இராஜாதிராஜனின் மறைவு மிகவும் வாட்டியது. ஒரே தாயின் வயிற்றில் பிறக்காவிடினும், ஒருவர் மீது மற்றவர் உயிரையே வைத்திருந்தனர். தனது ஆட்சியின் உச்சக்கட்டத்தில் அநியாயமாக இறந்துபோன தம்பியின் பிரிவுக்கொடுமையைத் தாங்க இயலாது, சில ஆண்டுகளிலேயே நாற்பதாண்டுகள் தன்னுடன் வாழ்ந்த பிரம்மராயரை வாடச்செய்துவிட்டு தம்பி சென்ற இடத்துக்கே சென்றுவிட்டாள்.

அவனுக்குப் பிறகு, தமிழார்வம் மிக்கவனும், இரட்டைப்பாடிகொண்டான் என்ற பட்டம் பெற்றவனுமான தன் மகன் இராஜமகேந்திரனைத் தமிழ்த்திருப்பணி ஆலோசகனாக நியமித்துச் சோழகேரளன் என்று பட்டமிட்டு, தமிழ் தொடர்ந்து வழங்கிவர, அவனைச் சேரநாட்டுக்கு அனுப்பினான் இராஜேந்திரதேவன்.

ஆயினும், தன் தந்தை இராஜேந்திரர், ஆளவந்தானைப் பறிகொடுத்தது போலத் தன் மகன் இராஜமகேந்திரனையும் சில ஆண்டுகளிலேயே திரும்ப நடந்த மேலைச்சளுக்கியப் போரில் பறிகொடுக்க நேர்ந்தது. வேங்கைநாட்டுக்கும், சோழநாட்டுக்குமிருந்த பிணைப்பு மேலும் தொடரட்டும் என்று, அச்சமயம் அங்கு வந்திருந்த தனது மருகன் – தன் தங்கை அம்மங்கைக்கும், இராஜராஜ நரேந்திரனுக்கும் பிறந்த புதல்வன் இராஜேந்திர நரேந்திரனுக்கும் – தன் மகள் மதுராந்தகியை மணமுடித்து அனுப்பி வைத்தான்.

அப்படியே தன் இளையோன் வீரராஜேந்திரனுக்குக் கரிகாலன் என்ற பட்டத்தை அளித்து, பட்டத்து இளவரசனாக முடிசூட்டி, உறையூரிலிருந்து தென் சோழநாட்டையும், பாண்டிநாட்டையும் ஆண்டுவருமாறு பணித்தான்.

இதற்கிடையில் பிலவ ஆண்டில் (பொது ஆண்டு 1061) இராஜராஜ நரேந்திரன் இறந்துவிடவே, இராஜேந்திர நரேந்திரன் வேங்கைநாட்டு மன்னனாக அரியணை ஏறினான்.

இராஜமகேந்திரன் மறைந்த ஏக்கம் இராஜேந்திரதேவனை மட்டுமல்ல, பிரம்மராயரையும் மனம் தளரச் செய்தது.  திருப்பணியை நன்கு நிறைவேற்றுவான், சேரநாட்டில் தமிழ் தழைக்கும் என்ற அவரது நம்பிக்கையும் மனத்தைவிட்டு நீங்க ஆரம்பித்தது. இனி சேரநாட்டில் எப்படித் திருப்பணி தொடரும் என்று வருந்தினார். அதை உறுதிசெய்வது போலச் சோபகிருது ஆண்டில் (பொது ஆண்டு 1063) இராஜேந்திரதேவனும் திடுமென்று விஷக்காய்ச்சலில் இறைவனைடி ஏகிவிட்டான்.

வீரராஜேந்திரன் சோழப்பேரரசனாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரியணை ஏறினான்.

தமிழ்த்திருப்பணியைத் தொடர்வது பற்றி அவனுடன் பேசலாம் என்று சிவகாமியுடன் சென்ற பிரம்மராயரை எதிர்கொண்டான் வீரராஜேந்திரன்.

"பிரம்மராயரே, தங்கள்பால் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன். ஆயினும், இப்பொழுது உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இயலாத நிலைமையில் உள்ளேன். தந்தையார் விரிவாக்கிய சோழப்பேரரசு இப்போது எந்நிலையில் உள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். இலங்கை முழுவதும் நம்மிடம் இருந்ததுபோய், பாதிதான் நம்வசம் உள்ளது. வேங்கைநாடு மேலைச்சளுக்கியரிடம் சென்று இப்போதுதான் மீண்டுவந்திருக்கிறது. இதற்கிடையில் கருநாட்டில் போசளர் (ஹொய்சளர்) என்றதோர் புது அரச பரம்பரை நமக்குத் தொல்லை தரத் துவங்கியிருக்கிறது. சேரரும், பாண்டியரும் எப்படிப்பட்டவர் என்பது தங்களுக்கேத் தெரியும்.

"இப்போது சோழப்பேரரசினைத் தந்தையார் காலத்தைய நிலைக்குக் கொணர்வதே என் தலையாய நோக்கமாகும். அந்த இலட்சியம் நிறைவேறும் வரை தமிழ்த்திருப்பணியை அரசின் தலையாய பணிகளில் ஒன்றாக இருப்பதிலிருந்து விலக்க முடிவு செய்திருக்கிறேன்."

பிரம்மராயருக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. தான் தூக்கி வளர்த்த பிள்ளை, ஆசையுடன், பாசத்துடன் அருள்மொழிநங்கையால் தாயன்பு காட்டப்பட்டவன், தன் மகன் மறையன் அருள்மொழி உண்மையுடன் பணியாற்றிய தலைவன் – தங்கள் குடும்பமே இவனுக்காக உழைத்தும்…?

"திருப்பணிக்காகவென்று எத்தனை பணியாளர்கள், ஒற்றர்கள், கண்காணிகள், எத்தனை மானியங்கள், எத்தனையெத்தனை பதவிகள், செலவுகள்? போருக்கு, தந்தையார் நிறுவிய பேரரசை மீட்டெடுப்பதற்கு அந்தச் செல்வமும், ஆள்பலமும் தேவைப்படுகின்றன. அதற்காகத் திருப்பணியை ஒரேயடியாக நிறுத்தப் போவதில்லை. இருபதில் ஒரு மடங்கு செலவைத் தர முடிவு செய்துள்ளேன். தங்களுக்கும் வயதாகிவிட்டது; எனவே, ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.  தமிழில் சிறந்த காவியங்கள் இயற்றுவோரையும், தமிழ்க் கலைகளையும் ஆதரிக்க ஒரு குழு அமைத்து – என் தந்தையாரின் விருப்பப்படித் தங்களின் பெயரன் சிவசுப்பிரமணியன் திருப்பணியைத் தொடரட்டும். அதுபற்றி ஆண்டுக்கொருமுறை என்னைச் சந்தித்துக் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பித்து வந்தால் போதுமானாது" என்று வீரராஜேந்திரன் தன் முடிவை அறிவித்தது பிரம்மராயரைச் செயலிழக்க வைத்து விட்டது.

தமிழ்த்திருப்பணி தலையாய பணியாய் இருக்கப்போவதில்லை என்ற அறிவிப்பு, பிரம்மராயருக்குத் தனது வாழ்வு முடிவத்ற்குச் சாவுமணி அடித்தாற்போலத் தோன்றியது.

கடைசிச் சொட்டுச் சாற்றையும் பிழிந்துகொண்டு தூக்கி வீசப்பட்ட கரும்புச் சக்கையின் நிலைக்குத் தான் தள்ளப்பட்டது போல உணர்ந்தார்.

கங்கைகொண்ட சோழபுரத்தைவிட்டு நீங்கி, தன் நண்பன் இராஜேந்திரசோழர் தனக்களித்த ஊரான கேரளாந்தக சதுர்வேதி மங்கலத்திற்குக் குடிபுகுந்தார்.

இனி அவருக்குக் கங்கைகொண்ட சோழபுரத்தில் என்ன ஈர்ப்போ, பணியோ இருக்கப்போகும்?

… ஆளரவம் போலத் தோன்றுகிறது. காது சரியாகக் கேட்காவிட்டாலும், கண்பார்வை பாதிக்குமேல் மங்கியிருந்தாலும் நில அதிர்வுகளை அவரால் நன்கு உணர முடிகிறது.

அதனால், தனது குடிலை நோக்கிப் பலர் வருகின்றனர் என அறிந்துகொள்கிறார். ஆகையால், மெதுவாக எழுந்து அமர்ந்துகொள்கிறார்.

அவரது குடிலின் கதவு திறக்கப்படுகிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com