பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 17

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 17

ஒரு அரிசோனன்

பிரம்மராயர் குடில், கேரளாந்தக சதுர்வேதி மங்கலம், சோழநாடு

சௌம்மிய, ஆவணி 8 - ஆகஸ்ட் 23, 1069

சில கணங்கள் நிறுத்திய வாசுதேவபட்டர், “இனி மணவாளநம்பி பகர்ந்த கருத்துகளுக்கு மேலே தொடர்கிறேன். சேதுராயர், சேந்தராயர் பரம்பரையில் சைவ-வைணவக் கலப்புள்ளது; ஆகவே, அவர்கள் சைவ-வைணவ ஒற்றுமையை மிகவும் விரும்புவர்; அதனால் அவர்தம் கருத்து இப்படித்தான் இருக்கும் எனத் தாங்கள் எண்ணிவிடக்கூடாது. சேர மன்னர் குலசேகரர் திருமால் பக்தராகத் திகழ்ந்து குலசேகர ஆழ்வாராகப் போற்றப்படுவதும், அவரது வழிவந்த ராஜசேகரவர்மர் சைவ நாயன்மாரில் ஒருவராகச் சேரமான் பெருமாள் நாயனார் என ஏத்தப்படுவதும் தாங்கள் அறியாததல்ல. நான் தீவிர வைணவனாக இருந்தவன் என்பதும், தங்களிடம் வாதிட்ட பின் சநாதன நெறியின் இரு கண்கள் சைவமும், வைணவமும் என்றறிந்து என் அகந்தையை விட்டவன் நான். ஆயினும், திருமாலை ஒத்த தெய்வம் வேறெவருமில்லை என்று இன்று வரை சிவனார் கோவில் வாயிற்படியை மிதித்தவன் அல்லேன்.

“உலகமே வைணவத்தைத் தழுவ வேண்டும் எனவும் விரும்புபவன் நான். ஆனாலும், இளவரசரின் போக்கு எனக்குக் கலக்கத்தைத் தருகின்றது. ஐயா, வைணவத்தை அரசுச் சமயமாக அறிவித்தால் அது நாட்டிலுள்ள சைவரைப் பொங்கியெழச் செய்யும். சைவ -வைணவக் கருத்து வேறுபாடு, குடும்பப் பூசலாக மட்டும் இருக்காது. ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் எடுக்கச் செய்துவிடும்.”

மனதில் அந்நிகழ்ச்சியை எண்ணும்போது வாசுதேவபட்டரின் உடல் இலேசாக நடுங்குகிறது.

“அது குறைந்த மக்கட்தொகையுள்ள வைணவர்களையே அதிகமாகப் பாதிக்கும்.  தமிழ்நாட்டில் வைணவம் அழிந்துபோய்விடும் ஐயா, அழிந்துபோய்விடும். நீங்கள் கேட்கலாம் - ‘வாசுதேவா, வைணவர் தொகை அதிகமாக இருந்து சைவர் தொகை குறைவாக இருப்பின் இப்போது சொல்வதையே சொல்வாயா’ என்று. ஆமாம் ஐயா, அப்போதும் இப்படித்தான் சொல்வேன். நான் பக்தனே தவிர, வெறியனல்லன். திருமால்பால் பக்தி செலுத்துவது வேறு; வெறியாக வைணவத்துக்கு மற்றவரைக் கட்டாயப்படுத்தி மாற்றுவது வேறு. பல ஆண்டுகளுக்கு முன் தங்களைச் சந்தித்து அளவளாமலிருந்தால் - தாங்கள் என் கண்களை மறைத்திருந்த மாயத்திரையை அகற்றாமலிருந்தால், ஒருவேளை இளவரசரின் நோக்கத்திற்கு ஆதரவு நல்கியிருப்பேனோ என்னவோ? நானறியேன். இப்போது என்னால் சமயப்பூசலை ஆதரிக்க இயலாது. அதுவும் தலையாயதொரு காரணம்!” உணர்ச்சிப்பெருக்கால் அவரின் குரல் கம்முகிறது.

கருணாகரத் தொண்டைமானின் கம்பீரமான குரல் ஒலிக்கிறது.

“ஆசான் அவர்களே! சோழப்பேரரசின் மாமன்னனாவதற்கு விக்கிலன் திட்டம் தீட்டி வருகிறான் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இளவரசர் அதிராஜேந்திரரைக் கைப்பதுமையாக வைத்துக்கொண்டு, சோணாட்டை ஆட்சி செய்ய மனப்பால் குடித்துவருகிறான். அவனது சேனை வடபெண்ணை ஆற்றங்கரை அருகில் வந்திருக்கின்றன. படைத்தலைவர்கள், ஒற்றர்கள் தரும் தகவல்களை உடல் நலம் குன்றியிருக்கும் மாமன்னர் நம்ப மறுக்கிறார். தமது தமையன்மார் காலம்சென்ற வேங்கைநாட்டு மன்னருக்குப் பக்கபலமாக இருந்துவந்ததைப்போல மருமகனாகிவிட்ட விக்கிலன் சோழ இளவரசருக்குப் பக்கபலமாக இருப்பான் என நம்புகிறார். இந்நிலையில் சோணாட்டில் எதிர்காலத்தைப் பற்றிய கவலையே எங்களுக்கு மிகுதியாய் உளது. எங்களுக்கு வழிகாட்ட, அறிவுரைபகர, தங்களைத் தவிர நாங்கள் நம்பும் வேறு எவரும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.”

சுப்பன் அனைவரையும் உணவருந்த அழைக்கிறான்.

“அனைவரும் பசியாறுங்கள். அதுவரை நீங்கள் தெரிவித்த செய்தியைப் பற்றிச் சிந்திக்கிறேன். நீங்கள் கூறியது எனக்கும் மிகவும் கலக்கத்தை உண்டுபண்ணுகிறது. சுப்பா எனக்கு ஒரு குவளை பாலும், இரண்டு வாழைப்பழங்களும் கொடு. சிவனே, நீயும் பசியாறி வா” என்று கண்களை மூடிச் சிந்திக்கத் தொடங்குகிறார்.

அனைவரும் விரைவாக உணவுண்டு விட்டுப் பிரம்மராயர் முன்பு அமர்கின்றனர். கண்களைத் திறந்து அவர்களைப் பார்க்கும் பிரம்மராயர், தெளிவாக ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி மொழிகிறார்.

“’எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்’

என்று இயம்பிய செந்நாப்போதார் வள்ளுவப் பெருமானார்,

‘கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு’ என்றும்

‘நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்’

எனவும் உரைத்திருக்கிறார்.

ஆகையால், நீங்கள் சொன்னதைக் கருத்தில் வைத்து ஆராய்ந்தால், அதிராஜேந்திரன் தானே அழிந்துபோவான் என்றுதான் எனக்குப் படுகிறது. மேலும், நம்நாடும் அவனால் அழிவுறும் என்றேதான் தெளிவாகின்றது.

“என்றுமே திறமை குன்றியவர்களும், நாட்டைச் சிதறடிக்கப்போகும் நலங்குலைந்தவர்களும் அப்பதவியில் அதிக காலம் இருக்க மாட்டார். ஆகவே இந்தச் சோழப்பேரரசைக் கட்டிக்காத்து ஆட்சி புரிய வேறொரு மன்னவன் தேவைப்படுகின்றான். அவன் தமிழனாகவும், சோழர் வழிவந்தவனாகவும் இருக்க வேண்டும். அதைக் கருத்தில்கொண்டால்…” இதைச் சொல்லிவிட்டு பாதியில் நிறுத்திய பிரம்மராயர், சில கணங்கள் அமைதியாக அங்கு அமர்ந்திருப்பவர்களின் முகத்தை நோக்குகிறார்.

‘வேறொரு மன்னவன் தேவைப்படுகின்றான்’ என அவர் பறைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தவே, வாயடைத்துப்போகின்றனர். வரப்போகும் பேரரசனுக்கு எதிராக எப்படிப் போர்க்கொடி உயர்த்துகிறார்? எவரை மன்னனெனப் பரிந்துரைக்க இருக்கிறார்? அவர் மேலே என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

“சோழரின் குலத்தை உய்விக்க இப்பொழுது ஒருவன் தேவை. அத்தகைய ஒருவன் - கோப்பரகேசரியாரின் பெண் வயிற்றுப் பெயரனும் – காலம் சென்ற இராஜேந்திரதேவரின் மகளும் கோப்பரகேசரியாரின் புதல்வனின் புதல்வியுமான மதுராந்தகியை மணந்தவனும் - மாவீரனுமானான இராஜேந்திர நரேந்திரன் ஒருவனே! அவனே சோழநாட்டை நல்வழியில் கொண்டுசெல்லத் தகுந்தவன். உடனே அவனை இரகசியமாக இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்வீராக. வந்தவுடன் அவன் இங்கு என்னைப் பார்க்கட்டும். மாறுவேடத்தில் வரும்படி அவனைப் பணித்ததாகத் தெரிவியுங்கள். அவன் இங்கு வந்துசேரும் வரையாவது வீரராஜேந்திரன் உயிருடன் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! எனவே…” எனத் தனது கருத்துகளையும், அறிவுரைகளையும், திட்டங்களையும் பிரம்மராயர் எடுத்துரைக்கிறார்.

அவரைச் சந்தித்து அறிவுரை பெற வந்திருக்கும் ஒன்பதின்மரும் மகுடி இசையில் கட்டுண்ட நாகங்களாக அவரது அறிவுரையில் அமிழ்ந்து விடுகின்றனர்.

பிரம்மராயர் குடில், கேரளாந்தக சதுர்வேதி மங்கலம், சோழநாடு

சாதாரண, ஆவணி 8 - ஆகஸ்ட் 23, 1070

தூண்டாவிளக்கைப் பெரிதாக்கிய சுப்பன் மெல்லத் தட்டியெழுப்பவே, பிரம்மராயர் மெல்ல எழுந்து அமர்கிறார்.

“என்ன விஷயம் சுப்பா? உறங்கும் என்னைத் தட்டி எழுப்ப மாட்டாயே! பிற்பகலில் நெடுநேரம் உறங்கிவிட்டேனா?”

“இல்லை, ஐயா! தங்களைக் காண நிறையப் பேர் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் தங்கள் பெயரர் சிவசுப்பிரமணியமும் வருகிறார்.”

“என்னைக் காண வருபவர்களை விவரி.”

“முன்னால் வருபவர் முகத்தில் ராஜ களை ததும்புகிறது. அவர் ஒரு ராஜகுமாரராகத்தான் இருக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து வருபவர்கள் ஒரு வருஷத்துக்கு முன் தங்களைக் கண்டு சென்றவர்தாம்” என்று அறிவிக்கிறான் சுப்பையன்.

“எனது அங்க வஸ்திரத்தை எடுத்துக்கொடு. அரச வம்சத்தவரைப் பார்க்கும்போது அது இருக்க வேண்டும்” என்று கையை நீட்டுகிறார். சுப்பையன் அவர்மேல் அங்கவஸ்திரத்தைப் போர்த்துகிறான்.

“சுப்பா, வருபவர்கள் பசியாற ஏதாவது செய்துவிடு. நான் சொல்வதற்காகக் காத்துக்கொண்டிருக்காதே” என்று பிரம்மராயர் சுப்பனை எச்சரிப்பதற்கும், அவரது பெயரன் சிவசுப்பிரமணியன் பரபரப்புடன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்கிறது.

“பாட்டனாரே, தங்களைச் சந்திக்கக் கோப்பரகேசரியாரின் பெயரரான இராஜேந்திர நரேந்திர சோழதேவரும், அவருடன் தங்களை முன்பு சந்தித்த கருணாகரத் தொண்டைமான், சேந்தராயர், வாசுதேவபட்டர் முதலான ஒன்பதின்மரும் வந்திருக்கிறார்கள்” என அறிவிக்கிறான்.

“உடனே அழைத்து வா. ஏன் வாசலிலேயே நிறுத்தி வைத்துள்ளாய்?” என அன்புடன் கடிந்துகொள்வதற்கும், இராஜேந்திர நரேந்திரன், தனது வலப்பக்கம் கருணாகரத் தொண்டமானும், இடப்பக்கம் வாசுதேவபட்டரும் புடைசூழ மற்றவருடன் உள்நுழையவதற்கும் சரியாக இருக்கிறது.

நல்ல உயரமும், அதற்கேற்ற பருமனும், எடுப்பான நாசியும், முறுக்கிவிடப்பட்ட மீசை, கிருதாவுடனும், ஊடுருவிப் பார்க்கும் கண்களும், திரண்ட தோள்களும், விரிந்த மார்புடன் இராஜேந்திர நரேந்திரன் விளங்குகிறான்.

வழக்கப்படி, “திரிபுவனச் சக்ரவர்த்தியாரின் திருமந்திர ஓலைநாயகமாகவும், கோப்பரகேசரியாரின் தலைப் படைத்தலைவராகவும், அமைச்சராகவும் திகழ்ந்த இராஜேந்திரசோழப் பிரம்மராயருக்குச் சோழப்பேரரசின் மாமன்னனாகியிருக்கும் இராஜேந்திர நரேந்திரனாகிய நான் தங்கள் தாள்பணிந்து ஆசி கோருகிறேன்” என்று உரத்த குரலில் கூறி, பிரம்மராயரின் கால்களைத் தொட்டு வணங்குகிறான்.

அவரால் தன் செவிகளில் விழுவதை நம்ப முடியவில்லை.

“மூன்று திங்கள் முன்னர்தான் வீரராஜேந்திரன் இறைவனடி எய்தினான் என்றும், அவனுக்கடுத்து அதிராஜேந்திரன் அரியணை ஏறினான் என்றும் சிவன் என்னிடம் சொன்னான். இப்பொழுது நீ சோழப்பேரரசின் மாமன்னன் என்றால்? அதிராஜேந்திரன் அரசுப் பொறுப்பை உனக்கு விட்டுக் கொடுத்துவிட்டானா?”

அவரது குரலில் வியப்பும், அவநம்பிக்கையும் ஒருசேர ஒலிக்கின்றன. அத்துடன் முறையற்ற செயல் எதுவும் நடந்துவிட்டதோ என்ற கவலையும் தொனிக்கிறது.

“இல்லை, ஆசான் அவர்களே! அவன் இறைவனடி சேர்ந்துவிட்டான். எல்லாம் தாங்கள் தீட்டிக்கொடுத்த திட்டப்படிதான் நடந்தது” என்று இராஜேந்திர நரேந்திரன் நடந்ததை விவரிக்கத் தொடங்குகிறான்…

… “பிரம்மராயர் வலியுறுத்தியபடி, யாருமறியாமல் அவரை ஐந்து திங்கள் முன்பு இராஜேந்திர நரேந்திரன் சந்தித்தான். அப்போது சுப்பையனோ சிவசுப்பிரமணியனோ அங்கில்லாதபடி பார்த்துக்கொண்டனர். கருணாகரத் தொண்டைமானும், வாசுதேவபட்டருமே உடன் வந்திருந்தனர்.

அதிராஜேந்திரன் அரியணை ஏறுவதை விரும்பாத சோழப்படைத் தலைவர்களையும், மற்ற ஏனையோரையும் சந்தித்துக் கலந்துரையாடினான் இராஜேந்திர நரேந்திரன். அவனது பாட்டனாரும், முப்பாட்டனாரும் ஆட்சி செய்தவாறு சோழப்பேரரசை நிர்வகிப்பதாக வாக்குறுதியளித்துத் தனக்கு ஆதரவைப் பெற்று வரத் தொடங்கினான். பிரம்மராயரைச் சந்தித்த ஒன்பதின்மரும் அதற்கு உதவி செய்தனர்.

வீரராஜேந்திரன் விண்ணுலகம் எய்தியதும், அரியணை ஏறிய அதிராஜேந்திரன் வைணவத்தை அரசுச் சமயமாக அறிவித்தான். அவர்கள் எதிர்நோக்கியபடி உள்நாட்டுக் கலகம் விளைந்தது.  அது பெரிதாக உருமாறிச் சைவரும் வைணவரும் ஒருவரையொருவர் தாக்க முற்படாது ஒன்பதின்மரும், அவரது ஆதரவாளரும் மட்டுப்படுத்திக் காத்தனர்.

காஞ்சியிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலும் இவர்கள் நடத்திய செயற்கையான கலவரத்தை அடக்க மேலைச்சளுக்கியன் விக்கிலன் (விக்கிரமாதித்தன்), அவர்கள் எதிர்பார்த்தபடி தனது படையுடன் வந்தான். திட்டப்படி சோழப் புரட்சி வீரர் பின்வாங்கினர்.

அமைதியை நிலைநாட்டியதாக நினைத்த விக்கிலன், தனது மைத்துனனை அரியணையில் அமர்த்திவிட்டு, நிம்மதியாகத் தன் நாட்டுக்குத் திரும்பினான்.

உடனே, கங்கைகொண்ட சோழபுரத்தில் அதிராஜேந்திரனுக்கு எதிராக இராஜேந்திர நரேந்திரன் தங்களது தாக்குதலைத் துவக்கினான். ஒரு நாள்கூட அதிராஜேந்திரனால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

தோல்வியைத் தழுவிய அவனைச் சிறப்புடன் நடத்திய இராஜேந்திர நரேந்திரன், அவனுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகளைக் கொடுத்தான்; ஒன்று, அவனுக்கு அடங்கிச் சோணாட்டிலேயே அவன் கீழ் சிற்றரசனாக இருந்து வரலாம்; இரண்டு, அவனது மைத்துனன் விக்கிலனுடைய மேலைச்சளுக்கிய நாட்டுத் தன் மனைவி மக்களுடன் செல்லலாம்.

இப்படிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போதே, எவரும் எதிர்நோக்காத செயலொன்றைச் செய்தான் அதிராஜேந்திரன்.

இராஜேந்திர நரேந்திரனைத் தாக்கிக் கொல்லத் தனது வாளை உயர்த்தினான். தன்னைக் காத்துக்கொள்ளச் செங்கோலால் தடுத்த வேகத்தில், அதிராஜேந்திரனின் வாள் அவன் கையிலிருந்து நழுவிக் கீழே ஒரு படிக்கட்டின் இடையிலுள்ள பள்ளத்தில் விழுந்து - நுனி மேலும், பிடி கீழேயுமாகக் குத்திட்டு நின்றது.

நிலைமை மோசமாவதைத் தடுக்க எழுந்த இராஜேந்திர நரேந்திரன் தன்னைத்தான் தாக்கப்போகிறான் என்றெண்ணிய அதிராஜேந்திரன் விழுந்திருந்த வாளை எடுக்கச் சென்றபோது படி தடுக்கிக் காலிடறிக் கீழே குப்புற விழுந்தான்.

குத்திட்டு நின்ற வாள் விழுந்தவனின் மார்பைத் துளைத்து இதயத்திலும் புகுந்து, முதுகின் வெளிவந்து அவன் உயிரைப் பிரித்தது. ஒரே சமயத்தில் மார்பிலும், முதுகிலும் விழுப்புண்ணைத் தாங்கியவாறு அதிராஜேந்திரன் மாண்டதால், விஜயாலய சோழனின் ஆண் வழித்தோன்றல் பரம்பரை அடியோடு அழிந்தது…

… இதைக் கேட்ட பிரம்மராயர் பெருமூச்செறிகிறார்.

“விஜயாலய சோழரின் குலம் அதிராஜேந்திரனுடன் அஸ்தமித்துவிட்டதே” என்று வருந்தினார்.

“எது நடக்க வேண்டுமோ, அது நடந்து விட்டது. இனியாவது சோழமாதா அமைதியைத் தழுவுவாளாக” எனக் கண் மூடி இறைவனை வேண்டுகிறார். கண்களில் கோர்த்து நின்ற நீர் முத்துக்களைத் தன் அங்கவஸ்திரத்தால் ஒத்தியெடுக்கிறார்.

“ஆசான் அவர்களே! எனக்கு ஆசி நல்கி அறிவுரை வழங்குங்கள். தங்கள் ஆணைகளை இறுதி வரை நிறைவேற்றுவேன்” என இறைஞ்சி வேண்டுகிறான் இராஜேந்திர நரேந்திரன்.

“இராஜேந்திர நரேந்திரா, நீதான் சோழர் குலத்தை உய்விக்க வந்துள்ளாய்! எனவே, உனக்குக் குலோத்துங்கன் எனப் பட்டமளிக்கிறேன். உன் தாயும், பாட்டியும் தமிழரே. ஆகையால், நீ முக்கால் தமிழன் ஆகிறாய். தமிழகத்தில், கங்கைகொண்ட சோழபுரத்தில் பிறந்து வளர்ந்த நீ, இனி முழுத்தமிழனாகத் தமிழ்நாட்டை ஆளவேண்டும்” என்ற பிரம்மராயர், “சோழப்பேரரசுக்கு மட்டுமல்லாமல், தமிழ் மொழிக்கும், சைவ நெறிக்கும் நீ பாதுகாவலனாக விளங்க வேண்டும்.  அதேசமயம், ஏனைய சமயத்தோருக்கும் நீ மன்னனாக, தந்தையாகப, பாதுகாவலனாக, அச்சமயத்தோர் தத்தம் சமயநெறிப்படி நடக்க இடையூறு விளையாமல் பார்த்துக்கொள்ளல் அவசியம். அதற்கு எடுத்துக்காட்டாக வைணவரான இந்த வாசுதேவபட்டரை உனது அமைச்சராகவும், அறிவுரையாளராகவும் பணியாற்ற ஏற்றுக்கொள். இப்புனிதமான சோழ மண்ணில் சைவ, வைணவ சமயப்பூசல் வரக்கூடாது என்பதற்காகவே இவர் உனக்கு ஆதரவு கொடுத்தார்” என்று சொல்லிச் சில கணங்கள் நிறுத்துகிறார்.

“உனது முப்பாட்டனார் திரிபுவனச் சக்ரவர்த்தியார் பாரத பூமி முழுவதும் தமிழ் கோலோச்ச வேண்டும் என விரும்பினார். பல்வேறு காரணங்களால் அது தடைபெற்றுப் போயிற்று. அதற்கு உன் தந்தையும் ஒருவிதத்தில் காரணமாக இருந்தார். அப்பழிச் சொல்லை நீக்கும்வண்ணம் நீயும், உன் வழித்தோன்றல்களும் தமிழ் வளர்க்கும் சோழ மன்னராய்த் திகழ்தல் அவசியம்.  என் வழித்தோன்றல்கள் தமிழ்த்திருப்பணி ஆலோசகர்களாகப் பணியாற்ற வேண்டுமென உன் தாய்வழிப் பாட்டனார் கோப்பரகேசரியார் விரும்பினார். அதை நீ நிறைவேற்றுவாயாக!  எனது பெயரன் சிவசுப்பிரமணியன் இனி உனது பணியாளனாவான்.

“திரிபுவனச் சக்ரவர்த்தியார் காலத்திலிருந்தே பல்லவர்கள் சோழரின் சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். உனது நண்பனும், பல்லவ இளவரசனுமான கருணாகரத் தொண்டைமானை உன் படைத்தலைவனாகவும், தயக்கமில்லாது ஆலோசனையளிக்கும் நண்பனாகவும் வரித்துக்கொள்.

“தொடக்கத்திலிருந்து உனக்குத் தோள்கொடுத்து, அதற்காகத் தமது உயிருக்கு வரவிருந்த கேட்டையும் பொருட்படுத்தாது உனக்காகவே உழைத்த எழுவரையும் உனது படைத்தலைவராக்குவாயாக.”

தலை சாய்த்து, அவர் சொல்வது தனக்குச் சம்மதம் என அறிவிக்கிறான்.

“பாண்டியர்களுக்கு மதுரையைத் திருப்பிக் கொடுத்துவிடு-அவர்கள் திறை செலுத்தி உனக்குச் சிற்றரசராக இருக்கச் சம்மதித்தால். இரண்டு தலைமுறைகளாக அவர்களின் அரசர் ஆட்சியின்றி இருப்பதால், பாண்டிய மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் சோழ வெறுப்பு அளவு கடந்து நிற்கிறது. அது ஆட்சியை நிலைநிறுத்தப்போகும் உனக்கு நல்லதல்ல. வேண்டுமெனில், பாண்டிநாட்டைக் கூறுபோட்டு, அவற்றைப் பாண்டிய இளவரசர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடு. அது அவர்கள் ஒன்றுசேர்ந்து உன்னை எதிர்ப்பதைத் தவிர்க்கும். வாசுதேவபட்டர் பஞ்சதந்திரம் கற்றவர். உனக்கு அந்த விஷயத்தில் மிக உதவியாக இருப்பார்.

“இதுவரை நிகழ்ந்த போர்களுக்கு உதவிப்பணியாற்றித் தன வணிகர்கள் களைத்துப் போயிருக்கின்றனர். அவர்கள் வணிகம் தழைக்கச் சுங்கவரியை நீக்கி, அவர்களுக்கு உன் நன்றியினைத் தெரிவி. அவர்கள் உனக்குப் பக்கபலமாவர். உன்னைச் சுங்கம் தவிர்த்த சோழன் எனப் பாராட்டுவர்.

“நீ நீண்ட ஆயுளுடன் மக்கள் போற்றும்வண்ணம், சோழர்தம் சிறப்பு ஓங்கும்வண்ணம் ஆட்சி செய்ய எல்லாம்வல்ல தில்லை அம்பலவாணனை இறைஞ்சுகின்றேன். வெற்றி உனதே!  வாழ்ந்து வளர்வாயாக!” என்று மனம் குளிர்ந்து இராஜேந்திர நரேந்திரனை - இல்லையில்லை, குலோத்துங்க சோழனை ஆரத் தழுவி, உச்சிமோந்து குழைந்து வாழ்த்துகிறார் பிரம்மராயர்.

“தங்கள் ஒவ்வொரு சொற்களையும் வேத வாக்குகளாக மதித்து நிறைவேற்றுவன் ஐயா! இந்த உறுதியை நான் தங்களுடைய குலோத்துங்கனாக அளிக்கிறேன்!” எனப் பணிவுடன் உறுதியளிக்கிறான் குலோத்துங்கனான இராஜேந்திர நரேந்திரன்.

“வாசுதேவபட்டரே!  குலோத்துங்கனிடம் உம்மை ஒப்படைக்கிறேன். நீர் ஒரு சிறந்த மதியூகி.  சோழநாட்டின் மேன்மையைத் தன் விருப்பத்துக்கும் மேலாக எண்ணுபவர். நல்ல அமைச்சராக, நல்வழி காட்டி வருவீராக!”

“அப்படியே செய்கிறேன் மகாபுருஷரே” என்று தன் கால்களைத் தொட்டு வணங்கிய வாசுதேவபட்டருக்குப் பிரம்மராயர் ஆசி நல்குகிறார்.

“கருணாகரா, என் மாணாக்கா! இத்தரணியில் உன் பெயர் சிறந்து விளங்கும். எனது மாணக்கி நிலவுமொழியின் பேத்தியை நீ மணந்திருக்கிறாய். நல்ல தமிழ்ப்பணியாற்ற அவளை ஈடுபடுத்து” என்று நீட்டிய அவரது கைகளுக்குள் வந்து அடங்குகிறான் கருணாகரத் தொண்டைமான். அவனது கண்களில் சிறிது நீர் கசிகிறது. தன்னை மெல்ல விடுவித்துக்கொண்டு அவர் தாள்களில் பணிகிறான்.

அவனைத் தொடர்ந்து தன்னைப் பணிந்த மற்ற எழுவருக்கும் ஆசியளித்த பிரம்மராயர், “இனி நான் கூத்தபிரானை வாழ்த்தி ஏத்தி, அவனது திருவடியைச் சேர விரும்புகிறேன். நான் கலந்துகொள்ளும் இறுதியான அரசு நிகழ்ச்சி இதுவாகவே இருக்கட்டும்! உங்கள் அனைவருக்கும் அம்பலவாணனும், திருமாலும் என்றும் துணையிருப்பார்கள். சுப்பன் உங்களுக்காக உணவு படைத்திருக்கிறான். இந்த ஏழை அந்தணன் உங்களுக்கு அளிக்கும் அமுதமாக அதை ஏற்றுப் பசியாறிவிட்டுச் சென்று வருக!” என்று அவர்களை நோக்கிக் கையை உயர்த்தி வாழ்த்துகிறார்.

கூப்பிய கரங்களுடன் அனைவரும் சுப்பையனையும், சிவசுப்பிரமணியனையும் தொடர்ந்து பசியாறச் சென்றவுடன், கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக்கொள்கிறார், கிருஷ்ணன் ராமனாகப் பிறந்து, சிவசங்கர சிவாச்சாரியான இராஜேந்திரசோழப் பிரம்மராயர். மீழ்ந்தெழ முடியாத நீண்ட நெடிய துயில் உடனே அவரைத் தழுவிக்கொள்கிறது.

“பரிதி குலம் தன்னில் உதித்துப் பரசமய இருளகற்றிய, திருப்பரமன் ஆடும் பேரம்பலமும், கோபுரமும், ஆலயமும் பொன்வேய்ந்த உண்மை, சுருதியுடன் சைவ நெறி தழைத்தோங்கித் திருநீற்றுச் சோழனென்று குருமணி மாமுடி புனைந்த குலோத்துங்கசோழ வளவருள் குறித்து வாழ்வோம்!”

- திருப்பாதிரிப்புலியூரில் கிடைத்த குலோத்துங்கன் புகழ்மாலை.

(மூன்றாம் பாகம் முற்றும்)

* கருவூர்த் தேவரிடம் தமிழ்த்திருப்பணிக் குழலுடன் தங்கச்சுருளை நேரில் பெற்று, தமிழ்த் திருப்பணி நடத்திய இராஜராஜர், இராஜேந்திரர், சிவாசாரியப் பிரம்மராயர் இவர்கள் மறைந்து விட்டனர்.

* விஜயாலய சோழனின் ஆண் வம்சமும் அற்றுப் போய்விட்டது.

* சோழப்பேரரசின் வடகோடியிலிருந்து வந்து மாமன்னனான குலோத்துங்கனின் பரம்பரையிடம் சென்ற தமிழ்த்திருப்பணி என்னாகும்?

* அடிமைத்தளையிலிருந்து விடுபடத் துடிக்கும் பாண்டியர் என்செய்வர்?

* எதிர்காலத்தில் கருவூரார் கொடுத்த தமிழ்த்திருப்பணித் தங்கச்சுருளைப் படித்துவரும் ஈஸ்வரன், அழகேசன், காமாட்சி, ஏகாம்பரநாதன், நிமிஷா என்ன செய்வார்கள்?

* வருங்காலத்தில் தமிழ் நிலைக்குமா அல்லாது வழக்கொழிந்து போகுமா?

‘பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு’ நான்காம் பாகத்தில் விடையறிந்துகொள்ளுங்கள்!

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com