பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-இடைச்செருகல் 3

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-இடைச்செருகல் 3

ஒரு அரிசோனன்

ஈஸ்வரனின் வீடு

ஈஸ்வர, ஆடி 16 - ஜூலை 31, 2417

தென்றல் காற்று வீசுகிறது. வீட்டுத் திண்ணையில் சுவரில் சாய்ந்தவாறு ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறான். அவனுக்குச் சற்றுத் தள்ளி ஏகாம்பரநாதனும், அழகேசனும் படுத்திருக்கிறார்கள். அழகேசனின் வாய் ஏதோ ஒரு தெம்மாங்குப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது. காமாட்சி ஒரு சொம்புடன் அங்கு வருகிறாள்.

“குடிக்க மோர் கொண்டு வந்திருக்கேன். வெய்யிலுக்கு குளுகுளுன்னு இருக்கும்” என்றபடி அழகேசனிடம் சொம்பை நீட்டுகிறாள். கடகடவென்று பாதிச்சொம்பு மோரைக் குடித்துவிட்டு ஈஸ்வரனிடம் சொம்பைக் கொடுக்கிறான் அழகேசன்.

வேண்டாமென்று தலையை ஆட்டிய ஈஸ்வரன், “அழகேசண்ணா, பகல் முழுக்க தமிழ்த்திருப்பணிச் சுருளைப் படித்ததால் தொண்டை கரகரன்னு இருக்கு. மோர் குடிச்சா தொண்டையைக் கட்டினாலும் கட்டிடும். மேலே படிக்க முடியாம போயிடும்” என்று சொம்பை ஏகாம்பரநாதன் பக்கம் நகர்த்துகிறான்.

ஒன்றுமே பேசாமல், வேண்டிய அளவு மோரைக் குடித்துவிட்டு காமாட்சியிடம் கொடுக்கிறான் ஏகாம்பரநாதன். அவனது முகம் எதையோ பறிகொடுத்தவன்மாதிரி இருக்கிறது.

அதைக் கவனித்தபடியே சொம்பை வாங்கிக்கொண்ட காமாட்சி, “ஏகாம்பரம், ஏண்டா உன் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு கணக்கா இருக்கு?” என்று கேட்கிறாள்.

“போக்கா, நீ ஒண்ணு.  நிலைமை தெரியாம இஞ்சி, கொரங்குன்னு கிண்டல் அடிச்சுக்கிட்டு இருக்கே! ராசராசசோழச் சக்கரவர்த்தி தொடங்கின வேலையை அவர் புள்ளை ராஜேந்திர சோழச்சக்ரவர்த்தியும் சரி, பேரன்களும் சரி, அம்போன்னு விட்டுட்டாங்க. சிவாச்சாரியார் கடைசி வரை சொல்லிச் சொல்லி அலுத்ததுதான் மிச்சம். யாரும், அவர் சொன்னதைக் கேக்கவே இல்லை. தெலுங்கு நாட்டிலேந்து ஒத்தரைக் கூட்டிக்கிட்டு வந்து குலோத்துங்கன்னு சொல்லி, சோழநாட்டுக்கு ராசா ஆக்கிட்டாங்க. அவரு தமிழை வளர்த்திருப்பாரா என்ன? எனக்கு என்ன சந்தேகம்னா, எல்லாம் தெரிஞ்ச சிவாச்சாரியாரு, அதுதான் பிரம்மராயர் ஆனாரே, அவர் ஏன் அப்படிச் செஞ்சாருன்னுதான் தெரியலை!” என்று அலுத்துக் கொள்கிறான்.

“என்னைக் கேட்டா எனக்கு என்னடா தெரியும்? நீயாவது இம்புட்டுத் தூரம் யோசிக்கறே! என் மரமண்டைலே அந்த மாதிரி நெனைப்பு ஒண்ணுகூட தோணலை. ஐயோ பாவம்னு மட்டும்தான் நெனச்சேன். அவங்க ராசராசசோழச் சக்ரவர்த்தி நெனச்சது போலத் தமிழைப் பரப்பி இருந்தா நாம ஏன் எடுபிடியா, நாயா அலைஞ்சிருப்போம்?” என்று பதில் சொல்கிறாள்.

“நீ சொல்றதை நான் முழுக்க முழுக்க ஒப்புக்க மாட்டேன் காமாச்சி. ராசராசச் சக்ரவர்த்தி தமிழ்நாடு மட்டுமில்லாம, பாரதம் முழுக்கத் தமிழைப் பரப்பணும்னு ஆசைப்பட்டாரு. ஈசுவரன் படிச்சுச் சொன்னதைக் கேட்டா, இதுவரைக்கும் அதுதான் நிறைவேறலைன்னுதான் நெனைக்க வேண்டி இருக்கு. மத்தபடி, அந்த சமயம் தமிழ்நாட்டிலே தமிழைப் பேசிக்கிட்டுத்தானே இருந்தாங்க? குலோத்துங்க ராசாவும் முழு தமிழனா இருந்து ஆட்சி செய்யப் போறதாத்தானே பிரம்மராயருக்கு வாக்குக் கொடுத்தாரு? அப்ப எப்படி நாம எடுபிடிகள் ஆனோம்? அதுதானே புரியாத புதிரா இருக்கு!” என்று காமாட்சி சொல்வதை மறுத்துப் பேசுகிறான் அழகேசன்.

“ஏங்க, சேரநாட்டுலே தமிழை மாத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்கன்னு ஈசுவரண்ணா படிச்சுச் சொன்னாகல்ல, அதை மறந்துப்புட்டீங்களா? அது மாதிரி சோழநாடு, பாண்டிநாடு எல்லாமே வேற பாஷையைப் பேச ஆரம்பிச்சிருக்கலாமல்ல?” என்று எதிர்க்கேள்வி தொடுக்கிறாள் காமாட்சி.

தலையைச் சொறிகிறான் அழகேசன். “ஏ புள்ளை காமாச்சி, நீ சொல்லறதும் ஒருவேளை உண்மையா இருக்கலாமோன்னு தோணுது.”

அதை ஒப்புக்கொள்ளாமல் தலையை ஆட்டுகிறான் ஏகாம்பரநாதன். “இருங்க, இருங்க… அக்கா, நீ சொல்லறது சரின்னா, தமிழ்நாட்டுலே தெற்கே இருந்த அழகேசன் அண்ணாவும், நடுவுலே இருந்த ஈசுவரனும், வடக்குலே இருந்த நாமளும் எப்படி தமிழிலே பேசிக்கிட்டு இருக்கோம்? ஆக, சேரநாடு தவிர மத்த எடம் முழுக்க தமிழைத்தான் எல்லாரும் பேசிக்கிட்டு இருந்திருக்கணும். வேற ஏதோ பெரிசா நடக்கப் போயித்தான் மெல்ல மெல்ல தமிழைப் பேசறது தமிழ்நாட்டுலே கொறஞ்சு போச்சு!” என்று தன் பக்கத்து வாதத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறான்.

அவனது வாதம்தான் உண்மை என்று அறிந்துகொள்ள வரலாறு அறிந்தவர்கள் அல்லரே அவர்கள்!

“என்ன, ஈசுவரண்ணா? நீங்க ஏன் இப்பிடி கம்முனு உக்காந்துக்கிட்டு இருக்கீங்க?” என்று அவனை உசுப்புகிறாள் காமாட்சி.

“உம், என்ன கேட்டே காமாட்சி?” என்று திடுக்கிட்டுக் கேட்கிறான் ஈஸ்வரன்.

“சரியாப் போச்சு. நீ நாங்க பேசினது எதையுமே காதிலே வாங்கலயா?” என்று கேட்கிறான் அழகேசன்.

“இல்லை அழகேசண்ணா. நான் ஏதோ மனசைப் போட்டுக் குழப்பிட்டுக்கிட்டு இருந்தேன். அதுதான் எதுவும் காதிலே விழலே. மன்னிச்சுக்குங்க. நீங்க என்ன கேட்டீங்க?”

“சிவாச்சாரிய பிரம்மராயரு ஏன் தெலுங்கு தேசத்திலேந்து ஒருத்தரைக் கூட்டியாந்து தமிழ்நாட்டுக்கு ராசாவா ஆக்கினாருன்னு ஏகாம்பரனும், ராசராசசோழச் சக்ரவர்த்தி நெனச்சாப்பல தமிழைப் பரப்பி இருந்தா நாம் ஏன் எடுபிடியா, நாயா அலைஞ்சிருப்போம், அப்பிடீன்னு காமாச்சியும் கேட்டாங்க. அதுக்கு ஒத்தொத்தரும் ஓரொரு மாதிரி பதிலைச் சொல்லிக்கிட்டு இருக்கோம். நீதான் எங்கள விட நல்லாப் படிச்சவனாச்சே, உனக்கு ஏதாவது தோணுதா அப்பிடீன்னுதான் கேட்டோம். ஆனா, நீதான் இந்த உலகத்திலியே இல்லையே!”  என்கிறான் அழகேசன்.

“அடேடே! நானும் அதைப் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டிருந்தேன். ராஜராஜச் சக்ரவர்த்திக்கு அடுத்தபடியா தமிழைப் பரப்ப சிவாச்சாரியார்தான் தீவிரமா இருந்தார். ஆனா, ராஜராஜர் நாற்பது வருஷம் உயிர் வாழாம நாலே வருஷத்துலே இறந்து போயிட்டாரு. அது தமிழ்த்திருப்பணிக்கு ஒரு பெரிய இழப்பு. அவருக்கு பின்னால வந்த ராஜேந்திரர் மரபுப் பெருமையை விரிவாக்கணும்னு முடிவெடுத்தார். தன் நண்பனான சிவாச்சாரியாரை தமிழ்த் திருப்பணியிலேந்து திசை திருப்பி முழுக்க முழுக்க ஒரு ராணுவ வீரரா, தளபதியா உபயோகப்படுத்தினார். அதுனால தமிழ்த் திருப்பணியோட வேகம் குறைஞ்சுபோச்சு. தவிரவும், தன் உடம்பிலே இருக்கற வியாதிதான் நமக்கு எதிரிங்கற மாதிரி, ராஜேந்திரரோட தங்கை மகனும், மருமகனுமான ராஜராஜ நரேந்திரன், நிலவுமொழி கிடைக்காததுனால தமிழுக்கு எதிரா தெலுங்கை தன் நாட்டிலே நிலைநிறுத்தினார்.

“ராஜேந்திரர் செத்துப்போனதுக்கு அப்புறம், சிவாச்சாரிய பிரம்மராயர் ஓய்வு பெற்று விட்டார். அடுத்து வந்த ராஜாக்கள் தமிழைப் பரப்பறதுல அவங்களோட கவனத்தைச் செலுத்தலை.  நாட்டைக் கட்டி ஆளறதுதான் அவங்களுக்கு முக்கியமா இருந்துச்சு. அதுனால, அவருக்கு தன் முயற்சிகள் எல்லாமே, விழலுக்கு நீர் பாய்ச்சற மாதிரிதான்னு தோணி இருக்கலாம் இல்லையா? மேலும், அவருக்கு வயசு ஆயிட்டதுனால, ஓய்வு எடுத்துப்போம், வயசு குறைஞ்சவங்க வேற யாராவது திருப்பணியைத் தொடர்ந்து நடத்தட்டும்னு முடிவும் எடுத்திருக்கலாமே!” ஈஸ்வரன் தனது கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்.

“தெலுங்கு தேசத்திலேந்து ராஜேந்திரரோட பேரனை சிவாச்சாரிய பிரம்மராயர் ஏன் வரவழைச்சார்னு ஏகாம்பரம் கேட்டான். கலகம், உள்நாட்டுச் சமயப்பூசல் இல்லாம, சோழநாடு நிம்மதியா இருக்கணும்கறதும், ஆளத் திறமையுள்ள ஒருத்தர் சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு ராஜா ஆகணும்கறதும்தான் அப்ப அவருக்கு முக்கியமா இருந்துச்சு. படைத்தலைவர்கள் திறமையில்லாத அதிராஜேந்திரருக்கு எதிரா புரட்சிபண்ணினா ராஜ்ஜியம் சிதறிப் போயிடும். துண்டுதுண்டா இருக்கற சிற்றரசுகளை விட ஒண்ணா இருக்கற சாம்ராஜ்ஜியம் தமிழ்த்திருப்பணிக்கு நல்லதுன்னு நினைச்சு, அந்த முடிவை ஒரு ராஜதந்திரியா, தீர்க்கதரிசியா எடுத்திருக்கலாம் இல்லையா!

“தவிரவும் ராஜேந்திர நரேந்திரர், அதுதான் ராஜராஜ நரேந்திரரோட மகன், ராஜேந்திரரோட பெண்வழிப் பேரன் - குலோத்துங்க சோழர் - கங்கைகொண்ட சோழபுரத்திலே தமிழையும், தமிழ் பண்பாட்டையும் கத்துக்கிட்டு ஒரு தமிழனாகத்தானே வளர்ந்தாரு! அவரோட தாத்தா ராஜேந்திரர், கொள்ளுத்தாத்தா ராஜராஜர், பாட்டி குந்தவி, அம்மா அம்மங்கை, மனைவி மதுராந்தகி, மாமா ராஜாதிராஜன், மாமனார் ராஜேந்திர தேவன் எல்லோரும் தமிழர்களான சோழர்கள்தானே! தன்னோட அப்பா ஒரு தெலுங்கு அறிவாளிகிட்ட படிச்ச மாதிரி இல்லாம, தமிழ்த் திருப்பணி ஆலோசகரான சிவாச்சாரிய பிரம்மராயர்கிட்டதானே எல்லாத்தையும் கத்துக்கிட்டாரு? அதிராஜேந்திரரை விட்டா அவர்தானே சோழநாட்டுக்கு அடுத்த வாரிசு?  அதுனாலேதான் இக்கட்டான ஒரு சூழ்நிலைலே பிரம்மராயர் அந்த முடிவை எடுத்து குலோத்துங்கரை வரவழைச்சாரு; எல்லாப் படைத் தளபதிகளையும், சமயப் பெரியவர்களை ஏத்துக்கச் சொன்னார்னு நினைக்கிறேன்” என்ற ஈஸ்வரன், தனது பேச்சு ஏகாம்பரம், அழகேசன், காமாட்சியின் முகத்தில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று பார்க்கிறான். அவர்கள் அமைதியாக அவனைப் பார்க்கவே, மேலே தொடர்கிறான்.

“நம்மைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிலேயே தமிழ் பேசறது இல்லாது போச்சுங்கறதுதான் இப்பத் தெரிஞ்ச விஷயம். நமக்கு நம்ம தமிழ்நாடு எவ்வளவு சீரும் சிறப்புமா இருந்துதுன்னும், நம்ம தமிழ் ராஜாக்கள் எப்படிச் சிறந்து விளங்கினாங்க அப்படீன்னும் இந்தத் திருப்பணிச் சுருள் சொல்லிட்டு வருது. ஒருவேளை தமிழ்நாடு எப்படி இந்த மாதிரி ஆச்சுன்னு அது இனிமே சொல்லப் போகுதோ என்னவோ? சிவாச்சாரிய பிரம்மராயரின் பரம்பரை, திருப்பணியைப் பத்தி சுருள்லே எழுதிக்கிட்டு வரணும்னு ராஜேந்திர சோழர் எழுதிவைச்சுட்டுத்தானே போனார்! தவிர, இந்தச் சுருளை ஏன் கங்கைகொண்டபுரம் கோவில்லே ரகசியமான இடத்துலே வைச்சு மூடிட்டாங்க, திருப்பணியைப் பத்தி தொடர்ந்து எழுத வேண்டாம்னு ஏன் முடிவு எடுத்தாங்கன்னு ஒருவேளை இதுலே எழுதி இருக்காங்களோ என்னவோ? எப்படியும் இந்தச் சுருளை முழுக்கப் படிச்சா நமக்கு விவரம் தெரிஞ்சுடும்னுதான் நினைக்கறேன்” என்று முடிக்கிறான் ஈஸ்வரன்.

“இவர் சொல்லறதுதான் சரி!” என்று ஒரு குரல் ஒலிக்கவே, நால்வரும் திரும்புகிறார்கள்.

புன்னகை தவழும் முகத்துடன் நின்றுகொண்டிருக்கிறாள் நிமிஷா: “நான் பெங்கால்லேந்து வந்திருந்தாலும், எனக்கு வங்காள மொழி தெரியாது. எங்கம்மாவும் நானும் பேசினது இந்திதான். இப்ப நான் நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். எங்க குழந்தைங்க தமிழைப் பேசித்தான் வளரப் போகுதுங்க. அப்ப நானும், என் குழந்தைங்களும் தமிழர்களா, வங்காளிகளா, இல்லை இந்திக்காரங்களா?”

அவள் தொடுத்த கேள்விக் கணைக்கு பதில் உடனே வருகிறது அழகேசனிடமிருந்து. “நிமிசா, உன் குழந்தைகள் மட்டுமில்லே, நீயும் தமிழர்கள்தான். ஒருத்தரோட அம்மா யாரு, பாட்டி யாரு, தாத்தா யாரு, முப்பாட்டனார் யாருங்கறது முக்கியமில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசி வளர்றவங்க தமிழர்கள்தான். உன் குழந்தைங்க தமிழைப் பேசித்தான் வளரப் போறாங்கன்னு நீ சொல்றே, நீயும் இப்ப தமிழைத்தான் பேசுறே. ஒருத்தரோட முன்னோர்கள் தமிழைப் பேசலை, அதுனால இப்ப தமிழ் பேசி வளர்றவங்களைத் தமிழரா ஒத்துக்க மாட்டோம்னு சொல்லறது தப்பு மட்டும் இல்லை நிமிசா, அது குருட்டு வெறி!” அவனது குரலில் உணர்ச்சி இருக்கிறது, உறுதி இருக்கிறது. மற்றர்கள் அவன் சொன்னதைக் கேட்டு அசந்து போய் விடுகிறார்கள்.

“அதுதான் சரி, அழகேசண்ணா. நீங்க சொல்றபடி பார்த்தா குலோத்துங்க ராஜாவும் தமிழர்தான். இந்த உலகத்திலே எங்கே இருந்தாலும் சரி, தமிழ் பேசறவங்க தமிழர்கள்தான். நீங்க, காமாட்சி அக்கா, இவரு, ஏகாம்பரம் எல்லோரும் என்னை உங்க குடும்பத்திலே ஒருத்தியா, தமிழ்ப் பெண்ணா ஏத்துக்கிட்ட மாதிரி நாம் ஏன் குலோத்துங்க மகாராஜாவைத் தமிழரா ஏத்துக்கக் கூடாது? நாம தமிழர் எல்லோரையும் ஒண்ணாச் சேத்துக்கணும். பிரிக்கக் கூடாது” என்று நிமிஷா சொல்வது அனைவர் உள்ளத்தையும் தொடுகிறது.

“அடேயப்பா, உங்க ரெண்டு மனசுக்குள்ளேயும் தமிழ் உணர்ச்சி இப்படி ஒரு ஊத்தாப் பெருகும்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலே” என்கிறாள் காமாட்சி.

“குலோத்துங்க மகாராசா தமிழரா, தெலுங்கரான்னு இனிமே கேள்வி கேக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தமிழனா அரசாட்சி செய்யணும்னு பிரம்மராயர் சொன்னதை அவர் ஒத்துக்கிட்டார் இல்லையா. அதுனால அவர் தமிழராத் தமிழ்நாட்டிலே அரசாட்சி செய்தார்னே நாம எடுத்துக்குவோம். அதுசரி, நிமிசா.  இதென்ன உன் கையிலே? என்ன கொண்டு வந்திருக்கே?” என்று நிமிஷா கையில் இருக்கும் சிறிய சதுரமான டப்பாவைப் பார்த்துக் கேட்கிறாள் அவள்.

“காமாட்சி அக்கா, இது எங்க அம்மா வச்சிருந்த டப்பா. ஷெனாயை விட்டு எங்கே போனாலும் எங்க அம்மா இந்த டப்பாவையும் கூடவே எடுத்துக்கிட்டுத்தான் போவாங்க. இதுலே என்ன இருக்குன்னு கேட்டா, ‘சமயம் வர்றப்போ சொல்றேன்’ அப்படீன்னு சொல்லுவாங்க. ஷெனாய்லேந்து தஞ்ஜூ போறப்ப, இதை மறந்து வச்சுட்டுப் போயிட்டாங்க. அதுனால, நாம மூணு பேரும் தஞ்ஜூ வர்றபோது, என்னை இதை எடுத்துட்டுவரச் சொன்னாங்க. ஆனா, சீனா போகறப்ப மறுபடியும் இதை மறந்து ஒரு பெட்டியிலே வைச்சுட்டுப் போயிட்டாங்க. நான் தஞ்ஜூ ஹோட்டல்லேந்து வந்தப்ப என் துணிமணிகளை அந்தப் பெட்டியிலே போட்டு எடுத்து வந்தேன். அந்தப் பெட்டியிலே அடியிலே தங்கியிருந்தது இந்த டப்பா. இதைத் திறக்க முடியலை. இதிலே என்ன இருக்குன்னு பார்க்கணும். அதுதான் இதை இவரோ, இல்லை அழகேசன் அண்ணனோ திறந்து கொடுத்தா, உள்ளே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்” என்று அந்த டப்பாவைக் காமாட்சியிடம் நீட்டுகிறாள் நிமிஷா.

அந்த டப்பா பளபளவென்று, வெளிர்நீல வண்ணத்தில் இருக்கிறது. நான்கு அங்குலத்திற்கு நான்கு அங்குலமும், இரண்டு அங்குல கனமும் இருக்கிறது. அதைக் குலுக்கிப் பார்க்கிறாள் காமாட்சி.  உள்ளே ஏதோ ஆடும் சத்தம் கேட்கிறது. அவளிடமிருந்து அந்த டப்பாவை வாங்கிப் பார்க்கிறான் ஈஸ்வரன். அதை திறப்பதற்கு எந்தவிதமான வசதியும் இல்லை. புரட்டிப் புரட்டிப் பார்த்தும் அதை எப்படித் திறப்பது என்று அவனுக்குத் தெரியாததால் டப்பாவை அழகேசனிடம் நீட்டுகிறான்.

சிறிது நேரம் அதை ஆராய்ந்து பார்த்த அழகேசன் மெல்லச் சிரித்துவிட்டு அந்த டப்பாவை ஒரு பக்கத்தின் ஓரமாக நிறுத்தி வைத்து மறு பக்கத்தில் பலமாக ஒரு தட்டுத் தட்டுகிறான். டப்பா தாமரை இதழ்கள் மாதிரி விரிந்து திறந்து கொள்கிறது. அனைவரும் அதை வியப்புடன் பார்க்கிறார்கள். உள்ளே கருநீலத்தில் ஒரு பிளாஸ்டிக் பை இருக்கிறது. அதில் பொன்வண்ணத்தில் வேலைப்பாடுகள் வரையப்பட்டிருக்கின்றன. அந்தப் பையை நிமிஷாவிடம் நீட்டுகிறான் அழகேசன். ஆவலுடன் அதை வாங்கித் தலைகீழாகக் கவிழ்க்கிறாள் நிமிஷா. மூன்றங்குல நீளம் உள்ள இரண்டு ஓலைகள் இருக்கின்றன. ஐம்பொன்னால் செய்யப்பட்ட பதக்கம் ஒன்று இருக்கிறது. ஒரு நிழற்படமும் இருக்கிறது.

முதலில் நிழற்படத்தை எடுத்துப் பார்க்கிறாள் நிமிஷா. அதில் அவள் அம்மா ஷிஃபாலியும், கிட்டத்தட்ட இருபத்தைந்திலிருந்து இருபத்தெட்டு வயதுள்ள ஒரு ஆணும், ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டபடி நிற்கிறார்கள். ஷிஃபாலிக்கு இருபத்திரண்டு வயதுதான் இருக்கும். அதிலிருந்து அந்த நிழற்படம் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறாள் நிமிஷா. கூட இருக்கும் ஆண்...?

அவளுக்கு அவனுடைய சாயல் சிறிது இருப்பதை அவளது மனது உணர்த்துகிறது. ‘அப்படியானால் இதுதான் தனது தந்தையா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறாள் அவள். கட்டாயம் அப்படித்தான் இருக்கும் என்று அவள் உள்மனது கூறுகிறது. அவள் கண்ணில் ஈரக்கசிவு ஏற்படுகிறது. அவள் கையில் இருந்த நிழற்படத்தை வாங்கிப் பார்க்கிறாள் காமாட்சி. அவளது பெரிய விழிகள் இன்னும் பெரிதாக விரிகின்றன. “நிமிசா, உன் அம்மாகூட இருக்கிறது யாரு? உன் அப்பாவா?”

அவளைத் திரும்பிப் பார்க்கிறாள் நிமிஷா. அவளது கண்ணில் திரையிட்டிருந்த நீர் காமாட்சியின் உருவத்தை மங்கலாகத் தோன்ற வைக்கிறது. “அப்படித்தான் இருக்கணும், காமாட்சி அக்கா. எங்கப்பாவை நான் பார்த்ததே இல்லை. எங்கம்மாவும் அதைப்பத்தி எங்கிட்ட சொல்ல மறுத்துக்கிட்டே வந்தாங்க. எங்கப்பாவைப் பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டா, அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணாச் சேத்து வைச்சுடுவேனோ, அதுனால அவங்க தொழில் முன்னேற்றம் தடைப்பட்டுப் போயிடுமோன்னு அவங்களுக்கு உள்ளூரப் பயம் இருந்துக்கிட்டே இருந்தது. கடைசிலே என் அப்பா முகம் எப்படி இருக்கும்னாவது என்னால் பாக்க முடிஞ்சுதே! அவர் எங்கே இருக்காரோ? உயிரோட இருக்காரோ, யார் கண்டது?” விம்மல்கள் வெடிக்கின்றன அவளிடமிருந்து. அவளைச் சேர்த்து அணைத்துக் கொள்கிறாள் காமாட்சி.

“நாங்க இருக்கோம்மா! உனக்கு நான்தான் அப்பா, என் மனைவிதான் அம்மா!” என்ற குரல் கேட்டதும் திரும்பிப் பார்க்கிறார்கள் அனைவரும். ஈஸ்வரனின் தந்தை சங்கரன் நின்று கொண்டிருக்கிறார்.

“உன்னை மருமகளாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை அம்மா. உன்னையும் காமாட்சியையும் சேர்த்து எனக்கு இரண்டு பெண்கள் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்” என்றதும் நிமிஷாவுக்கு அவர்பால் அன்பு பொங்குகிறது.

“அப்பா!” என்று அவரை இருவரும் தழுவிக் கொள்கிறார்கள்.

ஈஸ்வரன் இரண்டு ஓலைகளையும் எடுத்துப் பார்த்தவுடன் உற்சாகத்துடன் கூவுகிறான்.

“இந்த ஓலையில் தமிழில் எழுதியிருக்கு அப்பா!”

“தமிழிலா? படி! படி!! என்று அவனை ஊக்குவிக்கிறார்கள் அனைவரும். அவர்களது உற்சாகம் அவனையும் தொற்றிக் கொள்கிறது.

“துன்மதி வருடம், வைகாசி மாதம், இருபத்தெட்டாம் தேதியும், கோப்பரகேசரி இராஜேந்திர சோழச் சக்ரவர்த்தி தேவரின் பத்தாம் ஆட்சியாண்டில், அவரது தலைமைப் படைத் தளபதி இராஜேந்திரசோழப் பிரம்மராயர் சிவசங்கர சிவாச்சாரியார் எழுதி அளித்த விடுதலைப் பத்திரம். இந்த ஓலையையும், அரக்குக் கலவை ஊற்றப்பட்ட கோப்பரகேசரியாரின் இலச்சினை ஒன்றையும் காண்பிக்கும் வங்க இளவரசியும், வங்க மன்னர் மகிபால தேவரின் மகளுமான மினோத்தியை விடுதலை செய்வதோடு மட்டுமின்றி, அவரை சோழ அரசின் பிரதிநிதியாகத் தகுந்த மரியாதையுடன் நடத்தி, அவரை வங்கநாட்டில் சேர்ப்பிக்க வேண்டியது சோழப்படையினரின் பொறுப்பு என்றும் ஆணையிடப்படுகிறது. அவருக்கும், அவரது சந்ததியாருக்கும், கோப்பரகேசரியார் இராஜேந்திரசோழ தேவரின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இது திரிபுவனச் சக்கரவர்த்தியார் இராஜராஜசோழ தேவரின் மீதும், அவர் வணங்கும் தஞ்சைப் பெருவுடையாரின் மீதும் ஆணை.”

ஈஸ்வரன் படித்து முடித்ததும் அனைவரும் பேச்சிழந்து போகிறார்கள். மெல்ல ஐம்பொன் பதக்கத்தை எடுத்துப் பார்த்த ஈஸ்வரன், தனது மார்பில் கட்டியிருக்கும் பதக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். இரண்டிலுமே ஒரே மாதிரியாக தாவும் புலி, மீன், வில்-அம்புடன் சில எழுத்துக்கள் காணப்படுகின்றன. இரண்டு பதக்கங்களிலும் அந்த எழுத்துகளை ஒரே மாதிரியாக அரக்கு அழுக்கு மாதிரி மூடிக்கொண்டிருக்கிறது. “நிமிஷா!  இந்த ஓலைகளும் பதக்கமும் எப்படி உன் அம்மாவிடம்...?” இழுக்கிறான் ஈஸ்வரன்.

“இது என்னன்னு எனக்குத் தெரியாது. என் அம்மா அதைக் கவனமா காப்பாத்தி வந்தாங்கன்னு மட்டும்தான் எனக்குத் தெரியும்” பதில் வருகிறது நிமிஷாவிடமிருந்து.

“பிரம்மராயரால் மன்னித்து வங்க நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்ட இளவரசி மினோத்தியின் வழிவந்தவள் நீ, நிமிஷா! விதிதான் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து இருக்கிறது!” என்று பெருமிதத்துடன் கூறுகிறான் ஈஸ்வரன்.

***

தொடரும்

Other Articles

No stories found.