குலசேகரபட்டினம்
குலசேகரபட்டினம்

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 12

குலசேகரபட்டினம் துறைமுகம், பாண்டிநாடு

விஜய, ஐப்பசி 5 - அக்டோபர் 10, 1293

“போனா போகட்டுமே! எல்லோரும் போகட்டுமே! எதுக்கு அவுக பின்னால, மஜ்னூனச் (பைத்தியக்காரன்) சுத்திப்போற பத்துப் பேருல ஒண்ணா நாம போகணுங்கறேன்?” என்று தன் தம்பி அப்துல்லாவைக் கேட்கிறான் முகம்மது அபுபக்கர் ராவுத்தர்.

“என்ன அண்ணாச்சி நீங்க பேசுதீக? புதுசா யாரோ ஒரு முஜாஹீரு (யாத்திரிகர், பயணி) நம்ம துறைமுகத்துலே வந்து இறங்கி இருக்கறாராமில்ல. பாண்டிய பாதுஷாவோட (சக்ரவர்த்தி) வசீரு (மந்திரி) நம்ம பெரிய ராவுத்தர் தக்கியுத்தீன் அப்துல் ரகுமான்35 ஐயா கூட அவரைப் பார்க்க வந்திருக்கிறாமில்ல. அவரு என்ன மன்னூன்னா (பைத்தியம்) சொல்லுதீக?” என்று வினவுகிறான் அப்துல்லா.

“மெதுவாப் பேசுடா சைத்தானே! பெரிய ராவுத்தர் ஐயாவை பேரு வச்சவன் மாதிரில்ல சொல்லுதே! அவரு காதுக்கு நீ சொன்னது போனா, உன் நாக்கை அறுத்து எடுத்து உப்புக் கண்டமாத் தொங்கவிட்டு, உன்னையும் அதுகூடவே தலைகீழாத் தொங்கவுட்டுடுவாரு.

“அது போகட்டும், புதுசா வந்திருக்கிற முஜாஹீரு எந்த முலுக்கிலேந்து (நாடு) வந்திருக்கிறாராம்? அவரு பேரு என்னவாம். எப்படி இருக்காறாம்? இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்திருக்கியா?” என்று தன் தம்பி மீது கேள்விக் கணைகளைத் தொடுக்கிறான் அபுபக்கர்.

“நம்ப அரேபியா முலுக்குக்கு36 மேக்கால இருக்குதாம் அந்த முஜாஹீரோட முலுக்கு. இட்லியோ, சட்னியோவாம் அது பேரு. சீனாவுக்குப் போயி, அங்கே கொஞ்ச சாலு (ஆண்டு) சீன ராசா மஹ்காமத் அல் மாலிக்கில (அரசவை) இருந்துப்புட்டு, இலங்கைக்கு வந்து அந்த முலுக்கு பாதுஷா சாவக மயிந்தரைப் பார்த்துப்புட்டு, நம்ம பாண்டிய பாதுஷாவைப் பார்க்கலாமிண்டு இருக்காப்பல. அதுக்குத்தான், அந்த முஜாஹீர கூட்டிக்கிட்டுப் போகலாமிண்டு நம்ம பெரிய ராவுத்தரும் வந்து இருக்காறாமில்ல” என்ற அப்துல்லா தன் உடலைச் சிலிர்த்துக் கொள்கிறான்.

“அந்த ஆளப் பார்த்தா, உடம்பு முழுக்க வெண்குஷ்டம் வந்தவரு மாரி, உரிச்ச கோளி கணக்கா செக்கச் செவேலுன்னு இருக்காறாம். அதை வேடிக்கை பார்க்கத்தான் நம்ப பசங்க எல்லாம் போயிட்டு இருக்காணுவளாம்!” என்று நீட்டி முழக்கி விளக்குகிறான் அப்துல்லா.

“உரிச்ச கோளி மாதிரியா? ஒருவேளை நிசம்மாவே அந்த முஜாஹீருக்கு உடம்பு முளுக்க வெண்குஷ்டமோ என்னவோ? ஒட்டுவார் ஒட்டியா இருந்துட்டா? அங்கே நம்ம தலயப் பார்த்துட்டுப் பெரிய ராவுத்தர் நம்பளக் கூப்பிட்டார்னா, மறுக்கவா முடியும்? பக்கத்துல போயித்தானே ஆவணும். அப்ப, அந்த முஜாஹீரோட ஒட்டுவார் ஒட்டி நோயி நமக்குத் தொத்திட்டா என்ன செய்யறது?” அருவருப்புடன் கேட்கிறான் அபுபக்கர்.

“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது, அண்ணாச்சி.  ஒட்டுவார் ஒட்டி நோய் வந்தவுககூட நம்ம பெரிய ராவுத்தர் பழகுவாரா?   இல்ல, அவரோட சராய்க்குத்தான் (மாளிகை) கூப்புடுவாரா?   நமக்கு நம்ம ஒடம்புமேல இருக்கற அக்கறை, பெரிய ராவுத்தருக்கு அவரு ஒடம்புமேல இருக்காதா என்ன?   ஒருவேளை, அந்த முஜாஹீரோட நிறமே அப்படி உரிச்ச கோளிமாதிரித்தான் இருக்குமோ, என்னவோ?”  என்று தன் அண்ணனைச் சமாதானப்படுத்துகிறான் அப்துல்லா.

--------------------------------

[35. தக்கியுத்தீன் அப்துல் ரகுமான், காயல்பட்டினத்தைச் சுற்றிய எல்லைப்புற மாநிலத் தலைவராகவும், மாமன்னர் குலசேகரபாண்டிய தேவருக்கு மந்திரியாக இருந்தார் என்று இஸ்லாமிய வரலாற்றாளர் வாஸஃப் குறிப்பிட்டிருக்கிறார்.

36. என்னதான் தாங்கள் பல தலைமுறையாகத் தமிழ்நாட்டிலேயே பிறந்து அரபுமொழி கலந்த தமிழில் பேசி வளர்ந்திருந்தாலும், அரேபியா மேற்குக் கடலைத் தாண்டி இருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தாலும், தங்கள் பூர்வீகம் அரேபியா என்பதால், அரேபியாவைத் தங்கள் நாடு என்று அப்துல்லா குறிப்பிடுகிறான்.]

அவனுக்குப் பெரிய ராவுத்தரின் பார்வை தன் மீது விழாதா, அவர் மூலமாகப் பாண்டியச் சக்ரவர்த்தியின் அரசில் ஏதாவது வேலை கிடைக்காதா என்ற நப்பாசை. எத்தனை நாள்தான் காயல்பட்டினத்திலும், குலசேகரபட்டினத்திலும் சுற்றிச் சுற்றி வந்து காலம் தள்ளுவது? மதுரை பெரிய நகரம் என்றும், அங்கே போனால் நிறையச் சம்பாதிக்கலாம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறான். எப்படியாவது பெரிய ராவுத்தரிடம் ஒட்டிக்கொண்டால் மதுரை சென்று விடலாமே!

“சரிடா. போயித்தான் பார்ப்போம். ஆனா ஒண்ணு. அந்த உரிச்ச கோளி முஜாஹீருக்கு ரொம்பப் பக்கத்துல போக வேணாமுங்கறேன். அந்த ஆளு பேரு ஒனக்குத் தெரியுமா?”

தம்பிக்கு விட்டுக்கொடுப்பது போலச் சம்மதிக்கிறான் அபுபக்கர். தான் போகாவிட்டாலும், தம்பி போய்விடுவான், பெரிய ராவுத்தர் அவனை மட்டும் பார்த்துவிட்டுத் தன்னைப் பற்றி விசாரித்தால், கண்ணும் காதும் வைத்துத் தன்னைப் பற்றிக் கதை கட்டிவிடுவான். பிறகு தனக்குப் பெரிய ராவுத்தரிடம் இருக்கும் மிகச் சிறிய செல்வாக்குகூட அற்றுப் போய்விடும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன!

அபுபக்கரின் மனதில் ஓடுவது அப்துல்லாவுக்கும் தெரியாமலில்லை. ஆனால், அவனுக்கு வேறு வழி தென்படவில்லை. வைக்கோல் போரில் உட்கார்ந்திருக்கும் நாயைப் போல, தன் அண்ணன் தானும் முன்னுக்கு வரமாட்டான், தன்னையும் முன்னுக்கு வர விடமாட்டான் என்பதை நினைத்தால் அப்துல்லாவுக்கு எரிச்சலாக உள்ளது.

மவுத்தாகிப் போன (இறந்து விட்ட) வாப்பா (தந்தை) எல்லாக் கணக்கு வழக்குகளையும் அபுபக்கரிடமே விட்டுச் சென்றுவிட்டார். அப்துல்லாவுக்கு நிக்கா (திருமணம்) ஆகும் வரை, தனியாகச் சொத்து எதுவும் தர முடியாது என்று அவர்களின் உம்மா (அம்மா) கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். வேறு வழியில்லாது அண்ணனிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறான்.

“ஏண்டா சைத்தானே! நான் கேக்குது ஒன் காதில் விழுந்தச்சா?” என்று அபுபக்கர் அதட்டியதும், நினைவுலகத்துக்கு மீண்டு வந்து, “என்ன அண்ணாச்சி கேட்டீக?” என்று கேட்கிறான்.

“அந்த உரிச்ச கோளியோட பேரு ஒனக்குத் தெரியுமான்னு கேட்டேன்!”

“மாருக்கோ போலாவாம்!”

“என்ன பேருடா அது? மாருக்கோபோலவா? பேரு உனக்குச் சரியாத் தெரியாதா?”

“என்ன அண்ணாசி, விளையாட்டுதானே வேணாமிங்கறேன். அவரு பேரு மாருக்கோ போலோ!” தன் அண்ணனுக்கு எரிச்சலுடன் அப்துல்லாவிடமிருந்து பதில் வருகிறது.

“திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கிட்டேயிருந்தா எப்படி? பொடரியப் பொளந்துப்புடுவேன். இப்பவும் மாருக்கோபோல அப்படீன்னுதானே சொல்லுதே! பெயரைச் சரியாத்தான் சொல்லித் தொலையேன். கிண்டலடிச்சா செவுளைச் பிச்சுப்பிடுவேன்!”   தம்பியை விட எரிச்சல்படுகிறான் அபுபக்கர்.

“அண்ணாச்சி, கடைசி தபா சொல்லிடதேன். அந்த முஜாஹீரு பேரு மாருக்கோ போலோ, மாருக்கோ போலோ.37 அம்புட்டுத்தான். நான் பேரைக் கூட்டவும் இல்ல, குறைக்கவும் இல்ல.  அவுக பேரு, மாருக்கோ போலவும் இல்ல, கீருக்கோ போலவும் இல்ல. திரும்பத் திரும்பக் கேக்காதீக. சொல்லிச் சொல்லி வாய் வலிக்குது.”

அண்ணன் கை நீட்டினால், தப்புவதற்காக அப்துல்லா முன்னெச்செரிக்கையாகத் தள்ளி நின்று கொள்கிறான்.

-----------------------------------

[37. மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய யாத்திரிகர், சீனாவிலிருந்து பாரசீகத்திற்குக் (ஈரான்) கடல் வழியாக வரும்போது, பொது ஆண்டு 1292ல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  அதில் பாண்டியர் ஆட்சி பற்றியும், மதுரையைப் பற்றியும் உயர்வாகப் புகழ்ந்து எழுதியுள்ளார்.]

“சரி சரி. அதுக்கு ஏன் இப்படிச் சலிச்சுக்குதே? பெரிய ராவுத்தரு எங்கிட்டுத் தங்கி இருக்காகன்னு போயிப் பார்ப்போம் வா!” என்று தன் சம்மதத்தை அறிவித்துவிட்டு, அபுபக்கர் விடுவிடென்று நடக்கிறான்.

“அண்ணாத்தே! நீங்க போகறது தப்பான வளி. எங்கூட வாங்க போகலாம்” என்ற அப்துல்லா, அபுபக்கர் செல்லும் வழிக்கு நேரெதிரான பாதையில் செல்கிறான். தன் அண்ணன் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் பொழுது சாய்ந்துவிடும், அண்ணன் தொழுகைக்குக் கூப்பிட்டு விடுவான் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அதற்குள் எல்லோரும் பார்த்து பிரமிக்கும் பயணியைத் தானும் ஒரு எட்டுச் சென்று பார்த்து, அப்படியே பெரிய ராவுத்தரின் கண்ணிலும் பட்டுவிட வேண்டும் என்று அவனுக்கு ஒரு நப்பாசை.

“கொஞ்சம் மெதுவாப் போடா சைத்தானே! எனக்கு வயசாயிடுச்சுல்ல, உன் வேகத்துக்கு என்னால நடக்கவா முடியுது?” என்று அலுத்துக்கொண்டே, முப்பது வயதான அப்துல்லாவை பின்தொடர்கிறான் நாற்பதே வயதான அபுபக்கர்.

அபுபக்கர்
அபுபக்கர்

கொற்கைத் துறைமுகம் மணல்மேடிட்டு வருவதால், அதற்குத் தெற்கில் முப்பது காதத் தொலைவில், கப்பல்கள் நிற்கும்படியான ஒரு துறைமுகத்தை உருவாக்கி, அதற்குக் குலசேகரபட்டினம் என்று பெயரிட்டு பாண்டி நாட்டிற்கு வரும் வணிகக் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி, இறக்குமதி-ஏற்றுமதி செய்ய வழிவகுத்திருக்கிறார் - மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பேரனும், தமிழ்நாடு முழுவதும் ஒரு குடைக்குக்கீழ் கொணர்ந்து - எம்மண்டலமும் கொண்டருளிய தலையான பாண்டியன்38 என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனின் புதல்வனும், கோனேரின்மை கொண்டான்39 என்று அழைக்கப்படும் மாறவர்மன் குலசேகரபாண்டியன்.

பாண்டிநாட்டிலேயே தங்கிக் குடியேறிவிட்ட அராபிய இஸ்லாமியர்களுக்கு என்று சில ஊர்களையும், அதன் சுற்றுப்புறங்களையும் குலசேகரபாண்டியன் மானியமாக அளித்திருந்தார்.

காயல்பட்டினம் அதில் குறிப்பிடத்தக்கது. அது குலசேகரபட்டினத்திற்கு இருபது காதம் வடக்கே இருக்கும் துறைமுகம்.

பெரிய ராவுத்தர் என்று குறிப்பிடப்பட்ட தக்கியுத்தீன் அப்துல் ரகுமானும் அராபிய இஸ்லாமியர்தான்.

அவர் தன் அறிவுத் திறமை, ஆற்றல், வணிகத் திறமை இவற்றால் குலசேகரபாண்டியனின் நன்மதிப்பைப் பெற்றதோடு மட்டுமல்லாது, மந்திரி பதவியையும் அடைந்திருந்தார்.

பேரரசரிடம் நல்ல செல்வாக்கு இருந்ததால் பாண்டிநாட்டில் குடியேறிய, அங்கு பிறந்து வளர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவும், மசூதிகளுக்கு மானியமும், நன்கொடைகளும் கிடைத்தன.

தங்கள் சமயத்தைப் பின்பற்றி வர எவ்வித இடையூரும் இஸ்லாமியர்களுக்கு இல்லாததால், அவர்களும் பாண்டியப் பேரரசரின் அமைதி நிலவும் ஆட்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வந்து, வணிகத்தில் செழித்து வந்தார்கள். பலர் பாண்டியப் படைவீரர்களாகவும் பணியாற்றினர்.

பலருக்கு நெல்லைத் தமிழ் தாய்மொழியாகியிருந்தது.  அப்படிப்பட்டவர்கள்தான் அப்துல்லாவும், அபுபக்கரும்.  கடலில் மரக்கலங்களில் ஏறிச்சென்று மீன்பிடிப்பது அவர்கள் தொழில் என்பதால், அவர்களை மரக்காயர் என்றழைப்பது வழக்கம்.

-------------------------------------

[38. சடையவர்மன் சுந்தரபாண்டியனது நாணயத்தில் இந்தப் பட்டப்பெயர் காணப்படுகிறது.

39. தன்னை எதிர்த்து நிற்கும் ஆற்றல் எந்த மன்னனுக்கும் இல்லாதபடி செய்தான் எனப் பொருள்படும் கோ நேர் இன்மை கொண்டான் என்ற பட்டப்பெயரை உடையவனாக மாறவர்வன் குலசேகரபாண்டியன் இருந்ததாக ஆழ்வார் திருநகரி ஆவணம் குறிப்பிடுகிறது.]

அவர்களிடம் இருபதுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் உள்ளன. அண்ணன் அபுபக்கர் வசமே தொழில் நிர்வாகம் இருப்பதால், அப்துல்லாவுக்கு எதுவும் தானாகச் செய்ய அனுமதி இல்லை. அவனது தாயும் திருமணத்திற்குப் பின்னரே பாகப்பிரிவினை என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள்.

அப்துல்லாவுக்கு நல்ல தனித்தன்மை இல்லை. முகலட்சணம் மிகவும் குறைவு. முகம் முழுவதும் அம்மைத் தழும்புகள். போதாததற்கு அவன் உயரமே, நான்கடி நான்கு அங்குலம்தான்.

ஆகவே, எவ்வளவு மெஹர் (மணப்பெண்ணுக்கான சீர்) கொடுப்பதாகச் சொன்னாலும், அவனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

இதனால்தான் எப்படியாவது மதுரை சென்று அங்கு அரசில் வேலை வாங்கிவிட்டால், அந்தச் சாக்கை வைத்து ஒரு பெண்ணை மணந்து விடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறான்.

காயல்பட்டினத்திலும், மதுரையிலும் பெரிய ராவுத்தர் தக்கியுத்தீன் அப்துல் ரகுமானுக்கு மாளிகையுடன் குடும்பங்கள் இருப்பினும், குலசேகரபட்டினத்திலும் ஒரு பெரிய வீடும் குடும்பமும் இருக்கிறது. அந்த வீட்டுக்குத்தான் பெரிய ராவுத்தர் மார்க்கோ போலோவை அழைத்திருந்தார்.

இதுவரை ஐரோப்பியர் எவரையும் அப்பக்கத்து மக்கள் கண்டிராததால், மார்க்கோ போலோவின் வெளிறிய நிறத்தைக் கண்டுதான் அப்துல்லா உரித்த கோழி போல இருக்கிறார் என்று வர்ணித்திருக்கிறான்.

பொதுவாகவே, ஊருக்கு புது மனிதர் வந்தாலே சுற்றிச் சூழும் கள்ளமற்ற கிராமப்புற மக்களுக்கு மார்க்கோ போலோவின் வெளிறிய நிறம் பெரும் வியப்பாகவே இருக்கிறது. அதை முதலில் கண்ட சிறார்கள், “தோலில்லாத மனுசன் போறாண்டா!” என ஆர்ப்பாட்டம் செய்து சூழ்ந்து கொண்டனர். சிறுவர்கள் ஏன் இப்படிப் பரபரப்புடன் கூச்சலிடுகின்றனர் என்பது அறிந்துகொள்ள அங்கு வந்த பெரியவர்கள், ஆறடிக்கு மேல் உயரமாக, வெளிறிய நிறமுள்ள ஒருவரைக் கண்டதும் அசந்துபோய், அப்படியே வாயைப் பிளந்தவாறு நின்று விட்டனர். பிறகு, அவர்களும் பின்னால் செல்லத் தொடங்கினர்.

சிலர் வெளிநாட்டுக் கப்பலிலிருந்து ஒரு வெள்ளை நிறப் பிசாசு இறங்கி வந்துவிட்டது என்று பயந்து, அதன் கெடுதல் தம்மைத் தாக்குவதைத் தடுக்க வேப்பிலை பறித்து வர வேப்ப மரத்தைத் தேடி ஓடினர். வந்திறங்கிய வெள்ளைப் பிசாசு வீட்டை அண்டாமலிருக்க, வீட்டு வாசற்கதவு நிலைக்குமேல் பறித்த வேப்பிலையைச் சொருகினர்.

இந்த ஆரவாரத்தைக் கண்ட அப்துல்லா சிறிது நேரம் மற்றவருடன் சென்று பார்த்திருக்கிறான். சிலர் பெரிய ராவுத்தரின் வேலையாள்கள் என்று தெரியவே, அவர்களிடம் விசாரித்திருக்கிறான்.

மார்க்கோ போலோ பெரிய ராவுத்தர் வீட்டுக்குச் செல்கிறார் என்பதைக் கேட்டதும் அவனது உற்சாகம் கரைபுரண்டது. எப்படியாவது பெரிய ராவுத்தர் கண்ணில் பட்டு, மதுரை சென்று விடலாம் என்ற பெரிய ஆசை அவனைத் தொற்றியது.

ஆனால், அண்ணனுக்குத் தெரியாமல் பெரிய ராவுத்தர் வீட்டுக்குச் செல்லவும் முடியாது.  ஆகையால், அந்த விஷயத்தைச் சொல்லி, அன்ணன் அபுபக்கரையும் இழுத்துச் செல்லவே, வேர்க்க விறுவிறுக்க ஓடோடியும் வந்திருக்கிறான். அண்ணன் அரை மனதுடன் அனுமதித்தது அல்லாவே தனக்கு அருளளித்தது ஆசி வழங்கியதுபோல அவனுக்குப்படுகிறது.

மதுரை

விஜய, கார்த்திகை 5 - நவம்பர் 8, 1293

துரை மாநகரமே திருக்கார்த்திகை திருவிழாவுக்காக விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வீட்டுத் திண்ணைகள் அனைத்திலும் வரிசை வரிசையாக ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் ஒரொரு வீட்டிற்கும் ஒளி தரும் மணிமாலைகளாகத் திகழுகின்றன. வீதிகளில் தோரணங்களும் கொடிகளும் அழகு சேர்க்கின்றன. சிறார்கள் வீதிகளில் புத்தாடையுடன் விளையாடுகின்றனர். ஆலவாய் அங்கயற்கண்ணி-அழகன் கோவிலிலிருந்து மணியோசை பூசை நடப்பதைத் தெரிவிக்கிறது.

மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுரத்தில் ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் விளக்குகள், ‘மதுரையின் காவல்தெய்வங்களான நாங்கள் இதோ இருக்கிறோம். அடிமைத் தளையை உடைத்தெறிந்து, அடிமை செய்தவரையே அடிமைகொண்ட பேரரசனால் திரும்பப் புதுப்பித்துக் கட்டப்பட்ட எங்கள் மதுரை மாநகருக்கு வருகை தருக! பாண்டிநாட்டின் பெருஞ்சிறப்பைக் காணுக!’ என்று மதுரைத் தெய்வங்களான அன்னை மீனாட்சி, தந்தை சுந்தரேசன் இவர்களின் சார்பில் அழைப்பதைப் போலிருக்கிறது.

எங்கும் மகிழ்ச்சி மலர்ந்து பொங்கிக்கொண்டிருக்கிறது. மக்களின் முகங்களில் பொங்கும் அம்மகிழ்ச்சியை, மலர்ச்சியைக் காண மார்க்கோவுக்கு வியப்பாக உள்ளது. இத்தனை மகிழ்வு பொங்க உலாவரும் மக்கள் குழாத்தைத் தான் பிறந்த வெனிஸ் நகரில்கூட அவன் கண்டதில்லை. இவ்வளவு மலர்ந்த முகங்களை தான் சுற்றிவந்த பாக்தாத், பெய்ஜிங், ஏன் அருகாமையிலுள்ள இலங்கையின் தலைநகரான அனுராதபுரத்தில்கூட பார்த்ததில்லை.

தன்னுடைய சமய நூலான விவிலியம் என்ற பைபிள் வர்ணிக்கும் சுவர்க்கமே தரையிறங்கித் தமிழ்நாட்டுக்குத்தான், அதுவும் மதுரைக்கு வந்திருக்கிறதோ என்ற ஐயம் அவனை ஆட்கொள்கிறது.

அவனது காதுகளில் ஒலிக்கும் தமிழ்ச்சொற்களின் பொருள் விளங்காவிட்டாலும், அனைவரின் குரலில் தொனிக்கும் நகைப்பு அந்த மக்களின் உள்ளங்களிலிருந்து, இதயங்களிலிருந்துதான் வருகிறது என்பதை அவனால் உணர இயலுகிறது.

இப்படிப்பட்ட மாநகரில், சீர்மல்கும் பாண்டிநாட்டை ஆண்டுவரும் பேரரசரான மாறவர்மன் குலசேகரபாண்டியனை மறுநாள் சந்திக்கப்போகிறோம் என்பதை நினைத்தல் கனவில் உலாவுவது போலத்தான் இருக்கிறது.

சீனத்தில் பேரரசன் குப்ளேகானின் அரசவையில் பல்லாண்டுகள் மார்க்கோ போலோ இருந்திருக்கிறான். அங்கு மக்கள் குப்ளேகானைக் கண்டு நடுங்குவதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறான்.

சீன மக்களுக்கு மன்னன் என்றாலே அச்சம்தான் ஏற்படுகிறதேத் தவிர, ‘இவர் எங்கள் தலைவர், எங்களுக்கெல்லாம் தந்தையானவர், இறைவனுக்கு ஒப்பானவர், எங்களைக் கட்டிக்காக்கும் காவலர், நாட்டில் அமைதி நிலவ, நலம் சிறக்க, நாட்டுப் பெருமை உயரப் பாடுபடும் எங்கள் அரசர்!’ என்று மதுரையில் அனைவரும் பெருமையாகக் கூறிக்கொள்வதைப் போல், சீனத்திலோ, அவன் பயணித்த வேறு எந்தவொரு நாட்டிலும் அவன் கேள்விப்பட்டதே இல்லை.

இந்தத் தமிழ்நாட்டில், அதுவும் மதுரையில் பிறந்து வளர்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறான்.

உருவத்திலும், நிறத்திலும், பழக்க வழக்கத்திலும் பெரிதும் மாறுபட்ட தன்னை அனைவரும் வியப்புடன் பார்த்தாலும், தன்பால் காட்டும் கனிவையும் அன்பையும் நினைத்துப்பார்த்து நெகிழ்கிறான்.

தனது பயணக் குறிப்புகளில் சிறப்பிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறான்.  பாரசீகத்திற்குச் சென்று, அப்படியே தன் தாய்நாடான இத்தாலிக்குச் செல்லுமுன்னர் தமிழ்நாடு முழுவதையும் சுற்றிப்பார்த்துவிட வேண்டும் என்னும் அவா அவனுள் அடிக்கடி எழுந்து எட்டிப் பார்க்கிறது.

“ஏன்ன அண்ணாத்தே! பட்டிக்காட்டான் ஆனையைப் பார்த்து வாயைப் பிளக்கறாப்போல இந்த முஜாஃபிரு (பயணி) இப்படியே வாயைப் பிளந்து நின்னுக்கிட்டிருக்காரு? விடிகாலைல எளுந்திருச்சு பாதுஷாவைப் (பேரரசர் குலசேகரபாண்டியன்) பார்க்க இவரைக் கூட்டிக்கிட்டுப் போகணுமில்ல? நீங்க கொஞ்சம் கூப்பிடுங்க அண்ணாச்சி. எனக்கு உறக்கம் வருது” என்று அபுபக்கரின் காதைக் கடிக்கிறான் அப்துல்லா.

“சும்மா இருடா சைத்தானே! சாதாரண நாளா இருந்தா நாம இந்த இடத்தையெல்லாம் சுத்திப் பார்க்க முடியுமா? இந்த எடத்துல துலுக்கங்களான உங்களுக்கு என்ன வேலைன்னு அடிச்சு விரட்டிப்புட மாட்டாங்களா? இந்த உரிச்ச கோளிக்குத் துணையா நாம் போகணும்கறதுனாலதானே, பெரிய ராவுத்தர் ஜனாப், பாதுஷாவோட சேவுகரை நம்மகூட அனுப்பியிருக்காரு! இனிமே எப்படா நாம இந்தத் தமாஷாவை நம்ப ஜிந்தகீல (வாழ்நாள்) பார்க்கப்போறோம்? அல்லாவா நமக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறாருடா. அதைப் பயன்படுத்திக்கிட்டு, அவரு கொடுத்த ரெண்டு கண்ணையும் நல்லாத் திறந்து வச்சுக்கிட்டு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு வாடா. இந்த இடமெல்லாம் எம்புட்டு ஷோக்கா இருக்கு! சுவனத்துல இருப்பாகன்னு நம்ம குரானுல சொல்லியிருக்கே, அந்த மாதிரியில்ல இங்க அழகான பொம்பளைங்க என்ன மாதிரி சோடிச்சுக்கிட்டு சுத்திச் சுத்தி வாராக. வாஹரே வாஹ்!” என்று தன்னை மறந்து அபுபக்கர் தன் மனதில் இருப்பதைத் தன் தம்பியிடம் பகிர்ந்து கொள்கிறான்.

அவன் சொல்வது அந்த நாட்டு நடப்புதான். மாற்று சமயத்தினனான அவன், மதுரையின் உள் வீதிகளில் - அதுவும் திருக்கார்த்திகை திருவிழாக் கொண்டாட்டம் நடக்கும் இடங்களில் இவ்வளவு சுதந்திரமாகச் செல்ல முடியாதுதான்.

இதை நன்கறிந்த பெரிய ராவுத்தர் தக்கியுத்தீன் அப்துல் ரகுமான், குலசேகரபாண்டியனிடம் விண்ணப்பித்துப் பேரரசரின் மெய்காப்பாளர்களில் ஒருவரையே மார்க்கோ போலோவுக்கு அவனுடன் செல்லும் அபுபக்கர்-அப்துல்லாவுக்கும் துணையாக அனுப்பி வைத்திருக்கிறார்.

மார்க்கோ போலோவுக்கு பாரசீக மொழி தெரியுமாதலால்,40 அம்மொழிக்குத் தொடர்புள்ள அரபு மொழி பேசத் தெரிந்த இவர்களை அவனுக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லவே பெரிய ராவுத்தர் அனுப்பி வைத்திருக்கிறார்.

“அண்ணாச்சி, மதுரை பொம்புள்ளைங்க கண்ணுக்கு ரொம்பக் குளிர்ச்சியா இருக்காகன்னு அவுகளையே முழிச்சு முழிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்காதீக. கூட வர்ற பாதுஷாவோட சேவுகன் நம்ம கன்ணை நோண்டி எடுத்துடப் போறான். குரலையும் தணிச்சே பேசுங்க.  தவிரவும், காயல்பட்டினத்துல, குலசேகரபட்டனத்துல இருக்கற நம்ம வூட்டுப் பொம்பளங்களையும் ‘தில்’ல (மனதில்) வச்சுங்கங்க. ஒண்ணுக்கு ரெண்டா நிக்கா பண்ணிக்கிட்டு இருக்கீக. ஒங்க பீபிகளுக்கு உங்க கண்ணு இப்படிச் சுத்துதுன்னு தெரிஞ்சா பாதுஷாவோட சேவுகனுக்கு பதிலா அவுகளே ஆளுக்கு ஒண்ணா உங்க ரெண்டு கண்ணையும் நோண்டி எடுத்து வச்சுக்குவாக. அத்த மறந்துடாதீக” என்று அப்துல்லா அபுபக்கரின் காதைக் கடிக்கிறான்.

இவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும், விழாதது போல மனதுக்குள் சிரித்துக்கொள்கிறான் குலசேகரபாண்டினின் பரம்பரை மெய்காப்பாளன் முருகையன்…

…”முருகையா கேவலம் வெளிநாட்டுப் பயணிக்கு உன்னைத் துணையாக அனுப்புகிறேன் என நினைக்காதே! நமது பாண்டிநாட்டைப் பற்றி யவன நாட்டில் நற்செய்திகளை அவன் பரப்ப வேண்டும். அப்பயணிக்கு அரபு மொழி தெரியுமாதலால், நம் அமைச்சர் பெரிய ராவுத்தருக்கு வேண்டிய இருவரை மொழிபெயர்ப்பாளர்களாக அனுப்பப்போகிறேன். மூன்றாம் சமயத்தைச் சேர்ந்த அவர்கள் மதுரையில் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது என்பது உனக்கும் தெரியும். ஆகவேதான் உன்னை அவர்களுக்குப் பாதுகாப்பாக என் முத்திரை மோதிரத்துடன் அனுப்பி வைக்கிறேன். அவர்களுக்கு எவ்விதமான தீங்கோ, உடற்காயமோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வது உனது பொறுப்பு” என்று தன் இலச்சினையை அவனிடம் அளித்தார் குலசேகரபாண்டியன்.

“அப்படியே அரசே!” என்று அவரை வணங்கி இலச்சினையை வாங்கிக்கொண்டு முருகையன் செல்ல முற்பட்டபோது, பேரரசர் தொண்டையைச் செருமிக்கொள்வது அவன் காதில் விழுந்தவுடன் உடனே நின்று திரும்பிப் பார்த்தான்.

-----------------------------

[40. மார்க்கோ போலோவுக்கு இலத்தீனுடன் உய்கூர், சீன, மங்கோலிய மொழிகளுடன் பாரசீக மொழியும் தெரியும் - Catholic Encyclopedia]

“முருகா, என்னதான் இருந்தாலும் பயணி ஒரு யவனன். வெளிநாட்டான். எனவே, நம் நாட்டுப் பாதுகாப்பு இரகசியங்கள் அவன் கண்ணில் படாதிருக்க வேண்டியது உன் தலையாய கடமை. பெரிய ராவுத்தரின் ஆள்கள் எதையும் அவனிடம் உளறி விடாமல் பார்த்துக்கொள். நீ அரபு மொழி அறிவாய் என்ற உண்மை அவர்களுக்குத் தப்பித் தவறிக்கூடத் தெரியக்கூடாது. ம், போய்விட்டு, அப்பயணியை நாளை நமது அரண்மனைக்கு அழைத்து வா!” என்று குலசேகரபாண்டியன் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினார்…

…தாங்கள் அரபு மொழியில் உரையாடுவதன் பொருள் தனக்கு விளங்காது என்ற நினைப்பில் உடன்பிறப்புகள் இருவரும் பேசுவது முருகையனுக்கு நகைப்பை வரவழைத்தும், அது வெளியில் தெரியால் பார்த்துக்கொள்கிறான்.

குலசேகரபாண்டிய சக்ரவர்த்தி, சீனத்துக்குத் தனது அரசுத் தூதுவரை அனுப்பிவைத்துத் தமிழ்நாட்டின் பெருமையையும், வணிகத்தையும் பெருக்கப் பெருமுயற்சி எடுத்து வருகிறார், தனது தாய்நாடான இத்தாலியிலும் தமிழ்நாட்டின் பெருமையும் வணிகமும் பெருக அவர் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என மார்க்கோ போலா விரும்புகிறான். அதற்கு முதல் கட்டமாகத் தமிழ்நாட்டின் வரலாற்றைத் தனக்கு எடுத்துச் சொல்ல ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேரரசருக்கு விண்ணப்பிக்கலாம் என்று தனக்குள் முடிவும் எடுக்கிறான்.

இப்படிப்பட்ட சிறந்த நாட்டுடன் தன் நாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே வணிகத் தொடர்பு வைத்திருக்கிறது என்பதும் அவன் அறிந்ததுதான்.

தங்களைத் தமிழர் யவனர் என்று அழைத்து வந்திருக்கின்றனர் என்பதை தக்கியுத்தீன் அப்துல் ரகுமான் அவனிடம் சொல்லியிருக்கிறார். இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும், தனது நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் இருந்த உறவு மீண்டும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடப் பெருமுயற்சி எடுக்க வேண்டும் என விரும்புகிறார்.

ஆனால்…

எங்கும் மகிழ்ச்சி பொங்கப் பூத்திருக்கும் மதுரை மாநகரம் இன்னும் இருபது ஆண்டுக்குள்ளேயே களையிழந்து, கைம்பெண்ணின் நிலைக்கு மீண்டும் திரும்பப்போகிறது என்பது அவன் அறிய வாய்ப்பில்லாத ஒன்றுதான்.

குலசேகரபாண்டியன் அரண்மனை

விஜய, கார்த்திகை 6 - நவம்பர் 9, 1293

மாவீரன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் மகனாகப் பிறந்து, மாறவர்மன் சுந்தரபாண்டியன் அடிக்கல் இட்டு நிறுவிய பாண்டியப் பேரரசைத் தமிழ்நாடு மட்டுமன்றி, வட ஈழத்துக்கும் பரப்பிய, கோநேர் இன்மை கொண்டான் என்ற பெயருடன் விளங்கிவரும் குலசேகரபாண்டியன் கம்பீரமாக அரச வைக்கும் நடந்து வருவதை எழுந்து நின்று வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான் மார்க்கோ போலோ.

“இந்தத் தமிழ்நாடு உலகத்திலேயே மிகவும் செல்வம் நிறைந்தது மிகச் சிறப்பானது, உலகத்திலேயே அருமையான முத்துகள் விளைகின்ற நாடு. மக்கள் இரவில் கூட திருட்டுப் பயமின்றி தங்கள் விலைமதிப்புள்ள பொருள்களுடன் வழிநடக்கின்றனர். இங்கு மாமன்னர் தன்னை நாட்டின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவராக நினைப்பதில்லை. இப்படிப்பட்ட அருந்தகைய நாட்டின் மன்னர் ஏன் ஒரு மேலாடை கூட அணியாமல் வருகிறார்?”41 எனத் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.

அடுத்த கணமே அவனது விழிகள் பெரிதாக மலர்கின்றன. பறந்து திரண்ட மார்பில் விலை மதிப்பற்ற தங்க நகைகள் பலவற்றை குலசேகரபாண்டியன் அணிந்திருக்கிறார்.

-----------------------------------

[41. மார்க்கோ போலோ தனக்குள் பேசுவதாகச் சித்தரிப்பது அவனது பயணக் குறிப்பிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டது. தொடர்ந்துவரும் ஆபரணங்களைப் பற்றிய வர்ணிப்பும் அதிலேயே வருகிறது - ‘Kyoto Journal 74’, June 2010; ‘Himal South Asian’, Dec 2009, and, ‘South India and her Mohammedan Invaders’, by S. Krishnaswamy Ayyengar.]

தங்க நகைகளில் பதிக்கப்பட்ட வைரம், மரகதம், மாணிக்கம், நீலம், சிவப்பு ஆகிய பலவிதமான விலையுயர்ந்த கற்கள் ஒளிருகின்றன. இரண்டு பெரிய முத்துமாலைகளும் அவருக்கு அழகு சேர்க்கின்றன.

மணிக்கட்டுகளில் தங்கக் கங்கணங்கள், விரல்களில் வைரம், மாணிக்கம், நீலக்கற்கள் பதித்த மோதிரங்கள் - புயத்தில் தங்க வளையங்கள் என்று உடல் முழுதும் அவர் அணிந்து கொண்டிருக்கும் ஆபரணங்களை சாளரங்கள் வழியாகக் கதிரவன் எட்டிப் பார்க்கும்போது, அவனது ஒளிபட்டு அவை மின்னுகின்றன.

மாமன்னரின் தலையை தங்க மணிமகுடம் அலங்கரிக்கிறது. அதன் வேலைப்பாட்டையும் நுணுக்கங்களையும் கண்டு மார்க்கோ போலோ அசந்து போகிறான். அதன் மதிப்பு எவ்வளவு என மனதில் கணக்குப்போடுகிறான். அதை மங்கோலிய மாமன்னன் குப்ளேகானின் மகுடத்துடன் ஒப்பிட்டு, பாண்டிய மாமன்னரின் மகுடத்துக்கு அது ஈடாகாது என்ற முடிவுக்கு அவன் மனம் வந்து விடுகிறது.

இடுப்பில் கட்டிய கச்சையில் அவரது வீரவாள் உறையில் சொருகப்பட்டுள்ளது. அந்த வாள் வீச்சில் எதிரிகளின் தலைகள் எத்தனை உருண்டிருக்கும் என்பது கணக்கெடுக்க இயலாத ஒன்று என்று மார்க்கோ போலோ கேள்விப்பட்டிருக்கிறான்.

அதை நினைத்தால் ஒரு கணம் அச்சத்தால் அவனது மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுகின்றன.

குலசேகரபாண்டியன் ஐந்தடி ஏழங்குல உயரம்தான் இருக்கலாம். ஆனாலும், மல்யுத்த வீரனாகக் கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருக்கிறார். ஐம்பத்தொன்பது வயதாகியிருந்தாலும் கட்டுக்குலையாத அவரது உடல் கருஞ்சிலை போலப் பளபளக்கிறது.

நடக்கும்போது அவரது புஜத் தசைகளும், கால் தசைகளும் திரண்டு உருள்வதை மார்க்கோ போலோவின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை. கடுமையான உடற்பயிற்சிதான் அவரது உடலை அப்படி வைத்திருக்கிறது. அவரை விட ஏழங்குல உயரமும், அதிக எடையும் தனக்கு இருப்பினும், தன்னை ஒரே அடியில் அடித்து வீழ்த்திவிடும் வலிமை அவரிடம் இருப்பதை நினைத்தால் அவனுக்கு மலைப்பாக இருக்கிறது.

“இப்படிப்பட்ட கட்டுடல் உள்ளவர் ஏன் மேலாடை அணிய வேண்டும்? அப்படிச் செய்வது திடமான, கவர்ச்சி மிக்க உடலை மறைப்பதாகாதா? இவரை முன்மாதிரியாக வைத்து எத்தனை அற்புதமான சிலைகளை வெனிஸிலும், ரோமாபுரியிலும் வடிக்கலாம்!” என்று தனக்குள் வியக்கிறான்.

அவனையும் அறியாமல் தன் நாட்டு வழக்கப்படி அவர்முன் மண்டியிடுகிறான். அவனது கை, தொப்பியை முழங்காலுக்குக் கீழ் தானாகவே கொண்டு செல்கிறது.

மாமன்னரின் இளஞ்சிவப்பான பெரிய விழிகள் அவற்றுக்கு நடுவிலிருக்கும் பெரும் கருமணிகளால் மார்க்கோ போலோவை சில கணங்கள் உற்றுப் பார்க்கின்றன. புதர் போன்ற மீசை சற்று விலகி, அவரது உதடுகள் மலர்ந்து சிறிய புன்னகை மலர்கிறது.

அவனைப் பார்த்துத் தன் தலையை இலேசாக அசைத்துவிட்டுத் தன் நடையின் வேகத்தைச் சற்றும் குறைக்காது மேலே நடந்து செல்கிறார்.

அவருக்கு இருபுறமும் இளவரசர்கள் உடன் செல்கிறார்கள். ஒருவனுக்கு முப்பது வயதும், மற்றவனுக்கு அவனை விட மூன்று அகவைகள் குறைவாகவும் இருக்கலாம். இருவரின் நடையும் மிடுக்காகவே உள்ளது. இவரில் யார் பட்டத்து இளவரசராக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறான்.

இருவருமே கிட்டத்தட்ட ஒரே உயரம்தான். அவர்களும் நிறைய ஆபரணங்கள் அணிந்திருப்பினும், குலசேகரபாண்டியன் அளவுக்கு அணியவில்லை. தலையில் மகுடங்களும் இல்லை. மூத்தவனிடம் மாமன்னரின் கம்பீரமும், அரச களையும் உள்ளது. இளையவன் முகத்தில் சிறிது எரிச்சல் தென்படுவதும் அவனுக்குத் தெரிகிறது.

பேரரசர், இளவல்களின் வரவைச் சொல்லி கட்டியங்காரன் முழங்குகிறான். மங்கள வாத்தியங்கள் ஒலிக்கின்றன. குலசேகரபாண்டியன் மிடுக்கு சற்றும் குறையாமல் தனது சிம்மாசனத்தில் அமருகிறார். இளவரசர்கள் அவருக்கு இருபுறமும் உள்ள இருக்கையில் அமர்கிறார்கள். அங்கயற்கண்ணி-அழகன் ஆலயத்திலிருந்து வந்திருக்கும் சிவாச்சாரியர், மறையவர் பலரும் வேத கோஷம் செய்கின்றனர். அவர்களைப் பார்த்துப் புன்முறுவலித்துக் கையசைக்கிறார் மாமன்னர்.

தங்கத் தட்டிலிருந்து வண்ணத் துணிகளில் கட்டப்பட்டிருக்கும் காணிக்கைகளை வேதியருக்கு அமைச்சர் வழங்குகிறார். மாமன்னரை மனதார வாழ்த்திய அவர்கள் அரசவையை விட்டு நீங்குகின்றனர். ஆனால், ஒரு வேதியர் மட்டும் அங்கேயே நின்று விடுகிறார்.

மார்க்கோ போலோ மெல்ல எழுந்து நிற்கிறான். அவனருகில் நின்றிருந்த பெரிய ராவுத்தர் தக்கியுத்தீன் அப்துல் ரகுமான் சுந்தரபாண்டியனை நோக்கி நடக்கிறார். இதுவரை அவனுடன் துணை வந்த அரச மெய்காப்பாளன் முருகையன், அவனைப் பார்த்துக் கண்ணைக் காட்டி தலையை அசைக்கிறான். அதைப் புரிந்துகொண்ட மார்க்கோ போலோ இரண்டடிகள் முன்னே விறைப்பாக எடுத்துவைத்துப் பெரிய ராவுத்தரை தொடர்கிறான்.

இதுவரை கவனிக்காத அரசவையினர் அவனை உறுத்துப் பார்க்கின்றனர். அது மார்க்கோ போலோவுக்கு தான் ஆடையில்லாது இருப்பது போன்ற ஒரு உள்ளுணர்வைத் தருகிறது.

இருப்பினும், அந்த உணர்வை மனத்தின் அடித்தளத்திற்குத் தள்ளிவிட்டுக் கையில் தொப்பியை வைத்துக்கொண்டு பாண்டியப் பேரரசர் முன் வந்து நிற்கிறான். பெரிய ராவுத்தர் அவனைப் பார்த்துத் தலையசைக்கிறார்.

பாண்டியப் பேரரசர்
பாண்டியப் பேரரசர்

“அரசர்களுக்கெல்லாம் அரசரான தங்களுக்கு, வெனிஸ் நகரின் குடிமகனும், உலகப் பயணியும், மார்க்கோ போலோ என்ற பெயரை உடையவனுமான நான், கருணைக் கடலான ஏசுநாதரின் பெயரால் வணங்குகிறேன்!” என்று இலத்தீன் மொழியிலும், அதையே பாரசீகத்திலும் சொல்லி மண்டியிடுகிறான். பெரிய ராவுத்தர் அதைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்கிறார்.

மற்றவர்களுடன் செல்லாமல் தங்கிவிட்ட மறையவரை குலசேகரபாண்டியன் கையை அசைத்து அழைக்கிறார்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.