பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 20

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 20

மேற்கு ஆவணி மூல வீதி, மதுரை

விரோதி கிருது, சித்திரை 20 - ஏப்ரல் 22, 1311

வேதனை நிரம்பி வழிகிறது வீரபாண்டியனின் முகத்தில். சூறாவளி அழித்துவிட்ட இடம் போலவே இருக்கின்றன செல்வச் செழிப்புடன் திகழ்ந்த மதுரை மாநகரின் தெருக்கள்! எங்கு நோக்கினும் அழிவு! அழிவு!! அழிவு!!! இப்படிப்பட்ட முழுமையான அழிவை, அதுவும் ஒருசில நாள்களில் உண்டாக்கப்பட்ட அழிவை அவன் எங்கும் பார்த்ததில்லை.

மதில் உடைக்கப்பட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது அந்த அழிவு. கண்ணில் பட்டவையெல்லாம் உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன. மாளிகைகள், வீடுகள், அங்காடிகள், சிறிய கோவில்கள், மேடைகள், எதுவுமே தப்பவில்லை. அனைத்தும் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இப்படியொரு அழிவை ஏற்படுத்தத் துணியும் எதிரியின் வெறித்தனமான சீற்றத்தை இப்போதுதான் முதல்முதலாகக் கண்டறிகிறான் வீரபாண்டியன்.

தன் முன்னோர்களான - மாறவர்மன் சுந்தரபாண்டியன் உறையூரையும், தஞ்சையையும் கொளுத்தியபோது - சடையவர்மன் சுந்தரபாண்டியன் கண்ணனூரைத் தவிடுபொடியாக்கிக் கங்கைகொண்ட சோழபுரத்தையும் அழிக்க முற்பட்டபோது - தன் தந்தையார் குலசேகரபாண்டியன் கங்கைகொண்ட சோழபுரத்தை முற்றிலும் அழித்தபோது - அவர்களுக்கு இப்படிப்பட்ட வெறித்தனம்தான் இருந்திருக்குமோ என்று எண்ணிப்பார்க்கிறான். அது இருநூற்றாண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தியதால் ஏற்பட்ட வெறி.

துலுக்கத் தளபதிக்கும் பாண்டிநாட்டுக்கும் என்ன பகை? தில்லி சுல்தான் எத்தனை ஆயிரம் காத தூரத்தில் உள்ளார்? அவருக்குப் பாண்டிநாடு எக்கெடுதலைச் செய்தது? செல்வச் செழிப்புடன் விளங்குவது மாபெரும் குற்றமா? வேற்றுச் சமயம் என்பதாலா இந்த வெறியாட்டம்?

கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்த தந்தையார், அங்குள்ள மக்களை ஒன்றும் செய்யவில்லையே! தொழுகைத் தலங்களை, பள்ளிகளை, பாடசாலைகளை விட்டுவிட்டாரே!  ஆயுதமேந்தாத எவரையும் தொடவில்லையே! 'போரினால் எப்படிப்பட்ட அழிவை மக்கள் சந்திக்க நேரிடுகிறது? இந்தப் போர் இந்த அவனியில் வேண்டுமா? அதுதான் அரசருக்கு இலக்கணமா?’ என அவனுள் ஒரு மயான வைராக்கியம் தோன்றுகிறது.

அடுத்த கணமே, அது பறந்துபோய் விடுகிறது. பற்களை நறநறவென்று கடிக்கிறான்.

மதில் உடைக்கப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்து கிடக்கிறார்கள். இதில் பெரும்பான்மையானவர் எதிரிப் படையினர் என்பதை நினைத்துப்பார்க்கும்போதில், பாண்டிய வீரரின் வீரத்தைக் குறித்து - அவர்களின் தாய்நாட்டுப் பற்றைக் குறித்து - வீரபாண்டியனின் நெஞ்சு பெருமையில் சிறிது விம்மத்தான் செய்திறது.

ஒவ்வொரு பாண்டிய வீரனும் கிட்டத்தட்ட ஏழெட்டு எதிரி வீரர்களையாவது வீழ்த்திய பின்னரே வீழ்ந்திருக்கிறான்!

சுந்தரபாண்டியன் மட்டும் அளவுக்கதிகமான வீரர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்காவிட்டால், இத்தனை அழிவு ஏற்படாது அவர்கள் மதுரையைப் பாதுகாத்திருப்பார்களே என எண்ணியெண்ணி மறுகுகிறான்.

மதுரைக்காக மாண்ட வீரர்களின் உடல்களை அங்கிருந்து அகற்றுவதே அவர்களுக்கு இறுதியில் தான் ஆற்றக்கூடிய தலையாய பணியாகும் என்று முடிவெடுக்கிறான். தங்கள் உயிரைத் துச்சமாக மதித்துத் துறந்த அவர்தம் உடல்களைக் காக்கைகளும், கழுகுகளும் கொத்தித் துளைத்து அவக்கேட்டை உண்டுபண்ண விடலாமா? அப்படி விட்டுவிட்டால் அவர்களின் உயிர்த்துறப்பு பொருளற்றுப் போனதாக அல்லவா ஆகிவிடும்? கருப்பாகக் கல் ஒன்று கிடப்பது அவன் கண்களில் தென்படுகிறது.

ஐயத்துடன் அதைப் புரட்டிப் பார்த்த வீரபாண்டியனின் குருதி கொதிக்கிறது. வீரர்கள் தொழுதுவந்த சதுக்கக் கொற்றவைத் தெய்வத்தின் உடைக்கப்பட்ட தலையின் ஒரு பகுதி அது.

சிறிது தூரத்தில் அத்தெய்வத்தின் மற்ற பகுதிகளும் சிதறிக் கிடக்கின்றன. பெரிதாக எழுகின்றது ஒரு ஓலம். அத்திசையே நோக்கித் திரும்புகிறான் வீரபாண்டியன். ஒரு கிழவி மார்பிலும் வயிற்றிலும் மாறிமாறி அடித்துக்கொண்டு பெரிதாகப் பரிதாபமாக ஓலமிடுகிறாள்:

கிழவி
கிழவி

‘மாடுகட்டிப் போரடிச்சாத் தாளாதுண்ணு
ஆனைகட்டிப் போரடிச்ச அழகான என் மதுரை!
அண்ணன் தம்பி அடிச்சுக்கிட்டாகளே,
மாற்றான் வந்து சேர்ந்துட்டாகளே!
எல்லாம் அழிஞ்சு போச்சே! என் மதுரை இப்படி ஆச்சே!
பாண்டியர் வீரம் என்ன ஆச்சு?
கொற்றவை மனம்தான் இறுகிப் போச்சு!
அவளும் உடைஞ்சு போனா, எங்க மானம் பறந்து போச்சு!
மதுரை என்ன ஆகும், இந்தக் கிளவி போலவா ஆகும்?
இதக் காணவா எனக்குக் கண்ணு வேணும்?
கேட்டுக்கடி என் மீனாச்சி, உசுரு இனி எனக்கு என்னத்துக்கு?
பாழாப்போன என் உசுரு போனா, அது போகும் சொர்க்கம்தானே!!’

கிழவியின் பிலாக்கணத்தைக் கேட்டு வீரபாண்டியனின் கண்களில் நீர் துளிர்க்கிறது. அவனது மனதில் இருப்பதை அப்படியே சரம கவிதையாகப் பொழிகிறாளே இக்கிழவி! அவளருகில் சென்று அவளைத் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொள்கிறான்.

தலை நிமிர்ந்து பார்த்த கிழவி, அவனை இனம் கண்டுகொண்டு, அவன் மார்பில் சாய்ந்து தன் தலையைப் புதைத்துக்கொள்கிறாள். அவளது ஓலம் மெல்ல அடங்குகிறது. அந்தக் கிழவி தன் அரசனின் மார்பிலேயே நிம்மதியாகத் தன் இறுதிமூச்சையும் விட்டுவிடுகிறாள்.

மெல்ல அவளைத் தரையில் படுக்க வைக்கிறான் வீரபாண்டியன். மதுரை மாநகரமே அந்தக் கிழவியைப் போல மனம் வெறுத்துத் தன் மார்பில் இறுதி மூச்சை விட்டுவிட்டதோ என்று அவனுக்குத் தோன்றுகிறது.

கிழவியை மெல்ல அருகிலிருக்கும் மர நிழலில் கிடத்திவிட்டுத் தன் குதிரையில் ஏறிக்கொண்டு அரண்மனையை நோக்கி விரைகிறான்.

பாண்டியர் அரண்மனை, மதுரை

விரோதிகிருது, சித்திரை 22 - ஏப்ரல் 24, 131166

வைத்த கண் வாங்காமல் வீரபாண்டியனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது பெரிய கூட்டம்.  அரசாணி மண்டபத்தில் தன் உதவியாளர்களுடன் மாலிக் காஃபூர் அமர்ந்திருக்கிறான். வாய் கட்டப்பட்ட சாக்குமூட்டை ஒன்று அவன் காலடியில் கிடக்கிறது. மொழிமாற்றுவோர் வீரபாண்டியனுக்கும், மாலிக் காஃபூருக்கும் அறிமுகம் செய்விக்கிறார்கள். வீரபாண்டியன் நேராக விஷயத்திற்கு வருகிறான்.

“தில்லி சுல்தானின் படைத்தலைவரே! உமது சுல்தானிடம் எமக்கு எந்தவிதமான பகையும் கிடையாது. அப்படியிருக்க, எமது நாட்டின் மீது முன்னறிவிப்பு எதுவுமில்லாது படையெடுத்து வந்ததும், எம்நாட்டுக் கோவில்களின் தூய்மையைக் கெடுத்ததும், எம் தலைநகரை முற்றுகையிட்டதும், எமக்குச் சரியாகப்படவில்லை. இருப்பினும், நீர் உமது படைகளுடன் இங்கிருந்து நீங்கிச் செல்ல, உமக்கு விருப்பமானதைத் தர யாம் சித்தமாக உள்ளோம். உமது தேவைகளைச் சொல்லும்” பெரிதாகச் சிரிக்கிறான் மாலிக் காஃபூர்.

--------------------------------------------------

[66. பொது ஆண்டு 1311, ஏப்ரல் 24ல் மாலிக் காஃபூர் மதுரையைக் கைப்பற்றினான் - வரலாறு. சூரிய சித்தாந்த வாக்கிய பஞ்சாங்கப்படி, 1311ல் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் தேதி ஏப்ரல் 5ம் தேதி வருகிறது. அதன்படியே, தமிழ் மாதம், தேதிகளுக்கான பொது ஆண்டு மாத, தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கணக்குத் தவறு என்று வாசகர் குழம்பவேண்டாம் - பஞ்சாங்க நன்றி: www.drikpanjang.com <http://www.drikpanjang.com>]

“நாம் உமது நாட்டை நெருங்கியதும், நீர் எம்மை வரவேற்று, எம் தேவை என்ன என்று கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, எம்மை நீர் தாக்கிப் போரில் எமது சேனைக்கு உயிர்ச்சேதத்தை விளைவித்தீர்; பின்னர், உமது உடன்பிறப்பை அனுப்பித் தாக்கினீர். அது இயலாது போனதும், இந்தத் ‘ஷகரி’ன்(நகரத்தின்) கோட்டைக்குள் பதுங்கினீர். தற்கொலைப் படையினரை அனுப்பி, எமது சிப்பாய்களைப் பலவாறும் துன்புறுத்திக் கொன்றீர்.  இதற்கெல்லாம் நஷ்ட ஈடாக, ஒவ்வொரு சிப்பாயின் இழப்புக்கும் சிறப்பான இரத்தப் பணம் அவர்களது குடும்பத்துக்குத் தரவேண்டும். உம்மிடம் பணியாற்றும் அனைத்து இஸ்லாமிய சிப்பாய்களும் தில்லி சுல்தானுக்குச் சேவை செய்யும் எமது சிப்பாய்களாகுதல் வேண்டும். அது போகட்டும், எம்மிடம் உம்முடைய விலை மதிப்பற்ற பொக்கிஷம் ஒன்று உள்ளது. அதற்கு என்ன விலை கொடுக்கப்போகிறீர்?”

வீரபாண்டியன் குழம்புகிறான். “பொக்கிஷமா? குழப்பாமல் விளங்கும்படிக் கூறும்!”

“இதோ பாரும்” என்ற மாலிக் காஃபூர், தன் வாளினால் தன் காலடியில் கிடக்கும் மூட்டையைக் குத்திக் கிழிக்கிறான். அதற்குள்ளே… சுந்தரபாண்டியன் நினைவிழந்து கிடக்கிறான். அரசாணி மண்டபமே வியப்பிலும், அவமானத்திலும் அதிர்ந்துபோகிறது. வீரபாண்டியனுக்குப் பேச்சே எழவில்லை. நாட்டுக்காகப் பகைவனுடன் பொருதி, வீரசுவர்க்கம் சென்றான் என்று நம்பிய இளையோன் சிறைப்பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டானா?

“யாராவது அசைந்தால் உமது ‘சோட்டா பாயி’யை எனது வாளுக்கு இரையாக்கி விடுவேன்!  உம்மிடம் படை பலம் கிடையாது என்றும் எமக்குத் தெரியும். எமது சிப்பாய்கள் உமது ஷகர் முழுக்க நிறைந்துள்ளனர். உமது சோட்டா பாயியை விலை மதிப்பில்லாப் பொக்கிஷமென்று நினைத்தால், என்ன விலை கொடுத்து வாங்கப்போகிறீர்? விலை மதிப்பற்ற பொருளுக்கு உம்மால் என்ன விலை கொடுக்க முடியும்? உம்முடைய ஷகரிலிருக்கும் கோவில் உமது பரம்பரைக்கே, உமது மக்களுக்கே விலைமதிப்பில்லாத சொத்து என்று எனக்குத் தெரியும்.  அதை இதற்கு மேலும் சேதப்படுத்தக்கூடாது என்றால், என்ன கொடுக்கப்போகிறீர்?  இப்படியெல்லாம் பேரம் பேச மாட்டேன் உம்மிடம். அது எனக்குப் பிடிக்காத ஒன்று. எனக்கு வேண்டுவதை நானே சொல்கிறேன்.

“உமது கஜானாவிலிருக்கும் செல்வம் முழுவதும் எனக்கு வேண்டும். உமது கோவிலில் நிறையத் தங்கமும், வைரமும், வெள்ளியும், மாணிக்கக் கற்களும் உள்ளன என்று எமக்குச் சொன்னார்கள். அவை அனைத்தையும் எனக்குக் கொடுத்தால் உமது கோவில் எமது சிப்பாய்களின் சீற்றத்திலிருந்து தப்ப முயற்சி எடுத்துக்கொள்வேன். இத்துடன், உம்மிடமிருக்கும் குதிரைகள், யானைகள், ஆயுதங்கள் அனைத்தும் எனக்குக் கொடுக்க வேண்டும்.

“உமது ஷகரை முற்றுகையிட்டதால் எமது படைக்கு உணவு கிட்டாதுபோனது. எனவே, உமது களஞ்சியங்களில் இருக்கும் தானியங்கள் எமக்குச் சொந்தமாக வேண்டும். உம் மக்களைப் பட்டினி போட விரும்பவில்லை. அல்லா கருணைக்கடல்; அவரது புகழைப் பாடும் நான், எமக்கு உரிமையாகும் தானியங்களிலிருந்து இருபது விழுக்காட்டை உமக்கு இனாமாக அளிக்கிறேன்.  எமது கணக்கர்கள் கணக்குப்பார்த்து எடுத்துக்கொள்வர்.

“கடைசியாக ஒன்று. இவையெல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, நீரும் உமது சோட்டா பாயும் இந்த ஷகரை விட்டு ஓடிவிட வேண்டும். நீர் எமது தாக்குதலை எதிர்நோக்கப் பயந்து இந்த ஊரைவிட்டு ஓடியதாகவும், உங்கள் குடும்பச்சண்டையில் தனக்கு உதவி கேட்டு தில்லி சுல்தானிடம் மகஜர் கொடுக்க உமது சோட்டா பாயி எம்மை நாடியதாகவும்67 - எமது பயணக் குறிப்பாளர் எழுதிக்கொள்வர்.”

--------------------------------

[67. சுந்தரபாண்டியன் தன் அண்ணனுக்கு எதிரான போரில் டில்லி சுல்தானிடம் உதவி கேட்டு, மாலிக் காஃபூரை மதுரைக்கு வரவழைத்ததாக இஸ்லாமியப் பயணக் குறிப்பு கூறுவதாக எஸ். ஸ்ரீநிவாச ஐயங்கார் தமது, ‘தென்னிந்தியாவும் அவளது முகமதியப் படையெடுப்பாளர்களும்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தமையனுடன் என்னதான் பகையிருந்தாலும், உண்மையிலேயே தங்கள் சமயத்தை அழிக்க முயலும் எதிரியிடமே உதவிக்குச் சுந்தரபாண்டியன் சென்றிருப்பானா என்ற ஐயத்தால், மாற்றம் செய்யப்பட்டு இப்புதினம் எழுதப்பட்டிருக்கிறது.]

மாலிக் காஃபூர் மேலும் கொக்கரிக்கிறான்: “இந்த ஷரத்துகளில் ஒன்றைக்கூட நீர் மறுத்தாலும், எமது தாக்குதல் உடனே தொடங்கும். உமது சோட்டா பாயியை நடுத்தெருவில் கம்பத்தில் தலைகீழாய்த் தொங்கவிட்டுத் தோலுறித்துக் கொல்லுவோம். உமது ஷகரையே கொளுத்தித் தரைமட்டமாக்குவோம். உமது கோவில்கள் எதுவும் மிஞ்சாது. கற்குவியல்களாகிவிடும். என்ன சொல்கிறீர்?”

வீரபாண்டியனின் முகத்தை உற்றுநோக்கி, எகத்தாளமாகப் புன்னகைக்கிறான்.

சுந்தரபாண்டியனை எதிரியின் காலடியில் மூட்டைக்குள் பார்த்தவுடனேயே, பேச்சுவார்த்தையில் எவ்விதமான நீதியோ, நெறிமுறையோ இருக்கும் என்ற நம்பிக்கை வீரபாண்டியனுக்கு அறவே இல்லாது போய்விட்டது. எதிர்த்துப் பேரம் பேசும் நிலையில் தான் இல்லை என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான்.

‘தாயே, மீனாட்சி! என் கைகளைக் கட்டிப்போட்டு விட்டாயே அம்மா! சொக்கநாதா, உன் உறைவிடத்தைக் காக்க உன்னுடைய, மதுரை மாநகரின் செல்வத்தையல்லவா விலையாக இப்பாதகனுக்குக் கொடுக்கும் நிலையில் வைத்துவிட்டாயே’ என்று மனதுக்குள் உருகுகிறான்.

மாலிக் காஃபூரைப் பார்த்துத் தலையை மேலும் கீழும் ஆட்டுகிறான். அவனருகில் சென்று, மயங்கிக் கிடக்கும் இளையோன் சுந்தரபாண்டியனின் தலையைத் தன் மடியில் வைத்துத் தனது அமைச்சரை அழைக்கிறான்.

“தில்லி சுல்தானின் தளபதியின் விருப்பப்படி, அவர் கேட்டதைக் கொடுக்க யாம் சம்மதிக்கிறோம். அதற்காக ஆவன செய்வீராக!”

அவனது சைகையைக் கண்ட பாண்டிய வீரர்கள், சுந்தரபாண்டியனைத் தூக்கிச் செல்கிறார்கள்.

மாலிக் காஃபூருக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட யானைகளும், ஐயாயிரம் குதிரைகளும், ஐநூறு மணங்கு (எழுநூறு கிலோ, 1540 பவுண்ட்) வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் பதித்த தங்க நகைகளும், தொண்ணூறாயிரம் பொற்காசுகளும் வழங்கப்படுகின்றன.68

இதுதவிர, அவன் கேட்டபடி, மதுரைக் களஞ்சியங்களில் சேர்த்துவைத்திருந்த தானியங்களும், அவற்றை எடுத்துச்செல்வதற்கு மாட்டுவண்டிகளும் கொடுக்கப்படுகின்றன.

பெருவுடையார் கோவில், கங்கைகொண்ட சோழபுரம்

விரோதிகிருது, கார்த்திகை 22 - நவம்பர் 27, 1311

வைகறை வெளிச்சம் பெருவுடையார் கோவில் விமானத்தைத் தங்கக்கதிர்களால் குளிப்பாட்டுகிறது. அருகாமையிலுள்ள தோப்பின் மறைவில் மாட்டுவண்டியொன்று நிற்கிறது.  அதில் நால்வர் அமர்ந்திருக்கின்றனர். அருகிலுள்ள மரத்தில் ஒரு குதிரை கட்டப்பட்டிருக்கிறது.  அமைதியாகத் தொலைவில் செல்லும் ஊர்வலத்தைக் கண்ணுற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

வைகறை
வைகறை

வெகுநீளமான அந்த ஊர்வலம் சென்றுகொண்டே இருக்கிறது. எத்தனை யானைகள், எத்தனை குதிரைகள், எத்தனை மாட்டுவண்டிகள்? அவை தமிழ்நாட்டின் செல்வத்தையல்லவா அள்ளி சென்றுகொண்டிருக்கின்றன! வடக்கிலிருந்து சூறாவளியாகச் சீறி வந்த சுல்தானின் படைகள் ஒரு காரணமுமின்றி அனைத்துச் செல்வத்தையும் பிடுங்கிக்கொண்டல்லவா செல்கின்றன? மிகுந்த செல்வச் செழிப்புடன் வளமாக விளங்கியதே பெருங்குற்றமாகிப் போய்விட்டதே!

‘சில நூறாண்டுகளுக்கும் மேலான பகையினால் உறையூரும், கங்கைகொண்ட சோழபுரமும் அழிந்தன’ என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், எவ்விதப் பகையுமில்லாத தில்லிச் சுல்தானால் அல்லவா பாண்டியப் பேரரசு அழிந்துபோயிருக்கிறது!

--------------------------------------------

[68. விவரிப்பு விவரம் - தாரீக்-ஈ-அலாயி, அமீர் குஸ்ரோவின் பயணக்குறிப்பு – வரலாற்றாளர்
எஸ். ஸ்ரீநிவாச ஐயங்கார்.]

கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்ததற்குப் பாண்டியருக்குக் கடவுள் கொடுத்த தண்டனையா அது? அப்படியானால் தன் இருப்பிடங்களான கோவில்களையும் அவர் ஏன் அழிக்க விட்டார்?’ என்று சிந்தித்த நால்வரின் கண்களும் கலங்குகின்றன.

வயதான அந்த முதிய மறையவர் அமைதியைக் கலைக்கிறார்.

“அவர்கள் கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டார்கள். இனி நாம் இங்கே வந்த வேலையைக் கவனிப்போம்.”

அவர் வண்டியை விட்டுக் கீழிறங்குகிறார். இருபது வயது மதிக்கத்தகுந்த பெண்ணொருத்தி அவரைப் பின்பற்றிக் கீழிறங்குகிறாள். வண்டியின் முன்னால் அமர்ந்திருந்த வீரன் மெதுவாக இறங்குகிறான். அவனது இடக்கால் செயலிழந்திருப்பது அவன் இழுத்து இழுத்து நடப்பதிலிருந்து தெரிகிறது. இறுதியாக இருபத்தைந்து வயதுள்ள வாலிபன் இறங்குகின்றான்.

அவர்களுடன் தொடர்ந்து வர முற்பட்ட அவனைத் தடுத்து நிறுத்துகிறார் அந்த மறையவர் - சதாசிவ சாஸ்திரி.

“ஏகாம்பரநாதா, இது நாங்கள் மட்டுமே செய்யவேண்டிய இறுதிப் பணி. பெரிய சகாப்தம் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. அதை விவரிக்கும் சான்றை மறைத்து வைக்க நாங்கள் செல்கிறோம். எனவே, எங்களைப் பின்தொடராதே. அந்தக் குழலை எடுத்துக்கொடு. அது போதும்.”

“ஐயா, இந்த வீரரால் நடந்து வர இயலுமா? ஒற்றைக்காலில் நொண்டிக்கொண்டு எவ்வளவு தொலைவு உங்களுடன் வருவார்? கனமான இக்குழலைத் தங்களால் சுமந்து செல்ல முடியுமா?” என்று பணிவுடன் கேட்கிறான் – அந்தப் பெண் வெண்ணிலாவின் கணவன் - ஏகாம்பரநாதன்.

“பெருவுடையார் எனக்கு அதற்கான வலுவைத் தருவார்” என்றபடி ஒரு கையில் கைத்தடியை ஊன்றியும், மறுகையால் ஏகாம்பரநாதன் எடுத்துக்கொடுத்த குழலைத் தோளில் வைத்துப் பிடித்தவாறு நடக்கிறார் சதாசிவ சாஸ்திரி.

வெண்ணிலா அவருடன் குழலைத் தாங்கலாகப் பிடித்தபடி நடக்கிறாள். வண்டியின் வெளிப்புறத்தில் சொருகியிருந்த ஈட்டியை எடுத்து, அதன் அடியை ஊன்றியவண்ணம் அவர்களைப் பின்தொடர்கிறான் அந்தப் பாண்டிய வீரன் முத்தையன்…

…உடல் நலம் தேறி எழுந்து உட்கார முத்தையனுக்குக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகி விட்டன. மாட்டுவண்டியிலேயே அவனைத் தனது கிராமத்திற்கு வெண்ணிலாவுடன் சதாசிவ சாஸ்திரி அழைத்துச்சென்றார். எவ்வளவு மருத்துவம் செய்தும், அவனது இடதுகால் செயலிழந்தது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. முத்தையன் தடியை ஊன்றி நடக்கப் பழகிக்கொண்டான். மதுரை அழிந்த செய்தியும் அவர்களுக்கு வந்துசேர்ந்தது. அதைக் கேட்டதும் உடனே மதுரை செல்ல வேண்டும் என்று துடித்த முத்தையனை, ‘ஒரு காரியம் நடக்க வேண்டியுள்ளது. அது முடிந்ததும் நீ செல்லலாம்’ எனக்கூறிச் சதாசிவ சாஸ்திரி நிறுத்தி வைத்தார்.

பதினைந்து நாள்களுக்கு முன்னர்தான் வெண்ணிலாவின் திருமணம் காஞ்சியிலிருந்து வந்த ஏகாம்பரநாதனுடன் நடந்தது. தான் பல்லவர் பரம்பரையில் வந்தவன் என்று சொல்லிக்கொண்டான் ஏகாம்பரநாதன்.

அவர்கள் இருவரும் கிளம்பும் சமயத்தில் இறுதியான முடிவை எடுத்த சதாசிவ சாஸ்திரி, தமிழ்த்திருப்பணி தங்கச்சுருள் அடங்கிய குழலுடன், முத்தையனையும் அழைத்துக்கொண்டு அவர்களுடன் கிளம்பினார்.

அவர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்தவுடன், இரவில் மறைவாக ஒரு தோப்பில் தங்கினார்கள். காலையில்தான் மாலிக் காஃபூரின் படை மதுரையின் அளவில்லாச் செல்வத்துடன் செல்வதைக் கண்டனர்…

…மரங்களுக்கிடையில் மறைந்திருந்த சிறிய ஓட்டு வீட்டை அடைந்ததும், சதாசிவ சாஸ்திரி தன் இடுப்பிலிருந்த சாவியை எடுத்து, கதவில் தொங்கிய பூட்டைத் திறக்கிறார். உள்ளே சென்றதும், அங்கிருந்த தீவட்டியை எடுத்துக் கொளுத்துகிறார். குழலைச் சுவற்றில் சார்த்திவிட்டு, வெண்ணிலாவின் உதவியுடன் அங்கிருக்கும் மரப்பெட்டியை நகர்த்துகிறார். பெட்டி மறைத்திருந்த பலகையை மூன்று பேருமாகத் தூக்கி நகர்த்தி வைக்கின்றனர். கீழே சுரங்கப்படிகள் தெரிகின்றன.

தீவட்டியுடன் கீழே இறங்குகிறார் சதாசிவ சாஸ்திரி. வெண்ணிலாவும், முத்தையனும் குழலைச் சுமந்தவாறு அவரைப் பின்தொடர்ந்து படியில் இறங்குகின்றனர்.

அவர்கள் மனதில் எழும் கேள்வியை உணர்ந்தாற்போல, “இந்தச் சுரங்கம் பெருவுடையார் கோவில் கருவறையின் கீழிருக்கும் இரகசிய அறைக்குச் செல்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் எனது மூதாதையரான கருவூர்த்தேவர், இராஜராஜசோழச் சக்ரவர்த்தியாருக்குத் தமிழை அவரது பேரரசு முழுவதும் பரப்பத் தீட்டிக்கொடுத்த திட்டம் இக்குழலுக்குள் உள்ள தங்கச்சுருளில் எழுதப்பட்டுள்ளது. எனது முன்னோர் இதைப் பாதுகாத்து, அத்திட்டம் நடந்தேறும் நடப்பை எழுதி வந்தனர். நானும் மதுரை வீழ்ந்தது வரை எழுதினேன்.

“இனித் தமிழ் மன்னர் மீண்டும் தலையெடுப்பர், தமிழை வளர்த்துத் தழைக்கச்செய்வர் என்ற நம்பிக்கை என்னை விட்டு அகன்றுவிட்டது. சோழர்கள் அடியோடு அழிந்துவிட்டனர்.  அவர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரம் சிற்றூராகிப் போனது. பாண்டியப் பேரரசும் நூறாண்டுகள் ஓங்கி வளர்ந்துவிட்டு, ஒரு தலைமுறைக்குள்ளேயே அண்ணன்-தம்பிப் பங்காளிச் சண்டையால் அழிந்தது.”

சதாசிவ சாஸ்திரிக்குக் குரல் கம்முகிறது. சிறிது நேரம் அமைதியாக நடந்தபின்னர் மீண்டும் தொடர்கிறார்: “எதை இனி எழுதுவேன்? என்னவென்று எழுதுவேன்? எதிர்காலத்தில் தமிழின் தலையெழுத்து எப்படியாகும் என்று எனக்குத் தெரியவில்லை. எனவே, தமிழின் எதிர்காலத்தைப் பெருவுடையாரே தீர்மானிக்கட்டும் என்று அவரது கோவில் கருவறைக்குக் கீழே, அவர் பாதுகாப்பில் விட்டுவிட்டு வரத் தீர்மானித்தேன். எவர் மீண்டும் தமிழைச் செழிப்புறச் செய்து இராஜராஜசோழரின், அந்தப் பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவை நிறைவேற்றுவார்களோ, அவர்கள் கையில் தங்கச்சுருள் அடங்கிய இக்குழலைப் பெருவுடையார் கிடைக்கக் கட்டாயம் அருள்பாலிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

மூவரும் இரகசிய அறையை அடைகின்றனர்.  தன்னிடமிருந்த சாவியை எடுத்த சதாசிவ சாஸ்திரி, அறைக் கதவைத் திறக்கிறார். பெரிய அறையொன்று கதவுக்குப் பின்னால் தென்படுகிறது.

அந்த அறையில் நிறைய ஜாடிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. பல பெட்டிகளும் உள்ளன.  சுவரோரம் இருந்த பெட்டியின் மேல் இராஜராஜருக்குக் கருவூர்த்தேவர் அளித்த குழலைப் பயபக்தியுடன் வைத்து, இருகரங்களையும் கூப்பிய சதாசிவ சாஸ்திரி எதையோ முணுமுணுக்கிறார்.

“நமக்கு வடகிழக்கே மேலே பெருவுடையாரின் கருவறை உள்ளது. அவர் மீது நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வோமா?” என்று வினவுகிறார்.

“அப்படியே, ஐயா” என்ற பதில் மற்ற இருவரிடமிருந்தும் வருகிறது.

“நாம் இங்கிருந்து வெளியேறியவுடன் நமது வழியைப் பார்த்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட வேண்டும். ஒருவரையொருவர் சந்திக்க எந்தவிதமான முயற்சியையோ, நமது பழம்பெருமைகளையோ பேசிக்கொண்டிருக்கக்கூடாது. இந்தக் குழலைப் பற்றியோ, சுரங்கப்பாதையைப் பற்றியோ எவரிடமும் சொல்லக்கூடாது.

“நமது சந்ததிகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுப்போம், அவர்களும் தங்கள் வழித்தோன்றல்களுக்கு தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியையும் அவர்களிடம் வாங்கிக்கொள்வோம். அது நிறைவேறிவரும் பட்சத்தில், எதிர்காலத்தில் நம் மூவரின் சந்ததியார் ஒன்றுகூடுவர். பெருவுடையார் அருளால் இக்குழல் அவர்களிடம் கட்டாயம் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பெருவுடையாறே அவர்களது அறிவுக்கு எட்டச்செய்வார். இது எனது அசைய முடியாத நம்பிக்கை!” என்று நிறுத்துகிறார்.

முவரும் குழலின் மீது கைவைத்து உறுதிமொழி எடுக்கின்றனர்.

“நீங்கள் உறுதிமொழி எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நாம் எடுத்த உறுதிமொழியையும் தங்கச்சுருளில் எழுதி வைத்துள்ளேன். பின்னர், தங்கச்சுருளை முதல் பதிவுக்குத் திருப்பி வைத்துவிட்டேன்” என்று நன்றியுடன் தெரிவிக்கிறார் சதாசிவ சாஸ்திரி.

“இந்த ஜாடிகளில்…” என்று முத்தையன் கேட்டதற்கு, “இவற்றில் சோழநாட்டின் பொன்னும், மணியும், திருமுறைகளும், திவ்வியப்பிரபந்தங்களும் உள்ளன. இந்தக் குழல் எவரிடம் கிட்டுகிறதோ, அவர்களுக்கே இச்செல்வங்கள் சொந்தமாகும்!” என்றவர், ஒரு பேழையைத் திறந்து அதிலிருந்து வட்டவடிவமான மூன்று நாணயங்களை எடுக்கிறார்.

அவற்றின் நடுவில் அமர்ந்திருக்கும் ஒரு புலியும், இடப்பக்கத்தில் இரு மீன்களும், வலப்பக்கம் அம்பும் வில்லும், மேலே இருபுறமும் குஞ்சம் கட்டிய கம்பைப் பிடித்த தேவதையும், இன்னும் பல அடையாளங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. நாணயத்தை சுற்றி ஏதோ எழுதப்பட்டிருக்கிறது.  மறுபக்கத்தில் தமிழில் எழுத்துக்களில் பாதியை அரக்குக் கலமை மறைத்துவிட்டிருக்கிறது.

“இது சோழ சாம்ராஜ்ஜியத்தின் இலச்சினை. இவற்றைச் செல்லாமல் ஆக்கச் சிறப்புக் கலவை ஊற்றப்பட்டிருக்கிறது. ஆளுக்கு ஒன்றை வைத்துக்கொள்வோம். இதையும் நம் சந்ததியாருக்குக் கொடுத்து வருவோம். பிற்காலத்தில் அவர்கள் ஒன்றுசேரும்போது, இதை வைத்து இனம்கண்டுகொள்ள உதவக்கூடும். அவர்கள் எதிர்காலத்தில் சந்திப்பார்களா, தமிழ் வளர்க்கும் திட்டமடங்கிய குழல் அவர்கள் கைக்குக் கிட்டுமா என்பதை எல்லாம்வல்ல இறைவனான சிவபெருமானிடமே விட்டுவிடுவோம். செல்லலாம், வாருங்கள்” என்று திரும்புகிறார் சதாசிவ சாஸ்திரி.

முதலில் வெண்ணிலாவையும், முத்தையனையும் போகவிட்டு, இரகசிய அறைக்கதவைப் பூட்டுகிறார். சுரங்கப்பாதையில் நடந்துவந்து ஓட்டு வீட்டை அடைகிறார்கள். மூவரும் மரப்பலகையை இழுத்துப்போட்டு, பெட்டியையும் அதன் மேல் பழையபடி வைத்து விடுகிறார்கள்.

கலங்கிய கண்களுடன் சதாசிவ சாஸ்திரி மற்ற இருவருக்கும் தெரிவிக்கிறார்: “இப்படியொரு இரகசிய வழி இருப்பது கடந்த நூறாண்டுகளாக எங்களுக்கு மட்டுமே தெரியும். கடைசிச் சோழ மன்னர் இராஜேந்திரருக்கும், அவரது தந்தையாருக்கும்கூட இதைப் பற்றித் தெரியாது. இந்த இரகசியத்தை எவருக்கும் தெரியாமல் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குழல் என் கையை விட்டுப் போய்விட்டது. மேலும், இந்த இரகசிய வழி உங்களுக்கும் தெரிந்துவிட்டது. ஆகவே, எங்கள் முன்னோரும் நானும் எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி இரகசிய அறைக்குச் செல்லும் வழி அழிக்கப்பட வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள்” என்று சுவரில் வெளிவந்திருக்கும் ஒரு மரக் கைப்பிடியை - முதலில் அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழையும்போது தீவட்டி தொங்கிக்கொண்டிருந்த அந்த மரக் கைப்பிடியைக் கீழே தள்ள முயற்சிக்கிறார். மற்ற இருவரும் அம்முயற்சியில் அவருக்குக் கைகொடுக்கின்றனர்.

கீழே கடகடவென்ற ஒலி பெரிதாகக் கேட்கிறது. இருவரையும் அவசரப்படுத்தித் தானும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவர்கள் நூறு தப்படிகள் சென்றதும், அந்த ஓட்டு வீடு இடிந்து விழுந்துவிடுகிறது. அது இருந்த இடத்தில் புழுதி பறக்கிறது. வெண்ணிலாவும், முத்தையனும் வியப்புடன சதாசிவ சாஸ்திரியைப் பார்க்கிறார்கள்.

“நாம் சென்ற சுரங்கப்பாதை அழிக்கப்பட்டுவிட்டது. அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இருந்த இடமே தெரியாதிருக்கும்படி அந்த வீடும் தரைமட்டமாகியது. இனி அச்சமில்லை, வாருங்கள் செல்லலாம்” என்றவர் முன்னே நடக்கிறார். வெண்ணிலாவும், முத்தையனும் பின்தொடர்கின்றனர்.

மூவரும் மாட்டுவண்டியை அடைந்தவுடன், அவர்களை எதிர்நோக்கியிருந்த ஏகாம்பரநாதன், “நீங்கள் வரும்வழியில் ஏதோ இரைச்சல் கேட்டது, புழுதியும் பறந்தது. என்னவாயிற்று?” என வினவுகிறான்.

“ஒன்றுமில்லையப்பா. நாங்கள் சென்ற வேலை முடிந்ததை அது காட்டியது. அதைப்பற்றி வெண்ணிலாவிடம் ஒருபொழுதும் கேட்க மாட்டேன் என எனக்கு நீ வாக்களிக்க வேணும்” என்று கையை நீட்டுகிறார். புரியாத முகத்துடன் ஏனென்று கேட்காமல் அவன் உறுதிமொழி அளிக்கிறான்.

“நாம் பிரிந்து செல்லும் நேரம் வந்துவிட்டது. சிவபெருமான் அருள் உங்களுக்குக் கிட்டட்டும்” என வாழ்த்துகிறார் சதாசிவ சாஸ்திரி. வெண்ணிலா தன் கணவனுடன் வண்டியில் ஏறிக்கொள்கிறாள்.

“செல்லுங்கள்” என்பது போலக் கையசைத்ததும் வண்டி புறப்படுகிறது. வெண்ணிலா தன் கண்களில் கசியும் நீரைத் துடைத்துக்கொள்கிறாள்.

“முத்தையா, நீயும் குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பு” என்ற சதாசிவ சாஸ்திரியிடம், “ஐயா, தாங்கள் தனியாக எப்படி நடந்துசெல்வீர்கள்? தில்லி சுல்தானின் சிப்பாய்கள் இன்னும் மறையவர்களைக் குறிவைக்கிறார்களாமே?” என்று கவலையுடன் கேட்கிறான் முத்தையன்.

“சிவபெருமான் அருள் இருக்கும் வரை கவலை எதற்கு? ‘நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்ற திருநாவுக்கரசரின் அருள்வாக்கு நீ அறியாததா? என்னைக் காப்பது அவன் பொறுப்பு. நீடூழி வாழ்வாயாக!” என்று அவனை வாழ்த்திவிட்டுத் தடியை ஊன்றிக்கொண்டு கிளம்புகிறார் சதாசிவ சாஸ்திரி.

துரையின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ்நாட்டைத் தமிழர் எவரும் ஆளவில்லை. மதுரையின் செல்வச் செழிப்பை அறிந்த தில்லி சுல்தான்கள் மீண்டும் தமிழ்நாட்டைச் சூறையாட வந்தனர். பிற்காலத்தில் முகம்மது பின் துக்ளக் என்று அறியப்பட்ட உலூக் கான் அவர்களில் முக்கியமானவன். மதுரையில் தில்லி சுல்தான்களின் ஆட்சி சில காலம் நடந்தது. அதன் பின்னர், விஜயநகரம் தலையெடுத்து அவர்களின் குடைக்குக் கீழே தமிழ்நாடு வந்தது.  அவர்களின் படைத்தலைவர்களான நாயக்கர்கள் தமிழ்நாட்டைப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர். அவர்களுக்குப் பிறகு ஆங்கிலேயரிடம் தமிழ்நாடு வந்து அடங்கியது. அவர்கள் பாரதம் முழுவதையும் ஒரு குடைக்குக் கீழே கொணர்ந்தனர். அவர்கள் ஆட்சியில் தொண்ணூறாண்டுகள் இருந்த இந்தியா பொது ஆண்டு 1947ல் தன்னாட்சி பெற்றது.  கிட்டத்தட்ட இராஜராஜரின் பேரரசளவுக்கு விரிந்திருந்த சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபின், தமிழ்நாடு என்ற பெயருடன் இந்தியாவின் ஒரு மாநிலமாக இன்று இருந்து வருகிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com