பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 5

சேக்கிழார்
சேக்கிழார்

ஒரு அரிசோனன்

கூத்தபிரான் நடராஜர் கோவில், தில்லை (சிதம்பரம்)

ரௌத்திரி, தை 1 - ஜனவரி 1, 1141

பொன்னம்பலப் பிரகாரத்துக் கீழ்ச்சுவரில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கும் சிலைகளைக் கவனிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். சமணர்கள் கழுவேற்றப் பட்டிருக்கும் சிற்பத்தைக் கவனித்ததும் அவர் முகம் சற்று சுருங்குகிறது. அவரையும் அறியாமல் அவரது வாய், “ச்சை! இந்தச் சிற்பம் இங்கு இருக்க வேண்டுமா?” என்று முணுமுணுக்கிறது.

“என்ன ஓய்… சிவாச்சாரியாரே, எந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்று நீர் அருவருப்பு அடைகிறீர்!” என்ற சேக்கிழாரின் குரல் அவரைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.

“வணக்கம் சேக்கிழார் பெருமானே? திடுமென்று தாங்கள் இங்கு எப்படி?” என்று இழுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.

சிவாச்சாரியார்,சேக்கிழார்
சிவாச்சாரியார்,சேக்கிழார்

“அது இருக்கட்டும், எந்தச் சிற்பம் உம்மை அருவருப்படையச் செய்தது? காண்பியும்” என்று மீண்டும் கேட்கிறார் சேக்கிழார். சமணர்கள் கழுவேற்றப்படும்15 சிற்பத்தைக் காட்டுகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி.

அதை உற்றுப் பார்த்த சேக்கிழார், “இந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்பதற்கு உம்முடைய தரப்பு கருத்து என்னவோ?” என்று வினவுகிறார்.

“இறைவனின் அருளை வேண்டி அடியார்கள் குழுமும் புனிதமான இடம் இது. இதில் கொலைத் தொழிலைக் காட்டும் இந்தச் சிற்பம் இருக்க வேண்டுமா?”

“இது சரித்திரம் அல்லவா? காழிப்பிள்ளையாருடன்16 வாது புரிந்து தோற்ற அமணர்கள் விரும்பிப் பெற்ற தண்டனைதானே இது? அவர்கள் சைவத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்காதே! தவிரவும் இராஜேந்திரசோழப் பிரம்மராயர் வழிவந்த நீர் மறத்தைக் கண்டு அஞ்சலாமா?” என்று அச்சிற்பம் அங்கு இருப்பது பொருத்தமானது என்ற தன் கருத்தைச் சேக்கிழார் வெளியிடுகிறார்.

“இது பாண்டியரை உயர்த்தும் சரித்திரம் அல்லவா? சோழநாட்டில், அதுவும் கோவில் என்றால் தில்லை என்று பெயர் பெற்ற கூத்தபிரான் களிநடமாடும் பொன்னம்பலப் பிரகாரத்தில் பாண்டியர் புகழ் பாட வேண்டுமா? ஏதோ ஒரு பாண்டியச் சிற்பி யாரும் அறியாத வண்ணம்
இச்சிற்பத்தைச் செதுக்கிவிட்டது போலலல்வா இருக்கிறது?” பாலசுப்பிரமணிய சிவாச்சாரி தன் வாதத்தை வேறு பக்கம் திசை திருப்புகிறார்.

-------------------------------------------

[15. கூன்பாண்டியன் சமணரைக் கழுவேற்றவில்லை என்றும், அது பன்னிரண்டாம் திருமுறையான ‘திருத்தொண்டர் புராணம்’இயற்றிய சேக்கிழாரின் கற்பனை என்று கூறுவோரும் உளர். தவிரவும், ‘தில்லைக் கோவிலில் உள்ள புடைப்புச் சிற்பங்களிலுள்ள கழுவேற்றப்படுவோரின் சிகை நீளமாக உள்ளது; சமணப் பெரியோர் தலையை மழிப்போர்” எனத் தம் வாதினை உறுதிப்படுத்துவர்.  மதுரையிலும் கழுவேற்றப்படும் சிற்பம் உளது. எப்படியிருப்பினும், திருமுறை இயற்றிய சேக்கிழார் பொய்யுரையார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இப்பகுதி எழுதப்பட்டுள்ளது.

16. சீர்காழியில் பிறந்த சைவ சமயக் குரவரான திருஞானசம்பந்தரை, அவர் பிறந்த ஊரைச் சிறப்பித்து, காழிப்பிள்ளையார் என்று அன்புடன் அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.]

“உமது நோழநாட்டுப் பற்றை நாம் மெச்சுகிறோம். சைவத்திற்கு வந்த இடர் எவ்வாறு நீக்கப்பட்டது என்ற வரலாற்றையே இச்சிற்பம் காட்டுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன் தான் சென்ற வழி தவறு என்று உணர்ந்து, நன்னெறிக்குத் திரும்பி வந்து, புறச்சமயத்தார் தாமே விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றினான் என்றுதான் உலகுக்குத் தெரிவிக்கிறது. ஆகவே, நீர் உமது நோக்கை விரிவுபடுத்தும். பாண்டியன் என்ற குறுகிய நோக்கை விடுத்து, தமிழன், சைவன் - அதுவும் சோழ இளவரசியாலும், சோழவள நாட்டில் அவதரித்த காழிப்பிள்ளையாராலும்தான் சைவத்திற்குத் திருப்பப்பட்டு, அரச நெறியை நிறைவேற்றியவனின் வரலாறு என்ற பெருநோக்குடன் இச்சிற்பத்தைக் கண்ணுற்றால் - இது சைவ நாயன்மார்களில் ஒருவரான சோழ இளவரசியும், பாண்டிமாதேவியுமான மங்கையர்க்கரசியாரின் சைவத்தொண்டைச் சிறப்பிக்கும் சிற்பம் என்று உமக்குப் புரியவரும். இது நாம் எழுதப்போகும் திருத்தொண்டர் புராணத்தின் ஒரு பகுதி என்றும் அறிந்து கொள்வீர்” என்று விரிவுரை ஆற்றுகிறார் சேக்கிழார்.

“தங்களது பொறுமைக்கும், எனது அறியாமையை அகற்றியதற்கும் மிக்க நன்றி சேக்கிழார் பெருமானே!” என்று குழைந்த பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், “தங்கள் வருகைக்கான காரணத்தை இன்னும் சொல்லவில்லையே!” என்று வினவுகிறார்.

“நாம்தான் அதைப் பற்றியும் கூறினோமே, நீர் கவனத்தைச் சிதறவிட்டிருக்கிறீரே! நீர் இந்தச் சிற்பத்தைப் பற்றித் தமக்குத்தாமே பேசி, அதற்கு நாம் விளக்கம் கொடுத்தபோது இங்கு வந்ததற்கான காரணத்தைக் கூறிவிட்டோமே!” என்று சேக்கிழார் கூறியதும், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியின் முகம் மலர்கிறது.

“தாங்கள் இங்குதான் திருத்தொண்டர் புராணத்தை எழுத இருக்கிறீர்களா?”

“இறைவன் அடியெடுத்துக் கொடுத்து, அதை நாம் எழுதத் துவங்க வேண்டும் என்று மனதிற்குள் ஓர் வேண்டுதல். வாரும், இறைவன் முன்பு அமர்ந்து பேசுவோம்!” என்று அழைக்கிறார் சேக்கிழார். அவரை வரவேற்க வந்த தில்லை அந்தணர்கள் சிலரையும் புன்னகை கலந்த அன்புடன் தடுத்துவிடுகிறார். இருவரும் சற்றுத் தள்ளி நடராஜரின் திருவுருவம் கண்ணில்படும், அதேசமயம் மனித நடமாட்டம் குறைவான இடத்தில் அமர்ந்துகொள்கிறார்கள்.

“ஓய் சிவாச்சாரியாரே! நீரும் நானும் ஒன்றையேதான் விரும்புகிறோம். தமிழ் என்றும் அழியாமல் எல்லோராலும் பேசப்பட வேண்டும், தமிழ் மறைகள் அனைவராலும் ஓதி உணரப்படுதல் வேண்டும் என்பதுதான் அது. அநபாயச் சோழரும் அதற்காகவே திருத்தொண்டர் புராணம் எழுதி முடிக்கும் வரை என்னைத் தில்லையிலேயே இருக்குமாறு பணித்து விட்டார். உமக்கு தமிழ்பால் இருக்கும் ஆர்வம் நான் அறியாததல்ல. எனவே, தமிழையும், சைவத்தையும் ஒருங்கே வளர்க்கும் இப்பணியில் உம்மையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால், திருத்தொண்டர் புராணம் எழுதுவதற்கு எனக்கு நீர் உதவி செய்ய வேண்டும்!” என்று சேக்கிழார் சொன்னதும், “இதைவிடப் பெரும் பேறு எனக்கு என்ன இருக்கிறது சேக்கிழார் பெருமானே! தாங்கள் திருவாய் மலர்ந்து அருளுங்கள்!” என்று பணிவாகப் பதிலிருக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி.

“நீர்தான் எமது எழுத்தராக இருக்க வேண்டும்!”

“பெரும் பேறு பெற்றேன் பெருமானே! திருத்தொண்டர் புராணத்தை முதன்முதலில் செவியுறும் நல்வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? அதையும் தாங்கள் சொல்லச் சொல்ல நான் எழுதுவது என்றால்… என் மயிர்க்கால்கள் புல்லரிக்கின்றன.”

பாலசுப்பிரமணிய சிவாச்சாரி பாகாய்க் கரைகிறார்.

அருகில் இருந்த பணியாளரிடம் சைகை செய்கிறார் சேக்கிழார். பணியாளர் தன்னிடம் இருக்கும் துணிக்கட்டைப் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியிடம் கொடுக்கிறார். சேக்கிழாரின் தலையசைப்பைக் கண்ணுற்று இவர்கள் பேச்சு காதில் விழாத தூரத்தில் நின்றுகொள்கிறார்.

“ஓய் சிவாச்சாரியாரே! பதனிடப்பட்ட ஓலைகளும், நல்ல எழுத்தாணியும்
இத்துணிக்கட்டிற்குள் உள்ளன. எனவேதான், உம்மிடம் இதைக் கொடுக்கச் செய்தோம்.  திருத்தொண்டர் புராணத்திற்கு முதலடி எடுத்துக் கொடுக்கும்படி தில்லை நடராஜரை இறைஞ்சிக்கொண்டிருக்கிறேன். அவர்தான் கருணை காட்டவேண்டும்.”

“கட்டாயம் நடக்கும் பெருமானே! அவருடைய நாயன்மார்களைப் பற்றி நீங்கள் திருமுறை எழுதக் கட்டாயம் அம்பலவாணர் அடியெடுத்துக் கொடுப்பார்!” பரவசத்துடன் பதில் வருகிறது.

அப்பொழுது நடராஜருக்குத் தீப ஆராதனை நடக்கிறது. அந்த ஒளியில் அவரது திருவுருவம் தகதகவென்று மின்னுகிறது.

“அவனது ஒளியைப் பாரும், அவனது தலையில் மின்னும் பிறை நிலாவைக் காணும். அவன் தரித்துக்கொண்டிருக்கும் கங்கையைக் கவனியும். இம்மாதிரி ஜோதியை நான் கண்டதே இல்லை. எப்படிப் பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான் பாரும்!  அவனது சிலம்பு அணிந்த திருவடிகள்தான் நமக்கு எப்படித் தரிசனம் கொடுக்கின்றன என நோக்கும்!” என்று சேக்கிழார் சொல்லி முடித்தவுடன் அவர்களைச் சுற்றிப் பல இடங்களில் கோவில் மணிகள் ஒலிக்கின்றன.

திடுக்கிட்டுத் திரும்பிய சேக்கிழார் சுற்றுமுற்றும் பார்க்கிறார். மணி ஓசையில் அவரது மனமும், இதயமும், சிந்தனையும் லயிக்கின்றன. மெல்ல அவரது முகம் மலர்கிறது. தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கிறார். கை விரல்கள் தாளமிடுகின்றன. பிறகு எழுந்து நின்று கையை உயர்த்தி நடமிடும் நாயகனான நடராஜனை நோக்கிக் கூப்புகிறார்.

“கேட்டீரா ஓய்? இறைவன் அடியெடுத்துக் கொடுத்து விட்டான்! திருத்தொண்டப் புராணத்திற்கு முதல் அடியெடுத்துக் கொடுத்துவிட்டான். தனது கோவில் மணிகளின் ஒலியின் மூலமாக முதல் அடியெடுத்துக் கொடுத்து, ‘என் அடியார்களின் புகழைப் பாடு, என்னை எழுது; எழுது; திருமுறையாக எழுது’ என்று ஊக்குவிக்கிறானே! உமது காதில் அது விழுகிறதா?” என்று ஆனந்தப் பரவசத்துடன் கேட்கிறார் சேக்கிழார்.

“பெருமானே, என் காதில் கோவில் மணிகள் ஒலிக்கும் சத்தம்தான் கேட்கிறது. வேறொன்றும் கேட்கவில்லையே! இறைவன் தங்களிடம் கோவில் மணி ஒலி மூலம் சொல்வது தங்களது தவப் பயன். என் மாதிரி ஒன்றுமில்லாத ஒருவனுக்கா சொல்வான்?” என்று குறைப்பட்டுக் கொள்கிறார்.

“கவனமாகக் கேளும் ஓய்! உமக்கும் புரியும். மணிகள் ஒலிப்பதை நன்றாகக் கவனித்துச் சொல்லும் ஓய்!” என்று பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரை உற்சாகமாகத் தூண்டுகிறார்.

“அப்படியே!” என்று பயபக்தியுடன் கேட்ட பாலசுப்பிரமணிய சிவாச்சாரி, ‘டாண், டாண்’ என்றுதான் கேட்கிறது” என்கிறார்.

“மேலெழுந்தவாரியாகக் கேட்காதீர். உற்றுக் கவனியும். மணிகள் அடித்த பிறகு எழும் அதிர்வுகள் என்ன சொல்கின்றன என்று உட்சென்று கவனியும்” என்கிறார்.

கண்களை மூடிக்கொண்டு கேட்ட பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், “டாண், டாண் என்று ஒலியெழுப்பிய பிறகு மணிகளிலிருந்து ஓம், ஓம், உம், உம், லம், லம், கெம், கெம், லாம், லாம் என்றும் பலவாறு அதிர்வுகள் கிளம்புகின்றன. எனக்கு சொற்கள் தெரியவில்லையே?”  என்கிறார்.

“அதேதான். நீர் கேட்டவற்றைத்தான் நானும் கேட்டேன். நீர் எழுத்துக்களை மாற்றிச் சொல்கிறீர். மணி ஓசையின் அதிர்வு எப்பொழுதும், ‘ஓம்’ என்ற பிரணவ ஓங்காரத்துடன்தான் முடியும். ஒவ்வொரு மணிக்கும் தனிப்பட்டதான அதிர்வு உண்டு. அதில் ‘ம்’ என்ற ஒலியை முடிவாக வைத்துக் கொள்வோம். நீர் கேட்ட பல அதிர்வுகளை எழுத்துக்கள் என்று வைத்துக்கொண்டு, ‘ம்’ என்ற பிரணவ மந்திரத்தின் ஒலியை எடுத்துச் சொல்லின் கடைசியில் வைத்துக்கொண்டால் மிஞ்சும் ஒலிகளை ‘உ, ல, கெ, லா’ என்று வரிசைப்படுத்தலாம். ம் என்ற பிரணவத்தின் ஒலியைக் கடைசியில் போட்டால், உலகெலாம் என்ற சொல் நமக்கு இறைவனான சபேசனால் கொடுக்கப்பட்டிருக்கிறது17 பார்த்தீரா?” என்ற சேக்கிழாரின் விளக்கத்தைக் கேட்டு அயர்ந்து விடுகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.  ஆடலழகனான தில்லைக்கூத்தன் தனது அலகிலா விளையாட்டை நிகழ்த்திய நேர்த்தியை எண்ணி உள்ளம் பூரிக்கிறார்.

------------------------------------------

[17. திருத்தொண்டர் புராணத்தைத் துவக்க அசரீரி வாயிலாக இறைவனே சேக்கிழாருக்கு உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. அதை அறிவியல் நோக்குள்ளவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் கோவில் மணிகளின் அதிர்வு ஒலிகள் வாயிலாக இறைவனே சேக்கிழாருக்குத் தெரிவித்ததாக இங்கு புனையப்பட்டிருக்கிறது.]

உற்சாகத்துடன் மேலும் தொடர்கிறார் சேக்கிழார். “நமக்கு இறைவனார் எடுத்துக் கொடுத்த உலகெலாம் என்ற சொல்லை வைத்துக் கொள்வோம். சற்றுமுன் அவரது தரிசனத்தைப் பற்றிப் பலவாறும் வர்ணித்தேன். அதை வைத்து முதல் செய்யுளைச் சொல்கிறேன், எழுதிக் கொள்ளும்” என்று பரபரக்கிறார். உடனே துணிக் கட்டை அவிழ்த்து, ஓலைகளையும், எழுத்தாணியையும் தயாராக வைத்துக்கொண்டு தலையசைக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி.

சேக்கிழார் மெய்மறந்து துவங்குகிறார்.

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்

நிலவுலாவிய நீர்மலி மேனியன்

அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!

“இறைவன் தங்களுக்குள் இருக்கிறான் என்பதை உலக மக்கள் அனைவரும் உணர்ந்துகொண்டு அவனைத் துதி பாடி வர வல்லவன்; புனித நீரைப் பொழியும் கங்கை, அவனது தலை முடியில் இருக்கிறாள்; பிறை நிலா அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  அவனிடமிருந்து எழும் ஜோதி ஒளிக்கு ஏதும் நிகராகாது. அவன் தில்லையில் உள்ள பொன்னம்பலத்தில் என்றும் ஆடிக்கொண்டிருக்கிறான். அவனது மலர் போன்ற ஆனந்தத் தாண்டவம் ஆடும்போது ஒலிக்கின்ற சிலம்புகள் அணிந்த திருவடியை வாழ்த்தி வணங்குவோமாக!” என்று முடிக்கிறார்.

“ஆகா, அருமை… அருமை!” என்று ரசித்தவாறு முதற்செய்யுளை எழுதி முடிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி.

சேக்கிழாரிடமிருந்து அருவியாகப் பெருகுகிறது கவிதை வெள்ளம். திருத்தொண்டர் புராணம் உருப்பெறுகிறது.

மதுரைக்கு பதினைந்து கற்கள் கிழக்கே

குரோதன, ஆனி 6 - ஜூன் 5, 1205

நூலிழையாக வைகை ஆறு தொலைவில் ஓடிக்கொண்டிருப்பது மாறவர்மனின் கண்ணில் தெரிகிறது. தமையனார் குலசேகரபாண்டியனிடமிருந்து வந்த ஓலையைக் கண்டு பதறியடித்து தன்னுடன் இருக்கும் பாண்டியப் படைகளுடன் மதுரையை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறான்.

‘அருமைத் தம்பி! குலோத்துங்கசோழனின் படைகள் நமது மதுரையைத் தாக்க விரைந்து வந்துகொண்டிருக்கின்றன. அவனுக்குத் துணையாக போசளர்களின் (ஹொய்சளர்கள்) படைகளும் திரண்டு வந்திருக்கின்றன. என்னால் தாக்குப் பிடிக்க இயலும் என்று தோன்றவில்லை. நீ உடனே விரைந்து வா.’

தனது தமையனார் எழுதியிருந்த ஓலையில் இருந்த வரிகள் அவனது கண்முன் நிற்கின்றன. அவன் பக்கத்தில் குதிரையில் வரும் அவனது குதிரைப் படைத்தலைவர்களில் ஒருவனும், அவனது மெய்காப்பாளனும், வெற்றிமாறன் வழிவந்தவனுமான செந்தில்நாதன், மாறவர்மனின் முகத்தில் தோன்றும் கவலையைக் கவனிக்கிறான்.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

ஆறுதலாக இருக்கட்டுமே என்று, “அரசே, தங்கள் முகத்தில் கவலை ஏன்? இன்னும் ஐந்தாறு நாழிகைகளில் மதுரையை அடைந்து வடுவோம்” என்று அன்பாகக் கூறுகிறான்.

“செந்தில்நாதா, என்னைச் சமாதானப்படுத்துவதை விட்டுவிடு. தமையனார் தேவையில்லாமல் சோழமன்னனுடன் வம்பிழுத்துக்கொண்டிருக்கிறார். நமக்குள்ளேயே நாம் சண்டையிடும்போது, நமக்கு உதவியாக யாரும் இல்லாதபோது, வயநாட்டுச் சேரன் குலோத்துங்கனுக்குப் பயந்து நடுங்கும்போது, சோழ இளவரசியை மணந்த போசள மன்னன் வீரவல்லாளன் சோழனுக்கு உறவினனாகவும், உதவியாளனும் ஆகிவிட்டபோது நாம் எப்படி, எதை நம்பிப் போரிட இயலும்!” மாறவர்மனின் குரலில் ஆற்றாமை இருக்கிறது.

“அரசே, தாங்களா இப்படிப் பேசுகிறீர்கள்! சோழர்களின் பிடியில் மதுரை அடங்கிக் கிடக்கிறது என்ற பதற்றமோ, வெறியோ தங்கள் நெஞ்சில் ஏற்படவில்லையா! என் குருதி கொதிக்கிறது, அரசே!” என்று பொங்குகிறான் செந்தில்நாதன்.

“பாண்டிநாடு தற்பொழுது எப்படி இருக்கிறது என்று உனக்குத் தெரியவில்லையா! ஐந்து அரசர்கள் நாட்டைக் கூறு போட்டு ஆள்கிறார்கள். ஒருவர் முதுகில் குத்த மற்றவர் தயாராக இருக்கிறார்கள். சண்டை இட்டுக்கொண்டுதானே என் பாட்டனார் குலசேகரபாண்டியர் குலோத்துங்க சோழனையும் அவரது உடன்பிறப்பான பராக்கிரமபாண்டியர், இலங்கை மன்னன் பராக்கிரமபாகுவையும் நாடிச் சென்றார்கள்! அதனால்தானே இலங்கை மன்னனின் படைத்தலைவன் இலங்காபுரன் உதவி செய்யும் சாக்கில் பாண்டிநாட்டையே தீயிட்டுக் கொளுத்தினான்?18 ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக்கொண்டாட்டம் என்றபடிதானே ஆயிற்று? தமிழர்களான, பாண்டியர்களான, உடன்பிறப்புகளான நாம் அடித்துக்கொள்வதால், சோழர்களையும், அவர்களது உறவினர்களான கருநாட்டாரையும், சிங்களவர்களையும் பாண்டிநாட்டிற்கு வரவழைத்து, நம் நாட்டையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறோம்!  இதுமட்டுமா… இதே குலோத்துங்கன் நமது மதுரையில், நமது அரசாணி மண்டபத்தில்தானே பாண்டிநாட்டிற்குத் தலைவனாக முடிசூட்டிக்கொண்டான்!

“அதுவும் எப்படி! எனது சிறிய தகப்பனார் வீரபாண்டியனின் தலையைக் கொய்து, அவரது மனைவியைக் குற்றேவல் செய்துவரும்படி பணித்துச் சோழநாட்டிற்கு அனுப்பி, அவரது மணிமுடியின் மீது காலை வைத்துக்கொண்டு,19 வயநாட்டுச் சேரனையும், எனது தந்தையார் விக்கிரம பாண்டியரையும், சிற்றரசர்களாக தனக்கு இருபக்கமும் தரையில் அமரச் செய்தல்லவா முடிசூட்டிக்கொண்டான்!” மாறவர்மனின் குரல் சினத்தினால் கரகரக்கிறது.

“இப்படிப்பட்ட சோழனைப் பழிக்குப் பழிவாங்க வேண்டாமா அரசே?”  என்று கேள்வி பிறக்கிறது செந்தில்நாதனிடமிருந்து.

“அவசியம் பழிவாங்க வேண்டும்! ஆதித்த கரிகாலன் காலத்தில் நமது மூதாதையர் வீரபாண்டியருக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து, நமது பரம்பரை சொத்துக்களைக் கவர்ந்து சென்றதுவரை எல்லாவற்றிற்கும் சேர்த்துப் பழிவாங்க வேண்டும்! இருநூறு ஆண்டுகளாக நமக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வேண்டும். திறை செலுத்திவரும் நிலையை - நமக்கு ஏற்பட்ட இழுக்கை - மதுரையை சோழரின் அடிமைத்தனத்திலிருந்து நீக்கிட வேண்டும் - அதுவும் என்னுடைய உயிர் போவதற்குள்ளாக என்பதுதான் எனது குறிக்கோள்.

“மதுரையை மீட்ட பாண்டியனாக ஆக வேண்டும். பாண்டிநாட்டின் பரம்பரைச் சொத்தை மீட்டு, சொக்கநாதர், மீனாட்சித் தாயின் திருவடிகளில் சமர்ப்பித்து, மீண்டும் பாண்டியர்கள் பண்டைய பெருமையுடன் கோலோச்ச வேண்டும் என்றுதான் எனது ஒவ்வொரு உயிர்மூச்சும் எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது! ஆனால், அதற்கேற்ற தருணம் இன்றுவரை வரவில்லை. அறிவில்லாத வீரம் அசட்டுத் துணிச்சல்தான். திரும்பத் திரும்ப அசட்டுத் துணிச்சலுடன் சோழர்களுடன் மோதித் தேவையில்லாமல் உயிர் பலி கொடுப்பது முறைமையே அல்ல.”

சில கணங்கள் தனது பேச்சை நிறுத்துகிறான் மாறவர்மன். அவன் முகத்தில் இலேசாகக் கருமை படர்கிறது.

-----------------------------------------

[18. ‘பாண்டிய உள்நாட்டுப் போரில் இலங்கை மன்னனின் படைத் தலைவன் இலங்காபுரன் பாண்டிநாட்டின் பெரும்பகுதிகளைத் தீக்கு இறையாக்கினான்’-  South India and her Mohammedan Invaders (தென்னிந்தியாவும், அவளது முகமதியப் படையெடுப்பாளர்களும்) - ‘மகாவம்சத்’திலிருந்து எடுத்துக்காட்டு - எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார்.

19. தன் மகனின் மூக்கை அறுத்த அவமானத்தைத் துடைப்பதற்காகப் போரிட்ட வீரபாண்டியனின் தலையை மணிமகுடத்துடன் நெட்டூர்ப் போரில் கொய்து, மதுரையில் மணிமகுடம் சூட்டிக்கொண்டு, வீரபாண்டியனின் ராணியைக் குற்றேவல் செய்ய மூன்றாம் குலோத்துங்கன் அனுப்பினான் - மூன்றாம் குலோத்துங்கனின் அரசாட்சியின் பதினொன்றாம் ஆண்டு கல்வெட்டுகள்.]

“பாண்டிநாட்டைக் கூறு பிரித்துக்கொண்டு ஆட்சி செய்யும் ஐவரும் முதலில் ஒன்று சேர வேண்டும். ஒரு கையின் விரல்களைப் போல ஒன்றுசேர்ந்து பாண்டிய மண்ணுக்காக வாள் ஏந்தும் காவலர்களாக விளங்க வேண்டும். அதற்குமுன் நாம் செய்யும் எந்தப் போரும் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளுக்கு ஒப்பாகுமே தவிர, வேறு எந்தப் பயனையும் தராது.  போகட்டும். இப்பொழுது மதுரையில் தமையனாரின் நிலைமை எப்படி இருக்கிறதோ என்று தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் ஆயிரம் வீரர்களால் என்ன செய்ய இயலும் என்றும் எனக்குத் தெரியவில்லை.”

தன் மனநிலையைப் பகிர்ந்துகொண்டு வரும் மாறவர்மன் திடுமென்று குதிரையை இழுத்துப் பிடித்து நிறுத்தி, கையை உயர்த்துகிறான். அவன் நிற்பதைப் பார்த்ததும், அவனுடன் வரும் அனைவரும் நிற்கிறார்கள்.

“அங்கு தெரிவதென்ன செந்தில்நாதா? கவனித்துப் பார். மதுரை இருக்கும் திசையில் தெரிவது புகையா?” பதற்றம் தொனிக்கிறது மாறவர்மனின் குரலில்.

கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்த செந்தில்நாதன், “அப்படித்தான் தெரிகிறது அரசே!”  என்றவன் திரும்பி, “எலே பச்சையப்பா, இங்கே வாடா” என்று குரல் கொடுக்கிறான்.

பின்னாலிருந்து சுருட்டைத் தலைமுடி கொண்ட இளைஞன், “கும்பிடறேன் மகராசா! அண்ணே, எதுக்குக் கூப்பிட்டீக?” என்றபடி ஓடி வருகிறான்.

“பச்சையப்பா, மேற்கால பாரு. மதுரை இருக்கற திக்கு அது. தீப்புகையா வருது? சரியாப் பார்த்துச் சொல்லு” எனச் செந்தில்நாதன் அவனை முடுக்குகிறான்.

தூரத்தில் தெரிவதை நன்கு கவனித்துச் சொல்வதற்காகக் கூர்மையான கண் பார்வை உடையவர்களை உடன் வைத்திருப்பது அரசர்கள் வழக்கம். படையை நடத்திச் செல்லும்போது அவர்களின் உதவி மிகவும் தேவைப்படும். அப்படிப்பட்ட ஒருவன்தான் பச்சையப்பன் என்ற அந்த இளைஞன்.

மேற்கில் சாய ஆரம்பித்திருக்கிறது பரிதி. எனவே, கண்ணில் படும் வெளிச்சத்தைக் கையால் மறைத்துக்கொண்டு பச்சையப்பன் உற்றுநோக்குகிறான். பத்துப் பதினைந்து விநாடிகள் கழிகின்றன. மாறவர்மனுக்கும், செந்தில்நாதனுக்கும் பொறுமை குறைகிறது. அவர்கள் பக்கம் திரும்புகிறான் அவன்.

“மகராசா, மதுரை இருக்கற திக்கிலேந்து மூணு இடத்திலே புகை கிளம்புது. ஒண்ணு தள்ளி இருக்கு. ரெண்டு பக்கத்து பக்கத்திலே இருக்குது மகராசா!”

திடுக்கிட்டுப் போகிறான் மாறவர்மன். “என்னது, மூன்று இடங்களில் புகை கிளம்புகிறதா!  மேலே என்ன தெரிகிறது?” என்று வினவுகிறான்.

“புகைக்குக் கீழே புழுதி நெறையத் தெரியுது மகராசா!” என்று சொல்கிறான் பச்சையப்பன்.

கையைக் காட்டி அவனை அனுப்பிவிட்ட மாறவர்மனின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் தோன்றுகின்றன.

அவனைத் தொந்தரவு செய்யாதவண்ணம் கவனிக்கிறான் செந்தில்நாதன்...

“எலே செந்திலு. நம்ம நாட்டுக்கு விடிவு பொறக்கற காலம் வந்துட்டுதுடா. நம்ம மாறவர்ம மகராசாவுனாலதான்டா அது வரப்போகுது. அவர் மத்த ராசாக்கள் மாதிரி இல்லேடா.  அவருகிட்ட வீரம் மட்டும் இல்லேடா, உலக அறிவும், படிப்பு அறிவும் ரொம்பவே இருக்குதுடா.  படிச்ச அறிவாளிங்களுக்கும் மேலே அவருக்கு அறிவு இருக்குதுடா. அவரைச் சின்ன வயசுலேந்து தூக்கி வளர்த்திருக்கேன்டா. அவரைப் பார்த்தா பெரிய மகாராசாவா வரக்கூடியவரு அப்படீன்னு தோணுதுடா. அவரு கம்பீரம் என்ன, வீரம் என்ன, அறிவு என்ன.  அவரைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்டா நாள் முழுக்க.

“அவருக்கு உழைக்கறதுக்கு நீ ரொம்பக் கொடுத்து வச்சவன்டா. அவருக்கு ஏத்த மாதிரி நடந்துக்கடா. அவரைக் கண்ணுக்கு இமை மாதிரி இருந்து காப்பாத்துடா. நாம பரம்பரை பரம்பரையா பாண்டிய ராசாக்களைக் காப்பாத்திக்கிட்டு வாரோம். தொடர்ந்து காப்பாத்தணும். அவுக எப்படியும் நம்ம நாட்டை விடுவிச்சுடுவாருடா!

மாறவர்மனுக்கு மெய்காப்பாளனாகக் கிளம்பியபோது தந்தை சொன்ன சொற்கள் அவன் நினைவுக்கு வருகின்றன.

“செந்தில், அதோ தெரியும் அந்த மண்டபத்திற்கு நமது அணித் தலைவர்களை உடனே அழைத்து வா. அவர்களுடன் நான் பேச வேண்டியிருக்கிறது” என அவனை அனுப்பிய மாறவர்மன், பச்சையப்பனிடம் ஆணையிடுகிறான்.

“தம்பி, நீ மூன்று வீரர்களை அழைத்துக்கொண்டு குதிரையில் ஐந்து கல் தூரம் வேகமாகச் சென்று இன்னும் என்ன தெரிகிறது என்று பார்த்து வா.”

பணிந்து தலையை ஆட்டிய பச்சையப்பன், உடனே கிளம்புகிறான். மண்டபத்தை நோக்கித் தன் குதிரையைச் செலுத்துகிறான் மாறவர்மன்.

சிறிது நேரத்தில் எட்டு அணித் தலைவர்கள் மண்டபத்திற்கு செந்தில்நாதனுடன் வந்து சேருகிறார்கள். மண்டபத்து மேடையில் காலைத் தொங்கப்போட்டு அமர்ந்திருக்கும் மாறவர்மனுக்கு முன்னால் அனைவரும் நிற்கிறார்கள். மாறவர்மன் அனைவரையும் அமர்ந்து கொள்ளும்படி சைகை செய்கிறான். தயங்கியபடியே அணித் தலைவர்கள் மண்டப மேடையில் ஏறி அமர்கிறார்கள்.

அவர்கள் முகங்களில் கேள்விக்குறி தாண்டவமாடுகிறது.

தொண்டையைச் செறுமிக்கொண்டு மாறவர்மன் பேச ஆரம்பிக்கிறான். “என் தமையனார், அரசர் குலசேகரபாண்டியர், நம்மை மதுரைக்கு விரைந்து வரும்படி அழைத்திருக்கிறார். எனவே, நாம் ஆயிரம் வீரர்களுடன் அங்கு செல்வது உங்களுக்குத் தெரியும். சோழர்களுக்கு உதவியாக போசளப்படை வந்திருக்கிறது. ஆனால், தென்பாண்டிநாட்டு இளவரசர்கள் அரசரின் உதவிக்கு வரவில்லை. இந்நிலையில்…”

அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வருகிறது.

“மதுரை இருக்குமிடத்திலிருந்து புகை கிளம்புவது என் கண்ணுக்குத் தெரிந்தது. இதை கூர்ந்த கண்ணுள்ள தொலைநோக்கனும் உறுதி செய்தான். மூன்று இடத்திலிருந்து புகை எழுவதாகவும், புழுதி எழுவதாகவும், புழுதி சூழ்ந்திருப்பதாகவும் சொன்னான். எனவே, அவனை முற்சென்று செய்தி சேகரிக்க அனுப்பி உள்ளேன். இதை எண்ணிப் பார்க்கும் போது…

“இதை எண்ணிப் பார்க்கும்போது… மதுரைக்கு ஏதோ தீங்கு நேர்ந்துகொண்டு இருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.”

“ஆ!” என்ற பேரொலி அனைவரின் வாயிலிருந்தும் எழுகிறது.

“மதுரைக்குத் தீங்கு நேர வேண்டும் என்றால், வடக்கில் பொன்னமராவதியில் இருக்கும் நமது பாண்டிய அரசர் முறியடிக்கப்பட்டு விட்டார், அவரது படைகள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதுதானே பொருள்! அவரைத் தாண்டிக்கொண்டு வந்த சோழப்படைகளிடம் மதுரையில் இருக்கும் நமது படைகள் தோற்றுவிட்டன, வென்றவர்கள் தோற்ற நம் மதுரையைச் சூறையாடுகின்றனர் என்றுதானே முடிவு செய்துகொள்ள வேண்டும்?

“நம்முன் இப்பொழுது இருக்கும் கேள்வி இதுதான். நமது எண்ணிக்கை மிகவும் குறைவு.  இப்பொழுது நாம் மதுரைக்குப் போரிடச் சென்றால் நமது அழிவு திண்ணம். இருப்பினும் உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது. நாம் ஆயிரம் பேர் அழிந்தாலும் பல்லாயிரம் சோழர்களை அழித்து வீர சுவர்க்கம் அடைவோம் என்று நீங்கள் துடிப்பதும் எனக்குப் புரிகிறது” நிறுத்துகிறான் மாறவர்மன்.

“ஆமாம் அரசே! உடனே மதுரைக்கு அணிவகுத்துச் செல்வோம். அங்கு வீர மரணம் அடைந்த நமது பாண்டிய உடன்பிறப்புகளுக்கு சோழர்களின் குருதியையும், நமது வீரவாள்களால் கொய்யப்படும் அவர்களின் தலைகளையும் நீத்தார் கடனுக்குச் செய்யும் வேள்விக்கு ஆகுதியாக்குவோம். உடனே புறப்படுவோம், அரசே!” என்று அணித் தலைவர்கள் குரல் கொடுக்கின்றனர்.

மாறவர்மன் புன்னகைக்கிறான்.

“எனக்கு நன்றாகப் புரிகிறது நண்பர்களே! உங்களது வீரமும், நாட்டுப் பற்றும். நமது பாண்டிய உடன்பிறப்புகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பும் எனக்கு நன்றாகப் புரிகின்றது. எனது குருதி கொதிக்கின்றது. தினவெடுத்த தோள்கள் துடிக்கின்றன. நான் சுவாசிக்கும் இந்தப் பாண்டிய மண்ணின் காற்று, உடனே சென்று சோழர்களை பழிவாங்கு என்று ஓலமிட்டவாறு என் நெஞ்சை நிரப்புகின்றது. ஆயினும்…”

“ஆயினும் என்ன அரசே! உடனே புறப்படுவோம்!” அணித்தலைவர்களின் உரத்த குரல்கள் மண்டபம் முழுவதும் எதிரொலிக்கின்றன.

மாறவர்மன் அவர்களைக் கையமர்த்துகிறான்.

“நண்பர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் வீர சுவர்க்கம் அடைவதாலும், எதிரிகளின் தலைகளை வேள்விக்கு ஆகுதி ஆக்குவதாலும் பாண்டிநாட்டை வெற்றியடைச் செய்ய இயலுமா? நமது ஒருவரின் உயிர் செல்வதற்கு முன் பத்து சோழர்களின் உயிரை எமனுலகுக்கு அனுப்பினாலும் பத்தாயிரம் சோழர்கள்தான் அழிவார்கள். மதுரை மீட்கப்பட மாட்டாது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் தீயில் நமது உடல்கள்தான் கருகும். அங்கு பறக்கும் கழுகுகளுக்கு நமது உடல்கள் இரையாகுமே தவிர, நமது நோக்கம் ஈடேறாது.  எனவே…

“எனவே, முதலில் மதுரையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வோம். அதற்குத் தகுந்தபடி நடவடிக்கை எடுப்போம். சிந்தித்துச் செயல்படுவோம். மதுரையைக் காக்கச் சிந்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பதிலாக காவிரியைச் சோழர்களின் இரத்தத்தால் சிவக்கச் செய்வோம். இதை நடத்த உறுதி எடுப்போம். அவசரத்திலும், வெறியிலும் உடனே நமது குருதியைத் தேவையில்லாமல் சிந்த வேண்டாம்.”

மாறவர்மனின் மார்பு புடைக்கிறது. அவனது குரல் உயர்ந்து ஒலிக்கிறது.

“வீரத் தாய்களுக்குப் பிறந்த நாம், கோழைகள் அல்ல. கட்டாயம் நாம் பழி தீர்ப்போம். அதற்கு முன்னர் மதுரைக்கு என்ன நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வோம். இன்று நமது உயிரைக் காப்பாற்றிக்கொண்டு, நாளை நமது வெற்றியைக் கொண்டாடுவோம்.  அமைதி காப்பீர்.

“உங்கள் மன்னனான நான் கோழையல்ல. இன்று உங்களுக்கு நான் வாக்குக் கொடுக்கிறேன்.  எது எப்படி இருந்தாலும் நமது மனதைத் திடப்படுத்திக்கொண்டு, நமது உள்ளத்தில் இருக்கும் கொதிப்பைப் பயன்படும் முறையில் பின்பு பயன்படுத்துவோம்.”

எழுந்து நின்று, தனது உறையில் இருக்கும் வாளை எடுத்து உயர்த்தி முழக்கமிடுகிறான்.

“மதுரையில் சோழர்கள் ஏற்படுத்தும் ஒவ்வொரு சேதத்திற்கும் பத்து மடங்கு சேதத்தை உறையூர், தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏற்படுத்துவோம். அதற்கு இன்று உங்கள் முன்னிலையில் நான் உறுதி எடுக்கிறேன். இது என்னைப் படைத்த பாண்டிய மண்ணின் மீது, மதுரையில் காலை மாற்றி நடமாடும் சொக்கநாதன், மீனாட்சி மீதும் ஆணை. என்னுடன் நீங்களும் இந்த உறுதியை எடுத்துக்கொள்ளுங்கள்!”

அணித்தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதி எடுக்கின்றனர்.

“பத்து ஒற்றர்களைப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் துணையாக பத்துப்பத்து வீரர்களுடன் மதுரைக்கு அனுப்புகிறேன். அவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு வருவார்கள். இன்னும் ஒன்று. பதினோராவது பிரிவாக நான் செல்லப்போகிறேன். என்னுடன் செந்திலும் உங்களின் இருவரும் வருவீர்கள். மேலும் எழுவரை நான் தேர்ந்தெடுப்பேன்.  விவரத்தை அறிந்துகொண்டு மற்றவர்களுக்குச் சேதி அனுப்புகிறேன். அதுவரை நீங்கள் திருப்பூவனத்தில் மறைந்திருங்கள்.

“ஒருவேளை, என்னிடமிருந்து பத்து நாள்களில் தகவல் வராவிட்டால், நீங்கள் கலைந்து செல்லுங்கள். சிறுசிறு அணிகளாக, மாறுவேடமிட்டு மதுரைக்கு வந்து சேருங்கள். எப்படியும் உங்களுக்காக நான் விட்டுச் சென்ற சேதி உங்களுக்குத் தெரியவரும்.

“ஏதாவது கேட்க வேண்டுமானால் கேளுங்கள்” மாறவர்மன் அணித்தலைவர்களின் பதிலை எதிர்நோக்குகிறான்.

“அரசே! எங்களுக்குப் பாதி புரிகிறது. மீதி புரியவில்லை. வெறும் புகையை வைத்து மதுரை வீழ்ந்துவிட்டது என்று எப்படித் தாங்கள் முடிவெடுக்கிறீர்கள்? நமது பாண்டியப் படை வெற்றி அடைந்து அந்த மகிழ்ச்சியைச் சொக்கப்பனை கொளுத்தி மகிழ்ந்துகொண்டிருக்கலாம் அல்லவா!” என்று கேட்கிறான் அணித் தலைவர்களின் ஒருவன்.

“நல்ல கேள்வி. நமது வீரர்கள் வெற்றி அடைந்திருந்தால் உடனே அரசர் குலசேகரர் நமக்குச் செய்தி அனுப்பி இருப்பார். மதுரையில் புகையுடன் புழுதி பறக்கக் காரணமில்லை. இதுவரை என் உள்மனது சொல்வது சரியாகத்தான் இருந்து வருகிறது.

“நீங்கள் எழுப்பிய கேள்வி என் மனதிலும் எழுந்தது. அதனால்தான் நமது தொலைநோக்கியை இன்னும் ஐந்து கற்கள் சென்று நன்றாகக் கவனித்து வரும்படி அனுப்பியுள்ளேன். இன்னும் சிறிது நேரம் அவன் வரும்வரை காத்திருப்போம்.”

தூணில் சாய்ந்தபடி மாறவர்மன் கண்களை மூடிக் கொள்கிறான்.

இனிமேல் அவன் பேச மாட்டான் என்று அவனது தோற்றம் அணித்தலைவர்களுக்கு அறிவித்தபடியால் அவர்கள் மௌனமாக அமர்ந்துகொள்கிறார்கள்.

ஒருசிலர் மண்டபத்திலிருந்து தள்ளிச் சென்று மெதுவான குரலில் உரையாடுகிறார்கள். ஒருவிதமான கலக்கமும், பரபரப்பும், எதிர்பார்ப்பும் அவர்களிடம் காணப்படுகிறது.

கிட்டத்தட்ட மூன்று நாழிகைகள் கழிந்த பின்னர் பச்சையப்பனும் அவனுடன் சென்ற வீரர்களும் திரும்பி வருகின்றனர்.

அவர்கள் முகம் பதற்றத்துடன் காணப்படுகின்றது.

மாறவர்மன் முன் பணிந்து வணங்கிச் சேதி சொல்ல ஆரம்பிக்கிறான் பச்சையப்பன்.

“அரசே! நாங்கள் ஐந்து கற்கள் சென்றோம். புகை மேலும் நான்கு இடங்களில் தோன்ற ஆரம்பித்தன. எனவே இன்னும் ஐந்து கற்கள் செல்ல முடிவெடுத்தோம். மேலே ஒரு கல் சென்றதும் ஏகாலிகளின் (சலவைத் தொழிலாளர்கள்) குடியிருப்பு ஒன்று சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அங்கு பலர் கொல்லப்பட்டுக் கிடந்தனர். ஒரு மூதாட்டி தன் பேரக் குழந்தையை வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்.

“அவளிடம் விசாரித்ததில் ஒரு நாள் முன்பு கருநாட்டு வீரர்கள் அங்கு வந்ததாகவும், அவர்களிடம் இருந்த தானியங்களையும், நகைகளையும் தரச்சொல்லித் துன்புறுத்தியதாகவும், தர மறுத்தவர்களை வெட்டிச் சாய்த்துவிட்டு, மதுரை நோக்கிச் சென்றதாகவும் கூறினாள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவர்களது குடிசைகளை தீயிட்டுக் கொளுத்தி விட்டார்களாம். பயந்த அனைவரும் வேறு ஊருக்குச் சென்று விட்டார்களாம். உடல்நிலை சரியில்லாத குழந்தையை எங்கும் கொண்டு செல்ல இயலாத மூதாட்டி, இறந்து கிடக்கும் தன் மகனையும், மருமகளையும் அடக்கம்கூட செய்யாமல் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதலாக ஒரு வீரனை விட்டுவிட்டு ஓடோடி வந்தோம்” என்று சொல்லி முடிக்கிறான்.

“எத்தனை கருநாட்டு வீரர்கள் வந்தார்கள் என்று மூதாட்டிக்குத் தெரியுமா? நீங்கள் விசாரித்தீர்களா?”

“ஆயிரக்கணக்கில் என்று அந்த மூதாட்டி சொன்னாள். அவர்களது, ஆடு, மாடுகள், கோழிகள் மட்டுமல்லாமல்; அவர்களின் கழுதைகளையும் ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டனராம். அவர்களுடன் நூற்றுக்கணக்கான கழுதைக் கூட்டமும் இருந்ததாம். அவர்கள் குடியிருப்பில் ஒரு மணி அரிசியோ, நெல்லோ கூட விட்டுச்செல்லவில்லையாம்” என்று பதில் வருகிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com