0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 13

ஒரு அரிசோனன்

தஞ்சை அரண்மனை

பரிதாபி, புரட்டாசி 30 – அக்டோபர் 15, 1012

துமை போல நின்று விடுகிறான் சிவாச்சாரி. அவனது காதுகளையே அவனால் நம்ப முடியாது போகிறது. மஞ்சத்தில் அமர்ந்திருக்கும் இராஜராஜர் அருகே ஆசனங்களில் அமர்ந்திருக்கும் சோழமாதேவி, குந்தவைப் பிராட்டியார், இராஜேந்திரன், திரிபுவன மகாதேவி, பஞ்சவன்மாதேவி, குந்தவி ஆகியோரின் முகங்களை மாறிமாறிப் பார்க்கிறான்.

“என்ன சிவாச்சாரியாரே, வாயடைத்து நின்று விட்டீர்? என்ன சொக்குப்பொடி போட்டு என் மருமகளை மயக்கினீர்? ‘இனி யாரையும் என் கண்கள் நோக்கா, எவருக்கும் என் இதயத்தில் இடமில்லை, என் வாழ்க்கைத் துணைவராகவல்லார் யாருமிலர்’ என்று அவள் சொல்லும் அளவுக்கு நீர் என்ன செய்தீர்? உம்மை நண்பராக வரித்த என் தமையனுக்கு நீர் செய்யும் நன்றிக்கடனா இது! உம்மை ஓலைநாயகமாக உயர்த்திய என் தந்தையாரின் பேத்திக்கே வலை வீசியிருக்கிறீரே!” என்று பொரிந்து தள்ளிய குந்தவிக்கு என்ன பதில சொல்வது என்று சிவாச்சாரிக்குத் தோன்றாமல் போகிறது.

முப்பத்திரண்டு வயதான தன் மீது பத்தொன்பது வயதான அருள்மொழி நங்கைக்கு காதல் எப்படிப் பிறந்தது? அவளுடன் தான் நேருக்குநேர் நின்று பேசியதுகூட இல்லையே! இராஜராஜருடன் தமிழ்த் திருப்பணிபற்றி உரையாடும் பொழுது பல தடவை ஆர்வத்துடன் கவனித்திருக்கிறாள். சிலசமயம் ஏதாவது ஆலோசனையோ அல்லது கேள்விகளோ கேட்பாள். அதற்கு பதில் சொல்லும்பொழுது அரசிளங்குமரிக்கான மதிப்புடன்தான் அவளிடம் பேசியிருக்கிறானே தவிர, மற்றபடி அவளிடம் வேறு பேச்சே கிடையாது. அப்படியிருக்கையில் பதிமூன்று வயது அதிகமான, அதுவும் ஏற்கனவே திருமணம் ஆகிய தன் மீது அவளுக்கு இப்படி ஒரு…

அவனால் மேலே எதுவும் நினைக்கவும் இயலவில்லை, குந்தவியின் குற்றச்சாட்டுக்குப் பதில் எதுவும் சொல்ல இயலவில்லை. செயலிழந்து நிற்கிறான். 

“ம்… இப்படி வாய்மூடி மௌனியாக நின்றால் உமது குற்றத்தை நாங்கள் மறந்துவிடுவோம் என்ற நினைப்பா சிவாச்சாரியாரே? உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைத்து விட்டீரே!” பெண் புலியாகச் சீறுகிறாள் குந்தவி. தலையைக் குனிந்துகொள்கிறான் சிவாச்சாரி.

“வேங்கை நாட்டு அரசியாரே! சக்கரவர்த்தி அவர்களே, என்னை நண்பராக வரித்த மன்னர் அவர்களே, பிராட்டியாரே, மகாராணியார்களே…!” என்று ஆரம்பிக்கும் சிவாச்சாரியின் குரல் தழுதழுக்கிறது.

“என் உயிரும், உடலும் இந்தச் சோழநாட்டை ஆண்டுவரும் சக்கரவர்த்தி அவர்களுக்கும், கோப்பரகேசரியாருக்கும் சொந்தமானது. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன், வேங்கைநாட்டு ராணியாரே! எச்சமயத்திலும் நீங்கள் சொல்லிய எண்ணத்துடன் நான் அரசிளங்குமாரியாரைக் கண்ணுறவே இல்லை. இது பெருவுடையார் மீது ஆணை! என் ஆசானான கருவூரார் மீது ஆணை! பரம்பரை பரம்பரையாக நாங்கள் சோழ அரச வம்சத்தின் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறோம். இந்த நாட்டுக்காகவும், அரசுக்காகவும் எங்கள் தோலைக்கூட மிதியடியாகச் செய்து போடுவோம். அப்படியிருக்கும் எங்களைப் பார்த்து உண்டவீட்டுக்கு இரண்டகம்…” தொண்டை அடைத்துப் பேச்சு அடைக்கிறது. எச்சிலை விழுங்கி விட்டு மீண்டும் தொடர்கிறான்.

“எப்பொழுது இப்படிப்பட்ட பேச்சு எழுந்ததோ, அப்பொழுதே நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். என் முன்னோர்கள் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டேன். இனிமேலும் நான் சோழ அரசுக்கு ஓலைநாயகமாகவோ, கோப்பரகேசரியாருக்கு நண்பனாகவோ இருக்கும் தகுதியை இழந்துவிட்டேன்.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்’

“என்று செந்நாப்போதார்51 உரைத்ததற்கு ஏற்ப இனி நான் உயிருடன் இருக்கவும் அருகதையற்றவன். சக்கரவர்த்திகள் எனக்களித்த இலச்சினைகளைத் தந்துவிட்டு, தில்லை சென்று, வடக்கிருந்து என் உயிரை நீத்து, என் பரம்பரைக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்துக்கொள்கிறேன்!” என்று சோழ இலச்சினைகளைக் களைய ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.

இராஜராஜரின் குரல் அவனைத் தடுத்து நிறுத்துகிறது. “போதும் குந்தவி, உனது குற்றச்சாட்டு! எமது ஓலைநாயகத்தை இப்படிச் சாட உனக்கு யாம் எப்பொழுது அனுமதி அளித்தோம்?” அவரது குரல் மெதுவாக, நிதானமாக இருந்தாலும் அப்படியே குந்தவியை உறைய வைக்கிறது.

“சோழப் பேரரசின் ஓலைநாயகத்தை வேறு யாரேனும் அவமதிப்பாகப் பேசியிருந்தால் அவரது நாவை எமது வாளால் துண்டித்திருப்போம்!” சவுக்கடிபோல விழுகின்றன அவரது சொற்கள்.

அதிர்ந்து போய்விடுகிறாள் குந்தவி. அவர் கண்களில் பறக்கும் தீப்பொறிகளைக் காணும் மனத்திண்மை இல்லாது தலையைக் குனிகிறாள்.

“நங்கையின் விருப்பத்தைச் சோழப் பேரரசின் முதுபெரும் தலைவியரான எமது தமக்கையார், எமது வேண்டுதலின்படி சிவாச்சாரியாரிடம் இயம்பினார். அதற்கு சிவாச்சாரியார் பதிலளிக்கும் முன்னரே அவசரப்பட்டு அவரைச் சொல்லால் சாடுகிறாய். இல்லையில்லை! நீ அவரைச் சாடவில்லை, எமது மதிப்பீட்டைச் சாடியிருக்கிறாய். ஆராய்ந்து அறியாமல் ஒருவரை யாம் இச்சோணாட்டின் ஓலைநாயகமாக நியமித்திருக்கிறோம் என்று எம்மீது குற்றம் சாட்டியிருக்கிறாய்! மேலும் கீழைச்சாளுக்கிய ராணிக்கு சோணாட்டின் ஓலைநாயகத்தைச் சாட யாம் அதிகாரம் கொடுத்ததாக எமக்கு நினைவில்லை!”

இராஜராஜர் சிவாச்சாரி பக்கம் திரும்பி, “உமக்கு யாம் சக்கரவர்த்தியா அல்லது எமது மகளா? யாமா உம்மிடம் இருக்கும் இலச்சினைகளையும், உமது உயிரையும் கேட்டோம்? எமக்குத் திறை செலுத்தும் நாட்டின் ஒரு பெண்ணின் குற்றச்சாட்டுக்கு முன், பெண்பிள்ளையாகக் குரல் தழுதழுப்பது சோணாட்டு ஓலைநாயகத்தின் முறைமையா?” என்று வினவுகிறார்.

குந்தவிக்குக் கண்களில் தாரையாக நீர்ப் பெருக்கெடுக்கிறது.

 “அருள்மொழி! குந்தவி உன் எதிரில் தான் ஒரு நாட்டின் அரசி என்பதை மறந்து எப்பொழுதும் சின்னஞ் சிறுமியாகிவிடுகிறாள் என்று உனக்குத் தெரியாதா? மாறாகப் பேசினால் தந்தையாக அவளைத் திருத்தாமல், சக்கரவர்த்தியாகவா அவளைச் சினந்து கடிவது? மருமகப் பிள்ளையாக வரப்போகிறவர் முன்பு இப்படியா நாம் நடந்துகொள்வது? அவரை நாம் சம்மதிக்கவைப்பதற்குப் பதில் அச்சப்படுத்தி அனுப்பிவிடுவோம் போல இருக்கிறதே! பிறகு நங்கைக்கு நாம் எம்மறுமொழி உரைக்கப்போகிறோம்?” என்று புன்னகையுடன் தன் தம்பியைக் கடிந்துகொண்ட குந்தவைப் பிராட்டியார், தன் மருமகள் பக்கம் திரும்பி, “குந்தவி, நீ ஏனம்மா இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுவிட்டாய்? நீ மிகவும் பொறுமைசாலி ஆயிற்றே! கண்களைத் துடைத்துக்கொள். ஒரு நற்செயல் பற்றிப் பேசத் தொடங்குவதற்கு முன் இப்படிக் கண்ணீர் சிந்தக்கூடாது!” என்று இதமாகச் சொல்கிறாள்.

“சிவாச்சாரியாரே! இப்பொழுது உமக்கு நிலைமை தெரிந்தாகிவிட்டதல்லவா? எமது அருமைப் பேத்தி அருள்மொழிநங்கை உம்மை விரும்புகிறாள். உம்முடைய பதில் எமக்குத் தேவை. நீர் யாருக்கும் அச்சப்படாது உமது பதிலைச் சொல்லும். உம் மீது எங்கள் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. திரிபுவன மகாதேவியின் அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ள மதுராந்தகன் உம் மூலமாகவே அவளுக்குத் திருமுகமும் கொடுத்தனுப்பியிருந்தான். சம்மதம் என்று பதில் ஓலையும் எங்களுக்கு நீங்கள் அனைவரும் இங்கு வருமுன்னரே கிடைத்துவிட்டது. எங்கள் அனைவருக்கும் சம்மதம்தான். உமது விருப்பம்தான் எங்களுக்குத் தெரியவேண்டும்.” என்று கனிந்த குரலில் கேட்கிறாள் குந்தவைப் பிராட்டியார்.

————————————-

[51 திருவள்ளுவரின் அடைமொழிப் பெயர்.]

அவளை நிமிர்ந்து நோக்குகிறான் சிவாச்சாரி. அறுபத்தெட்டு வயதானாலும் நிமிர்ந்த தோற்றம், பனித்த முடியை எடுத்துக் கொண்டையாகக் கட்டிய விதம், நெற்றி நிறையத் திருநீற்றுப் பட்டைகள் மூன்று, துணைவரை இழந்ததால் கட்டிய வெண்ணிற ஆடை, மிகவும் குறைவான பொன்னாபரணங்கள் – காதில் தொங்கும் குழைகள், கருணை நிறைந்த விழிகள் – இவற்றைக் கண்டதும் அமைதிகொள்கிறான்.

இராஜராஜர், குந்தவைப் பிராட்டியார் இவர்களின் பேச்சு அவனுக்கு நிம்மதியையும், இயல்பான மனநிலைமையையும் வரவழைக்கின்றன. மூச்சை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு அனைவரையும் நோக்கிப் பேச ஆரம்பிக்கிறான். “எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அரசிளங்குமரிக்கு இந்த ஏழை அந்தணனை மணமுடிக்க விருப்பம் வரலாமா? தங்கள் தகுதிக்கேற்ற வீரரான ஒரு அரசகுமாரருக்கல்லவா அவரைப் பட்டத்து இளவரசியாக மணவினை செய்ய வேண்டும்? நான் ஊழியனல்லவா?

“தவிரவும், நான் அவரைவிடப் பதிமூன்று வயது மூத்தவன். திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தந்தை ஆகியவன். சோழநாட்டின் அரசிளங்குமரி ஒரு அந்தணனின் இரண்டாம் தாரமாவது முறையா? இது தகுமா? தாங்கள் அவருக்கு அறிவுரை சொல்லி அவரது மனத்தை மாற்றியிருக்க வேண்டாமா? அதை விடுத்து, இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் நிறுத்தி, என் விருப்பத்தைக் கேட்கலாமா? தங்களின் ஆணையை நிறைவேற்றவே பிறந்தவன் நான். தாங்கள் எனது விருப்பத்தைக் கேட்கும் நிலையிலா என்னை இருத்த வேண்டும்? இதற்கு நான் என்ன பதில்சொல்ல இயலும்? புலிகளுடன், பூனை சமமாக அமரலாமா? என் இறைவா! இப்படிப்பட்ட நிலைக்கு என்னை தள்ளுவதும் உமது திருவிளையாட்டா? சக்கரவர்த்தி அவர்களே, கோப்பரகேசரி அவர்களே, பிராட்டியாரே! என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று உருக்கமான குரலில் பதில் சொல்லி முடிக்கிறான் சிவாச்சாரி.

“ஓலைநாயகரே! உமது விருப்பத்தைத் தெளிவாகச் சொல்ல மறுக்கிறீர். எனவே, உமக்கு ஆணையிடுகிறோம். எமது பேத்தியை நீர் வரும் தை மாதம், முதலில் வரும் நல்ல நாளில் மணமுடிப்பீராக!” இராஜராஜர் கனிந்த, ஆனால் கண்டிப்பான குரலில் கூறி, தன் மகள் குந்தவியையும், இராஜேந்திரனையும் பொருட்செறிவுடன் நோக்குகிறார்.

“நண்பரே! சிவாச்சாரியாரே! நீர் எனது மருமகனாக வருவதில் எனக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியே! எமது பட்டத்துராணிக்கும், நங்கையின் தாய் பஞ்சவன்மாதேவிக்கும் இதில் விருப்பமே!” என்று புன்னகைக்கிறான் இராஜேந்திரன்.

“சிவாச்சாரியாரே! எனது அவசரப் புத்தியாலும் உம்மைப் பற்றிச் சரிவர அறியாமலும் அளவுக்கு மீறித் தரக்குறைவாகப் பேசியதற்கு வருந்துகிறேன். இவற்றை நீர் மனதில் கொள்ளாமலிருப்பீராக. எனது மருமகளை நீர் மணமுடிக்க எனக்கும் சம்மதம்தான்” குந்தவியின் குரலில் கொஞ்சம் கரகரப்பு இருந்தாலும், அவள் மனப்பூர்வமாகவே அதைச் சொல்கிறாள் என்று சிவாச்சாரியால் புரிந்துகொள்ள முடிகிறது.

சில கணங்கள் அமைதியாக இருக்கிறான் சிவாச்சாரி. “சக்கரவர்த்தி அவர்களே! தங்கள் ஆணையை மறுக்க இம்மாநிலத்தில் யாருக்கும் துணிவில்லை. தங்கள் சித்தம் எனது பாக்கியம். மணவினை பற்றி எனது சில கருத்துகளைத் தங்கள் பரிசீலனைக்கு வைக்கத் தங்கள் அனுமதியைக் கொருகிறேன்” என்று இராஜராஜரைக் கேட்கிறான்.

“ம்!” என்று தலையாட்டுகிறார் இராஜராஜர்.

“என்னை மணந்த பின்னர் அரசிளங்குமரி இளவரசிக்கான தன்னுடைய உரிமை அனைத்தையும் துறந்துவிட வேண்டும். மேலும் சைவ உணவையே உண்ண வேண்டும். சூரிய வம்சத்தில் வந்த சோழர்களுக்கு இந்த அந்தணனின் வழித்தோன்றல்கள் என்றும் ஊழியர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசோச்சும் உரிமை ஒருபோதும் நல்கப்படக் கூடாது.  இதுதான் இந்த ஊழியனின் விருப்பம்.”

சிவாச்சாரியனின் இந்தச் சொல்லைக் கேட்டதும் அனைவரும் சிலையாகி விடுகின்றனர். தன்னை மணப்பதென்றால் அருள்மொழிநங்கை சாதாரணக் குடிமகள் ஆகவேண்டும் என்ற நிபந்தனையை எவ்வளவு துணிச்சலாக சக்கரவர்த்தியின் முன்வைக்கிறான்?!

“ஓலைநாயகரே! உமது விருப்பத்திற்கான காரணத்தை யாம் அறிய விரும்புகிறோம். தெளிவாகப் பதிலிருப்பீராக!” இராஜராஜரிடமிருந்து ஆணை பிறக்கிறது.

“சக்கரவர்த்தி அவர்களே! அரச பரம்பரையில் வந்தவரே அரசராகத் தகுந்தவர் என்பது, எனக்கு என் குருதேவர் கருவூரார் போதித்த பாடமாகும். அந்தணர்களுக்கு அரசாளும் மனவலிமை கிடையாது என்பதும், அரசகுலத்தோருக்கு நிகராகத் தன்னையும், தனக்கு உரிமையான அனைத்தையும் நாட்டிற்காகத் துறக்கும் தியாக மனப்பாங்கும் குறைவு என்பதே அவர் அறிவித்த நல்மொழியாகும். இதை நிரூபிக்க பலப்பல எடுத்துக்காட்டுகளையும் அவர் எனக்குச் சொல்லிவைத்திருக்கிறார். அரசரின் நம்பிக்கைக்கு எவ்வளவுதான் பாத்திரமானாலும் – ஒரு குறுநில மன்னனாகும் ஆசையைக்கூட மனதில் தோன்றவிடக்கூடாது என்று என் நெஞ்சில் தனது சொற்களைப் பசுமரத்து ஆணியாக அறைந்துதான் முதன்முதலில் தங்களிடம் அழைத்து வந்தார். அதை நான் நிறைவேற்ற வேண்டும் என்றால், சோழப்பேரரசின் ஊழியனான எனது மனைவி எப்படி இளவரசிக்கான உரிமையைக் கோரலாம்? எங்கள் வழித்தோன்றல்கள் எப்படி அரசுரிமைக்குப் பாத்திரமாகலாம்?

“நான் சிவாச்சாரி, சைவ உணவு தவிர எதையும் உண்ணாதவன், மது அருந்தாதவன். எனவே, அரசிளங்குமரி முன்பு எப்படி இருந்தாலும், எனது மனையாட்டியான பின்பு, அதற்கேற்ப ஒழுக வேண்டும்!” தெளிவாகப் பணிவுடன் பதில் வருகிறது.

“உமது அரசப் பற்றை மெச்சினோம்! நங்கை! இங்கே வா!” என்று உரத்த குரலில் அழைக்கிறார் இராஜராஜர். திரைச்சீலையை விலக்கிக்கொண்டு இராஜராஜர் அருகில் வந்து நிற்கிறாள் அருள்மொழிநங்கை. அவளை அன்புடன் தன் அருகில் இருத்தி வைத்துக்கொள்கிறார் இராஜராஜர். அவள் இத்தனையையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாளா என்று திகைக்கிறான் சிவாச்சாரி.

“நங்கை! நீ எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதானே இருந்தாய்! உன் முடிவு என்ன? இளவரசியான நீ உனது அரசுரிமையை இவருக்காக விட்டுக்கொடுக்க ஒப்புதல் அளிக்கிறாயா? உனது மக்கள் அரச உரிமையை இழக்கவும் உனக்குச் சம்மதமா? யோசித்து மறுமொழியைக் கூறு குழந்தாய்!” என்று மிகவும் கனிந்த குரலில் கேட்கிறார் இராஜராஜர்.

“பாட்டனாரே, எனக்கு என்றுதான் அரசாங்கத்தில் விருப்பம் இருந்தது?

“உன் அடியார் தாள் பணிவோம்

ஆங்க வர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம்’

என்றுதானே தினமும் நான் பெருவுடையாரைப் பூசித்து வந்திருக்கிறேன். நான் சிவபிரான் மீது பற்று வைத்ததிலிருந்து அசைவ உணவையும், மதுவையும் தொட்டதில்லையே? அப்படியிருக்க, இனிமேலா அவற்றில் நாட்டம் செலுத்தப்போகிறேன்? மற்ற விஷயங்களில் அவர் விருப்பம்தான் என் விருப்பம். சிவத்தொண்டரான அவர் சொற்படி நடப்பதே சிறந்த சிவபூசையாகும்!” என்று அருள்மொழிநங்கையிடமிருந்து அடக்கமாகப் பதில் வருகிறது.52

—————————————————————

[52 அருள்மொழிநங்கை யாரைத் திருமணம் செய்துகொண்டாள் என்பது சரியாகத் தெரியவில்லை. அவளது வழித்தோன்றல்களும் அரசுரிமை கோரியதாகத் தெரியவில்லை. இவை பற்றி ஆவணங்களும் கிடைக்கவில்லை.  கதாசிரியர்கள் தங்கள் கற்பனைக்குத் தகுந்தவாறு அவள் திருமணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இராஜராஜரின் திருமந்திர ஓலைநாயகமும் (இப்புதினத்தின் சிவாச்சாரி) இராஜேந்திரனின் படைத்தலைவரும் ஆகிய இராஜேந்திர சோழப் பிரம்மராயரின் மகனின் பெயர் மறையன் அருள்மொழி (மறையன் என்று அந்தணப் பெயரும், அருள்மொழி என்ற இராஜராஜரின் இயற்பெயரும்) என்று வரலாறு கூறுவதால், சிவாச்சாரியை அருள்மொழிநங்கை மணப்பதாகக் புனையப்படுகிறது.]

கருவூரார் குடில் – பெருவுடையார் கோவில் நந்தவனம்

பரிதாபி, ஐப்பசி 18 – நவம்பர் 3, 1012

“சக்ரவர்த்தி அவர்களே! நான் நெடுங்காலம் தமிழ்த் திருப்பணியில் கவனம் செலுத்தாமல் அரசு அலுவல்களிலும், போர் உரையாடல்கள், ஆலோசனைகள் இவற்றில் கழிக்க நேர்ந்துவிட்டது. இதுவரை நமது திருப்பணி முயற்சியில் ஏற்பட்ட வெற்றி, பாண்டிநாட்டில் வட்டெழுத்துக்குப் பதில் நமது கிரந்த எழுத்துகளைப் பரப்பியது மட்டுமே! வடவேங்கடத்திற்கும் வடக்கே வடபெண்ணையின் தென்கரைவரை தமிழைப் பரப்பியிருக்கிறோம். கருநாட்டுப் பக்கம் எதுவுமே செய்யவில்லை.

“இது இப்படியிருக்க, சேரர்கள் நம்பூதிரி அந்தணர்களின் சொற்களுக்கு மதிப்புக் கொடுத்து ‘மணிப்பிரவாள’ நடையில் வடமொழியைக் கலந்து தமிழைப் பேசி வருகிறார்கள். அங்கு நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி வைக்க வேண்டும்.  நம்பூதிரி அந்தணத் தலைவர்களுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழில் அவர்களின் அளவிலா வடமொழிக் கலப்பைக் குறைக்குமாறு ஆணையிட வேண்டும். தமிழ்க்கலைகளை வளர்க்க நாம் ஆவன செய்யவேண்டும்” என்று பேசிக்கொண்டே செல்கிறான் சிவாச்சாரி.

அவன் கூறியதைக் கண்களை மூடிக்கொண்டு செவிமடுக்கிறார் இராஜராஜர். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது கண்களை மூடிக்கொள்வது அவரது வழக்கம் என்பதைச் சிவாச்சாரி தெரிந்து கொண்டிருந்ததால் தான் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவரது கவனத்திலிருந்து மீளவில்லை என்பதில் ஐயமே அடையவில்லை.

“சக்கரவர்த்தி அவர்களே! மேலும், நமது கோவில்களைத் தமிழ்க் கலைகளை வளர்க்கும் கூடமாக ஆக்கவேண்டும். இப்பொழுது ஆடல்கள், பாடல்கள் இவற்றைச் செய்து வருபவர்களைக் காட்சிப்பொருள்களாக, தங்கள் கீழ்மட்ட உணர்வுகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும் கருவிகளாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தாங்கள் அறியாத ஒன்றல்ல. அந்த உணர்வை அறவே நீக்கி, அக்கலைகளை உயர்வாகப் போற்றி ஏத்துவதற்கான வழியைத் தாங்கள் காட்டவேண்டுகிறேன்” இராஜராஜரின் மறுமொழியை எதிர்நோக்கித் தன் பேச்சை நிறுத்திக்கொள்கிறான் சிவாச்சாரி.

இராஜராஜரின் விரல்கள் மெல்ல மடங்கி மடங்கி விரிகின்றன. அதைக் கவனித்த சிவாச்சாரி, அவர் தான் சொன்ன விஷயங்களைப் பற்றித் தன் மனதில் ஆராய்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறான். அவரின் சிந்தனைத் தொடரைத் தடம்புரளச் செய்யாது அவராகப் பதில் சொல்லும் வரை தான் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று அவரை உற்றுநோக்குகிறான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறக்கிறார் இராஜராஜர்.

“இறைவனடிமை!” அவர் உதடுகள் பிரிந்து வார்த்தை வெளிவருகிறது.

“ஆம்! தமிழ்க் கலையை இறையனார் கோவிலில் வளர்க்கும் பாவைகளை இறைவனடிமை53 என்று அமைப்பதே சாலச் சிறந்ததாகும்” என்று விளக்கம் கொடுக்கிறார் இராஜராஜர்.

“குடும்பப் பெண்கள் யாரும் மற்றவர் முன்பு ஆடவோ, பாடவோ மாட்டார்கள். தங்களது உடல் மீது மற்ற ஆடவர்களின் பார்வை படுவதையும் விரும்பமாட்டார்கள். ஆகவே, முத்தமிழ்க் கலைகளையும் முறைமையாகக் கற்று, அக்கலைகளைப் போற்றி வளர்க்கப் பெண்கள் தானாக முன்வர வேண்டும். அதை மக்கள் யாவரும் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். அக்கலையை இறையனார் முன்பு போற்றி வளர்க்கும் அப்பெண்கள் காலம் முழுதும் கன்னியராக இருந்து வருதல் வேண்டும்.

———————————————

[53 கோவில்களில் ஆடல் பாடல் கலைகளை வளர்த்தவர்கள் தங்களை இறைவனுக்கு அடிமையாக அர்ப்பணித்துக் கொண்டதால் அவர்களுக்கு இறைவனடிமை என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் அது தேவதாசி என்று வடமொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் கன்னியராகவே காலம் கழித்தார்கள். காலம் செல்லச் செல்ல, அந்த உன்னதமான நிலையிலிருந்து அவர்கள் வீழ்ந்து, இறைவனடிமையிலிருந்து, தேவதாசிகளாக மாற்றி அழைக்கப்பட்டு, பின்னர் தாசிகளாக, ஏன் வேசிகளாகும் நிலைமைக்கும் தள்ளப்பட்டனர். இந்திய விடுதலைக்குப் பின்னர் தேவதாசிகள் முறை தடைசெய்யப்பட்டது.]

“எனவே, கலைகளை அனைவரும் கண்டு களிக்கும் அளவுக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் அந்தப் பெண் தெய்வங்கள் தாயாக வணங்கப்படுதல் வேண்டும். அப்படி அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் ஆக வேண்டும் என்றால், அவர்களின் நிலை உயர்த்தப்படுதல் அவசியம். அதற்காக கலைகளைக் கற்றுணர்ந்த அவர்கள் ஒரு சிறப்பான சடங்கின் வாயிலாக இறைவனாருக்கு மனைவியராக, அடியார்களாக, ஊர்முன்
அறிவிக்கப்படுவார்கள். 

“இறைவனாருக்கு மனைவியர், மக்கள் அனைவருக்கும் தாய்மார்கள் ஆவார்கள் அல்லவா? அப்பொழுது அவர்களின் மீது படும் அனைவரின் பார்வையும் குழந்தைகளை மகிழ்விக்கப் பாடும், ஆடும் தாயைக் காண்பதுபோல ஆகிவிடும். அதில் விகல்பம் இருக்காது, வணக்கம் இருக்கும். மதிப்பு இருக்கும், மயக்கம் இருக்காது.

“அவர்களுக்கு அரசில் இருந்து மானியம் வழங்குவோம். அவர்கள் அனைவரையும் உயர்குடிப் பெண்களுக்கு இணையாக மதிக்க வேண்டும் என்று அறிவிப்போம். அவர்களுக்கு கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கோவில் சொத்து மூலம் வருமானம் கிடைத்துவரச் செய்வோம். இந்த எண்ணத்தைச் செயல்படுத்தி மெருகூட்ட இன்னும் என்ன செய்யலாம் என்று சொல்லும்” என்று தன் எண்ணத்தை வெளியிடுகிறார் இராஜராஜர்.

அவரது உன்னதமான தொலைப்பார்வையை எண்ணி வியக்கிறான் சிவாச்சாரி.

“ஆணையிடுங்கள், சக்கரவர்த்தி அவர்களே! தமிழ்நாட்டுக் கோவில்கள் அனைத்திலும் இறைவனடிமைகள் தமிழ் கலைகளை வளர்க்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றுகிறேன்!” என்று ஆர்வத்துடன் பதிலளிக்கிறான்.

“சேர நாட்டைப் பற்றி யோசிப்போம். எனக்கு நம்பூதிரி அந்தணர்களைப் பற்றிச் சிறிது விளக்கிச் சொல்வீராக!” என்று கேட்கிறார் இராஜராஜர்.

“அவர்களைப் பற்றி வழங்கும் கூற்று ஒன்று இருக்கிறது. பரசுராம முனிவர் சேர நாட்டைக் கடலிலிருந்து தனது கோடாரியால் தொண்டி எடுத்ததாகவும், அந்நாட்டை நம்பூதிரி அந்தணர்களுக்கு அவர் வழங்கியதாகவும் அக்கூற்று சொல்கிறது. நாடாள்வதில் விருப்பமில்லாததால், நம்பூதிரிகள் ஆளும் பொறுப்பைச் சேரமான்களுக்கு வழங்கிவிட்டு, இறைவழிபாட்டில் காலத்தைக் கழித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது” விளக்கம் கூற முற்படுகிறான் சிவாச்சாரி.

“சோழ-பாண்டிநாட்டு வேதியர்களுக்கும், அவர்களுக்கும் இந்தக் கூற்றைத் தவிர என்ன மாறுபாடு?” 

“தமிழ்ப்பற்று மிகுந்த சோழ-பாண்டிநாட்டு வேதியர் மந்திரம், ஆகமம் மூலம் இறை வழிபாடுகளை நடத்துகிறார்கள். நம்பூதிரிகள் தாந்திரீக முறைப்படி வழிபாடு நடத்துகிறார்கள். ஆயினும் அவர்களது தாந்திரீக முறைபாடுகளுக்குச் சேரநாட்டார் ஒருவித பயங்கலந்த மதிப்புக்கொடுக்கிறார்கள். அதனால் நம்பூதிரி அந்தணர்கள் தங்களை மிகவும் உயர்வாக எண்ணுகிறார்கள்.

“அவர்களுக்குள் கட்டுப்பாடு மிகவும் அதிகம். வடமொழியில் மிகுந்த பற்று உள்ளவர்கள். அதனால், மலைநாட்டுத் தமிழையே வடமொழியாக்கி வருகிறார்கள்” நிறுத்துகிறான் சிவாச்சாரி.

“விளக்கிச் சொல்லும்!” என்று கேட்கிறார் இராஜராஜர்.

“இங்கு வடமொழிப் பெயர்ச் சொற்களை நாம் தமிழில் கலந்து பேசுகிறோம். உதாரணமாக, தண்ணீர் ‘சலம்’ என்றும், ஒளி ‘சோதி’ என்றும், ஒலி ‘சத்தம்’ என்றும் புனித வாவிகள் ‘தீர்த்தம்’ என்றும் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியரும் தமது இலக்கண நூலில் வடமொழிச் சொற்களை எப்படி ஒலிக்க வேண்டும் என்றும் விதித்திருக்கிறார். நாம் வடமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்கிறோமே தவிர, தமிழைப் பேசும் விதத்தில் மாற்றம் செய்வதில்லை. ஆனால் நம்பூதிரி அந்தணர்கள் வடமொழிச் சொற்களையே வினைச்சொற்களாகப் பயன்படுத்துகிறார்கள். தேடுவது என்பதை ‘அன்வேஷிப்பது’ என்றும், பிறப்பதை ‘ஜனிப்பது’ என்றும் சொல்கிறார்கள்.”

“அதற்கும் இங்கு நாம் செய்வதற்கும் என்ன மாறுபாடு?” இராஜராஜரிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

“சக்கரவர்த்தி அவர்களே! பெயர்ச்சொற்கள் உடை என்றால் வினைச் சொற்கள் உடலும், உயிரும் எனலாம். என்னதான் பெயர்ச்சொற்களாக வேற்று மொழிச் சொல்கள் கையாளப்பட்டாலும் மொழி அழியாது. தமிழ்ச் சொல்லான ‘மீன்’ வடமொழியில் கையாளப்படுகிறது. ஆனால் வினைச்சொற்கள் மாற்றப்பட்டால் ஒரு மொழி தனது உருவத்தை இழந்துவிடுகிறது. மொழி வேறாக மாறிவிடுகிறது. அதனால்தான் நமது குருதேவர்கூட இதைப் பற்றித் தங்களிடம் திருப்பணித் துவக்கத்தின்போது தெரிவித்தார். அதனால் நாம் சேரநாட்டின் மீது உரிய கவனம் செலுத்தாவிட்டால், அங்கு பேசும் மலைத்தமிழ் வேறு ஒரு மொழியாக ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.” 54

சிவாச்சாரியனின் இந்த ஆராய்வு ஒரு கணம் இராஜராஜரை செயலிழக்கச் செய்துவிடுகிறது. சேர நாட்டுத் தமிழ் வேறுமொழியாக ஆகிவிடுமா? தமிழை பாரதம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று தான் நினைப்பது எங்கே? தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலேயே தமிழ் வேறு மொழியாகப் பரிணமிக்க உள்ளது என்று சிவாச்சாரி சொல்லுவது எங்கே?

“திருப்பணிக் குழலை அளவொண்ணா மகிழ்ச்சியுடன் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே தமிழைப் பரப்புவதை விடுத்து, தமிழைக் காப்பாற்றும் திட்டத்தில் இறங்கும் சூழ்நிலை வந்ததென்ன? இறைவா!” என்று திகைக்கிறார் இராஜராஜர்.

“சிவாச்சாரியாரே! இதென்ன திடுமென்று இப்படி ஒரு இடியை என் தலையில் இறக்குகிறீர்? என்னால் நம்பவே இயலவில்லையே!”

எதற்கும் தடுமாறாத அவரது குரலில் இலேசான தடுமாற்றம் தென்படுவதைக் காண்கிறான் சிவாச்சாரி.

“என்னை மன்னிக்க வேண்டும் சக்கரவர்த்தி அவர்களே! அதனால்தான் போர்ப்பணியிலிருந்து விடுவித்து, தமிழ்த்திருப்பணியில் என்னை ஈடுபடுத்துமாறு முதலிலேயே கேட்டுக்கொண்டேன். நமது கவனத்தை பாண்டிநாடு அதிகமாக ஈர்த்துவிட்டது. அதனால் நமது திட்டங்கள் தாமதப்படுத்தப் பட்டுவிட்டன” என்று சிவாச்சாரி காரணத்தை விளக்குகிறான்.

 “இறந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டுமே தவிர, அதிலேயே புதைந்து போய்விடக் கூடாது. நமது கவனத்தைச் சேரநாட்டுப் பக்கம் உடனே திருப்புவீராக. அங்கு தமிழை மீட்கும் பணியில் உடனே ஈடுபடுவீராக. இனி நாட்டு நிர்வாகத்தில் நான் தலையிடப் போவதில்லை. அதை இராஜேந்திரனே பார்த்துக்கொள்வான். இனி என் இறுதிமூச்சு வரை தமிழ்த் திருப்பணிக்காகவே நான் செயல்படப்போகிறேன். எனக்குப் பிறகும் நீர் இராஜேந்திரனுக்கு தமிழ்ப்பணி ஆர்வத்தை வளர்த்து ஆலோசகராக இருந்துவருவீராக. திருப்பணி நன்கு நடக்க என்னென்ன மானியங்கள் வேண்டுமோ, அதையெல்லாம் நீர் என்னிடம் கேட்டுப்பெறத் தயக்கம் காட்டாதீர்” அவர் குரலில் இருக்கும் ஆதங்கம் சிவாச்சாரியனுக்கு நன்றாகப் புரிகிறது.

இராஜராஜருக்கு களைப்பு மிகுதியாவதை அவன் கண்கள் காண்கின்றன. பாண்டியனுடன் செய்த வாட்போர் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்திருப்பது கண்கூடாகவே தெரிகிறது. ஒரே வாரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து இராஜேந்திரனின் முடிசூட்டு விழாவை முன்னிருந்து நடத்தினார்.

——————————————————-

[54 கேரளத்துத் தமிழ், மலையாளமாக மருவிற்று என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.  சான்றாக, எண்ணுவது தமிழிலும், மலையாளத்திலும் ஒன்றே (உ-ம்: ஒன்று, இரண்டு, மூன்று…).  மேலும், கூர்ந்து கவனித்தால், மலையாளமும், தமிழும் எவ்வளவு நெருங்கியவை என்றும் புரியும்.  பத்தாம் நூற்றாண்டில் வடமொழி கலந்த மணிப்பிரவாளத்தைப் பேசுவது துவங்கியது.  மலையாளத்தில் இலக்கியங்கள், குறிப்பாக இராமானுஜ எழுத்தச்சர் எழுதிய ஆத்யதம இராமாயணம், பதினாறாம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டது.  <https://imp.center/i/brief-history-malayalam-language-literature-1074/>]

தனது காயங்கள் மக்கள் கண்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக உடல் முழுவதையும் உத்தரீயங்களால் மறைத்துக் கொண்டதும், அரியணை மண்டபத்தில் தனது தள்ளாடல் தெரியாமலிருக்கத் தன் தோளில் கையூன்றி மெதுவாக நடந்து வந்ததும் அவன் முன் நிழலாடுகிறது.

புலியாகக் கம்பீர நடைபோடும் அவர் மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடந்ததும், காயங்களின் வலியை வெளிக்காட்டாமல் இருக்க உதடுகளைக் கடித்துக் கொண்டதும், அதனால் கசிந்த இரத்தத்தை முகத்தைத் துடைப்பது மாதிரி துடைத்துக் கொண்டதும் அவன் கண்முன் வந்து அவனை வாட்டுகின்றன.

இனி, இராஜராஜர் உடல்நிலை முழுவதும் தேறுமா என்று அவனுக்கு அவ்வப்போது ஐயப்பாடு தோன்றி வருகிறது.

“கூத்தபிரானே!  சக்கரவர்த்தி அவர்கள் பல்லாண்டு நோயற்ற வாழ்வுடன் சிறந்து தமிழ்த்திருப்பணி செய்யவேண்டும் ஐயனே!” என்று மனதிற்குள் வேண்டிக்கொள்கிறான்.

“சிவாச்சாரியாரே! எனக்குக் கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. பெருவுடையாரைத் தரிசனம் செய்துவிட்டு அரண்மனைக்குத் திரும்புவோம்” என்கிறார் இராஜராஜர். 

அவர் என்ன விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர் வந்த சிவிகையை அழைக்கிறான் சிவாச்சாரி.

இப்பொழுது அவரால் அதிகமாக நடக்க முடிவதில்லை. ‘அவர் காலில் பட்ட காயம் ஆறி முழுவதும் குணமாகும் வரை அதிகம் நடக்க இயலாது; வடுப்பட்ட இடங்களில் அஞ்சனம் தடவி, உருவி விட வேண்டும்; சிறிது சிறிதாகத்தான் அவர் தனது பழைய நிலையைத் திரும்பப் பெறுவார்’ என்று அரச மருத்துவர் சொல்லியிருக்கிறார். எனவேதான், அவர் எங்கு சென்றாலும் சிவிகையில் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறாள் குந்தவைப் பிராட்டியார். அது இராஜராஜருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. இருப்பினும் தனது தமக்கையாரின் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்.

இராஜேந்திரனே அரசு அலுவல்களை கவனிக்க வேண்டும், தான் அதில் குறுக்கிடக்கூடாது என்று ஒதுங்கியே இருக்க முடிவுசெய்திருப்பதால் கருவூராரின் குடில் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது.

திருக்கயிலைக்குச் செல்ல வேண்டும் என்று கிளம்பிச்சென்ற பிறகு கருவூராரிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. எட்டு திங்களுக்கு முன் கருவூரார் கிருஷ்ணா நதியைப் பரிசலில் கடந்து சென்றதைப் பார்த்த ஒருவர் மூலம் சோழப்பேரரசைத் தாண்டிச் சென்றுவிட்டார் என்று மட்டும் கடைசியாகத் தகவல் வந்தது.

“தேவரே! ஏன் திடுமென்று சென்று விட்டீர்கள்? தாயைப் பிரிந்த கன்றின் நிலையில்தானே நான் இருக்கிறேன்!  தங்களின் அருள்வாக்கைக் கேட்கவேண்டும் போல இருக்கின்றதே! அது நிறைவேறுமா? கயிலைக்குச் சென்றவர் திரும்பி வருவீர்களா? எனக்கும் திருக்கயிலைத் தரிசிக்க ஆவலாக உள்ளது. ஆயினும், நான் சோழப் பேரரசின் எல்லைக்குள் கட்டிப் போடப்பட்டிருக்கிறேனே!” என்று தனக்குள்ளேயே கருவூராரை நினைத்து வருந்துகிறார் இராஜராஜர்.

“சக்கரவர்த்தி அவர்களே!  சிவிகை வந்துவிட்டது!” என்று அவரது சிந்தனையைக் கலைக்கிறான் சிவாச்சாரி.  அவனது தோளைப் பிடித்தவாறு நடக்கிறார் இராஜராஜர்.

அவரைப் பெருவுடையார் கோவிலில் சந்திக்கிறாள் குந்தவைப் பிராட்டியார்.  தமக்கையாரைக் கண்டதும் அவர் முகம் மலர்கிறது. பிராட்டியாரைத் தனது தாயாகவே கருதி வருகிறார். பிராட்டியாருடன் அருள்மொழிநங்கையும் வந்திருப்பது அவருக்கு மிகவும் மகிழ்வை அளிக்கிறது. அவள் தேவாரம் பாடுவது அவருக்கு மிகவும் மன நிம்மதியை அளிக்கும். எனவே, அவளைத் தேவாரம் ஓதுமாறு பணிக்கிறார்.

“வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓவாத சத்தத் தொலியே போற்றி

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி

காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி!”

என்று திருநாவுக்கரசர் பாடி அருளிய திருத்தாண்டவப் பதிகத்தில் ஒன்றை உள்ளம் உருகப் பாடுகிறாள் அருள்மொழிநங்கை. பாடி முடித்ததும் தலைநிமிர்ந்தவள் பின்னால் நிற்கும் சிவாச்சாரியைக் கண்டதும் நாணமுறுகிறாள். அவளது நாணத்தைக் கண்டு மெல்ல நகைத்துக்கொள்கின்றனர் குந்தவைப் பிராட்டியாரும் இராஜராஜரும்.

இராஜராஜர் சிவாச்சாரி பக்கம் திரும்பி, “சிவாச்சாரியாரே, நங்கை பாடிய தேவாரத்தின் பொருளை எங்களுக்கு விளக்கிச் சொல்வீராக!” என்று கேட்டதும் அதை அவர்கள் அனைவருக்கும் நன்றாகப் பொருள் விளக்கம் செய்கிறான் சிவாச்சாரி.

அதை மழைத்துளியை விழுங்கும் சகோரப் பட்சியாக உள்வாங்குகிறாள் அருள்மொழிநங்கை.  சிவாச்சாரியனின் தேவார அறிவு அவளை ஆட்கொள்கிறது. தான் தேர்ந்தெடுத்த மணாளர் வெறும் சிவனடியார் மட்டுமல்ல, தேவாரத்தின் பொருளும் தெரிந்த சிவனடியார் என்று மகிழ்வுறுகிறாள்.

“அருள்மொழி, நான் பழையாறைக்குச் சென்றுவிடலாம் என்று இருக்கிறேன்” என்று இராஜராஜருக்குத் தெரிவிக்கிறாள் குந்தவைப் பிராட்டியார்.

“அக்கையாரே! நீங்கள் என்னைத் தனியாக விட்டுச் செல்லப்போகிறீர்களா?” என்று குழந்தையைப்போல வினவுகிறார் இராஜராஜர்.

“அருள்மொழி, நீயும் என்னுடன் பழையாறைக்கே வந்துவிடேன்!  அரசப் பளுவைத்தான் இராஜேந்திரனிடம் ஒப்படைத்துவிட்டாய்.  நீயும் அங்கு இருந்தால் எனக்கும் துணையாக இருக்கும்” என்று அவரையும் அழைக்கிறாள் பிராட்டியார்.

“அதுவும் நல்லதாகத்தான் படுகிறது, அக்கையாரே!  நானும் உங்களுடன் பழையாறைக்குக் கிளம்புகிறேன். இராஜேந்திரன் தஞ்சையில் இருந்து அரசு விவகாரத்தைக் கவனித்துக்கொள்வான்” என்று இராஜராஜர் சொன்னதும், அவரை வியப்புடன் நோக்குகிறாள் பிராட்டியார்.

“உண்மையாகவா அருள்மொழி?” 

“ஆமாம் அக்கையாரே! எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. நங்கை, நீயும் சிறிது காலம் உன் பாட்டனுடன் பழையாறைக்கு வருகிறாயா? எனது திருமந்திர ஓலைநாயகமான சிவாச்சாரியாரையும் சேர்த்துத்தான் அழைக்கிறேன்” என்று குறும்பாகக் கேட்கிறார் இராஜராஜர்.

(தொடரும்)

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 8

ஒரு அரிசோனன் சோழர் அரண்மனை, ஜயங்கொண்ட சோழபுரம்  காளயுக்தி, கார்த்திகை 16 - டிசம்பர் 2, 1018  சற்று நேரம் வாளாவிருந்த சிவாச்சாரி, தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்லிய குரலில் விளக்கம் தரத் தொடங்குகிறான்: “ராஜா, போரில்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 7

ஒரு அரிசோனன் தென்பாண்டி நாடு  காளயுக்தி, வைகாசி 16 - ஜூன் 2, 1018  கொற்கையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் வழியில் அக்குதிரைகள் விரைந்து கொண்டிருக்கின்றன. ஒரு வணிகனைப் போல உடையணிந்திருக்கிறான், மாறுவேடத்தில் இருக்கும் விக்கிரமபாண்டியன். வேலையாள் போல...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 6

ஒரு அரிசோனன் ஜயங்கொண்ட சோழபுரம்  காளயுக்தி, சித்திரை 8 - ஏப்ரல் 21, 1018  கேட்பதற்கு இனிமையாக மங்கள இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது மற்றவர்கள் பேசும் தேவையற்ற சொற்களை முழுகடிக்கிறது. வேதங்கள் ஓதப்படுகின்றன. தேவார, திருவாசகப்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 5

ஒரு அரிசோனன் ஜயங்கொண்ட சோழபுரம்  பிங்கள, வைகாசி 24 - ஜூன் 9, 1017  கூரைக்கு மேலே வண்டுகள் ரீங்காரமிட்ட வண்ணம் இருக்கின்றன. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிவாச்சாரி சொல்வதை காதுறுகிறான், இராஜேந்திரன்.  அவனது மனம்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 4

ஒரு அரிசோனன் சுந்தர சோழரின் பொன் மாளிகை நள, சித்திரை 15 - ஏப்ரல் 30, 1016 சிவிகை கீழ ரத வீதியைக் கடந்து பராந்தக சோழரின் பொன் மாளிகையை அடைகிறது. நிலவுமொழிக்கு இன்னும் தான் அருள்மொழிநங்கையுடன்தான்...