பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 4

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 4

ஒரு அரிசோனன்

சுந்தர சோழரின் பொன் மாளிகை

நள, சித்திரை 15 – ஏப்ரல் 30, 1016

சிவிகை கீழ ரத வீதியைக் கடந்து பராந்தக சோழரின் பொன் மாளிகையை அடைகிறது. நிலவுமொழிக்கு இன்னும் தான் அருள்மொழிநங்கையுடன்தான் சிவிகையினுள் அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம்ப இயலவில்லை.

சிவிகைக்குள் அவளைக் கண்டவுடன் அப்படியே சிலையாய் நின்றுவிட்டதும், தன் கையைப் பிடித்து இழுத்து அருள்மொழிநங்கை இருத்திக்கொண்டதும் கனவுபோல அவள் மனக்கண் முன் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. எத்தனை முறை துருவித் துருவித் தன்னை அலங்கரித்துக் கூட்டிச் செல்லும் காரணத்தைக் கேட்டாலும் அருள்மொழிநங்கை பதிலே சொல்லவில்லை.

எனவே, அருள்மொழிநங்கை மற்ற விவரங்களைப் பேசிவந்தும் மனம் பேச்சில் ஈடுபடாமல் நிலவுமொழி அமைதியாகி விட்டாள். இதைக்கண்ட அருள்மொழிநங்கையும் அவளைக் கனவுலகில் அலைந்து திரிய விட்டுவிட்டிருக்கிறாள்.

ஒரு குலுக்கலுடன் சிவிகை கீழே இறக்கப்படுகிறது. திரையை விலக்கிக்கொண்டு இறங்கிய அருள்மொழிநங்கை நிலவுமொழியையும் தன்னுடன் இறங்கிவருமாறு கண்காட்டுகிறாள். அவளைத் தொடர்ந்து இறங்கியவள், ஒரு அழகிய மாட்டு வண்டியிலிருந்து தன் தந்தையை விடுதிக் காவலன் கைவாகு கொடுத்து இறக்கிவிடுவதைக் கவனிக்கும்பொழுது நெஞ்சு பெருமையால் விம்முகிறது.

எப்பொழுதுமே மேலாடை இல்லாமலும், சாதாரண உடையுடனும் அவரைப் பார்த்து வந்த அவளுக்கு பளபளக்கும் மேலாடை கீழாடைகளுடனும், வேலைப்பாடு மிக்க தலைப்பாகையுடனும் பார்க்கும்பொழுது சிரிப்பு வந்தாலும், அவர் தற்பொழுது ஒரு அரசு அலுவலரைப் போலக் காணப்படுவது பெருமையாகத்தான் இருக்கிறது. தானாவது அரச குடும்பத்தினருடன் நன்கு பழகிவந்திருக்கிறோம், இப்படிப்பட்ட அனுபவத்தை அவர் இதுகாறும் பெற்றதுகூட இல்லை என்பதையும் எண்ணிப்பார்க்கிறாள்.

கோவில் விடுதிக்காவலன் அவர்களை வணங்கிவிட்டு பொன்மாளிகை வாயிலிலேயே நின்றுகொண்டு விடுகிறான். வாயிலில் காத்திருக்கும் தாதியர்களும், காவலர்களும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச்செல்கிறார்கள். முதல் வளாகத்தைத் தாண்டியதும் சிவாச்சாரியும், அருள்மொழிநங்கையின் தாய் பஞ்சவன்மாதேவியும் அவர்களை எதிர்கொள்கிறார்கள்.

இருவரையும் தரையில் விழுந்து வணங்க முற்பட்ட நிலவுமொழியைக் கைகளில் தாங்கி நிறுத்துகிறாள் பஞ்சவன்மாதேவி.

சிவாச்சாரி திருமந்திர ஓலைநாயகத்தின் உடைகளை அணிந்திருக்கிறான். அவனைக் கண்டதும் கயல்விழிகள் விரிய, கருவண்டுகள் போன்ற கண்மணிகள் பளபளக்க, பூவிதழ் பிளந்து முத்துப் பற்கள் பளிச்சிட, பெரிய புன்னகை நிலவுமொழியின் முகத்தில் மலர்கிறது.

ஓடிச் சென்று, "ஐயா, தங்களைச் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும், என் தந்தைக்கும் இந்த வேஷம் எதற்காக?" என்று கேட்கிறாள்.

ஒரு புன்னகையையே விடையாகத் தருகிறான் சிவாச்சாரி.

பஞ்சவன்மாதேவி அவளது நெற்றிச் சுட்டியைச் சரிப்படுத்தி விடுகிறாள். மேலும் அவளது ஆடைகளையும் சிறிது சரிசெய்து விடுகிறாள். அவளது தோள்களைப் பற்றி அழைத்துச் செல்கிறாள் அருள்மொழிநங்கை.

அவளுடன் அரச மண்டபத்திற்குள் நுழைந்த நிலவுமொழி மகிழ்ச்சியான அதிர்ச்சிக்கு ஆளாகிறாள். மகுடமணிந்த இராஜேந்திரன் நடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு இருபுறமும் அவனது மைந்தர்கள் இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும், வீரனும், ஆளவந்தானும் அமர்ந்திருக்கிறார்கள்.

இராஜேந்திரனின் சாயலுடன் இருந்த ஆளவந்தானைப் பார்த்து நிலவுமொழி மலைக்கிறாள். அவனுக்கு அருகில் குறுநில இளவரசனைப் போன்ற ஒருவன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அருகில் எழுபதிலிருந்து எழுபத்தைந்து வயது மதிக்கக் கூடிய முதியவர் அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தால் ஒரு குறுநில மன்னர் மாதிரி இருக்கிறது. வெள்ளை வெளேறென்ற முறுக்கு மீசையும், காதில் வைரக் கடுக்கனும் அணிந்திருக்கிறார். நெற்றியில் தீட்டப்பட்டிருந்த நீண்ட சிவப்புக் கோடு அவர் வைணவர் என்பதைக் காட்டுகிறது.

ஊடுருவிப் பார்க்கும் கண்களால் நிலவுமொழியை அளவெடுக்கிறார் அவர். தலையைக் குனிந்துகொள்கிறாள் நிலவுமொழி. அவருக்கும், அவருக்கு அருகில் இருப்பவனுக்கும் சாயல் ஒற்றுமை இருக்கிறது. வயது வித்தியாசத்தை மனதில்கொண்டு, அவரது பேரனாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறாள்.

"அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளம்மா!" என்று பஞ்சவன்மாதேவி அவள் காதில் கிசுகிசுக்கிறாள். நிலவுமொழி அனைவரையும் வணங்குகிறாள்.

"வாம்மா நிலவுமொழி. நீ இப்பொழுது ஒரு அரசகுமாரி மாதிரித்தான் இருக்கிறாய். உன்னை ஒரு தந்தையாக வரவேற்கிறேன். அதோடு மட்டுமல்லாமல், தந்தையாக ஒரு கடமையைச் செய்யவும்தான் உன்னை வரவழைத்திருக்கிறேன்!" கணீரென்று முழங்குகிறது இராஜேந்திரனின் குரல்.

"மகாராஜா! என்ன சொல்கிறீர்கள்? இந்த ஏழை ஓதுவாரின் மகளை உங்கள் மகளென்று சொல்கிறீர்களே!" தழுதழுக்கிறது பொன்னம்பல ஓதுவாரின் குரல். அவரது கைகள் தலைக்கு மேல் உயர்ந்து வணக்கத்தில் ஒன்று சேர்கின்றன.

"ஆம், பொன்னம்பல ஓதுவாரே!" என்று இராஜேந்திரன் சொன்னதும் அவரால் தன் காதுகளையே நம்ப இயலவில்லை.

தன் பெயர் சோழப்பேரரசரான இராஜேந்திரனுக்கு எப்படித் தெரிந்தது! இப்பொழுதுதானே இராஜேந்திரனை அவர் முதல்முதலாகச் சந்திக்கிறார்?

"ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே அவளை எம் மகளாக ஏற்றுக்கொண்டுவிட்டோம். அவளுக்கும் திருமண வயது ஆகிவிட்டதல்லவா! ஆகவே, தந்தையாக எமது கடமையைச் செய்ய விரும்பி எமது திருமந்திர ஓலைநாயகம் வாயிலாக உம்மையும், எமது மகளையும் இங்கு வரவழைத்தோம்!" அவன் குரல் கனிவாக இருந்தாலும், ஓதுவாருக்கு அது கனவில் ஒலிப்பது போல இருக்கிறது.

சிவாச்சாரி அவரை ஒரு ஆசனத்தில் அமரும்படி கைகாட்டுகிறான். இருப்பினும் இராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலரின் முன் அவர்களுக்குச் சமமாக அமர ஓதுவாருக்குக் கூச்சமாக இருக்கிறது. அவரைக் கையைப் பிடித்து அமர்த்திய சிவாச்சாரி தானும் அவரருகில் உள்ள ஆசனத்தில் அமர்ந்துகொள்கிறான்.

பஞ்சவன்மாதேவி இராஜேந்திரனுக்கருகில் அவளது அரியாசனத்தில் அமரவே, இராஜாதிராஜனும், இராஜேந்திர தேவனும் எழுந்திருந்து அருள்மொழிநங்கைக்கும், நிலவுமொழிக்கும் தங்கள் இருக்கையை அமரக் கொடுத்துவிட்டு வேறொரு இருக்கையில் அமர்ந்துகொள்கிறார்கள். மிகவும் கூச்சத்துடன் அமர்ந்துகொள்கிறாள் நிலவுமொழி.

"சேதுராயரே, உமது பெயரனை எம் மகள் நிலவுமொழிக்கு மணமுடிக்க உமது சம்மதத்தை யாம் கோருகிறாம்!" சுற்றிவளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறான் இராஜேந்திரன்.

பனித்த மீசையுடன் அமர்ந்திருந்த சேதுராயர் புன்னகையுடன், "எந்தப் பெயரனுக்கு?" என்று வினவுகிறார்.

"வயதாகிவிட்டது உமக்கு, சேதுராயரே!" கடகடவென்று சிரிக்கிறான் இராஜேந்திரன்.  "அதுதான் எதையும் சட்டென்று புரிந்துகொள்ள இயலவில்லை!  எப்பொழுது எமது மகள் என்று சொல்லி விட்டோமோ, அப்பொழுதே ஆளவந்தான் நிலவுமொழியின் அண்ணனாகி விட்டான்.  நாம் குறிப்பது உமது மகன் வயிற்றுப் பேரனான காடவனைத்தான்!"

"அரசே! தாங்கள் ஆணையிட்டால் அதற்கு நான் மறுப்புச் சொல்லவா போகிறேன்!  இருப்பினும்…"  என்று இழுக்கிறார் சேதுராயர்.

"என்ன தயக்கம் உமக்கு?" இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

"தாங்களும், தங்களது மகளாகச் சொல்லப்படுபவளும் சைவர்கள். நானும் எனது பெயரனும் வைணவர்கள். அப்படியிருக்க, மணவினை நடத்து என்றால்…" மீண்டும் இழுக்கிறார் சேதுராயர்.

"ஏன்? சைவர்களும் வைணவர்களும் மணவினை செய்துகொள்வதில்லையா? உமது மகளை நான் மணந்துகொள்ளவில்லையா?"

"நான் மனம் விட்டுப்பேச கோப்பரகேசரியாரின் அனுமதி வேண்டும்" சேதுராயரின் குரலில் இருக்கும் உறுதி, சபையில் இருக்கும் அனைவருக்கும் ஒருமாதிரியாகப்படுகிறது.

"அரசனாகவும், குறுநில மன்னராகவும் இப்பொழுது நாம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, சேதுராயரே! மணவினைக்காக உரையாடுகிறோம். எனவே, நம் உள்ளத்தில் உள்ளதைத் தயக்கமின்றிப் பகிர்ந்து கொண்டால்தான் இளம் மக்களின் மணவாழ்க்கை சிறப்பாக விளங்கும்."

இராஜேந்திரன் முகத்தில் தவழும் புன்னகை, சேதுராயர் என்ன சொல்ல விழைகிறார் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட மாதிரித்தான் இருக்கிறது.

தொண்டையை இலேசாகச் செறுமிக் கொண்டு விட்டு எழுந்திருக்கும் சேதுராயரைக் கையமர்த்திய இராஜேந்திரன், "நான்தான் அரசுப்பணி இல்லை என்று சொல்லிவிட்டேனே!  நீர் தயக்கமின்றி இருக்கையில் அமர்ந்தவாறே பேசலாம்" என்கிறான்.

"நன்று, நன்று!" என்று தொடர்கிறார் சேதுராயர்.

"அரசே! தாங்கள் என் மகளைக் காதல் கடிமணம் செய்தீர்கள். இருப்பினும் தங்களுடன் சோழ அரியணையில் ஏறவேண்டிய என் மகளும், அவளது வழித்தோன்றல்களும் அரசுரிமைக்கு அருகதையற்றவர்கள் என்று சக்கரவர்த்தியாரால் அறிவிக்கப்பட்டனர். தாங்கள் அரசுரிமை ஏற்ற பின்னர்தான் என் மகள் வயிற்றுப்பெயரன் சோழ அரசவைக்கே அழைக்கப்படுகிறான். காரணம் தாங்கள் அறியாததல்ல – என் மகள் வைணவப் பெண் என்பதால்தானே…!"

மேலே தொடர முயன்ற அவரை இடைமறித்து, "அல்ல சேதுராயரே, அல்ல!  என் தந்தை சிறந்த சைவராக இருந்தாலும், வைணவத்தை மதித்தவர். நிறைய வைணவக் கோவில்களுக்கு நிலமும், அறக்கட்டளையும் வழங்கியவர். சாக்கிய முனியான புத்தருக்கு நாகைப்பட்டினத்தில் விகாரம் அமைக்க என் தந்தையார் அறக்கட்டளை வழங்கவில்லையா? என் அத்தையார் தஞ்சையில் சுந்தரசோழ விண்ணகரம் அமைக்கவும், சமணக் கோவில் கட்டவும் அறக்கட்டளை வழங்கியதை இந்நாடே அறியும். மேலும், தங்கள் மகள் என்னை மணந்ததும், சைவத்தை ஏற்று ஒரு சைவப்பெண் ஆகிவிடவில்லையா? அதல்ல காரணம்…"

சில கணங்கள் அமைதியான இராஜேந்திரனின் குரலில் இலேசான கரகரப்பு இருக்கிறது. "என் முதல் திருமணம் காதல் கடிமணமாக அமைந்ததை தந்தையார் ஒப்புக்கொள்ளவில்லை.  சோழ நாட்டின் பட்டத்து அரசியாக வரவேண்டியவள் நாடறிய, உலகறிய என்னை மணக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எங்கள் திருமணம் அரசர்களுக்கு அனுமதிக்கப்பட்டதே எனினும், களவுக் காதல் கடிமணமாக அமைந்ததால், அது அரசுப் பதவி உரிமைக்கு அருகதையற்றது என்று முடிவெடுத்து – எனக்குத் தண்டனையாக தங்கள் மகள் வழியோர் சோழ அரச உரிமையற்றவர்கள் என்று செப்பேட்டில் பதிப்பிட்டுவிட்டார். இன்றுவரை என் அவசரச் செயலுக்காக நான் இதயத்திற்குள் குருதி சிந்தி வருகிறேன். உமது மன ஆற்றாமை எமக்குப் புரிகிறது. அதனால் உம் மனதைக் குளிரவைக்கும் ஒரு அறிவிப்பைச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்."

இராஜேந்திரனின் கண்கள் பளிச்சிடுகின்றன. "அரசகேசரியான எமது தந்தையாரின் கட்டளையை மீற இயலாவிட்டாலும், சோழ அரசர்களுக்கே உரிய பட்டப் பெயரில் கடைசியான கேசரியை ஆளவந்தானுக்கு வழங்கிச் சிறப்பிக்கிறோம். ஓலைநாயகமே, இனி ஆளவந்தான் மனுநீதிச் சோழன் வழித்தோன்றல் என்பதைக் குறிக்கும் வகையில் 'மனுகுல கேசரி' என்று அழைக்கப்படுவான் என்பதைச் செப்பேட்டில் பதிவு செய்வீராக!" அவன் குரல் மண்டபத்தில் எதிரொலிக்கிறது.

இராஜாதிராஜனின் வலது புருவம் சிறிது ஏறி இறங்குவதை இராஜேந்திரன் கவனிக்கத் தவறவில்லை.

"அப்படியே சோழ நாட்டின் புதிய தலைநகரமான ஜெயங்கொண்ட சோழபுரத்தில் சோழ அரியணையில் அடுத்து ஏறப்போவது இராஜாதிராஜன்தான் என்பதையும் இங்கு அறிவிக்கிறோம். ஓலைநாயகமே, எமது இந்த ஆணையையும் நீர் செப்பேட்டில் பதிவு செய்வீராக!" என்று அறிவித்து விட்டு சேதுராயரின் பக்கம் திரும்புகிறான்.

"சேதுராயரே! தலையாய இரண்டு அரசு ஆணைகளைப் பிறப்பிக்க உதவியதற்கு நன்றி. இனி மேலே தொடர்ந்து சொல்லவந்ததைச் சொல்வீராக!" என்று அவன் கேட்பது புலி இலேசாக உறுமுவது போல சேதுராயரின் காதில் படுகிறது.

"யுத்தமல்லன் என்ற பெயரும், கோப்பரகேசரி என்ற பெயரும் காரணமில்லாமல் தங்களுக்கு வழங்கப்படவில்லை அரசே!  என் தரப்பு வாதத்தை நான் எடுத்து வைக்கு முன்னரே என்னைத் தோற்கடித்து விட்டீர்கள். முப்பது ஆண்டுகளாக என் இதயத்தை அறுத்துவந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. என் வழித்தோன்றலுக்கு மனுகுலகேசரி என்ற பட்டத்தை வழங்கி என்னைச் சிறப்பித்து விட்டீர்கள். இனி நான் சொல்ல வேண்டியது எதுவுமே இல்லை. என் பெயரன் காடவன் உங்கள் மருமகன் ஆவது எனக்கு முழு சம்மதம். இது எங்களின் பாக்கியம்" என்று தழுதழுத்த குரலில் பதில் சொல்கிறார்.

பொன்னம்பல ஓதுவாருக்கோ பேச நாவே எழவில்லை. சோழ வரலாற்றின் தலையாய அறிவிப்புகள் அவர் முன்னே அல்லவா நடந்துகொண்டிருக்கின்றன! கோப்பரகேசரியான இராஜேந்திர சோழச் சக்ரவர்த்தி ஒரு ஏழை ஓதுவாரின் மகளின் திருமணத்திற்காக எப்படிப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு தயக்கத்தை வரவழைத்து செயலிழக்கச் செய்கிறது.

நிலவுமொழி சிறிது பரபரப்புடன் அசைவதைக் கண்ட அருள்மொழிநங்கை, "தந்தையாரே, நிலவுமொழி ஏதோ சொல்ல விரும்புகிறாள் போலத் தோன்றுகிறது" என்று குறும்பாகக் கூறுகிறாள்.

தன்னைத் திரும்பிப் பார்த்த இராஜேந்திரனைக் கண்டதும் நிலவுமொழிக்கு நாடித்துடிப்பு அடங்கிப் போய் விடுகிறது. கதிரவனின் ஒளிபட்ட புழுவாக நெளிகிறாள்.

அவளைப் புன்சிரிப்புடன் பார்க்கிறான் இராஜேந்திரன்.

"நாங்கள் மட்டும்தானா சொற்போராட வேண்டும் மகளே?  உனது மனதில் படுவதையும் நீ தெரிவிப்பாயாக! உனக்கு இத்திருமணத்தில் சம்மதம்தானே?" என்றும் கேட்கிறான்.

"அவள் ஒரு அறியாத பெண் அரசே! தங்கள் முன்னர் பேசவும் அருகதையற்றவள். அவளது விருப்பம் என்ன, அவளது விருப்பம்?  தாங்களே மணவினை பேசி முடிப்பது அவள் முன்னோர்கள் பலர் செய்த நல்வினைப் பயனே ஆகும்! நிலா, சரி என்று சொல்!" பொன்னம்பல ஓதுவாரின் குரல் கொஞ்சம் அதட்டலாகவே ஒலிக்கிறது.

"ஓதுவாரே! யாம் அவளிடம் கேட்கிறோம். சேதுராயருக்கு யாம் அளித்த பேச்சுரிமையை அவளுக்கும் அளிக்கிறோம். அவள் மனதில் இருப்பதை அப்படியே எனக்குச் சொல்வாளாக!" இராஜேந்திரனின் குரலில் கண்டிப்பு தொனிக்கிறது.

தயங்கி எழுந்து நின்ற நிலவுமொழி தரையைப் பார்த்துக் குனிந்தவாறே மெல்லிய குரலில் பதிலளிக்கிறாள். "கோப்பரகேசரியாரே! இந்த ஏழையைத் தாங்கள் நினைவில்கொண்டு, ஒரு இளவரசருக்கு மணவினை முடிப்பது என் தந்தையார் சொல்லியது போல எங்கள் முன்னோர்கள் செய்த நல்வினைப் பயன்தான். அதில் ஒரு ஐயமும் இல்லை. ஆயினும்…" என்று இழுக்கிறாள்.

அரசவையே அவளை நோக்குவது அவளுக்குப் புரிகிறது. அனைவரின் கண்களும் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று கவனிப்பதும் அவளுக்குத் தெரிகிறது.

"கோப்பரகேசரியாரே! இன்றும், என்றும் நான் ஒரு சைவப்பெண்ணாகத்தான் இருப்பேன். என் வாழ்நாள் முழுவதும் சிவனாரைத் துதித்து, தேவாரமும், திருவாசகமும் ஓதி வருவேன்.  இவ்வுலகத்தில் உள்ள அனைத்துப் பொன்னும், மணியும் எனக்குக் கிடைத்தாலும், சிவனாரை என் உள்ளத்திலிருந்து நீக்க நான் ஒப்பமாட்டேன். என் வயிற்றில் பிறப்பவர்களுக்கும் சிவ பக்தியையே ஊட்டி வளர்ப்பேன். வைணவராக இருக்கும் இளவரசர் இவற்றிற்கு முழுமனதுடன் அனுமதி கொடுத்தால்தான் இத்திருமணத்திற்கு என்னால் ஒப்ப இயலும். இதுவே இந்த ஏழை தங்கள் முன் வைக்கும் கோரிக்கை! இதைத் தாங்களோ மற்றவர்களோ தவறாக எண்ணக் கூடாது!" மனதில் இருப்பதை அனைவரின் முன்னமும் கொட்டிவிட்டு அமைதியாகி விடுகிறாள் நிலவுமொழி.

அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். இராஜேந்திரன் சேதுராயரைக் கண்களினாலே வினவுகிறான். சேதுராயர் தன் பெயரன் காடவனைப் பார்க்கிறார். காடவனோ சேதுராயரை நோக்கி இரு கைகளையும் விரித்து அவர் பக்கம் நீட்டுகிறான். 'தங்கள் முடிவு பாட்டனாரே' என்பது போல இருக்கிறது அது.

சேதுராயர் எழுந்திருந்திருந்து மெல்ல நிலவுமொழியின் அருகில் வந்து நிற்கிறார்.  நிலவுமொழியின் குனிந்த தலை இன்னும் நிமிராமலேயே இருக்கிறது.

"ஏன் பெண்ணே, உனக்கு திருமால் பேரில் இத்தனை வெறுப்பு?" என்று கனிவான குரலில் வினவுகிறார்.

"ஐயா, எனக்குத் திருமாலிடம் வெறுப்பு இல்லை. சிவனாரிடம் அளவு கடந்த பக்தி. அவ்வளவே!" என்று உறுதியான, மெல்லிய குரலில் குனிந்த தலை நிமிராமல் பதிலளிக்கிறாள்.

"திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் கணவன் வழி செல்வதுதானே சிறப்பு! அதைத்தானே மறை நூல்களும் உரைக்கின்றன! என் மகளும் கோப்பரகேசரியாரை மணந்ததும் சைவப் பெண்ணாகத்தானே தன்னை மாற்றிக் கொண்டாள்!" அவளிடம் தனது பக்கத்தை எடுத்துச் சொல்கிறார் சேதுராயர்.

"ஐயா, நான் தங்கள் அளவுக்கு அறிவு உள்ளவள் அல்ல. நான் அருள்மொழிநங்கையார் போல சிவனடியாரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், அதற்காக அரசுரிமையையே துறப்பேன் என்னும் அளவுக்கு உயர்ந்தவளும் அல்ல. ஆயினும் திருமாலை மட்டும் வணங்கவோ, வைணவத்திற்கு மாறவோ என் மனது ஒப்பவில்லை. திருமணத்திற்குத் தலையை ஆட்டிவிட்டு, பிறகு திருமாலை வணங்க முடியாதென்றால் தங்களுக்கும், தங்கள் பெயரரான இளவரசருக்கும் என் மீது மனத்தாங்கலை ஏற்படுத்தும் அல்லவா? அதனால்தான் முதலிலேயே தெரிவிக்கிறேன். சமணரான கூன்பாண்டியரை சைவத்திற்குக் கொணர்ந்தது கோப்பரகேசரியாருக்கு முன்னுதித்த சோழ இளவரசியும், பழையாறையில் பிறந்தவருமான மங்கையர்க்கரசியார் என்பதும் தாங்கள் அறியாததல்ல. எனவே, இறை வழிபாடு ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. நானும் தங்கள் மகளும் ஒன்றா? பத்தினித் தெய்வமான அவர்கள் இடத்தில் என்னை வைத்துப் பேசுவதே அவர்களை அவமதிப்பதாகாதா?  ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் பிழை பொறுத்தருள்வீர்களாக!" என்று சேதுராயரின் கால்களில் விழுந்து பணிகிறாள் நிலவுமொழி.

"எழுந்திரு குழந்தாய்! மனதில் உள்ளதைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? போகட்டும்.  நீ சிவனாரை வணங்குவது உன் மனப்பாங்கு. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.  ஆயினும், உன் வயிற்றில் உதித்தவர்களும் சைவர்களாகவே வளரவேண்டும் என்ற நிபந்தனையை ஏன் விதிக்கிறாயம்மா?" என்று கேட்கிறார் சேதுராயர்.

"ஐயா, என் வயிற்றில் பிறந்தவர்களுக்கு என் பாலை ஊட்டி வளர்க்கும்பொழுது எனது மொழியான தமிழையும், எனது கடவுளான சிவனாரையும் இனங்காட்டி வளர்க்காமல் வேறு எப்படி வளர்ப்பேன்? தாயின் நாவிலிருந்து வரும் மொழியைக் குழந்தை கற்று வளருவதால்தானே அதைத் தாய்மொழி என்று சொல்கிறார்கள்? அதைப் போலத்தானே தான் வணங்கும் தெய்வத்தையும் ஒரு தாய் குழந்தைக்குக் காட்டி வளர்ப்பாள்? அதைச் செய்யாதே என்று சொன்னால், 'நீ ஒரு தாயாக இராதே' என்று சொல்வதாகத்தானே நான் பொருள்கொள்ள வேண்டும்? இப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது."

அவள் கண்களில் நீர் முத்துக்கள் திரண்டு வழிந்து சேதுராயரின் கால்களை நனைக்கிறது. சேதுராயர் நெகிழ்ந்து போகிறார். அவளைத் தூக்கி நிறுத்துகிறார்.

"குழந்தாய்! உன் உண்மைக்கு என்னை அடிமையாக்கி விட்டாயம்மா! இதுவரை என் வாழ்வில் சோழ நாட்டில் வைணவர்களைச் சிறுமைப்படுத்தி நான் கண்டதில்லை. சைவமும், வைணவமும் சோழத்தாயின் இரு கண்களாகத்தான் இருந்து வருகின்றன. எனக்கு உன் மனநிலை புரிகிறது. உன் விருப்பத்திற்கு நான் ஒப்புக்கொள்கிறேன். காடவன் உன்னை மணக்கத் தடையேதுமில்லை. திருமணத்திற்குப் பிறகும் உன் விருப்பப்படி சிவனாரை வழிபட்டு வரவும், உன் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு நீ சிவ பக்தியை ஊட்டி வளர்க்கவும் நாங்கள் சம்மதிக்கிறோம். நீயும் எனது ஒரு விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உறுதியளிக்க வேண்டும்" சேதுராயரின் கனிவான மொழி நிலவுமொழியை அமைதிப்படுத்துகிறது.

என்ன என்பது போல் முதன்முதலாக அவரை நிமிர்ந்து பார்க்கிறாள்.

"என் மகள் வயிற்றுப் பெயரனுக்குத் திருமாலை பற்றி நிறையச் சொல்லி வளர்த்து வந்திருக்கிறேன். ஆனால், அவனை வைணவனாக மாற்றக் கட்டாயப்படுத்தவில்லை. அவனுக்கு வைணவப் பெயரை வைத்து மகிழ விரும்பியதற்கும் கோப்பரகேசரியார் தடை ஏதும் சொல்லவில்லை. அதேபோல, உன் வயிற்றில் பிறப்பவர்களுக்கும் வைணவப் பெயரை வைக்க எனக்கு நீ உரிமை அளிக்க வேண்டும். எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் ஒருவருக்கு மற்றவர் சிறிது விட்டுக்கொடுக்க வேண்டும் அல்லவா! இந்த விஷயத்தில் எனக்கு நீ விட்டுக்கொடுத்துதானம்மா ஆகவேண்டும்!" ஒரு குழந்தையைப் போல நிலவுமொழியிடம் கெஞ்சுகிறார் சேதுராயர்.

அவள் முகத்தில் புன்னகை மலர்கிறது. "ஐயா, இதற்கும் ஒப்புக்கொள்ளாவிட்டால் நான் பெண்ணே அல்ல!  என் வயிற்றில் பிறந்தாலும் அவர்கள் உங்கள் பெயரர்கள்தான்.  அவர்களுக்குப் பெயர் வைக்கும் உரிமை தங்களுக்கு இல்லாமல் எவருக்கு ஐயா இருக்கிறது?" என்று சொல்லி விட்டு நாணத்துடன் தலையைக் குனிந்துகொள்கிறாள்.

இராஜேந்திரன் மெல்லத் தன் கைகளைத் தட்ட ஆரம்பிக்கிறான். அனைவரும் அவனைத் தொடர்ந்து கையொலி எழுப்புகின்றனர்.

***

ஜெயங்கொண்ட சோழபுரம்

பிங்கள, வைகாசி 24 – ஜூன் 9, 1017

குடிசை ஒன்றில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கின்றனர் இராஜேந்திரனும், சிவாச்சாரியும்.  தூரத்தில் நகர நிர்மாணப் பணியால் ஏற்படும் ஒலிகளும், கூச்சல்களும் மெலிதாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. குடிசைக்கு அருகில் இருக்கும் மரங்களில் கட்டப்பட்டிருக்கும் குதிரைகளின் கனைப்புச் சத்தமும் அவ்வப்பொழுது கேட்கிறது. வைகாசி வெய்யில் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தாலும் குடிசையின் நிழல் கொஞ்சம் குளுமையாகவே இருக்கிறது.

தன்னைத் தனியாகக் கூட்டி வந்ததிலிருந்தே மிகவும் முக்கியமான அரசுப் பணியைப் பற்றித்தான் பேசவிரும்புகிறான் இராஜேந்திரன் என்று சிவாச்சாரி ஊகிக்கிறான். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் பேசாமலே இருக்கிறான் இராஜேந்திரன். மனதிலேயே தான் நினைப்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்ததால் தானும் அமைதியாகவே இருக்கிறான் சிவாச்சாரி.

"சிவாச்சாரியாரே! உம்மிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும், உமது போக்கிற்கு விளக்கம் பெற வேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆயினும் தக்க தருணம் வரவில்லை. இருப்பினும் முக்கியமான சில அரசு முடிவுகளை நான் எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. எனவே, உம்முடைய மன ஓட்டத்தை நான் புரிந்துகொண்டாக வேண்டும். எனவே, சுற்றிவளைக்காமல் எனது நண்பனாகப் பதில் சொல்வீராக!" என்ற பீடிகையுடன் தொடங்குகிறான்.

"முதலாவதாக, எனது தந்தையின் தமிழ்ப் பணியின் மீது எனக்கு அக்கரை இல்லை என்று நினைக்கிறீர் என்றும், இரண்டாவதாக, புதிய தலைநகரம் நிர்மாணிப்பதற்கு உமக்கு ஒப்புதலில்லை என்றும் எனக்குப்படுகிறது. மூன்றாவதாக, அந்தப் பெண் நிலவுமொழியைச் சேதுராயரின் பெயரனுக்கு மணமுடிப்பதிலும், இறுதியாக, ஆளவந்தானுக்கு மனுகுலகேசரி என்ற பட்டத்தை அளிக்க வேண்டும் என்பதிலும் ஏன் என்னை நீர் கட்டாயப்படுத்தினீர் என்றும் எனக்குத் தெரியவேண்டும். இன்னும் இரண்டு நாழிகைக்கு இங்கு யாரும் வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்து விட்டுத்தான் உம்மை அழைத்து வந்திருக்கிறேன். எனவே, நீர் நிதானமாக எனக்கு உமது மன ஓட்டத்தை விளக்குவீராக!" என்று கேட்கிறான் – இல்லை, ஆணையிடும் குரலில் சொல்கிறான்.

இராஜேந்திரன் இந்தக் கேள்வியைத் தன்னிடத்தில் கேட்பான் என்பது சிவாச்சாரி முன்னமேயே அறிந்திருந்ததுதான். ஆயினும், எப்பொழுதும் உடனுக்குடன் எந்த விஷயத்தையும் தீர்மானித்து அறிந்துகொள்ள விரும்பும் இராஜேந்திரன், ஏன் ஒரு ஆண்டுக்கும் மேலாகக் காத்திருந்தான் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. அவனுடைய இந்தக் கேள்விகளுக்குத் தான் அளிக்கும் விளக்கத்தில்தான் தனது எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதையும் சிவாச்சாரி புரிந்துகொள்கிறான். அரசன் என்று இராஜேந்திரனிடம் தான் காட்டி வந்த தயக்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்பதால்தான், நண்பனாக பதில் சொல்லுமாறு இராஜேந்திரன் கேட்கிறான் என்பதும் புரிகிறது.

"கோப்பரகேசரியாரே!" என்று துவங்கிய அவனைக் கையமர்த்துகிறான் இராஜேந்திரன்.

"ஓய் சிவாச்சாரியாரே! உமக்கு எத்தனை தடவை சொல்ல வேண்டும், நண்பனாக பதில் சொல்லும் என்று?" இராஜேந்திரனுடைய மீசை துடிக்கிறது.

"இப்பொழுது நான் சோழநாட்டுப் பேரரசனாக உம்முடன் உரையாடவில்லை. உமது தயக்கத்தை விடும். அந்தப் பெண் நிலவுமொழி எவ்வளவு துணிச்சலுடன் சேதுராயருடன் உரையாடினாள்! அவளுடைய துணிச்சலைக் கொஞ்சம் கடன்வாங்கிக்கொண்டு ஒரு நண்பனுடன் உரையாடுவது போல உரையாடும்!" இராஜேந்திரனின் பொறுமை குறைகிறது என்பதை அவனது குரல் நன்றாக உணர்த்துகிறது.

"அப்படியே மதுராந்தகா!" என்று சிவாச்சாரி ஆரம்பிக்கிறான்.

அவன் தன்னை இப்படி அழைப்பான் என்று எதிர்பார்க்காத இராஜேந்திரன், ஒருகணம் கழித்து தனக்கே உரிய உரத்தக் குரலில் கடகடவென்று நகைக்கிறான். "இதுதான் நான் விரும்புவது.  மேலே தொடரும்!" என்று சிவாச்சாரியின் அருகில் நெருங்கி அமர்ந்துகொள்கிறான்.

"முதல் கேள்விக்குப் பதில் சொல்வதானால் நான் முதல்முறையாக உங்களைக் கருவூராருடன் சந்தித்த நாளுக்குச் செல்ல வேண்டும்!" என்றபடி அங்கு இராஜேந்திரனுக்கும், இராஜராஜருக்கும் நடந்த சிறு பூசலைச் சுட்டிக்காட்டுகிறான்.

"அப்பொழுது அங்கு உங்களுக்கும், சக்ரவர்த்தியாருக்கும் இடையில் ஒரு திரை விழுந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அது எனக்கு மட்டும் தோன்றவில்லை, கருவூராருக்குமே தோன்றியது என்பதை அவர் தமிழ்த்திருப்பணியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டுப் புறப்பட்டதிலிருந்து தெரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல…" என்று மேலே தொடர்ந்து கருவூராரிடம் இராஜேந்திரனும், இராஜராஜரும் பாண்டியருடன் உறவை மறுத்ததைப் பற்றியும் விளக்குகிறான்.

"அது கருவூராரின் மனதை மிகவும் பாதித்து விட்டது. எனவேதான், அவர் திருக்கயிலைக்குச் செல்லத் தீர்மானித்து தஞ்சையை விட்டு நீங்கிவிட்டார். மேலும், நீங்களாகக் கேட்காவிடில், அவரது மன ஓட்டத்தை யாருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்றும் ஆணையிட்டுவிட்டார்.  பாண்டியருடன் நாம் இணைந்தால்தான் தமிழ்த் திருப்பணி நிறைவேறும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

"தாங்கள் என்னை தமிழ்த் திருப்பணி ஆலோசகனாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது, திருப்பணிக்கு மிகவும் உதவியது. ஆயினும், பாண்டியன் அமரபுஜங்கனுடன் சக்ரவர்த்தி அவர்கள் நடத்திய வாட்போர் அவரது உடல் நலத்தை மிகவும் பாதித்துவிட்டது. திருப்பணி நல்ல நிலைக்கு வருமுன்னரே தன் இறுதிக் காலம் நெருங்கி விட்டதே என்று வருந்தினார். அவர் கேட்டுக்கொண்டதால், தங்களுக்குச் சொன்ன இந்த உண்மையை அவருக்குச் சொன்னேன்.

"கருவூராரின் திருக்கயிலைப் பயணத்தின் காரணம் அவரை மிகவும் செயலிழக்கச் செய்துவிட்டது. அவரின் கம்பீரம், தன்னம்பிக்கை, எதற்கும் அஞ்சாச் சிங்கநெஞ்சம் – கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து வருவதை தினமும் கண்டுவந்த நான் மிகவும் கலங்கினேன். என்னைத் திருமந்திர ஓலைநாயகமாக நியமித்தது என்னைத் தமிழ்திருப்பணியில் முழுதும் ஈடுபடவிடாமல் என் கவனத்தைத் திருப்பியது. அவரிடமே இதுபற்றிப் பேசி வந்தேன். அதைச் சரிசெய்ய முயன்றபொழுதுதான் நான் இளஞ்சேரனிடம் பிடிபட்டுத் திரும்பினேன். அவரின் காலமும் முடிந்துவிட்டது.

"அந்த ஆற்றாமைதான் என்னை நிலைகுலைய வைத்து, என் மகள் சிவகாமியிடம் தாங்கள் அனுமதிக்கும் வரை திருப்பணியைச் செய்வேன் என்று சொல்லவும் வைத்தது. என்றும் இல்லாத அதிசயமாக அவள் நான் பேசியதைத் தங்களிடம் சொல்லிவிட்டாள். அது தங்கள் மனதில் எப்படிப் பதிந்ததோ என்று இன்னும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.  தாங்கள்தான் அதைப் பற்றி என்னிடம் சொல்ல வேண்டும்.

"மேலும், சக்ரவர்த்தியாரின் மறைவிற்குப் பின்னர் தாங்கள் என்னை மேலும் மேலும் மற்ற அரசுப் பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தீர்கள். எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துத் தாங்கள் எடுத்த முடிவு ஆகும் அது. என்னுடைய ஓலைநாயகத்தின் பதவி உரிமையைக் கொண்டு சக்ரவர்த்தியாரின் இறைவனடிமைத் திட்டத்தை நிறைவேற்றி விட்டேன். கோவில்கள்தோறும் இறைவனடிமைப் பெண்கள் தமிழ்க் கலைகளை வளர்த்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அங்கீகாரமும், அந்தஸ்தும் பலரையும் இறைவனடிமைத் திட்டத்திற்கு ஈர்த்து வருகிறது.

"தங்களது மூத்த மகனான ஆளவந்தானுக்கும் சோழ நாட்டின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உண்மையாக நம்பினேன். அவன் மூலமாகவே சேர நாட்டில் தமிழ் உருமாறிவரும் நிலையைத் தடுக்கத் திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். அதற்காகவே அவனுக்கு மனுகுலகேசரி என்ற பட்டத்தைத் தாங்கள் அளிக்குமாறு இடைவிடாது கோரினேன்."

சிறிது நேரம் சிந்தனை ஓட்டத்தை ஒருங்குபடுத்திவிட்டு மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com