பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 5

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 5

ஒரு அரிசோனன்

ஜயங்கொண்ட சோழபுரம் 

பிங்கள, வைகாசி 24 – ஜூன் 9, 1017 

கூரைக்கு மேலே வண்டுகள் ரீங்காரமிட்ட வண்ணம் இருக்கின்றன. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிவாச்சாரி சொல்வதை காதுறுகிறான், இராஜேந்திரன்.  அவனது மனம் சிவாச்சாரி சொற்களில் உள்ள உண்மைகளையும், அதன் விளைவுகளையும் எடைபோடுகிறது. 

ஆளவந்தானுக்கு சிவாச்சாரி ஆதரவு தருவதாகச் சொல்வதும், நிலவுமொழியையும் ஒரு வைணவனுக்கு மணமுடிக்கத் தூண்டியதும் அவனுக்கு வியப்பாகவே இருந்தது. அவனுடைய ஆழ்ந்து சிந்திக்கும் திறனிலும், தொலைநோக்குப் பார்வையிலும் இராஜேந்திரனுக்கு நிறைய நம்பிக்கை உண்டு. 

தந்தையார் இராஜராஜரும் சிவாச்சாரி மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்றும் அறிவான். கடைசிக் காலத்தில் அவனைக் கருவூராராக எண்ணி அவன் கையைப் பிடித்துக்கொண்டுதானே உயிரை விட்டார்! 

அவனது மன ஓட்டம் சில சமயம் தன் மன ஓட்டத்திற்கு முரணாக இருப்பதையும் அவன் கவனித்துக்கொண்டுதான் வந்திருக்கிறான். இருப்பினும், தான் என்ன ஆணையிட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு முகம் சுளிக்காமல் முழுமனதுடன் நிறைவேற்றிவருவதும் அவனுக்குத் தெரியாமலில்லை. அவனே எல்லா விவரங்களையும் சொல்லட்டும் என்று காத்திருக்கிறான். 

"அரசே! சிவாச்சாரியனான நான் வைணவரான சேதுராயருக்கு முக்கியத்துவம் அளிப்பது சோழ நாட்டின் மேன்மையைக் கருதித்தான்.  சைவமும், வைணமும் அதன் இரு கரங்கள், இரு கண்கள், இரு கால்கள், இரு செவிகள். அவை சேர்ந்து இயங்கினால்தான் சோழநாடு சிறப்பாக இருக்கும். அவை வெவ்வேறு பக்கம் சென்றால் சோழ நாட்டின் வலிமை குறைந்துவிடும்.  சேதுராயர் மனம் குளிர்ந்தால்தான் அவரும், அவரது சந்ததியாரும், மற்ற வைணவக் குறுநில மன்னர்களும் சோழநாட்டின் மேன்மையைத் தாங்கும் தூணாக இயங்குவார்கள். 

"அதை எப்படி நிரூபிப்பது?  ஆளவந்தானுக்கு அங்கீகாரம் கொடுப்பதன் மூலம்தான்.  கேசரி என்ற பட்டத்தை அளிப்பதன் மூலம் ஆளவந்தான் சோழப் பேரரசரின் வழித்தோன்றல் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. அதேசமயம், சக்ரவர்த்தி அவர்களின் ஆணையும் மீறப்படாமல் இருக்கிறது. அவனது தாய்க்குக் கிடைக்காத அங்கீகாரம் – சேதுராயரின் மகளுக்குக் கிடைக்காத அங்கீகாரம் – அவரது மகள் வயிற்றுப் பெயரனுக்குக் கிடைக்கிறது. அடுத்தடுத்து நாம் செய்வதும் அதை உறுதிப்படுத்தும்; சேதுராயரின் பரம்பரை சோழநாட்டின் காவலர்களாக விளங்கும். 

"காடவன் ஒரு சிறந்த கல்விமான்.  தமிழறிவு மிக்கவன்.  வடமொழியும் அறிந்தவன்.  அவனைச் சேரநாட்டிற்கு தமிழ்த் திருப்பணிக்கு அனுப்புவது சிறந்தது. அவனது வடமொழித் திறன் அங்குள்ள நம்பூதிரி அந்தணர்களிடம் மதிப்பை ஈட்டும். அத்துடன் அவனுக்கு அரசியல் செயல் நயமும் அதிகம். 

"அவனுக்கு உறுதுணையாகச் செல்லத்தான் நான் நிலவுமொழியைத் தேர்ந்தெடுத்தேன்.  இராஜராஜ நரேந்திரன் அவளிடம் முறைதவறி நடந்தவுடன் அவள் தனது முதன்மையான தமிழ்ப் பணியை விட்டுவிட நேர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவள் திருமயிலையில் வெதும்பிப் புழுங்கிக் கொண்டிருந்ததும் என் மனத்தை வருத்தியது.  அவள் அப்படி இருக்கக் கூடாது, அவள் மணவாழ்வையும் தொடங்கவேண்டும், அதேசமயம் தமிழ் திருப்பணிக்கு உதவியாகவும் இருக்க வேண்டும், இதெற்கென்ன வழி என்று சிந்தித்தேன். அவளையும், காடவனையும் இணைத்தால் அதுவே சிறப்பானது என்ற முடிவுக்கும் வந்தேன். எனவே, தங்களிடம் அவர்கள் திருமணம்பற்றிச் சேதுராயரிடம் பேசும்படி வேண்டிக்கொண்டேன்.  தில்லைக்கூத்தனின் அருளால் எல்லாமே நன்கு நிறைவேறியது" என்று நிறுத்துகிறான் சிவாச்சாரி. 

"அதெப்படி சைவப் பெண்ணையும், வைணவனையும் இணைக்கத் திட்டம் தீட்டினீர்?" என்று இராஜேந்திரன் வினவுகிறான். 

"தாங்கள்தான் முன்னோடியாக அமைந்திருக்கிறீர்களே அரசே!" என்று புன்னகைத்தவாறே பதிலிறுக்கிறான் சிவாச்சாரி. 

"அதுசரி.  தலைநகரைத் தஞ்சையிலிருந்து மாற்றுவது தேவையில்லை என்ற காரணம்?" 

"இதற்கு நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது" என்றபடி துவங்குகிறான் சிவாச்சாரி. 

"ஓலைநாயகமாக இருந்த அனுபவத்தால் நான் எடுத்த முடிவு இது.  நகரை நிர்மாணிப்பது மட்டும் பெரிதல்ல.  அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள், மற்றும் வணிகர்கள், ஊழியர்கள் மட்டுமல்லாது, அங்கு நிறுவப்படும் பள்ளிகள், தொழிற்சாலைகள், கலைக்கூடங்கள் இவற்றை நிரப்பவும் மக்கள் குடிபெயர வேண்டும். 

"அவர்கள் பெரும்பாலும் தஞ்சையிலிருந்தே குடிபுக நேரிடும்.  இதனால் தஞ்சை தன் மக்களை இழந்து பொலிவிழக்க நேரிடும்.  இடம்பெயர்வது அந்த மக்களுக்கு இன்னலை உண்டாக்கும்.  மேலும் நிறையப் பொருள் தேவைப்படும். 

"நமக்குத் தொல்லை தர வேண்டும் என்பதற்காகவே நமது வணிக நாவாய்களைத் தாக்குவதை சிங்களவர்கள் பொழுதுபோக்காகக் கொண்டிருப்பதால், தாங்கள் கடற்படையை மூன்று மடங்கு விரிவுபடுத்தத் தீர்மானித்திருக்கிறீர்கள். மேலும், தமிழ்த் திருப்பணிக்கும் நிறையப் பொருள், மக்கள்பலம் தேவைப்படுகிறது.  தாங்கள் பெருவுடையாருக்குப் புதிய தலைநகரில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு இணையாக ஒரு கற்றளி அமைக்க இருப்பதாகவும் எனக்குச் செய்தி கிட்டியுள்ளது. இதற்கும் ஏராளமான பொன்னும் பொருளும் தேவைப்படுமே! 

"சக்கரவர்த்தியார் விட்டுச்சென்ற பேரரசை உறுதிப்படுத்துவதே தலையாய பணி என்று எனக்குப் படுகிறது.  அவர் பேரரசு முழுவதையும் தமிழ்கூறும் நல்லுலகு ஆக்க வேண்டும் என்று கனவு கண்டார்.  கருநாட்டார்கள் தங்கள் மொழியான கன்னடத்தை வளர்க்க முற்பட ஆரம்பித்துவிட்டார்கள்.  கன்னடம் தமிழுக்கு அடுத்தபடியாகச் சிறந்து விளங்க ஆரம்பித்திருக்கிறது.  அங்கு தமிழைப் பரப்புவதென்றால், அங்கிருப்பவர்கள் கன்னடத்தை விடுத்து தமிழைக் கற்க நாம் ஆவன செய்யவேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களுக்கு பொருளாசை காட்டுவதே சாலச் சிறந்தது என்பது எனது துணிபு. இதற்கு வேண்டிய செல்வத்தை புதிய தலைநகரை நிர்மாணிக்கும் திட்டம் திசைதிருப்பும் என்று எனக்குப் பட்டது. 

"வெங்கியையும், ஆந்திரத்தையும் எடுத்துக் கொண்டால், அங்கு தெலுங்கு பேசப்பட்டு வருகிறது. தங்கள் மைத்துனர் விமலாதித்தர் நமது தமிழ்த் திருப்பணியை முறியடிக்கத் தன் மகன் மூலம் ஆவன செய்துவருகிறார். அவனுக்குச் சிறுவயதிலேயே தெலுங்கைப் புகட்டித் தமிழைப் பேசவிடாமல் அடித்தார்.  இருப்பினும் நிலவுமொழியின்மீது ஏற்பட்ட மயக்கத்தால் அவன் தமிழைக் கற்றுக்கொண்டான்.  அவன் கொண்ட மயக்கம் தவறானது என்றதால் அவனது தமிழ்க்கல்வியும் தடைப்பட்டது. அதிலிருந்து அவன் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டான் என்று தங்களது தங்கையார்மூலம் எனக்குத் தகவல் வந்தது. 

"அவன் திருப்பணிக்கு என்ன முட்டுக்கட்டை போடுவான் என்று நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. விக்கிரம சிம்மபுரி(நெல்லூர்)க்கு வடக்கேயும், மேற்கேயும் இருக்கும் சோட மன்னர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அங்கு தமிழ் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சைவ, வைணவக் குழப்பமும், உட்பூசலும் தலையெடுக்கவேண்டாம் என்றுதான் சேதுராயரை திருப்தி செய்யும் முயற்சியை மேற்கொண்டேன். 

"இவ்வாறு பலவிதமான முதன்மையான செயல்கள் நிறைவேற்றப்பட வேண்டிய இத்தருணத்தில் நமது ஈர்ப்பை வேறு பணியில் திருப்பவேண்டாம் என்றும், புதுத் தலைநகரை உருவாக்கும் செலவிலும், நேரத்திலும் மிகமிகச் சிறிய அளவிலேயே தஞ்சையை இன்னும் பெரிய, வனப்புள்ள நகராக்கிவிடலாம் என்றும் தோன்றியது. எனவேதான் புதிய தலைநகரம் தேவையற்றது என்று அரசவையில் ஒரே எதிர்ப்புக் குரலாக எனது குரலைப் பதிவு செய்யவேண்டிய அவப்பேறும் எனக்கு ஏற்பட்டது. மற்றவர்களும் வெவ்வேறு ஊர்களையே புதிய தலைநகராக்கும் வண்ணம் பரிந்துரை செய்ததிலிருந்தே அவர்களும் புதிதாக ஒரு தலைநகரை நிர்மாணிக்க வேண்டாம், இருக்கும் ஒரு ஊரையே சிறப்புடையதாக்கலாம் என்று, தங்களையும் அறியாமல் என் கருத்தையே வலிவுசெய்தார்கள் என்றும் எனக்குத் தோன்றுகிறது. 

"தங்கள் வினாக்களுக்கு என் மதியில் எட்டியதை மறைக்காமல் விளக்கி உள்ளேன். என் கருத்து எப்படி இருந்தாலும், தங்கள் ஆணைக்கு என்றும் நான் கட்டுப்பட்டவன்.  சோழ நாட்டிற்காக என் உயிரையும் ஒருகணமும் யோசியாமல் கொடுக்கத் தயங்காதவன் நான்.  அந்த உறுதியை தில்லைக்கூத்தனார் சாட்சியாக நான் தங்களுக்கு அளிக்கிறேன்" சொல்லி முடிக்கிறான் சிவாச்சாரி. 

அவனது பதிலைக் கேட்டு இரண்டுமுறை தலையசைத்த இராஜேந்திரன், தனது விழிகளை மூடிக் கொள்கிறான். 

 கண்களைத் திறவாமலேயே, "மிக்க நன்றி சிவாச்சாரியாரே! உமது உண்மையான பதில் எனக்குப் பல உண்மைகளை உணர்த்துகிறது. சில நாள்கள் நான் உமது சொற்களின் பொருளை அசைபோட்டுப் பார்க்கிறேன்.  சிறிதுநேரம் எனக்குத் தனிமை தேவைப்படுகிறது.  எனக்குத் தொந்தரவில்லாமல் இங்கு காவலிருக்கும்படி எனது மெய்காப்பாளர்களைப் பணித்துவிட்டு, நீர் உமது பணிகளைக் கவனிக்கச் செல்லும்.  தேவையிருந்தால் சொல்லியனுப்புகிறேன்" என்று கூறுகிறான். 

சிவாச்சாரி மெல்ல அங்கிருந்து நகர்கிறான்.   

இராஜேந்திரன் தன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிப் போக்கையும் காட்டாததால், தன் கூற்று இராஜேந்திரனின் உள்ளத்தில் தன்னைப்பற்றி எந்தவிதமான முடிவைத் தோற்றுவித்தது என்பதை அவனால் அறிந்துகொள்ள இயலவில்லை. 

அரசுப் பொறுப்பை ஏற்றதும் தனது உணர்ச்சிகளைத் திரையிட்டு மறைத்துக்கொள்ள இராஜேந்திரன் நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அவனது அருகிலிருந்து சிவாச்சாரி கவனித்துக்கொண்டுதானே வருகிறான்! 

ஏதோ ஒரு பெரிய திட்டம் அவனது மனதில் உருவாகி வருகிறது என்பதும், விரைவிலேயே அவன் அதை நிறைவேற்றுவது பற்றித் தெரிவிக்கப்போகிறான் என்பதும் மட்டும் சிவாச்சாரியனுக்குப் புலனாகிறது. 

சிவாச்சாரி அங்கிருந்து சென்றதும், இராஜேந்திரன் முகத்தில் சிறிய புன்னகை மலர்கிறது.  கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்ட அவன் அப்படியே உறங்கிப்போகிறான். 

*** 

ரோகணம், இலங்கை 

பிங்கள, ஐப்பசி 8 – அக்டோபர் 23, 1017 

கைகள் களைத்துப்போகின்றன முருகேசனுக்கு. அதைப்பற்றி அவனது உடல் தெரிவிக்க முயன்றாலும், அவனது மனமும், மூளையும் அதைத் திரைபோட்டுத் தடுத்த விடுகின்றன.  இதுவரை எத்தனை சோழ வீரர்களை மாரியம்மனுக்குக் காணிக்கையாக்கினோம் என்ற கணக்கை நினைத்துப் பார்க்கவும் அவனுக்கு நேரமில்லாது போகிறது. 

அவனது ஒரே நோக்கம் – பாண்டியப் பொக்கிஷங்களைக் கவர்ந்துசெல்ல வந்திருக்கும் சோழர்களைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே.  வேறு எந்த நினைப்பும் – உடல் சோர்வோ, வலியோ, களைப்போ, தன் உயிரின்மீது பற்றோ, குடும்ப நினைப்போ – அவனுக்கு இல்லவே இல்லை… 

…கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முன்னர் விக்கிரம பாண்டியன் அவனைச் சந்தித்து, பாண்டியப் பொக்கிஷத்தைக் காப்பாற்ற அவனுக்குத் துணையாக மூவாயிரம் பாண்டிய வீரர்களை விட்டுச் சென்றவுடன், பொக்கிஷத்தைக் காப்பாற்ற அவர்கள் துணைகொண்டு பெரிய காப்புக் கட்டுமானம் செய்ததுதான் அவன் முதலாவதாகச் செய்த பணி. 

நூறடி விட்டமும், இருபத்தைந்தடி ஆழமும் உள்ள ஒரு பெரிய பள்ளம் தோண்டி, அதற்குள் செல்ல சிக்கலான ஒரு வழி அமைத்தான். அந்தப் பள்ளத்திற்கு கருங்கற்களால் சுவர்களும், தரையும், மேல் தளமும் கட்டி, நடுவில் பதினைந்தடி அகலத்தில் ஆறு பட்டை உள்ள ஒரு அறை கட்டி, அந்த அறையில் பாண்டியப் பொக்கிஷங்களை வைத்து மறைத்தான். ஓரொரு பட்டையிலும் வெளியே செல்ல சுரங்க வழிகள் அமைத்தான். பொக்கிஷ அறை கீழே இருப்பது தெரியா வண்ணம், அந்த அறையில் மேல் தளத்தில் ஒரு சிறிய சிவன் கோவில் அமைக்கப்பட்டது. 

அந்தச் சுரங்கப் பாதைகள் ஒன்றை ஒன்று மூன்று முறை சுற்றி வந்து பிறகு தனித் தனியாக வெவ்வெறு திசையில் பிரிந்து சென்றன. சில வழிகள் ஒன்றோடு ஒன்று பதினைந்து அடிக்குப் பதினைந்து அடி அகலமான அறைகளில் சந்தித்தன. கடைசியில் இரண்டே வழிகள் வெளியில் வந்தன. ஒன்று முருகேசனின் குடிசைக்கும், இன்னொன்று, ஒரு சிறிய மண்டபத்தின் இரகசிய அறைக்கும் சென்றன. வழி தெரியாதவர் சுரங்கப் பாதையில் நுழைந்தால் வழி தவறித் திண்டாடவேண்டும் என்றே குழப்பான வகையில் அவை கட்டிப்பட்டிருந்தன. 

சுரங்கப் பாதையும், ஒருவர் செல்லும் அளவுக்கே இருந்தபடியால் உள்ளே வருபவர் எவராக இருந்தாலும், சுரங்கப் பாதைகள் சந்திக்கும் அறையில் தாக்கிக் கொல்லப்படுவது எளிது. அது மட்டுமன்றி சுரங்கப் பாதையை அடைத்துக் கொண்டு காவலாக நின்று விட்டால், அவர்களைத் தாக்கிக் கொன்று கீழே வீழ்த்தினால்தான் மேலேசெல்ல இயலும். கடைசியில் அவர்கள் தொடர்ந்து செல்ல இயலாதவாறு வழியும் அடைக்கப்பட்டுவிட ஏதுவாகும். எனவே, நூற்றுக்கும் குறைவான வீரர்களே இறுதி நிலையில் பொக்கிஷத்தை நன்கு காவல்காக்க முடியும். 

இந்த அமைப்பைக் கட்டி முடிக்க பதிமூன்று மாதங்கள் ஆயின. விக்கிரம பாண்டியன் ஆறு மாதங்கள் முன்பு வந்து பார்த்துவிட்டு, முருகேசனைப் பாராட்டிவிட்டுச் சென்றிருந்தான். அப்பொழுது அவன் முகத்தில் கவலைக் கோடுகள் நிறைய இருந்ததைப் பார்த்துக் கவலையுற்ற முருகேசன், விசாரித்தபோது விக்கிரமபாண்டியன் சுரத்தில்லாமல்தான் பதிலளித்தான். 

"முருகேசா, இராஜேந்திரன் இலங்கையின்மீது படையெடுத்துவரத் தீர்மானித்து விட்டான்.  கிட்டத்தட்ட முந்நூறு நாவாய்கள் ரோகணத்தைச் சுற்றி வளைத்துக்கொள்ளும் என்று தெரிகிறது.  தொண்டித் துறைமுகம் நமது கைவிட்டுப் போய்விட்டது.  தொண்டிக்கு நான்கு கல் தூரத்திற்கு முன்னரே அனைவரும் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.  இப்பொழுது கொற்கைதான் நமது கைவசம் இருக்கிறது.  அதை முதலில் கைப்பற்ற இராஜேந்திரன் திட்டம் தீட்டியே நாவாய்களை அமைத்துவருகிறான் என்று ஒற்று கூறுகிறது. 

"கொற்கை பிடிபட்டால் பாண்டி நாட்டிலிருந்து இலங்கை வருவது குதிரைக் கொம்பாகிவிடும்.  சேரத் துறைமுகமான விழிஞத்திலிருந்துதான் வர இயலும்.  எனவே இராஜேந்திரன் கொற்கையைத் தாக்க முற்பட்டால் அங்கு குவிந்திருக்கும் பாண்டியப்படை முழுவதும் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள்.  உனது கடமை நமது பரம்பரைச் சொத்து இருக்குமிடத்தை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதுதான். நீ கட்டியிருக்கும் பாதாள அரணமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று பொக்கிஷ அறையில் மேல் தளத்தில் இருந்த சிவன் கோவிலில் வழிபட்டுவிட்டு, மேலும் இரண்டாயிரம் பாண்டிய வீரர்களையும் விட்டுவிட்டுச் சென்றான். 

தன் அரசனைச் சந்திக்கும் கடைசிச் சந்திப்பாக அது அமைந்து விடுமோ என்று முருகேசன் அஞ்சியபடியே நடந்து விட்டது. 

இராஜேந்திரனின் ஒற்றர்கள் தவறான தகவலை அனுப்பிப் பாண்டிய ஒற்றர்களைக் குழப்பி இருந்ததால், பாண்டியப்படை கொற்கையில் கட்டிப்போடப்பட்டது.  நாகைப்பட்டினத்திலிருந்து திரிகோணமலைக்கு இருநூறு நாவாய்கள் மூலம் நிறையச் சோழ வீரர்களை அனுப்பி ரோகணத்தைத் தாக்கினான் இராஜேந்திரன். 

அவனுடன் தோள்கொடுத்துச் சோழப் படைவீரர்களுடன் முன்னிருந்து இராஜாதிராஜன் வீரப் போர் புரிந்தான். தனக்குப் பிடித்த யானைப் படைகளை அணிவகுத்துப் போர்புரிந்து சிங்களப் படைகளைச் சின்னாபின்னாமாக்கினான். பாண்டியர்களின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றிச் சோழநாட்டிற்குக் கொண்டுவருவதும், வணிக நாவாய்களைக் காப்பாற்ற இலங்கையிலிருந்து தாக்கும் கடற்கொள்ளைக்காரர்களைப் பூண்டறுப்பதும் சோழர்கள் திட்டமாக இருந்தது. 

பொலனருவையைத் தாண்டியதும், சோழப்படைகள் இரண்டாகப் பிரிந்து தாக்கின.  ஒரு பகுதியை இராஜேந்திரன் நடத்திச் சென்று ஐந்தாம் மகிந்தனைச் சிறைப்பிடித்தான்.  இன்னொரு பகுதியை நடத்திச் சென்று இராஜாதிராஜன் பாண்டியப் பொக்கிஷத்தைக் கைப்பற்ற விழைந்தான். கடைசியில் ஒரு சிற்றூரில் ஐயாயிரம் பாண்டிய வீரர்கள் முகாமிட்டிருப்பதை ஒற்றர்கள் வாயிலாக அறியவே, அங்குதான் பாண்டியரின் பரம்பரைச் சொத்து இருக்கக்கூடும் எனத் தீர்மானித்து இராஜாதிராஜன் அவர்களைத் தாக்க அங்கு விரைந்தான். 

அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர் பாண்டியர்கள்.  இதுவரை அவன் காணாத வகையில் அவர்கள் சிறப்பாகப் போரிட்டனர். அவர்களின் திறமை இராஜாதிராஜனை மிகவும் கவர்ந்தது.  அதிலும் குறிப்பாக அவர்களுக்குத் தலைமை தாங்கிப் போரிட்ட வீரனின் மன உரம் அவனுக்கு மிகவும் பிடித்தது.  இவன் எதிரியாக இல்லாமல் நண்பனாக இருந்தால் எப்படி இருக்கும் என்றும் எண்ண வைத்தது. 

ஏழு மணி நேரம் நடந்த போரில் பாண்டியப்படையில் பெரும்பகுதி அழிக்கப்பட்டது.  அதற்காகச் சோழவீரர்கள் கொடுத்த விலை மிகமிக அதிகம். இரவு வந்ததும் சண்டை நிறுத்தப்பட்டது… 

…கடைசி நிலைக்குத் முருகேசன் தள்ளாடியவாறே வந்துசேர்கிறான்.  இரத்தக் காயங்கள் அவனது உடலைச் சிவப்பாக ஆக்கி இருக்கின்றன. பொக்கிஷ அறைக்குச் செல்லும் சுற்றுப் பாதைச் சுரங்கத்தின் கடைநிலை அறையை அடைகிறான். அங்கே அவன் தேர்வு செய்த வீரர்கள் இருபத்தைந்து பேர் இருக்கின்றனர். அவனைக் கண்டதும் அவர்கள் மரியாதையுடன் ஓடிவந்து தாங்கிப் பிடிக்கின்றனர். 

"முருகேசரே, என்ன ஆயிற்று?" என்று கேட்டபடியே தலைமைவீரன் அவனுக்குக் குடிநீரை அளிக்கின்றான். மடக், மடக்கென்று முருகேசன் தண்ணீரைக் குடிக்கிறான். 

"நம் பாண்டி நாட்டிற்காக நமது உயிரைக் கொடுக்கும் தருணம் வந்துவிட்டது. சோழர்கள் சுரங்கப் பாதையில் நுழைந்துவிட்டனர். நமது முதல், மற்றும் இடைநிலை வீரர்கள் அவர்களுடன் போரிட்டு சுரங்கம் முழுவதும் அவர்களின் பிணக்குவியல்களை நிரப்பி வீரசுவர்க்கம் அடைந்தனர். இனி நாம் மட்டும்தான் இருக்கிறோம். இன்னும் எத்தனைநேரம் நமக்கு வாழ்வு இருக்கிறதோ தெரியாது. ஆயினும் நமது இறுதிமூச்சு இருக்கும்வரை போராடுவோம்" என்று உறுதியான குரில் தெரிவிக்கிறான். 

அனைவருக்கும் இளைஞனாக இருக்கும் ஒரு வீரனைப் பார்த்துக் கண்ணசைக்கிறான். அந்த வீரன் தன் இடுப்பில் கட்டியிருக்கும் சிறிய மூட்டையைப் பிரிக்கிறான். 

"செல்லக்கண்ணா, நீதான் அனைவருக்கும் இளையவன்.  ஆகவே, நீ எங்கள் அனைவருக்கும் வாக்கரிசியைக் போட்டுவிட்டு இரகசிய வழியாகத் தப்பிச்செல். எப்படியாவது உன் உயிரை நீ பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  நமது அரசருக்கு நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றினோம் என்று தெரிவிப்பது உனது பொறுப்பு!" என்று கரகரத்த குரலில் கூறுகிறான். 

செல்லக்கண்ணனின் முகத்தில் சோகம் ஒருகணம் நிழலாடுகிறது.  ஒன்றுமே சொல்லாமல் முருகேசனில் துவங்கி, அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரின் வாயிலும் சிறிது அரிசியைப் போடுகிறான். அனைவரும் அப்படியே அந்த அரிசியை விழுங்குகின்றனர். முருகேசன் தன் இடுப்பில் இருக்கும் ஒரு சாவியை எடுத்து செல்லக்கண்ணனிடம் நீட்டுகிறான். 

அறையில் இரண்டடி உயரத்தில் இருக்கும் ஒரு சிறிய கதவில் தொங்கும் பூட்டைத் திறக்கிறான் செல்லக்கண்ணன்.  கதவைத் திறந்து ஒரு ஆளே தவழ்ந்து செல்லும் அளவுக்கு இருந்த சுரங்கத்தில் நுழைகிறான் அவன்.  உடனே முருகேசன் கதவைச் சாத்தித் தாளிட்டு விடுகிறான். 

ஆளரவம் கேட்கிறது. 

"நீங்கள் ஐவரும் உயிருடன் இருக்கும் வரை உங்களைத் தாண்டி யாரும் மேலே செல்லக் கூடாது!" என்று ஆணையிட்டு விட்டு, மீதி இருப்பவரை ஆறாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வொரு வழியாகச் செல்லச் சொல்லிவிட்டு, தானும் ஒரு பிரிவுடன் செல்கிறான் முருகேசன்.  பொக்கிஷ அறைக்குச் செல்லும் ஒவ்வொரு கதவுக்கும் காவலாகத் தாங்கள் இருக்கப் போகிறோம் என்பது பேசாமலே அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். 

அவர்கள் செல்லவும், முதல் சோழ வீரன் தலையை நீட்டவும் சரியாக இருக்கிறது.  நீட்டிய தலை உடனே ஒரு பாண்டிய வீரனால் துண்டிக்கப்படுகிறது. 

பதினைந்து நிமிடங்கள் கழிகின்றன. 

இருபத்தெட்டு சோழ வீரர்களின் உயிரை எடுத்த பின்னர் அந்த ஐந்து பாண்டிய வீரர்களும் பலியாகிறார்கள். 

உள்ளே வந்த சோழ வீரர்கள் அந்த அறையிலிருந்து ஆறு சுரங்கங்கள் பிரிவதைக் கண்டு திகைக்கின்றனர். அவர்களும் ஒருவர் பின் ஒருவராக ஆறு சுரங்கங்களிலும் செல்ல ஆரம்பிக்கிறார்கள். 

அதற்கு ஆறு மணி நேரம் கழித்து நூற்று இருபது வீரர்களை இழந்த பின்னர் பாண்டியர்களின் பரம்பரைச் சொத்து சோழர்வசம் வந்து சேருகிறது. முருகேசன் மட்டுமே இருபது பேரை எமனுலகுக்கு அனுப்பிய பின்னர் கடைசிப் பாண்டிய வீரனாக இறக்கிறான். 

நான்கு நாள்களுக்குள் அவன் கட்டிய அரண் தகர்க்கப்பட்டு பொக்கிஷங்கள் நிலமட்டத்திற்கு வந்துசேருகின்றன. இதை மேற்பார்வை பார்த்த இராஜாதிராஜனின் கவனத்தைக் கவருகிறது பாண்டியரின் அரியாசனத்திற்கு அருகில் கிடந்த – இடது கை, கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டு, ஒரு கண் குத்தப்பட்டு, மார்பில் எண்ணற்ற விழுப்புண்களுடனும், வலது கையில் வாளுடனும் கிடந்த – முருகேசனின் உயிரல்லா உடல். 

பாண்டியர் படைத்தலைவன் அவன்தான் என்று இராஜாதிராஜன் கண்டுகொள்கிறான். 

'வீரனே!  நீ யாரோ, எவனோ, உன் பெயர் என்னவோ, எனக்குத் தெரியாது.  உன் வீரத்தால் என் மனதை வென்று விட்டாய்!  இப்படிப்பட்ட வீரனான நீ சோழநாட்டுக்கு நண்பனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! உன் கடமையைச் செய்துவிட்ட நிம்மதியுடன் நீ போய்ச் சேர்ந்துவிட்டாய்! நானும் உன்னை மாதிரியே போரில் மார்பில் விழுப்புண் ஏந்தித்தான் உயிர்நீக்க விரும்புகிறேன். வயதாகி, நலங்குன்றி, பார்வை மழுங்கி, நடைநழுவி, மற்றவர் பரிதாபப்படும் அளவுக்கு முதியவனாகி, நடைப்பிணமாகி இறக்க விரும்பவில்லை' என்று இராஜாதிராஜன் மனதிற்குள் சொல்லிக்கொள்கிறான். 

கணக்குப் பார்த்தால் ஐயாயிரம் பாண்டிய வீரர்களுடன் பதிமூவாயிரம் சோழ வீரர்கள் இப்போரில் உயிர்துறந்திருக்கிறார்கள் என்று இராஜாதிராஜன் அறிந்துகொள்கிறான். 

இதுவரை நடந்த எந்தப் போரிலும் சோழவீரர்களுக்கு இந்த அளவு விகிதத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதில்லை. தான் முதலில் கலந்துகொண்ட போரில் ஒரு சோழவீரன்கூட இறக்காமல் அமரபுஜங்கனை தனது பாட்டனார் வென்றதை நினைவுகூர்கிறான். 

இங்கே வீரமாகப் போரிட்டு அந்தத் தோல்வியை நிறைவு செய்துவிட்டனர் பாண்டியர் என்றும் மனதில் சொல்லிக்கொள்கிறான்.  இங்கு அவர்கள் போரிடவில்லை, தங்கள் நாட்டிற்காக ஒரு வேள்வி இயற்றி, தங்கள் உயரையே அவ்வேள்வியில் அவியாகச் சொரிந்திருக்கிறார்கள் என்றே அவன் நம்புகிறான்.  எனவே இங்கு உயிரழந்த அனைவருடைய உடல்களையும் எடுத்துவந்து முறையாக ஈமச் சடங்குகள் செய்யவேண்டும் என்று அந்தணர்களை வரவழைக்கிறான். 

அப்பொழுது சோழ வீரர்கள் ஒரு இளைஞனை அங்கு இழுத்துவருகிறார்கள். அவனைப் பார்த்தால் பாண்டிநாட்டான் போல இருக்கிறது. 

"அரசே!  இவன் ஒரு மரத்தின்பின் மறைந்து நின்று இங்கு நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை ஒற்றனோ என்று ஐயப்பட்டு இழுத்த வந்தோம்!" என்று பணிவுடன் தெரிவிக்கின்றனர் சோழ வீரர்கள். 

அவனை உற்றுநோக்குகிறான் இராஜாதிராஜன். புலி தனது இரையைப் பார்ப்பதுபோல இருக்கிறது அவனது பார்வை. 

"யாரடா நீ?" என்று உறுமுகிறான். 

சிறிதும் அச்சப்படாமல் அவனை நோக்குகிறான் அந்த இளைஞன். அவன் பார்வையில் இருக்கும் வெறுப்பை இராஜாதிராஜனால் புரிந்துகொள்ள முடிகிறது. இவன் ஒற்றனாக இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வருகிறான். ஒற்றன் என்றால் அவனை நேருக்கு நேராகப் பார்க்கமாட்டான். தவிரவும் இவ்வளவு வெறுப்பைத் தன் கண்களில் காட்டியிருக்கவும் மாட்டான். எப்படியாவது தப்பித்துச் செல்வதில்தான் கவனத்தைச் செலுத்தி இருப்பான்.  இப்படி அசட்டையாக இருந்து எதிரிகளிடம் மாட்டிக்கொண்டிருக்கவும் மாட்டான். 

"நான் பாண்டிய வீரன்.  உங்களில் ஒருவரைக்கூட எமனுக்கு அனுப்பிய மகிழ்வுடன் என் நண்பர்களுக்குத் தோள்கொடுத்து வீரமரணம் அடைய இயலாத ஒரு நற்பேறற்றவன். எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் உங்களில் யாருடனாவது போரிட்டு வீர மரணம் அடைய விரும்புகிறேன்" அவனது குரலில் ஒரு கலக்கமோ அச்சமோ இல்லை. 

"உன் பெயரென்ன?" 

"செல்லக்கண்ணன்." 

"உன் ஊர்?" 

"நெல்லை". 

"தென்பாண்டி நாட்டானா?" 

"ஆமாம்!" 

"உன் நண்பர்களுடன் சேர்ந்து வீரமரணம் எய்தவில்லையே என்று வருந்தினாயே, பின் ஏன் ஒரு மரத்தின் பின்னர் மறைந்து பேடியாக ஒற்றனைப்போல வேவுபார்த்துக் கொண்டிருந்தாய்?" என்று நகைக்கும் இராஜாதிராஜன், தன் இரையைச் சீண்டி விளையாடும் புலியைப் போலத்தான் பாண்டிய வீரனுக்குத் தென்படுகிறான். 

"இங்கு பாண்டிநாட்டின் பரம்பரைச் சொத்துக்கு என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை அறிந்து என் மன்னரிடம் தெரிவிப்பதற்காக என் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டார் எங்கள் தலைவர் முருகேசன், பாண்டிய மன்னர்களின் பரம்பரை மெய்காப்பாளர் – பாண்டிய மன்னர் அமரபுஜங்கர் இறந்தவுடன் உங்கள் பாட்டனாரின் சிறையில் தன் தலையைத் தானே கொய்துகொண்டு வீரமரணம் எய்திய திருமாறனின் தம்பி. 

"அவரது உடலை நீங்கள் தீக்கிரையாக்குவதைப் பார்த்து, எனது இறுதி மரியாதையை அவருக்குத் தெரிவித்துவிட்டுச் செல்லலாம் என்று இருந்தேன். எனது கவனக் குறைவால் பிடிபட்டுவிட்டேன்.  இனி நான் உயிருடன் பாண்டிநாடு திரும்பமுடியாது என்று முடிவாகி விட்டது. எனவேதான் ஒரு வீரனாக என் உயிரைவிடத் தீர்மானித்துவிட்டேன். நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் என்னுடன் போரிட அனுப்புங்கள். என் கதையும் ஒரு வீரனுடையதாகவே முடியட்டும். சொக்கநாதரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறேன்." 

இராஜாதிராஜன் கடகடவென்று சிரிக்கிறான். இளவரசன் முன் சற்றும் பயமில்லாமல் எதிர்த்துப் பேசுகிறானே என்று அவனைச் சாடச்சென்ற சோழ வீரனையும் தடுத்து நிறுத்துகிறான். 

"உன் வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற இயலாது. செல்லக்கண்ணா!  உன் தலைவர் சொன்ன கட்டளையை நீ நிறைவேற்றுவாயாக. உன்னை விடுவிக்கிறேன். சோழ வீரர்கள் உன்னைப் பாண்டிநாட்டுக் கடற்கரை அருகில் ஒரு படகில் இறக்கி விடுவார்கள். 

"உன் மன்னரிடம் பாண்டியரின் பரம்பரைச் சொத்து சோழ இளவரசன் இராஜாதிராஜன் கைக்கு வந்துவிட்டதாகவும், அவை கோப்பரகேசரி இராஜேந்திரருக்கு காணிக்கையாகக் கொடுக்கப்படும் என்றும் கூறு. முடிந்தால் சோழநாட்டுக்கு வந்து மீட்டுக்கொள்ளச் சொன்னதாக நான் உனது மன்னருக்குச் சேதி அனுப்பியதாகவும் சொல்லு. 

"இந்தப் போரில் வீரமரணம் எய்திய பாண்டிய வீரர்களைப் பாராட்டி முறைப்படி ஈமச் சடங்குகளுக்கு ஏற்பாடு நான் செய்ததாகவும் கூறு. உன்னை யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்" என்று புன்னகைத்த இராஜாதிராஜன், "ஏனாதியாரே!  எனது கட்டளையை நிறைவேற்றும்.  ஈமச் சடங்கை இவன் கண்ணுறட்டும். அதன்பின்னர் எந்த ஊறும் வராமல் இவனைப் பாண்டிநாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள்" என்று முடிக்கிறான். 

செல்லக்கண்ணனை சோழ வீரர்கள் இழுத்துச்செல்கிறார்கள். சிறிது நேரம் கழித்து தன் பாசறைக்குச் செல்கிறான் இராஜாதிராஜன்.  ஐயாயிரம் பாண்டிய வீரர்களை அழிக்கப் பதிமூவாயிரம் சோழவீரர்களை காவுகொடுத்ததைப் பற்றித் தன் தந்தைக்கு எப்படிச் சொல்லப் போகிறோம் என்று யோசிக்கிறான். 

சுரங்கப் பாதையை எப்படி அரணாக அமைத்து தன் பலத்தை முருகேசன் பெருக்கிக் கொண்டான் என்று நினைக்க நினைக்க அவனுக்கு வியப்பாக இருக்கிறது. சிவாச்சாரி இலங்கைக்கு வந்திருந்தால் உயிர்ச் சேதத்தைத் தவிர்க்க ஏதாவது வழி சொல்லியிருப்பாரோ என்றும் எண்ணிப் பார்க்கிறான். அவனை தஞ்சைக்குக் காவலாகவும், தான் திரும்புவதற்குள் ஜெயங்கொண்ட சோழபுரத்தைக் கட்டிமுடிக்குமாறும் ஏன் தனது தந்தை ஆணையிட்டார் என்பதையும் நினைத்துப் பார்க்கிறான். 

*** 

பொலனருவைக்கு அருகே, இலங்கை 

பிங்கள, கார்த்திகை 12 – நவம்பர் 27, 1017 

கெட்டுப்போன சோற்றின் வாடையைத் தாங்காமல் முகம் சுளிக்கிறான் மகிந்தன்.  அருகிலே அவன் மனைவி எடுத்திருந்த வாந்தி அந்த வாடையைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.  அவனது மகன் கசபனை நம்பிக்கையானவர்கள் மூலம் அரண்மனையை விட்டு அனுப்பிய மூன்று நாழிகைக்குள் ரோகணத்தில் அவனும், அவனது குடும்பமும் இராஜேந்திரனால் சிறைப் பிடிக்கப்பட்டார்கள்…  

முதன் முதலாக இராஜேந்திரனைப் பார்த்த மகிந்தனுக்கு ஒரு புலியிடம் மாட்டிக்கொண்ட மானைப் போலத்தான் இருந்தது.  எவனிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்தானோ, கடைசியில் அவனிடமே மாட்டிக்கொண்டதை நினைத்தால் எரிச்சலாகவும் இருந்தது.  பதினோரு வருட ஆட்சிக்குப் பிறகு இராஜராஜருக்குப் பயந்து அனுராதபுரத்திலிருந்து பொலனருவை – பின்பு பொலனருவையிலிருந்து ரோகணத்திற்கு ஓடி ஒளிந்த அவனும் இருபத்திநான்கு ஆண்டுகள் அங்கேயே இருந்துகொண்டு சோழர்களுக்குப் பலவிதமான தொல்லைகளையும் கொடுத்துப் பார்த்தான்.  பாண்டியர்களுக்கு உதவி செய்தும், சோழ வணிக நாவாய்களைக் கடலில் மடக்கி மூழ்கடித்தும், கொள்ளை அடித்தும் இடைவிடாது சோழர் காலில் குத்தி உட்சென்ற முள்ளாக இருந்துவந்தான். 

இராஜேந்திரனுக்குப் பயந்து எங்கு ஓட முடியும்!  தெற்கே பெருங்கடலைத் தவிர வேறு என்ன இருக்கிறது!  நாற்பத்தேழு வயதிலும் கட்டிளங்காளையாகத்தான் தென்பட்டான், இராஜேந்திரன். அவனது மகன் இராஜாதிராஜன் பாண்டியரின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி விட்டான் என்று சோழக் காவலர்கள் பேசியதிலிருந்து அறிந்துகொண்டான் 

இலங்கையையும் இழந்து, இப்பொழுது குடும்பத்துடன் சோழர்களின் கைதிகள் ஆனதுதான் மிச்சம் என்று நினைக்கிறான் மகிந்தன். ஆளரவம் கேட்கிறது. மூன்று வீரர்களுடன் ஒரு சோழ அதிகாரி வருகிறான். அவர்களைப் பூட்டி வைத்திருந்த கதவு திறக்கப்படுகிறது. 

அறைக்குள்ளிருந்து வரும் கெட்ட வாடையின் தாக்குதலால் மூக்கைச் சுளித்த அவன், தன்னுடன் வந்தவனிடம் ஏதோ கோபமாகக் கத்துகிறான். அவனருகில் இருந்த வீரன் பணிவுடன் தலையாட்டியவாறே ஓடுகிறான். 

 "நான் சோழ நாட்டின் இலங்கைப் பகுதி ஓலைநாயகம். உம்மையும், உமது குடும்பத்தாரையும் சோழநாட்டின் அமைதியைக் குலைக்கும்வண்ணம் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டி, அந்தக் குற்றத்தை விசாரிக்க தஞ்சைக்கு அழைத்து வரும்படி கோப்பரகேசரி இராஜேந்திரசோழ தேவரின் ஆணை. உமது மனைவியார் உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்துகொண்டோம். இந்த இடத்தைச் சுத்தம்செய்ய ஆள் வந்துசேரும். உமது மனைவியாரின் உடல்நலத்தைக் கவனிக்க மருத்துவருக்குத் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறோம். விரைவில் வந்துவிடுவார்; நாளை பயணம் துவங்கும்.  ஏதாவது கேட்க வேண்டுமா?" சுருக்கமான குரலில் அறிவிக்கிறான் அந்தச் சோழ அதிகாரி. 

"எமது தளபதிகள், அதிகாரிகள்?" 

"சோழ நாட்டின் அமைதியைக் குலைத்ததற்காகவும், அளவில்லாப் பொருட்சேதம் ஏற்படுத்தியதற்காகவும், அவர்களுக்குக் கொடுத்த மரண தண்டனை இன்று காலைதான் நிறைவேற்றப்பட்டது." 

*** 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com