’’புஷ்பா தி ரைஸ்’’ பட விமர்சனம்!

’’புஷ்பா தி ரைஸ்’’ பட விமர்சனம்!

– ராகவ் குமார்.

பழைய கட்டிடங்களை புதியது போல காட்ட பெயிண்ட், சுண்ணாம்பு அடிப்போம். ஆனால் உள்ளே கட்டிடம் பழையது போல தான் இருக்கும்.எந்த நேரத்தில் எது தலையில் விழுமோ என்ற ஒரு வித பயம் இருக்கும். இதே போல பழைய சிரஞ்சீவி, நம்ம பாலயா (பாலகிருஷ்ணா )படங்களை கொஞ்சம் மாற்றி மசாலா தூக்கலாக சொன்னால் அதுதான் புஷ்பா. ஆனால் வேகமாக நகரும் திரைக்கதை இதையெல்லாம் மறக்க செய்வது உண்மைதான். திரையில் தெறிக்கும் ரத்தம், கலர் கலர் காஸ்டியும்,கத்தி பேசும் வில்லன்கள் மற்றும் ஹீரோ, குத்து பாட்டு என தெலுங்கு படத்திற்கே உரிய கிளிஷே களுக்கு பஞ்சமில்லை

திருப்பதி சேஷாஷல மலைகளில் வளரும் செம்மரங்களுக்கு உலகளாவில் டிமாண்ட் இருக்கிறது. கொண்டல் ரெட்டியும் அவரது சகோதரர்களும்,இந்த மரங்களை கடத்தி விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களிடம் கூலி வேலை செய்யும் புஷ்பா(அல்லு அர்ஜுன் ) இவர்களின் மரங்கள் போலீசிடம் சிக்காமல் பாதுகாக்கிறான். இதனால்கொண்டா ரெட்டியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறான்.தொழில் போட்டியில் மங்களா சீனு என்பவனின் மச்சினனை புஷ்பா கொலை செய்து விட, மங்களா சீனுவின் தரப்பு கொண்டல் ரெட்டியை தீர்த்து கட்டுகிறது.ஒரு வழியாக பிரச்சனைகள் முடிந்து செம்மர கடத்தல் குழுவிற்கு புஷ்பா தலைவன் ஆகும் நேரத்தில் அந்த ஊருக்கு வரும் போலீஸ் அதிகாரியால் (பகத் பாசில் )பிரச்சனை வருகிறது.

அதிகாரிக்கும் புஷ்பாவிற்கும் ஆரம்பிக்கும் பிரச்சனைகளுடன் முதல் பகுதி படம் முடிவடைக்கிறது. பழைய கதை போன்று இருந்தாலும், திரைகதையில் வேகம் இருப்பதற்கு டைரக்டர் சுகுமாரை பாராட்டலாம்.அல்லு அர்ஜுன் பல்வேறு காட்சிகளில் ஒரே போன்று முக பாவனைகளையும் உடல் மொழியையும் தருகிறார். ராஷ்மிகா மந்தனா அழகும், ஏக்கமுமாக நடித்து இருக்கிறார். காதலை மனதில் வைத்து கொண்டு ஏங்கு வதும், ஊருகுவதும் என அளவான நடிப்பை தந்துள்ளார்.நடிப்பில் அனைவரையும் விட பிரகாசிப்பது பகத் பாசில்தான். சில காட்சிகள் வந்தாலும் மிரட்டி இருக்கிறார்

.வயிற்றில் பின் பக்கமாக பேசிக்கொண்டே குத்துவது அடித்து உயிருடன் குழிக்குள் தள்ளுவது,ப்ளேடை வாய்க்குள் சுழட்டி எடுப்பது என  மனவாடுகளின் அலப்பறைக்கு அளவே இல்லை. படத்தில் நடக்கும் சில காட்சிகள் கதையின் களம் திருப்பதியா அல்லது தென் ஆப்பிரிக்காவா என்ற சந்தேகத் தை ஏற்படுத்துவது போல் உள்ளது. சமந்தாவின் ஆட்டம் கவர்ச்சியின் உச்சம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் விவேகாவின் வரிகளும் சிறப்பாகவே உள்ளது.மிரேஸ்ல்லா கூ பாவின் ஒளிப் பதிவில் திருப்பதி மலையின் அழகு ரம்மியமாக உள்ளது. மதன் கார்க்கியின் வசனங்கள் ஷார்ப். ஒவர் பில்ட் அப்யையும் படத்தின் நீளத்தையும்  குறைத்து யிருந்தால் புஷ்பா இன்னமும் பிரமாதமாக மலர்ந்து திருக்கும்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com