நேர்காணல்: காயத்ரி
தமிழகத்தில் மழைக்காலம் வந்தாலே மனதில் சட்டென்று தோன்றுபவர், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் திரு. ரமணன்.
‘’கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்..’’ என்று கணீர் குரலில் அவர் வானிலை அறிவிப்பு செய்யும்போது, நம் மனதுக்குள் அப்போதே சாரலடிக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுநிலை என்பது போன்ற வானிலை குறித்த வார்த்தைகள் அவர் மூலமாகவே பிரபலமாகியது.
இப்போது என்ன செய்கிறார் ரமணன்? அவரிடம் சிறப்பு பேட்டிக்காக, மேற்கு மாம்பலத்திலுள்ள அவரது இல்லத்தில் கல்கி ஆன்லைனுக்காக பிரத்தியேகமாக சந்தித்துப் பேசினோம்.
’’தமிழர்கள் மத்தியில் வானிலை மீதான ஆர்வம் அதிகரித்து வருவது… மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது’’ என்று புன்சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் ரமணன்.
’’இன்றைக்கு ஆன்லைன் டிஜிட்டல் யுகத்தில் வானிலை அறிக்கை தர நிறைய பேர் தயாராகியுள்ளனர்.. ஆனால், நான் பொறுப்பில் இருந்தபோது, வானிலைச் செய்திகளை எளிமையாக.. நுட்பமாக தருவதற்கு ரொம்பவே மெனக்கீடு செய்ய வேண்டியிருந்தது. ’வானிலை அறிக்கையில் இன்று மழை பெய்யும் என்றால், நிச்சயமாக பெய்யாது’’ என்று பலர் ஜோக் அடிப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.. சட்டென்று மாறும் வானிலையை துல்லியமாக கணக்கிட்டு சொல்லும்போது, நம் கணிப்பு சரியாகவே இருக்கும். வானிலையை. தமிழ் பெயர் படுத்த ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. அதுதான் எனக்கு சவாலான விஷயம்! இதற்காக இலங்கை… அமெரிக்கா என்று… தமிழ் அறிஞர்களை சந்தித்து..அருஞ்சொல் அகராதி உருவாக்கினேன். இதற்கான முயற்சியில் வெற்றி பெற்றது மனசுக்கு நிறைவாக உள்ளது’’
‘’தினமும் வானிலையை எப்படி கணிக்கிறார்கள்?
‘’வானிலை கணிப்பு என்பது பெரிய கம்பசூத்திரம் கிடையாது.. வெப்பம், காற்றின் அழுத்தம்… காற்றின்.. வேகம்..இவற்றை சரியாக, துல்லியமாக கணிக்க தெரிந்திருக்க வேண்டும்… தமிழகம் மட்டும் அல்ல…நாடு முழுவதும் மழைமானி வைக்கப்பட்டிருக்கும்.. அதன் தரவுகளை சேகரித்து கோர்வையாக சேர்த்து மதிப்பிட்டு..சில நவீன யுக்திகளை பயன்படுத்தி வானிலையை கணித்து வருகிறார்கள்.. அந்த தரவுகளின் அடிப்படையில் கணிக்கப் படுவதால்..கடைசி நிமிடங்களில் சில மாறுதல்கள் இருக்கும்.. அவ்வளவு தான்…ஒரே நாளில் புயல் வந்து விடாது… கடலில் தாழ்வு நிலை உருவாகும் போதே கணித்து விடலாம்… தென் சீனக் கடலில் ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள் தான் இந்திய தீபகற்பத்தின் வானிலையை நிர்ணயிக்கிறது.. அங்கு உருவாகும் தாழ்வு நிலை.. காற்றின் அழுத்தத்தால் வலுப்பெற்று அந்தமானை கடந்து கிழக்கு கடற்கரையோரம் வருகிறது.. இது சற்று வலு குறைந்தால் கரையை கடந்து..சமவெளி நிலப்பரப்பின் ஊடாக அரபிக்கடல் சென்று சமயங்களில் மேற்கு கடலோர பகுதிகளை தாக்குகிறது.. இன்னும் வலுப்பெற்று வளைகுடா நாடுகளுக்கு சென்று விடுகிறது.’’ -.விரிவாக விவரிக்கிறார்… ரமணன்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏப்ரலில் இருந்து அக்டோபர் வரை மேற்கு திசை காற்றையும்… அக்டோபர் மத்தியில் இருந்து கீழ் திசை காற்றையும் கணித்தாலே போதும்..மழை நிலவரம் தெரிந்து விடும்.. அவ்வளவு தான்… அதேசமயம், வங்கக் கடலில் உருவாகும் தாழ்வு நிலை எல்லாமே புயலாகி விடாது..சில கடலில் உருவாகி அங்கேயே வலுவிழந்து விடும். சிலது கரையை கடக்கும் போது வலுவிழந்து விடும்.. இன்னும் சிலது வலுவிழந்த படியே கரையை கடக்கும்.. இதனால் மழைப் பொழிவு இருக்கும்” என்ற ரமணன், தானே புயல்,..கஜா..நிஷா..போன்ற புயல்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து மனம் கனக்க விவரிக்கிறார்.
“புயல் கரையை கடந்த பிறகு.. வானிலை மைய ஊழியர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்வார்கள்.. மரம் முறிந்து கீழே விழுந்திருப்பதை வைத்தே புயல் எந்தளவு பாதிப்பு ஏற்படுத்தியுள்லது என்று கணக்கிட்டு விடலாம்…தானே புயல் கரையை கடந்தபோது, நான் கடலூர் மாவட்டத்தின் திருச்சோபுரத்திற்கு சென்றிருந்தேன். அந்த மக்கள் வானிலை எச்சரிக்கை தங்களை காப்பாற்றியதை கூறிய போது என் தொழில் மீது மேலும் மதிப்பு கூடியது. ‘’இன்னிக்கு என் குடும்பம் உசிரோட இருக்கிறதுக்கு நீங்கள் தான் காரணம்’’ என புதுச்சேரி மீனவர் கூறிய போது இந்த வாழ்க்கையின்..பணியின்.. மகத்துவத்தை புரிந்து கொண்டேன்’’ –ரமணணின் கன்னங்களில் கண்ணீர் துளிகள்..
’’இஸ்ரேல் நாட்டைப் போல நம் விவசாயம் மாற வேண்டும்..பருவ நிலைக்கு ஏற்ப.. தண்ணீர் வடியும் படி நீர் வழித்தடங்கள் அமைத்து பயிரிடலாம்… எல்லா துறைகளும் ஒன்றாக கைகோர்த்தால் பயிர்களை காப்பாற்ற முடியும். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கட்டமைப்பு வலுப்படுத்தினால் போதும்’
சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி, பள்ளிக் குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோ நீங்கள்தானே சார்? ஸ்கூல் லீவுக்கு நீங்கள் காரண்டியாச்சே?
’’பள்ளி விடுமுறைக்கும்.. எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. சத்தியம் செய்கிறார்..கல்வி அதிகாரியும்.. மாவட்ட ஆட்சியரும் எடுக்க வேண்டிய முடிவு அது’’.என்று கலகலவென்று சிரிக்கிறார்..
’’ஆனால்… பல பக்கங்களில் இருந்தும் தொலை பேசி அழைப்புகள் விடாமல் வந்து கொண்டேயிருக்கும்… தேர்வுகள்… பயணம்.. விழாக்கள் என்று எல்லாவற்றுக்கும் எங்களை கேட்பார்கள்… ’’சார்…இத்தானாம் தேதி.. மகனுக்கு…. மகளுக்கு திருமணம் செய்யலாம் என்று இருக்கிறோம்..அன்று மழை இருக்குமா?’’ என்று கேட்பார்கள்…. ’’இந்த ஊருக்கு செல்லலாம் என்று நினைக்கிறோம். அங்கு கிளைமேட் சரியாக இருக்குமா?’’ என்று விசாரிப்பார்கள். வானிலை கணித்து திருமண தேதி குறிப்பது எல்லாம்..வேற லெவல்… எங்களால் முடிந்தளவு பதில் தருவோம்...மழை காலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், எங்களுக்கு ஃபுல் வொர்க்கிங் டைம் அதுதான்! நாங்கள் லீவ் எடுக்காமல் அலுவலகம் வந்து விடுவோம். அதிலும் புயல் நேரங்களில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. பல்வேறு துறைகளுக்கும் தகவல் அனுப்பி கொண்டே இருப்போம்… வானிலை அறிக்கை.. எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கும்போது ஊருக்கு நாலு நல்லது பண்ணி இருக்கிறோம் என்ற நிம்மதி இருக்கிறது’’
பணி ஓய்வுக்குப் பிறகு இப்போது என்ன செய்கிறீர்கள் சார்?
தற்போது பணி ஓய்வுக்குப் பிறகும் பிஸியாகவே இருக்கிறேன். கல்லூரி.. பள்ளிகளில் வானிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நான் நினைத்தால் யூடியூப் சேனல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.. ஆனால் எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை.. வானிலை பற்றிய விழிப்புணர்வு வந்தால் போதும்.. வானிலை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு..வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. இஸ்ரோவில் இருந்து ஆய்வகங்கள் வரை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதனால், பிளஸ் டூ முடித்தவுடன் வானிலை பக்கமும் வாருங்களேன்… ஸ்டுடண்ட்டஸ்’’
மென்மையாக கைகுகுலுக்கி புன்சிரிப்புடன் விடைகொடுத்தார் ரமணன்.
வானிலை அறிக்கை குறித்த செய்திகளுக்கு தமிழ் வார்த்தைகள் உருவாக்கிய விதம் குறித்து ரமணன் விளக்கியதை இத்துடன் உள்ள வீடியோவில் காணுங்கள்..