

என்னைக்காவது நீங்க ரோட்டுல போகும்போது, வானத்துல பறக்குற விமானம் அப்படியே நகரமா ஒரே இடத்துல நிக்கிறத பாத்திருக்கீங்களா? இல்ல, டிவியில செய்திகள் பார்க்கும்போது ஹெலிகாப்டர் இறக்கை சுத்தாமலே அது பறக்குறத கவனிச்சிருக்கீங்களா? இதையெல்லாம் பார்க்கும்போது, "என்னடா இது அதிசயம். ஒருவேளை நம்ம வாழ்ற இந்த உலகம் நிஜம் இல்லையோ? கம்ப்யூட்டர் கேம் மாதிரி ஒரு 'சிமுலேஷன்' உலகத்துல வாழ்றோமோ?" அப்படின்னு பல பேருக்கு சந்தேகம் வந்திருக்கும்.
ஹாலிவுட்ல வந்த 'மேட்ரிக்ஸ்' (Matrix) படம் மாதிரி, இந்த உலகத்தை யாரோ கோடிங் பண்ணி இயக்குறாங்க, அதுல அப்பப்போ வர்ற பக்ஸ் (Bugs) அல்லது கோளாறுதான் (Glitch) இதெல்லாம்னு நெட்ல நிறைய பேர் பேசிக்கிறாங்க.
மூச்சு விடும் பூமி: மரமா? மாயமா?
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி கியூபெக் (Quebec) காட்டுல ஒரு வீடியோ வைரல் ஆச்சு. அதுல தரைப்பகுதி மனுஷங்க மூச்சு விடுற மாதிரியே மேலேயும் கீழேயும் ஏறி இறங்கும். இதைப் பார்த்துட்டு "பூமிக்கு உயிர் வந்துடுச்சு", "பூமித்தாய் கோபப்படுறா" அப்படின்னு ஏகப்பட்ட வதந்திகள். ஆனா, சயின்ஸ் என்ன சொல்லுதுன்னா, அது பலத்த காற்று அடிக்கிறப்போ நடக்குற ஒரு சாதாரண விஷயம்.
அந்த இடத்துல மரங்களோட வேர்கள் நிலத்தோட மேல் பகுதியில இருக்கிற பாசி மற்றும் மண்ணோட இறுக்கமா பின்னிக்கிட்டு இருக்கும். காத்துல மரம் ஆடும்போது, அதோட வேர்கள் அந்த மேல்புற மண்ணை அப்படியே தூக்கித் தூக்கி போடுது. அதுதான் பாக்க பூமி மூச்சு விடுற மாதிரி தெரியுது. இதுல எந்த மாயமும் இல்ல, மந்திரமும் இல்ல!
அடுத்து ரொம்ப ஃபேமஸான விஷயம், "உறைந்து போன ஹெலிகாப்டர்". ஒரு வீடியோல ஹெலிகாப்டர் பறந்துட்டு இருக்கும், ஆனா அதோட இறக்கைகள் சுத்தவே சுத்தாது. இது எப்படி சாத்தியம்? இங்கதான் கேமராவோட தொழில்நுட்பம் விளையாடுது. ஒரு கேமரா ஒரு நொடிக்கு இத்தனை போட்டோக்கள் எடுக்கும்னு ஒரு கணக்கு இருக்கு.
அதே மாதிரி ஹெலிகாப்டர் இறக்கை ஒரு நொடிக்கு இத்தனை முறை சுத்தும். இந்த ரெண்டு வேகமும் துல்லியமா ஒண்ணா சேரும்போது, கேமரா கண்ணுக்கு அந்த இறக்கை ஒரே இடத்துல நிக்கிற மாதிரி தெரியும். இது கேமரா பண்ற ட்ரிக் தானே தவிர, ஹெலிகாப்டர் பண்ற மேஜிக் கிடையாது.
அதே மாதிரிதான், கார்ல போகும்போது தூரத்துல போற விமானம் ஒரே இடத்துல நிக்கிற மாதிரி தெரியும். இதுக்கு பேரு 'பேரலாக்ஸ் எஃபெக்ட்' (Parallax Effect). நம்ம போற வேகமும், அந்த விமானம் போற திசையும், அது இருக்கிற தூரமும் சேர்ந்து நம்ம மூளையை ஏமாத்துற ஒரு கண்துடைப்பு வித்தை இது.
கடைசியா ஒரு மேட்டர். உங்களைப் மாதிரியே அச்சு அசல் இன்னொருத்தரை நீங்க என்னைக்காவது பார்த்திருக்கீங்களா? "ஏய்.. என் ஃப்ரெண்ட் மாதிரியே இருக்கே!"னு சொல்லுவோம்ல. இதுவும் மேட்ரிக்ஸ்ல காப்பி-பேஸ்ட் பண்ணும்போது நடந்த தப்புன்னு சொல்றாங்க. ஆனா உண்மை என்னன்னா, இது ஒரு மரபணு ரீதியான தற்செயல் நிகழ்வு. 700 கோடி மக்கள் இருக்கிற இந்த உலகத்துல, ஒரே மாதிரி முகவமைப்பு கொண்ட ரெண்டு பேர் இருக்கிறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. இதுவும் அறிவியல்தான்.
சோ, நம்ம கண்ணு பார்க்குற எல்லாமே உண்மை கிடையாது, அதே மாதிரி புரியாத எல்லாமே மர்மமும் கிடையாது. இயற்கையில நடக்குற சில விசித்திரமான நிகழ்வுகளுக்கும், நம்ம கேமரா பண்ற வேலைகளுக்கும் பின்னாடி தெளிவான அறிவியல் விளக்கங்கள் இருக்கு.
"வாழ்க்கை ஒரு சிமுலேஷன், இதுல கோடிங் எரர்"னு சொல்றதெல்லாம் கேக்க ஜாலியா இருக்கலாம். ஆனா, நிஜத்துல இது இயற்கையின் விளையாட்டு மற்றும் அறிவியலின் அதிசயம். அதனால, எதையும் நம்புறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சா, இந்த உலகத்துல பயப்பட எதுவுமே இல்ல. ஜாலியா வாழ்ந்துட்டு போவோம்.