
பயனர்கள் முன்பின் தெரியாதவுடன் பேச அனுமதித்து வந்த ஆன்லைன் அரட்டை தளமான Omegle, அதிரடியாக மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த தளத்தின் 14 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் Leif K-Brooks என்பவரால் தொடங்கப்பட்ட Omegle என்ற சமூக வலைதளம், பயனர்கள் தங்களைப் பற்றி எந்த விவரங்களையும் வெளிப்படுத்தாமல் இணையத்தில் எந்த நபர்களுடன் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் தளமாக இருந்து வந்தது. இந்த தளத்தில் ஒரு நபருடன் பேச நீங்கள் அதில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாகவே இந்த தளம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.
இதன் வளர்ச்சி கோவிட் பெருந்தொற்று காலத்தில் பெருமளவு அதிகரித்தது. ஏனெனில் அந்த சமயங்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்ததால், மற்றொருவருடன் பேசுவதற்கு இந்த தளம் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. இந்த தளத்தில் யாருடன் வேண்டுமானாலும் சேட் செய்யலாம், வீடியோ கால் மூலமாக முன்பின் தெரியாத நபர்களைத் தேர்வு செய்து பேசலாம்.
இதன் மூலமாக ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட மக்களை நாம் சந்தித்து நட்புறவாட முடியும். அதே நேரம் உலகெங்கிலும் உள்ள மக்களின் கலாச்சாரங்களை நாம் அறிந்துகொள்ள இது வழிவகை செய்யும் என நம்பப்பட்டது. இருப்பினும் இந்த தளத்தை பலர் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த தளத்தை பலர் இனவாதம், துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்காகப் பயன்படுத்தத் தொடங்கினர்.
கடந்த சில ஆண்டுகளில் இந்த தளத்தில் குழந்தைகள் சார்ந்த பாலியல் விஷயங்கள் மற்றும் நிர்வாண அரட்டைகள் பல மடங்கு அதிகரித்தது. இதனால் சீனாவில் இந்த தளத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. முதலில் 13 வயதிற்கு மேல் இருப்பவர் மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்ற நிலை மாறி, கடந்த 2022ல் இந்த தளம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையை அடைந்தது.
இருப்பினும் இதை பலர் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தியதால், இவற்றை நிர்வகிப்பதற்கும், சட்ட சிக்கல்களை எதிர்கொள்வதற்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த தளம் தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு தளம் திடீரென மூடப்பட்டதால் இதன் பயனர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.