கண்ணுக்கும் மனதுக்கும் பட்ட உணர்ச்சிகளை தன் ஓவியத்தில் கொண்டுவர முடிந்தது...

கண்ணுக்கும் மனதுக்கும் பட்ட உணர்ச்சிகளை தன் ஓவியத்தில்  கொண்டுவர முடிந்தது...

காமில் பிஸ்ஸாரோவின் கடற்கரையில் இரு பெண்மணிகள் (Two Women Chatting by the Sea)

மில் பிஸ்ஸாரோ (Jacob Abraham Camille Pissarro) புகழ் பெற்ற டென்மார்க் ஓவியர். இம்ப்ரெஷனிஸ்ட் வகையில் மிகத் தேர்ந்த ஓவியராக கருதப்படும் பிஸ்ஸாரோ 1830ஆம் ஆண்டு பிறந்தவர். இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியங்களால் கவரப்பட்ட பிஸ்ஸாரோ அதில் தேர்ச்சி பெற்று புகழ்மிக்க ஓவியங்களை வரைந்தாலும் நியோ இம்ப்ரெஷனிஸ்ட் என்று சொல்லக்கூடிய புதுமைகளிலும் ஆராய்ச்சி செய்து அவ்வகை ஓவியங்களையும் தீட்டினார். அவை பின்னாட்களில் விற்பன்னர்களால் இம்ப்ரெஷன்பிஸ்ட் வகையின் முன்னேற்றங்கள் என்று சிலாகிக்கப்பட்டன.

அவரின் கடற்கரையில் இரு பெண்மணிகள் ஓவியத்தை உற்றுப்பாருங்கள்!

Pissarro, Camille

இது பிஸ்ஸாரோ பிறந்த ஊரான புனித தாமஸ் என்னும் தீவுப்பிரதேசத்தில் கடற்கரையில் இரு பெண்மணிகள் பேசிக்கொண்டிருக்கும் ஓவியம். அவர்கள் இருவரைத்தவிர சுற்று வட்டாரத்தில் யாருமே இல்லை. வெள்ளை உடை உடுத்திய பெண் தலையில் பெரிய கூடையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளின் இடுப்பிலும் ஏதோ வைத்திருப்பதாகத்தெரிகிறதா?

அந்தப் பெண்ணின் உருவமும் கூடையும் தரும் நிழலில் இருவரும் நின்று பேசுகிறார்கள். நீல உடை அணிந்த பெண் சிறிய கூடைதான் வைத்திருக்கிறாள். அவர்களின் நிழலை பிஸ்ஸாரோ வரைந்திருக்கும் அற்புதத்தைக் கவனியுங்கள். அடுத்து பின்னணியில் அந்த கரும்பச்சை மலைத்தொடர் அப்படியே சாலாக்காக கடலில் சென்று விழுகிற ஜாலம்! வானத்தின் மெல்லிய செம்மை கலந்த வெண்மை நேரம் காலையோ அல்லது பொழுது சாயும் மாலையோ என்று எண்ண வைக்கிறதா? மணற் பாதையைத் தாண்டின மேட்டில் வளர்ந்திருக்கும் மஞ்சள் புற்களின் நேர்த்தியை இப்படிக்கூட வரைய முடியுமா என்று மலைக்க வைக்கிறார் பிஸ்ஸாரோ.

இந்த ஓவியத்தை அவர் தீட்டியது 1856 ஆம் ஆண்டு. அதற்குப் பிறகு சில மாதங்களில் அவர் தன் பிறந்த ஊரான புனித தாமஸை விட்டு வெளியேறிவிட்டார். இந்த ஓவியம் அமெரிக்காவின் செல்வந்தரான பால் மெல்லான் என்பவரிடம் இருந்து பின்னர் அவரால் வாஷிங்டன் ஆர்ட் ம்யூசியத்துக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் சரியான இடம் இல்லாதால் இந்த ஓவியம் இன்னும் மியூசியத்தின் இருட்டு அறையிலேயே தூங்கிக்கொண்டு இருப்பது ஒரு சோகமே!

A Plaza in Caracaseன்னும் இன்னொரு ஓவியத்தைப்பாருங்கள்.

பிஸ்ஸாரோ யாருடைய அதாவது எந்த செல்வந்தருடைய தயவிலும் இல்லாததால் அவருக்கு ஓவியம் வரையும்போது எவ்வித நிர்ப்பந்தங்களும் இல்லை. அவரால் சுதந்திரமாக அவர் கண்ணுக்கும் மனதுக்கும் பட்ட உணர்ச்சிகளை தன் ஓவியத்தில் தயங்காமல் கொண்டுவர முடிந்தது என்கிறார்கள் விமரிசகர்கள். இந்த ஓவியத்தில் அந்த இடத்தின் கிராமத்தன்மையைக் கவனியுங்கள்.  அங்கே ஒரு ஓட்டு வீடு. அதன் பின்னணியில் அது என்ன, கிடங்கா அல்லது கண்காணிக்கும் கட்டிடமா? லாவகமாக ஜாடியைத் தலையில் சுமக்கும் வியாபாரிப் பெண்மணியா இல்லை கூடவே கழுதை அல்லது குதிரையுடன் வரும் வியாபாரியின் அடிமைப் பெண்ணா? அந்தச் சுவற்றுக்குப் பின்புறம் இருக்கும் முள் மரத்தின் தத்ரூபத்தையும் வாய் பிளந்து பார்க்கலாம்.

பிஸ்ஸாரோ பற்றிய இன்னொரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

1874 முதல் 1786 வரை நடந்த எல்லா இம்ப்ரெஷனிஸ்ட் கண்காட்சிகளில் தவறாமல் இடம் பெற்ற ஓவியர் இவர் ஒருவர்தான்!

பிஸ்ஸாரோ இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியர்களுக்கெல்லாம் தகப்பனார் போன்றவர்  மட்டுமின்றி, இம்ப்ரெஷனிஸ்ட் காலத்தை தாண்டிய நான்கு மிகச்சிறந்த ஓவியர்களுக்கும் (செஸான்,  கக்வின், ஸ்யூரட் மற்றும் வான் கோ) இவர்தான் குரு போலவாம்!

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com