மனதிலிருந்து வரும் ஓவியம்

மனதிலிருந்து வரும் ஓவியம்

“மாடர்ன் ஆர்ட் என்பது முகநூலில் எழுதறா மாதிரி!”

”எப்படி?”

“நீ எழுதற பதிவுக்கு பத்து லைக் கூட வராது! ஆனா அதை எடுத்து ஷேர் பண்றாம்பாரு, அவனுக்கு நூறு லைக் வரும்! மாடர்ன் ஆர்ட்டும் அது மாதிரிதான்! ஒருத்தன் அருமையா இயற்கைக்காட்சி போட்ருப்பான். அவன ஒருத்தரும் சீண்ட மாட்டாங்க. இன்னொருத்தன் அதையே கோணாமாணான்னு அப்படியும் இப்படியும் குளறுபடி பண்ணி போடுவான். ஆஹா எப்பேர்ப்பட்ட மாடர்ன் ஆர்ட்டுன்னு பிச்சுக்கிட்டு போகும்!”

இது “சாரி கொஞ்சம் ஓவர்” வகை ஜோக்காக இருந்தாலும் மாடர்ன் ஆர்ட் புரிவதே இல்லை என்னும் புகார் ரொம்ப காலமாக உண்டு. ஆனாலும் அவை abstraction என்று சொல்லப்படும் உருவமல்லாத சுருக்கம் என்றாலும் இந்த வகை ஓவியங்களும் உலகப்புகழ் பெற்றிருக்கின்றன. இதை ஓர் ஓவிய இயலாகவே இன்று வகைப்படுத்தி அதில் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடைபெறுவதை மறுக்க முடியாது. பாப்லோ பிகாஸோ, வின்ஸெண்ட் வான்கா, ஆண்டி வார்ஹோல், கிளாட் மோனே என்று அழியாப்புகழ் பெற்ற ஓவியர்கள் கோலோச்சிய உலகம் இது.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

நியூயார்க் நகரத்தின் ”ஷகரான” பகுதி என்று சொல்லும் ஐந்தாவது மற்றும் ஆறாவது அவென்யூக்களுக்கு இடையில் டிரம்ப், ஆம், முன்னாள் ஜனாதிபதி டிரம்பே தான், டிரம்ப் டவர்ஸ் என்னும் அபார பில்டிங்குக்கு அருகாமை 56வது தெருவில் இருகிறது….

என்ன?

நியூயார்க் மாடர்ன் ஆர்ட் மியூசியம்!

மிகப்பிரமாதமான ஓவியங்கள் நிறைந்த இந்த மியூசியம் உலகிலேயே மிகப்பெரிய மாடர்ன் ஆர்ட் மியூசியமாக கருதப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு நான் அங்கே போனபோது எதை எதிர்கொள்ளப்போகிறேன் என்பதை அறியாமல்தான் சென்றேன்.

பசி, தூக்கம், மறக்கடிக்கும் அபார ஓவியங்கள் இருக்கும் கலைப்பொக்கிஷம் அந்த இடம். அதில் நான் ரசித்த பல ஓவியங்களில் மார்க் ஷகால் வரைந்த “நானும் கிராமமும்” (I and the Village) என்ற படம் என்னை ஈர்த்தது.

இந்த ஓவியத்தை ரசிப்பதற்கு முன்னர் மார்க் ஷகாலைப்பற்றி சில வரிகள் தெரிந்து கொள்வது உத்தமம்.

ஷகால் ஒரு யூதர். முதல் உலகப்போருக்கு முன்பு ரஷ்யாவில் பிறந்து வளர்ந்த யூதர். அவர் மாடர்ன் ஆர்ட் ஓவியர் மட்டுமின்றி பல்கலை வித்தகராக விளங்கியவர். ரஷ்யாவை விட்டு வெளியேறி அவர் ஐரோப்பாவில் பல வருடம், முக்கியமாக ஃப்ரான்ஸின் பாரிசில் ஓவியக்கலையில் விற்பன்னராக வளர்ந்தார். முற்கால நவீனத்துவ ஓவியர் (early modernist) என்றாலும் நாடக மேடைக்கு செட் அமைப்பது, திரைச்சீலை தயாரிப்பு, கண்ணாடியில் பெயிண்டிங், கதைகளுக்கு கார்ட்டூன் வரைதல் என்று இன்னும் பல கலைகளில் தேர்ந்தவர். மிகுந்த புகழும் பணமும் சம்பாதித்த இவர் திருமணமாகி பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இவரின் பிறந்த ஊர்ப்பாசமும் ஐரோப்பிய பாசமும் இவரை பின் நாட்களில் மீண்டும் ஐரோப்பாவுக்கு வரவழைத்துவிட்டது.

நான் முதலில் சொன்ன “நானும் என் கிராமும்” என்னும் மாடர்ன் ஆர்ட் நுட்பக்கலைஞர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஓவியம். இது அவரின் இளமைக்கால நாட்களையும் கனவுகளையும் ஏக்கங்களையும் புதுமையாக வெளிப்படுத்திய ஓவியம் என்கின்றனர்.

இந்த ஓவியத்தில் ரஷ்யாவின் சுற்றுச்சூழலும் அவரது ஊரின் பாரம்பரியக்கதைகளின் படிமங்களும் இருக்கின்றன.

இப்போது ஓவியத்தைக்கவனியுங்கள்...

கொச கொசவென ஆங்கிலேயர் காலத்திய தரங்கம்பாடி வரைபடம் போல மேலோட்டமாகத் தெரிந்தாலும் இதன் உட்பொருள் நுட்பமானவை. ஓவியத்தின் வலதுபக்கம் மேலே தெரிவது இவரது ஊரும், சர்ச்சும் ஓரிரு மனித உருவங்களும். அந்தப் பெண்மணியும் சில வீடுகளும் தலைகீழாக இருப்பதுதான் இந்த ஓவியத்தை மாடர்ன் ஆர்ட் ஆக்குகிறது. படத்தில் பிரதானமாகத் தெரியும் பச்சை நிற முகம் ஷகாலுடையது என்கிறார்கள் ஓவிய விற்பன்னர்கள். அவரது பார்வையில் காட்சி என்று இதை உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும். “இதில் ஒரு கனவுத்தன்மை இருக்கிறது” என்கிறார்கள். மலரை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கையும் பந்து போன்ற ஒரு சமாசாரமும் இருப்பதைக் காணலாம். இது அவரின் இளமைக்கால விளையாட்டுப் பொருளாக இருக்கலாம். மேலும், தென்படும் ஓர் ஆட்டின் முகத்தில் வரையப்பட்டிருக்கும் பால்காரப் பெண்மணி. இதெல்லாமே ஏதோ ஒரு ஏக்கங்களின் கலவை என்பதுதான் விமரிசகர்களின் பார்வை.

ஷகாலின் ஓவியங்களில் சிறப்பு அவரது வண்ணக்கலவையின் தனித்தன்மை. அதோடு அவரது பல ஓவியங்களில் யூத மத அடையாளங்கள் இருக்கின்றன. இந்த ஓவியத்தை அவர் தனது 24ஆம் வயதில் வரைந்திருக்கிறார். உலகப்போரின் காரணமாக அவரது பிறந்த ஊர் அழிந்துவிட்டதின் ஏக்கம் இதில் வெளிப்படுவதாக சொல்கின்றனர்.

“இந்த மாதிரியான மாடர்ன் ஆர்ட் ஓவியங்களின் நுட்பத்தை ரசிக்க தனித்தன்மையான ரசிப்பு வேண்டும்” என்பார்கள். ஷகாலின் மேன்மையை உணர நான் நினைவில் கொள்ள வேண்டியது இந்த நவீனத்துவ ஓவியங்களில் இவர் முன்னோடியாக பல விஷயங்களைச் செய்திருக்கிறார் என்பதே.

மீண்டும் ஒரு முறை நானும் என் கிராமும் ஓவியத்தைக் கூர்ந்து பாருங்கள். ஒரு சிறுவனின் ஏக்கமும் கனவும் கூடவே இழையோடும் ஒரு மெல்லிய சோகமும் எனக்கு புலப்படுகிறது.

உங்களுக்கு?

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com