படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

ஓர் எழுத்தாளனின் இல்லத்தரசி!
படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

பகுதி – 12

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா ‘சிங்கம்பட்டி’ தான் இதை எழுதுகிறவனை உருவாக்கிய பூமி. வீட்டின் மச்சியில் (மாடி) பெரிய தகரப்பெட்டி. தகரப்பெட்டி நிறைய சுதந்திரத்துக்கு முந்தைய கல்கி, கலைமகள், மஞ்சரி, ஆனந்தவிகடன், ஆண்டு மலர்கள், படித்து முடித்து பைண்டிங் செய்யப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’. இவற்றையெல்லாம் வாசிப்பின் வைரங்களாக வைத்தது அப்பா பெரியசுவாமி தேவர். அம்மா ராஜாத்தி அக்காலத்து இ.எஸ்.எல்.சி. என்பதால் இந்த எழுத்தாளனுக்கு வாசிப்பு இயல்பாக வந்ததொரு கொடுப்பனை.

பள்ளிப் பருவத்தில் சிங்கம்பட்டியிலிருந்த அரசு நூலகமே வாசிப்பில் என்னைச் சுண்டி இழுத்த தூண்டிலாகும். அக்கம் பக்கமுள்ள சிலுமிச சிறுவர்கள் அந்த நூலகரின் தலையைப் பார்த்து ‘மண்ட வெல்லம்’ என்று கிண்டல் செய்ய, அதே நூலகர்தான் என்னை வாசகனாக்கிய பேராசிரியர்.

ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுத்த நண்பன் பாலையா கையில் கண்ட நா.பா.வின் ‘தீபம்’தான் எனக்குள் எழுத்தாற்றலை ஏற்றி வைத்த மண்சட்டி விளக்கு. (இறுக்கியாஞ்சட்டி விளக்கு).

‘ராணி’ வாரப்பத்திரிகை என் வருத்தத்தைப் புரிந்துகொள்ளாமல், “தங்கள் கதை, கவிதை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என தவறாது வருத்தம் தெரிவித்தவள். அந்த ‘ராணி’தான் பின்னர் எனக்கென்று 86 வாரங்களை ஒதுக்கி, “கஷ்டப்படாதே; இஷ்டம்போல் எழுது” என என்னை எழுத்துலகுக்கு ஆசிரியர் ராமகிருட்டிணன் மூலம் அறிமுகப்படுத்தியவள்.

இளங்கலை பெளதீகம் முடித்து நான் விரும்பிய காவல்துறை உதவி ஆய்வாளர் பணி கிடைக்க, முதல் சம்பளமான ரூ.750ஐ எனக்குப் பிடித்த பகவதியை கைபிடித்த பின்புதான் வாங்கினேன்.

பகவதிக்கு பள்ளிப்படிப்புதான். ஆனால், வாசிப்பில் அவளொரு வாடாமல்லி. சிறுவயதில் செய்தித்தாள், அம்புலிமாமா, இரும்புக்கை மாயாவி போன்ற காமிக்ஸ், அவளுக்கு அலாதி பிரியமான அசைவ உணவின் மீது கொண்ட தாகத்தைவிட, அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. திருமணத்துக்குப் பின் அவளின் வாசிப்பு நூலகத்தைத் தொட எண்ணற்ற நாவல்கள், வாராந்திர மாத இதழ்களின் வாசிப்பாக விரிவடைந்தது.

இப்படி என் இல்லத்தரசி வாசிப்பில் வளர்ந்த நேரத்தில், நான் காவல்துறை பணிக்கு வந்ததால் அவகாசத்தின் ஆதரவில்லாமல் ‘பணிச்சுமை’ பற்றி கவிதை எழுதினேன். மற்ற அரசு ஊழியர்கள் போல் அல்லாமல் காவல்துறை ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் மாறுபட்டவை. Disciplinary Force என்பதால் துறையின் அனுமதியின்றி எதையும் எழுதவோ, பேசவோ கூடாது. முடியாது.

காவல்துறையின் பணியைப் பற்றி அவ்வப்போது எழுதுவேன் என்பது துறை சார்ந்தவர்களுக்குத் தெரியும் என்கிற வகையில் என் எழுத்துகள் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

ஆய்வாளராகப் பணியில் இருந்தபோது டிசம்பர் 6ல் பொதுமக்களுக்காக எழுதிய ‘குண்டு’ கவிதைத்தான் ‘கதிரவன்’ என்ற செய்தித்தாளில் முதன்முதலாக வந்த ஒன்று.

சென்னை மாநகரக் காவல்துறையினரின் ஒரு நாளைய பணி பற்றி கவிதையாக எழுதி ஆணையராக இருந்த விஜயகுமார் ஐ.பி.எஸ்.க்கு அனுப்ப, அதனைப் பாராட்டியதோடு, அதன் நகல் எடுத்து சென்னை மட்டுமல்ல, அனைத்து தனிப்பிரிவுக்கும் அனுப்பி வைத்தபோது என் எழுத்து காவல்துறையினர் மத்தியில் ஆணித்தரமாக அறிமுகமானது.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் என் இல்லத்தரசியை அழைத்துச் சென்று விரும்பிய புத்தகங்களை வாங்கியதில் இருவருக்கும் வாசிப்பில் எல்லை கடந்தது. அவள் வாசிப்புக்குப் பின்பு புத்தகங்கள் அவளுடைய உறவினர் மற்றும் நண்பர்களின் கரங்களையும் தொட்டது.

‘கை கொடுக்கும் கால்’ என்ற நடைப்பயிற்சி பற்றிய கட்டுரை ‘தினமணி’யில் முழு பக்கத்தில் வந்த முதல் கட்டுரை. மெரினா கடற்கரையில் இல்லத்தரசியுடன் நடைப்பயிற்சி செய்த சமயங்களில் அங்கு சந்தித்த பிரபலங்களைப் பேட்டி காண, அதையும் கட்டுரையில் இணைத்தேன். அந்த வரிசையில் கடைசியாக திருமதி பகவதி மாடசாமி, குடும்பத்தலைவி என்ற பெயரில் நடைப்பயிற்சி பற்றிய அவளுடைய கருத்தையும் பதிவு செய்ததில், எப்போதும் கலகலப்பான அவளுடைய சிரிப்புக்கு நடுவே ஒரு புன்சிரிப்பு.

‘காயப்படலாமா வாயில்லா பேருந்து’, ‘தோல்வி என்பது வீழ்ச்சியல்ல’ போன்ற மாணவர்களுக்கான கட்டுரைகளும், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினத்தின்போது எழுதிய கவிதைகளும் அடுத்தடுத்து பிரபலமான பத்திரிகைகளில் பிரசுரமானபோது என் எழுத்தாற்றல் ஒரு படி ஏற்றம் கண்டது. எழுத்துக்காக நான் பெற்ற முதல் 20 ரூபாய் நோட்டை பணமுடிப்பாக இன்றைக்கும் வைத்திருக்கிறேன். அதேநேரத்தில் பேச்சாற்றலையும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாயிலாக வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

34 ஆண்டுகளுக்குப் பின் 2013ல் பணி நிறைவு செய்ய, இனி நடத்தை விதி நம்மைக் கட்டுப்படுத்தாது என்ற மகிழ்ச்சியில், என் காவல்துறை வாழ்க்கையைப் பொதுமக்களும் புரிந்துகொள்கிற வகையில் ‘காக்கியின் கதிர் வீச்சு’ என்ற பெயரில் நூல் வெளியீட்டு விழா நடத்தி, அதன்மூலம் என் எழுத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டேன். அந்த மேடையில் என்னுடைய இல்லத்தரசியை மேடை ஏற்றி அறிமுகம் செய்தேன்.

விழாவில் பேசிய என்னுடைய உடன்பிறந்த அண்ணன், “தம்பிக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இதனைக் கண்டு ரசிக்க என்னுடைய தந்தை இல்லை” என்று மேடையிலேயே வருத்தப்பட்டார்.

காவல் துறையினர் செயல்பாடு, வழக்கு, வழக்கின் விசாரணை, பொதுமக்கள் எதிர்ப்பு, எதிர்பார்ப்பு, ஒத்துழைப்பு, குற்றவாளிகளின் குணநலன்கள், நீதிமன்ற நடைமுறை போன்ற காவல்துறையைப் பற்றிய விஷயங்களைப் பொதுமக்களும் புரிந்துகொள்கிற வகையில் என்னை எழுத ஊக்குவித்து, பிரபலமாக்கிய ‘ராணி’, ‘குமுதம் சினேகிதி’, ‘கல்கி’, ‘மங்கையர் மலர்’ ஆகிய இதழ்களின் ஆசிரியர்களை மறந்து விட முடியாது.

என் அப்பா கொண்டிருந்த வாசிப்பின் ருசி காரணமாக 1950க்கு முன்பே சிங்கம்பட்டியிலிருந்து சென்னைக்கு வந்து ‘கல்கி கிருஷ்ணமூர்த்தி’ அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் என்பதை ‘கல்கி’ பத்திரிகையில் எனக்கு எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்தபோது, “அப்பா மட்டும் இப்போது இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசப் படுவார்கள்” என்று என் அண்ணன் சொன்னதன் பொருளை முழுமையாக உணர்ந்தேன்.

என்னுடைய முதல் வாசகரும் முதல் விமர்சகருமான என் இல்லத்தரசி சில நேரங்களில் அவளுடைய தோழி மற்றும் உறவினர்களுக்கு என் படைப்புகள் பற்றி எடுத்துரைக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

இளைய தலைமுறையினருக்காக எழுதிய ‘மாணவச் செல்வங்களே மாற்றி யோசியுங்கள், தற்கொலை தீர்வல்ல...’ என்ற படைப்புக்கு ‘நம்பிக்கை நாயகன் விருது’ வழங்கியது இனிய நந்தவனம் பத்திரிகை.

என்னுடைய முதல் புத்தகத்துக்கு வாழ்த்துரை வழங்கியவர்கள் இன்றைய தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.ம், பேராசிரியர் கு. ஞானசம்மந்தமும் ஆவர். பேராசிரியர் வீட்டுக்கு என்னுடைய இல்லத்தரசியோடு சென்று அவரைப் போய் சந்தித்தபோது நீண்ட நாள் நண்பர் போல் எங்களை வரவேற்று, உபசரித்து அவருடைய வீட்டு நூலக அறையை எங்களுக்குக் காட்டியதே என்னுடைய வீட்டு நூலகத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

பேராசிரியரை முதன்முறையாக அவர் பணியாற்றிய கல்லூரியில் சென்று பார்த்தபோது என்னோடு பேசிக்கொண்டே வந்து கல்லூரிக்கு வெளியிலிருந்த தேனீர் கடையில் தேனீரும் வடையும் சாப்பிட்டபோது அவரிடம் எளிமையையும் யதார்த்தத்தையும் சக மனிதர்களை மதிக்கும் மாண்பையும் காணமுடிந்தது. இது என்னுடைய எழுத்துக்குக் கிடைத்த வெகுமதி.

நான் படித்தப் புத்தகங்களை அடுக்கி வைத்திட வீட்டு நூலகத்தில் அலமாரிகளை அமைத்துக் கொடுக்கின்ற தாராள மனசுக்குச் சொந்தக்காரி பகவதிதான்.

புத்தகக் கண்காட்சியில் பதிப்பகத்தார் அடுக்கி வைத்த புத்தகங்கள் மத்தியில் என்னுடைய படைப்புகளைப் பார்த்தபோதும் அதுபற்றி பல வாசகர்களும் நண்பர்களும் என்னைத் தொடர்புகொண்டு பேசியபோதும் புத்தகம் என்பது மொழி. இனம் மற்றும் எல்லை கடந்து மனித மனங்களை இணைக்கிற பாலம் என்பது தெரிந்தது.

என்னுடைய 11 வயதான பேத்தி மியாகார்த்திக் அவளுடைய பள்ளியில் எழுத்துப் போட்டியில் கலந்து கொண்டு கொடுக்கப்பட்டத் தலைப்பில் உடனடியாக கதை எழுதி வென்று, அதனைத் தொடர்ந்து தமிழக அளவிலான போட்டியிலும் வென்று, இந்திய அளவில் லக்னோவில் கலந்துகொள்கிற வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்பதைக் கேட்கின்றபோது குடும்பத்தில் ஒரு வாரிசு எழுத்தாளர் உருவாகியிருப்பதாகவே தெரிகிறது.

நான் இன்றைக்கு எழுத்தாளனாகவும் பேச்சாளனாகவும் இருப்பதற்கு 100 விழுக்காடு காரணம் பகவதிதான் என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன். நிறைய வாசிக்க வேண்டும் கவிதை, நாவல்கள் நிறையவே எழுத வேண்டும் என்பதும் இளைஞர்கள் மத்தியில் தூய தமிழில் பேச வேண்டும் என்பதுமே என் தணியாத ஆசை.

(நிறைந்தது)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com