ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - லாலா லக்ஷ்மிசந்த்

ஷீரடி ஸ்ரீ சாயி – பக்தித் தொடர்

ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - லாலா லக்ஷ்மிசந்த்

அத்தியாயம் - 6

தாஸ்கணு மஹராஜ் பாபாவால் ஷீரடிக்கு இழுக்கப்பட்ட பிறகு போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்த அவருடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அவர் கீர்த்தனையும் உபன்யாசமும் செய்ய ஆரம்பித்தார். மஹராஷ்டிராவில் நிறைய இடங்களில் இவருடைய உபன்யாசம் நடைபெற்றது. மராத்திய மாகாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற பக்த துகாராம் போன்ற மகான்களைப் பற்றி இவர் உபன்யாசம் செய்யும்போதும், ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் படம் ஒன்றையும் அங்கே வைத்து அவருடைய பெருமைகளையும் சொல்வது வழக்கம். இதைக் கேட்டவர்களுள் அநேகம் பேர் ஆர்வத்துடன் ஷீரடிக்குச் சென்று ஸ்ரீ பாபாவை தரிசித்திருக்கிறார்கள்.  லாலா லக்ஷ்மிசந்த் என்னும் பக்தரும் அவர்களுள் ஒருவர்.

முதலில் பம்பாயில் ஸ்ரீ வெங்கடேஷ்வர் அச்சகத்தில் இவர் பணியாற்றினார்.  பிறகு ரயில்வேயில் வேலை கிடைக்க அங்கே சில வருடங்கள் பணியாற்றினார். அதன் பின் ராலி பிரதர்ஸ் & கம்பெனியில் இவர் குமாஸ்தாவாக பணியாற்றினார். 1910இல் கிறிஸ்துமஸ் சமயத்தில்தான் இவர் முதன் முதலில் பாபாவை ஷீரடியில் தரிசித்தார்.  ஆனால், அதற்கு ரெண்டு மாதங்கள் முன்பு அவர் சாந்தாக்ரூஸில் இருக்கும்போது ஒரு கனவு கண்டார்.  அதில் தாடியுடன் கூடிய ஒரு பெரியவர் தன் பக்தர்கள் புடைசூழ நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். சில நாட்களுக்குப் பிறகு தன் நண்பரான தத்தாத்ரேயா மஞ்சுநாத் பிஜூர் என்பவர் வீட்டில் ஒரு கீர்த்தனம் நடைபெறுவதை அறிந்து, அதைக் கேட்பதற்காக அங்கு சென்றார். தாஸ்கணுவின் கீர்த்தனம் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்த துகாராமின் கதையை சொல்லிக்கொண்டிருந்தார் அவர். அங்கே ஷீரடி பாபாவின் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த லாலா லக்ஷ்மிசந்த் ஆச்சரியப்பட்டுப் போனார்.  தான் சில நாட்களுக்கு முன் கனவில் கண்ட பெரியவர் ஷீரடியிலுள்ள பாபா என்னும் மகான் என்பதை புரிந்துக்கொண்டார்.  தாஸ்கணுவின் கீர்த்தனம், அவர் நிகழ்த்திய உரை, பாபாவின் சித்திரம் எல்லாம் அவர் மனதில் ஓர் ஆழ்ந்த பக்தி உணர்வை தோற்றுவித்தது.  அவர் ஷீரடி போக தீர்மானித்தார்.

பாபா தானே ஷீரடிக்கு பக்தர்களை இழுக்கிறார்?  லாலா மனதில் ஷீரடி போக வேண்டும் என்னும் எண்ணம் வலுப்பெற்றால் பாபா ஏற்பாடு செய்கிறார் என்றுதானே பொருள்?  அதே நாள் இரவு 8 மணியளவில் லாலாவின் நண்பர் சங்கர் ராவ் அவர் வீட்டுக்கு வந்தார்.  தான் ஷீரடிக்குச் செல்ல இருப்பதாகவும் லாலாவுக்கு தன்னுடன்கூட வருவதற்கு சம்மதமா என்றும் கேட்டார். லாலாவின் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா?  நிச்சயம் வருவதாக சங்கரிடம் சொன்ன அவர், கையில் பயணத்துக்கு காசு இல்லாததால், தனது மாமாவிடமிருந்து ரூ.15ஐ கடன் வாங்கிக்கொண்டு சங்கருடன் ஷீரடிக்குப் புறப்பட்டார். 

ரயிலில் ஏறி உட்கார்ந்ததும், அவரும் சங்கரும் பஜனைப்பாடல்கள் பாடினார்கள்.  அதே ரயிலில் உடன் வந்த முகம்மதிய பயணிகளிடம் அவர்கள் இருவரும் சாயிபாபாவைக் குறித்து விசாரித்து அறிந்தார்கள். பல ஆண்டுகளாக ஷீரடியில் வசித்து எல்லோருக்கும் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சாயிபாபா ஒரு மகான் என்று அந்தப் பயணிகள் கூறினார்கள்.

பாபாவுக்கு சமர்ப்பிப்பதற்காக ஏதாவது பழங்கள் வாங்கிக்கொண்டு போக வேண்டும் என்று நினைத்தார் லாலா லக்ஷ்மிசந்த். ஆனால், கிளம்பும் அவசரத்தில் மறந்து போனார். வண்டி கோபர்கானை நெருங்கியபோது தலையில் பழக்கூடையுடன் ஒரு கிழவி ரயிலைத் தொடர்ந்து ஓடி வந்துகொண்டிருப்பதைக் கண்டார். வண்டி ரயில் நிலையத்தில் நின்றதும் லாலா சில பழங்களை தேர்ந்தெடுத்து பாபாவுக்காக வாங்கினார்.  அப்போது அந்தக் கிழவி  கூடையில்  மிச்சமிருந்த பழங்களையும் லாலாவிடமே கொடுத்து தன் சார்பில் பாபாவுக்கு சமர்ப்பிக்கக் கோரினாள்.  நண்பர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம்! தாங்கள் பழம் வாங்க எண்ணியது, நினைத்தது போல பழக்கூடையுடன் ஒரு கிழவி தங்களைத் தேடி வந்துகொண்டு  கொடுத்தது,  எல்லாமே யாரோ திட்டமிட்டு நடத்துவதைப் போல் தோன்றியது.

அவர்கள் கோபர்கானிலிருந்து பயணித்து ஷீரடியை வந்து அடைந்தனர்.  கையில் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு  மசூதிக்குச் சென்று பாபாவை வணங்கினர்.  லக்ஷ்மிசந்த் பாபாவைக் கண்டதும் அகமகிழ்ந்து போனார்.  அவர் நெஞ்சம் பக்தியால் நெகிழ்ந்தது.

பாபா அவரைப் பார்த்து சொன்னார், "எவ்வளவு வஞ்சகமான ஆசாமி இவன்? ரயிலில் பஜனை செய்கிறான். மற்றவர்களிடம் விசாரிக்கிறான்.  மாமாவிடம் கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்துக்கு வர வேண்டிய அவசியமென்ன?  இப்போ ஆசை நிறைவேறிற்றா?"

இந்த வார்த்தைகளைக் கேட்டு லாலா அதிர்ச்சியுற்றார்.  'பாபா ஒரு சர்வவியாபியாக இருப்பதாலேயே அவரால் மற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்ததைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது போலும்!' என்று நினைத்துக் கொண்டார். கடன் வாங்கிக்கொண்டு தன்னுடைய தரிசனத்துக்கு வருவது பாபாவுக்கு கட்டோடு பிடிக்காது என்பதையும் உணர்ந்துகொண்டார்.

ஷீரடியிலிருந்தபோது ஒருநாள் மத்தியான உணவு வேளையில் லாலா ஒரு பக்தரிடமிருந்து பிரசாதமாக கொஞ்சம் சன்ஸாவை பெற்றார்.  மறுநாளும் சன்ஸா கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தபோது அது கிடைக்காததால் அவருக்கு மிகுந்த கவலை உண்டாயிற்று.  ஆனால், அடுத்த நாள் பாபாவின் உத்தரவின் பேரில் இரண்டு பானை நிறைய சன்ஸா பிரசாதமாக கொண்டு வரப்பட்டது.  அந்த நேரத்தில் லாலாவுக்கு முதுகில் கொஞ்சம் வலி இருந்தது.  அந்த வலியோடே அவர் பாபாவின் தரிசனத்துக்கு சென்றார்.

பாபா அவரிடம், "பசியோடிருக்காதே. கொஞ்சம் சன்ஸாவை சாப்பிடு.  அதே போல உன் முதுகு வலிக்கு ஏதாவது மருந்து போட்டுக் கொள்" என்றார்.  பாபா மீண்டும் தன் மனதைப் படித்து தனக்கு பதிலளிப்பதைப் பார்த்து லாலாவுக்கு மெய்சிலிர்த்தது.  பாபாவை பரவசத்தோடு நமஸ்கரித்தார்.

ஒருநாள்  சாவடி ஊர்வலத்தை லாலா பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது பாபா இருமலால் மிகுந்த அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தார்.  லாலா 'பாபாவுக்கு மிகுந்த திருஷ்டி பட்டிருக்கிறது. அதனால்தான் இப்படி இருமலால் துன்பப்படுகிறார்' என்று நினைத்தார். அந்த எண்ணத்தையும் பாபா படித்து அருகிலிருந்த ஷாமாவிடம், "நேற்றிரவு நான் இருமலால் துன்பப் பட்டேனே? சில நபர்களின் திருஷ்டி என்னை அவ்வாறு பாடுபடுத்தியிருக்குமோ?" என்றார். பாபா சர்வ வியாபி என்பதை நிரூபிக்கும்  இந்த நிகழ்வுகளையெல்லாம் கண்ட லாலா அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து அவரிடம், "என் மீது தயவுகொண்டு என்னைக் காத்து ரட்சியுங்கள்.  நான் எப்போதும் தங்கள் நாமத்தையே நினைத்து,  உச்சரிக்க தங்கள் அருளாசியைக் கோருகிறேன்" என்று வேண்டினார். 

தன் ஷீரடி விஜயத்தால் மிகவும் திருப்தியடைந்து தன் நண்பன் சங்கருடன் வீடு திரும்பினார். இதன் பிறகு லாலா லக்ஷ்மிசந்த் பாபாவின் தீவிர பக்தராகி விட்டார்.  ஷீரடிக்கு யார் செல்வது தெரிந்தாலும் அவர்களிடம் பாபாவுக்குக் காணிக்கையாக மலர்கள், கற்பூரம் என்று ஏதாவது ஒன்றை நிச்சயம் கொடுத்து அனுப்புவார்.

இவ்வாறு எங்கேயோ பம்பாயில் இருந்த லாலா லக்ஷ்மிசந்த் என்னும் சிட்டுக்குருவிக்கு கனவில் காட்சியளித்து அவர் ஷீரடிக்கு வர ஏற்பாடும் செய்து தன் தரிசனத்துக்கு அவரை இழுத்தார் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா என்பதைப் படிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் பாபாவின் மேல் பக்தி மேலோங்கி பரவசத்தில் ஆழ்வர்.

(அருள் பெருகும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com