திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

 பாகம் 40

 அதிகாரங்கள் 55 – 56 - 57 செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை

 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் 

அடிதழீஇ நிற்கும் உலகு.

 குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும் 

 (உதாரணமும் காட்சியும் ஒன்றே ஒன்றுதான்... பொன்னியின் செல்வர். இலங்கை மண்...) 

           "இராஜபாட்டையில் வருவோரும் போவோரும், வண்டிகளும் வாகனங்களுமாக ஒரே கலகலப்பாக இருந்தது.

         யானைகளின் மீது சர்வசாதாரணமாக ஏறி வருகிறவர்களைப் பார்த்து வந்தியத்தேவன் வியப்புற்றான் "இம்மாதிரி மிருகம் ஒன்றுதானா காட்டுப் பாதையில் அவ்வளவு பீதியை உண்டு பண்ணிவிட்டது?” என்று எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டான்.

        "இந்த இராஜபாட்டை எங்கிருந்து எங்கே போகிறது? நாம் எங்கே வந்திருக்கிறோம்? எங்கே போகிறோம்?" என்று கேட்டான்.

            "அனுராதபுரத்திலிருந்து. சிம்மகிரிக்குப் போகும்

இராஜபாட்டையில் வந்து சேர்ந்திருக்கிறோம். தம்பள்ளை இன்னும் அரைக்காத தூரம் இருக்கிறது. இராத்திரி அங்கே போய்ச் சேர்ந்து விடலாம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

        "இராஜபாட்டை வழியாகச் சுகமாய் வந்திருக்கலாமே? எதற்காக காட்டு வழியாக வந்தோம்?"

       "இராஜ பாட்டையில் நாம் நெடுகிலும் வந்திருந்தால் நூறு இடத்தில் நம்மை நிறுத்திச் சோதனை செய்திருப்பார்கள். அநுராதபுரத்தில் அடியோடு நிறுத்திப் போட்டிருப்பார்கள். நாம் யாரைத்தேடி வந்திருக்கிறோமோ அவர் சிம்மகிரிக்குப் பக்கம் சென்றிருப்பதாக அறிந்தேன். அதனால்தான் குறுக்கு வழியில் வந்தேன். இன்னமும் அவரை நாம் கண்டுபிடிக்கத்தான் போகிறோமோ, இல்லையோ? வேறு எங்கேயாவது போகாதிருக்க வேண்டும்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

இராஜபாட்டையின் இரு பக்கத்திலும் ஏராளமான வீடுகளும், கிராமங்களும், கடைவீதிகளும், கொல்லர், தச்சர் பட்டறைகளும் இருந்தன. அவற்றில் வசித்தவர் களும் தொழில் செய்தவர்களும் பெரும்பாலும் சிங்களவர்களாகத் தோன்றினார்கள்.

          இராஜபாட்டையில் தமிழ்நாட்டுப் போர்வீரர்கள் குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் இரு புறமும் வசித்த சிங்களவர்கள் எவ்வித தடையுமின்றி நிர்ப்பயமாய்த் தங்கள் தொழில்களைச் செய்துகொண்டிருந்தார்கள்.

        "இந்தப் பகுதியெல்லாம் இப்போது யாருடைய வசத்தில் இருக்கிறது?'' என்று வந்தியத்தேவன் கேட்டான்.

           ''சோழ சைன்யம் தம்பள்ளை வரையில் கைப்பற்றி இருக்கிறது. அப்பால் சிம்மகிரிக் குன்றும், கோட்டையும் மகிந்தன் வசம் இருக்கின்றன."

        "இந்தப் பக்கங்களில் வசிக்கும் ஜனங்கள்?”

          "பெரும்பாலும் சிங்களத்தார்தான். 'பொன்னியின்செல்வர்' இங்கே வந்தபிறகு யுத்தத்தின் போக்கே மாறிவிட்டது. சோழ வீரர்களுக்கும் மகிந்தனுடைய வீரர்களுக்குந்தான் சண்டை. அதாவது போர்க்களத்தில் எதிர்ப்படும்போது. மற்றப்படி குடிகள் நிர்ப்பயமாய் வாழலாம். புத்த குருமார்களுக்கு ஒரே கொண்டாட்டம். அநுராதபுரத்தில் இடிந்துபோன புத்த விஹாரங்களையெல்லாம் நம் இளவரசர் திரும்பப் புதுப்பித்துக் கட்டும்படி கட்டளையிட்டிருக்கிறாராம்! கேட்டாயா கதையை? பௌத்த குருக்கள் ஏன் குதூகலமடைய மாட்டார்கள்? இளவரசரை நான் சந்திக்கும்போது, 'நீங்கள் செய்யும் காரியம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை!' என்று சொல்லிவிடப் போகிறேன்!"

         "கட்டாயம் சொல்லிவிடும். உமக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதற்கு இந்த இளவரசர் யார்? அவருக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா?" என்றான் வல்லவரையன்.

             ''அவருக்குக் கொம்பு முளைத்திருக்கவில்லை, தம்பி! அது உண்மையே! ஆனாலும் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அவருக்குப் பின்னால் யார் என்ன குறை சொன்னாலும் எதிரில் அவரைப் பார்த்ததும் மயங்கிப்போய் நின்று விடுகிறார்கள். இளவரசரை எதிர்த்துப் பேசும் சக்தி யாருக்கும் இருப்பதில்லை.” 

    ‌      இவையெல்லாம் வந்தியத்தேவனுக்கு மிக்க வியப்பை அளித்தன. ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "நாம் யுத்த கேந்திரத்துக்கு வருவதாக எண்ணினோம். இது புத்த ஷேத்த்திரமாக வல்லவா இருக்கிறது?" என்றான்.

          "ஆம், அப்பா! ஆயிரம் வருஷமாக இது பிரசித்தி பெற்ற புத்த ஷேத்திரமாயிற்றே?” என்றான் ஆழ்வார்க்கடியான்.

       ''ஆனால் இது சோழ சைன்யத்தின் வசத்திலுள்ளது என்றுசொன்னீரே?”

            "ஆமாம்; இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன்.

            “சோழ வீரர்கள் யாரையும் இங்கே காணோமே"

         ''ஊருக்கு வெளியில் படைவீடுகளில் இருக்கிறார்கள். அப்படி இளவரசருடைய கட்டளை.”

            அநுராதபுரத்தின் வீதிகளிலும் ஜனக்கூட்டம் அளவில்லாமலிருந்தது. ''சாது! சாது!' என்ற கோஷம் வானை அளாவியது. ஆங்காங்கு பல மாடமாளிகைகளும், விஹாரங்களும் இடிந்து கிடப்பதை வந்தியத்தேவன் கண்டான். இடிந்துபோன பல கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். புதுப்பிக்கும் திருப்பணி இளவரசர் கட்டளையின் பேரிலேதான் நடந்திருக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான். இப்படியெல்லாம் இவர் செய்து வருவதின் நோக்கம்தான் என்ன? ஜெயிக்கப்பட்ட நாட்டின் மக்களுக்கு இவர் ஏன் இவ்வளவு சலுகை காட்டுகிறார்? ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்துடன் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள் இந்தச் சிங்கள அரசர்கள். இத்தகைய நெடுங்காலப் பகைவர்களின் தலைநகரத்தை அழித்துக்கொளுத்தித் தரைமட்டமாக்குவதற்கு மாறாக, இடிந்து போன கட்டிடங்களைப் புதுப்பித்துத் திருவிழாக்கள் நடத்த இவர் அனுமதித்து வருகிறாரே? இது என்ன அதிசயம்! குடந்தை சோதிடர் சொன்னார் அல்லவா? "அருள்மொழிவர்மர் துருவ நட்சத்திரம் போன்றவர்! அவரை நம்பினவர்களுக்கு ஒரு குறையும் இல்லை!” என்று .அத்தகைய வீர புருஷரிடம் தான் வந்து சேர்ந்துவிட்டதை நினைத்து அவனுடைய உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது.

சிறிது நேரத்துக்கெல்லாம் சமுத்திரத்தின் கொந்தளிப்பைப் போன்ற  பேரிரைச்சல் ஒன்று கேட்டது. வந்தியத்தேவன் இரைச்சல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு பெரிய சேனா சமுத்திரத்தைப் போன்ற பெருங்கூட்டம்,  - வீதிகளில் முடிவில்லாது நீண்டு போய்க்கொண்டிருந்த ஜனக் கூட்டம் வருவது தெரிந்தது. அந்த ஜன சமுத்திரத்தின் நடுவே கரிய பெரிய திமிங்கலங்கள் போல் நூற்றுக்கணக்கில் யானைகள் காணப்பட்டன. கடல் நீரில் பிரதிபலிக்கும் விண் மீன்களைப் போல் ஆயிரம் ஆயிரம் தீவர்த்திகள் ஒளி வீசின. ஜனங்களோ லட்சக்கணக்கில் இருந்தார்கள்.

         வந்தியத்தேவன், ''இது என்ன? பகைவர்களின் படை எடுப்பைப்போல் அல்லவா இருக்கிறது என்றான்.

       ''இல்லை, இல்லை! இதுதான் இந்த இலங்கை நாட்டிலேயே மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழா!" என்றார் இளவரசர். 

      ஊர்வலம் நெருங்கி வர வர வந்தியத்தேவனுடைய வியப்பு அதிகமாகிக்கொண்டிருந்தது. அந்த மாதிரி காட்சியை அவன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை.

       முதலில் சுமார் முப்பது யானைகள் அணிவகுத்து வந்தன. அவ்வளவும் தங்க முகபடாங்களினால் அலங்கரிக்கப்பட்ட யானைகள். அவற்றில் நடுநாயமாக வந்த யானை எல்லாவற்றிலும் கம்பீரமாக இருந்ததுடன், அலங்காரத்திலும் சிறந்து விளங்கியது. அதன் முதுகில் நவரத்தினங்கள் இழைத்த தங்கப் பெட்டி ஒன்று இருந்தது. அதன்மேல் ஒரு தங்கக் குடை கவிந்திருந்தது. நடுநாயகமான இந்த யானையைச் சுற்றியிருந்த யானைகளின் மீது புத்த பிக்ஷுக்கள் பலர் அமர்ந்து வெள்ளிப் பிடிபோட்ட வெண் சாமரங்களை வீசிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு இடையிடையே குத்து விளக்குகளையும், தீவர்த்திகளையும், இன்னும் பலவித வேலைப்பாடமைந்த தீபங்களையும் ஏந்திக்கொண்டு பலர் வந்தார்கள். கரிய குன்றுகளையொத்த யானைகளின் தங்க முகபடாங்களும் மற்ற ஆபரணங்களும் பிக்ஷக்களின் கைகளில் அந்த வெண்சாமரங்களும் பல தீபங்களின் ஒளியில் தகதகவென்று பிரகாசித்துக் கண்களைப் பறித்தன.

 யானைகளுக்குப் பின்னால் ஒரு பெரும் ஜனக் கூட்டம். அந்தக் கூட்டத்தின் மத்தியில் சுமார் நூறு பேர் விசித்திரமான உடைகளையும், ஆபரணங்களையும் தரித்து நடனமாடிக்கொண்டு வந்தார்கள். அவர்களில் பலர் உடுக்கையைப் போன்ற வாத்தியங்களைத் தட்டிக்கொண்டு ஆடினார்கள். இன்னும் பலவகை வாத்தியங்களும் முழங்கின. அப்பப்பா! ஆட்டமாவது ஆட்டம்! கடம்பூர் அரண்மனையில் தேவராளனும், தேவராட்டியும் ஆடிய வெறியாட்டமெல்லாம் இதற்கு முன்னால் எங்கே நிற்கும்! சிற்சில சமயம் அந்த ஆட்டக்காரர்கள் விர்ரென்று வானில் எழும்பிச் சக்கராகாரமாக இரண்டு மூன்று தடவை சுழன்று விட்டுத் தரைக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் சுழன்றபோது அவர்கள் இடையில் குஞ்சம் குஞ்சமாகத் தொங்கிக் கொண்டிருந்த துணி மடிப்புக்கள் பூச்சக்கரக் குடைகளைப் போலச் சுழன்றன. இவ்விதம் நூறு பேர் சேர்ந்தாற்போல் எழும்பிச் சுழன்றுவிட்டுக் கீழே குதித்த காட்சியைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லைதான்! இரண்டாயிரம் கண்களாவது குறைந்த பட்சம் வேண்டும். ஆனால் அத்தகைய சமயங்களில் எழுந்த வாத்திய முழக்கங்களைக் கேட்பதற்கோ இரண்டாயிரம் செவிகள் போதமாட்டா! நிச்சயமாக இரண்டு லட்சம் காதுகளேனும் வேண்டும். அப்படியாக உடுக்கைகள், துந்துபிகள், மத்தளங்கள், செப்புத் தாளங்கள், பறைகள், கொம்புகள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் கேட்போர் காதுகள் செவிடுபடச்செய்தன!

 அல்லற்பட்டு ஆற்றா தழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை 

 கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படை கருவியாகும்.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் 

ஒருவந்தம் ஒல்லைக் கெடும் 

 குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசன் மிகவும் விரைவாக கெட்டுப் போய் அழிவை அடைவான்.

 (இலங்கை நாட்டு மக்களின் மனநிலையை மேற்சொன்ன காட்சி விளக்கியதல்லவா! படையெடுத்துச் சென்ற நாட்டின் மக்களே இப்படி கொண்டாடி வாழும்பொழுது... அவர்கள் எங்கே கண்ணீர் வடிக்க போகிறார்கள்... குடிமக்களுக்கு எங்கிருந்து அச்சம் வரும்! அரசனின் ஆட்சி எப்படி அழியும். நம் பொன்னியின் செல்வரின் வெண்கொற்றக் குடை பொதுமக்களுக்கு அன்பையும் அறனையும் போதிப்பதாக இருந்ததே!... மக்களுக்கு பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கியதே !... "மன்னருக்கு மண்ணுதல் செங்கோன்மை" என்றுணர்ந்து முறையாய் ஆட்சி செய்த மன்னவன் அவன்...)

 கல்கி அவர்கள் தனது ஐந்தாவது பாகத்தில் நிறைவாக சில வரிகள் குறிப்பிடுகின்றார்.

 * பொன்னியின் செல்வர் வந்தியதேவருடன் பெரிய கடற்படை தயாரித்துக் கொண்டு கடற் கொள்ளைக் காரர்களை அடக்கி சோழ சாம்ராஜியத்தைக் கடல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளில் நிலைநாட்டுகிறார்.

 * உத்தமசோழருக்கு பட்டம் கட்டி 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்ததும் பொன்னியின் செல்வர் சிங்காசனம் ஏறுகிறார்.' இராஜ ராஜ சோழன்' என்ற பட்டத்துடன் நீண்ட காலம் சோழர் சாம்ராஜ்யத்தை ஆளுகிறார்...

 (இராஜராஜ சோழன் இன்றும் நம் உள்ளங்களையெல்லாம் ஆண்டு கொண்டுதானிருக்கிறார் தஞ்சை பெரிய கோயிலுக்குள் பொதிந்து...)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com