திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

பாகம் 44

அதிகாரங்கள் - 62, 63 ஆழ்வினையுடைமை, இடுக்கண் அழியாமை

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு

பிறருக்கு உதவி செய்தல் எனும் மேம்பட்ட நிலைமை - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்து இருக்கிறது. 

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.

துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்த துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.

(முந்தைய நாளில்தான் சேனாதிபதி பூதி விக்ரமகேசரியின் வசவுச்சொற்களுக்கு ஆளாகியிருந்தாள் பூங்குழலி. இதோ அந்த வசவுகள்...)

 "ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். இளவரசருக்கு எதோ உதவி செய்துவிட்டபடியால் அவர் பேரில் பாத்தியதை கொண்டாடலாம்  என்று எண்ணாதே! கடலில் வலை போட்டு மீன் பிடிப்பதோடு நிறுத்திக்கொள்! இளவரசரை வலை போட்டுப் பிடிக்கலாம் என்று ஆசைப்படாதே! ஜாக்கிரதை, பெண்ணே! இனி அவர் அருகில் நெருங்கினாலும் உனக்கு ஆபத்து வரும்!" என்றார் சேனாதிபதி .அவருடைய குரல் அப்போது மிகக் கடுமையாக இருந்தது.

(அப்போதும் மனம் சோர்ந்து விடாமல் மீண்டும் அந்த சுழிக் காற்றின்போது இளவரசரைத் தேடி கடலுக்குள் பயணம் செய்யும் பூங்குழலியின் நெஞ்சத்தை என்ன வென்று சொல்வது. இவள் இடும்பைக்கு இடும்பை தருகிறவள்தான்... 

(கடல் - சுழிக்காற்று - அலைகளுக்கிடையே ஆபத்தில் வந்தியதேவனும் அருண்மொழிவர்மனும்... கரையில் பூங்குழலி...)

         பொழுது விடிந்து அவள் நன்றாய் விழித்தெழுந்தபோது சுழிக்காற்றின் கோலாகலம் ஒருவாறு அடங்கி விட்டிருந்தது. இடியில்லை; மின்னல் இல்லை. மழையும் நின்று போயிருந்தது. எழுந்து கடற்கரைக்குச் சென்றாள். நேற்றிரவு போல் அவ்வளவு பெரிய அலைகள் இப்போது கடலில் அடிக்கவில்லை. ஆயினும் கடல் இன்னும் கொந்தளிப்பாகவே இருந்தது. முன்னாளிரவு சுழிக்காற்று அத்தீவை என்ன பாடுபடுத்திவிட்டது என்பதற்கு அறிகுறியான காட்சிகள் நாலாபக்கமும் காணப்பட்டன. வேருடன் பெயர்ந்து தரையில் விழுந்து கிடந்த மரங்களும், முடிகள் வளைந்து தாழ்ந்திருந்த நெடிய பெரிய மரங்களும் காட்சி அளித்துக்கொண்டிருந்தன.

பூங்குழலி அக்காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது கடலில் சற்றுத் தூரத்தில் ஒரு கட்டுமரம் மிதப்பது போல் தெரிந்தது. அது கடற்கரையோரத்து அலைகளினால் பலதடவை அப்படியும் இப்படியும் அலைப்புரண்ட பிறகு கடைசியாகக் கரையில் வந்து ஒதுங்கியது. அப்போதுதான் அதிலே ஒரு மனிதன் இருப்பதைப் பூங்குழலி கவனித்தாள். ஓடிப் போய்ப் பார்த்தான். கட்டுமரத்தில் கட்டப்பட்டிருந்த அந்த மனிதன் குற்றுயிராயிருந்தான். அவனைக் கட்டு அவிழ்த்து விட்டு ஆசுவாசப்படுத்தினான். அவன் ஈழத்துக் கடற்கரைக் கிராமம் ஒன்றைச் சேர்ந்த வலைஞன். மீன் பிடிக்கப்போன இடத்தில் சுழிக் அகப்பட்டுக்கொண்டதாகக் கூறினான். தன்னுடன் இருந்த தோழனைக் கடல் இரையாக்கிக் கொண்டதாகவும் தான் பிழைத்தது புனர்ஜன்மம் என்றும் தெரிவித்தான். இன்னும் முக்கியமான ஒரு செய்தியையும் அவன் கூறினான்.

"முன்னிரவு நேரத்தில், கடுமையான சுழிக்காற்று அடித்துக் கொஞ்சம் நின்றது போலிருந்தது. எங்களைச் சுற்றிலும் காரிருள் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பேரிடி இடித்தது. அப்போது தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் இரண்டு மரக்கலங்கள் தெரிந்தன. ஒரு மரக்கலம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அந்தப் பயங்கரமான காட்சியைச் சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் மனிதர்கள் இருந்ததாக தெரியவில்லை. சற்றுத் தூரத்தில் இன்னொரு மரக்கலமும் நிற்கக்கண்டோம். அதில் மனிதர்களின் அவசர நடமாட்டமும் தெரிந்தது. பிறகு தீப்பிடித்த கப்பல் கடலில் முழுகிவிட்டது. மற்றொரு மரக்கலம் இருட்டில் மறைந்து விட்டது!" என்று அம்மனிதன் தட்டுத் தடுமாறிக் கூறினான்.

       இதைக் கேட்டவுடனே பூங்குழலிக்கு இளவரசரை ஏற்றிச் சென்ற கப்பல் அவற்றில் ஒன்றாயிருக்குமோ என்ற ஐயம் உதித்தது. அப்படி இருக்க முடியாது என்று நிச்சயம் அடைந்தாள். கடலில் எத்தனையோ கப்பல்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அதைப்பற்றி நமக்கு என்ன கவலை? ஆனாலும் தீப் பிடித்த கப்பலில் இருந்தவர்களில் சிலர் கடலில் விழுந்திருக்க கூடும். இந்தக் கட்டுமரத்து வலைஞனைப் போல் அவர்களில் யாராவது கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கொண்டு தத்தளிக்கக் கூடும். அவர்களுக்கு ஏன் நாம் உதவி செய்யக்கூடாது? படகில் ஏறிச் சென்று அப்படித் தத்தளிக்கிறவர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஏன் கரை சேர்க்கக் கூடாது? பின்னே, இந்த ஜன்மம் எதற்காகத்தான் இருக்கிறது?...

         அவ்வளவுதான்; இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, பூங்குழலி படகைக் கட்டவிழ்த்து நிமிர்த்திக் கடலில் தள்ளி விட்டாள். தானும் எறிக்கொண்டாள். அவளுடைய இரும்புக் கரங்களின் பலம் முழுவதையும் உபயோகித்துத் துடுப்பை வலித்தாள். கரையில் வந்து மோதிய அலைகளைத் தாண்டி அப்பால் போகும் வரையில் மிகக் கடினமான வேலையாயிருந்தது. அப்புறம் அவ்வளவு கஷ்டமாக இல்லை. வழக்கம் 

போல் சர்வசாதாரணமாக அவளுடைய கரங்கள் துடுப்பை வலித்தன. படகு உல்லாசமாக ஆடிக்கொண்டு மெள்ள மெள்ள நகர்ந்து சென்றது.

(கடலில் அருள் மொழிவர்மனும் வந்தியத்தேவனும்)

       பாய்மரக் கட்டையைப் பிடித்துக்கொண்ட இளவரசரும், வந்தியத்தேவனும் அலைகடலில் மொத்துண்டு மொத்துண்டு மிதந்துகொண்டிருந்தார்கள். அன்று ஓர் இரவுதான் அவர்கள் அவ்வாறு கடலில் மிதந்தார்கள். ஆனால், வந்தியத்தேவனுக்கு அது எத்தனையோ யுகங்கள் எனத் தோன்றியது. அவன் சீக்கிரத்திலேயே நிராசை அடைந்து விட்டான்; பிழைத்துக் கரையேறுவோம் என்ற நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டான்.

       ஒவ்வொரு தடவை அலை உச்சிக்கு அவன் போய்க் கீழே வந்தபோதும், "இத்துடன் செத்தேன்" என்று எண்ணிக்கொண்டான். மறுபடியும் உயிரும் உணர்வும் இருப்பதைக் கண்டு வியந்தான்.

         அடிக்கடி இளவரசரைப் பார்த்து, 'என்னுடைய அவசர புத்தியினால் தங்களையும் இந்த ஆபத்துக்கு உள்ளாக்கினேனே" என்று புலம்பினான்.

        இளவரசர் அவனுக்கு ஆறுதல் கூறித் தைரியம் ஊட்டி வந்தார். "மூன்று நாள், நாலு நாள் வரையில் கடலில் இம்மாதிரி மிதந்து பிழைத்து வந்தவர்கள் உண்டு” என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

      "நாம் கடலில் விழுந்து எத்தனை நாள் ஆயின" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

      'இன்னும் ஒரு ராத்திரிகூட ஆகவில்லையே?" என்றார் இளவரசர். 

         "பொய்! பொய்! பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும்'' என்றான் வந்தியத்தேவன்.

       கொஞ்சநேரத்துக்கெல்லாம் அவனுக்கு இன்னொரு கஷ்டம் ஏற்பட்டது. தொண்டை வறண்டுபோய்த் தாகம் எடுத்தது. தண்ணீரிலேயே மிதந்துகொண்டிருந்தான்; ஆனால் தாகத்துக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை. இது பெரிய சித்திரவதையாயிருந்தது. இளவரசரிடம் கூறினான்.

        "கொஞ்சம் பொறுமையாயிரு! சீக்கிரம் பொழுது விடியும்! எங்கேயாவது கரையிலே போய் ஒதுங்குவோம்” என்றார். இளவரசர்.

       சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தான்; முடியவில்லை. "ஐயா! என்னால் இந்தச் சித்திரவதையைப் பொறுக்க முடியாது. கட்டை அவிழ்த்து விடுங்கள்! கடலில் முழுகிச் சாகிறேன்!'' என்றான்

இளவரசர் மீண்டும் தைரியம் கூற முயன்றார். ஆனால் பலிக்கவில்லை. வந்தியத்தேவனுக்கு வெறி மூண்டது. தன்னுடைய கட்டுக்களைத் தானே அவிழ்த்துக்கொள்ள முயன்றான். இளவரசர் அதைப் பார்த்தார். அருகில் நெருங்கிச் சென்று அவனுடைய தலையில் ஓங்கி இரண்டு அறை அறைந்தார். வந்தியத்தேவன் உணர்வை இழந்தான்!

      அவன் மறுபடி உணர்வு பெற்றபோது பொழுது விடிந்து வெளிச்சமாயிருப்பதைக் கண்டான். அலைகளின் ஆரவாரமும் சிறிது அடங்கியிருந்தது. சூரியன் எங்கேயோ உதயமாகியிருக் வேண்டும். ஆனால், எங்கே உதயமாகியிருக்கிறது என்று பார்க்க முடியவில்லை.

      இளவரசர் அவனை அன்புடன் நோக்கி, "தோழா! சமீபத்தில் எங்கேயோ கரை இருக்கவேண்டும். தென்னை மரம் ஒன்றின் உச்சியைச் சற்று முன் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரு!" என்று சொன்னார்.

         ''இளவரசே! என்னைக் கைவிட்டுவிடுங்கள்! தாங்கள் எப்படியாவது தப்பிப் பிழையுங்கள்!'' என்றான் வந்தியதேவன்.

          ''வேண்டாம்! அதைரியப்படாதே! உன்னை அப்படி நான் விட்டுவிடமாட்டேன்!- ஆகா! அது என்ன! யாரோ பாடுகிற குரல் போல் தொனிக்கிறதே!" என்றார் இளவரசர்.

         ஆம்; அப்போது அவர்களுடைய காதில் பூங்குழலி படகிலிருந்து பாடிய பாட்டுத்தான் கேட்டது.

"அலைகடல் கொந்தளிக்கையிலே

அகக்கடல்தான் களிப்பதுமேன்?"

       என்ற கீதம் அவர்களுடைய காதில் அபய கீதமாகத் தொனித்தது. உடற்சோர்வும் மனச்சோர்வும் உற்று, முக்கால் பிராணனை இழந்திருந்த வந்தியத் தேவனுக்குக்கூட அந்தக் கீதம் புத்துயிர் அளித்து உற்சாகம் ஊட்டியது.

        ''இளவரசே! பூங்குழலியின் குரல்தான் அது! படகு ஓட்டிக்கொண்டு வருகிறாள். நாம் பிழைத்துப் போனோம்!" என்று சொன்னான்.

       சிறிது நேரத்துக்கெல்லாம் படகு அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. நெருங்கி நெருங்கி அருகில் வந்தது. பூங்குழலி, "இது உண்மையில் நடப்பதுதானா?" என்று சந்தேகித்துச் செயலிழந்து நின்றாள். இளவரசர், வந்தியத் தேவனைக் கட்டு அவிழ்த்துவிட்டார். முதலில் தாம் படகிலே தாவி ஏறிக்கொண்டார். பின்னர் வந்தியத் தேவனையும் ஏற்றி விட்டார். பூங்குழலி கையில் பிடித்த துடுப்புடனே சித்திரப்பாவையைப் போல் செயலற்று நின்றாள்.

(இங்கு தாளாண்மையும் (முயற்சி என்று சொல்லக்கூடிய உயர்ந்த குணமும்) வேளாண்மையும் (உபகாரம் செய்தல் எனும் மேம்பாடு) பெற்றவர்கள் என யாரைச் சொல்வது? பூங்குழலியையா ?அருள்மொழி வர்மரையா அல்லது வந்தியத் தேவனையா ?...உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம் நண்பர்களே...

பொருட்பாலின் முதல் இயலாம் ‘அரசியல்’ கண்டு நிறைந்தோம்.

அடுத்ததாக ‘அமைச்சியல்’ நுழைந்து பார்ப்போம்... அதுவரை பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில் யார் நம்முடன் எப்படியெல்லாம் பயணிக்கப் போகிறார்கள் என்று கற்பனை செய்துகொண்டிருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com