திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 47        

அதிகாரம் 69 தூது

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால்  தக்க தறிவதாந் தூது

 கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல் கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும்,  உரிய நேரத்தில் உணர வேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதுவனாவான்.

 (திருப்புறம்பியம் யுத்தம் நடந்த இடத்தில் பிரிதிவீபதி மன்னனின் பள்ளிப்படைக் கோயில் அருகே ஆழ்வார்க்கடியான்)

  அத்தகைய கொடூரமான பயங்கர யுத்தம் நடந்த ரணகளம் சில காலம் புல் பூண்டுகள் முளையாமல் கிடந்தது. அந்தப் பக்கம் மக்கள் போவதேயில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு அங்கே காடு மண்ட ஆரம்பித்தது. பள்ளிப்படைக் கோயிலைச் சுற்றிக் காடு அடர்ந்தது. புதர்களில் நரிகள் குடிபுகுந்தன. இருண்ட மரக்கிளை களில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன. நாளடைவில் அப் பள்ளிப்படைக் கோயிலுக்கு யாரும் போவதை நிறுத்திவிட்டார்கள். எனவே, கோயிலும் நாளுக்கு நாள் தகர்ந்துபோய் வந்தது. நமது கதை நடக்கும் காலத்தில் பாழடைந்து கிடந்தது.

         இத்தகைய பாழடைந்த பள்ளிப்படைக் கோயிலுக்கு இருட்டுகிற நேரத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்தான். அக் கோயிலின்மேல் மண்டப விளிம்பில் அமைந்த காவல் பூத கணங்கள் அவனைப் பயமுறுத்தப் பார்த்தன. ஆனால், அந்த வீர வைஷ்ணவ சிகாமணியா பயப்படுகிறவன்? பள்ளிப்படைக் கோயில் மண்டபத்தின் மீது தாவி ஏறினான். மண்டபத்தின் மீது கவிந்திருந்த மரக்கிளையின் மறைவில் உட்கார்ந்துகொண்டான். அவனுடைய கண்கள் அடர்த்தியான இருளைக் கிழித்துக்கொண்டு பார்க்கும் சக்தியைப் பெற்றிருந்தன. அவனுடைய செவிகளும் அவ்வாறே மிக மெல்லிய ஓசையையும் கேட்கக்கூடிய கூர்மை பெற்றிருந்தன.

        இருட்டி ஒரு நாழிகை; இரண்டு நாழிகை; மூன்று நாழிகையும் ஆயிற்று. சுற்றிலும் சூழ்ந்திருந்த அந்தகாரம் அவனை அடியோடு அமுக்கி, மூச்சுத் திணறச் செய்தது. அவ்வப்போது காட்டு மரங்களினிடையே சலசலவென்று ஏதோ சத்தம் கேட்டது. அதோ ஒரு மரநாய் மரத்தின்மேல் ஏறுகிறது! அதோ ஒரு ஆந்தை உறுமுகிறது! இந்தப் பக்கம் ஒரு கோட்டான் கூவுகிறது! மரநாய்க்குப் பயந்து ஒரு பறவை சடசடவென்று சிறகை அடித்துக்கொண்டு மேல் கிளைக்குப் பாய்கிறது. அதோ, நரிகள் ஊளையிடத் தொடங்கிவிட்டன.

       தலைக்கு மேல் ஏதோ சத்தம் கேட்டது. அண்ணாந்து பார்த்தான். அணிலோ, ஓணானோ, அல்லது அத்தகைய வேறொரு சிறிய பிராணியோ மரக்கிளைகளின் மீது தாவி ஏறிற்று.

       மரக்கிளைகளின் இடுக்குகளின் வழியாக வானத்தில் ஒரு சிறு பகுதி தெரிந்தது. விண்மீன்கள் 'முணுக் முணுக்' என்று மின்னிக்கொண்டு கீழே எட்டிப்பார்த்தன. அந்தத் தனிமை மிகுந்த  கனாந்தகாரத்தினிடையே வானத்து நட்சத்திரங்கள் அவனுடன் நட்புரிமை கொண்டாடுவது போல் தோன்றின. எனவே, ஆழ்வார்க்கடியான் மரக்கிளைகளின் வழியாக எட்டிப் பார்த்த நட்சத்திரங்களைப் பார்த்து மெல்லிய குரலில் பேசினான்: “ஓ! நட்சத்திரங்களே! உங்களை இன்றைக்குப் பார்த்தால் பூவுலக மக்களின் அறிவீனத்தைப் பார்த்துக் கேலி செய்து கண்சிமிட்டிச் சிரிப்பவர்களைப்போலத் தோன்றுகிறது. சிரிப்பதற்கு உங்களுக்கு வேண்டிய காரணம் உண்டு. நூறு வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் நடந்த பெரும் போரையும், போர் நடந்த பிறகு இங்கே வெகுநாள் வரை இரத்த வெள்ளம் பெருகிக் கிடந்ததையும் பார்த்திருக்கிறீர்கள். மனிதர்கள் எதற்காக இப்படி ஒருவரையொருவர் பகைக்க வேண்டும் என்று அதிசயிக்கிறீர்கள். எதற்காக இப்படி மனித இரத்தத்தைச் சிந்தி வெள்ளமாக ஓடச் செய்யவேண்டும் என்று வியக்கிறீர்கள். இதற்குப் பெயர் வீரமாம்.''

       "ஒரு மனிதன் இறந்து நூறு வருஷம் ஆகியும் அவனிடம் பகைமை பாராட்டுகிறார்கள்! இந்தப் பள்ளிப்படை பகைவனுடைய பள்ளிப்படையாம்! பகைவன் பள்ளிப்படைக்கு அருகில் கூடி யோசிக்கப் போகிறார் களாம், செத்துப் போனவர்களின் பெயரால் உயிரோடிருப்பவர்களை இம்சிப்பதற்கு! வானத்து விண்மீன்களே! நீங்கள் ஏன் சிரிக்க மாட்டீர்கள்? நன்றாய்ச் சிரியுங்கள்!"

       'கடவுளே! இங்கு வந்தது வீண்தானா? இன்றிரவெல்லாம் இப்படியே கழியப்போகிறதா? எதிர்பார்த்த ஆட்கள் இங்கே வரப்போவதில்லையா? என் காதில் விழுந்தது தவறா? நான் கவனிக்கவில்லையா? அல்லது அந்த மச்சஹஸ்த சமிக்ஞையாளர்கள் தங்கள் யோசனையை மாற்றிக்கொண்டு வேறிடத்துக்குப் போய்விட்டார்களா! என்ன ஏமாற்றம்? இன்றைக்கு மட்டும் நான்
ஏமாந்து போனால் என்னை நான் ஒருநாளும் மன்னித்துக் கொள்ள முடியாது..! அதோ சிறிது வெளிச்சம் தெரிகிறது! அது என்ன? வெளிச்சம் மறைகிறது; மறுபடி தெரிகிறது. சந்தேகமில்லை. அதோ, சுளுந்து கொளுத்திப் பிடித்துக்கொண்டு யாரோ ஒருவன் வருகிறான்! இல்லை இரண்டு பேர் வருகிறார்கள். காத்திருந்தது வீண் போகவில்லை!...'

        வந்தவர்கள் இருவரும் பள்ளிப்படையைத் தாண்டிக்கொண்டு சிறிது அப்பால் போனார்கள். அடர்ந்த காட்டுக்கு மத்தியில் சிறிது இடைவெளி இருந்த இடத்தில் நின்றார்கள். ஒருவன் உட்கார்ந்துகொண்டான். கையில் சுளுந்து வைத்திருந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். யாருடைய வரவையோ அவன் எதிர்பார்த்தான் என்பதில் சந்தேகமில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இதற்கு முன் இந்த இடத்துக்கு வந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த இருளில், அடர்ந்த காட்டில், வழிகண்டுபிடித்துக்கொண்டு வரமுடியுமா?

       முதலில் வந்தவர்களும் பின்னால் வந்தவர்களும் ஏதோ பேசிக்கொண்டார்கள். ஆனால், ஆழ்வார்க்கடியான் காதில் அது ஒன்றும் விழவில்லை.

        பிறகு இன்னும் இரண்டுபேர் வந்தார்கள். முன்னால் வந்தவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். கடைசியாக வந்தவர்களில் ஒருவன் கையில் ஒரு பை கொண்டு வந்திருந்தான். அதை அவன் அவிழ்த்து அதனுள் இருந்தவற்றைக் கொட்டினான். சுளுந்து வெளிச்சத்தில் தங்க நாணயங்கள் பளபளவென்று ஒளிர்ந்தன.

கொட்டிய மனிதன் பைத்தியம் பிடித்தவனைப்போல் சிரித்து, “நண்பர்களே! சோழநாட்டுப் பொக்கிஷத்தைக் கொண்டே சோழ ராஜ்யத்துக்கு உலை வைக்கப் போகிறோம்! இது பெரிய வேடிக்கையல்லவா?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கலகலவென்று சிரித்தான்.

         ''ரவிதாஸரே! இரைச்சல் போடவேண்டாம். கொஞ்சம் மெதுவாகப் பேசலாம்!'' என்றான் ஒருவன்.

         "ஆகா! இங்கு இப்படிப் பேசினால் என்ன? நரிகளும், மரநாய்களும், கூகைகளும், கோட்டான்களுந்தான் நம் பேச்சைக் கேட்கும்! நல்லவேளையாக அவை யாரிடமும் போய்ச் சொல்லாது!" என்றான் ரவிதாஸன்.

        ''இருந்தாலும் கொஞ்சம் மெதுவாகப் பேசுவதே நல்லது அல்லவா?"

        பிறகு அவர்கள் மெல்லப் பேசத் தொடங்கினார்கள். ஆழ்வார்க்கடியானுக்கு அவர்களுடைய பேச்சைக் கேட்டறியாமல் மண்டபத்தின் மேல் உட்கார்ந்து இருப்பது வீண் என்று தோன்றியது. மண்டபத்திலிருந்து இறங்கிக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் நின்று ஒட்டுக்கேட்டே தீரவேண்டும். அதனால் விளையும் அபாயத்தையும் சமாளித்துக்கொள்ள வேண்டும். இவ்விதம் எண்ணி ஆழ்வார்க்கடியான் மண்ட பத்திலிருந்து இறங்க முயன்றபோது, மரக்கிளை களில் அவன் உடம்பு உராய்ந்ததால் சலசலப்புச்சத்தம் உண்டாயிற்று.

       பேசிக்கொண்டிருந்த மனிதர்களில் இருவர் சட்டென்று குதித்து எழுந்து, "யார் அங்கே?" என்று கர்ஜித்தார்கள்.

        ஆழ்வார்க்கடியானுடைய இதயத் துடிப்பு சிறிது நேரம் நின்று போயிற்று. அவர்களிடம் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஓடினாலும் காட்டில் சலசலப்புச் கேட்கத்தானே செய்யும்! அவர்கள் வந்து தன்னைப் பிடித்துவிடலாம் அல்லவா?

       அச்சமயத்தில், கோட்டான் ஒன்று சப்பட்டையை விரித்து உயர்த்தி அடித்துக்கொண்டதுடன் 'ஊம் ஊம்" என்று உறுமியது.

       தக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக்கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக்கொண்டார்கள்.

      "அடே! இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்திவிட்டது. வெட்டுடா அதை!" என்றான் ஒருவன்.

        "வேண்டாம்! உங்கள் கத்திகளை வேறு முக்கியமான காரியங்களுக்குப் பத்திரப்படுத்தி வையுங்கள். நம் பகைவர்களைப் பூண்டோடு ஒழிப்பதற்குக் கூராக்கி வையுங்கள்…!

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து  எண்ணி உரைப்பான் தலை 

தன் கடமை அறிந்து ஏற்ற காலமும் சூழலும் இடமும் தெளிந்து சிந்தித்து செயல் முடிப்பவனே தூதரில் தலைமையானவன்.

 தலை -  ஆழ்வார்க்கடியான்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com