திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 23

திருக்குறளில் 23 ஆம் அதிகாரம் ஈகை - 24 ஆம் அதிகாரம் புகழ். ஈகையும் புகழும் ஒன்றோடொன்று இயந்தவை எனலாம்.

 சாதலின் இன்னாத  தில்லை இனிததூஉம் 

ஈத லியையாக் கடை 

சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவருக்கு ஒரு பொருள் கொடுக்க முடியா நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.

இப்படி ஒரு உயர் பண்பு அக்கால  மானுடர்தம் வாழ்வில் உறைந்து, உயிர்த்து, நின்றது. தன்னிடம் இருக்கும் பொருளைத் தந்து மகிழ்விப்பது ஒரு வகை ஈகை என்றால்  தன்னாலான உதவிகளை பிறருக்கு செய்வதும் மற்றொரு வகை ஈகையாகும். இங்கு பூங்குழலி, சேந்தன் அமுதன், வந்தியத்தேவன் மூவரும் விஷக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டு சுயநினைவின்றி கிடக்கும் அருள்மொழிவர்மரைப் பாதுகாக்க சந்திக்கும் இடர்பாடுகளில் ஒரு காட்சி...

"வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக்கொண்டார்கள், பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.

கால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் உதயமாகியிருந்தது. 

கரையில் இளவரசரை ஒரு மரத்தின் பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் பக்கத்தில் இருக்கச் செய்துவிட்டு வந்தியத்தேவனும், சேந்தன் அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை மிகப்பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு வந்தார்கள்.

இளவரசர் கண் விழித்தார். மிக மெல்லிய குரலில் "தாகமாயிருக்கிறது!" என்றார்

பக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துக்கொண்டிருந்த பூங்குழலி கெண்டியிலிருந்த பாலை அவருடைய வாயில் ஊற்றினாள்.    

சிறிதளவு பால் அருந்திய பிறகு இளவரசர், “பூங்குழலி, நீதானா? சொர்க்க லோகத்தில் யாரோ ஒரு தேவ கன்னிகை என் வாயில் அமுதத்தை ஊற்றுவது போலத்தோன்றியது" என்றார்.

கற்பக விருட்சம் பூங்குழலியின் மீது வர்ண மலர்களைச் சொரிந்தது. தேவலோகத்துக் கின்னரி வாத்தியங்கள் இன்ப கீதங்களைப் பொழிந்தன. ஏன்? பூங்குழலியின் மேனி நரம்புகளே யாழின் நரம்புகளாகித் தெய்வ கானம் இசைத்தன. இளவரசரின் கனிவு செறிந்த மொழிகள் அவளுக்கு அத்தகைய போதையை அளித்தன.

 "இளவரசே! நான் தேவலோக கன்னிகை அல்ல; ஏழை ஓடக்காரப் பெண். தாங்கள் அருந்தியதும் தேவலோகத்து அமுதம் அல்ல. குழகர் கோயிலில் கிடைத்த பாலமுதம்!" என்றாள்.

"நீ தேவலோக கன்னிகையில்லையென்றால், நான் நம்பிவிடுவேனோ? வருணனின் திருப்புதல்வி அல்லவா நீ? சமுத்திரகுமாரி! எத்தனை தடவை எனக்கு நீ உயிர் அளித்திருக்கிறாய்? உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?'' என்றார் இளவரசர்.

''ஐயா! இன்னும் ஒரு பகலும், ஒரு இரவும் தங்களுடன் இருக்க இந்த ஏழையை அனுமதிக்க வேண்டும்" என்றாள் பூங்குழலி.

"அது எப்படி முடியும்? உடனே நான் பழையாறைக்குப் புறப்பட வேண்டுமே" என்றார் இளவரசர்.

 "இல்லை, தங்களை நாகைப்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும்படி செய்தி வந்திருக்கிறது.''

"யாரிடமிருந்து?''

"இளைய பிராட்டியிடமிருந்துதான்!''

"அது யார் அங்கே, இன்னொருவன்? வந்தியத்தேவனுடன் படகை இழுத்து வருகிறவன்?"

"என் அத்தான் சேந்தன் அமுதன். இளையபிராட்டி அவனிடந்தான் செய்தி அனுப்பியிருக்கிறார். தங்களை நாகைப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹாரத்திற்கு அழைத்துச் செல்லும்படி."

"ஆஹா! என் தமக்கையின் மனம் மாறி விட்டதா? எனக்கு முடிசூட்டும் ஆசை அகன்று விட்டதா? வெகுகாலமாக எனக்குப் புத்தசங்கத்தில் சேரவேண்டும் என்ற ஆசை உண்டு. புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷு ஆவேன். தூர தூர தேசங்களுக்கு யாத்திரை செய்வேன்; சாவகம் – கடாரம் மாயிருடிங்கம் – மாபப்பாளம் - சீனம்! ஆஹா! என்னுடைய பாக்கியமே பாக்கியம்; பூங்குழலி! வா, போகலாம்!" என்று கூறி இளவரசர் எழுந்து நின்றார்.

அவருக்கு இன்னும் முழுநினைவு வரவில்லை, சுர வேகத்திலேயே பேசுகிறார் என்று பூங்குழலி சந்தேகித்தாள். 

அதே சமயத்தில் தூரத்தில் ஓலமிடும்குரல் ஒன்று கேட்டது.

இளவரசர் திடுக்கிட்டு நின்று, "பூங்குழலி! அது என்ன?” என்றார்.

"ஆந்தை கத்துகிறது ஐயா!" என்றாள்.

"இல்லை? அது மனிதக் குரல்! ஏதோ பெரும் அபாயத்தில் சிக்கியவனின் அபயக்குரல்! அவனைக் காப்பாற்றி விட்டுப் போகலாம். புத்த சங்கத்தில் சேருவதற்கு முன்னால் ஒரு புண்ணிய காரியம் செய்யலாம்!!' என்று இவ்விதம் கூறிவிட்டு இளவரசர் பாய்ந்து ஓட முயன்றார். அந்த முயற்சியில் திடீரென்று கீழே விழுந்தார். பூங்குழலி அவரைத் தாங்கிக் கொண்டாள்.

படகைக் கரை சேர்த்தவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள். மீண்டும் உணர்ச்சியை இழந்துவிட்ட இளவரசரை அவர்கள் மெதுவாகத் தூக்கிக் கொண்டு போய்ப் படகில் பத்திரமாய்ச் சேர்த்துப் படுக்க வைத்தார்கள்.

கால்வாயில் படகு போக ஆரம்பித்தது. இளவரசரைத் தவிர்த்து, மற்ற மூவரும் இட நெருக்கடியுடன் அதில் உட்கார்ந்திருந்தார்கள்.

வந்தியதேவன், ''பூங்குழலி! நாலுபேரை இந்தப் படகு தாங்குவது கடினம். எப்படியும் நான் உங்களிடம் விடை பெற்றுக்கொள்ள வேண்டியவன். இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். இளவரசரைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு அதிகம் நான் சொல்லவேண்டியதில்லை!" என்று சொன்னான்

அவனுடைய குரல் தழுதழுத்தது. நிலாக் கிரணம் அவன் முகத்தில் விழுந்தபோது கண்களில் முத்துத் துளிகள் ஒளிவீசித் திகழ்ந்தன.

கோடிக்கரைக் காடு தாண்டியபிறகு இறங்கிச் செல்லலாமே? என் குதிரையையும் அங்கேதான் நிறுத்தி வைத்திருக்கிறேன். அடையாளம் நினைவிருக் கிறதல்லவா?” என்றான் சேந்தன் அமுதன்.

"வேண்டாம். நான் இங்கேயே இறங்கிக்கொள்கிறேன். குழகர் கோயில் பிராகாரத்தில் சற்று நேரம் படுத்துத் தூங்கிவிட்டுப் பொழுது விடிவதற்குள் எழுந்து புறப்படுகிறேன். இல்லாவிடில் நாளைக்குப் பிரயாணம் செய்ய முடியாது| வழியில் எவ்வளவு தடங்கல்களோ!" என்றான் வந்தியத்தேவன்.

பூங்குழலி அத்தனை நேரமும் தன் மடியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பொட்டணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

"இந்தா! குழகர் கோயில் பிரசாதம். இதைச் சாப்பிட்டு விட்டுத்தூங்கு!" என்றாள்.

"நீங்களும் ஒன்றும் சாப்பிடவில்லையே. உங்களுக்கு வேண்டாமா?"

"கோடிக்கரையிலிருந்து காத தூரம் கால்வாயில் போய் விட்டால் எத்தனையோ கிராமங்கள். நானாவது சேந்தனாவது போய் உணவு சம்பாதித்துக்கொண்டு வருவோம். உன் விஷயம் அப்படியல்ல. நீ ஒருவர் கண்ணிலும் படாமல் பழையாறை போய்ச்சேர வேண்டும் அல்லவா?"

"படகில் இளவரசர் இருக்கிறார் என்பதை நீங்களும் மறந்து விடக்கூடாது.''

"இந்தப் படகில் இருப்பவர் இளவரசர் என்று யார் நம்புவார்கள்? அதை பற்றிக் கவலைப்படாதே! எங்கள் பொறுப்பு. இந்த ஓட்டை படகை யாரும் கவனிக்க மாட்டார்கள்."

"சரி, அப்படியானால் இங்கேயே நான் இறங்கிக் கொள்கிறேன்."

 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால் மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும்.

"அகன்அமர்ந்து ஈதலின் நன்றே" "பணிவுடையன் இன்சொலன் ஆதல்" என்று இம்மூவரையும் ஈதலிற் சிறந்த கதாபாத்திரங்களாகப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம் அல்லவா நண்பர்களே...

(தொடரும்)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com