தோழி

தோழி

தில்லி குளிராகத்தான் இருந்தது. ஆனால், விறைக்கிற குளிர் இல்லை. குளிராக இருக்கும் என்று தெரிந்து ஒரு பிளேசரையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள் வித்யா.

கலாநிலையத்திற்கு ஆறேழு கம்பிளி பிளேசர்களை அண்ணாசாலையில் இருந்த கடைக்காரர்கள் கொண்டு வந்து காட்டினார்கள். கரு நீலம், கறுப்பு, ரத்த வண்ணமாய் இல்லாமல் ரம் வண்ணச் சிவப்பு. அடர் பச்சை, நீல மசி நிறத்தில் ஒன்று வான நீலத்தில் ஒன்று...

”வெளிர் நிறத்தில் ஒன்றுமில்லையா?”

“வெளிர் நிறத்தில் கோட்டுப் போடுவதில்லையேம்மா” என்றார் கடை சிப்பந்தி.

“நாம் போடுவோம்! என்ன சொல்ற?” என்றாள் வித்யா, பெரியநாயகியைப் பார்த்து. பெரியநாயகி மையமாகச் சிரித்து வைத்தாள். “நீங்க வெள்ளைக்காரர்கள் போலக் குழாயும் கோட்டும் போட்டுக்கப் போறீங்களாக்கா?” என்று கேட்டாள்

“பாண்ட் இல்லை. புடவைதான்.”

“புடவைக்கு மேல் கோட்டாக்கா?” வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் பெரியநாயகி. அவளுக்கு அது கோமாளித்தனமாக இருக்கும் என்று தோன்றியிருக்க வேண்டும்.

“ஆமாம்!’

“அக்கா!”

“நாம் எந்தக் கூட்டத்திலும் தனித்துவமாகத் தெரிய வேண்டும். நான் பார்த்திருக்கிறேன். தில்லியில் குளிர் என்றால் பெண்கள் ஷாலைப் போர்த்திக் கொண்டு வருவார்கள். எனக்கு ஷாலே பிடிக்காது. தமிழ், இந்தி சினிமாவில் பணக்கார கிழவி வேஷத்திற்குக் கொடுக்கிற உடை அது. சிலர் புடவைக்கு மேல் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு வருவார்கள். நான் அதெல்லாம் செய்யப்போவதில்லை. புடவை அதன் மேல் பிளேசர். நாம் ஒரு புது டிரெண்டை உருவாக்குவோம்!”

மிளகாய் பழ மைசூர் சில்க் புடவையும் அதன் மேல் முழங்கால் வரை நீண்ட வெளிர் பழுப்பு நிற -பீச் பழத்தைப் பிட்டால் உள்ளேயிருக்குமே அந்தப் பழுப்பு- பிளேசரும் அணிந்து பாராளுமன்ற வராந்தாவில் நடந்த போது எதிரே வந்தவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் நடையில் இருந்த மிடுக்கும் முகத்தில் இருந்த பொலிவும் அவர்களை நொடி நேரம் ஒதுங்கி நின்று வழிவிடச் செய்தது.

தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை நெருங்கிய போது அவைக்குள் பிரதமர் நுழைந்து கொண்டிருந்தார். அந்தக் குதிரை நடையில் என்ன கம்பீரம்! கூர்த்த மூக்கு. முன் நெற்றிக்கு மேல் சிகையில் ஓடிய வெள்ளி அலை. முரட்டுக் கதர் புடவையையும் தாண்டி முகத்தில் ஒரு ராஜகளை. அவர் தனது இருக்கையில் அமர்ந்து மேசை மீது இருந்த கண்ணாடிக் குவளையிலிருந்து நீர் பருகிய போது வெளிப்பட்ட பணக்கார நாசூக்கு.

வித்யா தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று  பிரதமரைப் பார்த்து வணங்கினாள். பதிலுக்கு வணங்கிய பிரதமர் மெல்லப் புன்னகைத்தார்.

அவையின் முதல் அரைமணி நேரம் மகா ‘போரா’க இருந்தது. பனிக்குலாய் அணிந்து வந்த கஷ்மீரைச் சேர்ந்த ஒருவரும் அவரை அடுத்து மூலகச்சமாக அணிந்த வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு வங்காளி ஒருவரும் ஆங்கிலத்தைக் குதறிக் கொண்டிருந்தார்கள். வித்யாவின் கவனம் அவற்றில் இல்லை. அடுத்த சில நிமிடங்களில் தான் நிகழ்த்தவிருக்கும் கன்னிப் பேச்சை மெளனமாக மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வித்யா ஜி ஃப்ரம் தமிழ்நாடு!” என்று பேச அழைத்தார் அவைத்தலைவர்

வித்யா எழுந்தாள். அவையை வணங்கினாள். அவைத் தலைவரை வணங்கினாள் “ மானனீய அத்யக்ஷ மஹோதய் !” என்று ஹிந்தியில் ஆரம்பித்ததும் அவையில் ஆச்சரியம் சூழ்ந்தது. “தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு புதிய உறுப்பினர் இந்தியில் பேசுகிறாரே” என்ற ஆச்சரியம். அரை நிமிடத்தில் அந்த ஆச்சரியம் ஆரவாரமாக மாறியது. தடதட என்று மேசைகள் தட்டப்பட்டன. “வாரே வாஹ்!” என்று யாரோ கூவினார்கள். “ முஜே பாத் கர்னே கே லியே, கம் ஸே கம் பந்த்ரஹ் மினிட் தே தேனா சாஹியே!” எனத் தான் பேசுவதற்குப் பதினைந்து நிமிடமாவது ஒதுக்க வேண்டும் எனக் கோரினாள் வித்யா

“ஓகே, புரோசீட்” என்றார் அவைத் தலைவர் ஆங்கிலத்தில்,

“நன்றி” என்று ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினாள் வித்யா.“நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இருக்கை 22 ஆண்டுகளுக்கு முன் எங்கள் மூத்த தலைவருக்கு ஒதுக்கிய இருக்கை. அதே இருக்கையை இன்று எனக்கு அளித்ததற்கு இன்னொரு நன்றி!”

வித்யாவின் ஆங்கில உச்சரிப்பின் துல்லியத்தையும் குரலின் இனிமையையும் கேட்ட பிரதமர், புரட்டிக் கொண்டிருந்த காகிதங்களிலிருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தார்.

“ 22 ஆண்டுகளுக்கு முன் அவர் பேசும் போது மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி பேசினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நானும் அதைப்பற்றியே பேச வேண்டியிருக்கிறது என்பது எத்தனை விசித்திரமான துர்பாக்கியம்! கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது பிரிவு தொடங்கப்பட்ட போது அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பாதி அளவு தமிழகத்திற்குத் தரப்படும் என்று பிரதமர் சொன்னார்”   இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர் வித்யாவைப் பார்த்து புன்னகைத்தார்

“ஆனால் தமிழ்நாடு கடும் மின்பற்றாக்குறையில் தவிக்கிறது. எனவே கல்பாக்கத்தில் உருவாகும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கே தர வேண்டும்” தமிழ்நாடு உறுப்பினர்கள் தடதடவென்று மேசையைத் தட்டினார்கள்.

வித்யா பேசி அமர்ந்த சிறிது நேரத்திற்குப் பின் அவையின் பணியாள் ஒரு துண்டுச் சீட்டைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தாள் வித்யா. “ இஃப் யூ ஆர் ஃப்ரீ, கம் ஃபார் டீ – என்று இரண்டுவரிக் கவிதை போல் எழுதப்பட்டு, அதன் கீழ் ஒரு சிறு கோடிட்டு, டுமாரோ என்று நீலமும் இல்லாத பச்சையும் இல்லாத டர்க்காய்ஸ் புளு மசியில் மயில்கழுத்து நிறத்தில் இடப்பக்கம் சாய்ந்த எழுத்துகளில் எழுதியிருந்தது. “யார் கொடுத்தது?” என்றாள் வித்யா? “பிரதான் மந்திரி ஜி” என்று பணியாள் கிசுகிசுத்தார். வித்யா நிமிர்ந்து பிரதமரைப் பார்த்தாள். அவர் மெல்லப் புன்னகைத்துத் தலையசைத்தார்.

மறுநாள் தில்லிப் பத்திரிகைகள் வித்யாவின் பேச்சை வெளியிட்டன. ‘ஆச்சரியம் ஆனால் உண்மை, இந்தியில் பேசிய தமிழக எம்பி’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைப்பிட்டிருந்தது. ‘எலக்ட்ரிபையிங் ஸ்பீச்’ என்றது இந்தியன் எக்ஸ்பிரஸ். ‘யங் பிளட் இன் எல்டர்ஸ் ஹவுஸ்’ என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியிருந்தது. வித்யாவின் பேச்சையும் அதன் அருகிலேயே 22 ஆண்டுகளுக்கு முன் அவளது தலைவர் பேசிய பேச்சையும் ஹிண்டு பிரசுரித்திருந்தது. தமிழ்நாட்டிலிருந்த எதிர்கட்சிப் பத்திரிகை அந்தப் பெரும் தலைவரோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்வதா என்று சாடியிருந்தது. இன்னொரு பத்திரிகை “இந்தியில் பேசுவது ஒரு விளம்பர ஸ்டண்ட்” என்று கேலி செய்திருந்தது. “ஒரு நல்ல தொடக்கம்” என்று தினமணி தலையங்கம் எழுதியிருந்தது.

மறுநாள் பெரியவர் போனில் அழைத்தார்

“எம்பி ஜீ நீங்க எப்படி இருக்கீங்க ஹை? பார்லிமெண்ட் எப்படி இருந்தது ஹை?”

“சார் கிண்டல் பண்ணாதீங்க”

“இல்லம்மா சந்தோஷத்தில சொல்றேன்”

“பாயசம் குடிச்சீங்களாக்கும்!”

பெரியவர் கடகடவென்று சிரித்தார்

“எதுக்கு உன்னை அனுப்பணும்னு நினைச்சேனோ அது நடந்திருச்சு. என் நோக்கம் நிறைவேறியிருச்சு. அந்த சந்தோஷம்”

“என்ன நோக்கம்?”

“நோக்கம் அல்ல, நோக்கங்கள் . இரண்டு நோக்கங்கள். ஒன்று அரசு, இன்னொன்று அரசியல்”

“அவைதான் என்ன?”

“அடுத்த எலெக்ஷனுக்குள்ள நாம ஜனங்களுக்கு ஏதாவது பெரிசா செய்தாகணும். அதற்கு பணம் வேணும் அது தில்லியிலிருந்துதான் வரணும்”

“அரசியல்னீங்களே?”

“நம்ப எதிர்கட்சியோட அவங்க கூட்டணி சேர்ந்திடக் கூடாது. இப்போ அஞ்சு சதவீத வித்தியாசத்தில ஜெயிச்சுக்கிட்டு இருக்கோம். அவங்க அந்தப் பக்கம் போனா தராசு அந்தப் பக்கம் சாயலாம்”

“இப்போ அந்த நோக்கங்கள் எல்லாம் நிறைவேறிடிச்சா?”

“இல்லை. ஆனா நம்பிக்கை வந்திருக்கு. உன் பேச்சை பி.எம்.  இருந்து கேட்டது, பத்திரிகைகள் உன் பக்கம் கவனத்தைத் திருப்பி இருக்கிறது இதற்கெல்லாம் ஒரு தாக்கம் இருக்கும்”

“பி.எம். என்னை சந்திக்கணும்னு சொல்லியிருக்காங்க!”

“அடடே!.பார்றா!. பேசு. பேசி ஏதாவது வாங்கிட்டு வா.!”

“என்ன வாங்கணும்?”

“21 திட்டம் அனுப்பியிருக்கோம். ஒண்ணுத்துக்கும் பதில் இல்லை. அதில ஒண்ணு ரெண்டாவது கொடுக்கச் சொல்லி கேளுங்க!”

வித்யா பிரதமரைச் சந்தித்தாள். அவரோடு டீயும், கேக்கும், உலர்ந்த பழங்களும் சாப்பிட்டாள். அவர் பரிசாகக் கொடுத்த மார்கரெட் தாட்சரின் சுயசரிதையையும் பெற்றுக் கொண்டாள். ஆனால்-

பெரியவர் கேட்டுக் கொண்டபடி அரசு அனுப்பிய கோரிக்கைகள் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com