தோழி

தோழி

மூக்கு நம நம என்று அராவியது. “அச்!’ என்று பெரிய தும்மல் போட்டாள் வித்யா. புதிதாக அடித்திருந்த பெயிண்ட் முற்றிலுமாகக் காயாததால் எழுந்த வாசனையா அல்லது கணபதி ஹோமத்துப் புகையா எது காரணம் என்று உறுதியாகத் தெரியவில்லை. மூக்கு நம நமவென்று அராவியது.

கட்சி ஆபீசில் கணபதி ஹோமம் என்பது பலருக்கு வியப்பாகவும், சிலருக்குத் திகைப்பாகவும் இருந்தது. பெரியவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டுதான். ஆனால் அதை அவர் பகிரங்கமாகத் தோளில் தூக்கிச் சுமந்தது இல்லை. அவரது அம்மா எப்போதோ நேர்ந்து கொண்டார் என்பதற்காக கேரளாவில் சோட்டானிக்கரை பகவதி கோயிலில் சுட்டு விளக்கேற்றி, சிவந்த பட்டுக் கொடுத்து, 12 ஆயிரம் புஷ்பாஞ்சலி செய்வதற்காகப் போய் வந்ததைத் தவிர அவர் தனது பக்தியைப் பகிரங்கப்படுத்திக் கொண்டதில்லை. அப்போதும் கூடக் கட்சிக்காரர்கள் இல்லாமல் தனி ரயிலில்தான் போய் வந்தார். எதிர்க்கட்சிப் பத்திரிகையானபோர்முழக்கம்’ அந்தப் பயணத்தைப் பற்றி படத்துடன் செய்தி வெளியிட்டு, ‘தமிழ் நாட்டு அம்மன்களுக்கு இல்லாத சக்தி மலையாள பகவதிக்கு இருக்கிறதாம்’ என்று ஏளனமாகக் கட்டுரை எழுதியதால்தான் வெளி உலகிற்குத் தெரியவந்தது.

அதன் பின்னர்தான் கட்சி ஆபீசில் சாமி படம் மாட்டி, வெள்ளிக்கிழமை பூச்சரம் சாற்ற ஆரம்பித்தார்கள். ஆனால் அப்போதும் ஹோமம் என்றெல்லாம் யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

சாமிநாதனுக்குக்கூட அதில் சம்மதம் இல்லை. ஆனால் அவனது சம்மதத்தை யாரும் கேட்கவும் இல்லை. இத்தனைக்கும் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குத்தான் கணபதி ஹோமம். பெரியவரது அறைக்கு எதிரே இருந்த அறையில், கட்சிக்காரர்களின் மனுக்கள், கட்சிப் பத்திரிகையின் பழைய இதழ்கள், பழைய தேர்தல் அறிக்கைகளின் பிரதிகள் எனக் கைவிடப்பட்ட காகிதங்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அதையெல்லாம் அள்ளி வேறு ஒரு அறையில் திணித்து விட்டு, இந்த அறையில் சின்னச் சின்ன மராமத்து வேலைகள் பார்த்து, பெயிண்ட் அடித்து, பொய்க் கூரை போட்டு, கம்பளம் விரித்து, குளிர் சாதனம் மாட்டி அறையை மேம்படுத்தி இருந்தார்கள். அறையை இரண்டாக வகிர்ந்து பெரிய பகுதியை வித்யாவிற்கும் அதற்கு முன்னிருந்த சிறு அறையை சாமிநாதனுக்கும் ஒதுக்கியிருந்தார்கள். சாமிநாதன் அறையில் போன்களும் கணினி ஒன்றும் நிறுவப்பட்டன. பெரியவர் அறைக்கும் வித்யாவின் அறைக்கும் இடைப்பட்ட நடையில் விருந்தினர்களுக்கான சோபாக்களும் நாற்காலிகளும் போடப்பட்டன.

நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து, கணபதி ஹோமம் வளர்த்து, சாமிநாதனை நாற்காலியில் அமர்த்தினாள் வித்யா. அன்று பெரியவர் வரவில்லை. ஊரில்தான் இருந்தார். ஆனால் வரவில்லை. முருகய்யனை விசாரித்தான் சாமிநாதன். ‘அது அவருக்குத்தான் தெரியும். என்னைக் கேட்டா?’ என்று சிடுசிடுத்தார் முருகய்யன்.

கணபதி ஹோமப் படங்களையும் போர் முழக்கம் வெளியிட்டு, ‘அவா ஆபீஸ் வந்துட்டா!’ என்று நக்கலும் நையாண்டியுமாகக் கட்டுரை எழுதியது. ‘அதிகாலையில் வெகு சிலரே கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியின் படங்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தன? கண்டுபிடியுங்க’  என்பதுதான் வித்யா சாமிநாதனுக்குக் கொடுத்த முதல் அசைன்மெண்ட். அதை ஆராய அதிகம் மெனக்கிட வேண்டியதில்லை, அது எல்லாம் முருகையன் அவர்களுக்குக் கொடுத்த பிரசாதம் என்று சாமிநாதன் உறுதியாக நம்பினான்.   

அதைவிட சவாலான அசைன்மெண்ட்கள் அடுத்தடுத்து அவனுக்கு வந்தன. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சாத்தான்குளத் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் தேவநாதன் சென்னை, ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவர் அல்ல.சட்டமன்றத்தில்கூட கொட்டாவி விடுவதைத் தவிர வேறெதற்கும் வாய் திறவாதவர் என்று பெயர் வாங்கியவர். அவர் எம்.எல்.ஏ ஆனதே அந்த முருகனின் கருணை என்பது கட்சிக்குள் உலவும் பகிரங்க ரகசியம். முருகய்யன் அவர் மீது கடைக்கண் வைத்தார். ‘ஆகா‘ என்று எழுந்தது அவர் வாழ்வு. இல்லையென்றால் வாடகை சைக்கிள் கடை, சவுண்ட் சர்வீஸ், பந்தல் காண்டிராக்ட் நடத்திக் கொண்டு போஸ்டர் ஒட்டும் தொண்டனாகத்தான் அவர் இருந்திருப்பார்.

எம்.எல்.ஏ. மரணச் செய்தி கிடைத்ததும் யாரும் எதிர்பாராத ஒன்றிற்கு பெரியவர் உத்தரவிட்டார். சென்னை மருத்துவ மனையில் மரணப் படுக்கையில் கிடந்தபோது கூடச் சென்று பார்த்திராத அவருக்கு, சாத்தான்குளத்தில் பெரிய ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் நடத்த ஆணையிட்டார். எம்.எல்.ஏ. உடலுடன் ஏற்கனவே முருகய்யன் சாத்தான்குளம் கிளம்பியிருந்ததால் அந்த ஆணை சாமிநாதன் மூலம் கட்சியின் கிளை நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றைப் பத்தாக உருப்பெருக்கும் சாதுரியம் கொண்ட சாமிநாதன் இந்தத் தருணத்தை சமார்த்தியமாகப் பயன்படுத்தி இரண்டு கனிகளுக்குக் குறி வைத்தான். ஒன்று: முருகய்யன் ஓரம் கட்டுப்பட்டுவிட்டார்  என்ற எண்ணத்தைக் கட்சிக்காரர்களிடம் கட்டமைப்பது. இரண்டு: முக்கியமான செய்திகளைப் பெரியவர் தன்னிடம்தான் பகிர்ந்து கொள்கிறார் என்ற பாவனையைப் பலப்படுத்துவது.

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க பெரியவரே வரலாம் என்று வாய்மொழியாக ஊகங்களை விதைத்தான் சாமிநாதன்.ஏற்கனவே பணிபுரிந்த மாவட்டம் என்பதால் கட்சிக்காரர்கள் பலரிடம் ஏற்பட்டிருந்த அறிமுகம் அதற்குப் பெருமளவில் உதவியது. அது உண்மைதானா என அறிந்துகொள்ள முருகய்யன் பெரியவருக்கு போன் போட்டார். அவர் முதுகுவலியில் படுத்திருக்கிறார், அப்புறம் பேசுவார் என்று பதில் சொன்ன பெரியவர் மனைவி படக்கென்று போனை வைத்தார்.

அண்ணன் அமரர் ஆனதால் திண்ணை காலியாகும், இடைத்தேர்தல் வரும், அதில் இடம் பிடிக்க யார் பக்கம் சாய்வது என்று கட்சிக்குள் குழப்பம் முளைத்தது.

****** ***** *****    

ன்னும் எவ்வளவு நேரம் போக வேண்டியிருக்கும்?” என்று  கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் வித்யா. முதுகுவலி, என்னால் பயணம் செய்ய முடியாது, எனக்கு பதில் நீ போய்விட்டு வந்துவிடு என்று பெரியவர் சொன்னதைத் தட்டமுடியாமல் மதுரைக்கு விமானம் ஏறினாள். அங்கிருந்து சாலை வழி திருநெல்வேலி. பின் அங்கிருந்து சாத்தான்குளம்.   

முன்னிருக்கையில்  அமர்ந்திருந்த சாமிநாதன் மெல்லத் திரும்பினான்.  “நடுவழியில் நாம் எங்கும் நிறுத்தவில்லை என்றால், இரண்டு இரண்டரை மணி நேரமாகலாம் மேடம்” என்றான்.

“நிறுத்த வேண்டாம். ஏன் நிற்க வேண்டும்?”

‘நீங்கள் ஏதும் சாப்பிடவில்லையே. விருதுநகரில் ஏற்பாடு செய்திருக்கிறேன். மதுரையில் ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் நீங்கள் ஏர்போட்டிலிருந்து ஊருக்குள் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள்”

“ஆமாம், ஏர்போர்ட்டில் ஏன் அத்தனை ஆர்ப்பாட்டமான வரவேற்பு? நாம் மாநாட்டிற்குப் போகிறோமா? வெற்றி விழாவா? கல்யாணமா? நாம் ஒரு துக்க வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?

சாமிநாதன் சிரித்தான். “மேடம், சொன்னால் கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளவில்லை”

“என்ன?”

“எனக்குத் தெரிந்த ஒரு தலைவர்... லட்சியவாதி. நிறையப் படித்தவர், ஆனால் எளிமையானவர். மேடையில் கூட அலங்காரமாகப் பேசமாட்டார்.  அரசியலில் ஆடம்பரம் கூடாது, அது நம்மை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடும் என்று சொல்லியவர். நம்பியவரும் கூட.செருப்புக் கூடப் போட மாட்டார்.விவசாயியைப் போல முரட்டு நாலு முழக் கைத்தறி வேட்டிதான் கட்டுவார். எங்கு போனாலும் தனியாகத்தான் போவார். கட்சிக்காரர்கள் யாரும் கூட வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார். சொந்தக் காரில்தான் போவார். வாக்ஸால், பிளைமெத், ஆஸ்டின் போன்ற அயல்நாட்டுக் கார்கள் அல்ல. அம்பாசிடர் கூட அல்ல. சென்னையில் செய்த ஸ்டாண்டர்ட் கேசல். விருத்தாச்சலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் கூட்டம். இவர் மட்டும் தன் காரில் போய் இறங்குகிறார். கூட அந்தப் பகுதி செயலாளர். கிராமத்து மக்கள் பின்னால் கார்கள் வருகிறதா என்று பார்க்கிறார்கள். எதையும் காணோம். ஒருத்தன் கேட்கிறான், “ என்னடா காரையே காணோம்? அம்போனு தனியா வர்றார்?” அதுக்கு இன்னொருத்தன் சொல்றான், “ வைச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க. கட்சியில ஆளுங்க இருந்தாதானேதாடா வருவாங்க?” இது நான் என் காதால கேட்டது மேடம். அவர் காதிலும் விழுந்தது. மேடைக்குப் போய்க்கிட்டு இருந்தவர் திரும்பிப் பார்த்தார். சிரித்தார். ஆனால் அப்புறம் என்ன ஆனது தெரியுமா?

“ ம். சொல்லுங்கள்!”

“அதன் பின் அவர் எங்கேயும் தனியாகப் போவதில்லை.முன்னும் பின்னும் ஐந்தாறு கார்களாவது அணிவகுத்து வரத்தான் போகிறார்.”

“ஸோ?”

“காலம் மாறிப் போச்சு மேடம். இனிமே எளிமை சிக்கனம் எல்லாம் வேலைக்காகாது மேடம். எல்லாம் உங்களாலதான்”

“என்னாலா?” திடுக்கிட்டாள் வித்யா

“ஐயோ, உங்களைச் சொல்லலை மேடம். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்த பின்னர்தான் இந்த மாற்றமெல்லாம்” என்ற சாமிநாதன், மெல்லிய அச்சத்தோடு வித்யாவின் முகத்தைப் பார்த்தான். அங்கே ஒரு புன்னகைதான் இருந்தது. சற்றே துணிவு பெற்றவனாக தொடர்ந்து பேச ஆரம்பித்தான்:

“ நான் சொல்ல வந்தது, மக்கள் அரசியலை சினிமாவாகப் பார்க்கிறார்கள். பிரமிக்க வைக்கும் காட்சிகள் இருக்க வேண்டும். ஜோடனைகள் இருக்க வேண்டும். கேளிக்கை அம்சங்கள் இருக்க வேண்டும். ஒரு ஸ்கிரிப்ட் இருக்கணும். திடுக்கிடும் சம்பவங்கள் வேண்டும். துரோகம், கண்ணீர் எல்லாம் வேண்டும் முக்கியமாக ஒரு ஹிரோவும் வில்லனும் இருக்க வேண்டும்.”

வித்யா பதில் ஏதும் சொல்ல விரும்பவில்லை என்பது போல் கார் ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ஆனால் மனம் சாமிநாதன் வார்த்தைகளை அலசிப் பார்க்கத் தொடங்கியது.        

****** ****** ******

சாமிநாதன் சொன்னது அப்படி ஒன்றும் மிகையில்லை என்பது பெரியவர் இடைத்தேர்தலுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய போது தெரிந்தது. திரைப்படத் தயாரிப்புக்களைப் போலவே முதலில் ஒரு டிஸ்கஷனுக்கு ஏற்பாடு செய்தார். நடிகர்களின் சந்தை மதிப்பு, ரசிகர் எண்ணிக்கை, பலம் பலவீனம் இவற்றை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஆராய்வது போல வேட்பாளர்களின் பணபலம், ஜாதி, விசுவாசம், தனிப்பட்ட பலம் பலவீனம் இவை ஆராயப்பட்டன. சுவாரஸ்யமான கதையை அமைப்பது போல, பிரச்சாரத்தின் அம்சங்கள் திட்டமிடப்பட்டன. திரைபடத்தை சந்தைப்படுத்துவதற்கான உத்திகளை வகுப்பது போல விளம்பரத்திற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன. விநியோகஸ்தர்களைத் தீர்மானிப்பது போல கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்குத் தொகுதியில் உள்ள ஊர்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா. ஆனால் வேட்பாளர் பற்றிய விவாதம் வந்த போது வாக்குவாதம்  எழுந்தது.”மேடம், முருகய்யன் மறுபடியும் தனது ஆளைக் கொண்டு வர முயற்சிப்பார். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது” என்று சாமிநாதன் ஏற்கனவே வித்யாவை உசுப்பேற்றியிருந்தான். அதனால் முருகய்யன் எந்தப் பெயரைச் சொன்னாலும், அது யார் என்றே தெரியாத போதும், வித்யா தொடர்ந்து ஆட்சேபித்து வந்தாள். ஒரு கட்டத்தில் பெரியவர், பொறுமையிழந்து, வித்யாவைப் பார்த்து, “சரி உங்கள் சாய்ஸ் என்ன?” என்றார்.

வித்யாவிடம் பதில்லை. கட்சிக்குப் புதிது என்பதால், வெகு தொலைவில், தென் மாவட்டத்தில் உள்ள, அந்தப் பகுதியில் இன்னும் யாரும் முழுமையாக அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் முருகய்யன் முன்வைத்த எல்லாப் பெயர்களையும் நிராகரித்து வந்த நிலையில் இப்போது ஏதாவது பெயர் சொல்லியாக வேண்டும். “எனக்குத் தெரியாது!” என்று கூட உண்மையைச் சொல்லிவிடலாம். ஆனால் அது முருகய்யனுக்கு வழிவிட்ட மாதிரி ஆகிவிடும். யோசிப்பது போல் மெளனமானாள் வித்யா. அப்போது அவள் பின் பக்கமாக வந்து நின்ற சாமிநாதன் அவள் கையில் ஒரு சீட்டைத் திணித்தான்.பிரித்துப் பார்த்த வித்யா சொன்னாள்:

“செந்தில்குமார்”

“யாரு தெரியலையே?” என்ற பெரியவர் முருகய்யனைப் பார்த்தார்

“திருநெல்வேலி வக்கீலா?” என்றார் முருகய்யன்

வித்யா ஏதும் வாய் திறக்கவில்லை. ஆனால் ஆம் என்பது போல சாமிநாதன் தலை அசைத்தான்.

“அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க, நீங்க குட்டையை குழப்பாதீங்க!” என்றார் முருகய்யன்.

பெரியவர் ஒரு நிமிடம் கண்மூடி யோசித்தார். இடைத்தேர்தலில் ஜெயித்தால் லாபம். தோற்றால்? நஷ்டமேதும் இல்லை. சட்டமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இருக்கிறது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 18 மாதம் இருக்கிறது. இந்தச் சின்ன மீன் நழுவி விட்டாலும் அந்தப் பெரிய மீனைப் பிடித்தாக வேண்டும். அதற்கு மக்கள் மனநிலை தெரிந்தாக வேண்டும். கட்சிக்காரர்கள் யாரும் உண்மையைச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். முகஸ்துதி செய்வதைத் தவிர வேறு எதையும் அவர்கள் அவரிடம் சொல்வதில்லை. கட்சி இன்னமும் தன் பிடியில் இருக்கிறதா, இல்லை முருகய்யன் பிடியிலா? அதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மனநிலையை அளந்து பார்க்க இது ஒரு சந்தர்ப்பம். எண்ணங்கள் மனதில் முன்னும் பின்னுமாக நீந்தின.

பெரியவர் கண்ணைத் திறந்தார்

“செந்தில்குமார்!” என்றார்

முருகய்யன் திடுக்கிட்டார்.

பெரியவர் வித்யாவைப் பார்த்தார். “ஜெயிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு!” என்றார்

முகம் இருண்ட முருகய்யன் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்தார். அவரைப் பார்த்துப் பெரியவர் சொன்னார்:

“ அந்தப் பொறுப்பு உங்களுக்கும்தான்!”

விருட்டென்று அறையிலிருந்து வெளியேறினார் முருகய்யன்.

(தொடரும்)  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com