
மைக்கைப் பிடித்த ஏரோட்ரோம் ஆபீஸர் “ திருப்பதி… இண்டேர் டெஸ்ட் ஃப்ளைட் you are loud & clear go ahead….” என பதிலிறுக்க
ராஜர் இண்டேர் ரிப்போர்ட்டிங் டவுண்விண்ட் ரன்வே டூ சிக்ஸ்….
இப்படியாக ரேடியோ சம்பாஷணைகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் விமானத்தைத் திருமலைக் கோவில் மேலாகப் பிரதக்ஷிணமாகச் செலுத்திச் சுற்றி வந்த பிறகு விமானத்தைத் திருப்பதி விமான நிலையத்தை நோக்கி இறக்கத் தொடங்கினார் கேப்டன் வாசு. பெருமாள் சேவிக்கப் போயிருக்கிறார் என்பதற்கு அர்த்தம் கோவிலைச்சுற்றி வருவது மட்டுமல்ல, விமானம் இறங்கும் பாதையில் வரும் மலைத்தொடர்கள் எத்தனை அடி உயரத்தில் இருக்கிறது என்பதை விமானத்தில் இருக்கும் Distance Measuring Exipment மூலம் குறித்துக் கொள்வதும்தான்.
விமானம் என்பது கண்டபடி பறக்க முடியாது. PDR என்ற Pre Determined Route மூலம்தான் செல்ல முடியும். இறங்கும் போதும் ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் சுற்றி இருக்கும் உயரத்தடைகளைப் பொறுத்து முன்பே தீர்மானிக்கப்பட்ட let down procedure படித்தான் இறங்க வேண்டும். மேக மூட்டம் இருக்கும்போது இது இன்றியமையாதது.
அந்தக்காலத்தில் இப்போது போலத் தொழில்நுட்பங்கள் இல்லாத போது இதை அலட்சியப் படுத்தியதால்தான் பல விமான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் இத்தகைய holding pattern / landing circuit chart உண்டு. Jeppeson Chart என்ற இதுதான் உலக விமானிகளின் வேதம். இவற்றைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் பைலட்டுகள் காக்பிட் உள்ளே நுழையவே மாட்டார்கள்.
நான் டவர் உரையாடல்களைத் தொடர்ந்து கவனித்ததில் கேப்டன் விமானத்தை இறக்கி நிறுத்தாமல் தரையைத் தொட்டதும் மறுபடி வேகமெடுத்து டேக் ஆஃப் செய்து மறுபுறத்தில் ஒரு வட்டம் சுற்றி வந்து பிறகு இறங்கி நிறுத்துவதற்கு அனுமதி கேட்டார் என்பது புரிந்தது. விமானத்தின் டச் & கோ என்ற missed approach டவரில் இருந்து பார்ப்பதற்கு மிக நன்றாக இருக்கும். ஆனால், என் 1970 மாடல் பாக்ஸ் கேமராவில் சரியாகப் படம் பிடிக்க முடியாதே என்ற கவலையுடன் விமானம் ரன்வேயில் இறங்கி ஓடி மறுபடி ஏறப்போவதை ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தேன். விமானமும் நிதானமாக தரையைத் தொட்டு வேகம் பிடித்து மறுபடியும் டேக் ஆஃப் ஆகி ஒரு வட்டம் சுற்றிக்கொண்டு மறுபடியும் ஏர்போர்ட்டை நோக்கி வந்தது. இறங்கிப் பக்கத்தில் வந்தவுடன் மேலிருந்து ஒரு படத்தைப் பதிவு செய்து கொண்டு படிகளில் ஓடி இறங்கி எங்கள் படையுடன் சேர்ந்து கொண்டேன்.
படிக்கட்டை வைத்தவுடன் ஆரவாரமாக இறங்கி வந்த வாசுவும் அவருடைய பாஸ் லலித்தும் இன்னும் இரண்டு சீனியர் பைலட்களும் ஓரிரு இன்ஜினியர்களும் சில விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் எங்கள் எல்லோருக்கும் கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். ஒரு ஜீப்பைக் கொண்டு வரச் சொல்லி அதில் ஏறி ரன்வேயின் இரண்டு பக்கத்திலும் போய் ஆய்வு செய்து விட்டு மறுபடியும் வந்தார்கள். அந்தக் காலத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஓர் பக்காவான மத்திய அரசுத் துறையாகவே விளங்கியது. சிவப்பு நாடாக்களுக்குப் பஞ்சமே இல்லை. வெள்ளைக்காரன் காலத்து 1937 ஆம் வருடத்து ஆக்ட்படிதான் இன்னும் இயங்கிக் கொண்டிருந்தது. பைலட்டுகளுக்கும் என்ஜினியர்களுக்கும் லைசென்ஸ் கொடுப்பது என்னவோ அவர்கள்தான். ஆனால், அந்த லைசென்ஸ் கொடுப்பதற்கு யாரை வைத்து டெஸ்ட் செய்வார்கள் தெரியுமா? எங்கள் பைலட்டுகளுக்குள்ளேயே சீனியர்களாக இருக்கும் சிலரை எக்ஸாமினர் என்றும் டெஸ்ட் பைலட் என்றும் அவர்களே அப்பாயின்மென்ட் செய்துவிடுவார்கள். எங்கள் பைலட்டுகளே புதிய பைலட்டுகளை டெஸ்ட் பண்ணி அவர்கள் கேப்டன் ஆவதற்குத் தகுதி உள்ளவர்களா இல்லையா என்று தீர்மானிப்பார்கள். இந்த முறையில் எவ்வளவோ குறைபாடுகள் அந்தக் காலத்தில் சொல்லப்பட்டன. கோ-பைலட் என்பவர் கேப்டன்களுக்குக் குழைந்து தான் போவார். அதே மாதிரி கேப்டன்களும் சக கேப்டனே டெஸ்ட் பைலட்டாக வரும்போது வேறு வழியின்றி அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். அதுவே எக்ஸாமினர் தரத்தில் இருக்கும் பைலட்டுகள் எங்கிருந்தோ ஆகாசத்திலிருந்து வந்து குதித்தது போல அலட்டிக் கொள்வார்கள். அதே எக்ஸாமினர்கள் அவர்களது முறை வரும்போது சக எக்ஸாமினர்களிடம் குழைந்து தான் போக வேண்டி வரும். இப்படி ஒரு குழப்பமான முறை தான் இங்கே இருந்தது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை லைசன்ஸ் புதுப்பிக்கும் டெஸ்ட் எல்லோருக்கும் கட்டாயம். இன்ஜினியர்களுக்கும் அதே கதிதான். அதாவது, இந்திய விமானத் துறையை எங்கள் பைலட்டுகளும் இன்ஜினீயர்களும் கிட்டத்தட்ட ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம். அதனால்தான் டெஸ்ட் ஃப்ளைட்டில் வந்த எங்கள் பைலட்டுகள் நால்வரில் இருவர் விமானத்துறை சார்பாகவும் மற்றவர்கள் எங்கள் கம்பெனி சார்பாகவும் கூட வந்த விமானத்துறை அதிகாரிகளுடன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்துவிட்டுக் கலந்து பேசி சரி சரி எல்லாம் ஓகே என்று சொல்லிவிட்டுப் போனார்கள். பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த என் முதுகில் தட்டி டேய் ஐயங்கார் அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று வாசுவும் உரிமையுடன் சொல்லிப் போனார்.
இதற்கு நடுவே ஒரு குழப்பமும் நேர்ந்து விட்டது. விமானம் சுற்றி வந்து இறங்குவதும் ஏறுவதுமாக இருந்ததைப் பார்த்துவிட்ட பக்கத்து கிராமமான பாப்பாநாயுடுபேட்டை மக்கள் வேகமாக வந்து வேலி ஓரத்தில் நின்றவர்கள் விமானம் இறங்கி திருப்பதியில் நின்றதும் வேலியைத் தாண்டி உள்ளேயும் வர ஆரம்பித்து விட்டார்கள். நம் கண்ட்ரோல் டவர் கிருஷ்ணமூர்த்தியும் அதே கிராமம்தான். அவர் இந்த விமான நிலையம் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறது என்பதற்காகவே இங்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தாராம். காலையில் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து வேலியைத் தாண்டி ரன்வேயின் குறுக்கே ஓட்டிக் கொண்டு வந்து தன் கண்ட்ரோல் டவருக்கு வந்து விடுவாராம். தன் கிராமத்து மக்கள் பலர் வேலியைத் தாண்டி உள்ளே வருவதைப் பார்த்ததும் பதறிப் போய் ஜீப்பை எடுத்துக்கொண்டு அங்கே போய் எல்லோரையும் வேலியைத் தாண்டி நிற்க வைத்து விட்டு காவலுக்கு ஒரு ஆளையும் போட்டுவிட்டுத் திரும்பி வந்து விமானம் டேக் ஆஃப் ஆவதற்கு கிளியரன்ஸ் கொடுத்திருக்கிறார். (பிறகு யாரும் வேலியைத் தாண்டி வரமுடியாமல் வலையாலான வேலியைப் போட்டு விட்டார்கள். கிராமத்துக்கு அருகில் வாட்ச் டவரையும் அமைத்து விட்டார்கள்.) ஒரு வழியாக விமானம் டேக் ஆஃப் ஆனதும் எங்களுக்குப் பசி பிராணன் போனதால் 15 நிமிடப் பயணத்தில் இருந்த ரேணிகுண்டா ரயில் நிலைய உணவகத்தில் கிடைத்ததை விழுங்கி விட்டு வந்து எங்கள் தரப்பு ரிபோர்ட்டுகளை டெலிபிரிண்டர் மூலம் அனுப்ப ஆயத்தமானோம். ஒரு டீக்குக்கூட வழியில்லாத இந்தப் பொட்டல் காட்டு விமான நிலையத்தில் நாம் எப்படிக் குப்பை கொட்ட போகிறோம் என்று நினைக்கவே மலைப்பாகவே இருந்தது.
டெஸ்ட் ஃப்ளைட்டில் வந்தவர்கள் ஓ.கே. சொன்னதன் பேரிலும் எங்கள் தரப்பு ரிப்போர்ட்டுகளின் பெயரிலும் நடவடிக்கை எடுத்து டெல்லியில் இருந்து இந்த விமான நிலையம் இயங்குவதற்குத் தடையில்லை என்று சான்றிதழ் வந்து விட்டது. அதன்படி International Civil Aviation Organisation மற்றும் அமெரிக்க FAA ஐரோப்பிய European Aviation Safety Agency ஆகியவற்றுக்கும் இங்கிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டு முறையாக திருப்பதி ஏர்போர்ட்டுக்கு VOTP என்று பெயர் சூட்டி எல்லா நடவடிக்கைகளும் முடிந்த பிறகு நவம்பர் 7ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தொடங்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து முதல் விமானம் வருவது என்றும் அதில் விஐபிகள் வந்து திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும், விமானம் திரும்பிப் போகும் போது ஹைதராபாதிற்குப் பயணிகள் மட்டும் போவார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கையால் எழுதப்படவேண்டிய டிக்கெட் புக்கும் முறையாக எங்கள் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தன. பெரிதாக பப்ளிசிட்டி விளம்பரங்கள் என்று ஒன்றும் இல்லாமல் இந்தியாவில் இருக்கும் எல்லா டிராவல் நிறுவனங்களுக்கும் கடிதம் மூலம் இன்டிமேஷன் கொடுக்கப்பட்டது. நவம்பர் 7ஆம் தேதி விமானத்தில் ஏறுவதற்கு எத்தனை பயணிகள் வரப்போகிறார்கள் என்று ஏகத்திற்கும் எங்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. ஆபீஸில் பணப்பெட்டி முதலியவற்றுக்குப் பண்டிதர்களை வைத்துப் பூஜை போட்டுவிட்டு “போணியாகுமா” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இரண்டே நாளில் நான் டெஸ்கில் அமர்ந்திருந்தபோது செல்வன் என்ற ஒரு ஆங்கிலப் பேராசிரியர் என் முன் வந்து அமர்ந்து ஹைதராபாத்திற்கு ஒரு டிக்கெட் உங்கள் முதல் விமானத்தில் வேண்டும் என்று சொன்னபோது என் சந்தோஷம் முகத்திலேயே தெரிந்தது. “முதல் டிக்கெட்டை என் கையால் எழுதப் போகிறேன்” என்ற மகிழ்ச்சி வேறு. ஹைதராபாத் பயணக் கட்டணம் 128 ரூபாய் மட்டும். சென்னைக்கு வெறும் 36 ரூபாய் தான். அப்போது ஒரு பவுன் தங்கம் விலையே 192 ரூபாய்தான். முதல் விமானத்தின் முதல் பயணியின் பெயர் என்ன என்று கேட்டபோது நான் போகவில்லை ‘யதிராஜம்மா’ என்ற பெண்மணிக்குத்தான் டிக்கெட் வேண்டும் என்று சொல்லி செல்வன் டிக்கெட் வாங்கிப் போனார்.
ஆறு வருடங்கள் கழித்து எனக்குத் திருமணம் நடந்தது. என் மனைவியின் பெயர் என்ன தெரியுமா ? அதே யதிராஜம் என்பதுதான். இதற்குள் என் உடன் பிறவா சகோதரராகவே மாறிப்போய்விட்ட செல்வனுக்கும் இந்தப் பெயர் கொண்ட பெண்ணே எனக்கு மணமகளாக அமைந்தது குறித்து ஆச்சரியமாகத்தான் இருந்தது. இப்படியாக வெங்கடேஸ்வரர் எனக்கு ஒரு நல்ல மனைவியையும் திருப்பதியில் இருக்கும் போதே அருளினார்.
திறப்பு விழா நாள் நெருங்க நெருங்க இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் பலர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நானும் பலமுறை அவர்களுடன் விஐபி தரிசனத்திற்குப் போவதும் வருவதுமாகவே இருந்தேன். திடீரென்று ஒருநாள் எங்கள் பிக் பாஸ் சக்கரவர்த்தி வந்தார். மேனேஜருடன் சென்று சிலரைச் சந்தித்து விட்டு வந்தவர் மலைக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுக் காலையில் போகிறேன் என்று என்னையும் கூட்டிப் போனார். அங்கே அவரைக் கோயிலில் வரவேற்கத் தலைமை அர்ச்சக மிராஸ்தார் தேவஸ்தான ஆகம அட்வைஸர் மற்றும் கோயில் பேஷ்கார் என்று ஒரே வைதிகக் கூட்டமாக நின்றுக்கொண்டிருந்தது எனக்கு வித்தியாசமாக இருந்தது.
(தொடரும்)