என் செவிகளில் விமானத்தின் ஓசை இனிய சங்கீதமாக ஒலித்தது.

அத்தியாயம் - 9
என் செவிகளில் விமானத்தின் ஓசை இனிய சங்கீதமாக ஒலித்தது.

ல்லோரும் வந்து சேரும் வரை காத்திருக்காமல் நான் மட்டும் புதிய கண்ட்ரோல் டவர் எப்படி இருக்கிறது என்று பார்க்க மேலே ஏறிப் போனேன். புதிதாக என்னவெல்லாமோ இருக்கும் என்று எதிர்பார்த்துப் போன எனக்கு வெறும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் இருந்த அதே கருவிகள் மட்டுமே இருந்தன. அதுவும் வேறு ஏதோ ஏர்போர்ட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பழைய கருவிகள்தான். ஒரே ரேடியோ அலைவரிசையில் எல்லா ஏர்போர்ட்டுகளும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் குழப்படியான எஃப் சி 10 என்ற சானல், கண்ட்ரோல் டவருக்கும் விமானத்திற்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ரேடியோ அலை வரிசைக் கருவி வி.ஓ.ஆர். (Variable Omni Range) அந்த அலைவரிசையையே பயன்படுத்தி விமானம் எந்தத் திசையில் இருக்கிறது என்று காட்டும். ஏ.டி.எஃப். ( Automatic Direction Finder) என்ற ஒரு கருவி இவ்வளவுதான் அங்கே இருந்தன. திருப்பதி ஏர்போர்ட் விமானியின் கண்ணுக்குத் தெரியும் வரை மெட்ராஸ் கண்ட்ரோல் டவர்தான் அந்த விமானத்தை கண்ட்ரோல் செய்வார்கள் என்றும் அதன் பிறகு அங்கிருந்து விடுபட்டு இங்கே ரிப்போர்ட் செய்து கொண்டு VFR (Visibile Flight Rules) முறையில் கீழே இறங்கலாம் என்று கண்ட்ரோல் டவர் ஆப்பரேட்டராக வந்திருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் சொன்னார். ( அதாவது பத்திரமாகத் தரையிறங்குவது விமானியின் பொறுப்பு.) இந்தக் கருவிகளும் அப்போதுதான் நிறுவப்பட்டிருந்ததால் இன்னும் சரியாக டெஸ்ட் கூடச் செய்யப்படவில்லை. ஆனால் ஓர் ஏர்போர்ட் இன்னொரு ஏர்போர்ட்டைக் கூப்பிடும் ரேடியோ குரல்கள் தொடர்ச்சியாக F C 10 இல் கேட்டுக்கொண்டே இருந்தன.

கோயம்புத்தூரில் இருப்பதைப் போல இரவில் விமானங்கள் இங்கே இறங்க முடியாதாம். திருப்பதி மலையில் மற்றும் ஏர்போர்ட்டுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு மலை உச்சிகளில் பீக்கான் விளக்குகள் வேண்டுமாம். தானியங்கி பீப் சிக்னல்களும் வேண்டுமாம். பிறகு தான் ரன்வேயில் லைட் வரிசை அமைத்து விமானங்களை இரவில் இறங்கச் செய்ய முடியுமாம். கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய மலை உச்சியான ஊட்டி தொட்டபெட்டாவில் இதே மாதிரி ஓர் ரேடியோ பீக்கான் ஸ்டேஷன் உண்டு. அவை பக்கத்தில் வரும் விமானங்களுக்கு பீப் பீப் சிக்னல்களை எழுப்பி எச்சரிக்கும். இரவிலும் சுழலும் சிவப்பு விளக்கு மலை உச்சியில் இருக்கும். அதுபோல இங்கு இல்லாததால் இரவில் விமானங்களை இறக்க முடியாது என்றார்.

இப்போது இருப்பதைப் போல அந்தக் காலத்தில் தொழில்நுட்பங்கள் கிடையாது. ஆகவே இவையெல்லாம் கட்டாயம் தேவையாக இருந்தன. விமானம் இறங்கும் ரன்வே நீளம் கூடக் கோயம்புத்தூர் போலக் குறைவுதான். அதனால் பெரிய விமானங்கள் இறங்க முடியாது. ரன்வேக்கு எப்போதும் அவற்றின் கட்டுமான உறுதி பற்றி ஓர்.பி.சி.என். ( Pavement Classification Number) எண் கொடுப்பார்கள். அதாவது, “பெரிய விமானங்கள் இறங்கும் தரத்தில் இருக்கிறதா” என்று கேட்டேன். நல்ல வேளையாக ரன்வே அஸ்திவாரம் மட்டும் பெரிய விமானங்கள் இறங்கும் PCN தரத்தில்தான் அமைப்பட்டிருந்தது. பெரிய விமானங்கள் இறங்கும் காலம் வரும்போது இரண்டு பக்கமும் ரன்வேயை நீட்டிப்பதற்குத் தேவையான நிலங்களும் ஆர்ஜிதம் செய்யப்பட்டு சுற்றும் வேலியும் போடப்பட்டிருந்தன என்பதால் எதிர்காலத்தில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது என்றும் சொல்லப்பட்டது. இதையாவது உருப்படியாகச் செய்திருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் புத்தம் புதிய விமான நிலையத்தில் புதிதாக ஒன்றுமே இல்லாதது எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது.

தூரத்தில் கார்கள் வருவதைப் பார்த்துவிட்டு நான் வேகமாக இறங்கி எங்கள் படையுடன் சேர்ந்து கொண்டேன். பிறகு எல்லாரும் சேர்ந்து ஏர்போர்ட்டைச் சுற்றிப் பார்த்தோம். தேவஸ்தானம் EO எஸ்.வி. சுப்ரமண்யன், சித்தூர் ஜில்லா கலெக்டர் ராஜாஜி, B. நாகிரெட்டி காரு எல்லோரும் திறப்பு விழாவை எப்படி விமரிசையாகச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிதான் அதிகம் பேசினார்கள். ரிவ்யூ மீட்டிங்குக்குப் பிறகு எல்லோரும் திருப்பதிக்குத் திரும்பி விட்டோம்.

“திருப்பதிக்கு வந்திருக்கிறோமே இன்னும் பெருமாள் தரிசனத்திற்கு போகவில்லையே” என்று நினைத்துக் கொண்டிருந்தபோது மேனேஜர் ராவ் “அவசரப்படாதே நாம் எல்லோரும் சேர்ந்தே போகலாம்... நமக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுப்பார்கள்” என்றார். இதன் நடுவே ஒவ்வொன்றாக ஏர்போர்ட்டுக்கு தேவையான வண்டிகளும் வேறு பல தளவாடங்களும் வந்து சேர்ந்தன. அவற்றையெல்லாம் நிறுவுவதற்கான டெக்னீசியன்களும் வந்தார்கள். ஆகவே ஏர்போர்ட்டுக்கும் திருப்பதிக்கும் அடிக்கடி போய் வரும் வேலை எனக்கு வந்தது. அதுபோல மலை மேல் தேவஸ்தானம் எங்களுக்கு MBC 12 என்ற காட்டேஜைக் கொடுத்து அதில் உங்கள் ஆபீஸைத் திறந்து கொள்ளுங்கள் என்று சொன்னதால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஓரிருமுறை மலைக்குப் போய் வந்தேன். என்றாலும் கோயிலுக்குப் போகவில்லை. ஒரு வழியாக எல்லா ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் “அவையெல்லாம் சரியாக இருக்கின்றனவா” என்று சோதிக்க இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மன் பி.சி. சென், டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்து, அங்கிருந்து கார் மூலம் திருப்பதி வந்து சேர்ந்தார். அப்போதுதான் எங்களுக்காக சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டு, நாங்கள் ஐந்து பேர் மட்டும் மலைக்குப் போய் திருப்பதி பாலாஜியைத் தரிசித்தோம். முதல் முறையாக உள்ளே போனதும் எனக்கு மெய் சிலிர்த்தது. மிகச் சிறப்பாக பெருமாளுக்கு வைரத்திலேயே அலங்காரம் செய்து நாங்கள் மட்டுமே இருந்த அந்த ஸ்பெஷல் தரிசனமே என் முதல் பெருமாள் தரிசனம் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு அப்புறம் எவ்வளவோ முறைகள் தனியாகவும் குடும்பத்துடனும் பலவிதமான வி.ஐ.பி.களுடன் போய் வந்திருந்தாலும், முதல் தரிசனம் என்பது என் வாழ்க்கையில் இவ்வளவு சிறப்பாக நடந்திருக்கிறது என்பது என் வாழ்க்கையில் எப்போதுமே மறக்கமுடியாது.

சில நாள் கழித்து “ரன்வேயில் இறங்கிச் சோதிப்பதற்காக எங்கள் விமானம் சென்னையிலிருந்து வரப்போகிறது” என்ற செய்தி வந்தது. அதற்குள் இன்னும் நாலைந்து சகப்பணியாளர்களும் பெங்களூரில் இருந்தும் சென்னையிலிருந்தும் வந்து சேர்ந்தார்கள். எங்களுக்கும் தேவஸ்தானம் வீடுகள் கிடைத்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட வீட்டில் நானும் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த ராமசாமியும் தங்கினோம். அந்த ராமசாமி என் குடும்ப நண்பராக இன்றுவரை தொடர்பில் இருக்கிறார். அதேபோல இன்னொரு உற்ற நண்பர் கிடைத்தார். அவர் பெயரும் ராமசாமிதான். இந்த ராமசாமி தேவஸ்தானம் எக்ஸிக்யூட்டிவ் ஆபிசரின் பி.ஏ. வாக இருந்தார். தேவஸ்தானத்திற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதர். எத்தனையோ முறைகள் நானும் பி.ஏ. ராமசுவாமியும் மலைக்கு கால்நடையாக ஏறி இறங்கி இருக்கிறோம். அவர் தன் வாழ்நாள் முழுவதும் செருப்பே போட்டுக் கொள்ளாத ஒரு பக்திமான். வெங்கடேஸ்வரரைத் தவிர அவருக்கு வேறு எதுவும் வாழ்க்கையில் கிடையாது. கல்யாணம் கூடப் பண்ணிக் கொள்ளவில்லை. இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும் என் குடும்பத்தின் மேல் அவர் காட்டிய அன்பும் ஆதரவும் இன்று வரை என்னால் மறக்க இயலாது. இந்த இரண்டு ராமசாமிகளும் எனக்குப் பெருமாள் கொடுத்த நண்பர்கள்.

ஓடுபாதையைச் சோதிக்க வரும் Test Flight வரும் நாளும் வந்தது. அதற்குள் எங்கள் மலை மேல் ஆஃபீஸ் திருப்பதியில் ஆஃபீஸ் இரண்டும் ரெடி. கோவையைப் போலில்லாமல் அருமையான ஸீனியர் ஏ.ஆர். ராவ். எல்லோரும் படை திரண்டு ஏர்போர்ட்டுக்குப் போனோம். சில நாட்களாக விமானத்தைப் பார்க்காமல் ஏங்கியிருந்த என் செவிகளில் விமானத்தின் ஓசை இனிய சங்கீதமாக ஒலித்தது. வானத்தில் வட்டமிட்ட எங்கள் விமானம் இறங்காமலேயே தூரத்தில் சென்று மறைந்து விட்டது. எல்லாம் தெரிந்த என் ஸீனியர்கள் 'testing let down procedure I think’ என்றார்கள். ஆர்வக்கோளாறினால் அவர்களிடம் சொல்லிவிட்டு கண்ட்ரோல் டவருக்கு விரைந்தேன் நான். ஆப்பரேட்டர் கிருஷ்ணமூர்த்தி பைனாகுலரில் விமானத்தைத் தேடிக் கொண்டிருக்க மைக்கில் அமர்ந்திருந்த Aerodrome Officer கோதண்டராமன் என்னிடம், “ஒன்றுமில்லை, உங்கள் கேப்டன் வாசுதேவன் பெருமாள் சேவிக்கப் போயிருக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

VOR ஸ்பீக்கரில் “இண்டேர் டெஸ்ட் ஃப்ளைட் திருப்பதி” என்ற எனக்கு மிகவும் பரிச்சயமான கேப்டன் வாசுவின் குரலும் கேட்டது.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com