அனைவர் வீட்டிலும் துப்பாக்கி கட்டாயமாக இருக்கும்.

அத்தியாயம் - 8
அனைவர் வீட்டிலும் துப்பாக்கி கட்டாயமாக இருக்கும்.

 

நடுநிலை நாடு ஸ்விட்சர்லாந்து

 "நடுநிலை என ஏதாவது இருக்கா?" என கேட்பவர்கள் ஸ்விட்சர்லாந்தை பார்த்து தெளிவடையலாம்.

ரத்த ஆறு ஓடி, இரு உலகப்போர்கள் நடந்த ஐரோப்பாவில் இருந்துகொண்டு கடந்த 200 ஆண்டுகளாக எந்த போரிலும் ஈடுபடாத நாடு ஸ்விட்சர்லாந்து. உலகப்போர்கள் மட்டுமல்ல, நேட்டோவிலும் சேரவில்லை, ஐரோப்பிய யூனியனிலும் சேரவில்லை, அவ்வளவு ஏன்? ஐ.நா. சபையில் சேரவே ரொம்ப யோசித்து 2003ம் ஆண்டுதான் சேர்ந்தது என்றால் பார்த்துக்கலாம்.

ஆனால் இதற்காக ஸ்விஸ் மக்கள் கோழைகள் என பொருள் இல்லை. நாட்டில் ஆண்,பெண் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் ராணுவபயிற்சி கட்டாயம். அனைவர் வீட்டிலும் துப்பாக்கி கட்டாயமாக இருக்கும். பல நாடுகள் போர்களில் கலந்துகொள்ள ஸ்விஸ் இளைஞர்களை பணம் கொடுத்து கூலிப்படையாக கூட்டி செல்லும் வழக்கம் உண்டு. ஸ்விஸ் கூலிப்படையினர் பிரெஞ்சு, ஸ்பானிய ராணுவங்களில் பல சாதனைகளை செய்தவர்கள். வாட்டிகனில் போப்புக்கு காவலாக நிற்பது ஸ்விட்சர்லாந்து படையினர்தான்.

ஸ்விட்சர்லாந்தின் 58% நிலப்பரப்பு முழுக்க ஆல்ப்ஸ் மலைதான். அதுவும் ஆயிரமாயிரம் அடி உயரம் உள்ள பெரிய மலைகள். 30% காடுகள். மீதமுள்ள 12% நிலப்பரப்பில்தான் விவசாயம் நடக்கிறது.

58% நிலப்பரப்பு மிக உயரமான மலைகள் , மீதம் காடுகள் என்பதால் எந்த நாட்டு படையாலும் ஸ்விட்சர்லாந்தை படை எடுத்து பிடிப்பது மிகக் கடினம். காடுகளில், மலைகளில் பதுங்கியபடி கொரில்லா சண்டைபோட்டால் எதிர்த்து படை எடுக்கும் ராணுவம் தோல்வி அடையவேண்டியதுதான்.

இரண்டாம் உலகப்போர் சமயம் ஹிட்லரிடம் ஸ்விட்சர்லாந்தை பிடிக்கும் திட்டம் இருந்தது. ஸ்விட்சர்லாந்தின் எல்லைப்புற நாடாக ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு ஆகியவை இருந்தன. மூன்றும் அன்று நாஜி ஜெர்மனி வசம் இருந்தது.

ஆனால், ஹிட்லர் படை எடுக்கக்கூடாது என சொல்லி தன் நாட்டின் பாலங்கள் அனைத்திலும் வெடிகுண்டுகளை பொருத்தியது ஸ்விட்சர்லாந்து. மலைப்பகுதி, ஆறுகளில் உள்ள பாலங்களில் வெடிகுண்டுகளை பொருத்தினால் போதும். நாஜி ராணுவம் பாலத்தில் வருகையில் வெடிகுண்டுகளை இயக்கினால் பாலமும் காலி, வாகனங்களும் காலி. படைகளும் துண்டிக்கப்படும். அதன்பின் அவற்றின் மேல் கொரில்லா தாக்குதலை நடத்தி காலி செய்துவிடலாம்.

மலைப்பகுதியெங்கும் சுரங்கம் தோண்டி பதுங்குகுழிகளை அமைத்தார்கள். நாட்டின் அனைத்து மக்கள் தொகையும் பதுங்குகுழிகளில் சென்று பதுங்கி போரிடும் அளவு லட்சக்கணக்கில் பதுங்குகுழிகள் வெட்டப்பட்டன. 2014ம் ஆண்டு தான் பாலங்களில் இருந்த வெடிகுண்டுகள் அகற்றப்பட்டன. பதுங்குகுழிகள் பலவும் ஓட்டல், வீடுகளாக பின்னாளில் மாற்றப்பட்டன.

ஸ்விட்சர்லாந்தை பிடிக்க நினைத்த ஹிட்லர் இதை எல்லாம் கேள்விப்பட்டு படைஎடுக்கும் யோசனையையே கைவிட்டுவிட்டான். ரஷ்யா, பிரிட்டன் மேல் எல்லாம் யோசிக்காமல் படை எடுத்தவன் ஸ்விட்சர்லாந்தின் மேல் படை எடுக்க பயந்து முயற்சியை கைவிட்டான் என்றால் பார்த்துக்கலாம்...

ஆக, ஸ்விட்சர்லாந்தின் நடுநிலை என்பது பயத்தால் வந்தது அல்ல, தம் வீரத்தால் அவர்களாக அமைத்துக்கொண்ட ராஜதந்திர உத்திதான் நடுநிலை.

இதனால் உலகின் மிக அமைதியான, அழகான பூமியாக ஸ்விட்சர்லாந்து இருக்கிறது. அதன் மக்கள் சாக்லெட், சீஸை உண்டபடி அந்த சொர்க்கபூமியில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com