சித்திரை செவ்வானம்..சஸ்பென்ஸ் திரில்லர்!

சித்திரை செவ்வானம்..சஸ்பென்ஸ் திரில்லர்!

நாம் சினிமாவில் கரடுமுரடாக பார்த்த ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, இந்த அழகான படத்தை எடுத்துள்ளார். பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், இது போன்ற ஒரு படம் கண்டிப்பாக அவசியம்.

இன்றைய தினத்தில் பெண்கள் பல்வேறு பணிகளுக்காகவும் படிப்பிற்கும் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று தங்குகிறார்கள் .அங்கே அவர்கள் தங்கும் இடத்தில் ஏற்படும் பாதுகாப்பை பற்றி கேள்விக்குள்ளாக்குகிறது இப்படம்.

தாயை இழந்த தன் மகளை மிகவும் செல்லமாக அழகாகவும் வளர்க்கிறார் முத்துப்பாண்டி. (சமுத்திரக்கனி ) .அப்பெண் +2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்க, நீட் தேர்வு பயிற்சிக்காக பொள்ளாச்சியில்உள்ள ஒரு மகளிர் விடுதியில் சேர்த்து  தங்கி படிக்க வைக்கிறார். ஒரு நாள் காவல் நிலையத்திற்கு வரும்படி பாண்டிக்கு அழைப்பு வருகிறது அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே உள்ள ஒரு செல்போனில் தனது மகள் குளிப்பதை யாரோ படம்எடுத்திருப்பதை அவர் பார்க்கிறார். மேலும் அதிர்ச்சியாக, அவர் மகள் காணவில்லை என்றும் அவளுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை என்கிறார் காவல்துறை அதிகாரி.தன் மகள் கடைசியில் பேசியது யார் என்று கண்டறிந்து அவரை நெருங்குகிறார் அப்பா சமுத்திரக்கனி. ஆனால் சமுத்திரக்கனி கொல்லப்பட்டு, அவரது நண்பர்களும் கடத்தப்படுகிறார்கள். பாண்டியின் மகளுக்கு என்னதான் ஆயிற்று? ஏன் இவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்பதை சுவாரஸ்யம் குறையாமல் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கியிருக்கிறார் டைரக்டர் சில்வா.

ஆங்காங்கே சில முடிச்சுகள், சில திருப்பங்கள்  என ரசிகனை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் விஷயங்கள் பல இந்த படத்தில் உண்டு. பெண் குழந்தைகளின் வன்முறைக்கு எதிரான விஷயங்கள் படம் முழுக்க ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுறுத்தும் வகையில் பொள்ளாச்சியை இந்த படத்தின் களமாக வைத்துள்ளார் டைரக்டர்.

படத்தில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன் (சாய் பல்லவியின் தங்கை )இப்படி பலர் நடித்திருந்தாலும் அதிகமாக நம்மை திரும்பி பார்ப்பது ரீமா கலிங்கல் தான். விசாரணையின் போது போலீஸ் அதிகாரியாக ஒரு மிடுக்கும், வழக்கை கையாளும் போது தானும் ஒரு பெண் என்ற உள்ளார்ந்த ஒரு உணர்வும் கலந்து சரியாக வெளிப்படுத்தியுள்ளார் ரீமா. சமுத்திரகனியின் நடிப்பு கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் அது இந்தக் கதைக்குத் தேவைப்படுகிறது. பூஜா கண்ணன் அறிமுக  நாயகி என்று  உணர வைக்காமல் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. சாம் சி எஸ் என் இசை படத்தை உறுத்தாத வண்ணம் உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஒரு சட்ட தீர்வை வைத்திருந்தால் அல்லது அதை நோக்கி பயணப்பட்டு இருந்தால் இப்படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com