தமிழ்ப் பயண இலக்கியத்தின் முன்னோடி ஏ.கே.செட்டியார்!

நவம்பர் 3: ஏ.கே. செட்டியார் பிறந்த நாள் - முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தைத் தமிழில் எடுத்தவர்.
A. K. Chettiar
A. K. Chettiar
Published on

முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி 1940-ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியார் என்பவர்தான். இந்தப் படம் தொடர்பாக, செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான மகாத்மா காந்தி படத்தைத் தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இந்த ஆவணப்படத்தை அவர் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். ஆனால், இந்த ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன் வரவில்லை.

அதன் பின்னர், 1948 ஆம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று புதுடில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் 1948 ஆகத்து 23 ஆம் நாளில் தமிழிலும், தெலுங்கிலும் திரையிடப்பட்டன. இத்திரைப்படத்தின் படிகள் எதுவுமே இப்போது இல்லை. செட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு, ஜனவரி 19 ஆம் நாளில் சென்னையில் காண்பிக்கப்பட்டது.

"Mahatma Gandhi: Twentieth Century Prophet" என்று பெயரிடப்பட்ட இந்த 55 நிமிட ஆவணப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஏ. கே. செட்டியார் என்று அறியப்படும் அ. கருப்பன் செட்டியார், இந்த ஆவணப்படத்திற்காக மட்டுமில்லை, தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கும் முன்னோடியாக அமைந்தவர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் பிறந்த கருப்பன் செட்டியார் தனது இளமைக் கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பயின்று, பின்னர் 1935 ஆம் ஆண்டில் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத் துறையில் பயிற்சி பெற்றார். அதன் பிறகு புகைப்படத் துறையின் சிறப்புப் பயிற்சிக்காக, 1937 ஆம் ஆண்டில் நியூயார்க் சென்று அங்கு புகைப்பட நிறுவனத்தில் ஓராண்டு பயின்று பட்டயம் பெற்றார்.

பயண இலக்கியத்தின் முன்னோடி என மதிக்கப்படும் ஏ. கே. செட்டியார் பல பயண நூல்களைப் படைத்ததுடன் மற்றவர்களது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் உள்ளார். 1850 ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, பயணக் கட்டுரைகள் என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:
கிறித்தவ சமயத்தில் இறந்தவர்கள் விண்ணகம் செல்ல உதவும் திருநாள்!
A. K. Chettiar

இவர் எழுதிய நூல்களில், உலகம் சுற்றும் தமிழன், பிரயாண நினைவுகள், மலேயா முதல் கனடா வரை, கயானா முதல் காஸ்பியன் கடல் வரை, அமெரிக்க நாட்டிலே, ஐரோப்பா வழியாக, குடகு, இட்டபணி, திரையும் வாழ்வும், ஜப்பான் கட்டுரைகள் (1936, இரங்கூன்), தமிழ்நாடு - நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் எனும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன:

இது தவிர, தமிழில் மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளையும் அறிவுக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கென்று குமரிமலர் என்ற மாத இதழைத் தொடங்கினார். இது 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1983 ஆம் ஆண்டு வரை 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்தது. ஏ. கே. செட்டியார் 20 வயதில் பர்மா சென்று இரங்கூனில் தன வணிகன் என்ற இதழை வெளியிட்டார். 1926 இல் பூதலூர் வைத்தியநாத ஐயர் ஆனந்த விகடன் என்ற பெயரில் நகைச்சுவை மாத இதழைத் தொடங்கிய போது அவரை ஊக்கப்படுத்தியவர் ஏ. கே. செட்டியார் ஆவார். 1983 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 10 ஆம் நாளில், 71 வயதில் அவர் மறைந்தாலும், இவருடைய பயண நூல்கள் இன்றும் இவரை நினைவில் கொள்ளச் செய்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com