செப்டம்பர் 8: உலக இயன்முறை மருத்துவ நாள் (World Physiotherapy Day)!

World Physiotherapy Day
World Physiotherapy Day
Published on

உலகிலுள்ள இயன்முறை மருத்துவர்களால், ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் நாளன்று, உலக இயன்முறை மருத்துவ நாள் (World Physiotherapy Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு (World Physiotherapy), மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப் பற்றியும், அதன் நன்மைகள் மற்றும் நுட்பங்களைப் பற்றி எடுத்துச் சொல்லவும், மக்களுக்கு உடலியக்கம், தசை பலம் பாதுகாத்தல், உடல் நலம், மூட்டசைவு உள்ளிட்ட பல உடலியக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 1996 ஆம் ஆண்டிலிருந்து, செப்டம்பர் மாதம் 8 ஆம் நாள், உலக இயன்முறை மருத்துவ நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இயன்முறை மருத்துவம் அல்லது உடலியக்க மருத்துவம் அல்லது உடற்கூற்று மருத்துவம் (Physical Therapy, Physiotherapy) முற்றிலுமாக மருத்துவத்துறை சார்ந்த, மருந்தில்லாச் சிறப்பு மருத்துவ பிரிவு ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனி நபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத் துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும் போது அளிக்கப்படும் சிறந்த மருத்துவ முறைகளைக் கொண்டது.

இம்மருத்துவம் வாழ்வின் தரத்தை அறியவும், கூடுதலாக்கவும் ஆய்வு செய்கிறது. இயக்கத்தை மேம்படுத்த, காயங்களை தவிர்த்திட, அடிபடும் போது காயத்தின் தீவிரத்தைக் குறைக்க, ஊனத்தைச் சரி செய்ய மற்றும் ஊனமுற்றவர் மீளவும் தமது வாழ்க்கைத் தரத்தைப் பெற்றிட வேண்டிய மருத்துவ முறைகளைக் கொண்டதாக இம்மருத்துவம் அமைந்துள்ளது. இம்மருத்துவ முறையில் இயங்கும் மருத்துவர்கள், நோயாளிகள் / வாடிக்கையாளர்கள், பிற மருத்துவர்கள், குடும்பங்கள், நலம் விரும்பிகள் மற்றும் சூழ்ந்துள்ள சமூகம் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். இயன்முறை மருத்துவம் (Physical Medicine) என்பது நவீன உலகில் வளர்ந்து வரும் ஒரு சிறந்த சிறப்பு மருத்துவ முறையாகும்.

இதையும் படியுங்கள்:
செப்டம்பர் 5: பன்னாட்டுத் தொண்டு நாள் (International Day of Charity) அன்னை தெரசா நினைவு நாள்!
World Physiotherapy Day

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு (World Physiotherapy) 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பெரிய பிரித்தானியா, நியூசிலாந்து, நார்வே, தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய இந்த அமைப்பில் மொத்தம் 110-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதன் மூலம் 4,50,000 இயன்முறை மருத்துவர்கள் உலகம் முழுவதும் இருப்பதாக அறியப்படுகின்றனர். 

இவ்வமைப்பு இயன்முறை மருத்துவ வளர்ச்சிக்கும், உலகளாவிய சுகாதாரத்திற்காகவும் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பு தனி மனித உயரிய தரமான உடல் நலம் மற்றும் அறிவியல் சார்ந்த மருத்துவ ஆராய்ச்சிகள், மருத்துவம் செய்தல் போன்றவற்றை நெறிப்படுத்துகிறது. இலாப நோக்கற்ற அமைப்பாகச் செயல்படும் இவ்வமைப்பு ஐக்கிய இராஜ்ஜியத்தில் பதிவு பெற்ற கூட்டமைப்பு ஆகும். மேலும் இது 1952 ஆம் ஆண்டு முதல் உலக உடல் நல அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும் இருந்து வருகிறது. இதன் துணை அமைப்புகளாக 12 அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
மனதை தொட்ட 'முதல் ஆசிரியர்'!
World Physiotherapy Day

இன்றைய நாளில், மருந்தில்லாச் சிறப்பு மருத்துவப் பிரிவாகக் கருதப்படும், இம்மருத்துவத்துறை பற்றி மேலும் அறிவதுடன், இம்மருத்துவ முறையில் அளிக்கப்படும் பல்வேறு உடலியக்கச் சிகிச்சைகள் குறித்தும், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்வதுடன், அனைவருக்கும் இயன்முறை மருத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் நாம் எடுத்துரைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com