தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனித் திருநாள்!

தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனித் திருநாள்!

– எம்.கோதண்டபாணி

பங்குனித் திங்கள்  இதமான குளிர்ச்சியும் பதமான வெப்பமும் சேர்ந்த சுகமான மாதமாக திகழ்கிறது. வசந்த பருவமான பங்குனியில் மரங்களும் செடி, கொடிகளும் தழைத்தும் பூத்தும் குலுங்குவதைக் காணலாம். இதனாலேயே தமிழ் இலக்கியங்கள் இம்மாதத்தை, 'பங்குனிப் பருவம்' என்றே அழைக்கின்றன.

பன்னிரு தமிழ் மாதங்களில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனியில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாளே பங்குனி உத்திரம் எனப்படுகிறது. நட்சத்திரங்கள் இருபத்தியேழும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், அவற்றில் ஒருசிலவற்றுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அதில் உத்திரமும் ஒன்று. அதிலும் பங்குனி உத்திரத் திருநாள் தனி முக்கியத்துவம் பெறுகிறது.

தெய்வ வழிபாட்டுக்குரிய மாதமாக பங்குனி மாதம் முழுவதும் திகழ்ந்தாலும், இம்மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில்தான் தெய்வத் திருமணங்கள் பலவும் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராமர் – சீதா பிராட்டி, பரதன் – மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்னன் – சுருதகீர்த்தி ஆகியோர் திருமணங்கள் நிகழ்ந்தது ஒரு பங்குனி உத்திர திருநாளில்தான்.

பரமேஸ்வரன்-பார்வதி திருமணம் நடைபெற்றதும், பன்னிரு கரத்தோன் முருகப்பெருமான் தெய்வானையை மணம் புரிந்ததும், குறமகள் வள்ளி அவதரித்ததும் கூட ஒரு பங்குனி உத்தர நன்னாளே. இவை தவிர, திருமால் தமது மார்பில் செல்வமகளாம் திருமகள் வாசம் செய்ய வரம் தந்ததும், பிரம்ம தேவன் தமது நாவில் கலைமகளாம் சரஸ்வதியை அமர்த்திக் கொண்டதும், தேவர்களின் தலைவன் இந்திரன், இந்திராணியை கரம் பற்றியதும்கூட ஒரு பங்குனி உத்திரத் திருநாள்தான். மேலும், தட்சனின் இருபத்தியேழு நட்சத்திர புதல்வியரை சந்திரன் மணந்ததும், ஹரிஹர சுதன் ஐயப்பன் அவதரித்ததும் கூட ஒரு பங்குனி உத்திர திருநாள் என்று புராணங்கள் பகர்கின்றன. இவை தவிர, இன்னும் பல்வேறு சுப நிகழ்வுகளும் இத்திருநாளில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி உத்திர நாளில் மேற்கொள்ளப்படும் விரதத்தை திருமண விரதம் என்றும் கல்யாண விரதம் என்றும் அழைப்பர். இந்நாளில் திருமணம் தடைபடுவோர் அம்பிகையோடு கூடிய சிவபெருமானையும், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டாலும், கோயில்களில் நடைபெறும் சிவ-பார்வதி மற்றும் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்தாலும் விரைவில் திருமணம் நிகழும். அதோடு, கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும்கூட இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆறுமுகக் கடவுளுக்குரிய அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றாலும், பழனி திருத்தலத்தில் நடைபெறும் உத்திரத் திருவிழாவும் தேரோட்டமும் வெகு சிறப்புப் பெற்றதாகும். திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள முருக பக்தர்கள் இன்று கொடுமுடிக்குச் சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்து பழனி முருகப்பெருமானின் அபிஷேகத்துக்குச் செலுத்துவர். கோடை வெயிலின் தொடக்கமான இம்மாதத்தில் நவபாஷாணத்தால் உருவான முருப்பெருமானின் திருமேனியை குளிர்விக்க ஏற்படுத்தப்பட்டதாக வழக்கமாக இது சொல்லப்படுகிறது.

திருமண நாள் குறித்தல், திருமாங்கல்யம் செய்வதற்காக பொன் உருக்குதல், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளைச் செய்யவும், நகைகள் மற்றும் முக்கியமான பொருட்களை வாங்கவும், ஆலயங்களில் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவும், புதிய தொழில், வியாபாரம் போன்றவற்றைத் தொடங்கவும் பங்குனி உத்திர நன்னாள் மிக உகந்ததாகக் கருதப்படுகிறது.

அமுதம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட பல்வேறு வஸ்த்துக்களில் மகாலக்ஷ்மி தாயாரும் ஒருவர். அப்படிப் பாற்கடலிலிருந்து அன்னை மகாலக்ஷ்மி வெளிப்பட்ட தினம் பங்குனி உத்திரத் திருநாள் என்பதால், இது தாயாருக்குரிய நட்சத்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த சுபத் திருநாளில் ஆரம்பிக்கும் அனைத்து முயற்சிகளும் நல்ல காரியங்களும் மங்கலகரமாக விளங்குவதோடு, மென்மேலும் சிறக்கும் என்பதில் சற்றும் ஐயம் வேண்டாம். பங்குனி உத்திரத்தைப் போற்றிடுவோம், தெய்வ பலன்களைப் பெற்றிடுவோம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com