உலக கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டித் தொடரில் புதன்கிழமை புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அசத்தலாக விளையாடி 108 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தொடர் தோல்விகளுக்குப் பிறகு இங்கிலாந்து நெதர்லாந்தை வென்றுள்ளது. உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து அணியின் தொடக்கமே உற்சாகமாக இருந்தது. இரண்டாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான டேவிட் மலான் லோகன் வான் பீக் பந்தை மூன்று முறை பவுண்டரிக்கு அனுப்பினார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜான் பார்ஸ்டோவ் தமது திறமையை வெளிப்படுத்த தவறினார். 15 ரன்களில் தத் பந்துவீச்சில் வான் மீக்கரனிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால், டேவிட் மலான் 36 பந்துகளில் அடித்து விளையாடி 50 ரன்கள் எடுத்தார்.
அடுத்து மலான் மற்றும் ரூட் இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனாலும் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரூட், வான் பீக் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது இங்கிலாந்து 133 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்திருந்தது. அடுத்த சில நிமிடங்களில் டேவிட் மலான் 87 ரன்களில் ரன் அவுட்டானார். அவர் எடுத்த 87 ரன்களில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.
பின்னர் அடுத்தடுத்து களம் இறங்கிய ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், மொயின் அலி ஆகியோர் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. இங்கிலாந்து 192 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் மட்டும் களத்தில் இருந்தார். அதன் பின் அவரும் வோக்ஸும் இணைந்து ஆடி 129 ரன்கள் சேர்த்தனர். உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார்.
வோக்ஸும் ஆக்ரோஷத்துடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து களம் இறங்கியது. ஆனால், ஆட்டத்தில் ஒரு விறுவிறுப்பு இல்லை.
மாக்ஸ் ஓ தெளத் 5 ரன்களிலும், காலின் ஆக்கர்மான் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகி வெளியேறினர். வெஸ்லி பார்ரஸி மற்றும் சைப்பிரண்ட் ஏஞ்சல்பிரசெட் இருவரும் நின்று ஆடி 54 ரன்கள் சேர்த்தனர். வெஸ்லி பார்ரஸி 37 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். ஏஞ்சல் பிரசெட் 33 ரன்களில் வில்லே வீசிய பந்தில் வோக்ஸிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். பாஸ் டீ லீடும் தனது திறமையை வெளிப்படுத்தி ஆடவில்லை. 10 ரன்களில் அவர் அவுட்டானார். இந்த நிலையில் நெதர்லாந்து 104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் தேஜா நெடுமனூரு இருவரும் நின்று ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் வீசிய பந்தில் மலானிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். தேஜா நெடுமனூரு மட்டும் 41 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில் நெதர்லாந்து, 38 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களான ஆதில் ரஷீத் மற்றும் மொயீன் அலி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வில்லே 2 விக்கெட்டையும், வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இனி அடுத்து இங்கிலாந்து வரும் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஏடன் கார்டனில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இன்றைய வெற்றி மூலம் இங்கிலாந்து நெதர்லாந்தை பின்னுக்குத் தள்ளி புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.