
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லக்னெளவில் ஏகனா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆப்கானிஸ்தானுக்கு இது நான்காவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை முந்திச் சென்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்று 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அரையிறுதிக்கான நம்பிக்கையை பெற்றுள்ளது.
முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 31.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
நெதர்லாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. முதல் ஓவரிலேயே வெஸ்லி பர்ரேஸி முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார். அடுத்து மாக்ஸ் ஓ தெளத் மற்றும் காலின் ஆக்கர்மான் இருவரும் ஓரளவு நின்று ஆடி கூட்டாக 70 ரன்கள் சேர்த்தனர். எனினும் மாக்ஸ் ஓ தொளத் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அவர் அடித்த பந்தை சுறுசுறுப்பாக பீல்டிங் செய்து அஸ்மதுல்லா ஓமராஸி, பந்தை ஸ்டம்பை நோக்கி வீசி அவுட்டாக்கினார். மாக்ஸ் ஓ தெளத் எடுத்த 42 ரன்களில் 9 பவுண்டரிகள் அடங்கும். அடுத்த சில நிமிடங்களிலேயே ஆக்கர்மானும் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 18 ஓவர்களிலேயே நெதர்லாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த பந்திலேயே கேப்டன் ஸ்காட் எட்வர்ட்டும் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
பாஸ் டீ லீட், சாகிப் ஜல்பிகர் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோரும் களத்தில் இறங்கிய போதிலும் அணியில் ஸ்கோரை உயர்த்த எந்த முயற்சியும் எடுக்காமல் விரைவிலேயே அவுட்டாயினர். சைப்ரண்ட் ஏஞ்சல் பிரெசெட் மட்டும் நின்று ஆடி 58 ரன்கள் எடுத்தார். அவரும் 35 வது ஓவரின் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஒருநாள் போட்டியின் வரலாற்றில் ஒரு அணியைச் சேர்ந்த நான்கு பேர் ரன் அவுட்டாகி வெளியேறியது இதுவை முதல் முறையாகும்.
ரோலாஃப் வான்டர் மெர்வி (11) மற்றும் ஆர்யன் தத் (10 நாட் அவுட்) இருவரும் நெதர்லாந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொண்ட போதிலும் அது நடக்கவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கான் பந்துவீச்சாளர் முகமது நபி 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. சிறந்த தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வான் பீக் வீசிய பந்தில் எட்வர்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து இப்ராகிம் ஜர்தானும் 20 ரன்களில் மெர்வி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி இருவரும் கூட்டாக நின்று ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கினர். அதிரடி ஆட்டம் மூலம் 52 ரன்கள் குவித்த ரஹ்மத் ஷா, 23 வது ஓவரில் ஜுல்பிகர் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அவர் அடித்த 52 ரன்களில் 8 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து ஷாஹிதி அரை சதத்தை எட்டினார். 56 ரன்கள் எடுத்து அவர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஹஷ்மதுல்லா 31 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து வெற்றியை கைப்பிடித்தது. அதாவது 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
இனி அடுத்த போட்டியில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி ஆப்கானிஸ்தான், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாட உள்ளது.