இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருப்பவர் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா. இவருக்கு ஆட்டம் சூடு பிடித்தால் போதும் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்து விடுவார். பந்துகளை வீணாக்கும் பழக்கம் எல்லாம் இவரிடம் கிடையாது, இறங்கியது முதல் அதிரடி ஆட்டமாக தான் இருக்கும். சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை அந்தஸ்து பெற்றவர் என்றால் மிகையல்ல.
நேற்று நடந்த ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒரு நாள் அரங்கில் 12 சதங்களை அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸி அணிக்கு எதிரான தொடரில் ஸ்மிருதி நல்ல பார்மில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 77 பந்துகளில் 100 ரன்களை குவித்ததன் மூலம் குறைந்த பந்துகளில் சதமடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
ராஜ்கோட்டில் அயர்லாந்துக்கு எதிராக ஆட்டத்தில் 70 பந்துகளில் இதற்கு முன்னர் ஸ்மிருதி சதம் அடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் ஒரு தொடக்க வீராங்கனையாக அதிக சதமடித்த வீராங்கனை என்ற சாதனையை சமன் செய்துள்ளார். ஸ்மிருதி 77 பந்துகளில் அடித்த இந்த சதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது வேகமான சதமாகும்.
பட்டியலில் ஸ்மிருதி:
தற்போது ஸ்மிருதி 12 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட் ஆகியோருடன் சமமாக உள்ளார். அதே நேரம் சுசி பேட்ஸ் 12 சதங்களை அடிக்க 130 ஒருநாள் போட்டிகள் தேவைப்பட்டது. டாமி 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்களை எடுத்துள்ளார். ஆனால், ஸ்மிருதி 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்களைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தற்போது 3 வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 15 சதங்களை அடித்த ஆஸியின் மெக் லானிங் உள்ளார். இரண்டாவது இடத்தில் 13 சதங்களை பூர்த்தி செய்த நியூசியின் சுசி பேட்ஸ் உள்ளார்.
சாதனை நாயகி:
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களைப் பதிவு செய்த முதல் வீராங்கனையாக ஸ்மிருதி உள்ளார். இந்த சாதனையை 2024 ஆம் ஆண்டிலே படைத்து விட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், மந்தனா தனது முதல் டி20 சதத்தையும் பதிவு செய்தார். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
வெற்றி முகம் ஸ்மிருதி:
ஸ்மிருதி மந்தனா அதிக ஸ்கோரை குவிக்கும் போதெல்லாம் இந்திய அணி பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. அணியின் வெற்றிக்கு அவர் காரணமாக இருக்கிறார். இவர் அடித்த 12 சதங்களில் 10 சதங்கள் அணிக்கு வெற்றியை தந்துள்ளது. எப்போதும் ஆஸி அணிக்கு சிம்ம சொப்பனாமாகவே ஸ்மிருதி இருக்கிறார். தற்போதைய ஆஸி அணிக்கு எதிரான தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் அரை சதம் கடந்திருந்தார்.
முதல் இடம்பெற்ற வீராங்கனை:
வரவிருக்கும் மகளிர் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அவர் முதலிடத்தில் உள்ளார். விரைவில் 3 சதங்களை கடந்து அதிக சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை நாட்டிற்கு பெற்று தருவார் என்று எதிர்பார்ப்போம்.