அஜர்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். செஸ் போட்டி வரலாற்றில் இளம் வயதில் (18) இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
முன்னதாக, அரையிறுதிச்சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபாபியானோ கருணாவை எதிர்கொண்ட அவர், இரண்டு ஆட்டங்களையுமே டிரா செய்ய, இருவருமே ஞாயிற்றுக்கிழமை இறுதியில் 1-1 என சமநிலை பெற்றிருந்தனர்.
பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்க திங்கள்கிழமை நடைபெற்ற டை – பிரேக்கர் வாய்ப்பில் 3.5 - 2.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார்.
இதையடுத்து இறுதிச்சுற்றில் உலகின் நெம்பர் 1 வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்ஸனுடன் மோதுகிறார் பிரக்ஞானந்தா.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் கார்ல்ஸன், அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்றார். இரண்டாவது ஆட்டத்தை டிரா செய்து இறுதிக்கு முன்னேறினார்.
உலகக் கோப்பை இறுதிக்கு கார்ல்ஸன் முன்னேறியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு அறையிறுதிக்கு முன்னேறிய 2-வது இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஆவார்.
முந்தைய போட்டிகளில் பிரக்ஞானந்தா, மூன்று முறை கார்ல்ஸனை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதிபெற்றுள்ளார். அதில் வெல்லும்பட்சத்தில் உலக சாம்பியன் பட்டத்துக்காக நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லீரெனுடன் மோதும் வாய்ப்பை பிரக்ஞானந்தா பெறுவார்.