0,00 INR

No products in the cart.

சுப மாங்கல்ய வைபோகம் துளசி விவாஹம்!

எம்.கோதண்டபாணி

முதம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு உன்னதங்கள் அதிலிருந்து வெளிப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் ஒப்புயர்வற்ற துளசி விருட்சமும். திருமால் மிக உகந்து ஏற்கும் துளசி, ஒரு மங்கையாக உருவெடுத்து திருமாலை அடைந்ததாகப் புராணம் கூறுகிறது.

ஒருசமயம் துளசி பூமியில், ‘பிருந்தை’ என்ற பெயரில் பிறந்து வளர்ந்தாள். அவளை ஜலந்தரன் என்ற அசுரன் திருமணம் செய்து கொண்டான். தவப்பயனால் பெற்ற பல்வேறு வரங்களைக் கொண்டு அவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் பெற்ற வரங்களுள், ‘தனது மனைவி பிருந்தை என்று கற்பு நெறி தவறுகிறாளோ, அன்றே தனக்கு மரணம்’ என்பதும் ஒன்று. அசுரனின் கொடுமையால் அவதியுற்ற தேவர்கள்,
சிவபெருமானிடம் முறையிட்டனர். இதையறிந்த ஜலந்தரன் சிவபெருமானுடன் போரிடச் சென்றான். அவன் மீது இரக்கப்பட்ட ஈசன், ஒரு அந்தணர் வடிவில் அவன் முன்பு தோன்றி, அகங்காரத்தை விட்டொழிக்கும்படி கூறினார். அவை எதையும் செவிமடுக்காத ஜலந்தரன், ‘தன்னால் எதையும் செய்ய முடியும்’ என்று ஈசனிடம் ஆணவத்தோடு பேசினான்.

உடனே அந்தணர் வடிவில் இருந்த ஈசன், தனது கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்தை மட்டும் பெயர்த்து, அதை அவன் தலை மீது வைக்கும்படி கூறினார். பெருமுயற்சி செய்து அந்த வட்டத்தைப் பெயர்த்து அதை அசுரன் தனது தலை மீது தாங்கினான். அப்போது அந்த வட்ட சக்கரம் ஜலந்தரனின் உடலை இருகூறுகளாகப் பிளந்து, மீண்டும் அனல் சொரூபமாக ஈசனின் திருக்கரத்தை அடைந்தது.

போருக்குச் சென்ற கணவன் திரும்பி வராததைக் கண்ட பிருந்தை, வருத்தமுற்றாள். பிருந்தையின் கற்பு நெறி குறித்து, ஜலந்தரன் பெற்ற வரம் பற்றி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். பிருந்தையின் கற்பை சோதிக்க எண்ணி, ஜலந்தரன் வடிவில் மாய சொரூபமாக அவள் முன்பு தோன்றினார் மகாவிஷ்ணு. தமது கணவன் முன்பை விட அழகாகத் தோன்றுவதாக எண்ணி, மதி மயங்கினான் பிருந்தை. ஒரு கட்டத்தில் அங்கு வந்திருப்பது தனது கணவன் இல்லை என்பதை அறிந்த பிருந்தை, தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.

இதனால் மனம் வருந்திய மகாவிஷ்ணு, பிருந்தை தீப்புகுந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார். இதைக் கண்ட பார்வதி தேவி, விதை ஒன்றை உருவாக்கி அதை, ஈசனிடம் கொடுத்தாள். ஈசன் அதை பிரம்மாவிடம் கொடுக்க, நான்முகன் அந்த விதையை பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி, தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அந்த விதையிலிருந்து துளசி செடி ஒன்று உற்பவித்தது. இதைக் கண்ட திருமால், அந்தத் துளசியை எடுத்துத் தனது மேனியின் மீது அணிந்து சாந்தமானார் என்கிறது புராண வரலாறு.

தாம் செய்த தவற்றுக்காக மகாவிஷ்ணு துளசி தேவியை தாமே மணந்து கொண்டார். தீபத் திருநாளாம் தீபாவளிக்கு அடுத்து வரும் வளர்பிறை துவாதசியை, ‘பிருந்தாவன துவாதசி’ என்று கூறுவர். இந்தத் திருநாளிலேயே (15.11.2021) மகாவிஷ்ணு, துளசி தேவியை மணம் புரிந்தார் என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால், இந்தத் தினத்தில் துளசி தாயாரையும் பகவான் மகாவிஷ்ணுவையும் திருமணக் கோலத்தில் வழிபடுவது, பல்வேறு நலன்களையும் பெற்றுத் தருவதாகும்.

துளசி கல்யாண பூஜையை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி, மகிழ்வுடன் செய்வது மிகுந்த பலனைப் பெற்றுத் தரும். துளசி செடியாக இருந்தாலும், துளசி மாடமாக இருந்தாலும், அது இருக்கும் இடத்தை முதலில் சுத்தம் செய்து, மாக்கோலமிட வேண்டும். பிறகு துளசிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, புதிய வஸ்திரம் அணிவித்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு அதன் அருகே மகாவிஷ்ணுவின் படமோ அல்லது விக்ரஹமோ வைக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாவிடில், மகாவிஷ்ணுவின் அம்சமான நெல்லி மரக் குச்சி ஒன்றை அருகே வைத்து, அதை அலங்கரிக்க வேண்டும்.

பின்னர், இயன்ற நிவேதனங்களை அங்கே சமர்ப்பித்து, தீபமேற்றி, தூப தீப வழிபாட்டுடன் மகாவிஷ்ணுவையும் துளசி தாயாரையும் வழிபட வேண்டும். இந்த துளசி விவாக விசேஷத்துக்கு அருகே வசிப்பவர்களையும் அழைத்துக் கொண்டாடலாம். வந்தவர்களுக்கு பூஜையின் முடிவில் தாம்பூலம் கொடுத்து அனுப்புவது புண்ணியச் செயலாகும். இந்தத் திருமணத்தைக் காண பித்ருக்களும் கூட வருவார்கள் என்பது ஐதீகம்.

துளசி திருமண பூஜை செய்வதனால், தடைபட்டு வரும் சுப காரியங்கள், தடை நீங்கி சிறப்புடன் நடைபெறும். மகாலட்சுமி தாயாரின் அம்சமாக துளசி தேவி திகழ்வதால் இல்லங்களில் செல்வச் செழிப்பு பெருகும். தினமும் பெண்கள் துளசிக்கு நீர் விட்டு, தீபமேற்றி வழிபட்டு, வலம் வர, தீர்க்க சுமங்கலித்துவம் பெருகும்.

துளசி விருட்சத்தின் அடிப்பாகத்தில் சிவபெருமானும், நடுப்பாகத்தில் மகாவிஷ்ணுவும், நுனிப்பாகத்தில் பிரம்மாவும் வாசம் செய்வதாகக் கூறுகிறது சாஸ்திரம். மிகவும் புனிதமான துளசிச்செடியைக் கண்ட மாத்திரத்தில் ஒருவரது பாவங்கள் அனைத்தும் விலகுகின்றன. துளசியைப் போற்றித் துதிப்பதால் நோய்கள் அனைத்தும் நீங்குகிறது. மரண பயத்தைப் போக்கும் அற்புத சஞ்சீவியாக துளசி தீர்த்தம் திகழ்கிறது. சகல சௌபாக்கியங்களும் தந்து, சுகமான வாழ்வை அருளும் தெய்வ விருட்சமான துளசியை வழிபட்டு வளமான வாழ்வைப் பெறுவோம்.

எம்.கோதண்டபாணி
கோதண்டபாணி 32 ஆண்டு கால பத்திரிகை பணி. கல்கி குழுமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தீபம் இதழின் உதவி ஆசிரியர் பணி. ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுவது... இந்து சமய பெருமையை எழுதுவது பிடித்தம். Ponniyin Selvan நாவலில் வந்த கோயில்களை தொகுத்து PONNIYIN PAATHAIYIL எனும் தொடர் வெளியாகி தனி புத்தகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வையகம் வாழ அவதரித்த விசாகன்!

- ரேவதி பாலு தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்தத் திருநாள் வைகாசி விசாகம். அநேகமாக வைகாசி மாத பௌர்ணமியன்று விசாக நட்சத்திரம் வரும். இந்த தெய்வீகத் திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால், ‘வைகாசி விசாகம்’...

அமிர்தம் தந்தருளிய அவதாரம்!

- மாலதி சந்திரசேகரன் பூலோகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டுவதற்காக ஸ்ரீ மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார் என்றாலும், நாம் நன்றாக அறிந்தது ‘தசாவதாரம்’ என்று கூறப்படும் பத்து அவதாரங்கள்தான். இதில் முதல் அவதாரம் மச்சாவதாரம், இரண்டாவது...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...

அழைப்பவர் குரலுக்கு ஓடிவரும் அழகியசிங்கர்!

0
- டாக்டர் கங்கா பக்தவச்சலனான ஸ்ரீ மஹாவிஷ்ணு தன்னைப் பணிந்தவர்களை கால தாமதமின்றி காப்பதற்காக தூணிலும், துரும்பிலும் வியாபித்து இருக்கிறார் என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் நிலைநாட்ட வந்ததே நரசிம்ம அவதாரம். மனிதனா? சிங்கமா? என்று...

யோகத் திதிகள்!

- எம்.அசோக்ராஜா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மகரிஷிகளாலும், யோகிகளாலும், தபஸ்விகளாலும் கண்டுணர்ந்து சொல்லப்பட்ட பொக்கிஷம் திதிகள். வானில் தோன்றும் நட்சத்திரங்களை 27 ஆகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் கோள்களின் நிலையைக்...