0,00 INR

No products in the cart.

சூரியனைக் காண மறுக்கும் பவளமல்லி!

தெய்வீக மலராகக் கருதப்படுவது பவளமல்லி. ஆம், தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லி மரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வ மலராகும். பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில், ‘சேடல்’ என்று அழைக்கப்படுகிறது.

நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று. இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி, சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக, இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

பொதுவாக, இறைவன் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் உதிர்வதற்கு முன்பே பறிக்கப்படும். மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்குப் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால், இதற்கு பவளமல்லி விதிவிலக்காக உள்ளது. இது இரவில் பூத்து, அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்குப் பயன்படுத்துவார்கள். பவளமல்லி மரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் உறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

பவளமல்லி சிறு மரமாகக் காணப்படும். இந்தியா முழுவதும் இம்மரத்தைப் பார்க்கலாம். 1,500 அடி உயரம் வரையுள்ள இடங்களிலும் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம் வரை வளரும். தண்டு பாகம் நான்கு பட்டைகளைக் கொண்டது. இலைகள் சற்று நீண்டு முட்டை வடிவில் சொரசொரப்புடன் இருக்கும். பூக்கள் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கனிகள் வட்ட வடிவில் உறை அமைப்பில் இருக்கும். செடியில் இருந்து உதிரும்போது இரு பகுதியாகப் பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறிய விதை இருக்கும். அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

பாரிஜாதம் என்ற இளவரசி, சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் அவளை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து, தனது இன்னுயிரை விடுத்தாள். இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த

சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது என்று வாயு புராணம் தெரிவிக்கிறது.

சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து, இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால்தான் இதனை, ‘வருந்தும் மரம்’ என்றும் அழைப்பர். தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்றும் கூறுவர்.

பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது. பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சனேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள். தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாத மலரை சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ண பகவானிடம் கேட்க, கிருஷ்ணர் பவளமல்லி மரத்தைக் கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம். ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்று கூறப்படுகிறது.

வளமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடித்து உணர்த்தி இருக்கிறார்கள். பவளமல்லி மரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காக்கக்கூடிய மருத்துவத்தன்மை உடையது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.

கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பற்களின் ஈறுகளில் உருவாகும் வலி குணமாகும். விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். பவளமல்லி விதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை மறைந்து, முடி வளரும்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகே 21 கி.மீ. தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் உள்ள திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தல விருட்சமாக வணங்கப்படுகிறது.

தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாசர், தானும் அந்த பாக்கியத்தைப் பெற நினைத்தார். இத்தலத்தின் மகிமையை உணர்ந்து, தேவலோக மலரான பாரிஜாத செடியை இங்கே கொண்டுவந்து வளர்த்து வந்தார். காலப்போக்கில், அந்தச் செடியால், அப்பகுதி முழுவதுமே பாரிஜாத வனமாக மாறியது. அதன் பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்த துர்வாசர், பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து, தேவதச்சன் மூலமாக கோயிலை எழுப்பி வழிபட்டு வந்ததாக கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது. துர்வாசருக்கு நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் தந்து அருளினார்.

வீட்டிலும் வளரக்கூடிய இந்த பவளமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்கியமானது; உடல் நலத்தை பாதுகாக்கக் கூடியது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

2
- எ.எஸ்.கோவிந்தராஜன் இறை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது...

கோமாதா; நம் குலமாதா!

0
- கே.பாலகிருஷ்ணன் பாற்கடலிலிருந்து தோன்றிய, கேட்பதை அளிக்கும் சுரபியாகிய காமதேனுவின் வடிவில் கண்ணன் விளங்குகிறான் என்பதால் ஆநிரையை முறைப்படி வழிபட்டால், ‘ஆநிரை காப்பான்’ நம்மைக் காத்தருள்வான் என்பது நம்பிக்கை. அதனாலேயே கார்த்திகை கிருஷ்ணபட்ச துவாதசி...